Monday, February 24, 2014

கர்மா என்பதென்ன?

 அறிவார்ந்த ஆன்மிகம் - 34  


ந்து மதத்தின் விசேஷமான சிறப்பம்சங்களில் ஒன்று கர்மா சித்தாந்தம். இறைவன் உட்பட இந்து மதத்தின் பல கருத்துகளுடன் உடன்பாடு இல்லாத கௌதம புத்தர் கூட இந்த கர்மா சித்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பலரும் கர்மா சித்தாந்தந்தை முன் ஜென்ம வினையின் பலன் அடுத்த ஜென்மத்தில் கிடைக்கும் என்பதாக எடுத்துக் கொண்டு குழப்பிக் கொள்கிறார்கள். சரியாகச் சொல்வதானால் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குத் தகுந்த விளைவு உண்டு, செயலைச் செய்பவன் அந்த விளைவில் இருந்து என்றுமே தப்ப முடியாது என்பதே கர்மா சித்தாந்தம். அந்த விளைவு உடனடியாகக் கிடைக்கலாம். சில காலம் கழித்தும் கிடைக்கலாம். அடுத்த ஜென்மத்திலும் கூடக் கிடைக்கலாம்.

கர்மா என்பது தலைவிதி அல்ல. அது முன்பே கடவுள் உட்பட வேறு யாராலும் நிர்ணயிக்கப்பட்டது அல்ல. வானியல் கிரகங்கள் நம் மீது திணிக்கும் விஷயம் அல்ல. நாம் அனுபவிப்பதற்கு எல்லாம் விதி என்று பெயரிட்டுக் கொண்டோமானால் கூட அது நாமாகவே எழுதிக் கொண்ட விதி என்பது தான் கர்மா சித்தாந்தம்.

இதைத் தான் புறநானூறும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா!"  தீமையும் நன்மையும் அடுத்தவர்களால் வருவதில்லை.  வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் முதலான பழமொழிகளும் இதையே சொல்கின்றன.

திருக்குறளின் பல குறள்களில் கர்மா சித்தாந்தத்தின் உண்மைகள் பிரதிபலிக்கின்றன.  உதாரணத்திற்கு ஒரு குறளைப் பார்ப்போம்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.

(நிழல் ஒருவரை விட்டுப் பிரியாமல் அவர் அடியிலேயே தொடர்ந்து வருவதைப் போல் தீமை செய்பவரைத் துன்பம் தொடர்ந்து வரும்.)

செயலோடு விளைவு நிழல் போலத் தொடரும். இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்வதானால் நிழல் கூட இருட்டில் தொடர்வதில்லை. கர்மா ஒருவரைத் தொடராமல் இருப்பதில்லை. நன்மையும் தீமையும் செய்தவனுக்குத் தகுந்த பலனை என்றுமே தராமல் இருப்பதில்லை.

இந்த கர்மா சித்தாந்தத்தை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமானால்  இறைவனை நம்புகிறவர்களுக்குப் பல நிகழ்வுகளுக்கு விளக்கம் காண முடியாமல் போகும்.

உதாரணத்திற்கு ஒரு அயோக்கியன் நிறைய ஏமாற்று வேலைகள், கொடுமைகள், மோசடிகள் செய்து கொண்டு இருக்கிறான். ஆனால் அவன் துன்பத்தை அனுபவிப்பதில்லை. நன்றாகவே வளமாகவே இருக்கிறான். அதே நேரத்தில் இன்னொருவன் மிக நல்லவனாகவும், நியாயமானவனாகவும், நேர்மையானவனாகவும் இருந்தும் கூட துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கிறான். பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறான். இந்த உதாரணம் கற்பனையானது என்று சொல்வதற்கில்லை. இன்று நம்மால் இதைப் பல இடங்களில் பார்க்க முடிவது தான்.

பதவி, பணம், அதிகாரம் இருந்தால் இப்படி எல்லாம் நடப்பது சகஜம் தான், இது கலிகாலம் என்று சொல்லி விட்டு விட முடியுமா?

அப்படியானால் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். தர்மத்தை நிலை நாட்ட வேண்டியவன் இப்படி அதர்மம் ஜெயிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது நியாயமா? தவறு செய்தவன் தண்டிக்கப்படாமல் நன்றாக இருப்பதும், நல்லவன் நன்றாக இருக்காமல் தண்டிக்கப்படுவதும் சரி தானா? சிலர் எல்லாம் இறைவன் விளையாட்டு என்று சொல்வதுண்டு. இப்படி விளையாடுவது இறைவனுக்கு அழகா என்றெல்லாம் கேட்கத் தோன்றும் அல்லவா?

சரி இதைச் செய்வது இறைவன் அல்ல, சாத்தான் என்று சொன்னால் சாத்தானைக் கட்டுப்படுத்த முடியாதவன் இறைவன் என்று அர்த்தமாகும் அல்லவா?

இங்கு தான் கர்மா எல்லாவற்றிற்கும் பதிலாக அமைகிறது. இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ செய்திருக்கும் நன்மைகள், தீமைகளின் பலன்கள் தான் இப்போது ஒவ்வொருவரும் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் காரணம் என்பது பொருத்தமான பதிலாக இருக்கும். முன்பு நன்மை செய்த கர்மாவை இன்று நல்லபடியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவன், இன்று கெட்டவனாக இருந்து இப்போது தீமைகள் செய்தால் அதன் தீய பலன்கள் வரிசையாக அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அது சிறிது காலத்திலேயோ, சற்று அதிக காலத்திலேயோ அவனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். அந்தத் தீய பலன்களை அனுபவிப்பதற்கு முன்னால் அவன் இறந்து போனால் கூட அவன் அந்தக் கர்மாவில் இருந்து தப்பித்து விட முடியாது. அடுத்த பிறவியிலும் அவனை அந்தக் கர்மா விதியாகத் தொடரவே செய்யும். அதன் பலனை அவன் அனுபவித்து முடிகிற வரை அது விடாது.

நேர்மையாளனாகவும், நன்மை செய்பவனாகவும் இருந்த போதும் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்றால் அவன் முந்தைய தீய கர்மாக்களின் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று பொருள். அந்த தீய பலன்களை அவன் அனுபவித்து முடிந்தவுடன் அவன் கஷ்டங்களும் விலகி விடும். அதன் பின் நல்ல கர்மாக்களின் பலனை அவன் அனுபவிக்க ஆரம்பித்து விடுவான். ஒருவேளை அவன் அந்த நல்ல பலனை அனுபவிப்பதற்கு முன் இறந்து விட்டாலும் கூட அடுத்த பிறவிக்கு அந்த நல்ல பலன்கள் தொடரவே செய்யும். அதுவும் கூட பலன்களைத் தந்து முடிக்காமல் அவனை விடுவதில்லை.

இந்த கர்மா சித்தாந்தத்தைத் தெளிவாக உணர்வது மனிதர்களை நல்வழிப்படுத்த உதவும். இன்றில்லா விட்டாலும் என்றாவது தங்கள் செய்கைகளுக்குப் பலனை அனுபவித்தாக வேண்டும் என்பதை ஒரு மனிதன் உறுதியாக உணர்ந்தானானால் அவன் அறிந்து தவறு செய்ய மாட்டான்.

இன்று நன்றாக இருக்கிறோம் என்றால் நாம் முன்பு செய்திருக்கிற நல்ல கர்மாக்களின் பலன் தான் காரணம். இனியும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், நன்மைகளைப் பெற வேண்டுமென்றால் நாம் தொடர்ந்து நல்ல செயல்களையே செய்து வர வேண்டும் என்கிற ஞானம் கர்மா சித்தாந்தத்தை அறிந்தவனிடம் இருக்கும்.

அதே போல் இன்று துன்பங்களை அனுபவிக்கிறோம் என்றால் முன்பு செய்த தீமைகளின் பலனை அனுபவித்து அதைத் தீர்த்துக் கொண்டிருக்கிறோம். இனியும் இது தொடரக்கூடாது என்றால் நாம் நன்மைகளைச் செய்தல் வேண்டும் என்ற ஞானமும் கர்மா சித்தாந்தத்தை அறிந்தவனிடம் இருக்கும்.  

