Thursday, March 28, 2013

பரம(ன்) ரகசியம் - 37





ந்த அனாதைக் குழந்தைகளுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த ஈஸ்வர் தற்செயலாகத் தான் ஜன்னல் வழியாக அந்த நபரைப் பார்த்தான். ஐந்தடிக்கும் குறைவான உயரம், குடுமி, வேட்டியைக் கச்சை கட்டி தோளில் ஒரு துண்டு போட்டுக்கொண்டு பிள்ளையார் சிலைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் அந்த நபர் ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போலத் தான் ஆரம்பத்தில் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அந்த நபரின் முகத்தில் தெரிந்த சிரிப்பும், கையை ஆட்டிய விதமும் அது மந்திரம் சொல்வதல்ல, எதையோ பேசிக் கொண்டு இருப்பது என்று பின்பு தான் அவனுக்குப் புரிய வைத்தது.

அன்பாலயம் நிர்வாகியை அழைத்து ஈஸ்வர் கேட்டான். “அது யார்? அந்த வினாயகருக்குப் பூஜை செய்பவரா?

அவர் ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு சொன்னார். “யார்னு தெரியலையே. பிள்ளையாருக்கு பூஜை செய்ய இங்கே ஆள் எல்லாம் இல்லை. எங்கள்லயே யாராவது ஒருவர் பூஜை செய்வோம் அவ்வளவு தான்...

விஷாலியும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அவளுக்கும் அந்தக் காட்சி வித்தியாசமாக இருந்தது. சிறிது கவனித்து விட்டுப் புன்னகையுடன் சொன்னாள். வினாயகருக்கு ஃப்ரண்ட் போல இருக்கு. ஏதோ ஆள் கிட்ட பேசற மாதிரியே பேசறார்”.

ஈஸ்வருக்கு ஏனோ அந்த நபரிடம் சென்று பேசத் தோன்றியது. அவன் வெளியே வர விஷாலியும், நிர்வாகியும் கூட வெளியே வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சில பிள்ளைகளும் வெளியே வந்தார்கள்.

தனித்து போரடித்துப் போய் உட்கார்ந்திருந்த பிள்ளையாருக்குப் பேச்சுத் துணை போல உட்கார்ந்திருந்த கணபதி திடீர் என்று ஆட்கள் வருவதைப் பார்க்கவே அவசர அவசரமாக எழுந்து நின்றான். கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கிக் கொள்ளாமல் உள்ளே வந்ததற்கு அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயம் அவனுக்குள் எழுந்தது.

கணபதி உடனே மன்னிப்பு கேட்டுக் கொண்டான். “மன்னிச்சுக்கோங்க. நான் இந்த வழியா கார்ல பிரயாணம் செய்துகிட்டு இருந்தேன். இங்கே வர்றப்ப கார் ரிப்பேர் ஆயிடுச்சு. மெக்கானிக்கை கூட்டிகிட்டு வர டிரைவர் போயிருக்கான். பிள்ளையாரைப் பார்த்தவுடனே சும்மா கார்ல தனியா உட்கார்றதுக்குப் பதிலா இவர் கூடயாவது பேசிகிட்டு இருக்கலாமேன்னு இங்கே வந்தேன். அவ்வளவு தான்...

கார்ல தனியா உட்கார்றதுக்குப் பதிலா இவர் கூடயாவது பேசிகிட்டு இருக்கலாமேன்னு இங்கே வந்தேன்என்ற வார்த்தைகள் ஈஸ்வரை மிகவும் கவர்ந்தன. இறைவனுடன் பேச முடிந்த ஆட்களை அவன் இது வரை பார்த்தது இல்லை. சொன்னவனின் முகத்தில் தெரிந்த வெகுளித் தனமும், பேச்சில் தெரிந்த கள்ளங்கபடமற்ற தன்மையும் நிஜமாகவே அவனால் இறைவனுடன் பேச முடியும் என்ற எண்ணத்தை ஈஸ்வர் மனதில் ஏற்படுத்தின.

ஈஸ்வர் கேட் வழியாகப் பார்த்த போது அவன் கார் அருகே இன்னொரு கார் இருப்பது தெரிந்தது. புன்னகையுடன் கணபதியிடம் அவன் கேட்டான். “இது தான் உங்க காரா?

