Monday, August 19, 2013

இறை வழிபாட்டு முறைகள்


அறிவார்ந்த ஆன்மிகம்-15

றைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் -

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

1.       ச்ரவணம் கேட்டல்:  இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு சொந்தமாகத் தெரிந்து வைத்திருக்க அவசியம் இல்லை. கற்றிலன் ஆயினும் கேட்க என்றும் செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். அதனால் அறிந்தவர் சொல்வதைக் கேட்பதே போதும். ஆனாலும் கேட்பது என்பது மிக எளிமையாகத் தோன்றினாலும் கேட்கும் மனமும், பொறுமையும் எல்லாருக்கும் வந்து விடுவதில்லை என்றாலும் நல்லதைக் கேட்க முயல வேண்டும்.

பிரகலாதன் தாயின் கருவில் இருக்கும் போதே நாரதர் சொன்ன இறைவனின் பெருமைகளைக் கேட்டு உள்வாங்கிக் கொணடதை நாம் அறிவோம். எத்தனை துன்பங்கள் வந்த போதும் அவரை அந்த நாராயண மந்திரத்தைப் பலமாகப் பற்றிக் கொள்ள வைத்ததும்  இறைவனை அவதாரம் எடுக்க வைத்துக் காப்பாற்றியதும் அந்தக் கேட்டல் தான் என்பதால் அதன் முக்கியவத்தை வேறெதுவும் சொல்லி மேலும் விளக்க வேண்டியதில்லை.  

2.       கீர்த்தனம் – பாடுதல்: இறைவனைப் பாடி வழிபடுதல் அடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இசையால் இறைவனை ஈர்த்தே அவன் திருவடிகளை அடைந்தவர்கள் நம் நாட்டில் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் என்றும் முதலிடம் பெறக்கூடியவர் தியாகையர். இசையாலேயே இறைவனிடம் பேசிக் கொண்டிருந்தவர் அவர். இன்றும் கச்சேரிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். கர்னாடக சங்கீதம் உள்ளளவும் பேசிக் கொண்டிருப்பார் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உளமாறப் பாடியே இறைவனைத் தன்னிடம் இழுத்தவர். அந்த இசையாலே நாமும் இறையருளைப் பெறப் பாடி வைத்து விட்டுப் போனவர் அவர்.

தென்னிந்தியாவில் தியாகையர் என்றால் வட இந்தியாவில் அஷ்டபதிஎன்ர கிரந்தத்தைப் பாடிய ஜெயதேவரைச் சொல்லலாம். இவரது கீத கோவிந்தம் இசையில் கண்ண பரமாத்மாவே சொக்கிப் போனார் என்கிறார்கள். பக்தியுடன் சேர்ந்த இசைக்கு அந்த மகாசக்தி உண்டு. அதனாலேயே பாடும் பணியில் பணித்தருள்வாய்”  என்று வேண்டுகிறார் குமரகுருபர சுவாமிகள்.

3. ஸ்மரணம் – நினைத்தல்: இறைவனை வழிபட மூன்றாவது முறை அவனை நினைத்தல். மிகச் சுலபமாகத் தோன்றினாலும் இது மிகவும் கஷ்டமான முறை தான். நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை என்றும் சிவன் தாளினை என்று பாடி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதும் மனதின் உள்ளே இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது ஒரு மேலான நிலை. ஆனால் சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து இறைவனை நினைக்க முடிவது பிரம்மப் பிரயத்தனமே. அது வரை பதுங்கி இருந்த ஓராயிரம் சிந்தனைகள் இறைவனை நினைக்க ஆரம்பித்தவுடன் அதைப் புறந்தள்ளி விட்டு நம் மனதை ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன. இறைவனை விட்டு நீண்ட நேரம் சஞ்சரித்து விட்டோம் என்று நாம் புரிந்து கொள்வதே சற்றுத் தாமதமாகத் தான். ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான வழிமுறை என்பதில் சந்தேகமில்லை.

4.       பாதஸேவனம் - திருவடி தொழல்: இறைவனுடைய திருவடிகளைத் தொழுவது நான்காவது வழிமுறை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனது திருவடிகளை விடாமல் பற்றிக் கொண்டு தொழுதவர்கள்.

திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்கிறார்.
“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற்க்கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்குபவர்களைத் தவிர மற்றவர்களால் பொருள், இன்பம் ஆகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது என்கிறார் திருவள்ளுவர். கடந்து போக வேண்டிய கடல்களில் மூழ்கி விடாமல் காப்பது இந்த திருவடி தொழுதல்.

5.       அர்ச்சனம் – பூஜித்தல்: இறைவனைப் பக்தியுடன் பூஜித்தல் அடுத்த வழிபாட்டு முறை. இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் இருந்தாலும் எப்படி பூஜித்தாலும் பக்தியுடன் பூஜித்தால் இறைவன் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்கிறார்கள் நம் பெரியோர்கள்.

மனமுவந்து பூஜிப்பவர்கள் பூஜிக்கும் முறைகளில் தவறு இருந்தாலும் அந்தத் தவறுகளை அலட்சியப்படுத்தி அவர்களுடைய அன்பில் இறைவன் நெகிழ்கிறார் என்பதற்கு கண்ணப்ப நாயனாரும், சபரியும் சிறந்த உதாரணங்கள்.