அப்படி அறிந்தவன் நல்லவன் கஷ்டப்படுவதையும், கெட்டவன் நன்றாக இருப்பதையும் கண்டு ‘கெட்டவர்க்குத் தான் காலம்என்று தானும் கெட்டுப் போக மாட்டான். இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்ப துன்பங்களுக்குப் பின்னால் முந்தைய கர்மாக்கள் இருக்கின்றன என்று தெளிந்து அதனால் பாதிக்கப்படாமல் நேர்வழியில் நடப்பதைக் கைவிட மாட்டான்.

பலர் இறைவனை வணங்குவதாலும், கோயில் உண்டியலில் காசைப் போடுவதாலும் கெட்ட கர்மாக்களைக் கழித்து விடலாம் என்று தவறாகக் கணக்கிட்டு விடுகிறார்கள். அந்த சிந்தனை உள்ளவர்கள் திருந்தவும் முனைவதில்லை. அவர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து இறைவனிடமே தந்திரமாக நடந்து கொள்கிறார்கள். இதில் எல்லாம் கர்மா கழிவதில்லை. உன்னைப் புகழ்கிறேன், உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். என்னைக் கண்டு கொள்ளாதே’  என்பது போன்ற லஞ்சத்தில் இறைவன் ஏமாறுவது இல்லை. ஏமாறுவது அவர்கள் தான்.

எனவே ஆன்மிக மார்க்கத்தில் செல்பவர்கள் கர்மாவைச் சரியாகப் புரிந்து கொள்வது மிக அவசியம். அது பல தவறுகளைத் தவிர்க்கும். எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியான பாதையிலேயே பயணிக்க வைக்கும்.

-          என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 29-10-2013

13 comments:

  1. குறள் உதாரணத்தோடு கர்மா சித்தாந்தம் பற்றிய விளக்கம் அருமை... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான பதிவு... அய்யன் வள்ளுவர் இன்னொரு குறளிலும் இந்த கர்மவிதியை தெளிவாக விளக்கியுள்ளார்....

    பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும். - 319...

    இக்குறளில், "தாமே" என்ற வார்த்தை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது....

    ReplyDelete
  3. "கர்மா" தியரில நெறைய குறைபாடுகள் இருக்கின்றன.

    1) கர்மா இருக்கும்போது கடவுள் எதுக்கு?

    2) சரி என்னுடைய இப்பிறவி செயல்கள் கடந்த பிறவியில் செய்து அனுபவிக்காத பாவங்கள், இல்லை நன்மைகள் பலன்னு வச்சுக்குவாம். அப்போ என்னுடைய முதல், அதாவது முதலுக்கெல்லாம் முதல் பிறவியில் நான் ஏன் நன்மை தீமைகள் செய்கிறேன்? முதல் பிறவிக்கு முந்திய பிறவி இல்லை! So, your first life is not "governed" by Karma! But I do do good and bad things in first life as well. So, Karma is an exception for everyone's FIRST LIFE??? If you logically think like this, Karma theory FAILS!

    I can challenge you on this if you are ready for a debate to ANY LEVEL! Thanks

    ReplyDelete
    Replies
    1. திரு வருண் அவர்களே,
      விவாதத்தினால் ஏற்படும் பயன் என்ன ?

      நேர்மையாளனாகவும், நன்மை செய்பவனாகவும் இருந்த போதும் கஷ்டப்படுவோருக்கு, இந்த கட்டுரை வாழ்கையை புரிந்து கொண்டு எதிர் வரும் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு (ஏற்றுக்கொள்ளுதல் மூலம் நமக்கு வரும் கஷ்டத்தினால் ஏற்படும் கவலை பெருமளவு குறைத்துவிடும்) நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் மேலும் தன்னிடமுள்ள நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளவும் நல்ல செயல்களை செய்யவும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.
      அதுமட்டுமில்லாமல் வானியல், மருத்துவம் போன்ற பல துறைகளை பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னே மிகப்பெரிய உண்மைகளை எழுதிவைத்து சென்ற நம் முன்னோர்கள் கூறியதை இன்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
      ஆகவே அத்தகைய முன்னோர்கள் கர்மா பற்றி எழுதியவைகளை படித்து நம் வாழ்க்கையில் நடப்பதை விழிப்புணர்வோடு கவனித்து இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளை உணர்ந்தால் மட்டுமே கர்மாவை பற்றிய தெளிவு பிறக்கும்.
      விவாதம் பற்றிய ஆர்வத்தை விட கர்மா பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்குமானால் அதற்க்கான பலனும் பயனும் இருக்குமென கருதுகிறேன்.