கணபதி  கலகலவென சிரித்தான். “என் கிட்ட கார் எல்லாம் இல்ல. கடவுள் தந்த கால் மட்டும் தான் இருக்கு. இது ஒரு புண்ணியவான் தந்து ஒரு கோயிலுக்குப் போயிட்டு வர அனுப்பினது.... என்னவோ ரிப்பேராயிடுச்சு...

கடவுள் தந்த கால் மட்டும் தான் இருக்கு என்று தன் வறுமையை எந்தத் தயக்கமும் இல்லாமல் சிரித்தபடி சொன்ன கணபதியை ஈஸ்வருக்குப் பிடித்துப் போயிற்று. இல்லாமையை இப்படிச் சொல்ல எத்தனை பேரால் முடியும்?

கணபதிக்கு ஈஸ்வரையும், விஷாலியையும் பார்த்த போது சினிமா நடிகர்கள் போலத் தோன்றியது. “நீங்க சினிமாக்காரங்களா?என்று ஈஸ்வரிடம் கேட்டான்.

இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்ன ஈஸ்வர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டான். “நான் ஈஸ்வர். அமெரிக்கால இருக்கேன். மனோதத்துவ துறையில் உதவிப் பேராசிரியராய் இருக்கேன். இவங்க விஷாலி. ஃபேஷன் டிசைனராய் இருக்காங்க. சமூக சேவகியும் கூட... நீங்க?

நான் கணபதி. ஒரு கிராமத்துல சின்ன பிள்ளையார் கோயில்ல பூசாரியா இருக்கேன்... உங்களுக்கு இந்தியால யார் இருக்காங்க?

“அப்பாவோட அப்பா இருக்கார்....

“தாத்தான்னு சொல்லுங்க

ஈஸ்வர் சொல்லவில்லை. பேச்சுக்காகக் கூட பரமேஸ்வரனை தாத்தா என்று அவன் அழைக்காததை விஷாலி கவனித்தாள். இவனை விரோதித்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் மன்னித்து விட மாட்டான் என்பது புரிந்தது.  

நீங்க எந்தக் கோயிலுக்குப் போய்ட்டு வரக் கிளம்பினீங்க?என்று ஈஸ்வர் பேச்சை மாற்றினான்.

“பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஒன்னு நூறு மைல் தொலைவுல இருக்கு. அங்கே போகத் தான் கிளம்பினோம். என்னை தற்காலிகமா வேறொரு இடத்துல பூஜை செய்யக் கூப்பிட்டாங்கன்னு அங்கே தான் இப்ப பூஜை செய்துகிட்டு இருக்கேன்.... என் பிள்ளையாரும் இப்படித் தான் லட்சணமா இருப்பார்... இவரைப் பார்த்தவுடனே அவர் ஞாபகம் எனக்கு வந்துடுச்சு...சொல்லும் போதே கணபதி குரலில் ஏக்கம் தெரிந்தது.

ஈஸ்வர் கணபதியின் பாசத்தை ரசித்தான். இந்தக்காலத்தில் கடவுள் கோரிக்கைகளை நிறைவேற்றும் சக்தியாகத் தான் பார்க்கப்படுகிறார் என்பதை அவன் அறிவான். அவர் இப்படி நேசிக்கப்படுவது அபூர்வம் தான். அந்தப் பிள்ளையார் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று புன்னகையுடன் நினைத்தவனாய் கேட்டான். “நீங்க இப்ப பூஜை செய்யப் போனதும் பிள்ளையாருக்குத் தானா?

“இல்லை.. அவரோட அப்பாவுக்கு... அவரும் நல்ல மாதிரி...

ஈஸ்வர் புன்னகை மேலும் விரிந்தது. கணபதிக்கு குருஜி ரகசியம் காக்கச் சொன்னது நினைவுக்கு வர மேற்கொண்டு தகவல்களை இத்தனை பேர் மத்தியில் சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. அவன் அன்பாலயம் பற்றி விசாரித்தான். அது அனாதை ஆசிரமம் என்பதையும் ஈஸ்வர் பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் அனாதைக் குழந்தைகள் என்பது தெரிந்த போது அவன் கண்களில் நீர் கோர்த்தது.