6.       வந்தனம் – வணங்குதல்:  இறைவனை வணங்குதல் அடுத்த வழிமுறை. பொதுவாகப் படிப்பவர்களுக்குப் பூஜித்தல், திருவடி தொழல், வணங்குதல் என்ற இந்த மூன்று வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் தெரியாது. மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கிறது. இங்கு தலை வணங்குதல் என்று பொருள் கொள்வது சற்று பொருத்தமாக இருக்கும்.

திருவடி தொழுவதிலும் பூஜித்தலிலும் பக்தி முக்கியமாக பங்கு வகிக்கிறது. இதிலோ “நான்என்ற அகங்காரம் களைந்து மேலான இறைவனைத் தலைவணங்குவது பிரதானமாகிறது. எல்லாம் நீ என்ற பணிவு இங்கு பிரதானமாகிறது. “நான்என்பதை விட்டால் ஒழிய இறைவன் அருள் நமக்குக் கிடைக்க வழியே இல்லை என்பதால் இது முக்கியமாகிறது.

7.       தாஸ்யம் – தொண்டு: அடுத்த வழிபாட்டு முறை தொண்டு. இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் தொண்டு செய்வது இறைவனருள் பெற அடுத்த வழி. தன்னலம் இல்லாமல், புகழுக்காகவோ இலாபத்திற்காகவோ அல்லாமல் தாசராகத் தொண்டு புரிவதும் வழிபாடாகவே கருதப்படுகிறது.

தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணமாக திருநாவுக்கரசரையும் அன்னை தெரசாவையும் சொல்லலாம். முதுமையிலும் கோயில்கள் தோறும் சென்று தொண்டுகள் செய்தவர் திருநாவுக்கரசர். அன்னை தெரசா கல்கத்தா வீதிகளில் விழுந்து கிடந்த குஷ்ட நோயாளிகளிடம் கர்த்தரைக் கண்டு அவர்களுக்கு சேவை செய்து மகிழ்ந்தார். இறைவனை மகிழ்விக்க இது போன்ற சேவைகளை விட உயர்வானது எது இருக்க முடியும்?


8.       சக்யம் – சிநேகம்: இறைவனை சினேகத்துடன் பார்க்க முடிவது இந்திய ஆன்மிகத்தின் தனிச்சிறப்புத் தன்மை என்றே சொல்லலாம். சினேகமும், காதலும் இறைவனிடத்தில் ஏற்படுவது ஒருவித வழிபாடாகவே கருதப்படுகிறது. ஆண்டாளும், ராதையும் நல்ல உதாரணங்கள்.

அதே போல கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, குழந்தையாக, காதலனாக, காதலியாகக் கருத முடிந்த பாரதியையும் உதாரணமாகச் சொல்லலாம். இப்படி எல்லாமாக இறைவனைக் கண்டு சினேகித்தால் இறைவனால் அதை அலட்சியப்படுத்தி விட முடியுமா என்ன! அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே  என்று வள்ளலார் பாடினார். இறைவன் என்ற மலை நம் அன்பெனும் பிடியில் அகப்படும் அதிசயம் கற்பனை அல்ல நிஜம் தான்.


9.       ஆத்ம நிவேதனம் – ஒப்படைத்தல்: கடைசி வழிபாட்டு முறை உடல், பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணமாக்குவது. இது மகான்களுக்கே முடிகிற காரியம் என்றாலும் ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்ச நிலையாகக் கருதப்படுகிறது. தத்துவ வேதாந்த சாரமாகக் கூடச் சொல்லப்படுகிறது இந்த உயர்வு நிலை.

இறைவனை அடையவும், அவன் பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது பாதைகளும் உதவும். அவரவர் இயல்புக்கு ஏற்ப வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். அந்த சுதந்திரம் நமக்கு உண்டு. பிடித்த பாதையில் பயணியுங்கள். வாழ்த்துக்கள்!

-          என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -18-06-2013



6 comments:

  1. அருமை அருமை நண்பரே ...

    ReplyDelete
  2. I have read the your past articles 14,13,12 & 11 of the same series (don't know where to find 10 to 1). But comparing to them, I feel overall this one is a bit let down to justify the title of the series. Though I appreciate your simple interpretation of this message from Srimad-Bhagavatam, I feel you have the ability to go more deeper.
    A small comment on ஆத்ம நிவேதனம் – ஒப்படைத்தல்:
    . இது மகான்களுக்கே முடிகிற காரியம் என்றாலும் ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்ச நிலையாகக் கருதப்படுகிறது.
    A person becomes மகான் by his spiritual practices leading to ஆத்ம நிவேதனம். It can't be otherwise that only மகான் can achieve it.
    I enjoy and highly benefit from your articles and thank you for your efforts in sharing & spreading awareness.

    ReplyDelete
  3. அற்புதம் .மிக பலருக்கும் இந்த விசயம் போக வேண்டும் .இன்னும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் வேதாத்திரி மஹரிசியின் மனவளக்கலை படிக்க வேண்டுகிறேன் ...

    ReplyDelete
  4. அற்புதமாய் சொன்னீர்கள்.
    நன்றி.

    ReplyDelete