அறிவார்ந்த ஆன்மிகம் - 7
எத்தனை சுலோகங்கள் சொல்கிறோம், எத்தனை நேரம் பிரார்த்தனை செய்கிறோம்,
எத்தனை கோயில்களுக்கு எத்தனை தடவை போய் வருகிறோம் என்பதை வைத்தே ஆன்மிகத்தை
அடையாளம் காணும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. ஆனால் அப்படி அடையாளப்
படுத்துவது சரியா என்பதை விளக்க சுவாமி கமலாத்மானந்தர் ஒரு குட்டிக் கதை
சொல்வதுண்டு.
ஒரு காட்டில் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும்
நோக்கத்தில் வந்த வேடன் ஒருவன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத்
தூவினான். அவன் எதிர்பார்த்தபடியே கிளிகள் பறந்து வந்து வலியில் சிக்கிக் கொண்டன.
சிக்கிய பறவைகளைப் பிடிக்க வேடன் சென்றான்.
அப்போது அந்தப் பக்கம் ஒரு முனிவர்
வந்தார். வலையில் சிக்கி இருந்த கிளிகளைப் பார்த்ததும் இரக்கப்பட்ட அவர் வேடனிடம்
வேண்டிக் கொண்டார். ”வேடனே இந்தக் கிளிகளைக் கொல்லாதே”
வேடன் சொன்னான். “சுவாமி எனக்கு இன்று
இந்தக் கிளிகளே உணவு. இவற்றிற்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால் நான் இவற்றை விட்டு
விடுகிறேன்.”
முனிவர் தன்னிடம் இருந்த உணவை அந்த
வேடனுக்குத் தந்து அவனிடம் அந்தக் கிளிகளை விடுவிக்கச் சொன்னார். உணவைப் பெற்றுக்
கொண்ட அந்த வேடனும் அந்தக் கிளிகளை விடுவித்து விட்டுச் சென்றான்.
அவன் சென்ற பின் முனிவர் “கிளிகளே! இவன்
வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது
வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று அந்த கிளிகளுக்குப்
புத்திமதி சொல்லி விட்டுப் போனார்.
சில நாட்கள் கழித்து வேடன் மீண்டும்
கிளிகளைப் பிடிக்க அந்தக் காட்டுக்குள் வலையுடன் வந்தான். அவனைப் பார்த்ததும்
கிளிகள் ஒன்று சேர்ந்து கூறின. ”கிளிகளே!
இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து
அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்”
வேடனுக்கு அந்தக் கிளிகள் முன்பு நடந்ததை
இன்னும் நினைவு வைத்திருப்பது ஆச்சரியமாயும் வருத்தமாயும் இருந்தது. “இனி இங்கு
நான் வலை விரித்தாலும் இவை என் வலையில் சிக்காது. எனவே இங்கு என் வலையை விரித்துப்
பயனில்லை” என்று எண்ணி வேறு இடம் தேடிப் போனான்.
சில நாட்கள் கழிந்தன.
மறுபடியும் அந்த வேடன் அங்கு வந்தான். அவனைப் பார்த்தவுடனேயே கிளிகள் ”கிளிகளே! இவன்
வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது
வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று கூறின.
வேடன் “முன்பு நடந்ததை
இன்னுமா இந்தக் கிளிகள் நினைவு வைத்திருக்கின்றன” என்று வியந்து
கொண்டே வேறு இடம் சென்றான்.
மேலும் சில நாட்கள் கழிந்து
மீண்டும் வேடன் அதே இடத்திற்கு வலை விரிக்க வந்த போதும் அவை முன்பு கூறியதையே
கூறவே வேடன் திகைத்துப் போனான். என்றாலும் அவன் “இன்று எனக்கு வேட்டையாடுவதற்கு
வேறெந்த மிருகமும், பறவையும் கிடைக்கவில்லை. அதனால் இந்தக் கிளிகள் சிக்கா
விட்டாலும் சரி வேறு ஏதாவது பறவைகள் என் வலையில் வந்து சிக்குகிறதா எனப்
பார்க்கலாம்” என்று நினைத்தவனாய் அங்கேயே வலை விரித்து அதில்
தானியங்களைத் தூவினான்.
