Thursday, September 26, 2013

பரம(ன்) ரகசியம் – 63



விஷாலியை குற்ற உணர்ச்சி சிறிது சிறிதாக அரித்து சித்திரவதை செய்து கொண்டு இருந்தது. ஒரு நல்லவனைத் தவறாக நினைத்து கேவலமாக நடத்தி விட்டோமே என்று அவள் மிகவும் வருத்தப்பட்டாள். ஈஸ்வரின் வீட்டிற்குச் சென்ற போது அவன் அவள் ஒருத்தி இருப்பதாகவே நினைக்காதபடி தான் கடைசி வரை இருந்தான்.  அவளைப் பார்த்தவுடன் ஆரம்பத்தில் அவனை அறியாமலேயே தெரிந்த ஓரிரு வினாடி மலர்ச்சி பின் அவளிடம் காட்டப்படவில்லை. அவள் கிளம்பும் போது அவன் அவள் பக்கம் பார்க்கவே இல்லை. வெறுப்புடன் நான்கு வார்த்தையாவது அவன் பேசி இருந்தாலும் கூட அவளுக்கு அதை சகிக்க முடிந்திருக்கும். ஆனால் அவன் பாராமுகத்தை மட்டும் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஆனாலும் அவளால் அவனைக் குற்றம் சொல்ல முடியவில்லை. அவளுக்கு அது தேவை தான்  என்று தோன்றியது. அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று தோன்றியது. அவள் அவன் மீது கோபித்துக் கொண்ட போது அவனிடம் ஏன் கோபித்துக் கொண்டாள் என்பதைக் கூட தெரிவிக்கவில்லை. அவனைப் பேசக் கூட விட்டதில்லை.  அன்று அவனை அவள் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கச் சொன்னாள். அவன் விலகி இருக்கிறான். அவனிடம் எந்தத் தவறும் இல்லை. அவன் அவள் சொன்னபடி தான் செய்கிறான்.
                       
ஈஸ்வரின் நண்பன் பாலாஜியிடம் பேசிய போது ஈஸ்வரைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயம் சொன்னான். கண்ணியம், நாணயம் என்கிற விஷயத்தில் எல்லாம் ஈஸ்வரை மாதிரி ஒருவனைப் பார்க்க முடிவது கஷ்டம் என்று சொன்னான். அவள் ஈஸ்வரின் நண்பர்களின் ஃபேஸ்புக் எல்லாம் போய் பார்த்தாள். பெண் நண்பர்கள் உட்பட எல்லோரும் அவன் மேல் மிகுந்த மரியாதை கலந்த அன்பு வைத்திருந்தார்கள் என்பது அவர்கள் தகவல் பரிமாற்றங்களின் மூலம் தெரிந்தது. சில பெண்கள் அவன் மீது மையல் கொண்டிருந்தார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்தது. ஆனால் அவர்கள் எல்லாம் அவன் எட்டாத தூரத்தில் இருக்கிறான்  என்பது போல் கருத்து தெரிவித்தார்களே தவிர யாரும் அவன் பற்றித் தரக்குறைவாகச் சொல்லவில்லை. எல்லோரையும் ஈஸ்வர் ஏமாற்றி இருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் ஏமாந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதனால் மகேஷ் பொய் சொல்லி இருக்கிறான் என்பதில் அவளுக்கு இப்போது சந்தேகம் இல்லை. ஆனால் அவளால் மகேஷ் ஏன் பொய் சொன்னான் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவளுக்கு மகேஷ் நல்ல நண்பனாக இருந்தான். அதை அவள் இப்போதும் மறுக்க முடியாது. அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் நண்பன் தான். சின்ன வயதில் இருந்து அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். அவள் கேட்டால், அவன் வைத்திருக்கும் விளையாட்டுப் பொருளானாலும் சரி, தின்பண்டமானாலும் சரி, உடனே சிறிது கூடத் தயங்காமல் தந்து விடுவான். என்ன வேலை எந்த நேரத்தில் சொன்னாலும் அதைச் செய்வதில் அவன் சங்கடப்பட்டதில்லை.

