Monday, June 30, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 10



·         தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

·         தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

·         காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
(காணும் போதே கும்பிட வேண்டியது தானே? காண ஒரு முறை போய் விட்டு கும்பிட ஒரு முறை போக வேண்டுமா?)

·         செக்கென்றும் சிவலிங்கம் என்றும் தெரியாது நக்குகிற நாய்க்கு.


·         திகம்பர சாமியாருக்கு வண்ணான் உறவு ஏன்?
(திகம்பர சாமியார் ஆடைகளே அணியாமல் இருப்பவர். அவருக்கு ஏன் வண்ணான் உறவு தேவைப்படுகிறது?)

·         சாகிற வரையில் வைத்தியன் விடான். செத்தாலும் விடான் பஞ்சாங்கக் காரன்.

·         தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

·         துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது?

·         நல்ல வீடென்று பிச்சைக்கு வந்தேன். கரியை வழித்து கன்னத்தில் தடவினார்கள்.

·         நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

·         தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

தொகுப்பு: என்.கணேசன்




Thursday, June 26, 2014

உங்கள் வாழ்க்கை நிறைவானதாய் இருக்கிறதா?



நிறைவான வாழ்க்கை தான் எல்லோரும் வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் அது எப்படி என்பது தான் நமக்கு புரிவதில்லை. வாழ்க்கையில் சேர்க்கவும், அனுபவிக்கவும், செய்யவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அத்தனையும் முடிவது இந்த குறுகிய வாழ்க்கையில் சாத்தியமா? ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரம் தானே இருக்கின்றது. நமக்கு இருக்கும் சக்தியும் ஒரு எல்லைக்குட்பட்டது தானே? அப்படியானால் என்ன தான் செய்வது? எப்படித் தான் வாழ்வது என்ற ஆயாசம் நமக்கு ஏற்படலாம். அப்படி குழம்பிய தன் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஒரு நல்ல உதாரணத்துடன் வழி காட்டுகிற கதையை சமீபத்தில் இணையத்தில் படிக்க நேர்ந்தது. அதைப் பார்ப்போமா?

அந்த ஆசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒன்றில் கோல்ஃப் பந்துகளை நிரப்பி விட்டு தன் மாணவர்களிடம் கேட்டார். “ஜாடி நிறைந்திருக்கிறதா?மாணவர்கள் ஆம் என்றார்கள். அடுத்ததாக மிகச்சிறியதான கற்களை எடுத்து ஜாடியில் போட்டார். ஜாடியை சற்று ஆட்டியவுடன் அந்த கோஃல்ப் பந்துகளுக்கு இடையில் அந்த சிறிய கற்கள் போய் சேர்ந்து கொண்டன. இப்போது ஜாடி நிறைந்திருக்கிறதா?என்று அவர் கேட்டார். மாணவர்கள் ஆம் என்றார்கள். ஆசிரியர் ஒரு பெட்டியில் வைத்திருந்த மணலை அந்த ஜாடியில் போட்டு மறுபடியும் குலுக்கினார்.  அந்த மணல் ஜாடியில் மீதமிருந்த இடைவெளியையும் ஆக்கிரமித்துக் கொண்டது. “இப்போது ஜாடி நிறைந்திருக்கிறதா?என்று ஆசிரியர் கேட்டார். மாணவர்கள் ஆம் என்றார்கள். கடைசியில் இரண்டு கப் காபி எடுத்து அந்த ஜாடியில் ஊற்றினார். காபி அந்த ஜாடியில் மிச்சம் மீதி இருந்த நுண்ணிய இடைவெளியையும் ஆக்கிரமித்துக் கொண்டது. மாணவர்களுக்கு ஒரே சிரிப்பு. ஆம் என்றார்கள்.

ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார். “அன்பு மாணவர்களே! இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைப் போல. கோல்ஃப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்கள் போல். குடும்பம், உத்தியோகம், வியாபாரம், நண்பர்கள், ஆரோக்கியம், உங்களுக்கு மிகவும் பிடித்த அர்த்தமுள்ள விஷயங்கள் எல்லாம் இந்த வரிசையில் சேர்க்கலாம். முதலில் இந்த விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம் தாருங்கள். வேறெதுவும் இல்லா விட்டாலும் கூட இவை உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றால் அந்த வாழ்க்கை நிறைவாகவே இருக்கும். அடுத்ததாக வீடு, வாகனம், மற்ற பொருள்கள், சௌகரியங்கள் எல்லாம் அந்த சிறிய கற்கள் போன்றவை. அவற்றை அடுத்தபடியாகவே உங்கள் வாழ்க்கையில் சேருங்கள். மற்றவை எல்லாம் அந்த மணல் போல. அவற்றை கடைசியாக வாழ்க்கையில் புகுத்த முடிந்தால் புகுத்துங்கள். முடியா விட்டாலும் வாழ்க்கை நிறைவாகவே இருக்கும்

அவர் காபியைப் பற்றி சொல்லாமல் போகவே ஒரு மாணவர் அதைப் பற்றிக் கேட்டார். ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார். “எத்தனை தான் வாழ்க்கை வேறெதற்கும் இடமில்லாமல் நிறைந்திருந்தாலும் கூட நண்பனுடன் சேர்ந்து காபி குடித்தபடி சிறிது நேரம் பேச கண்டிப்பாக இடம்/நேரம் இருக்கும். அதைக் காட்டுவது தான் அந்த காபி

வாழ்க்கையில் முதலில் மிக முக்கியமான விஷயங்களுக்கு நம் நேரத்தையும் கவனத்தையும் செலுத்துவது அவசியம். அதை விட்டு அதிமுக்கியம் அல்லாத, குறைவான முக்கியத்துவம் அல்லது முக்கியத்துவமே இல்லாதவற்றிற்கு வாழ்க்கையில் இடம் கொடுத்தால் பின் முக்கியமானவற்றிற்கு நம் வாழ்க்கையில் இடம் இருக்காது. வாழ்க்கை நிறைவற்றதாகவே தங்கி விடும்.

இந்த ஜாடி உதாரணத்திலேயே முதலில் சிறிய கற்களையும், மணலையும் நிரப்பி இருந்தால் கோல்ஃப் பந்துகளை நிரப்பி இருக்க முடியாது. கோல்ஃப் பந்துகள், சிறு கற்கள், மணல் போன்ற அத்தனையும் அந்த ஜாடியில் அந்த அளவில் புகுத்த வேண்டும் என்றால் அதே வரிசையில் போட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். வாழ்க்கையிலும் அது போலத்தான்.

