Thursday, May 8, 2014

சித்தர்களின் சக்திகளும், அலைவரிசைகளும்

பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி...


சித்ரா: உங்கள் பரமன் ரகசியம் படித்தபின் எனக்குள் எழுந்த கேள்வி....

அனைத்தும் கற்று அறிந்த குருஜி.....மற்றவர்கள் பேசும்பொழுது அவர்களின் எண்ணங்களை அறிந்து ....புன்னகைத்து....தெளிவாக பதில் சொல்லும் ஒரு..ஞானி.......கலிகாலத்தில் உலகை நல்வழி படுத்துவதற்கு......மானச லிங்கத்தின்...சக்தியை அறிந்து பயன்படுத்தும் ..அறிவு...அதை செயல் படுத்தும் தெளிவு உள்ளவர்......

அச் செயலை ..செயல் படுத்த அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் ..அவர்களின் எண்ணங்கள் தவறு என்பதை...முடிவில்தான் புரிந்து கொண்டார்..என்பதை.....ஏற்றுக் கொள்வதற்கு சற்று கடினமாக உள்ளது......

இதற்கு உங்கள் தரப்பில் ஏதாவது காரணங்கள் ....உண்டா.......

எனக்கு புரிந்தது..அகந்தை உள்ள மனிதன் ..அவன் பெற்ற சக்தி..தவறான வழியில் பயன் படுத்தினால் பயனற்று போகும் என்பது.......

வேறு விளக்கங்கள்....இருந்தால் சொல்லவும்....

என்னுடைய இரண்டாவது கேள்வி......

பரமன் ரகசியத்தின் முடிவில்.....

சித்தர்கள் தங்களுடைய அனைத்து சக்திகளையும் சேர்த்து உருவாக்கிய........பல..ஆண்டுகள் பாடுபட்டு காப்பாற்றிய லிங்கத்தின் சக்திகள்......
மனம் ஒன்றிய பக்தியும்.....நல்லறிவும்.......ஞானமும் உள்ளவர்களின்..

உள்ளங்களில் அச் சக்தி இருக்கும்..எங்கும் செல்வதில்லை.....
அவற்றை கொண்டு நீங்களேதான் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்..எந்த அவதாரமும்..நம்மை காப்பாற்றாது......

என்பது..கலிகாலத்தின் விதி இதுதான் ..என்று நீங்கள் சொல்வதாகப் படுகிறது..............

we should be the creator of our destiny......என்று அர்த்தம் கொள்ளலாமா.......


நான்: அகந்தை வரும் போது எதையும் சரியாக கணிக்கும் சக்தி போய் விடுகிறது. அது எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி. அதே போல சக்திகள் கிடைக்கும் போது மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள் என்பதை அறிவாளிகளாலும் சரியாக தீர்மானிக்க முடியாமல் போகிறது. இந்த இரண்டு உண்மைகள் குருஜியின் தவறான தேர்ந்தெடுப்புக்குப் பின்னால் உள்ளன.


சித்தர்கள் தங்கள் அத்தனை சக்திகளையும் தகுதி வாய்ந்த நல்ல மனிதர்களிடம் விட்டுப் போயிருக்கிறார்கள் என்றும் அந்த தகுதி வாய்ந்த மனிதர்கள் அதை உதாசீனப்படுத்திப் பின்வாங்கினால் தீய சக்திகள் ஜெயிக்க அவர்கள் செயலின்மையே காரணமாகி விடும் என்றும் சொல்லி இருக்கிறேன். அந்தப் பொறுப்பை அவர்கள் அவதாரங்கள் உட்பட யார் மேலும் சுமத்தி விலகி இருக்கக் கூடாது. ஏனென்றால் மகாசக்திகள் அவர்களுக்கு தரப்பட்டுள்ளன. அவர்கள் அதை உபயோகித்து செயல்பட வேண்டிய கலிகாலம் நெருங்கி இருக்கிறது என்பதே நல்ல தகுதி வாய்ந்த மனிதர்களுக்கு பரம(ன்) இரகசியம் விடுக்கும் செய்தி.


காத்யா: ஆன்மா என்றால் என்ன? இறப்பிற்குப் பின் ஆன்மாவின் நிலை என்ன?

2) பித்ருக்களுக்கு நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், ஸ்ரார்த்தம் பற்றிய தங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். உண்மையிலே நாம் செய்யும் காரியங்கள் அவர்களைச் சென்று அடைந்து அவர்களை மகிழ்விக்கின்றனவா?


