Monday, February 3, 2014

கும்பாபிஷேகம் எதற்காக?


அறிவார்ந்த ஆன்மிகம்-32

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார் ஔவையார். கோயிலை மையத்தில் வைத்தே அந்தக் காலத்தில் பெரிய ஊர்கள் விளங்கின. அந்த அளவு முக்கியத்துவம் பெற்ற கோயில்களைக் கட்டி முடிக்கும் போதும் சரி, கட்டி முடித்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும் சரி கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. அதன் காரணம் என்ன? கும்பாபிஷேகம் செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் முக்கிய முறைகள் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? இதையெல்லாம் பார்ப்போமா?

கும்பாபிஷேகத்திற்கான விதிகளை  வாமதேவர் என்கிற வடமொழி நூலாசிரியர்   தான் எழுதிய வாமதேவ பத்ததியில், சிவபெருமான் முருகனுக்குக் கூறும் விதமாக விவரித்து எழுதி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். கோயிலை வேத, ஆகம, சிற்ப, சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்கிறார்கள். 

கோயிலுக்கு கும்பாபிஷேகம் நான்கு விதமான நேரங்களில் தேவைப்படுகின்றன. அவை
1)      ஆவர்த்தம்
2)      அநாவர்த்தம்
3)      புனராவர்த்தம்
4)      அந்தரிதம்

ஆவர்த்தம் என்பது புதிய கோயில் ஒன்றைக் கட்டி அங்கு புதிதாக இறைவனின் திருவுருவத்தை ஸ்தாபிதம் செய்யும் போது செய்யப்படுகிறது.

அநாவர்த்தம் என்பது வெள்ளம், மழை, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சேதமடைந்த கோயில்களை புதுப்பித்து மறு பிரதிஷ்டை செய்வதாகும்.

புனராவர்த்தம் என்பது காலத்தால் சிதிலமடைந்த திருக்கோயில்களை புதுப்பித்து புனர்நிர்மாணம் செய்வதாகும்.

அந்தரிதம் என்பது மனிதர்களின் தீமைகளால் புனிதம் இழந்த கோயில்களை மீண்டும் புதுப்பித்து புனிதப்படுத்துவதாகும்.

முதலில் ஆகம சாஸ்திரப்படியும், சிற்ப சாஸ்திரப்படியும் முறையாகக் கல்லினால் வடிவமைத்த தெய்வத் திருவுருவங்களை தானிய வாசம், ஜல வாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி, நாற்பத்தெட்டு  நாட்கள் முறைப்படி வழிபாடுகள் செய்து அவற்றை தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள்.

கல்லினாலும், மண்ணினாலும், உலோகங்களாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்கு சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் வேள்விமுறைகளில் மூன்று வழிமுறைகள் மிக முக்கியமானவை. அவற்றைப் பார்ப்போம்.

ஆவாஹனம்
ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள இறை விக்கிரகத்தின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.
யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் யாகத்தில் அக்கினி வளர்த்து அரிய வகை மூலிகைகள் மற்றும் வேள்விக்கு உகந்த பொருட்களை அக்கினியில் சேர்த்து எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் முழுமையான பக்தியையும் சேர்த்து  எங்கும் நிறைந்திருக்கின்ற இறையருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்வதாக ஐதிகம். அப்படிச் செய்யும் போது தான் கும்பம் தெய்வீக சக்தி பெறும்.

கடஸ்தாபனம்
கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம்.  கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் தான் வரையறுக்கப்பட்ட முறைகளில் கும்பங்கள் செய்யப்படும். இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.

அஷ்டபந்தனம்
கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.

கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானவை சொல்லப்படும் மந்திரங்கள். மந்திரம் என்பதற்கு, ‘சொல்பவனைக் காப்பதுஎன்று பொருள். அவற்றை சரியான உச்சரிப்புடன் மிகுந்த பக்தியுடன் சொல்வது மிக முக்கியம்.  அந்த மந்திரங்களைச் சொல்லி இறைசக்தியைத் தருவித்து ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலை பெறச் செய்தால் தான் அது இறைவனின் உறைவிடமாக மாறும்.


தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட கலச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும்.

ஆகம விதிப்படியும், சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும், கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம். மகா கும்பாபிஷேகத்தன்று சென்று இறைவனை வணங்குவோருக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசி வழங்குவார்கள் என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை.

கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினாலும் கும்பாபிஷேகத்தின் போது பெருகி இருக்கும் கூடுதல் சக்தியருளைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இப்படிப் பல முறை கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்ட பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களை தரிசனம் செய்யும்போதும், அந்தக் கோயிலுக்குள் நுழையும் போதும், ஓர் அற்புதமான சக்தியால் தீண்டப்படுவதை ஆன்மிக அன்பர்கள் உணர்ந்திருக்கலாம்.

மேலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வதற்கான அறிவியல் ரீதியான காரணமும் சிலரால் சொல்லப்படுகிறது. நம்முடையப் பழங்காலக் கோயில்களில் இடிதாங்கிகள் என்று தனியாக ஒன்றும் கிடையாது. சொல்லப் போனால் இடிதாங்கி கண்டுபிடிக்கப்பட்டதே பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்ற அறிஞரால் பதினெட்டாம் நூற்றாண்டில் தான். இடி மின்னல்கள் கோபுரத்தைத் தாக்கும் போது கோபுரங்கள் இடிந்து விழ வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அப்படி இருந்தும் நம் கோயில் கோபுரங்கள் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன. அதற்குக் காரணம் என்ன?

இடி மின்னல்களில் இருந்து கோபுரத்தையும் கோயிலையும் காக்க வேண்டி கோபுரங்களில் கும்பம் வைத்து அதில் வரகு முதலான நவதானியங்களை காற்று புகாதபடி நிரப்பி வைத்து விடுவார்களாம். அப்படி வைக்கப்படும் கும்பமும் அதில் உள்ள தானியங்களும் இடி தாங்கியாக செயல்பட்டு இடி மின்னலை நீர்த்துப் போக வைத்து விடும் தன்மை உடையது என்கிறார்கள். ஆனால் அதன் சக்தி பன்னிரண்டு ஆண்டுகள் தானாம். அதன் பின் இடி மின்னலைத் தாங்கும் சக்தி அந்தக் கும்பம் இழந்து விடுமாம். கோயில் புனரமைப்பின் போது கும்பமும் மாற்றப்படுவதால் இடி தாங்கியாக மீண்டும் அது செயல்பட ஆரம்பித்து விடும். இப்படி ஆன்மிகக் காரணங்களோடு அறிவியல் காரணமும் கும்பாபிஷேகத்தின் பின்னணியில் உண்டு.


-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி-ஆன்மிகம்-15-10-2013

2 comments:

  1. மிகவும் விரிவான விளக்கம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Theriyatha puthu thakavalai ...sonneerkal...sir..natri

    ReplyDelete