வேடன் வலை
விரிப்பதையும் தானியங்கள் தூவுவதையுமே பார்த்துக் கொண்டிருந்த கிளிகள் ”கிளிகளே! இவன்
வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது
வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று சொல்லிக் கொண்டே பறந்து வந்து வலையில் சிக்கிக் கொண்டன.
அப்போது தான் அந்த
வேடனுக்கு அவை சொன்னதையே சொல்லும் கிளிகள் என்றும் முனிவர் கூறியதையே சொல்ல
முடிந்த அவைகளுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை என்று புரிந்தது.
சுவாமி
கமலாத்மானந்தர் சொன்ன இந்தக் குட்டிக் கதை இன்றைய ஆன்மிக சூழலை அழகாகப்
பிரதிபலிப்பதாகவே உள்ளது. அந்த முனிவர் கிளிகள் மேல் உள்ள இரக்கத்தில் சொல்லி
விட்டுப் போன புத்திமதி போல மனித குலத்தைக் காப்பாற்றவும் வழிநடத்தவும் கூடிய
எத்தனையோ உயர்வான விஷயங்களை பெரியோர் பலர் நமக்காகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்.
அந்த வகையில் தான் நமக்கு எத்தனையோ ஞானப் பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றன. வேதங்கள்,
உபநிஷத்துக்கள், பகவத் கீதை, திருக்கிறள், குரான், பைபிள் எல்லாம் நாம் இந்தப்
பிறவிப் பெருங்கடலில் மூழ்கித் தத்தளித்து விடாமல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும்,
மகிழ்ச்சியாகவும் கடந்து செல்லத் தான் பெரும் கருணையுடன் நமக்கு கொடுக்கப் பட்டிருக்கின்றன.
அவற்றைப் படிப்பது
சுலபம். கேட்பது சுலபம். மேற்போக்காகப் புரிந்து கொள்வதும் கூட சுலபம் தான். ஆனால்
அவற்றிலேயே எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணி விடுவது முட்டாள்தனம். அவற்றில் சில
கோட்பாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்தக் காலத்தில் எந்த நோக்கத்தில் எந்த
உள்நோக்கத்தில் சொல்லப்பட்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல் எந்திரத்தனமாய்
பின்பற்றுவது மடமை. அப்படிச் செய்பவர்களுக்கும் இந்தக் கதையில் சொல்லப்பட்ட
கிளிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
நமக்கு
சொல்லப்பட்டிருக்கும் ஆன்மிக மார்க்கத்தில் கண்மூடித்தனமாகச் செல்லும் போது வெளித்
தோற்றத்திற்கு அது ஞானமாகவே தோன்றலாம். வேடன் அந்தக் கிளிகள் ஒப்பித்ததைப்
பார்த்து கிளிகள் முன்பு நடந்ததை நினைவு வைத்துக் கொண்டிருக்கின்றன, எச்சரிக்கையாக
இருக்கின்றன என்று எண்ணியது போலத் தான் அதுவும்.
உண்மையான பரிட்சை,
வலைகள் வீசப்படும் போது தான், நமக்கு நடக்கின்றது. வலியப் போய் வலையில் சிக்கிக்
கொள்கிறோமா, சிக்காமல் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோமா என்பது
தான் நமக்கு நடக்கும் பரிட்சை. படித்ததும், கேட்டதும், புரிந்ததும் எந்த அளவில்
இருந்திருக்கிறது என்பது அந்தப் பரிட்சையில் தான் தெரியும்.
நமக்குள்ளே சக்கையை
சேகரித்துக் வைத்துக் கொண்டிருக்கிறோமா, ஆன்மிக சாரத்தைச் சேகரித்து வைத்துக்
கொண்டிருக்கிறோமா என்பது, எதையும் புரிந்து கொண்டு செய்கிறோமா, புரிந்து கொள்ளாமல்
எந்திரத்தனமாகச் செய்கிறோமா என்பதில் இருந்து தான் வெளிப்படும்.
படிப்பது புனித
நூல்களே என்றாலும், சொல்வது உயர்வான சுலோகங்களே என்றாலும், அதில் மனம்
தங்கவில்லையானால் அது எந்தப் பயனையும் தராது. அதன் உண்மையான பொருள் புரிய
வேண்டும், புரிந்ததில் மனம் தங்க வேண்டும். அது குறித்து சிந்திக்க வேண்டும். அப்போது
தான் சாரத்தைப் பெறுகிறோம் என்று பொருள். அது தான் நம் மனத்தைப் பண்படுத்தும்.
