Monday, December 9, 2013

கடமையா? பக்தியா?


அறிவார்ந்த ஆன்மிகம் 28

இறைவன் மீது பக்தி வைப்பது முக்கியமா, நம் கடமைகளைச் சரியாகச் செய்து வருவது முக்கியமா? இரண்டுமே முக்கியம் தான் அல்லவா? என்றாலும் இந்த இரண்டில் சிறப்பான முக்கியம் எது, இறைவன் மெச்சுவது எது என்று கேட்டால் பதிலாக புண்டலீகன் கதையைச் சொன்னால் தெளிவான விடை கிடைக்கும்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு புண்டலீகன் என்ற இளைஞன் தன் வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். அவனும், அவனுடைய தாய் தந்தையரும் விட்டலனின் (கிருஷ்ணனின்) பக்தர்கள். அவனது வயது முதிர்ந்த பெற்றோருக்கு தள்ளாமை காரணமாக வீட்டில் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. அதனால் எல்லா வேலைகளையும் புண்டலீகனே செய்ய வேண்டி வந்தது. ஆனாலும் சிறிதும் சலிப்பின்றி பெற்றோருக்கு புண்டலீகன் மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்து வந்தான்.

ஒரு நாள் முதல் சில நாள் வரை இப்படிச் சேவை செய்வது பெரிய விஷயமல்ல. சேவை செய்ய வேண்டிய காலம் மிக நீளும் போது சேவையின் தரமும், செலுத்தும் அன்பின் அளவும் குறைய ஆரம்பிப்பது மனித இயல்பல்லவா? ஆனாலும் விதிவிலக்காக இருந்து சிரத்தை சிறிதும் குறையாமல் புண்டலீகன் சேவை செய்வதைக்  கண்டு மனம் உவந்த இறைவன் விட்டலன் ஆகிய கிருஷ்ணன், தன் மனைவி ருக்மணி சகிதம் புண்டலீகன் முன் எழுந்தருளினார்.
அந்த சமயத்தில் புண்டலீகன் தன் பெற்றோரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். தன் முன் இறைவன் விட்டலன் தம்பதி சமேதராக எழுந்தருளினதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தாலும் பெற்றோருக்காகத் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி விட அவன் மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் தான் துணி துவைப்பதால் வழிந்தோடும் அழுக்கு நீர் தாங்கள் வணங்கும் இறைவனின் திருப்பாதங்களை நனைப்பதிலும் அவனுக்கு சம்மதமில்லை. எனவே ஒரு பெரிய செங்கல்லை அவசரமாக அவர்கள் பக்கம் தள்ளி "இறைவனே தாங்கள் இந்தக் கல்லில் சிறிது நேரம் நில்லுங்கள். நான் என் பெற்றோருடைய இந்தப் பணியை முடித்து விட்டுத் தங்களை கவனிக்கிறேன்" என்றான்.

எத்தனையோ கோடி பேர் அந்த இறைவனைத் தரிசிக்க எத்தனையோ ஜென்மங்கள் காத்திருக்கிறார்கள் என்ற போதிலும் புண்டலீகன் தன் கடமைக்குப் பின்பே கடவுள் என்று செயல்பட்டதைக் கண்டு மெச்சி மனம் மகிழ்ந்த விட்டலன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு தன் மனைவியுடன் அந்தக் கல்லில் ஏறி நின்று சிலையாகி அங்கேயே தங்கி விட்டார். இன்றும் பண்டரிபுரம் கோயிலில் பாண்டுரங்க விட்டலனாக இறைவன் செங்கல்லில் நின்றபடியே காட்சியளிக்கிறார்.

இறைவன் எதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கு இது ஒரு மிக நல்ல உதாரணம். புண்டலீகன் செய்கையை இறைவன் அலட்சியமாகக் கருதவில்லை. என்னை வணங்குவதை விடப் பெற்றோர் உடைகளைத் துவைப்பது அவ்வளவு முக்கியமான வேலையாகப் போய் விட்டதா என்று இறைவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. மாறாக புண்டலீகன் என்ற தன் பக்தனின் கடமை உணர்ச்சியைத் தான் இறைவன் மகத்தானதாகக் கருதினார்.

இந்தக் காட்சியை துகாராம் என்ற பக்தகவி இப்படிப் பாடினார்.
என்ன பைத்தியக்கார அன்பு இது,
விட்டலனை நிற்க வைத்ததே!
என்ன முரட்டுத் துணிவிது,
விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே

கிருஷ்ணராகிய விட்டலன் கடமையை மெச்சியதில் வியப்பில்லை. பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யச் சொல்லி பகவத் கீதையில் உபதேசம் செய்தவர் அல்லவா அவர்? அப்படிப்பட்டவருக்கு புண்டலீகன் இறைவனுக்கும் மேலாக முதலில் கடமைக்கே முன்னுரிமை தந்தது மகிழ்ச்சியையே தந்திருக்க வேண்டும். அதனால் தான் அந்த கடமையைப் பிரதானப்படுத்திய அந்த இடத்தையே புனித இடமாக எண்ணி புண்டலீகன் தள்ளிய செங்கல்லிலேயே தங்கி விட்டார். இன்றும் பண்டரிபுரத்திற்குச் செல்பவர்கள் அந்தக் கோயிலில் மூல விக்கிரகங்களான விட்டலன் – ருக்மணி ஒரு கல்லின் மீது நின்று கொண்டிருப்பதைக் காணலாம்.

