Thursday, July 3, 2014

புத்தம் சரணம் கச்சாமி! - 1

(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்களே ஒழிய மற்றபடி இந்த நாவலில் வரும் சம்பவங்கள் அனைத்தும் என் கற்பனையே. – என்.கணேசன்)

ட்சுக்லகாங்க் திருக்கோயில், தர்மசாலா, ஹிமாசலப்பிரதேசம்.

பெருமழை பெய்து அப்போது தான் ஓய்ந்திருந்தது. ஆனால் எந்த நிமிடமும் மழை மீண்டும் பெய்ய ஆரம்பிக்கலாம். ஜுலையில் ஆரம்பித்து செப்டம்பர் இரண்டாம் வார இறுதி வரைக்கும் இப்பகுதியில் மழைக்காலம் தான். இந்த தொடர் மழை, தலாய் லாமாவின் உதவியாளனாக பணிபுரியும் சோடென்னுக்கு சிறிதும் பிடித்தமானதல்ல. சொல்லப் போனால் சகிக்க முடியாதது. ஜூன் மாதம் முடிவு வரை சீதோஷ்ண நிலை மிக ரம்மியமாக இருக்கும். இங்கு நிறைய ஆட்கள் வருவார்கள். அதனால் பொழுதும் நன்றாகப் போகும். மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலோ அதில் பாதி ஆட்கள் கூட வர மாட்டார்கள்.

இப்போது கூட ட்சுக்லகாங்க் கோயிலில் புத்தர் சிலை முன் தலாய் லாமாவுடன் பிரார்த்தனைக்குக் கூடியிருந்தவர்கள் 20 பேர் தான். அதிலும் 7 பேர் கோயிலைச் சேர்ந்த புத்த பிக்குகள். மீதி 13 பேரில் 5 பேர் வெளிநாட்டுப் பயணிகள். அமெரிக்கர்களாகவோ, ஐரோப்பியர்களாகவோ இருக்கலாம். 2 பேர் உள்ளூர்வாசிகள். 6 பேர் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து வந்திருந்த புத்த பிக்குகள்....

திடீரென்று 21 வது ஆள் திருக்கோயிலுக்குள் நுழைந்தார். நாலரை அடி உயரம் தான் இருக்கும். பழுத்த கிழவர். புத்தபிக்கு. திபெத்தியர். அவன் நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக எல்லோருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் போது தங்கள் நாட்டவரைக் கண்டால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சோடென் அதற்கு விதிவிலக்கானவன். அவனுக்கு அவனுடைய நாட்டு மக்களைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகவே இருந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் தரித்திரவாசிகள். இப்போது வந்திருந்த கிழ புத்த பிக்குவின் சிவப்பாடைகளிலும் இரண்டு கிழிசல்கள் தைக்கப்பட்டிருந்தது அவன் கண்களுக்குத் தென்பட்டது. ‘கிழியாத உடை கூடப் போட்டுக் கொள்ள முடியாத ஆட்கள் எதற்காக யாத்திரைக்குக் கிளம்ப வேண்டும்? தங்கள் தரித்திரத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவா?என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.  அவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். பண உதவி ஏதாவது கேட்டாலும் கேட்கலாம்’.  புன்னகை செய்வதே ஆபத்து!

கிழ பிக்கு புத்தர் விக்கிரகத்தைப் பார்த்து ஒரு நிமிடம் கண்களை மூடி நின்று விட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவர்கள் பின்னால் தானும் உட்கார்ந்து கொண்டார். அந்த நேரத்தில் அவன் கைபேசியில் (மொபைல் போனில்) ஒரு குறுந்தகவல் வந்தது - வந்திருக்கிற புதிய ஆளைக் கவனி”.