இந்த ஒரு பொய்யைத் தவிர இது நாள் வரை அவளால் அவன் மீது ஒரு குற்றம் சொல்ல முடிந்ததில்லை. ஆனால் இந்த ஒரு பொய்யால் அவள் வாழ்க்கையில் உன்னதமான ஒரு உணர்வையே அவன் சுக்கு நூறாக்கி விட்டான். அதிலும் அவன் அன்று நடித்த நடிப்பு இப்போதும் அவள் கண்முன் நிற்கிறது. அவள் இதயம் உடைந்த கணமல்லவா அது.  அதை அவள் எப்படி மறக்க முடியும்?

பரமேஸ்வரனுக்குப் பயந்து மகேஷ் தன் காதலை என்றுமே அவளிடம் சொல்லி இருக்கவில்லை என்பதால் அவளுக்கு அவன் ஈஸ்வரைத் தன் காதலுக்கு எதிரியாக நினைத்து தான் இப்படிப் பொய் சொன்னான் என்பதை ஊகிக்க முடிந்திருக்கவில்லை. தன் தாத்தாவிடம் ஈஸ்வர் முன்பு கோபமாகப் பழகியதால் அவனை மகேஷிற்குப் பிடிக்கவில்லை, அதனால் தன் தோழியான விஷாலியும் அவனுடன் நெருங்கிப் பழகுவது பிடிக்கவில்லை, அதனால் தான் பொய் சொல்லி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கு கடைசியாக விஷாலி வந்தாள்.

மகேஷ் மீது அவளுக்கு ஆத்திரமாக வந்தது. உன்னால் எப்படி என்னிடம் நீ இப்படிப் பொய் சொல்ல முடிந்தது என்று கேட்க அவள் மனம் துடித்தது. ஆனால் அதற்கு பதிலாக மகேஷ் வேறு கற்பனைப் பொய்களை அவிழ்த்து விடுவானே ஒழிய தன் தவறை ஒப்புக் கொள்வான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. இனியொரு தடவை இந்தப் பொய்களைக் கேட்க நேர்ந்தால் அவனை நிஜமாகவே வெறுக்க வேண்டி இருக்கும். அதற்கு ஏனோ விஷாலியின் நல்ல மனது இடம் தரவில்லை.

மகேஷ் சொன்ன பொய் மகாபாதகமே ஆனாலும் இது வரை அவன் அவளுக்காக செய்ததை எல்லாம் அவளால் மறக்க முடியவில்லை. அதனால் ஒரேயடியாக அவன் நட்பை அறுத்து விடவும் அவளால் முடியவில்லை. அதே நேரத்தில் முன்பு போல அவளால் பழகவும் முடியவில்லை. இந்த திரிசங்கு நிலையில் அவள் அவனிடம் அளவாகப் பேசுவதையும் பழகுவதையும் வைத்துக் கொள்ள முடிவெடுத்திருந்தாள்.

அவன் இப்போதெல்லாம் அவர்கள் வீட்டுக்கு முன்பு போல் வருவதில்லை என்பது அவளுக்கு பெரிய ஆசுவாசத்தைத் தந்தது. ஆனால் அவ்வப்போது போனில் அவளுடன் அவன் பேசினான். விஷாலி தந்தி வாசகங்களில் பதில் சொல்லி வேறு முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லி போனை வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

கடைசியில் ஒரு தடவை மகேஷ் கேட்டே விட்டான். “என்ன விஷாலி. நீ என் கிட்ட சரியா பேசவே மாட்டேன்கிறாய்?

பதிலை என் கிட்டே கேட்காதே. உன்னையே நீ கேட்டுக்கோஎன்று அவளுக்குச் சொல்லத் தோன்றியது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னாள். “அப்படி ஒன்னும் இல்லை... சரி வைக்கட்டுமா. இன்னொரு கால் வருது”.

அவள் அதிகம் தனிமையை விரும்பி தனிமையிலேயே இருந்தாள். அப்படித்  தனிமையில் இருக்கும் போதெல்லாம் ஈஸ்வருடன் நன்றாகப் பழகிய அந்த இரண்டு நாட்களைத் திருமபத் திரும்ப மனம் திரையிட்டுப் பார்த்து மகிழ்ந்தது. யாரோ இவன் பாடல் அடிக்கடி ஒலித்தது. அவள்-அவன்-அந்தப் பாடல் கலந்த ஒரு அழகிய தருணம் மனதை வருடிப் போனது. எல்லா நினைவுகளும் முடிவில் வலியையே தந்தாலும் அந்த அழகிய நினைவுகளை மறக்க முடியவில்லை...