ஈஸ்வர் அந்த விழிகளின் ஈரத்தைக் கவனித்தான். அவனுக்கு கணபதியை மேலும் அதிகமாக பிடித்தது. இன்றைய உலகத்தின் சுயநலம், பேராசை, அலட்சியம் போன்றவைகளின் தாக்கம் சிறிதும் இல்லாமல் இத்தனை வெள்ளந்தியாக ஒரு மனிதன் இருக்க முடிவது சாத்தியம் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

அன்பாலயம் நிர்வாகியும் கணபதியால் கவரப்பட்டார். அவர் கணபதியை உள்ளே அழைக்க கணபதியும் அவர்களுடன் உள்ளே போனான். சிறிது நேரத்திலேயே ஈஸ்வரும், அவனும் மனதளவில் மிக நெருங்கி விட்டார்கள். கணபதி ஈஸ்வரை அண்ணா என்று பாசத்தோடு அழைக்க ஆரம்பித்து விட ஈஸ்வரும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு அவனுடன் இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். அவனும் கணபதியை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தான்.

பேச்சின் போது கணபதியின் குடும்ப சூழ்நிலைகளும் தெரியவர ஈஸ்வருக்கு அப்பாவின் நினைவு நாளில் அவனுக்கு ஏதாவது நல்லதாய் வாங்கித் தர வேண்டும் என்று தோன்றியது. அன்பாலயத்தின் எதிரிலேயே ஒரு ஜவுளிக் கடை இருந்ததைப் பார்த்தது ஈஸ்வருக்கு நினைவு வந்தது. ஆனால் அவன் தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற தயக்கமும் அவனுக்கு இருந்தது. அனாதைகளுக்கு இணையாக நினைப்பதாக அவன் மனம் சங்கடமடைந்து விடக் கூடாது என்று ஈஸ்வர் நினைத்தான்....

கணபதி அவனிடம் கேட்டான். நீங்க எத்தனை நாள் இந்தியால இருப்பீங்க அண்ணா?

“ஒரு மாச லீவுல வந்திருக்கேன் கணபதி. அதுக்குள்ளே போயாகணும்...

முடிஞ்சா எங்க கிராமத்துக்கு ஒரு தடவை வாங்க. எங்க பிள்ளையாரைப் பாத்துட்டுப் போங்க. எங்க கிராமம் ரொம்ப தூரம் இல்லை. பக்கம் தான். அதுவும் உங்க மாதிரி கார் இருக்கிறவங்களுக்கு வர்றது கஷ்டமே இல்லை.

ஈஸ்வர் புன்னகைத்தான். டைம் கிடைக்கிறது கஷ்டம் கணபதி. பார்க்கிறேன். ஒரு வேளை உன்னை மறுபடி சந்திக்க முடியாமயும் போகலாம். என் ஞாபகார்த்தமா உனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தா தப்பா நினைக்க மாட்டியே கணபதி...

உங்க அன்பே போதும்ணா. நான் ஞாபகார்த்தமா அதையே வச்சுக்குவேன். வேற ஒன்னும் வேண்டாம்...

ஒரு அண்ணா தம்பிக்கு எதாவது வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறது தப்பா கணபதி. நீ வேண்டாம்னு சொல்லறதைப் பார்த்தா என்னை வேற மனுஷனா நினைக்கிற மாதிரியல்ல தோணுது...

கணபதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் தர்மசங்கடத்துடன் ஈஸ்வரைப் பார்த்தான்.

ஈஸ்வர் தொடர்ந்து கேட்டான். “டிரஸ் வாங்கித் தரட்டா. எதிரிலேயே ஒரு ஜவுளிக்கடை இருக்கு.

டிரஸ் எல்லாம் எதுக்குண்ணா. என் கிட்ட தேவையான அளவு இருக்கு. நாலு வேஷ்டி நாலு துண்டு இருக்கு. அதுக்கும் மேல என்ன வேண்டும் சொல்லுங்க பார்க்கலாம்... சட்டை நான் போட்டுக்கறதே அபூர்வம்...

நாலு வேஷ்டி நாலு துண்டுஎன்பதே அதிகம் என்பது போலப் பேசிய கணபதியை அதிசயப் பிறவியைப் பார்ப்பது போல விஷாலி பார்த்தாள். ஈஸ்வர் விடாப்பிடியாக கணபதியை எதிரில் இருந்த ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றான். விஷாலி அன்பாலயத்திலேயே இருக்க ஈஸ்வரும், கணபதியும் மட்டும் எதிரில் இருந்த ஜவுளிக்கடைக்குப் போனார்கள்.  கணபதி சற்று தயக்கத்துடன் தான் போனான்.