கோயில்களுக்குச் செல்லும்
போதும் மனதில் இறை சிந்தனை இல்லாவிட்டால் அதுவும் கடைவீதிக்குச் செல்வது போன்ற
மற்ற செயல்களின் கணக்கிலேயே சேரும். மனதில் பக்தியும், சிரத்தையும் இருந்தால்
மட்டுமே இறையருள் பெற முடியும்.
அதே போல் மற்ற
ஆன்மிகச் செயல்களையும் புரிந்து கொண்டு முழு மனதோடு லயித்துச் செய்யுங்கள்.
அப்போது தான் அவை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கின்றனவோ அதன் பலன்களை
அடைய முடியும். அப்படிப் புரிந்து கொள்ளாமல் எந்திரத் தனமாக பெயரளவில் செய்யப்படும் செயல்கள்
வெளிப்பார்வைக்கு ஆன்மிகமாகத் தெரிந்தாலும் அவை நாம் போகும் வழியில் துணைக்கு
வாரா!
-
என்.கணேசன்
-
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 23-04-2013
அருமையான கதையோடு சொன்னவிதம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஉண்மையான பொருள் புரிய வேண்டும், புரிந்ததில் மனம் தங்க வேண்டும். அது குறித்து சிந்திக்க வேண்டும். அப்போது தான் சாரத்தைப் பெறுகிறோம் என்று பொருள். அது தான் நம் மனத்தைப் பண்படுத்தும்.
ReplyDeleteஆழ்ந்த பொருளுள்ள பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..
//உண்மையான பரிட்சை, வலைகள் வீசப்படும் போது தான், நமக்கு நடக்கின்றது.
ReplyDeleteவலியப் போய் வலையில் சிக்கிக் கொள்கிறோமா, சிக்காமல் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோமா என்பது தான் நமக்கு நடக்கும் பரிட்சை. படித்ததும், கேட்டதும், புரிந்ததும் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது அந்தப் பரிட்சையில் தான் தெரியும்.
நமக்குள்ளே சக்கையை சேகரித்துக் வைத்துக் கொண்டிருக்கிறோமா, ஆன்மிக சாரத்தைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறோமா என்பது, எதையும் புரிந்து கொண்டு செய்கிறோமா, புரிந்து கொள்ளாமல் எந்திரத்தனமாகச் செய்கிறோமா என்பதில் இருந்து தான் வெளிப்படும். //
மிகச்சரியான கூற்று. அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.
எந்நேரமும் துதிப்பவர்களின் கர்வத்திற்கு ஒரு அடி!
ReplyDelete"ஆனால் அவற்றிலேயே எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணி விடுவது முட்டாள்தனம்."
ReplyDelete- true saying...
//உண்மையான பரிட்சை, வலைகள் வீசப்படும் போது தான், நமக்கு நடக்கின்றது. வலியப் போய் வலையில் சிக்கிக் கொள்கிறோமா, சிக்காமல் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோமா என்பது தான் நமக்கு நடக்கும் பரிட்சை. படித்ததும், கேட்டதும், புரிந்ததும் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது அந்தப் பரிட்சையில் தான் தெரியும். //
ReplyDeleteஅருமை! உண்மை! மிகவும் நன்றி.
எந்திரத் தனமாக பெயரளவில் செய்யப்படும் செயல்கள் வெளிப்பார்வைக்கு ஆன்மிகமாகத் தெரிந்தாலும் அவை நாம் போகும் வழியில் துணைக்கு வாரா!
Deleteஅருமை, நன்றி.
100% true. Thanks for letting everyone to realize the truth what we do nowadays
ReplyDeleteஅருமையான ஆழ்ந்த கருத்துக்கள்
ReplyDeleteசிந்திக்க வைக்கிறது ,
செயல்பட முயல்கிறேன்
\\உண்மையான பரிட்சை, வலைகள் வீசப்படும் போது தான், நமக்கு நடக்கின்றது. வலியப் போய் வலையில் சிக்கிக் கொள்கிறோமா, சிக்காமல் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோமா என்பது தான் நமக்கு நடக்கும் பரிட்சை. படித்ததும், கேட்டதும், புரிந்ததும் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது அந்தப் பரிட்சையில் தான் தெரியும்//
ReplyDeletevery nice word GANESAN G...KEEP IT UP, THANKS FOR YOUR SHARING