தென்னரசு மகள் ஏதோ எண்ணங்களில் சோகமாய் ஆழ்ந்து போய் இருந்ததைக் கவனித்தார். அவளுக்கு அவர் அறை வாசலில் வந்து நிற்பது கூடத் தெரியவில்லை. கனத்த மனத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவர் தன் பழைய மகளைப் பார்க்க ஏங்கினார். என்னேரமும் சுறுசுறுப்பாய், சந்தோஷமாய், மலர்ந்த முகத்துடன் ஏதோ ஒரு வேலையை ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கும் அந்த மகளை அவர் இனி எப்போது காணப் போகிறார்?

“என்ன யோசிச்சுட்டு இருக்கே விஷாலி?

“ஒன்னும் இல்லைப்பாசொல்லி விட்டு விஷாலி ஒரு புன்னகையைப் பலவந்தமாய் உதட்டிற்குக் கொண்டு வந்தாள். அதைப் பார்த்து அந்தத் தந்தையின் மனம் மேலும் வேதனைப் பட்டது.  சிறு வயது முதல் மகளின் நிஜப்புன்னகையில் அகம் மகிழ்ந்து வந்த தந்தைக்கு மகள் போலிப் புன்னகை பூக்கும் நிலைமைக்கு வந்து விட்டதைத் தாங்க முடியவில்லை.

அவர் இனி எதுவும் கேட்டு விடுவாரோ என்று அவள் பயந்து எழுந்து தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அரை மணி நேரத்தில் அவள் ஒரு ஓவியக் கண்காட்சிக்குக் கிளம்பிப் போனாள். “நான் போயிட்டு வரேன்ப்பா....

போகும் மகளையே பார்த்துக் கொண்டு தென்னரசு வாசலில் நின்றார். அவள் நடையில் ஒரு ஜீவனே இல்லை....

அந்த நேரத்தில் இளைஞன் ஒருவன் சைக்கிளில் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றான். “சாரி சார். புக்ஸ் கொண்டு வர லேட்டாயிடுச்சு.....என்று சத்தமாகச் சொன்னான்.

தென்னரசுக்கு அவன் பரிச்சயமானவன் அல்ல.  அதனால் அவனை சந்தேகத்துடன் பார்த்தார். இடம் மாறி வந்து விட்டானோ?

அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் சைக்கிளை நிறுத்தி விட்டு இரண்டு புத்தகங்களுடன் அருகில் வந்த அவன் அவரிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். ‘குருஜி பேசணும்னார்

புரிந்து கொண்ட தென்னரசு தானும் சத்தமாகவே “பரவாயில்லை. உள்ளே வாப்பாஎன்று உள்ளே அவனை அழைத்துக் கொண்டு போனார். வெளியே இருந்து பார்க்கும் யாருக்கும் அந்த இளைஞன் அவரது மாணவன், தெரிந்தவன் என்று தான் நினைக்கத் தோன்றும்.

உள்ளே நுழைந்தவுடன் அந்த இளைஞன் தன் செல்போனை எடுத்து அவரிடம் தந்து ஒரு புதிய செல்போன் எண் எழுதிய சீட்டையும் தந்தான். “இந்த நம்பருக்கு இந்த செல்போன்ல பேசுங்க

தென்னரசு திகைப்படைந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அந்த எண்களை அழுத்த, குருஜி பேசினார்.  “தென்னரசு உன் வீட்டுக்கு வெளியே இன்னமும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான்னு பாபுஜியோட ஆள்கள் சொல்றாங்க. ஆனால் போன் டேப்பிங் இருக்கற மாதிரி தெரியலை. ஆனாலும் ஜாக்கிரதையாய் இருக்கறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். அதனால தான் இந்த ஏற்பாடு. நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் வேதபாடசாலை பக்கம் வந்துடாதே. இங்கே பலமான போலீஸ் கண்காணிப்பு இருக்கு.