அந்த ஜவுளிக்கடை பெரிதாக இருந்தது. வாடிக்கையாளர்கள் யாரும் இருக்கவில்லை. ஈஸ்வர் பட்டுத் துணிகள் பகுதிக்கு கணபதியை அழைத்துச் சென்று நல்ல பட்டு வேட்டி ஒன்று கேட்க கணபதி “ஐயோ பட்டு வேஷ்டி எல்லாம் வேண்டாண்ணா.....என்று ஆட்சேபித்தான்.

நீ கொஞ்சம் சும்மா இரு கணபதிஎன்று ஈஸ்வர் சொல்ல கணபதி தர்மசங்கடத்துடன் கைகளைப் பிசைந்தான். ஆனால் எடுத்துப் போட்ட வெண் பட்டு வேட்டி ஒன்று அவன் மனதை மிகவும் கவர்ந்தது.  கோயிலில் பிள்ளையாருக்கு இருக்கும் ஒரே பட்டுத்துணி மிக நைந்த நிலையில் இருப்பது நினைவுக்கு வந்தது. இதை பிள்ளையாருக்கு உடுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

அதைக் கவனித்த ஈஸ்வர் கேட்டான். என்ன விஷயம்

இது எங்க பிள்ளையாருக்கு நல்லாயிருக்கும்என்று கணபதி புன்னகையுடனேயே சொன்னான்.

“அப்படின்னா இதுல ரெண்டு பேக் பண்ணிடுங்கஎன்று ஈஸ்வர் சொல்ல அந்தப் பட்டு வேட்டியின் விலையைப் பார்த்து மலைத்துப் போன கணபதி மறுத்தான். “அண்ணா ஒன்னு போதும். அந்தக் கணபதிக்கு வாங்கிக் கொடுத்தா இந்தக் கணபதிக்கு வாங்கிக் கொடுத்த மாதிரி தான்.

பரவாயில்லை. ரெண்டு கணபதிக்கும் இருக்கட்டும். எங்கப்பாவோட நினைவு நாள்ல நான் கடவுளை மறந்துட்டேன். நீ ஞாபகப் படுத்திட்டே....

கார் டிரைவருக்குப் போன் கால் வந்தது. உனக்கு அறிவு இருக்கா. எங்கே இருக்கே நீ...

“நம்ம கார் ரிப்பேர் ஆயிடுச்சுங்கய்யா. மெக்கானிக் வேற ஒரு வண்டிய ரிப்பேர் பண்ணிட்டு இருக்கான். அதை முடிச்சவுடனே அவனைக் கையோட கூட்டிகிட்டு போறதுக்காக நான் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். ஏன் ஐயா?

கணபதியை அந்த ஈஸ்வர் கிட்டயே சேர்த்துட்டு ஏன்னா கேட்கறே?

நீங்க சொல்றது எனக்கு புரியலைங்களே ஐயா. கணபதி கார் ரிப்பேர் ஆன இடத்துக்குப் பக்கத்துல இருந்த பிள்ளையார் சிலை கிட்ட இருக்காரு

முட்டாள். நீ கார் ரிப்பேரே பண்ண வேண்டாம். வேற எதாவது காரை எடுத்துட்டாவது கிளம்பு.  முதல்ல அவனை அங்கே இருந்து கூட்டிகிட்டுப் போ.... கணபதியும், ஈஸ்வரும் கார் ரிப்பேர் ஆன இடத்துக்கு எதிர்ல இருக்கற ஜவுளிக்கடையில இருக்காங்க. ஓடு...

ணபதிக்கு பட்டு வேட்டி அல்லாமல் வேறு இரண்டு நல்ல காட்டன் வேட்டிகள், ஒரு சட்டை, இரண்டு துண்டுகள் எல்லாம் வாங்கிக் கொடுத்த ஈஸ்வரை கண்கள் கலங்க அவன் பார்த்தான். அவனுக்குப் பேச்சே வரவில்லை.  ’யாரிவன்? பார்த்த சிறிது நேரத்திலேயே இப்படி அன்பு மழை பொழிகிறானே? நிஜமாகவே எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் கூட இப்படி இருக்க முடிவது சந்தேகம் தானே? இந்தக் கடனை நான் எப்படித் தீர்ப்பேன்?

ஈஸ்வர் கேட்டான். “போகலாமா கணபதி?

கணபதி தலையை மட்டும் அசைத்தான். ஈஸ்வர் வாங்கிக் கொடுத்திருந்த உடைகள் இருந்த பை அவன் கையில் மனதைப் போலவே கனத்தது.  இருவரும் வாசலை நோக்கி நடக்க இருவருக்கு இடையில் யாரோ ஒருவர் நெருங்கினார். வழிக்கு வேண்டி இருவரையும் விலக்குவது போல அவர் இருவரையும் தொட்டார். இருவருமே மின்சாரம் உடம்பில் பாய்ந்தது போல் உணர்ந்தார்கள். சில வினாடிகள் மூவருக்கும் இடையே மின்சாரப் போக்குவரத்து நீடித்தது. ஈஸ்வரும் கணபதியும் உடல் நடுங்க நடுவே வந்த நபர் சாதாரணமாக நின்றார். அவர் தன் கைகளை அவர்கள் உடலில் இருந்து விலக்கிய போது அவர்கள் தங்களையும் அறியாமல் விலகி தள்ளிப் போனார்கள்.

அந்த நபர் கணபதி பக்கம் திரும்பவேயில்லை. ஆனால் ஈஸ்வர் பக்கம் திரும்பி லேசாகப் புன்னகைத்து விட்டுப் போனார். அவர் கண்களில் அக்னியைப் போன்றதொரு ஒளி தோன்றி மறைய ஈஸ்வர் தன் கண்களை நம்ப முடியாமல் பெரும் திகைப்புடன் அவரைப் பார்த்தான். போகும் அவரை ஓடிப் போய் பிடித்துக் கொள்ள ஈஸ்வரின் அறிவு அலறியது. ஆனால் சிலை போல அவனால் நிற்கத் தான் முடிந்ததே ஒழிய இம்மியும் நகர முடியவில்லை. அவன் நகர முடிந்த போது அந்த நபர் மறைந்து போயிருந்தார்.

கணபதி திகைப்புடன் ஈஸ்வரிடம் சொன்னான். ஏதோ கரண்ட் பாஸான மாதிரி இருந்துச்சு.

மின்சாரம் பாய்ந்த அனுபவம் தன்னுடையது மட்டுமல்ல என்பது உறுதியாகத் தெரிந்ததும் ஈஸ்வர் தெருவுக்கு ஓடிப் பார்த்தான். அந்த நபர் இரு பக்கமும் தென்படவில்லை.

மறுபடியும் கடைக்குள் ஓடி வந்தவன் கடைக்குள் இருந்த ஊழியர்களைக் கேட்டான். “இப்ப ஒருத்தர் போனாரே, யார் அவர்?

அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேறொரு நபர் இருந்ததையே கவனிக்கவில்லை. பார்த்த நபரும் ஈஸ்வர் கணபதிக்கு நடுவில் அந்த நபர் சென்ற போது தான் பின்னால் இருந்து பார்த்திருந்தார். அந்த நபர் எப்போது உள்ளே வந்தார், எப்படி வந்தார், எப்படி அவர்கள் இருவருக்கும் பின்னால் போனார் என்பது அந்த ஊழியருக்கும் தெரியவில்லை.

கடை முதலாளி கேட்டார். “உங்க பர்ஸ் எதுவும் காணாமல் போகலையே

ஈஸ்வர் இல்லை என்றவுடன் அவர் ஆர்வம் குறைந்து போய் கல்லாவில் அமர்ந்தபடியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். கணபதி என்ன நடந்தது என்பதை இன்னும் ஜீரணிக்க முடியாமல் அப்படியே சிலை போல நின்றான். ஈஸ்வர் தான் பார்த்ததை கணபதியிடம் கூட சொல்லவில்லை. அவனும் திகைப்பும் அதிர்ச்சியும் குறையாமல் அப்படியே நின்றான்.  அந்த மர்ம நபரைக் கடைசி நேரத்தில் கவனித்த அந்த ஊழியர் அந்த நபர் உள்ளே வந்ததை எப்படி அனைவரும் பார்க்கத் தவறி விட்டார்கள் என்று குழம்பிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் கார் டிரைவர் ஓடி வந்தான். சாமி இங்கேயா இருக்கீங்க. வாங்க போகலாம் நேரமாச்சு

கார் சரியாயிடுச்சா?கணபதி கேட்டான்.

“இல்லை. அது மெக்கானிக் வந்து பார்த்துக்குவான். நான் வேற கார் கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு சாயங்கால பூஜைக்குள்ளே வரணுமே... அதான்...

கணபதி ஈஸ்வரிடம் விடை பெற்றான். அண்ணா ரொம்ப நன்றி. இத்தனை வாங்கித் தந்திருக்கீங்க. திருப்பித் தர என் கிட்ட எதுவுமே இல்லை....

என்னை ஞாபகம் வச்சிரு கணபதி. அப்பப்ப உன் பிள்ளையார் கிட்ட என்னை கவனிச்சுக்கச் சொல்லு. அது போதும்.

அன்பு நிறைந்த கணபதி தலையாட்டினான். அவன் எதோ சொல்ல வந்தான். ஆனால் கார் டிரைவர் பேச விடாமல் அவனை இழுக்காத குறையாக “சாமி நேரமாச்சு.  அனுமார் கோயிலை மத்தியானம் சாத்திடுவாங்க...என்று சொல்ல ஈஸ்வர் கணபதியைக் கைகுலுக்கி அனுப்பி வைத்தான். அப்போது இருவருக்கும் இடையே முன்பளவு இல்லாவிட்டாலும் லேசான மின்சாரம் மறுபடியும் பாயந்தது. இருவரும் திகைத்தனர். ஆனால் கணபதி வாய் விட்டு எதுவும் சொல்வதற்கு முன் கார் டிரைவர் அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.

கணபதி போகும் போது திரும்பிப் பார்த்துக் கொண்டே சொன்னான். சரி கிளம்பறேன்ணா. அண்ணி கிட்டயும் சொல்லிடுங்க

அவன் சொன்னது உடனடியாக ஈஸ்வரின் மூளைக்கு எட்டவில்லை. அவன் சிந்தனை எல்லாம் இப்போதைய மின் அதிர்வை சுற்றியே இருந்தது. அந்த மர்ம நபர் சித்தராகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. அவர் இருவரையும் தொட்ட போது ஏதோ இனம் புரியாத ஒன்றை இருவருக்கும் ஒட்ட வைத்து விட்டுப் போனது போல் அவனுக்குத் தோன்றியது. அது தான் இப்போதும் அவர்களிடையே மின் அதிர்வுகளை ஏற்படுத்துகிறதோ?

நடந்தது எதுவும் கனவல்ல என்று ஈஸ்வர் ஓரிரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. திகைப்புடனேயே அவன் ஜவுளிக்கடையை விட்டு வெளியே வந்த போது கணபதி முதலில் வந்த காரும் காணவில்லை. கணபதியும் போய் விட்டிருந்தான்.
         
ஈஸ்வருக்கு இந்த சிவலிங்க விஷயத்தில் தான் அறியாமலேயே வேறு விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.  இத்தனை நாட்கள் திரும்பத் திரும்ப சிவலிங்கம் தான் காட்சி அளித்தது என்றால் இப்போது அந்த சித்தரும் காட்சி அளித்து விட்டுப் போய் இருக்கிறார்.... அவர் தொட்டதன் பாதிப்பை நினைக்கையிலேயே உடல் மறுபடி சிலிர்த்தது. ஆனால் அவர் எதற்கு கணபதியையும் தொட்டார் என்ற கேள்விக்கு அவனால் விடை காண முடியவில்லை. அவனுடன் கணபதி இருந்ததாலா அல்லது வேறு காரணம் இருக்குமா?....


(தொடரும்)

-          என்.கணேசன்



Monday, March 25, 2013

அணுவில் ஆண்டவன்!

அறிவார்ந்த ஆன்மிகம்-1

ணு குறித்து அறிவியல் ஆர்வம் காட்டியது சில நூறு வருடங்களாகத் தான் என்றாலும் நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுவைப் பற்றி அறிந்திருந்தனர். முதலில் நம் முன்னோர் சொன்னதையும் பிறகு இன்றைய விஞ்ஞானம் சொல்வதையும் பார்ப்போம்.