நான்: ஆன்மா பற்றி இந்தக் கேள்விக்கு சுருக்கமாகப் பதில் சொல்வது இயலாத காரியம். எந்த விளக்கமும் மேலும் சில கேள்விகளை எழுப்பாமல் விடாது. இறுதியான மேலும் கேள்வியற்ற ஒரு பதிலைத் தனிமனிதன் தன் மெய்ஞானத் தேடலின் முடிவில் மட்டும் அறிந்து திருப்தியுற முடியும். அப்படியும் சுருக்கமாகச் சொல்லப் போனால் உயிரினங்களின் உடல் அழியும் போது அழிந்து விடாத சூட்சுமமான அம்சம் ஆன்மா என்று சொல்லலாம்.


தர்ப்பணம், ஸ்ரார்த்தம் ஆகியவை எல்லாம் நம் முன்னோர்களை நாம் மறந்து விடாமல் இருக்க அக்காலத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் சம்பிரதாயங்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அச்செய்கைகளால் அவர்கள் நற்கதி அடைவார்கள் என்பதும், நம்மையும், நம் சந்ததிகளையும் ஆசிர்வதித்து நம்மை மேன்மை அடையச் செய்வார்கள் என்பது இதன் உத்தேசமும் நம்பிக்கையும். இந்த பாவனையில் தவறில்லை. அவர்களை நினைவுபடுத்திக் கொள்வதும், ஆசிகள் பெற எண்ணுவதும் நல்ல உத்தேசமே. ஆனால் தன் செயல்களால் மட்டுமே ஒரு மனிதன் காப்பாற்றப்படவும், வீழ்த்தப்படவும் முடியும் என்று திடமாக நம்புகிறேன். அதனால் இது போன்ற சடங்குகளால் ஒரு மனிதன் இறந்த பின்னால் ஏதாவது பலனடைவான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.


லக்ஷ்மி வாசுதேவ்: என் அறிவுக்கு எட்டியவரை நல்ல மனிதர்கள் நல்ல புத்தகங்கள் எதை கடந்து வந்தாலும் நிச்சயம் மனம் சஞ்சலபட்டுகொண்டே இருக்கின்றது. மனம் பொறுமை இழந்து அல்லல் படுகிறது, கடந்து வந்த தோல்வியை பற்றியெல்லாம் எனகு கவலை இல்லை ஆனால் என்னுடைய எதிர்கால இலக்குகள் குறித்த பயணத்தில் மட்டும் மனம் அளவுகடந்த குழப்பம் அடைகிறது.

என்னுடைய கேள்வி இதுதான்:

· என்னை நோக்கிய(எனக்குள் செல்ல) பயணம் எப்படி இருக்க வேண்டும்?
· எப்படி தன்னம்பிக்கையை என்றும் மனதில் நிலைகொள்ளவைப்பது?
· எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருப்பது எப்படி?
· எப்படி நம் மனதையும்,செயலையும் சுய கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது?
· மனம் சஞ்சலம் அடையாமல்,தொடர் குழப்பம் கொள்ளாமல் தடுப்பது எப்படி?
· கர்ம யோகம் அடைய என்ன செய்ய வேண்டும்?
· குறிக்கோளை நோக்கிய பயணத்திற்கு எது தேவை?
· பிரபஞ்ச சக்தியை நமக்கும் துணையாய் கொள்ளவது எப்படி?


நான்: என்னுடைய கேள்வி இது தான் என்று பதிலுக்கு ஒரு புத்தகமே எழுத வேண்டிய கேள்விகள் பல எழுப்பி இருக்கிறீர்கள்.

உள் நோக்கிய பயணத்திற்கு உண்மையை அறியும் அக்கறை மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும். அந்த வேட்கை எல்லாவற்றையும் விட மேலானதாக இருக்க வேண்டும். பல ஆசைகளோடு அந்த ஆசையும் ஒன்றாக இருந்தால் அது சம்பிரதாயமான சிந்தனை ஓட்டமாக மட்டுமே இருக்க முடியும்.

தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் பற்றிய கேள்விகளை இன்னொரு வாசகர் கேட்டு பதில் அளித்துள்ளேன். பார்க்கவும்.

மனதைக் கட்டுப்படுத்துவது தொடர்ந்த பயிற்சியால் மட்டுமே முடியும். இது நீண்டகால சமாச்சாரம். குறுகிய கால உடனடி விளைவுகள் எதிர்பார்ப்பது கண்டிப்பாக ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். முதலில் சின்னச் சின்ன விஷயங்களில் மனதை ஜெயிக்கப் பாருங்கள். அதில் மிக உறுதியாய் இருங்கள். அப்படியே சிறிது சிறிதாக பெரிய விஷயங்களுக்குப் போங்கள். தோல்விகள் அடிக்கடி வரும். சறுக்கல் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். மறுபடி தொடருங்கள். இது தான் வழி. இதில் குறுக்குவழி இல்லை.