தென்னரசுவால் கேள்விப்பட்டதை நம்ப முடியவில்லை. பார்த்தசாரதி அவரைப் பார்த்துப் பேசி விட்டுப் போனது முதல் தான் கண்காணிக்கப்படுவது தென்னரசுக்குத் தெரிந்தே இருந்தது. அதனால் தான் அவர் அன்றிலிருந்து கல்லூரியைத் தவிர வேறு எங்கேயும் அதிகம் போகவில்லை. ஆனால் கண்காணிப்பு குருஜி வரைக்கும் நீளும் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. முதலாவதாக குருஜி மேல் யாருக்காவது சந்தேகம் வரும் வாய்ப்பு இருப்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. அப்படி வந்தால் கூட குருஜி இருக்கும் இடத்தைக் கண்காணிக்க போலீஸ் இலாகா துணியும் என்பதைத் துளியும் நம்ப முடியவில்லை. எங்கே என்ன தவறு நடந்தது?.

தென்னரசுவின் அதிர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிந்தது போல் குருஜி சொன்னார். “எல்லாம் ஈஸ்வரோட அனுமானம் தான்னு நினைக்கிறேன். ஆனாலும் பயப்பட ஒன்னும் இல்லை. நம் திட்டப்படி நாளைக்கு காலைல ஆறு மணிக்கு இங்கிருந்து சிவலிங்கத்தோட கிளம்பறோம்... அதுக்கான ஏற்பாடு செஞ்சாச்சு. நீ ஆராய்ச்சி இடத்துக்கே நேரா வந்துடு. வீட்டுல வெளியூர் போறதா சொல்லிட்டு கிளம்பு. காலைல சரியா அஞ்சரை மணிக்கு கால்டாக்ஸி உன் வீட்டு முன்னால் வந்து நிற்கும். அது பாபுஜி ஆள்கள் ஏற்பாடு செய்தது. மீதியை அவங்க பார்த்துக்குவாங்க. உன் வீட்டுக்கு வெளியில் இருக்கற போலீஸ்காரன் அரை கிலோமீட்டருக்கு மேல பின் உன்னைப் பின் தொடர முடியாது. அதை பாபுஜி ஆள்கள் பார்த்துக்குவாங்க

தென்னரசு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். குருஜி தொடர்ந்தார்.


மகேஷ் கிட்ட நான் இன்னைக்கே சாயங்காலத்துக்கு மேல அங்கே வரச் சொல்லி இருக்கேன். நீயும் அவனும் ஒரே நேரத்துல கிளம்பி வந்தால்  அனாவசியமா அவன் மேலேயும் போலீஸுக்கு சந்தேகம் வரலாம். இது வரைக்கும் அவன் மேல போலீஸுக்கு சந்தேகம் இல்லை... அதனால அவன் அவங்க கண்காணிப்பில இல்லை. அந்த மெஷின்களோட ப்ரவுச்சர்ஸ் எல்லாம் அவனுக்கு நேத்தே அனுப்பி நல்லா படிச்சு வச்சுக்க சொல்லி இருக்கேன்....  சரி நாளைக்கு காலைல பார்க்கலாம்

தென்னரசு சொன்னார். “சரி குருஜி

அந்த இளைஞன் கொண்டு வந்திருந்த புத்தகங்களை வைத்து விட்டு அவரிடம் இருந்து செல்போனைத் திரும்ப வாங்கிக் கொண்டு போய் விட்டான்.

அந்த இளைஞன் போய் அரை மணி நேரத்தில் மகேஷ் வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை. இன்னொரு விஷாலியாய் தெரிந்தான். வந்தவுடன் கேட்டான். “விஷாலி இல்லையா?

“இல்லை. வெளியே போயிருக்கா

மகேஷின் முகம் மேலும் சோகமானது. விஷாலி அவனிடம் சரியாகப் பேசாமல் இருக்க ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பித்தது அவன் சோகம். பரமேஸ்வரன் உயிர் பிழைத்து ஈஸ்வரும், அவரும் நெருக்கமானவுடன் சோகம் பல மடங்காக ஆகி இருந்தது.

தென்னரசு சொன்னார். “நான் உன்னை அதிகம் வர வேண்டாம்னு சொல்லி இருந்தேனே மகேஷ். போலீஸ் கண்காணிப்பு இன்னும் இங்கே இருந்துகிட்டு தான் இருக்கு

“நான் அதிகம் வரலையே. வந்து நாலைந்து நாளுக்கு மேல ஆச்சு.... நாம ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ்னு போலீசுக்கும் தெரியும். அதனால நான் எப்பவாவது வர்றது எந்த சந்தேகத்தையும் கிளப்பாது.... சீக்கிரமே கிளம்பிடறேன்உண்மையில் ஆராய்ச்சிக் கூடத்திற்குப் போனால் இனி சில நாட்கள் விஷாலியைப் பார்க்க முடியாது என்பதால் அவளைப் பார்த்து விட்டுப் போகத் தான் மகேஷ் வந்திருந்தான். அவளைப் பார்க்க முடியாதது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

தென்னரசு சொன்னார். “வேதபாடசாலையையும் கண்காணிச்சுட்டு இருக்காங்கன்னு குருஜி சொன்னார். பலமான கண்காணிப்பாம்.....

“என்ன?மகேஷ் வாயைப் பிளந்தான். அவனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தென்னரசு தெரிவித்தவுடன் அவனுக்குக் கோபம் வந்தது. “அந்த அளவுக்கு யாருக்குத் தைரியம் வந்திருக்கு. குருஜி ஒரு போன்கால் செய்தால் போதுமே?  

மகேஷின் அறிவு கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் ப்ரோகிராம்கள், நவீன சாதனங்கள் ஆகியவற்றில் வேலை செய்வது போல வேண்டாத சில விஷயங்களிலும் அபாரமாக வேலை செய்யுமே ஒழிய மற்ற விஷயங்களில் வேலை செய்யாது என்பது தென்னரசுவிற்குத் தெரியும். பொறுமையாகச் சொன்னார். ரகசியமாய் கண்காணிக்கிறது அவருக்கு எப்படித் தெரியும்னு கேள்வி வரும். தப்பு செய்யாத ஆளை போலீஸ் கண்காணிச்சா என்ன, மடியில கனம் இருந்தாத்தானே வழியில பயம்னு அறிவிருக்கிறவன் நினைப்பான். இப்போதைக்கு கண்காணிக்கிறவங்களுக்கு சந்தேகம் மட்டும் தான் இருக்கு. அதை உறுதிப்படுத்திட வேண்டாம் இல்லையா?.....

“அப்படின்னா நாளைக்கு சிவலிங்கத்தை எப்படி அங்கே இருந்து எடுத்துட்டு போவாங்க?

 ஏதோ ஏற்பாடு செய்திருக்கிறதா குருஜி சொன்னார்

மகேஷ் தலையசைத்தான். குருஜி, சிவலிங்கம் யோசனைகள் போய் அவன் பழையபடி சொந்த சோகத்தில் மூழ்கினான். அங்கிள் நான் ஒரு பெரிய முட்டாள் தனம் செய்துட்டேனோன்னு எனக்கு இப்ப தோண ஆரம்பிக்குது...

என்ன?

குருஜியே அந்த சிவலிங்கத்திற்கு எத்தனையோ அடி தூரம் தள்ளியே நிற்கறப்ப நான் அன்னைக்கு அது கார் பின் சீட்டுல இருக்கறப்ப காரை ஓட்டிகிட்டு வந்திருக்கக் கூடாதுன்னு தோணுது. அதை எடுத்துகிட்டு வந்தவன் இன்னும் பழைய நிலைக்கு வரலை. சீர்காழில இருந்து அவனைக் கூட்டிகிட்டு வந்து எத்தனை நாளாச்சு. இன்னும் அவன் பேய் அடிச்சவன் மாதிரி தான் இருக்கான்.... எனக்கும் அந்த சிவலிங்கத்துக்கும் இடைவெளி கார்ல வெறும் ரெண்டடி தான் இருந்திருக்கும். முக்கால் மணி நேரம் அந்த தூரத்துல சிவலிங்கம் கூட இருந்த அந்த நாளுக்குப் பிறகு நானும் நிம்மதியாய் இல்லை... அது வரைக்கும் இந்தியா வர்ற யோசனையே இல்லாத ஈஸ்வர் வந்தான்.... அதுல ஆரம்பிச்சு எனக்கு ஒன்னு மேல ஒன்னு பிரச்சினை இருந்துகிட்டே தான் இருக்கு. என் மேல உயிரே வச்சிருந்த என் தாத்தாவுக்கு இப்ப நான் இருக்கேன்கிறதே மறந்துட்ட மாதிரி தான் இருக்கு. இப்ப அவருக்கு அவன் தான் உயிர். எங்கம்மாவுக்கும் மருமகன் வந்த பிறகு மகன் பத்தின யோசனையே இல்லை... விஷாலி கூட இப்ப என் கிட்ட சரியா பேசறதே இல்லை...

மகேஷ் குரல் அழுகையை எட்டி இருந்தது. ‘நீங்கள் கூட விவரமாய் இன்னொரு காரில் வந்து விட்டீர்கள்என்று அவன் வாய் சொல்லா விட்டாலும் பார்வை சொன்னது. தென்னரசு ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார். அவரும் நிம்மதியாய் இல்லை. எப்போது மகள் மறுபடி சிரிக்கிறாளோ அப்போது தான் அவர் நிம்மதி அடைய முடியும். ஆனால் அதை எல்லாம் சிவலிங்கத்துடன் முடிச்சு போட அவர் விரும்பவில்லை. இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் எல்லாம் சரியாகும்... அதில் அவருக்கு சந்தேகமில்லை.

தென்னரசு கனிவாக அவனைப் பார்த்துச் சொன்னார். “மகேஷ். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதே. சிவலிங்கம் பக்கத்துலயே நீ போகாமல் இருந்திருந்தால் கூட ஈஸ்வர் இந்தியாவுக்கு வந்திருப்பான். உன் தாத்தா கிட்ட அவர் அண்ணா முதல்லயே அவனுக்குத் தெரிவிக்கச் சொல்லி இருந்தார்ங்கறதை மறந்துட்டியா என்ன? இந்த ஆராய்ச்சிகள் முடியறப்ப நம்ம எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சிருக்கும். சரி நீ கிளம்பு... நாளைக்கு அங்கே சந்திக்கலாம்...

மகேஷ் ஓரளவு நம்பிக்கை வந்தவனாக கிளம்பினான்.


பாபுஜி தந்தைக்குப் போன் செய்து வேதபாடசாலை கண்காணிக்கப்படும் செய்தி கிடைத்ததில் இருந்து ஆரம்பித்து நடந்ததை எல்லாம் சொன்னார். சிவலிங்கம் ஒளிர்ந்ததைப் பார்த்த காட்சியை விவரிக்கையில் அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது.  குருஜி உதயனிடம் இந்த ஆராய்ச்சிகள் பற்றி அபிப்பிராயம் கேட்ட போது இப்போதைக்கு இந்தப்பக்கம் தான் அனுகூல நிலைமை இருப்பதாக அவர் சொன்னார் என்பதைத் தந்தையிடம் விவரமாகத் தெரிவித்து விட்டு பாபுஜி சொன்னார். “எல்லாம் இப்ப எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்குப்பா

முழுவதும் கேட்டு விட்டு பாபுஜியின் தந்தை பிரதாப்ஜி சொன்னார். “எனக்கு அப்படித் தோணலை 

“ஏன்ப்பாபாபுஜி உற்சாகம் வடியக் கேட்டார்.

“சிவலிங்கம் இருக்கிற இடம் மட்டும் தான் உங்க கட்டுப்பாட்டில் இருக்கு பாபு. சிவலிங்கம் இல்லை. இப்பவும் சிவலிங்கத்தைத் தொட முடிஞ்சது அந்தப் பையன் கணபதிக்குத் தான். உங்களுக்கல்ல. இப்பவும்  நீங்க பல அடி தள்ளித் தான் நிற்கிறீங்க. உன்னோட குருஜியையும் சேர்த்து தான் சொல்றேன். தொடக்கூட முடியாத நீங்க அதை உங்க கட்டுப்பாட்டுல வச்சிருக்கறதா சொல்றது தமாஷா இருக்கு

பாபுஜி காற்றுப் போன பலூன் போல ஆனார்.

(தொடரும்)

என்.கணேசன்         



21 comments:

  1. Unexpected turn in the story :) Didn't expect that Mahesh & Thennarasu also involved in this :)

    ReplyDelete
  2. நல்ல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது மானஷ லிங்கத்தின் ரகசியம்........!!

    வாழ்த்துகள்...!

