Thursday, June 13, 2013

பரம(ன்) ரகசியம் – 48



ரிஷிகேசத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய குருஜியை யாரும் அடையாளம் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்காது. ஒரு தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்து இருந்தார். தன் வழக்கமான உடைகளில் இருந்தும் மாறி பைஜாமா குர்தா அணிந்திருந்தார். அவருடன் ஒரே ஒரு இளைஞனை மட்டும் அழைத்து வந்திருந்தார். 

ரிஷிகேசத்தில் அவருக்காக ஜீப் தயாராக இருந்தது. அதை அவருடன் வந்த இளைஞனே ஓட்டினான். கருப்புக் கண்ணாடியையும் தொப்பியையும் கழற்றி விட்ட குருஜி அந்த இளைஞனுக்கு மலைப்பாதையில் போகும் வழியைச் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி ஒற்றையடிப் பாதையில் நடக்க வேண்டி இருந்தது. இளைஞன் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டான்.

நகரம் மாறி விட்ட போதும் இது போன்ற காட்டு வழிப்பாதைகள் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். ஒரு காலத்தில் அவர் இமயமலையில் பல இடங்களில் சுற்றி இருக்கிறார். தேடல் நிறைந்த காலங்கள் அவை. அவருக்குப் பலவற்றையும் சொல்லிக் கொடுத்த காலங்கள் அவை. நாளை என்பதைப் பற்றியே யோசிக்காமல் நிகழ்காலத்தில் முழுமையாக சஞ்சரித்த காலங்கள். எத்தனை விதமான மனிதர்கள்.... எத்தனை விதமான பாடங்கள்.....

கிட்டத்தட்ட  மூன்று மைல் தூரம் கடந்த பின் அந்த இளைஞனை அங்கேயே ஒரு பாறை மீது உட்கார்ந்திருக்கச் சொன்னார். இளைஞன் உள்ளூர நன்றி தெரிவித்து அங்கே உட்கார்ந்து கொள்ள மேலும் ஒரு பர்லாங் நடந்த குருஜி ஒரு குகையை அடைந்தார். அந்த குகையின் நுழைவாயில் ஒற்றையடிப் பாதையில் வருபவர்களுக்குத் தெரியாதபடி இருந்தது. சில அடிகள் பாதையில் இருந்து வலப்புறம் போய் நின்றால் மட்டுமே குகை இருப்பது தெரியும்.

குருஜி அந்த குகையின் உள்ளே நுழைந்தார். குகையின் உள்ளே இருட்டாக இருந்தது. பைஜாமாவில் இருந்து சிறிய டார்ச் லைட்டை எடுத்து அதன் ஒளியின் உதவியுடன் சிறிது நடந்தார். விசாலமான ஒரு பகுதியில் கிட்டத்தட்ட அவர் வயதை ஒத்த ஒரு முதியவர் புலித்தோலின் மீது பத்மாசனத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்தார். டார்ச் லைட்டை அணைத்த குருஜி அவர் முன்னே அமர்ந்தார்.

மறுபடியும் குகையில் இருள் சூழ்ந்தது. பத்து நிமிடங்கள் கழிந்த பின் குரல் கேட்டது. வா ராமா

அந்தப் பெயர் வைத்து குருஜியை அழைப்பவர்கள் இன்று ஓரிருவர்கள் தான் இருக்கிறார்கள். குருஜி டார்ச் விளக்கைப் போட்டு சொன்னார். “உன் தியானத்தை நான் கலைத்து விட்டேன் போல் இருக்கிறது. உதயா

நண்பனை ஞாபகம் வைத்துக் கொண்டு நாற்பது வருஷம் கழித்து வந்திருக்கிறாய்.  தியானம் கலைந்தால் பரவாயில்லை... வா, வெளியே போய் வெளிச்சத்தில் பேசலாம்.

இருவரும் வெளியே வந்தார்கள். குருஜி தன் நண்பனை அன்புடன் பார்த்தார்.  மெலிந்த மாநிற தேகம், பரட்டைத் தலை, தீட்சண்யமான கண்கள், நீண்ட தாடி, இடுப்பில் ஒரு காவி வேட்டி எனப் பழைய கோலத்திலேயே இருந்தாலும் வயதான அறிகுறி தேகத்தில் தெரியவே செய்தது.