ஜாடிக்கென்று ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு இருப்பது போல வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட கால அளவே தரப்பட்டிருக்கிறது. அதை எதற்கெல்லாம் எந்த அளவில் பயன்படுத்துகிறோம் என்ற பிரக்ஞை ஒரு மனிதனுக்கு என்றுமே இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சியோ, நடையோ, கவனம் தருதலோ செய்ய வேண்டிய நேரத்தில் டிவி பார்த்துக் கொண்டோ, வம்பு பேசிக் கொண்டோ கூட பொழுதைப் போக்கலாம். அது கோல்ஃப் பந்துகளுக்கு பதிலாக ஜாடியில் மணலை நிரப்புவதற்கு சமம். குடும்பத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்திலும் கூடுதலாக பணத்தையும், பொருள்களையும் சேர்த்துக் கொண்டே போக நேரத்தைச் செலவழித்தால் கோல்ஃப் பந்துகளுக்கு பதிலாக சிறுகற்களை ஜாடியில் போடுவதற்கு சமம்.

ஒவ்வொரு கணமும் நாம் வாழ்க்கையை நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையை எதை வைத்து நிரப்புகிறோம் என்பது தான் முக்கியம். நிறைவான வாழ்க்கை என்று கருதுவது முக்கியமானவை எல்லாமே நிறைந்த வாழ்க்கையைத் தான். அதை விட்டு கேளிக்கைகளையும், பொருள்களையும் வைத்து நிரப்பி விட்டு அதை விட முக்கியமான அர்த்தமுள்ள விஷயங்களை இழந்து விடாதீர்கள்!

-          என்.கணேசன்
   

Monday, June 23, 2014

கபீர் கற்பிக்கும் ஆன்மிகம்!

அறிவார்ந்த ஆன்மிகம்-43

இறைவனை அடைய உதவும் நோக்கத்துடன் தான் மதங்கள் தோன்றின. மதங்கள் என்ற வழிகள் பலவானாலும் போய்ச் சேர்கிற இலக்கு இறைவனாகத் தான் இருக்கிறது. ஆனால் மக்களின் அறியாமையால் இலக்கான இறைவன் மறக்கப்பட்டு வழிகளான மதங்கள் பிரதானமாகி விட்டன. அது ஒற்றுமையின்மைக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் காரணமாகி விடும் அவலம் எல்லா கால கட்டங்களிலும் நம்மால் பார்க்க முடிந்தது தான். ஆனால் அந்தக் காலக்கட்டங்களில் எல்லாம் உண்மையை உணர்ந்த ஞானிகள் பிறப்பதும், இந்தப் பிரிவினைகளின் உக்கிரத்தைக் குறைப்பதும் கூட நடைபெறுவது ஆறுதலான விஷயம்.

அந்த வகையில்  பதினைந்தாம் நூற்றாண்டில் வாரணாசியில் தோன்றிய ஞானி கபீர் தாசர்.  இவர் பிறப்பு பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. நெசவுத் தொழில் செய்யும் ஒரு மகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாரார் கூறுகின்றனர்.  ஒரு பார்ப்பன விதவைக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து ஊர் அவச்சொல்லுக்குப் பயந்து அவளால் கைவிடப்பட்டார் என்றும் பிறகு `நீரு' என்ற பெயருடைய ஒரு மகமதிய நெசவுக்காரரால் இவர் எடுத்து வளர்க்கப் பட்டார் என்றும் மற்றொரு சாரார் கூறுகின்றனர். ஆனால் வளர்க்கப்பட்டது ஏழை மகமதிய நெசவுக் குடும்பத்தில் தான் என்பதில் ஒருமித்த கருத்து நிலவுகின்றது.

சிறுவனாக இருக்கையிலேயே ராமானந்தர் என்ற  துறவியின் போதனைகளால் கபீர் ஈர்க்கப்பட்டார். திருமணம் செய்து கொண்டு ஏழை நெசவாளியாகவே வாழ்ந்த போதும் ஆன்மிகத்தில் மிக உயர்ந்த நிலையை இளமையிலே கபீர் எட்டி இருந்தார். இறைவன் ஒருவரே, சாதி சமயப் பிரிவினைகள் கூடாது, ஆன்மிகத்தில் மேற்போக்காய் போதனைகளைப் பின்பற்றுவதில் பயன் எதுவுமில்லை, உண்மையாய் ஆத்மார்த்தமாய் இறைவழியில் நடக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அவர் போதனைகளில் மிக முக்கியமாய் இருந்தன. அவரது ஆன்மிக தத்துவக் கருத்துக்கள் அதிகமாக தோஹா என்ற ஈரடிக் கவிதை வடிவில் இருந்தன.

கபீரின் நேர்மையான ஆணித்தரமான போதனைகள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும் கவர்வதாகவும் இருந்தன. அவர் தெள்ளத் தெளிவாகச் சொன்னார்.  நமது கர்ம வினைகளுக்கானப் பலனை நாமே தான் தீர்த்தாக வேண்டும். நமது நோக்கம் நேர்மையாக இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின்  விளைவுகளை அவர்களே சந்திப்பர்.

மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்த கபீரிடம் இருந்த உண்மையான ஞான சக்தி இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலாரையும் அவரிடம் ஈர்த்தது. இரண்டு மதங்களிலும் அறிவுக்குப் பொருந்தியவற்றை அவர் ஆதரித்தும், அறிவுக்குப் பொருத்தமற்றதாய் தோன்றியதை மறுத்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார். அதனால் இரு மதங்களில் இருந்தும் எதிர்ப்பு அவருக்கு இருந்த போதும் அவர் போதனைகளைக் கேட்க அவர் குடிசைக்குப் பலர் சென்ற வண்ணம் இருந்தனர்.

அவர் குடிசைக்குச் செல்ல கசாப்புக் கடைத் தெரு வழியாகப் போக வேண்டும் என்பதால் அக்காலத்தில் சில உயர்ஜாதி இந்துக்களுக்குத் தயக்கம் இருந்தது. அதே நேரத்தில் ஒரு மகானிடம் இருந்து ஞான வாக்கியங்களைக் கேட்டறியவும் அவர்களுக்கு பேரார்வம் இருந்தது. தங்கள் தயக்கத்தை அவர்கள் கபீரிடம் வெளிப்படையாகவே சொன்ன போது கபீர் பாடினார்.

மனையொட்டி மாமிசக் கடை என வருந்துவது எதற்கு? 
வினையொட்டி வருவதே வாழ்வு, அவரவர் வினை அவர்க்கு!

வெளி உலக அடையாளங்களை விட உள்மனம் செயல் ஒட்டியதே ஆன்மிக வாழ்க்கை என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

அவரது தோஹாக்களின் ஆழமான ஆன்மிகக் கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

கபீரான நான் மிக ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன்: நான் அது (இறைவன்) ஒன்றெனச் சொன்னால், அது இல்லை (தவறாகிப் போகும்), நான் இரண்டு எனச் சொன்னாலும் அதுவும் நிந்தனையாகப் போகும், அது எப்போதும் எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும். இறைவன் பற்றிய விவாதங்கள் அனாவசியம் என்கிற தொனியில் இருக்கிறது இந்த தோஹா.