பக்தி என்ற பெயரில் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடவுள் மீது பக்தி வந்து விட்டால் அது தான் பெரிய விஷயம், வேறெந்த வேலையும் நாம் செய்ய வேண்டியதில்லை என்கிற மனோபாவம் பலருக்கு இருக்கிறது. கடவுளை வணங்கினால், கடவுள் மீது பக்தி வைத்து விட்டால் பிறகு நம் மற்ற கடமைகளை நிறைவேற்றாமல் போனாலும் தப்பில்லை என்கிற தவறான அபிப்பிராயம் அவர்களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு பண்டரிபுரக் கோயில் கதை அறிவுக் கண்களைத் திறக்கும்.

பக்தி கடமைக்கு மாற்று அல்ல. கடவுளின் மீது பக்தி வைப்பது இனி எப்படி வேண்டுமானாலும் அந்த பக்தன் இருந்து கொள்ளக் கொடுக்கும் அனுமதியும் அல்ல. பிறந்து விட்ட ஒவ்வொருவனுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உண்டு. கவியரசு கண்ணதாசன் பாடியது போல
‘நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

நம் கடமைகளை அடுத்தவர்களைச் செய்ய விட்டு விட்டு இறைவனைத் துதித்துக் கொண்டிருப்பதை இறைவனே விரும்ப மாட்டார். ஒரு உதாரணம் பார்ப்போம். உங்களிடம் இரண்டு வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் சில வேலைகளை ஒப்படைத்து விடுகிறீர்கள். அவர்களில் ஒருவன் நீங்கள் கொடுத்த வேலைகளைச் செய்யாமல் உங்களை ஆகா ஓகோ என்று புகழ்ந்து கொண்டே இருக்கிறான். மற்றவன் நீங்கள் சொன்ன வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறான். நீங்கள் யாரை உயர்வாக நினைப்பீர்கள்? யாரை உங்களிடம் சேர்த்துக் கொள்வீர்கள்? ஆறறிவுள்ள எவரும் வேலை செய்து கொண்டு இருப்பவனைத் தானே நல்ல வேலையாளாக நினைப்பார்கள். அவனைத் தானே தன்னுடன் இருத்திக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் வேலை செய்பவனை விட அதிகமாய், வேலை செய்யாத துதிபாடியைத் தன்னுடன் சேர்த்துக் கொள்பவனின் ஆறறிவில் எத்தனையோ குறைகிறது என்றல்லவா அர்த்தம்.

சாதாரண அறிவுள்ள மனிதரே இப்படி கடமையைச் செய்பவனைத் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு கடமையைச் செய்யாதவனை விலக்கி விடும் போது அனைத்தும் அறிந்த இறைவன் எப்படி இருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

எனவே உங்கள் கடமையைச் செய்யுங்கள். அவை இறைவனால் உங்களுக்குத் தரப்பட்டவை என உணருங்கள். இறைவன் எனக்குத் தந்த கடமை இது என்று உணர்ந்து அந்தக் கடமைகளைச் செய்பவன் தான் உண்மையான பக்தனும் கூட. அப்படி இறைவன் நமக்குத் தந்த கடமைகளை நிறைவேற்றாமல் அவன் மீது பக்தி செலுத்துவதையே தொழிலாகவும் அதையே போதுமானதாகவும் நினைத்து இருந்து விடுவது தன்னையும், இறைவனையும் சேர்த்து ஏமாற்றுவதைப் போல என்பதை உணர்ந்திருங்கள்.

-          என்.கணேசன்

-          நன்றி: தினத்தந்தி: ஆன்மிகம் – 17-09-2013

5 comments:

  1. சொல்லப்பட்டுள்ள நீதிகளும், புண்டலீகன் கதையும், பக்த துக்காராம் அதை வியந்து பாடிய அபங்கமும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நல்லதொரு ஆன்மீகப் பகிர்வு...
    புண்டலீகனுக்கு இறைவன் காட்சி அளித்த கதையை அறிய முடிந்தது.

    ReplyDelete
  3. WORK IS WORSHIP. இறைவன் போதிப்பது மட்டுமில்லை, வாழ்ந்தும் காட்டுகிறான்.

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை சார்...,,
    உண்மை உண்மை பற்றில்லாமல் கடமையாற்ற வேண்டும் ...,

    *இல்லறமே நல்லறமா மென்று சொன்னால்
    இன்பமெனப் பள்ளியறைக் குள்ளாகாதே
    தொல்லறமே துறவறமே தனது வண்ணம்
    துறந்திட்டா பற்றறவே துறந்தி டாமல்
    சொல்லறமே யுலகமெல்லாம் கண்ணின் ரூபம்
    சொர்ணமய மாம்சொர்க்கம் சுகவை போகம்
    கல்லறமே கனகமணிப் பூஷ ணங்கள்
    கமலத்தைக் காத்திடுவான் பத்ம யோகி.

    பெற்றவர்கள் தங்கடனைத் தீர்க்க வேண்டும்
    உற்றவர்கள் உறுகதியைப் பார்க்க வேண்டும்
    பற்றுவர வத்தனையு முடிக்க வேண்டும்
    பற்றில்லாப் பாமரைக் காக்க வேண்டும்
    செற்றபுலன் பொறியடக்கிச்சேர வேண்டும்
    சித்தமுறச் சிவபூஜை செய்யத் தானே.
    கற்றவர்க்கே பலயோகம கனியும் பாரே.
    கல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம்.

    ReplyDelete