உதயன் ஒரு மர நிழலில் உட்கார்ந்து நண்பனை அருகில் உட்காரச் சொன்னார். குருஜி உட்கார்ந்தார்.  

ஒரு நண்பனைப் பார்க்க வேண்டுமென்றால் விசேஷ மானஸ லிங்கம் உன் வாழ்க்கையில் வர வேண்டி இருக்கிறது இல்லையா?

தன் நண்பனைப் பெருமை கலந்த வியப்புடன் குருஜி பார்த்தார். ஒரு மனிதனைப் பார்த்தவுடனேயே அவன் பழைய சரித்திரத்தைப் படிக்கிற சக்தி இன்னும் உதயனுக்கு அப்படியே இருக்கிறது.....

குருஜியைப் போலவே உதயனும் பெரும் தேடலுடன் இமய மலைக்கு கேரளாவில் இருந்து வந்தவன். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயதும், தீவிர அறிவு வேட்கையும் இருந்தது. குருஜிக்கு ஞானத் தேடலிலும், புனித நூல்களிலும் மிக அதிக நாட்டம் இருந்தது என்றால் அபூர்வ சக்திகளில் மிக அதிக நாட்டம் உதயனுக்கு இருந்தது. சில வருடங்கள் இரண்டு மூன்று குருக்களிடம் சேர்ந்தே இருவரும் இருந்தார்கள். கடைசியாக தீஜுவாலையாக ஒளிர்விடும் கண்களை உடைய சித்தரிடம் இருவரும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்.

அந்த சித்தரின் சொந்தப் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. அவர் கண்களை வைத்து இமயமலைச்சாரல்களில் அவரை மற்றவர்கள் அக்னி நேத்ர சித்தர் என்றழைத்தார்கள். அவர் தன் பெயரைச் சொன்னதில்லை. பல யோகிகளும், சித்தர்களும் அவரை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார்கள். அவர் அறியாதது எதுவுமில்லை என்கிற கருத்து எல்லோரிடமும் இருந்தது. உதயனும், குருஜியும் அவரிடம் கற்கப் போன போது அவர் ஒரு மாத காலம் அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இருவரும் விடாப்பிடியாக அவர் பின்னாலேயே இருந்தார்கள்.

ஒரு நாள் இருவரையும் கூப்பிட்டு அவர் சொன்னார். “உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் நான் சொல்வதைக் கடைசி வரை கேட்கிற லட்சணம் தெரியவில்லை. அப்படி இருக்கையில் இங்கே என் பின்னாலேயே இருந்து ஏன் காலத்தை வீணடிக்கிறீர்கள்?

குருஜி சொன்னார். உங்கள் பின்னால் இருக்கும் காலம் வீணடிக்கப்படும் காலம் என்று நாங்கள் நினைக்கவில்லை குருவே. உங்கள் நிழலில் கூடப் பாடம் கிடைக்கும் என்று வந்திருக்கிறோம் குருவே

“நான் யாருக்கும் குருவல்ல. நான் மடமோ, ஆசிரமமோ நடத்தவில்லை.என்ற சொன்ன சித்தர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மறுபடியும் அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் இருக்க ஆரம்பித்தார். மேலும் ஒரு மாதம் சென்றது. தன் அபூர்வ சக்தியால் அடிக்கடி சித்தர் காணாமல் போனாலும் போன வேலை முடிந்தவுடன் தன் இருப்பிடத்திற்கே வரும் பழக்கத்தை அவர் வைத்திருந்தார். அவர் அப்படி திரும்பி வரும் போதெல்லாம் அந்த இரண்டு இளைஞர்களும் பொறுமையாக அங்கு இருந்தார்கள்.

பின் ஒரு நாள் அவர்களை மறுபடியும் அழைத்தார். குருஜியிடம் கேட்டார். உனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

“நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது குருவே. எதையென்று சொல்ல?குருஜி சொன்னார்.

“அதில் முதலில் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?

குருஜி இரண்டு மூன்று மிக அபூர்வ புத்த மத சூத்திர நூல்களைச் சொன்னார்.

உதயனிடம் சித்தர் கேட்டார். “உனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

“அஷ்டமஹா சித்திகள் அறிந்து கொள்ள வேண்டும்?

அறிந்து என்ன செய்யப் போகிறாய்?

“வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்?

சித்தர் புன்னகைத்தார். இருவரையும் தன்னிடம் கற்றுக் கொள்ள அனுமதித்தார். இருவரும் வேறு வேறு நேரங்களில் அவரிடம் கற்றார்கள். குருஜி மிகக் கடினமான ஞானப் பொக்கிஷங்களைக் கற்றது அந்தச் சித்தரிடம் தான். எழுத்தில் இல்லாமல் காலம் காலமாய் வாய் வழியாக மட்டுமே அறிந்து கொண்டு வரப்படும் எத்தனையோ விஷயங்களை குருஜி கற்றார். அதே போல உதயனும் அபூர்வ சக்திகளைக் கற்றார். இருவரும் குரு கற்றுத் தந்த தவநிலையில் இருந்து எத்தனையோ உயர்நிலைகளை எட்டினார்கள்.

சித்தர் ஒரு நாள் இருவரையும் கேட்டார். “இந்த உலகத்திலேயே மிகப் பெரிய குற்றம் எது தெரியுமா?

இருவரும் தங்களறிவிற்குப் பட்டதைச் சொன்னார்கள். சித்தர் சொன்னார். “சிகரத்தைத் தொடும் திறமை உள்ளவன் சராசரியாக இருந்து சாவது தான் உலகத்திலேயே அவன் செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றம்.

இரண்டு இளைஞர்களும் அந்த வார்த்தைகளைத் தங்கள் மனதில் செதுக்கி வைத்துக் கொண்டார்கள். இருவரும் அதன் பிறகு சராசரியாக என்றுமே இருந்ததில்லை.

சுமார் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் இருவரும் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்த போது ஒரு சிங்கம் மிக ஆக்ரோஷமாக அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது. தான் கற்றிருந்த சக்தியால் சிங்கத்தை உதயன் ஒரு பார்வை பார்க்க சிங்கம் ஏதோ சுவர் தடுத்தது போலப் பாதியில் அப்படியே நின்றது. பின் திரும்பி ஓடியது. குருஜி அசந்து போனார்.

இருவரும் சித்தரிடம் இந்த சம்பவத்தைச் சொன்ன போது சித்தர் உதயனைப் பாராட்டுவதற்குப் பதிலாகக் கடிந்து கொண்டார். நல்ல சுத்தமான சாத்வீக மன அலைகளில் நீங்கள் இருந்திருந்தால் அந்தச் சிங்கம் பாய்ந்தே வந்திருக்காது. தவறான மன அலைகளில் சிங்கத்தை அப்படி வரவழைத்துப் பின் தடுத்து நிறுத்த அபூர்வ சக்தியைச் செலவழிப்பதில் பெருமை என்ன இருக்கிறது?

அதற்குப் பின் உதயனின் பல பரிசோதனைகள் சித்தரை அதிருப்திப்படுத்த ஒரு நாள் உதயனை அழைத்துச் சொன்னார். “அடிப்படைகள் எல்லாம் உனக்குச் சொல்லித் தந்து விட்டேன். மீதியை நீயே உன் பயற்சியாலும் புத்தியாலும் அடைந்து விடலாம். இனி உனக்கு என்னால் எதுவும் சொல்லித் தர முடியாது. நீ போகலாம். கடைசியாக ஒன்று சொல்கிறேன் நினைவு வைத்துக் கொள். மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம். அற்ப விஷயங்களில் அதை வீணாக்கி விடாதே

இனி அவர் மனம் மாறாது என்பதைப் புரிந்து கொண்ட உதயன் அவரை வணங்கி விட்டுப் போனார். உதயன் போனது குருஜிக்குப் பெரிய இழப்பாகத் தோன்றியது. அடுத்த ஆறு மாதத்தில் சித்தர் அவரையும் அனுப்பி விட்டார். இனி நீ என்ன படித்தாலும் ஒரே உண்மையை வேறு வேறு வார்த்தைகளில் படிப்பது போலத் தான். அதனால் நீ போகலாம். கடைசியாக உனக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனை நிர்ணையிப்பது அவனுக்கு என்ன தெரியும் என்பதல்ல, அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனை நிர்ணயிக்கிறது. அதை என்றும் மறந்து விடாதே”....


சொல்லித்தர சித்தரிடம் எவ்வளவோ இருந்தாலும் அரைகுறையாக நிறுத்தி விட்டுத் தங்களை அவர் அனுப்பி விட்டதாகவே நண்பர்கள் இருவரும் எண்ணினார்கள். அதனால் குருவான சித்தரிடம் இருவருக்கும் அதிருப்தி இருந்தது.  

குருஜி அங்கிருந்து வந்து விட்ட பிறகு நண்பர்கள் இருவர் பாதைகள் இணையவில்லை. உதயன் மாந்திரிகம், தந்த்ரா என்று எதெதிலோ ஆழமாக இறங்கி அபூர்வ சக்திகள் பல அடைய ஆரம்பித்தார். அடிக்கடி குருஜி தன் நண்பரைச் சென்று பார்ப்பதுண்டு. இமய மலையிலிருந்து ஒரேயடியாக குருஜி இறங்கி விட்ட பிறகு உதயனைச் சந்திக்கவில்லை. உதயன் நிரந்தரமாக ஒரு குகையில் வசித்து வந்ததால் அந்த இருப்பிடம் மட்டும் அவருக்கு நினைவு இருந்தது.....

உதயா நீ அடைய நினைத்ததை எல்லாம் அடைந்து விட்டாயா?குருஜி தன் நண்பனைக் கேட்டார்.

“உம்... எத்தனையோ நிலைகளைத் தொட்டு விட்டேன். ஆனாலும் முழுதாக திருப்தி வரவில்லை... ஒரு நிலை அடையும் போது அடுத்த நிலை கண்ணுக்குத் தெரிகிறது... பழையபடி அதைத் தேடி ஒரு பயணம் என்று வாழ்க்கை போகிறது... ராமா நம் சித்தர் குரு என்னை ஆரம்பத்தில் ஒன்று கேட்டாரே ஞாபகம் இருக்கிறதா? அஷ்டமஹா சித்திகளை அடைந்து நீ என்ன செய்யப் போகிறாய்என்று அவர் கேட்டதற்கு நான் ‘வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்என்று துடுக்குத் தனமாக கேட்டேன். ஆனால் இன்று அவர் கேட்ட கேள்வி புதிய அர்த்தத்தோடு தினமும் என் மனதில் எழுகிறது

குருஜி உதயனை ஆச்சரியத்தோடு பார்த்துச் சொன்னார். “தத்துவம் படித்தது நான் என்றாலும் நீ என்னை விடத் தத்துவம் நன்றாகப் பேசுகிறாய்
உதயன் சிரித்தார். வயதும் அனுபவமும் ஒரு மனிதனை அந்த திசையில் பயணம் செய்ய வைத்து விடுகிறது என்று நினைக்கிறேன்..... அபூர்வ சக்திகள் படித்தது நான் என்றாலும் இந்த வயதில் நீ அதில் ஆர்வம் காட்டி விசேஷ மானஸ லிங்கம் பின்னால் போனது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது

குருஜிக்கு அவர் வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போது தான் உறைத்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்து மரங்களில் வித விதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்த பறவைகளை வேடிக்கை பார்த்தார்.

திடீரென்று உதயன் வாய் விட்டுச் சிரித்தார். குருஜி கேட்டார். “என்ன?

நீ நம் குருவின் பாதையிலேயே குறுக்கிடுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை உதயன் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இதில் அவர் சம்பந்தப்பட்டிருப்பார் என்று எனக்கு எப்படித் தெரியும். அவர் இதைப் பற்றி நம்மிடம் பேசியது கூட இல்லை...

உதயன் ஏதோ யோசனையில் ஆழந்து போக குருஜி கேட்டார். “என்ன யோசிக்கிறாய்

“நம் குரு நீ இதில் சம்பந்தப்பட்டிருப்பதைப் பற்றி என்ன நினைப்பார் என்று யோசிக்கிறேன்...