சோடென் சுறுசுறுப்பானான். கிழ பிக்குவை கூர்மையாய் கவனித்தான். தரித்திரத்தைத் தவிர இந்த ஆளிடம் வேறெதோ விஷயமும் இருக்கும் போல் தெரிகிறதே! கிழவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். மற்றவர்கள் எல்லாரும் செய்து கொண்டிருக்கும் பிரார்த்தனையில் கிழ பிக்கு ஈடுபாடு காண்பிக்கவில்லை. சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்து சோடென்னையும் அவர் சுவாரசியத்துடன் பார்த்தார். சோடென் தன்னை அந்த ஆள் கூர்ந்து பார்ப்பதை ரசிக்கவில்லை. அவர் இவனைப் பார்க்கும் போது இவன் அவரைக் கவனிப்பது கஷ்டமான காரியம் என்பதால் அவரிடம் இருந்து பார்வையைத் திருப்பி வெளியே வேடிக்கை பார்த்தான். ஒரு நிமிடம் கழித்து மெள்ள பார்வையைத் திருப்பிய போதும் கிழ பிக்கு இவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்க்க வந்தீரா, புத்தரைப் பார்க்க வந்தீரா முட்டாள் பிக்குவே. புத்தரைப் பார்த்து வணங்கி போகிற காலத்திற்கு புண்ணியம் சேர்த்துக் கொண்டு போக வேண்டியது தானே’  என்று சோடென் மனதில் கறுவினான். யாரையாவது கண்காணிப்பது அவர்கள் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கையில் சாத்தியமல்லவே. அப்படியும் அவன் அவரைப் பார்க்கையில் அவர் அவனைப் பார்த்து புன்னகை செய்தார். ஒரு புன்னகையே இவ்வளவு எரிச்சலைக் கிளப்ப முடியும் என்பதை அவன் அன்று தான் உணர்ந்தான்...

பிரார்த்தனை கால் மணி நேரத்தில் முடிந்தது. கூடியிருந்தவர்கள் தலாய் லாமாவுடன் சிறிது பேசினார்கள். ஆசிகள் வாங்கினார்கள். கிழ பிக்குவும் எழுந்து நின்று கொண்டார்.

தலாய் லாமாவின் இருப்பிடம் திருக்கோயிலுக்கு நேர் எதிரே உள்ள மாளிகை தான். அவர் தன்னிடம் பேசி ஆசி வாங்கினவர்களைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்து விட்டு இருபக்கங்களிலும் இரு பிக்குகளுடன் தன் மாளிகைக்குக் கிளம்பினார். அப்போது தான் அவர் அந்த கிழ பிக்குவைக் கவனித்தார். ஒரு கணம் அப்படியே சிலை போல நின்று விட்ட தலாய் லாமா பின் அந்தக் கிழ பிக்குவைப் பார்த்து பெரிதாகப் புன்னகைத்தார்.

“ஆசானே இது என்ன ஆச்சர்யம்என்று வியப்புடன் கூறிய தலாய் லாமா அந்த கிழவரை ஆரத்தழுவிக் கொண்டார். தன்னருகே இருந்த பிக்குகளிடமும், அருகே வந்த சோடென்னிடமும் புன்னகையுடன் அறிமுகம் செய்தார். “இவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர்....

அருகே இருந்த பிக்குகள் தலைதாழ்த்தி அந்த கிழ பிக்குவை வணங்க சோடென் வேண்டா வெறுப்பாக தானும் வணக்கம் தெரிவித்தான். மறு வணக்கம் செலுத்திய கிழ பிக்கு சோடென்னைப் பார்த்து மட்டும் ரகசியமாய் கண்ணடித்தார். நெருங்கிய நண்பர்களுக்குள் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டு கண்ணடிப்பார்களே அது போல. சோடென்னுக்குச் சே என்றாகி விட்டது. ‘என்ன விவஸ்தை இல்லாத கிழவர் இவர்’.  அவன் உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

தலாய் லாமா அதைக் கவனிக்கவில்லை. அவர் தன் ஆசானிடம் யார் யாரைப் பற்றியோ திபெத்திய மொழியில் குசலம் விசாரித்துக் கொண்டே அவரைக் கூட்டிக் கொண்டு தன் மாளிகைக்கு நடக்க ஆரம்பித்தார். பின்னால் தொடர்ந்து போகும் போது சோடென்னுக்குக் கிழ பிக்குவைக் கவனிப்பது சுலபமாக இருந்தது. நிச்சயமாக தலாய் லாமாவை விட வயதில் மூத்தவராக இருக்கக் கூடிய கிழ பிக்குவின் நடையில் வயதின் தாக்கம் தெரியவில்லை. மற்றபடி கவனிக்க வேண்டிய வேறெந்த விஷயமும் இந்த ஆளிடம் இருப்பதாகத் தெரியவில்லை-சேட்டையைத் தவிர.

தலாய் லாமா தன் ஆசானை நேராகத் தன் தனியறைக்கு அழைத்துச் செல்ல, கூட வந்த பிக்குகள் தங்கள் இடங்களுக்குப் போனார்கள். சோடென் இங்கு வேலைக்குச் சேர்ந்து முடிந்த இந்த பதினோராண்டு காலத்தில் தலாய் லாமா தன் தனியறைக்கு எந்த விருந்தினரையும் அழைத்துச் சென்றதில்லை. எத்தனை பெரிய ஆளானாலும் வரவேற்பறையோடு சரி. இப்போது குறுந்தகவல் அர்த்தமுள்ளதாகியது. என்னவோ இருக்கிறது!  

சோடென் வேகமாய் தனதறைக்குப் போனான். அறைக்கதவையும் ஜன்னலையும் சாத்தி விட்டு தன் மேஜையின் கீழ் இருந்த ரகசிய பட்டனை அழுத்தினான். தலாய் லாமாவின் சோபாவின் அடியில் ரகசியமாய் பதிக்கப்பட்டிருந்த நூதனமான கருவி அங்கு பேசப்படுவதைப் பதிவு செய்து அவன் அறையில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பித்தது. தலாய் லாமாவின் குரல் பரபரப்புடன் கேட்டது.

“ஆசானே. நீங்களே வந்திருக்கிறீர்கள்.... ஏதாவது முக்கிய விஷயமா?

லாய் லாமா தன் பிள்ளைப் பருவ ஆசிரியரைப் பார்த்து பரபரப்புடன் கேட்ட கேள்விக்கு கிழ பிக்கு புன்னகையுடன் பதில் சொன்னார்.

“என்னை மறந்து விட்டு யாரும் நிம்மதியாய் இருக்கக் கூடாது என்ற கொள்கையுடன் வாழ்கிறவன் நான் டென்சின்

தலாய் லாமா பேரன்புடன் தன் ஆசானைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். இன்னமும் அவரை பெயர் சொல்லிக் கூப்பிடும் உரிமை படைத்த ஒரே மனிதர் இந்த ஆசிரியர் தான். அவரை மட்டுமல்ல திபெத்திய புத்தமதத்தின் முக்கிய நான்கு பிரிவின் தற்போதைய தலைமை லாமாக்களும் இந்த ஆசிரியரிடம் படித்தவர்கள் தான். திபெத்திய புத்தமத புனித நூல்களை கரைத்துக் குடித்தவராக கருதப்படும் இவரிடம் படித்த திபெத்திய பிக்குகளும், அறிஞர்களும் ஏராளம். அதனாலேயே இவரை ஆசான் என்று பலர் அழைக்க பின் அந்தப் பெயரே இவருக்கு சாசுவதமாகியது.

ஆசானுக்கு 93 வயதாகிறது. தலாய் லாமா இவரை இது வரையில் சோகமாக ஒரு முறை கூட பார்த்ததில்லை. உலகில் மாறாத விஷயங்களில் ஆசானின் புன்னகையும் ஒன்று என்று தலாய் லாமா நினைத்துக் கொண்டார்.

ஆசான் சுவாரசியமானவர். பார்க்கிறவர்களுக்கு அவரிடம் நிறைய முரண்பாடுகள் தெரியும். புனிதநூல்களைக் கரைத்துக் குடித்த அவர் சம்பிரதாயமான ஆசிரியர் பாத்திரத்திற்குப் பொருந்த மாட்டார். சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால் அவர் தன் மாணவர்களுடன் தெரு விளையாட்டுகளில் கலந்து கொள்வதும் உண்டு. திபெத்திய புத்தமதத்தின் இன்னொரு பிரிவின் தலைமை லாமாவான பஞ்சென் லாமா தன்னை இந்த ஆசான் நிறையவே தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதாக ஒரு முறை தலாய் லாமாவிடம் சொன்னார். ”...நான் வணங்கும் ஒரு ஆள் சின்னப் பையன்கள் கூட சேர்ந்து தெருவில் விளையாடுவது நிஜமாகவே என்னால் சகிக்க முடியவில்லை....