கர்ம யோகம் சித்திக்க ஒவ்வொரு செயலும் ஆழ்ந்த யோசனையுடன் செய்யப்பட வேண்டும். விளைவுக்கு பொறுப்பேற்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் எது முக்கியமோ, எது தேவையோ அதை மட்டும் சிறப்பாக முழு மனதோடு செய்தல் வேண்டும். குறிக்கோளை நோக்கிய பயணத்திற்கும் இதுவே தேவை.


பிரபஞ்ச சக்தியை நமக்கு துணையாக்கிக் கொள்ளும் முன் நமக்குள் இருக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைக்க வேண்டும். அவை நம் வசமான பின் பிரபஞ்ச சக்தி தானாக நம் வசமாகும். நமக்குத் துணையாக செயல்பட ஆரம்பிக்கும்.


ஸ்ரீமதி வெங்கட்: பிராண சக்தி என்றால் என்ன?

சித்தர்கள் எதை எதிர்பார்த்து சிரஞ்சீவியா இருக்காங்க?நமக்கு உதவவா?
நாம் அவர்களை மனதார நினைத்தால் நம்மிடம் வருவாங்கன்னு சொல்றாங்களே?அது உண்மையா?ஒரு சிலர் நம்ம அலை வரிசை அவர் அலை வரிசையுடன் ஒத்து போனால்தான் வருவாங்கணும் சொல்றாங்க?எது உண்மை?

3. நாலு பிரளயம் பார்த்தவர் கக்க புஜண்டர்னு சொல்றாங்க?பிரளயம் என்பது எல்லாத்தையும் தனக்குள் ஐக்கிய படுத்திகொள்வது தானே ?இவர் தனியா எங்கே இருக்க முடியும்?இது சாத்தியமா?

அடுத்து போகர் சீனா காரரா?நான் படித்த இன்னொரு புத்தகத்தில் அவர் காலாங்கி நாதர் சித்தர் ஜீவ சமாதி சீனாவில் பார்க்க போகும்போது ஏற்பட்ட அசம்பவததில் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு vuruvam மாறினார் சொல்றாங்க?அதுவும் உண்மையா?


நான்: பிராணசக்தி என்பது உயிர்சக்தி. (இறந்து போனதை பிராணன் போயிற்று என்று பழைய ஆட்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.)

சித்தர்கள் தங்கள் சக்தியை சிறிதும் வீணாக்காமல் சேமித்து வைக்கும் பழக்கம் உடையவர்கள். அதனால் அவர்கள் சாதாரண மனிதர்களை விட பல மடங்கு அதிக காலம் வாழ முடியும். சாதாரண மனிதர்கள் உபயோகிப்பதை விட விரயம் செய்யும் சக்திகள் அதிகம். சித்தர்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட காலம் வரை இவ்வுலகில் சரீரத்தோடு இருந்து விட்டுப் போகிறார்கள். சிரஞ்சீவியாக இருக்க அவர்கள் ஆசைப்பட்டால் அவர்கள் சித்தர்களாக இருக்க முடியாது. அவர்கள் மனிதர்களுக்கு உதவ சரீரத்தோடு இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எந்த நுட்ப நிலையிலும் அவர்களால் சரீரம் இல்லாமலே உதவ முடியும்.


நாம் மனதார நினைக்கும் போதெல்லாம் அவர்கள் வருவதாக இருந்தால் அவர்கள் வேறு எந்த உருப்படியான வேலையும் செய்ய நாம் விட மாட்டோம். அவசியம் இருந்தால் ஒழிய அவர்கள் நம்மிடம் வர மாட்டார்கள். அவர்கள் அலை வரிசையோடு நாம் ஒத்துப் போகும் அபூர்வ தருணம் வந்தால் நமக்கு எத்தனையோ பேருண்மைகளை அவர்கள் அந்த அலைவரிசையிலேயே டிரான்ஸ்ஃபர் செய்து விட முடியும். நாம் உணர்வுகளின் மேல்நிலைக்குப் போய் தூய்மையாகவும் வாழ்ந்தால் எத்தனையோ அலைவரிசைகளில் சித்தர்களிடம் இருந்து செய்திகள் பெற முடியும்.


கக்கபுஜண்டர், போகர் ஆகியோரின் கதைகளைப் படித்தும் கேட்டும் இருக்கிறோம் என்றாலும் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் அளவுக்கு எனக்கும் அனுபவமோ, ஞானமோ போதாது. ஆனால் கூடுவிட்டு கூடு பாய்வது, பிரளயத்தை சந்திப்பது போன்ற சக்திகள் எல்லாம் சித்தர்களுக்கு ஒரு விஷயமே அல்ல. அவர்கள் சக்திகள் அளவிட முடியாதவை என்பதில் சந்தேகமே இல்லை.


(தொடரும்)

3 comments: