அறிவார்ந்த ஆன்மிகம்-1
அணு குறித்து அறிவியல் ஆர்வம் காட்டியது சில நூறு வருடங்களாகத் தான்
என்றாலும் நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுவைப் பற்றி
அறிந்திருந்தனர். முதலில் நம் முன்னோர் சொன்னதையும் பிறகு இன்றைய விஞ்ஞானம்
சொல்வதையும் பார்ப்போம்.
ஜீவனின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர்
ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார்.
ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து
ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு
முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுவும் அணுவைப் பிளப்பது
போலத்தான். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.
(100 x 1000 x 100 000=100 000 00
000)
ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப்
பகுப்பது பற்றி திருமூலர் விவரிப்பதைப் பார்த்தால் நம் முன்னோர் அணுவைப் பிளப்பதை
மனக்கண்ணில் கண்டார்கள் என்றே தோன்றுகிறது. பாடல் இதோ-
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
திருமூலர் இன்னொரு பாடலில் அணுவில்
இறைவனும், இறைவனில் அணுவும் இரண்டறக் கலந்திருப்பதைப் பெரும்பாலோர் உணர்வதில்லை.
இணையில்லாத ஈசன் அப்படி பிரபஞ்சம் முழுதும் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார்.
அந்தப் பாடல் இதோ-
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அணுவை
ரூதர்ஃஃபோர்டு பிளந்து பார்த்த போது உள்ளே எலக்ட்ரான், நியூட்ரான், ப்ரோட்டான்
துகள்களும் பிரம்மாண்டமான வெட்டவெளியும் இருப்பதைக் கண்டார். அணுவின் உள்ளே துகள்கள் சில சமயங்களில்
துகள்களாகவும், சில சமயங்களில் அலைகளாகவும் மாறி பெரிய அளவில் சக்தி வெளிப்பாடுகள்
இருப்பதையும் கண்டார்.
அதன் பின் அணு ஆராய்ச்சிகள் மிகுந்த
ஆர்வத்துடன் உலக நாடுகளில் நடைபெறத் தொடங்கின.
1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப்
காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu
view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம்
: நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற
தலைப்பில் Main currents in Modern Thought என்ற
விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின்
நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள
இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.
1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.
1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.
அதில் அவர் குறிப்பிடுகிறார். ”எப்படி
இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே
செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியே தான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக்
காண்கிறது”
”பிறப்பும்,
இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம்
என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின்
பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு
வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic
dance). அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் காப்ரா.
‘நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே’ என்று கூறும்
அளவுக்கு, விஞ்ஞானமும் இந்திய ஆன்மிகமும் நெருங்கி
விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில்,
தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்போது செர்ன்(CERN)
என்று அழைக்கப்படுகிற அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தில் ஆறடி உயர
நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த நடராஜர் சிலை அருகில் ஒரு பலகையில் சிவன்
நடனத்துக்கும், அணுக்களின் நடனத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி காப்ரா எழுதிய
மேற்கண்ட வரிகளும் எழுதப்பட்டுள்ளன.
அணு பிளவிற்குப் பிறகு விஞ்ஞானிகள் அணுவை
மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித்
துறை உருவாகியது.
அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து
ஆராய முற்பட்டபோது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான
துகள்கள் என்று கண்டறியப்பட்டது. சிறு கல்,
மண், மேசை, கார், விமானம்,
பூமி, சந்திரன் சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள்
இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள்தான்
அடிப்படை என்று கண்ட போதும் விஞ்ஞானிகளுக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது.
இந்த 16 துகள்கள் மட்டும் பிரபஞ்சத்தைத்
தீர்மானித்து விட முடியாது என்று அவர்கள் நம்பினர். 16 துகள்களாலேயே எல்லாம் முழுமையடைந்து விட
முடியாது என்பதும் இது வரை கண்டதில் ஏதோ ஒன்று விடுபட்டுப் போகிறது என்றும்
அவர்கள் எண்ணினர். எல்லாவற்றையும் நிர்ணயிப்பதும் இயக்குவதுமான இன்னொரு முக்கிய துகள்
இருந்தால் மட்டுமே எல்லாமே சீராகவும், ஒழுங்காகவும் இயங்க முடியும் என்று நினைத்த
விஞ்ஞானிகளில் முதன்மையானவர் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ்
என்ற விஞ்ஞானி. அவர் இதை 1964 ஆண்டிலேயே தெரிவித்திருந்தார்.
அதை சமீபத்தில் தான் உண்மை என்று அறிவியல்
உலகம் உறுதி செய்தது. கடவுள் துகள் என்று பிரபலமாக சொல்லப்படுகிற ஹிக்ஸ்-போஸன்
என்ற உப அணுவை பல்லாண்டு ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
ஹிக்ஸ் போஸன் என்ற நிறைமிகு துகளின்
இருப்பும், அதன் இருப்பினால் மட்டுமே இந்தப்
பிரபஞ்சமும், உயிரினங்களும் கட்டமைக்கப் பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஜட
வஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த நிறை மிகு (அதாவது
ஆங்கிலத்தில் மாஸ் எனப்படும் நிறைக்குக் காரணமான) அமைந்துள்ளதால் ஹிக்ஸ் போஸன் துகளைக்
கடவுள் துகள் என்று அழைக்கின்றனர். (இதில் போஸன் என்ற பாதிப்பெயர் நம் இந்திய
விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களுக்கு உரித்தானது. அந்த உப அணு குறித்து
அவரும் முன்பே எழுதி இருந்தார் என்பதால் அவருக்கும் சமபங்கு அளித்து இந்தப் பெயர்
வைத்திருக்கின்றனர்).
இப்போது ”அவனன்றி ஒரு
அணுவும் அசையாது”
என்று நம் முன்னோர் சொல்லி
இருப்பதையும், அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய ”பரமகுருவாய்,
அணுவில் அசைவாய்” என்ற வரிகளையும் நினைத்துப் பாருங்கள்.
அணுவில் இருந்து அண்டம் வரை அனைத்தையும் இயக்கும் ஆண்டவன் பற்றி சூட்சுமமாக நம்
முன்னோர் அறிந்திருந்திருந்ததன் அறிகுறியே இது என்று கணிக்கத் தோன்றுகிறது அல்லவா?
- - என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 12-03-2013
விளக்கங்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக அருமையான தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி.
ReplyDeleteஅருமையான விளக்கம், மிக்க நன்றி.
ReplyDeleteநம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த ஆண்மீகத்திற்கும், தற்போது நடைமுறையில் இருக்கும் ஆண்மீகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம்/இடைவெளி இருப்பதை உணரமுடிகிறது. உங்கள் பார்வையில் இதற்கு என்ன காரணம் என்று நிணைக்கிறீர்கள்?
மிக்க நன்றி
ReplyDeleteVery nice article. You are explaining subjects like Physics too easily in commonman terminology. Thank you for the article. What was the reference book for this?
ReplyDeletesuper
ReplyDelete