“உன் ஞான திருஷ்டியில் அதையும் பார்த்து தான் சொல்லேன்

நம் குரு மாதிரி சித்தர்களின் எண்ணங்களையும், எதிர்காலத்தையும் சொல்லக் கூடிய அளவு நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.... இங்க்லீஷில் Highly Classified-Top Secret” என்று சொல்வார்களே இதெல்லாம் அது போலத் தான். அதை எல்லாம் பார்க்கக் கற்றுக் கொள்ள சாதாரணமான மேல் நிலைகள் போதாது. மாந்திரிகம் பக்கமெல்லாம் போகாமல் இருந்திருந்தால் இதற்குள் அதையும் நான் கற்றிருக்கலாம் என்று தோன்றுகிறதுஏனென்றால் மாந்திரிகம் எல்லாம் அந்த சக்திக்கு நேர் எதிரானது....

“சரி அதை விடு. அந்த நாள் அந்தக் கொலைகாரன் எப்படி இறந்தான் என்பதைப் பார்த்துச் சொல் பார்க்கலாம்.....

உதயன் குருஜிக்குப் பின்னால் ஒரு வெற்றிடத்தையே சிறிது நேரம் பார்த்து விட்டுச் சொன்னார். அவன் சிவலிங்கத்தைப் பார்த்து விட்டு உள்ளே போகிறான்... அது தெரிகிறது..... அந்த பூஜை அறையே ஜெகஜ்ஜோதியாய் தெரிகிறது.... அந்த ஜோதி வெளிச்சத்தில் உள்ளே நடப்பது எதுவும் தெரியவில்லை.... அவன் பீதியுடன் வெளியே ஓடி வருகிறான். யாரோ துரத்துவது போல் ஓடி வருகிறான்... மெயின் கேட் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்க்கிறான். அவன் கண்களில் மரண பயம்.... அவனால் மூச்சு விட முடியவில்லை.... நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான்..... அப்படியே சாய்கிறான்.....  சாகிறான்

குருஜி கேட்டார். “அந்தப் பூஜை அறையில் அவனைப் பயமுறுத்தியது சித்தரா சிவலிங்கமா என்று கூடச் சொல்ல முடியாதா?

என்னால் ஒளி வெள்ளத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை ராமா

குருஜி ஆழ்ந்த யோசனையுடன் நண்பனைப் பார்க்க, உதயன் குருஜியின் தலைக்கு மேல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தலைக்கு மேல் டிவி வைத்திருக்கிறது போல் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனை குருஜி கேட்டார். “என்ன பார்க்கிறாய்?

“நீ சிவலிங்கத்திடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறேன். உன் வாழ்க்கையில் நீ இது வரை செய்த பிரசங்கங்களிலேயே இது சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் ராமா. ஆனால் இதை உலகம் என்றுமே கேட்கப் போவதில்லை.... என்ன அழகாய் சொன்னாய். ”...மகாசக்தியான உனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கப் போவதில்லை. உன் சக்திக்கு இசைவாக அணுகுபவர்கள் எவருக்கும் எதையும் நீயும் மறுக்கப் போவதில்லை. பிரச்சினை உன்னிடம் இருந்து வரப் போவதில்லை. அது எனக்குத் தெரியும். பிரச்சினை சக்திகளால் உண்டாவதில்லை. மனிதர்களால் தான் உண்டாகிறது…” சரி அதை எல்லாம் விடு. நீ உன் நண்பனைப் பார்த்து விட்டுப் போக மட்டும் இத்தனை தூரம் வரை வரவில்லை என்று தெரிகிறது. உனக்கு என்னால் என்ன ஆக வேண்டும்?

குருஜி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அபூர்வ சக்திகளைத் தேடியே தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவு செய்திருந்த உதயனின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல என்பதை குருஜி அறிவார். நண்பனை மிக நீண்ட காலம் நேரில் சந்திக்கவில்லையே ஒழிய நண்பனின் புகழ் அவர் காதில் அவ்வப்போது விழுந்து கொண்டு தான் இருந்தது. முக்கியமாக மாந்திரிகத்தில் உதயனுக்கு இணையாக இக்காலத்தில் இன்னொருவர் இல்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்....

குருஜி மெல்ல சொன்னார். “சீக்கிரமே விசேஷ மானச லிங்கத்தை வைத்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு உன் உதவி கிடைத்தால் நல்லது என்று நினைக்கிறேன்....

உதயன் தன் நண்பனைப் பார்த்து தயக்கமில்லாமல் சொன்னார். “ராமா, அந்த சிவலிங்கத்திடம் என் சக்திகளை நான் வீணாக்க விரும்பவில்லை

ஏமாற்றத்துடன் குருஜி கேட்டார். “ஏன் அப்படிச் சொல்கிறாய் உதயா?

“நீ அந்த சிவலிங்கத்தை நெருங்காமல் தள்ளியே ஏன் இருந்தாயோ அதே காரணத்திற்காகத் தான் நான் மறுக்கிறேன் ராமா. அது இறைசக்தியா, சித்தர்கள் சக்தியா, இரண்டும் சேர்ந்த கலவையா என்றெல்லாம் உன் ஆராய்ச்சிகளுக்குப் பின் தான் தெரியும் என்றாலும் இப்போதைக்கு அது மாபெரும் சக்தியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதன் சக்தியின் அளவு கூட இன்னும் நமக்கு விளங்கவில்லை. அதோடு மோத நான் தயாராக இல்லை. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். இந்தக் கட்டத்தில் ஆழம் தெரியாமல் நான் காலை விட விரும்பவில்லை...

நண்பனின் குரலில் உறுதி இருந்தது. அவரது ஏமாற்றத்தைப் பார்த்த உதயன் மனம் இரங்கியவராகச் சொன்னார். “வேறு ஏதாவது கேள் ராமா. கண்டிப்பாகச் செய்கிறேன்...

குருஜி சொன்னார். “எங்கள் ஆராய்ச்சிகள் முடிகிற வரை நம் குரு சிவலிங்கத்தை எந்த விதத்திலும் நெருங்காதபடியும், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள எந்த விதத்திலும் பாதிக்காதபடியுமாவது ஏதாவது செய்ய வேண்டும் உதயா.

குருவின் பாதையில் தன்னையும் குறுக்கிடச் சொல்லும் நண்பனை லேசான புன்னகையுடனும் யோசனையுடனும் பார்த்த உதயன் பின் சம்மதித்தார். வேறு ஏதாவது கேள், கண்டிப்பாகச் செய்கிறேன் என்று கொடுத்த வாக்கைப் பொய்யாக்க அவர் விரும்பவில்லை... குருவைப் பிரிந்த பின் கற்ற வித்தைகளை குருவிடம் காட்ட ஒரு வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்திருக்கிறது என்று நினைத்த போது அவர் புன்னகை குறும்புச் சிரிப்பாக மாறியது.


(தொடரும்)

-          என்.கணேசன்

 



14 comments:

  1. சித்தர் சொன்ன "மிகப் பெரிய குற்றம்" சிறப்பு... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. வரதராஜன்June 13, 2013 at 6:19 PM

    சித்தரின் சீடர்களே அவருடன் மோத போகிறார்கள். மிக விருவிருப்பாக பரமன் ரகசியம் செல்கிறது. சித்தர் சொன்ன மிகப் பெரிய குற்றம் சும்மா ’நச்’. அடுத்த வியாழன் வரை இதையே இன்னும் இரண்டு முறையாகவாவது படிப்பேன்.

    ReplyDelete
  3. அக்னி நேத்ர சித்தர் வழியில் குறுக்கிட
    இரண்டு சீடர்கள் தயாராகிவிட்டார்களே...!

    ReplyDelete
  4. # ”நல்ல சுத்தமான சாத்வீக மன அலைகளில் நீங்கள் இருந்திருந்தால் அந்தச் சிங்கம் பாய்ந்தே வந்திருக்காது. தவறான மன அலைகளில் சிங்கத்தை அப்படி வரவழைத்துப் பின் தடுத்து நிறுத்த அபூர்வ சக்தியைச் செலவழிப்பதில் பெருமை என்ன இருக்கிறது?” #
    இதன் மூலம் அந்த சித்தரை பல யோகிகளும், சித்தர்களும் ஏன் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார்கள் என்று புரிகிறது.
    very interesting to read about Akashic Reading by udhayan.

    ReplyDelete
  5. "ஒரு மனிதனை நிர்ணையிப்பது அவனுக்கு என்ன தெரியும் என்பதல்ல, அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனை நிர்ணயிக்கிறது."
    அருமையான வார்த்தைகள்
    தொடர்வேன் .....

    ReplyDelete
  6. கணேசன் சார்! இந்த வாரம் அசத்தலான விஷயங்கள் அடங்கிய தொடராக அமைந்தது.

    ////இங்கே என் பின்னாலேயே இருந்து ஏன் காலத்தை வீணடிக்கிறீர்கள்?”///

    //// ”உங்கள் பின்னால் இருக்கும் காலம் வீணடிக்கப்படும் காலம் என்று நாங்கள் நினைக்கவில்லை குருவே. உங்கள் நிழலில் கூடப் பாடம் கிடைக்கும் என்று வந்திருக்கிறோம் குருவே”////

    ////”அறிந்து என்ன செய்யப் போகிறாய்?”////

    ////“வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்?”////

    //// “இந்த உலகத்திலேயே மிகப் பெரிய குற்றம் எது தெரியுமா?”////

    /////“சிகரத்தைத் தொடும் திறமை உள்ளவன் சராசரியாக இருந்து சாவது தான் உலகத்திலேயே அவன் செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றம்.”////

    ////”நல்ல சுத்தமான சாத்வீக மன அலைகளில் நீங்கள் இருந்திருந்தால் அந்தச் சிங்கம் பாய்ந்தே வந்திருக்காது. தவறான மன அலைகளில் சிங்கத்தை அப்படி வரவழைத்துப் பின் தடுத்து நிறுத்த அபூர்வ சக்தியைச் செலவழிப்பதில் பெருமை என்ன இருக்கிறது?”/////

    ////மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம். அற்ப விஷயங்களில் அதை வீணாக்கி விடாதே”////

    ///// ”இனி நீ என்ன படித்தாலும் ஒரே உண்மையை வேறு வேறு வார்த்தைகளில் படிப்பது போலத் தான். அதனால் நீ போகலாம். கடைசியாக உனக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனை நிர்ணையிப்பது அவனுக்கு என்ன தெரியும் என்பதல்ல, அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனை நிர்ணயிக்கிறது.////

    எப்படிப்பட்ட வாக்கியங்கள், எவ்வளவு ஆழமான விஷயங்கள் ஆன்மீக வழியில் முயன்று பார்த்தவர்களுக்கு தான் இந்த வார்த்தைகளின் உண்மையான விளக்கம் விளங்கும். இந்த வாக்கியங்களின் மூலம் உங்களின் ஆன்மீக முதிர்ச்சி வெளிப்படுகிறது.

    உங்களிடம் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கிறது. உங்களை சந்திக்க மிகுந்த ஆவலாக இருக்கிளது சந்திக்க முடியுமா சார். தியானத்தில் உங்கள் உதவி கிடைக்குமா? வழிகாட்டும் குரு போன்ற உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் நெத்தியடியாக நெஞ்சில் பசுமரத்தாணி போன்று பதிகிறது.

    வாழ்த்துகள் சார். தமிழ் வலைதளங்களில் இப்படிப்பட்ட விஷயங்கள் அடங்கிய பதிவுகளை நான் இதுவரை படித்ததில்லை. தொடர்ந்து வழிகாட்டுங்கள்

    நன்றி.

    ReplyDelete
  7. /// சிகரத்தைத் தொடும் திறமை உள்ளவன் சராசரியாக இருந்து சாவது தான் உலகத்திலேயே அவன் செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றம் ///

    I hope this lines could change my life ... Thanks for a thought provoking words Ganeshan Sir.

    ReplyDelete
  8. மிகவும் அருமை! கதை விறுவிறுப்புடன் செல்கிறது.

    ReplyDelete
  9. ராமசுப்பிரமணியன்June 15, 2013 at 7:17 AM

    கணேசன் சார், வெறும் கற்பனையில் இப்படிப்பட்ட வார்த்தைகள் கதையில் வந்து விழாது. சித்தர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. மணி என்பவர் சொன்னது போல இந்த அத்தியாயத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிரமாதம்.

    ReplyDelete
  10. This chapter has to be bookmarked. The best as far with a wealth of information... thanks Mr. Ganesan.

    ReplyDelete
  11. ”...மகாசயான உன தபட ெவ இக ேபாவைல. உசஇைசவாக அபவக எவஎைத  மக ேபாவைல. ரைன உட இ வர ேபாவைல.அ என ெத. ரைன சகளா உடாவைல. மதகளா தா உடாற…”
    உண்மைதான் மனதை சமநிலையில் வைத்து அமைதியாக இருந்தால் ப(ச)க்தியை உணரலாம்

    ReplyDelete