    ReplyDelete
  3. அந்த கூட்டுக்களவாணிகள் இவர்கள் தானா? முக்கியமான கட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பாபுஜியின் அப்பா சொல்லும் வசனம் நல்ல பஞ்ச். அடுத்த வியாழன் நாளைக்கே வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. “சிவலிங்கம் இருக்கிற இடம் மட்டும் தான் உங்க கட்டுப்பாட்டில் இருக்கு பாபு. சிவலிங்கம் இல்லை. இப்பவும் சிவலிங்கத்தைத் தொட முடிஞ்சது அந்தப் பையன் கணபதிக்குத் தான். உங்களுக்கல்ல. இப்பவும் நீங்க பல அடி தள்ளித் தான் நிற்கிறீங்க. உன்னோட குருஜியையும் சேர்த்து தான் சொல்றேன். தொடக்கூட முடியாத நீங்க அதை உங்க கட்டுப்பாட்டுல வச்சிருக்கறதா சொல்றது தமாஷா இருக்கு”

    சிவலிங்கத்தின் கட்டுப்பாட்டில் அனைவருமே இருக்க -
    தங்கள் கட்டுப்பாட்டில் சிவலிங்கம் இருப்பதாக மனக்கோட்டை கட்டுவது வியப்புதான்..!

    ReplyDelete
    Replies
    1. அதேதான் எனக்கும் தோன்றியது. பாபுஜியின் தந்தைக்குத்தான் ஓரளவேனும் நிலைமை புரிந்திருக்கிறது.

      Delete
  5. Unexpected turn. good... waiting for next post :-)

    ReplyDelete
  6. அருமை. ஆதி காலத்துல இருந்து தமிழன் அழிஞ்ச அதே காரணம். கூட இருந்து குழி பறித்தல்.

    ReplyDelete
  7. அவன் அவள் சொன்னபடி தான் செய்கிறான். தவறுதலாக வந்த ர வை கவனிக்கவும்.

    களமும் கருத்தும்

    நடையும் வேகமும்

    அன்பும் ஆன்மீகமும்

    சிந்தனையும் சிக்கலும்

    எதிர்பாரா திருப்பமும்

    அறிவும் சிவமும்

    கனவும் நிஜமுமாய்

    மனத்தை மயக்கி

    வாசிக்க படைத்தாய்

    பரம(ன்) ரகசியம்

    நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

      Delete
  8. great turing in this episode ganesh sir....best wishes..

    ReplyDelete
  9. கதையை அருமையாக கொண்டு செல்கிறீர்கள்... தொடர்ந்து வருகிறோம்....

    ReplyDelete
  10. கணேசன் சார்... அமானுஷ்யன் தொடரில் பதினோராவது அத்தியாயத்துக்கு அத்தியாயம் எண் தரப்படவில்லை. தந்தால் தேடலுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அமானுஷ்யன் 11 ஆம் அத்தியாய லிங்க் இதோ-
      http://www.nilacharal.com/ocms/log/10190901.asp

      அத்தியாயத்தின் மேலே எண் விடுபட்டுப் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.

      Delete
  11. Unexpected turning, very interesting... waiting for next episode...

    ReplyDelete
  12. Really interesting and thrilling, superp

    ReplyDelete
  13. Hi sir,

    Really good awesome..

    Regards,
    Sankar

    ReplyDelete
  14. கணேசன் சார் . எனக்கு பொழுது போகத போது எல்லாம் நான் பரமன் ரகசியத்தின் சில பிடித்த சேப்டர்களை மறுபடி மறுபடி படிப்பேன். சில சமயங்களில் அமானுஷ்யன் நாவலையும் அப்படி படிப்பேன். நீங்கள் அமானுஷ்யன் எழுதி இரண்டரை வருடம் முடிந்து விட்டாலும் நிலாச்சாரலில் அந்த நாவலுக்கு இப்போது கூட பின்னூட்டம் வந்துகொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா இல்லையா தெரியவில்லை. இல்லா விட்டால் ஒரு முறை போய் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு விஷ்ணுவிற்கு,
      சுட்டி காட்டியமைக்கு நன்றி. நாங்களும் படித்தோம் மகிழ்ந்தோம்.
      அதற்கான link http://www.nilacharal.com/ocms/log/12051105.asp

      By,
      https://www.facebook.com/groups/nganeshanfans/

      Delete
  15. #எழுதி இரண்டரை வருடம் முடிந்து விட்டாலும் நிலாச்சாரலில் அந்த நாவலுக்கு இப்போது கூட பின்னூட்டம் வந்துகொண்டு இருக்கிறது#

    அன்பு விஷ்ணு அவர்களுக்கு,
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. நாங்களும் பார்த்தோம் மகிழ்ந்தோம். அதனுடைய link http://www.nilacharal.com/ocms/log/12051105.asp
    By,
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete