Monday, October 7, 2013

போரடிக்காமல் இருக்க வழிகள்!



ன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை “போரடிக்கிறதுஎன்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கும் விஷயங்கள் கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும் சமாச்சாரங்களாக மாறி விடுகிறது. எப்போதும் எதையும் புதிது புதிதாகப் பெறுவதும் சில நாட்களிலேயே அதையும் மாற்றி அதை விடப் புதிதாக ஒன்றைப் பெறுவதும் போரடிக்காமல் இருக்க அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு போரடிப்பது ஒரு தாங்க முடியாத நிலையாக இருக்கிறது.

புதிது புதிதாகப் பொருள்களும், அனுபவங்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த மனநிலை யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வரக்கூடியதல்ல அல்லவா? அதனால் போரடிப்பது என்பது அவர்களுக்கு அவ்வப்போது தவிர்க்க முடியாத மனநிலையாக மாறி விடுகிறது.

யார்க் பலகலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் ஈஸ்ட்வுட் (Dr. John Eastwood) தலைமையில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் போரடிப்பதற்குக் காரணமான மனநிலைகள் ஆராயப்பட்டன. மனதின் எண்ணங்களும், உணர்வுகளும் சரி, வெளியே நடக்கும் நிகழ்வுகளும் சரி, கவனம் முழுமையாக செலுத்த உகந்ததாக இல்லை என்று மனிதர்கள் நினைப்பது தான் போரடிக்க முக்கியக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈடுபட்டிருக்கும் எந்த நடவடிக்கையும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை, அதில் ஈடுபடுவது திருப்திகரமாகவும் இல்லை என்று மனிதன் உணரும் போது போரடிக்கிறது என்கிறான் என்று அந்த ஆராய்ச்சி சொல்கிறது.

அதனால் போரடிக்கும் போது மனிதன் தன் கவனத்தைப் போதுமான அளவு எதிலும் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறான். இருக்கிற சூழ்நிலையும், ஈடுபடுகின்ற செயலும் பிடித்தமானதாக இல்லை. ஆனால் அதற்குக் காரணம் தான் அல்ல, வெளியுலகம் தான் என்று மனிதன் நினைக்கிறான். இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் கையில் இல்லை என்றும் இது மாறினால் ஒழிய போரடிப்பது தவிர்க்க முடியாது என்று நினைக்கிறான் என்றும் அந்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

உண்மையில் போரடிப்பதற்கு மிக முக்கிய காரணம் மனிதனின் அகத்தில் தான் இருக்கிறதே ஒழிய புறத்தில் இல்லை. புரிதல், கவனம், அர்த்தம், சுவாரசியம், பங்கு பெறுதல் ஆகியவை இல்லாத போது எதுவும் அவனுக்கு சீக்கிரம் போரடித்துப் போகிறது. பல சமயங்களில் இவை ஒன்றுக்கொன்று இணைந்ததாகவே இருக்கிறது. உதாரணமாக, ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டே போகிறார். மாணவனுக்குப் பாடம் புரியவில்லை. அவர் சொல்கிற விதம் சுவாரசியமாக இல்லை. அதனால் கவனம் செலுத்த முடியவில்லை. கற்றலில் பங்கு பெற முடியவில்லை. அதனால் அவனுக்குப் போரடிக்கிறது.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மாற்றமின்றி ஒரே மாதிரி போகும் போதும் போரடிக்க ஆரம்பிக்கிறது.  வாழ்க்கையில் சுவாரசியம் குறைகிறது. கவனம் குறைகிறது. வாழ்க்கை அர்த்தம் இல்லாததாகத் தோன்றுகிறது. அதனால் போரடிக்கிறது. புதியதாக பொருளோ, வாகனமோ வாங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி வாங்கினால் சில நாட்கள் போரடிக்காமல் இருக்கிறது. வாங்கிய பொருள்களால் ஏற்படும் புதிய அனுபவங்களும், வாங்கிய பொருள்களை மற்றவர்களுக்குக் காண்பித்துக் கிடைக்கும் பெருமிதமும் முடிகையில் மறுபடி போரடிக்க ஆரம்பிக்கிறது.

போரடிப்பது பெரிய விஷயமல்ல. அது பெரிய பிரச்சினையும் அல்ல.  எல்லார் வாழ்விலும் அது அவ்வப்போது ஏற்படுவது தான் என்றாலும் போரடிக்காமல் இருக்க மனிதன் தேடும் வழிகளில் தான் பெரும்பாலும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. தேவை இருக்கிறதோ இல்லையோ,  பொருள்களை வாங்கிக் குவிப்பதும் போரடிப்பதின் விளைவே. போரடிப்பதால் தான் பெரும்பாலானோர் போதையைத் தேடிப் போகிறார்கள் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். சூதாட்டம் முதலான வேறுபல தீய பழக்கங்கள் உருவாவதும் இந்தக் காரணத்தினால் தான். வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தைத் திரும்ப ஏற்படுத்திக் கொள்ள தேர்ந்தெடுக்கும் இது போன்ற வழிகள் புதைகுழியாய் மாறி மனிதனை அடித்தளத்திற்கு இழுத்து விடும் வல்லமை படைத்தவை என்பது தான் உண்மையான பிரச்சினை.

தீய பழக்கங்களில் ஈடுபடுவதாலாவது போரடிப்பது தவிர்க்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதே வேடிக்கையான உண்மை. போதை போன்ற தீயபழக்கங்களில் ஆழ்ந்தால் கூட போரடிக்காமல் இருப்பதில்லை. போரடிக்காமல் இருக்க அதன் அளவுகளை ஒருவன் அதிகரித்துக் கொண்டே போக வேண்டி இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க அவன் தன்னை மேலும் மேலும் அழித்துக் கொண்டே போகும் அபாயமும் இருக்கிறது.

சரி அப்படியானால் நமக்கு தீமைகளை வரவழைத்துக் கொள்ளாமல் போரடிப்பதில் இருந்து மீளும் வழிகள் என்ன?

வாழ்வில் ஒரு உன்னத இலக்கும், அதைச் சாதிக்கும் துடிப்பும் இருக்கும் நபர்களுக்கு என்றுமே போரடிப்பதில்லை. ஒவ்வொரு அடியாக முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் போது, இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறோம் என்ற பெருமிதமும் இருக்கும் போது, எப்படி போரடிக்கும்? இப்படிப்பட்டவர்களுக்கு நேரம் போகவில்லை என்ற எண்ணம் ஏற்படாது. நேரம் போதவில்லையே என்ற எண்ணமே மேலோங்கும்.

அடுத்ததாக எப்போது பார்த்தாலும் வேலை, வேலை என்று இருப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி வேலை பார்ப்பது, அந்த வேலையைத் தவிர வேறு எதையும் அறியாமலிருப்பது இரண்டும் இருந்தால் போரடிப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவர்கள் அறிவுக்கூர்மையும் மங்க ஆரம்பித்து விடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

எத்தனையோ நல்ல விதங்களில் அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்தாத வழிகளில் ஈடுபட்டு ஒருவர் போரடிப்பதைத் தவிர்க்கலாம். நல்ல இசையைக் கேட்டல், நல்ல புத்தகம் படித்தல், ஓவியம் வரைவது, தோட்டவேலை போன்ற நல்ல பொழுதுபோக்குகள் ஆகியவற்றில் ஈடுபடுதல், அழகிய இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் செல்தல், நல்ல நண்பர்களைச் சந்தித்துப் பேசுதல், நல்ல சொற்பொழிவு கேட்டல் போன்றவற்றை அந்த வழிகளாகச் சொல்லலாம். மீண்டும் பழைய வேலைகளுக்குத் திரும்பும் போது புத்துணர்ச்சி அடைந்திருக்க இவையெல்லாம் நல்ல மாற்று வழிகள்.

போரடிப்பதாகச் சொல்பவர்கள் பெரும்பாலும் தீர்வை வெளியே தேடுகிறார்கள். ஆனால் தீர்வு ஒருவருக்குள்ளேயே இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க ஒருவரது சிந்தனைகளில் புதுமை இருந்தாலே போதும். பார்க்கின்ற விதம் மாறினாலே, பார்க்கின்ற கோணம் மாறினாலே, எத்தனையோ சாதாரண விஷயங்களின் அசாதாரண அல்லது சுவாரசியமான அம்சங்களை நாம் பார்க்க முடியும். அதே போல் செயல்களைச் செய்கின்ற விதத்தை மாற்றினாலும் கூட வாழ்வில் சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வித்தியாசங்களை வெளியே இருந்து தருவித்து சுவாரசியம் காண முயலாமல் உள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு வாழ்வை சுவைபடுத்திக் கொள்ள முடிந்தவன் போரடிக்கிறது என்று என்றுமே நினைக்கவும் மாட்டான்.

ஆஸ்கார் ஒயில்டின் டோரியன் க்ரேயின் ஓவியம் (The Picture of Dorian Gray) நாவலில் ஒரு அழகான வசனம் வரும். ஹென்றி வோட்டன் பிரபு என்ற கதாபாத்திரம் இளையவனான டோரியன் க்ரே என்ற கதாபாத்திரத்திடம் சொல்வார். “இந்த உலகில் சகிக்க முடியாத பயங்கரமான விஷயம் போரடிப்பது ஒன்று தான் டோரியன். அந்த ஒரு பாவத்திற்கு மன்னிப்பே இல்லை”.


ரசிக்கவும், அறியவும், அழகான, அறிவார்ந்த ஆயிரக்கணக்கான விஷயங்கள் இந்த உலகில் இருக்கையில் அதை நோக்கி நம் கவனத்தையும் கருத்தையும் செலுத்தாமல் போரடிக்கிறது என்று சொல்வது ஆஸ்கார் ஒயில்டு கூறுவது போல மன்னிக்க முடியாத பாவமே அல்லவா?

-என்.கணேசன்  
நன்றி: தி இந்து

8 comments:

  1. நல்லதொரு ஆக்கம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்லதொரு வாழ்க்கைப் பாடம்.

    ReplyDelete
  3. நல்ல கருத்து. நம்மில் பலர் போரடிக்கிறது என்று புலம்பி புலம்பி வாழ்கையில் தோற்று விடுகிறார்கள். Rest is change of work என்ற வாக்கியம் தான் என் நினைவிற்கு வருகிறது.நேரத்தை பயனுள்ள வழிகளில் மாற்றி மாற்றி செலவழித்தால் யாருக்கும் அலுப்பு தட்டாது.

    ReplyDelete
  4. அருமை அருமை நன்பரே ,

    “போரடிக்கிறது என்று சொல்லுவது மன்னிக்க முடியாத பாவம் தான்”

    முற்றிலும் உண்மை ...!!!

    ReplyDelete
  5. The picture is so much beautiful!!!!!!!

    ReplyDelete
  6. I would like to read the article in English, published in The Hindu. Can you help ?
    Regards Srinivasan

    ReplyDelete
  7. WOW!!! What an article? each point written is true and well experienced. So many will get good insight on reading your articles. I beg you to publish this as a book.
    God Bless You Ganesh sir!

    ReplyDelete