எதுவரை, “நான்” “என்என்று (அகந்தை என்னுள்) இருந்ததோ, “ஹரிஅங்கு வரவில்லை, எப்போது ஹரிஅங்கு வந்துவிட்டாரோ, அப்போது, “நான்” “என்என்று என்னுள் இருந்த அகந்தையைக் காண முடியவில்லை. கடவுள் இருக்கும் இடத்தில் கர்வம் இருக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கையிலுள்ள ஜபமாலையோ, முறைப்படி தன்னியக்கமாக சுழற்றப்படுகிறது; நாக்கோ உதட்டைச் சுழற்றி சுழற்றி மந்திரங்களை உச்சரிப்பதாகக் காண்பித்துக் கொள்கிறது. ஆனால், மனமோ எங்கெங்கோ போய் தடுமாறுகிறது.  இதனைத் தான் இறையைப் பற்றி ஆழ்ந்த சிந்தனைஎனச் சொல்வதா?”. பெரும்பாலான நம்முடைய பிரார்த்தனை மற்றும் தியான நேரங்களின் தன்மை எப்படி இருக்கின்றன என்று அருமையாக கபீர் சுட்டிக் காட்டுகிறார்.

அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு, வழியில் காணும் பருப்புக்கும் ஆசைப்பட்டால் அதற்கு இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டுஅதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடும் என்று கபீர் எச்சரிக்கிறார். எறும்பின் சக்திக்கு பருப்பு அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் மாயையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே அவர் அறிவுரை.

கபீரின் பக்தி இயக்கம் கபீர் பந்த் என்றழைக்கப்படுகிறது. அவரது சீடர்களும், பின்பற்றுவோரும் அந்த இயக்கத்தின் மூலம் அவர் போதனைகளைப் பரப்பினார்கள். அம்பேத்கரின் குடும்பம் கூட  கபீர் பந்த் இயக்கத்தின் தொடர்பில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதனால் சிறுவயதில் இருந்தே அம்பேத்கர் கபீர் பந்த் பாடல்கள் கேட்டே வளர்ந்தார். அவர் பௌத்த மதத்துக்கு மாறிய பிறகு, அவரது மரணத்துக்குச் சிறிது நேரம் முன்னால்கூட, அவர் கபீர் பாடல்களைத் தனக்குள் பாடிக்கொண்டிருந்தார் என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்ஜய் கீர்.

மத ஒற்றுமையை வலியுறுத்தி வாழ்ந்த கபீர் தாசரின் மறைவுக்குப் பின் அவர் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சண்டை அவர் உடலுக்கு உரிமை கொண்டாடிய இந்து முஸ்லீம்களிடம் ஏற்பட்டது தான் வேடிக்கை. கடைசியில் அவர் பிணத்தின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்த போது மலர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவற்றை அவர்கள் பாதியாகப் பிரித்துக் கொண்டு அவரவர் முறைப்படி அந்திமக் கிரியைகள் செய்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இன்றும் காசியில் அவருடைய கோயிலும், அவர் சமாதியில் மசூதியும் இடம் பெற்று அவர் போதித்த மத ஒற்றுமைக்கு சான்றாய் விளங்குகின்றன. 

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 31-12-2013




Thursday, June 19, 2014

விரைவில் என் புதிய நாவல் “புத்தம் சரணம் கச்சாமி!”



அன்பு வாசகர்களுக்கு,

வணக்கம்.

பரம(ன்) இரகசியத்தைத் தொடர்ந்து பல வாசகர்கள் புதிய நாவல் ஒன்றை எழுதச் சொல்லி என்னை வற்புறுத்தி வருகிறார்கள். பரம(ன்) இரகசியம் நாவல் பெற்ற வரவேற்பு அபாரமானது, நான் இந்த அளவில் எதிர்பாராதது. அதற்கு அடுத்ததாக ஒரு நாவல் என்றால் கண்டிப்பாக அது பரம(ன்) இரகசியத்தோடு ஒப்பிடப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த நாவலைப் படைத்து விட்டு அதை விடச் சிறந்ததாக இல்லா விட்டாலும் ஓரளவு இணையாகவாவது ஒரு நாவலைப் படைக்கா விட்டால் அது சோபை இழந்து விடும் அபாயம் இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டே வாசகர்களின் அன்பான கட்டளைக்கு இணங்க புத்தம் சரணம் கச்சாமி!என்ற புதியதொரு நாவலை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இந்த நாவலிலும் ஆன்மிகம், குடும்பம், காதல், பாசம், சதி, சாகசம், திகில், அமானுஷ்யம், மர்மம், ஆகிய எல்லாமும் உண்டு.

இந்த நாவலின் ஒரு முக்கிய கதாபாத்திரம் என் பழைய வாசகர்களுக்கு மிகவும் பிடித்த, பரிச்சயமான கதாபாத்திரம் தான். அமானுஷ்யன் அக்‌ஷய் தான் அது.  அமானுஷ்யனின் அக்‌ஷய் மற்றும் சில கதாபாத்திரங்கள் இதில் இடம் பிடிக்கிறார்கள். ஆனால் இந்த நாவல் தனிக்கதைக்களம் தான். அதனால் அமானுஷ்யன் படித்து தான் இதைப் படிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தேவைப்படும் ஒருசில இடங்களில் பழைய சம்பவங்கள் புதிய நாவலிலும் சாரம் குறையாமல் சுருக்கமாக சொல்லப்படும் என்பதால் புதிய வாசகர்களுக்கு சிறிதும் சிரமம் இருக்காது.

பரம(ன்) இரகசியத்தைப் போலவே இந்த நாவலும் ஒவ்வொரு வியாழனும் 2014 ஜுலை 3 ஆம் தேதி முதல் இந்த வலைப்பூவில் பதிவிடப்படும். அடுத்தது என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம் நாவல் மிக சுவாரசியமாக இருக்கும் என்று மட்டுமல்லாமல் உங்கள் எண்ண அலைவரிசைகளை மேம்படுத்தக்கூடியதாகவும், மேலான உண்மைகளைக் கதை வடிவில் நுட்பமாகக் கற்றுக் கொடுக்கும்படியாகவும் இருக்கும் என்பதை நான் உறுதி கூறுகிறேன்.

அன்புடன்
உங்கள் (என்) கணேசன்



Wednesday, June 18, 2014

துக்ளக்கில் “பரம(ன்) இரகசியம்” நாவல் விமர்சனம்


அன்பு வாசகர்களே,

வணக்கம். 

தினத்தந்தி, தினமலர், தினமணி பத்திரிக்கைகளைத் தொடர்ந்து இன்று துக்ளக்கிலும் புத்தக விமர்சனம் பகுதியில் நம் “பரம(ன்) இரகசியம்” நாவலின் விமர்சனம் பாராட்டி வந்துள்ளது. 

அன்புடன்

என்.கணேசன்

நன்றி: துக்ளக் - 25-06-2014

Monday, June 16, 2014

இறைவனை நாடுபவர் நான்கு ரகம்!


கீதை காட்டும் பாதை 31

இறைவனை நம்புபவர்கள் கூட எப்போதும் அவனை நாடுபவர்களாக இருப்பதில்லை. அவசியம் ஏற்பட்டால் ஒழிய ஆண்டவனையும் எண்ணாமல் இருப்பது சாதாரண மனித சுபாவம் தானே. அப்படியானால் இன்று கோயில்களில் கூட்டம் எல்லா நேரங்களிலும் நிரம்பி வழிகிறதே, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறதே என்று கேட்கலாம். இன்று அவசியங்கள் அதிகமாகிக் கொண்டு வருவதால் தான் இறைவனை நாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பது தான் இன்றைய யதார்த்தம்.  ஆனால் காரணம் எதுவாக இருந்த போதிலும், இறைவனை நாடுவதே புண்ணியம் என்கிறது பகவத்கீதை.

கீதையின் ஏழாவது அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தில் இறைவனை நாடுபவர்களை நான்கு ரகங்களாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிரிக்கிறார். அவர் அர்ஜுனனிடம் சொல்கிறார்-    

அர்ஜுனா! துன்பம் அடைந்தவன், பொருளை நாடுபவன், ஞானத்தை நாடுபவன், மெய்ஞானம் பெற்றவன் என புண்ணியசீலர்களான நான்கு வகையினர் என்னை வழிபடுகிறார்கள்.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பார்கள். துன்பம் வருகையில் இறைவனைத் தவிர வேறு யாரை ஒருவன் நம்பிக்கையோடு அழைக்க முடியும்? மனிதர்கள் உதவலாம். ஆனால் அதற்கு அவர்களுக்கு சக்தியும், மனமும் இருக்கும் என்று உறுதியாக நம்மால் சொல்ல முடியுமா? ஆபத்து காலங்களில் ஆத்மார்த்தமாய் மனிதன் கூவுவது இறைவனை நோக்கியே அல்லவா?

பாஞ்சாலி ஐந்து பராக்கிரமசாலிகளைக் கணவர்களாகப் பெற்றவள். துச்சாதனனால் சேலை உருவப்பட்ட போது அந்த ஐந்து பேர்களும் அவளுக்கு உதவ முடியவில்லை. குலத்தின் மூத்தவரான பீஷ்மர் உதவ முடியவில்லை. தர்மம் அறிந்த விதுரன் உதவ முடியவில்லை. கௌரவர்களுக்கும் குருவான கிருபாச்சாரியாரும், ஆசிரியரான துரோணரும் உதவவில்லை. அத்தனை பேரிடமும் அவள் நியாயம் கேட்ட போது தலைகவிழ்ந்தனரே ஒழிய அவளுக்கு உதவ முன்வரவில்லை. கடைசியில் சிறிது நேரம் தன்னையே நம்பித் தன் கைகளால் தடுத்துப் பார்த்தாள் பாஞ்சாலி. தன் கையே தனக்குதவி என்பார்கள். கைகளும் அப்போது கைகொடுக்கவில்லை. கடைசியில் அந்தக் கைகளையும் மேல் உயர்த்தி பரந்தாமனை அழைத்தாள். எடுத்தார் இறைவன் வஸ்திராவதாரம். சேலைக்குவியல் மலைபோலக் குவிந்தும் முடிவுக்கு வரவில்லை. போர்க்களத்தில் எதிரிகளைக் கொன்று குவிக்க முடிந்த மகா சக்திமானான துச்சாதனனுக்கு அந்த சேலையை இழுக்க சக்தி போதாமல் தோற்றுப் போய் தரையில் உட்கார்ந்து விட்டான்.

தன்னைச் சேர்ந்தவர் பலமும், தன் பலமும் துன்பகாலத்தில் போதாத போது கடைசியான புகலிடம் இறைவனே அல்லவா? அந்தக் காலத்தில் இறைவனை நம்பிக்கையோடு அழைக்கவும் ஒருவர் முன்பே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  இந்த முதல் ரகம் தான் இறைவனை நாடுவதில் முதல் நிலையும் கூட. இது அடிப்படை அவசியம். இது இதயத்தின் ஆழத்தில் உணரப்படும் தேவை.

அடுத்ததாக  அது வேண்டும், இது வேண்டும் என்கிற ஆசையும் மனிதனை இறைவனை நாட வைக்கிறது. மனித ஆசைகளும், தேவைகளும் பாஞ்சாலியின் சேலையைப் போலவே எல்லையில்லாமல் வந்து கொண்டு இருப்பவை தானே? அதனால் அதைக் கொடு, இதைக் கொடு என்று எல்லாவற்றையும் தர முடிந்த கற்பகத் தருவான இறைவனை நாடுவதும் என்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி தேவைகளின் போதும் இறைவன் மீது மனிதனுக்கு ஏற்படும் பக்திக்கு அளவே இல்லை. இந்த இரண்டாம் ரகம் மற்றும் இரண்டாம் நிலையையும் இறைவன் இங்கு குறை கூறவில்லை. எதையாவது கேட்பதற்காவது இறைவனை நினைத்தாலும் இறைவனை நினைக்கும் செயலால் இந்த ரகத்தையும் புண்ணியசாலிகளாய் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

மூன்றாவதாக எதையும் அறிந்து கொள்ளும் தாகத்தை, ஞானத் தேடலை ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இந்த ரகத்தில் கூட்டம் அதிகமில்லை. தன் தேவைகள் முடியும் போது, மேலானதான ஒன்றை அறிந்து கொள்ள ஏற்படும் தாகம் என்ற தேவையை வெகுசிலரே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எல்லா ஞானத்தின் எல்லையும் இறைவனே என்பதால் ஞானத்தை நோக்கிப் போகிறவன் இறைவனை நாடிப் போகிறவனே ஆகிறான். முதல் இரண்டு அடிப்படை நிலைகளையும் கடந்து வருகிறவனே இந்த மூன்றாம் நிலையில் பயணிக்கிறான்.

நான்காவது ரகமும், நிலையும் மெய்ஞானி. ஒன்றை அறிவது வேறு. அறிந்ததில் ஐக்கியமாவது வேறு. இறைவனை நாடிச் சென்று, அறிந்து, உணர்ந்து, அந்த மெய்ஞானத்தில் ஐக்கியமாக முடிவது முடிவான உன்னத நிலை. அது மிகச் சிலருக்கே வாய்க்கும். கோடிகளில் ஒருவருக்கு மட்டும் வாய்க்கும் பெரும்பேறு அது.  இந்த நிலையில் சாதாரண மனிதர்களின் இயல்பான தேவைகளும் இல்லை. அறிவுமுதிர்ச்சியின் காரணமாக மனிதன் உணரும் தேவைகளும் இல்லை. தேவைகளே இல்லாமல், இதற்கு மேல் வேறு எதுவும் இல்லை என்று அறிந்து, அந்த நிலையிலேயே தங்கி விடும் உன்னத நிலை, உன்னத ரகம்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
அவர்களுக்குள் எப்போதும் என்னுடன் தொடர்பு கொண்டவனும், என் ஒருவனிடமே பக்தி பூண்டவனுமான ஞானி உயர்ந்தவன். ஞானிக்கு நான் மிகவும் பிரியமானவன். அதே போல எனக்கும் அவன் மிகவும் பிரியமானவன்.

மேற்கண்ட நால்வரும் உயர்ந்தவர்களே என்றாலும் ஞானி என்னுடைய ஆத்மா என்பதே என் முடிவு. ஏனெனில் அவன் மனதை அடக்கி என்னையே உயர்ந்த புகலிடமாகக் கொண்டிருப்பவன்.

பற்பல பிறவிகள் எடுத்து இறுதியில் சகலமும் வாசுதேவனே என்ற ஞானம் பெற்று என்னை அவன் சரணடைகிறான். அத்தகைய மஹாத்மா கிடைத்தற்கு அரியவன். 

இறைவனை நாடுவதாலேயே புண்ணியசாலிகளாக கருதப்படும் இந்த நான்கு ரக மனிதர்களும் உயர்ந்தவர்கள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதில் நான்காம் ரகமான ஞானி மிகவும் பிரியமானவன் என்கிறார். அதற்குக் காரணமாக இரண்டு காரணங்களையும், சிறப்புக் குணங்களையும் அவர் சொல்கிறார்.

முதலாவதாக, ஞானி இறைவனிடம் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறான். ஆபத்துகளோ, துன்பங்களோ மறைந்தவுடன் இறைவனை மறக்கிறது முதல் ரகம். ஒரு தேவை முடிந்து இன்னொரு தேவைக்காக ஏங்க ஆரம்பிக்கும் வரை இறைவனை மறக்கிறது இரண்டாம் ரகம். அறிய விரும்பும் விஷயம் பிடிபடாத போதும், குழப்பும் போதும், சுவாரசியம் இல்லாத போதும் தற்காலிகமாக மூன்றாவது ரகமும் இறைவனிடம் தொடர்பை இழக்கிறது. இறைவனிடம் தொடர்பை இழக்காதவன் ஞானி ஒருவனே. மேலும் ஞான நிலையை முழுமையாக அடைந்து இறைவனின் அலைவரிசைகளிலே இருக்கக் கூடியவன் அவன். மற்றெல்லாவற்றையும் விட இறைவனை அதிகமாக நேசிக்கிறவன் அவன். அப்படிப்பட்டவனை இறைவனும் அதிகம் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

ஆனால் அப்படிப்பட்ட நிலையை ஒருவன் அடைய முடிவது ஒரு பிறவியின் சாதனை அல்ல. பல பிறவிகளில் முயன்று கடைசிப் பிறவியில் கிடைக்கும் பலன் அது. எல்லாம் இறைவனே என்று சரணடைய முடிவது அப்படிப்பட்ட ஒரு மகாத்மாவுக்கே சாத்தியம்.

பாதை நீளும்....
-          என்.கணேசன்



Thursday, June 12, 2014

உலகப் பழமொழிகள்-4


31)   பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. இருந்தாலோ உனக்கே உன்னைத் தெரியாது.

32)   செத்தது நாய் தான். ஆனால் சவ ஊர்வலம் மிக நீளம்.

33)   நீ மிக மென்மையாக இருந்தால் உலகம் உன்னைக் கசக்கிப் பிழிந்து விடும். நீ மிக விறைப்பாய் இருந்தால் உலகம் உன்னை தகர்த்து எறிந்து விடும்.

34)   சேற்றில் ஒரு அடி வைப்பதை விட பத்து அடி சுற்றிப் போவது நல்லது.

35)   நண்பகலில் அரசன் அது நடுநிசி என்றால் நீயும் நட்சத்திரங்களைப் பார்.

36)   தானாக ஓடும் வண்டியைத் தள்ளிவிட ஆள் சேரும்.

37)   முன்னால் பணக்காரனாய் இல்லாதிருந்தவனை தரித்திரம் பாதிக்காது.

38)   வெள்ளத்தோடு வந்ததெல்லாம் வடியும் போது போய் விடும்.

39)   கவனம், மௌனம், பொறுமை மூன்றும் நீ கேட்காமலே எல்லாவற்றையும் கற்பிக்கும்.

40)   மகிழ்ச்சி கொண்ட ஏழை ஒரு கோடீஸ்வரன்.

தொகுப்பு: என்.கணேசன்



Monday, June 9, 2014

அர்த்தம் மிகுந்த அஷ்டவக்ர கீதை!

அறிவார்ந்த ஆன்மிகம்-42

கீதை என்றதும் உடனடியாக நம் நினைவிற்கு வருவது ஸ்ரீமத் பகவத் கீதை தான். ஆனால் பகவத் கீதையைப் போலவே உத்தவ கீதை, சிவ கீதை, ஹம்ச கீதை, ராம கீதை, அவதூத கீதை, அஷ்டவக்ர கீதை முதலான பல கீதைகள் இருக்கின்றன. அவற்றில் அஷ்டவக்ர கீதை அறிஞர்களால் மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

அஷ்டவக்ர கீதையும் பகவத் கீதையைப் போலவே மகாபாரதத்தில் அமைந்திருக்கிறது. பாண்டவர்களின் வனவாசத்தின் போது அவர்களைச் சந்தித்த லோசமர் என்ற முனிவர் அஷ்டவக்ரர் என்ற மகாஞானியைப் பற்றிக் மூன்று சர்கங்களில் (வனபர்வா 132-134) கூறுவதாக அமைந்துள்ளது. யார் இந்த அஷ்டவக்ரர், அவர் சொல்லும் கீதையின் சாரம் என்ன என்று பார்ப்போமா?

அஷ்டவக்ரம் என்றால் எட்டு வளைவுகளுடன் கூடியது என்று பொருள். எட்டு வளைவுகளுடன் கூடிய உடலைக் கொண்டவர் என்பதால் அஷ்டவக்ரர் என்று பெயர். இவர் தன் தாயாரின் கருவில் இருந்த பொழுது, வேத அறிவில் சிறந்து விளங்கிய இவரது தகப்பனார் கஹோலர் சிறுவர்களுக்கு வேதபாடங்கள் கற்பித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அப்படிக் கற்பித்துக் கொண்டிருக்கையில் அவர் வேத உச்சரிப்புகளில் தவறு செய்தார். அவரது ஒவ்வொரு தவறான உச்சரிப்பிலும் அவரது மனைவியின் கருவில் இருந்த குழந்தை நெளிந்தது. அது இன்று வேத பாராயணத்தில் எட்டு தவறுகள் செய்தார் என்பதை அவரிடம் தெரிவித்தாம்.


அதைக் கேட்டு அவரது மாணவர்கள் ஏளனமாகச் சிரிக்க கஹோலர் அவமானம் தாளாமல் கோபத்தில் சாபம் கொடுக்க அந்தக் குழந்தை அஷ்ட கோணல்களுடனேயே பிறந்தது. சாபம் கொடுத்த பின்னர் கஹோலர் மிகுந்த வருத்தம் அடைந்தார் என்றாலும் அதை அவரால் மாற்ற இயலவில்லை. அவரும் அவர் மனைவியும் பெருந்துக்கத்துடன் குழந்தையை வளர்க்க ஆரம்பித்தனர்.


மகன் குழந்தையாக இருக்கையிலேயே வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க உபாயம் தேடி கஹோலர் மிதிலையில் ஜனக மகாராஜாவின் அரண்மனைக்கு வந்தார். அப்போது அரசவையில் ஸ்ரீவந்தின் என்ற அறிஞருடன் வாதிட்டு வென்றால் பெரிய பரிசு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கஹோலர் மகிழ்ச்சி அடைந்து ஜனக மகாராஜாவின் சபையில் ஸ்ரீவந்தின் அறிஞருடன் வாதத்தில் கலந்து கொண்டார். ஆனால் அந்த வாதத்தில் ஸ்ரீவந்தினிடம் கஹோலர் தோல்வி அடைந்தார். தோற்றுப்போன படியால் ஸ்ரீவந்தின் என்ற அந்த அறிஞரின் தகப்பனார் வருணருக்கு காலம் முழுவதும் குற்றேவல் புரிய கஹோலர் அனுப்பப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்ட அஷ்டவக்ரரின் தாயார் மற்றும் அவர் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனை அடைந்தனர். வருடங்கள் உருண்டோடின. தந்தை இல்லாமலேயே வளர்ந்த அஷ்டவக்ரர் புத்தி கூர்மையான மாணவனாக திகழ்ந்தார். அவர் படித்து வந்த குருகுலத்தில் அவருடன் படிக்கும் மற்ற சிறுவர்கள், “உனக்குத் தகப்பனாரே கிடையாது” என்று கேலி செய்தனர்.

இதனால் மனவருத்தமுற்ற அஷ்டவக்ரர் வீடுதிரும்பி தன் தாயாரிடம் தன் தந்தையைப் பற்றி விசாரித்தார். தாய் மூலம் நடந்ததைக் கேள்விப்பட்ட போது அஷ்டவக்ரருக்கு வயது பன்னிரண்டு. தாயார் தடுத்தும் கேளாமல் உடனடியாக வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற அஷ்டவக்ரர் வழியெல்லாம் விசாரித்துக் கொண்டு சென்று பல மாதங்கள் கழித்து மிதிலையை அடைந்தார்.


மிதிலை மாநகரில் அவர் நடந்து கொண்டிருந்த போது மன்னர் ரதத்தில் வந்து கொண்டிருந்தார். மன்னர் வருவதால் சாலையில் வழி விடச் சொல்லி காவலன் சொல்ல அஷ்டவக்ரர் சொன்னார். “கண்பார்வை இல்லாதவன், உடல் ஊனமுள்ளவன், பெண்கள், பாரம் சுமந்து கொண்டிருப்பவன், வேதம் படித்த அறிஞன், இவர்களுக்கெல்லாம் வேந்தனே ஆனாலும் வழிவிட வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதை அறியாதவரா உங்கள் மன்னர்?”


சிறுவன் என்றாலும் சொன்னதில் இருந்த உண்மை உறைக்க ஜனக மகாராஜா முதலில் அஷ்டவக்ரர் செல்ல வழி விட்டு தாமதிக்கத் தன் சேவகர்களைப் பணித்தார். அந்தக் காலத்தில் எந்த அளவிற்கு உண்மைக்கு விலை இருந்தது, கருத்து சுதந்திரம் இருந்தது என்பது இதைப் படிக்கையில் நமக்கு விளங்கலாம்.


மறு நாள் பல வேத விற்பன்னர்கள் கூடியிருந்த அரசவையில் ஸ்ரீவந்தினுடன் வாதத்தில் கலந்து கொள்ள அஷ்டவக்கிரர் வந்தார். அஷ்டகோணலுடன் உடலை வித்தியாசமாக அசைத்துக் கொண்டு அவர் சபையில் நுழைய அங்கிருந்தவர்கள் பலரும் கேலியாகச் சிரித்தனர்.

கேலியையே கேட்டும் பார்த்தும் வளர்ந்திருந்த அஷ்டவக்ரர் சக்கரவர்த்தியைப் பார்த்து, "அரசே நான் இது வேத விற்பன்னர்கள் கூடி இருக்கும் சபை என்று நம்பி வந்தேன். ஆனால் இது செருப்பு தைப்பவர்கள் கூடியிருக்கும் இடம் என்று அறியவில்லை. குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்" என்று அமைதியாகச் சொல்லி சபையை விட்டு வெளியேறத் தயாரானார்.


தங்களை அவமதித்ததற்கு பண்டிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சக்கரவர்த்தி அவர் கூறியதற்கு விளக்கம் கேட்டார்.

அஷ்டவக்ரர் விளக்கம் சொன்னார். "அரசே செருப்பு தைப்பவர்கள் தான் ஒரு விலங்கினைப் பார்த்ததும் அது கோணல் மாணலாக வளர்ந்திருந்தால் இதன் தோல் தங்கள் வேலைக்கு ஆகாதே என்று அதைப் புறக்கணிப்பார்கள். வேத விற்பன்னர்கள் தோற்றத்தைக் கண்டு எடைபோடும் பாமரத்தனத்தை கடந்து, உள்ளே உள்ள அறிவின் ஆழத்தை அறிய முற்படுவார்கள். இங்கே இவர்கள் நடந்து கொண்டதைக் கண்டு தான் செருப்பு தைப்பவர்கள் என்று முடிவு செய்தேன்"

அவர் சொற்களில் இருந்த உண்மை சுட, சிரித்த வேத பண்டிதர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஜனகருக்கு வந்திருக்கிற சிறுவனின் ஞானம் முன் தினமே புலப்பட்டிருந்தது. இப்போதைய சம்பவம் அதை உறுதிப்படுத்தியது. வந்த காரணத்தை அவர் அஷ்டவக்ரரிடம் கேட்க அஷ்டவக்ரர் ஸ்ரீவந்தினுடன் வாதம் புரிய வந்ததாகச் சொன்னார். இந்தச் சிறுவன் என்னை வெல்வதா என்று ஏளனமாக வாதத்தை ஆரம்பித்த ஸ்ரீவந்தின் முடிவில் அஷ்டவக்ரரின் ஞான அறிவுக்கு ஈடு தர முடியாமல் தோல்வி அடைந்தார்.

வென்றதற்குப் பரிசாக அஷ்டவக்ரர் தந்தையின் விடுதலையை வேண்டி தந்தையை மீட்டார். மேலும் ஞானத்தில் சிறந்தவரான ஜனகருடன் அஷ்டவக்ரர் தன் ஞானச் செறிவை பகிர்ந்து கொண்டார்.


ஊர் திரும்பும் வழியில் அஷ்டவக்ரரின் தகப்பனார் அவரை சமங்கா என்ற நதியில் குளிக்கச் செய்தார். தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்ட அஷ்டவக்ரர் தன் உடலின் கூனங்கள் நீங்கி கண்டோர் மயங்கும் அழகுடைய இளைஞனாக மாறினார்.

ஜனகருக்கும், அஷ்ட வக்ரருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் தான் அஷ்டவக்ர கீதை.


அஷ்டவக்ர கீதையில் ஜனகர் கூறுகிறார்:-

“மே நாஸ்தி கிஞ்சன
அதவா மே சர்வம்”


அதாவது “ஒருவிதத்தில் எதுவுமே எனக்குச் சொந்தமில்லை. மற்றொரு விதத்தில் ஒவ்வொன்றும் என்னுடையதே.” கிட்டத்தட்ட 300 ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டவக்ர கீதையில் உள்ள பொருள் பொதிந்த வாக்கியம் இது. அஷ்டவக்ர கீதையின் மற்ற ஞானக் கருத்துக்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.


· உனது உடலில் இருந்து நீ வேறுபட்டவன். உணர்வு தான் நீ. இந்த அறிவில் நீ நிலைபெற்று இருந்தால் எப்போதும் அமைதியாகவும் இன்பமாகவும், பந்தங்களில் இருந்து விடுபட்டவனாகவும் உன்னால் இருக்க முடியும்.


· சரி-தவறு, இன்பம்-துன்பம் போன்ற இருமைகள் உனது மனதை மட்டுமே சேர்ந்தவை. உனக்கும் அவற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நீ எதையும் செய்பவனும் இல்லை; பலனை அனுபவிப்பவனும் இல்லை. நீ எப்போதும் விடுதலைப் பெற்றவன்.


· அனைத்து நிகழ்வுகளுக்கும் நீ வெறும் சாட்சி மட்டுமே என்ற உண்மையை மறப்பதுதான் உன் துன்பங்களுக்கு காரணம்.


· ஒருவன் தன்னை துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்தவன் என்று எண்ணினால் அதுவே உண்மை. அதை விடுத்து தன்னை பந்தப்பட்டவன் என்று கருதினால் அதுதான் உண்மை. ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’ என்ற வாசகம் உண்மையானது.


· தானே இந்த உலகம் என்று அறிந்தவர்கள் மனம் போல வாழ்வதை யாரால் கட்டுப்படுத்த முடியும்?


இந்த அஷ்டவக்ர கீதையை விவேகானந்தர், ரமண மகரிஷி உட்பட பல மகான்களும் ஞானப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்.


- என்.கணேசன்

- நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 24-12-2013


Thursday, June 5, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 9


·         செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

·         எதிரிக்கு சகுனத்தடை என்று மூக்கையா அறுத்துக் கொள்வது?

·         எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

·         கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

·         கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

·         கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

·         காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

·         கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

·         எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல

·         கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல

·         சில்லரைக் கடன் சீரழிக்கும்.

·         சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?



தொகுப்பு: என்.கணேசன்

Monday, June 2, 2014

ஞானத்தின் அளவுகோல்!


அறிவார்ந்த ஆன்மிகம் 41

பாரதம் ஞானிகளின் பூமி. மற்ற நாடுகளில் மனிதர்கள் அறிவுப் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும் முன்பே ஞானத்தின் சிகரத்தில் நம் முன்னோர் வாழ்ந்து வந்தார்கள். காலப் போக்கில் அறியாமையாலும், அலட்சியத்தாலும் நாம் நிறையவே சறுக்கி உண்மையான ஞானம் எது, போலித்தனம் எது என்று கூடத் தெரியாத அளவு குழப்ப நிலைக்கு வந்து விட்டிருக்கிறோம். ஒருவருக்கு எத்தனை தெரிந்திருக்கிறது என்பதை வைத்து ஞானத்தை எடை போடுகிறோம், அல்லது தோற்றத்தை வைத்து எடை போடுகிறோம், அல்லது அவரது சுய பிரகடனத்தை வைத்து எடை போடுகிறோம். ஆனால் அக்காலத்தில் ஞானம் அப்படி அளக்கப்படவில்லை. அதை சுகப்ரம்ம ரிஷியின் உதாரணத்தை வைத்துப் பார்த்தால் தெளிவாக விளங்கும்.

சுகப்ரம்ம ரிஷி வியாசரின் மகன். தந்தையிடம் கற்று  அனைத்து ஞானத்தையும் பெற்றவர். துறவறம் பூண்டவர். மகா ஞானி. மகனின் ஞானத் தேர்ச்சியில் வியாசர் மிகவும் பெருமிதம் அடைந்தார். ஆனால் தன் மகன் என்பதால் மகனுடைய ஞானம் அப்பழுக்கற்றது என்று நினைக்கிறோமோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. அந்தக் காலத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று எதையும் அவர்கள் சோதிக்காமல் விட்டதில்லை. அதனால் தான் போலித்தனம் உருவாகாமல் அவர்கள் அவ்வப்போது களைகளை களைய முடிந்தது. வியாசரும் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பினார். சுகப்ரம்ம ரிஷியின் ஞானத்தை சோதித்துச் சொல்லவும், குறை இருப்பின் அதை நிவர்த்தி செய்ய மேலும் கற்றுக் கொண்டு வரவும் ஜனகரிடம் அனுப்பினார்.

சுகப்ரம்ம ரிஷிக்கும் தான் பெற்ற ஞானம் முழுமையானதா, இன்னும் கற்க வேண்டி உள்ளதா என்ற அறிவார்ந்த சந்தேகம் இருந்தது. அதனால் அவர் தந்தை சொன்னபடி ஜனகரை நாடி மிதிலைக்குச் சென்றார். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். தன் மகன் என்பதால் பாசத்துடன் பாரபட்சமாக எண்ணுகிறோமோ என்ற சந்தேகம் வியாசரைப் போன்ற தந்தைக்கு வந்ததும், பெற்ற ஞானத்தில் குறை இருக்குமோ, இனியும் பெற வேண்டிய ஞானம் உள்ளதோ என்ற சந்தேகம் சுகப்ரம்ம ரிஷியைப் போன்ற மகனுக்கு வந்ததும் ஆரோக்கியமான அறிவார்ந்த பக்குவநிலை அன்றைய ஆன்மிகத்தில் இருந்திருக்கிறது என்பதற்கு இது மிக நல்ல உதாரணம்.

மிதிலை அரண்மனையை எட்டிய சுகப்ரம்ம ரிஷி வாயிற்காவலனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மன்னரைக் காண விரும்புவதாகச் சொன்னார். உள்ளே போய் விட்டு வந்த வாயிற்காவலன் மன்னர் அழைப்பார் என்று சொல்லி நின்று கொண்டான். காலம் சென்றபடி இருந்தது. வாயிற்காவலர்கள் மாறினார்கள்.  அந்த நாள் முடிந்து மறுநாள் வந்தது. மன்னர் ஜனகர் சுகப்ரம்ம ரிஷியை அழைக்கவேயில்லை. இப்படி ஒரு வாரம் சென்றது. சுகப்ரம்ம ரிஷி அமைதியாகக் காத்திருந்தார்.