      Delete
    2. விவாதம் பண்ணுவதில் அர்த்தமில்லை என்றால், இந்த பின்னூட்டத்தை நீங்கள் எழுதி இருக்கக்கூடாது. :)

      என் கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதோ, இல்லைனா என் கருத்தைப் புரிந்துகொள்ளாமல், முன்னோர்களையும், கர்மாவையும் நான் எப்படிப் புரிந்து கொள்ளணும்னு நீங்க வக்காலத்துடன் வைக்கிற ஒரு கருத்தே விவாதம்தான். அதைப் புரிந்து கொள்ளுங்கள்!

      விவாதம் செய்வதால் எந்தத் தவறும் இல்லை. அதைத் தவறு என்று சொல்வதுதான் தவறு. That's what all believers do, Because they dont want to know the TRUTH. They want to be ignorant and happy! கர்மாவை விட்டுவிட்டு சில சின்ன விடயங்களை முதலில் புரிந்து கொள்ளுங்கள்- உண்மையான அணுகுமுறையில், உண்மையை எடுத்துரைத்து! நன்றி.

      Delete
    3. ஒரு செயல் அதன் விளைவைத் தராமல் விடாது என்பது தான் கர்மா. ஒரு செயல் அப்போதே பலன் தரலாம், சிறிது காலம் கழித்து பலன் தரலாம், அல்லது அடுத்த பிறவியிலாவது பலன் தரலாம் என்பது கர்மா தியரி. ஒரு காலத்தின் சுதந்திரத்தினால் நாம் செய்யும் செயல்கள் பிற்கால விதியாகின்றன.

      அதனால் இப்போது அனுபவிப்பது எல்லாம் போன பிறவியின் கர்மபலன் தான் என்பதல்ல. கடந்த பிறவி, கடந்த காலம், கடந்த கணம் உட்பட முன்பு எப்போதோ விதைத்ததை அறுவடை செய்கின்றோம் என்று கர்மா தியரி கூறுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தக் கணத்தில் கூட நமக்கு எப்படி செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் சுதந்திரம் உள்ளது. அது முதல் பிறவியில் மட்டும் தான் இருந்திருக்கும் என்றல்ல. பழைய விளைச்சல்களை அறுவடை செய்யாமல் தப்பிக்க முடியாதே தவிர இப்போது என்ன விதைக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு என்றுமே உண்டு. அதை மறக்காமல் இருந்தால் கவனமாக செயல்புரிய கர்மா தியரி நமக்கு அறிவுறுத்துகிறது. அவ்வளவு தான்.

      Delete
    4. "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்"

      "ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"

      வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

      என்பதெல்லாம் கர்மா தியரியின் பல வடிவங்கள். மனிதைப்பண்படுத்தவே இவையெல்லாம் உருவாக்கப் பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால்.. அப்புறம் என்ன ஆனா?ங்காதீங்க.

      ஆனால்.."முதல் பிறவி"க் கு என்றால் இந்த கர்மா தியரி தோல்வியடைகிறது என்பதே உண்மை. அதை நீங்க ஏற்றுக்கணும்னு நான் சொல்லவில்லை. இது என்னுடைய புரிதல்.

      நன்றி.

      Delete
  4. ஆஹா எத்தனை அருமையான விளக்கம். நன்றி சார்

    ReplyDelete
  5. கர்மா பற்றி மிக நல்லதொரு கட்டுரை...

    ReplyDelete
  6. Really this is the panacea for all problems .Thanks a lot sir

    ReplyDelete
  7. Sir, would you please tell me few sources to learn about Hinduism and especially Lord shiva. Thank you.

    ReplyDelete