அது போன்ற எத்தனையோ விசித்திர குணாதிசயங்கள் ஆசானின் மீதிருக்கும் மரியாதையை சிறிது குறைத்தாலும் அதற்குப் பதிலாக அன்பையும் நெருக்கத்தையும் எல்லோரிடமும் அதிகப்படுத்தி இருந்தது. அவரைப் பார்க்கும் போதோ அவர் பற்றிப் பேசும் போதோ எல்லோரிடமும் ஒரு சின்ன சிரிப்பு தெரியும்.

அப்படிப்பட்ட ஆசானின் இன்னொரு முகம் பலர் அறியாதது. ரகசியங்களைக் காப்பதிலும், சில விஷயங்களில் மிக உறுதியாக இருக்க முடிவதிலும் அவருக்கு நிகர் அவரே. தோற்றத்திற்கு எதிர்மாறாக மிக ஆழமானவர்.  

ஆசானின் முகத்தில் சிரிப்பு போய் சிந்தனையின் ஆழம் தெரிய ஆரம்பித்தது. ஏதோ மிக முக்கியமான காரியமாய் அவர் வந்திருக்கிறார் எனபது தலாய் லாமாவுக்குப் புரிந்தது. ஆசானை தன் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அன்புடன் அமர வைத்து விட்டு தலாய் லாமா சொன்னார்.

“சொல்லுங்கள் ஆசானே. என்ன விஷயம்?

ஆசான் குரல் தாழ்ந்தது. “மைத்ரேய புத்தர்...

சோடென் மின்சாரக் கம்பியை வெறும் கையால் பிடித்தவன் போல் அதிர்ந்தான். உளவாளியாக ஆன புதிதில் சீன உளவுத்துறை இந்த வார்த்தை தலாய் லாமா யாருடனாவது பேசும் போது வருகிறதா என்று கவனிக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம் தினம் கேட்பார்கள். ஆனால் அப்போதெல்லாம் அந்த வார்த்தையை தலாய் லாமா சொன்னதில்லை. யாரும் தலாய் லாமாவிடமும் சொன்னதில்லை. அன்றில் இருந்து நேற்று வரை சீன உளவுத் துறைக்கு அவன் அனுப்பிய விஷயங்கள் எத்தனையோ இருந்தன. சில சில்லறை விஷயஙகள். சில பெரிய விவகார விஷயஙகள். ஆனால் அவற்றில் மைத்ரேய புத்தர் சம்பந்தமாக எதுவும் இருந்ததில்லை. மைத்ரேய புத்தர் என்கிற சொல் எதைக் குறிக்கிறது என்றோ, சீனா எதற்கு அதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்றோ சோடென் அறியான்.

இன்று முதல் முறையாக கேள்விப்படுகிறான் என்பதால் சோடென்னின் இதயத்துடிப்புகள் வேகம் பிடித்தன. பரபரப்புடன் சோடென் காதுகளைக் கூர்மையாக்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

இந்த நாவல் அமேசான் கிண்டிலிலும் 2021 டிசம்பரில் வெளியாகி உள்ளது. அதில் படிக்க விரும்பும் வாசகர்கள் 
https://www.amazon.in/dp/B09NMHSGR3 ல் படிக்கலாம்.

  

27 comments:

  1. Great sir ! ...

    ReplyDelete
  2. சுந்தர்July 3, 2014 at 6:30 PM

    ஆரம்பமே ஜெட் ஸ்பீட். அமர்க்களம்.

    ReplyDelete
  3. வரதராஜன்July 3, 2014 at 6:39 PM

    அன்பு கணேசன் உங்கள் நாவல்களில் நான் மிகவும் ரசிப்பது characterization. காட்சிகளையும் கேரக்டர்களையும் கண்முன் நிறுத்துகிறீர்கள். முதல் அத்தியாயமே அப்படித் தான் பரபரப்பாய் ஆரம்பிக்கிறது. பிரமாதம்.

    ReplyDelete
  4. ெர 21 வ ஆ ைக ேகாைழதா.
    - இந்த வரிகளை தெளிவுபடுத்தவும் கணேசன் சார்

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனைக்கு 20 பேர் முன்பே கூடியிருந்தார்கள். 21வது புதிய ஆள் உள்ளே நுழைந்தார்.

      Delete
    2. மன்னிக்கவும். கையில் என்ற கூடுதல் சொல்லை இப்போது தான் கவனித்தேன். நீக்கி விட்டேன். நன்றி.

      Delete
    3. நன்றி கணேசன் சார் தங்களின் பதிலுக்கு

      Delete
  5. மிக மிக விறுவிறுப்பான ஆரம்பம்.இதன் அடுத்த பகுதி எப்போது?;

    ReplyDelete
  6. Looks like this will overtake Paraman Ragasiyam...Keep going...eagerly waiting for Thursdays after a gap...

    ReplyDelete
  7. அன்பு நண்பருக்கு வணக்கம்...நான் தங்களின் எல்லா நாவல்களையும் இப்போதுதான் படித்து முடித்த்தேன்...இவை எல்லாம் படிக்கும் போது எனக்கு உணவோ...உரக்கமோ தேவைப்படவில்லை என்பதே உண்மை....அமானுஷ்யன் கதையும்...பரமன் ரகசியமும் மிகவும் அருமை.....என்னால் இன்னும் வியப்பில் இருந்து விடுபட முடியவில்லை...தங்களின் ஆழ்மனதின் அற்புதங்கள் புத்தகம் வாங்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.....உங்கள் புதிய கதையை படிக்க ஆரம்பித்தது விட்டேன்..ஆரம்பம் அற்புதம்...இனியும் ஒரு வாரம் காத்திருப்பு என்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்குகிறது....நன்றி

    ReplyDelete
  8. ஆரம்பமே அசத்தல்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. wonderful start!!!

    ReplyDelete
  10. Great Start.. We are assured of great story. We will you can translate in English and publish the same along with Tamil. All the best.

    Regards
    VS Balajee

    ReplyDelete

  11. எடுத்த எடுப்பிலேயே கதையினுள் படிப்பவரை உள்ளிலுகும் உங்கள் நடையை என்னவென்று சொல்வது....

    “மைத்ரேய புத்தர்...” சோடென் போன்றே எங்களுக்கும் அர்த்தம் தெரியா...... சோடென் போலவே எங்களின் இதயமும் படப்படக்க ஆரம்பித்துவிட்டது.......

    காத்திருப்போம் அடுத்த வியாழன் வரை.........

    அட்டகாசமான ஆரம்பம்.......

    ReplyDelete
  12. Thriller starts from Starting line itself.. Great Sir...

    ReplyDelete
  13. அன்மையில் நிழலாடும் கதாபாத்திரங்கள். அருமை நண்பருக்கு அன்புடன் வாழ்த்துக்களுடன், வந்தனங்களும்.

    ReplyDelete
  14. Great start sir:-)

    ReplyDelete
  15. Nice to see the next novel from you. 1st part has started in a very interesting manner.

    Thanks

    ReplyDelete
  16. nice start sir
    1 update itself thriller begins as usual

    ReplyDelete
  17. திபெத் கூட்டி கொண்டு போறீங்க சூப்பர்
    என்னை மறந்துவிட்டு யாரும் நிம்மதியாய் இருக்க கூடாது என்ற கொள்கையுடன் வாழ்கிறவன் -ஆசான்//...... வாவ் என்ன டயலாக்கை படிக்கும் போது புதிய அர்த்தத்தை வழங்குகிறது ஒரு ஆசானிடமிருந்து எக்ஸ்சலேண்ட்

    ReplyDelete
  18. வரதராஜன்November 3, 2021 at 3:21 PM

    Started reading once again. Great novel

    ReplyDelete
  19. Published in Amazon kindle also -
    https://www.amazon.in/dp/B09NMHSGR3

    ReplyDelete