Monday, April 1, 2013

கீதை சொல்லும் தியான முறை!



கீதை காட்டும் பாதை  24

கீதை சொல்லும் தியான முறை

தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு விளக்குகிறார்:

“சுத்தமான இடத்தில் உறுதியான ஆசனம் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். அது அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்வில்லாமலும் இருக்க வேண்டும். அந்த ஆசனத்தின் மீது துணி, மான் தோல், தர்ப்பை பரப்பி அதன் மேல் அமர்ந்து கொண்டு மனத்தை ஒருமைப்படுத்தி, உள்ளத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி மனத்தைச் சுத்தம் செய்வதற்காக யோகத்தைப் பயில வேண்டும்.

உடம்பையும், தலையையும், கழுத்தையும் சமமாக அசைவில்லாமல் வைத்துக் கொண்டு, உறுதியோடு, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல், அமைதியான மனத்துடன், பயமற்றவனாக, பிரம்மச்சரிய விரதம் பூண்டவனாய், மனத்தை வசப்படுத்தி, என்னிடமே மனத்தைச் செலுத்தி, என்னையே குறிக்கோளாக யோகநிலையில் அமர வேண்டும்.

மனதைச் சுத்தம் செய்ய நம்மைத் தயார்ப்படுத்தும் தியான முறைக்கு முதலில் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அகத்தூய்மைக்குப் புறத்தூய்மை ஒரு ஆரம்பம். மனத்திற்கு நாம் தரும் ஒரு அறிவிப்பு.  செய்யப் போகிற தியானம் பவித்திரமானது, தெய்வீகமானது என்று சொல்லும் சூட்சுமமான செய்தி. மேலும் பூச்சிகள், எறும்புகள், புழுக்கள் போன்றவை இல்லாமல் இருக்கும் சுத்தமான இடம்  வலியுறுத்தப் படுகிறது. அதே போல உறுதியான ஆசனம் உறுதியான மனநிலைக்கான ஆயத்தம். உறுதியில்லாத ஆசனம் அடிக்கடி மனதின் கவனத்தை சிதறடிக்க வல்லது என்பதால் உறுதியான ஆசனம் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். அதிக உயரம், அதிக தாழ்வு இரண்டும் தியானத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார்.

துணி, மான் தோல், தர்ப்பை இந்த மூன்றும் சேர்ந்த இருக்கை எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் நீண்ட நேர தியானத்தில் அமர அந்தக் காலக் கட்டத்தில் சௌகரியமாகவும், உதவியாகவும்  இருந்திருக்கிறது என்பதால் ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்லி இருக்கிறார். அதற்கென்று நாமும் அப்படி இருக்கையை தயார்ப்படுத்திக் கொள்ள இக்காலத்தில் அலைய வேண்டியதில்லை. நீண்ட நேர தியானத்திற்கு சௌகரியமான, அசௌகரியப்படுத்தாத இருக்கை என்று பொருள் கொள்தல் போதுமானது.

அடுத்ததாக உடம்பை நேராக இருத்திக் கொண்டு அமர்வது மிக முக்கியம். பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு விறைப்பாக உட்கார்ந்து கொள்ள முற்படுகிறார்கள். அது தவறு. விறைப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து கொள்ள முடியாது. உடல் பழைய நிலைமைக்கு வர போராட ஆரம்பித்து விடும். உடல் தியானத்திற்கு அனுகூலமாக வேண்டுமே ஒழிய போர்க்கொடி உயர்த்தினால் தியானம் கைகூடாது. எனவே உடலை விறைப்பில்லாமல் இயல்பாக நேராக இருத்திக் கொள்ளப் பழகிக் கொள்வது முக்கியம்.

அதே போல மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டுஎன்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருப்பதையும் அப்படியே எடுத்துக் கொண்டு முயற்சித்தால் தலைவலி, தலைசுற்றல் போன்றவை வந்து விடக்கூடும். பகவத்கீதைக்கு சங்கரர் தரும் விளக்கத்தில் முழுக் கவனத்தையும் மூக்கின் நுனிக்கு வரச் சொல்கிறார். அதுவே சரியாகப் படுவதாக முயன்று பார்த்த அனுபவஸ்தர்களும் கருதுகிறார்கள்.

கண்களை எல்லா திசைகளிலும் அலைபாய விடக் கூடாது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது ஏன் என்பதை விளக்க வேண்டியதில்லை. கண் போகின்ற இடத்திற்குப் பின்னால் மனமும் போய் விடுகிறது. கண்ட காட்சிகளின் தன்மையில் லயிக்கும் போது மனம் தியான நிலையை விட்டு வெகுதூரம் சென்று விடும். பொதுவாகவே பார்வையை ஓரிடத்தில் நிறுத்த முடியாதவர்களுக்கு கவனத்தையும் குவிக்க முடிவதில்லை என்பது அனுபவ அறிவு. எனவே மனதை அலைபாயாமல் இருக்க பார்வையையும் அலைபாயாமல் வைத்திருத்தல் மிக முக்கியம்.

புலனடக்கம், மனத்தை வசப்படுத்துதல் பற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்து விட்டோம். அடுத்ததாக என்னிடமே மனத்தைச் செலுத்தி, என்னையே குறிக்கோளாக யோகநிலையில் அமர வேண்டும் ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதைப் பார்ப்போம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது அந்தப் பெயரைத் தரித்துக்கொண்டு இருக்கும் உருவத்தை என்று எண்ணுவதை விட எல்லாவற்றிற்கும் மூலமான சக்தியை என்று இதை எடுத்துக் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் இயங்குகிறதோ, எந்த சக்தி எல்லாவற்றையும் உருவாக்கி, காத்து, அழித்து பிரபஞ்சத்தை நடத்திக் கொண்டு இருக்கிறதோ அதில், அதன் தன்மையில், அதன் உண்மையில் அமைதியடைந்த மனம் லயிக்குமானால் அதனால் அறிய முடியாதது என்ன இருக்க முடியும்? உண்மையைத் தானாக இப்படி உணர முடிந்த பின் அடைய முடியாததும் என்ன இருக்க முடியும்? பின் அலைபாய மனதிற்கு முகாந்திரம் என்ன இருக்கிறது?

எனவே தான் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.
இந்த விதமாக மனத்தைக் கட்டுப்படுத்தி, எப்போதும் யோகநிலையில் இருக்கும் யோகியானவன் மோட்சத்தை இறுதியாகக் கொண்டதும் என்னிடமுள்ளதுமான சாந்தியை அடைகிறான்.

சாந்தி என்பது திருப்தியுடன், முழுமையான நிறைவுடன் சேர்ந்த அமைதி. அதை வேண்டித் தான், அதைத் தேடித்தான் மனிதன் ஆரம்பத்தில் இருந்தே ஓடிக் கொண்டு இருக்கிறான். அதுவே மோட்ச நிலையில் கிட்டக் கூடியது. அதுவே மூலசக்தியாம் இறைவனிடம் உள்ளது. அந்த நிலைக்கு தியானம் ஒருவனை அழைத்துச் செல்லும் என்கிறது கீதை.

இந்த யோகம் யாருக்கு அமையாது என்பதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

அதிகமாகச் சாப்பிடுபனுக்கு யோகம் கிட்டாது. ஒரேயடியாகச் சாப்பிடாதவனுக்கும் யோகம் கிட்டாது. அதிகமாகத் தூங்குபவனுக்கும் இல்லை, அர்ஜுனா, அதிகமாக விழிப்பவனுக்கும் இல்லை.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுஎன்கிறது ஒரு அருமையான பழமொழி. அமிர்தமே அளவை மீறும் போது நஞ்சு என்றால் மற்றவற்றைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாப்பாடு-பட்டினி, உறக்கம்-உறக்கம் இன்மை இவை எதிலுமே மிதமாக இருந்தால் தான் யோகம் சாத்தியமாகும் என்கிறது கீதை.

இதைத் தன் வாழ்க்கையில் உணர்ந்து தெளிந்த ஞானிகளில் மிக முக்கியமானவராக கௌதம புத்தரைச் சொல்லலாம். புத்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் பழங்கால ஏடுகள் அவரது ஞானத் தேடல் வழிகளை விவரித்திருக்கின்றன. ஞானத்தைத் தேடிய சித்தார்த்தன் எதை எல்லாம் அக்காலத்தில் உயர்வாகவும், சிறந்ததாகவும் சொல்லி இருந்தார்களோ அதை எல்லாம் முழுமையாக முயன்று பார்த்திருக்கிறார். மாதக் கணக்கில் பட்டினி கிடந்திருக்கிறார். உடலை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், உடல் பற்றிய பிரக்ஞை ஞானத்திற்கு எதிரானது என்ற சித்தாந்தத்தில் உறுதியாக பல வருடங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.   அவரது ஞானத் தேடல் முயற்சிகளின் போது ஒருசில சாதகர்களும் அவருடன் சேர்ந்து எல்லா வழிகளையும் பரிட்சை செய்து பார்த்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் இதில் எல்லாம் ஞானம் கிட்டாது என்பதைப் புரிந்து தெளிந்தார். முழுப்பட்டினி கிடத்தல், உடலை வருத்திக் கொள்ளல் ஆகியவற்றை அவர் கை விட்ட போது அவருடன் இருந்த சாதகர்களுக்கு அவர் மீது இருந்த மதிப்பு போய் விட்டது. கடுமையான முயற்சிகளைக் கைவிடுவதன் மூலமாக அவர் சுகவாழ்க்கைக்குத் திரும்புவதாக அவரை அவர்கள் குற்றம் சாட்டினர். அவரிடம் இருந்து விலகிப் போயினர்.

ஆனால் மிதமான அளவான வாழ்க்கைக்குத் திரும்பிய சித்தார்த்தன் அவர்கள் நினைத்தது போல தன் ஞானத் தேடலில் உறுதியைக் குறைத்துக் கொண்டு விடவில்லை.  உள் நோக்கிக் குவிந்தன அவரது கவனமும், முயற்சிகளும், பயிற்சிகளும். சித்தார்த்தன் புத்தராக முடிந்தது.  பிற்காலத்தில் அவரை விட்டு விலகிய அந்த சாதகர்களும் அவரது சீடர்களாக மாறினார்கள்.    

புத்தர் உணர்ந்த உண்மையைத் தான் முன்பே ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் சொல்லி இருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டே இருப்பவனுக்கும் சரி, சாப்பாட்டையே மறுப்பவனுக்கும் சரி சாப்பாடு பற்றிய எண்ணம் பிரதானமாகிறது. தூங்கிக் கொண்டே இருப்பவனுக்கும் சரி, தூக்கத்தை மறுப்பவனுக்கும் சரி தூக்கம் பற்றிய எண்ணம் மிக முக்கியமாகிறது.  எப்போது தூக்கம் அல்லது சாப்பாடு போன்ற விஷயங்கள் பிரதானம் ஆகின்றனவோ அப்போது யோகம் அல்லது ஞானம் பின்னுக்குத் தள்ளப் படுகிறது அல்லவா? பின் எப்படி யோகம் கைகூடும்?

பாதை நீளும்....

-          என்.கணேசன்



13 comments:

  1. நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக பயனுள்ள விளக்கங்கள் நன்றி கணேசன் சார்

    ReplyDelete
  3. கீதை சொல்லும் தியானம் பற்றிய சிந்தனைகள் பகிர்வுக்கு மிக நன்றி.

    ReplyDelete
  4. //கண் போகின்ற இடத்திற்குப் பின்னால் மனமும் போய் விடுகிறது. கண்ட காட்சிகளின் தன்மையில் லயிக்கும் போது மனம் தியான நிலையை விட்டு வெகுதூரம் சென்று விடும். பொதுவாகவே பார்வையை ஓரிடத்தில் நிறுத்த முடியாதவர்களுக்கு கவனத்தையும் குவிக்க முடிவதில்லை என்பது அனுபவ அறிவு. எனவே மனதை அலைபாயாமல் இருக்க பார்வையையும் அலைபாயாமல் வைத்திருத்தல் மிக முக்கியம்.// Yes Sir. It's a fact that our eyes are moving when we dream in sleep (REM sleep).

    Thanks!

    ReplyDelete
  5. மிகவும் தெளிவான, பயனுள்ள பதிவு ......இந்த பதிவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளாக நான் கருதுவது

    # ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது அந்தப் பெயரைத் தரித்துக்கொண்டு இருக்கும் உருவத்தை என்று எண்ணுவதை விட எல்லாவற்றிற்கும் மூலமான சக்தியை என்று இதை எடுத்துக் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் இயங்குகிறதோ, எந்த சக்தி எல்லாவற்றையும் உருவாக்கி, காத்து, அழித்து பிரபஞ்சத்தை நடத்திக் கொண்டு இருக்கிறதோ அதில், அதன் தன்மையில், அதன் உண்மையில் அமைதியடைந்த மனம் லயிக்குமானால்#

    ReplyDelete
  6. //துணி, மான் தோல், தர்ப்பை இந்த மூன்றும் சேர்ந்த இருக்கை எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் நீண்ட நேர தியானத்தில் அமர அந்தக் காலக் கட்டத்தில் சௌகரியமாகவும், உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதால் ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

    அதற்கென்று நாமும் அப்படி இருக்கையை தயார்ப்படுத்திக் கொள்ள இக்காலத்தில் அலைய வேண்டியதில்லை//

    மான் தோல் பயன்படுத்தினால் யோகம் அடைய முடியாது. ஜெயில் தான் அடைய முடியும்.

    நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். வாழ்த்துகள்

    ReplyDelete
  7. நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். வாழ்த்துகள்

    ReplyDelete
  8. Very apt explanation taking in to account current age...continue good work

    ReplyDelete
  9. kingakbar1@yahoo.comApril 11, 2013 at 8:33 PM

    vow i am understanding something from your writings,thanks

    ReplyDelete
  10. "கவனத்தை மூக்கினின் நுனியில் வைக்க வேண்டும்" என்ற வாக்கியத்திற்கு...சுவாமி யுக்தேஷ்வர் கிரி அவர்கள் "கவனத்தை மூக்கின் தொடக்கம்..அதாவது புருவ மத்தியில் வைக்க வேண்டும்" என்ற ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார்...

    ReplyDelete