ஏழு நாட்கள் கழிந்த பின் ஜனகர் தானே மந்திரி பரிவாரங்களுடன் சுகப்ரம்மரிஷியை வரவேற்க வெளியே வந்தார்.  ஒரு மன்னனுக்குரிய மரியாதை சுகப்ரம்ம ரிஷிக்கு வழங்கப்பட்டது. அவரை ஜனகர் மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார். அரசவையில் அவர் கவுரவிக்கப்பட்டார். அவரை சகல வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையில் ஜனகர் தங்கச் செய்தார். அவர் முன்னிலையில் அழகிய நர்த்தகிகள் நடனமாடினார்கள். அவருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஒரு வார காலம் இப்படி ராஜ உபசாரம் நடைபெற்றது. சுகப்ரம்ம ரிஷி அதிலும் பாதிக்கப்படாமல் அமைதியாகவே இருந்தார்.

ஒரு வாரம் அவமானப்படுத்துவது போல் காக்க வைத்த போதும் சரி, பின் அடுத்த வாரம் ராஜ உபசாரம் செய்த போதும் சரி சுகப்ரம்ம ரிஷியின் அமைதி பாதிக்கப்படவில்லை. எதுவுமே சொல்லாமல் காக்க வைத்தது  அவரைக் கோபத்தில் கொதிக்க வைக்கவும் இல்லை.  அரண்மனை விருந்தினர் மாளிகையில் சக்கரவர்த்திகளுக்கு இணையாக உபசரித்து கௌரவிக்கப்பட்டது அவரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கவும் இல்லை.  சுகப்ரம்ம ரிஷி அசைவற்ற மனதோடு அமைதியாக இருந்தார்.  

பின்னர் தான் ஜனகர் வந்த காரியம் என்ன என்று சுகப்ரம்ம ரிஷியைத் தனியாக அழைத்துக் கேட்டார். சுகப்ரம்ம ரிஷி ஜனகரைத் தேடிவந்த காரணத்தைச் சொன்னார்.

வியாசரின் மகனுக்கு ஞானம் எந்த அளவு உள்ளது என்பதைக் கடந்த இரண்டு வாரங்களிலேயே ஜனகர் தெரிந்து கொண்டிருந்தார். உண்மையான பரீட்சை நடந்து முடிந்து விட்டது. மாணவன் சிறப்பாகவே தேர்ச்சி பெற்று விட்டான் என்ற போதிலும் ஜனகர் சுகப்ரம்ம ரிஷியைச் சில கேள்விகள் கேட்டார்.

“இங்கு வரும் போது வழியில் கடைத்தெருவில் என்னவெல்லாம் கண்டாய்?

“கடைத்தெருவில் சர்க்கரைப் பணியாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன்என்றார் சுகப்ரம்ம ரிஷி.

“வேறு என்ன பார்த்தாய்?

“பேசிக் கொண்டே வளைய வரும் சர்க்கரைப் பொம்மைகளைப் பார்த்தேன்

“இங்கே என்ன பார்த்தாய்?

“இங்கும் சர்க்கரைப் பொம்மைகள் பல பார்த்தேன்

“இப்போது என்ன பார்க்கிறாய்?

“ஒரு சர்க்கரைப் பொம்மை, இன்னொரு சர்க்கரைப் பொம்மையோடு பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்

ஜனகர் சொன்னார். “உனக்கு எல்லா ஞானமும் இருக்கிறது. தெரிந்து கொள்ள இனி எதுவும் இல்லை. நீ இனி போகலாம்

ஜனகரிடம் இருந்தே சுகப்ரம்ம ரிஷிக்கு அத்தாட்சிப் பத்திரம் கிடைத்து விட்டது. சுகப்ரம்ம ரிஷி அவரை வணங்கி விட்டுப் புறப்பட்டார்.

சர்க்கரையில் பல வேறு உருவங்களுள்ள பொம்மைகளை உருவாக்கினாலும் கரைத்தால் அத்தனையும் இனிப்புச்சுவை உள்ள சர்க்கரையே. அதே போல பல்வேறு உருவங்கள் கொண்ட மனிதர்களுக்கும் அடிப்படை ஆத்மாவே. உருவங்கள் மறையும் போது மிஞ்சுவது ஆத்மாவே. வாயிற்காவலனும், ஜனகரும், மந்திரிகளும், நர்த்தகிகளும், சுகப்ரம்ம ரிஷியும் ஒரே ப்ரம்மத்தின் பல்வேறு உருவங்கள்.

இதைக் கதாகாலட்சேபத்தில் சொல்லும் ஞானியாக சுகப்ரம்ம ரிஷி இருக்கவில்லை. சொல் திறம் இருந்தால் சொல்வதை யாரும் சிறப்பாகச் சொல்லலாம். மணிக்கணக்கில் பேசலாம். கைதட்டல் வாங்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கை என்பதும் வாழ்ந்து காட்டுவது என்பதும் வேறு. சுகப்ரம்ம ரிஷி வாழ்ந்து காட்டி தன் ஞானத்தை நிரூபித்தார்.

நான் வியாசரின் மகன், ஞானி, என்னை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தி அரண்மனை வாசலில் நிற்க வைப்பதா என்று அவருக்குக் கோபம் வரவில்லை.  ஆஹா, என்ன ஒரு உபசரிப்பு, என்ன ஒரு மரியாதை என்று விருந்தினர் மாளிகையில் கிடைத்த ராஜோபசாரத்தில் அவர் அகமகிழ்ந்து விடவுமில்லை. அரண்மனை வாசலும், விருந்தினர் மாளிகையும் இரண்டும் ஒன்று தான் என்று ஒரே அமைதி நிலையில் சுகப்ரம்ம ரிஷி நிற்க முடிந்தது உண்மையாக அவர் பெற்றிருந்த ஞானத்தால் தான்.

பரீட்சை எங்கும் எப்போதும் நடக்கலாம். தயாராய் தன்னிலை பிறழாமல் இருப்பது ஞானம். அப்படி அசைக்க முடியாத ஞானமே ஞானத்தின் அளவுகோலாய் அன்று இருந்தது என்பதற்கு சுகப்ரம்ம ரிஷி ஒரு மிக நல்ல உதாரணம்.

இன்று ஞானிகள் என்று பலரை அழைக்கிறோம். அதற்கும் ஒரு படி மேலே சென்று கடவுளின் அவதாரம் என்று அவர்களைக் கொண்டாடுகிறோம். அவர்கள் பேச்சையும், எழுத்தையும், ஆன்மிகச் சின்னங்களையும் வைத்து ஞானிகள் என்ற அபிப்பிராயத்திற்கு வருவதை விட அவர்கள் தினசரி வாழ்க்கையில் அந்த ஞானம் எப்படி வெளிப்படுகிறது என்று கவனித்து அவர்கள் எப்படி என்ற முடிவுக்கு வருவதே அறிவார்ந்த ஆன்மிக அணுகுமுறையாக இருக்கும்.

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 17.12.2013