ஜீவனின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.
(100 x 1000 x 100 000=100 000 00 000)

ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றி திருமூலர் விவரிப்பதைப் பார்த்தால் நம் முன்னோர் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றே தோன்றுகிறது. பாடல் இதோ-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே

திருமூலர் இன்னொரு பாடலில் அணுவில் இறைவனும், இறைவனில் அணுவும் இரண்டறக் கலந்திருப்பதைப் பெரும்பாலோர் உணர்வதில்லை. இணையில்லாத ஈசன் அப்படி பிரபஞ்சம் முழுதும் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார். அந்தப் பாடல் இதோ-

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அணுவை ரூதர்ஃஃபோர்டு பிளந்து பார்த்த போது உள்ளே எலக்ட்ரான், நியூட்ரான், ப்ரோட்டான் துகள்களும் பிரம்மாண்டமான வெட்டவெளியும் இருப்பதைக் கண்டார்.  அணுவின் உள்ளே துகள்கள் சில சமயங்களில் துகள்களாகவும், சில சமயங்களில் அலைகளாகவும் மாறி பெரிய அளவில் சக்தி வெளிப்பாடுகள் இருப்பதையும் கண்டார்.

அதன் பின் அணு ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உலக நாடுகளில் நடைபெறத் தொடங்கின.

1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்ற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

அதில் அவர் குறிப்பிடுகிறார். எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியே தான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது

பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம் என்கிறார் காப்ரா.
நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றேஎன்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் இந்திய ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.  இப்போது செர்ன்(CERN) என்று அழைக்கப்படுகிற அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தில் ஆறடி உயர நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த நடராஜர் சிலை அருகில் ஒரு பலகையில் சிவன் நடனத்துக்கும், அணுக்களின் நடனத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி காப்ரா எழுதிய மேற்கண்ட வரிகளும் எழுதப்பட்டுள்ளன.

அணு பிளவிற்குப் பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித் துறை உருவாகியது.

அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து ஆராய முற்பட்டபோது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்பட்டது.  சிறு கல், மண், மேசை, கார், விமானம், பூமி, சந்திரன் சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள்தான் அடிப்படை என்று கண்ட போதும் விஞ்ஞானிகளுக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது.

இந்த 16 துகள்கள் மட்டும் பிரபஞ்சத்தைத் தீர்மானித்து விட முடியாது என்று அவர்கள் நம்பினர்.  16 துகள்களாலேயே எல்லாம் முழுமையடைந்து விட முடியாது என்பதும் இது வரை கண்டதில் ஏதோ ஒன்று விடுபட்டுப் போகிறது என்றும் அவர்கள் எண்ணினர். எல்லாவற்றையும் நிர்ணயிப்பதும் இயக்குவதுமான இன்னொரு முக்கிய துகள் இருந்தால் மட்டுமே எல்லாமே சீராகவும், ஒழுங்காகவும் இயங்க முடியும் என்று நினைத்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி. அவர் இதை 1964 ஆண்டிலேயே தெரிவித்திருந்தார்.

அதை சமீபத்தில் தான் உண்மை என்று அறிவியல் உலகம் உறுதி செய்தது. கடவுள் துகள் என்று பிரபலமாக சொல்லப்படுகிற ஹிக்ஸ்-போஸன் என்ற உப அணுவை பல்லாண்டு ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

ஹிக்ஸ் போஸன் என்ற நிறைமிகு துகளின் இருப்பும், அதன் இருப்பினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சமும், உயிரினங்களும் கட்டமைக்கப்  பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது.  ஜட வஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த நிறை மிகு (அதாவது ஆங்கிலத்தில் மாஸ் எனப்படும் நிறைக்குக் காரணமான) அமைந்துள்ளதால் ஹிக்ஸ் போஸன் துகளைக் கடவுள் துகள் என்று அழைக்கின்றனர். (இதில் போஸன் என்ற பாதிப்பெயர் நம் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களுக்கு உரித்தானது. அந்த உப அணு குறித்து அவரும் முன்பே எழுதி இருந்தார் என்பதால் அவருக்கும் சமபங்கு அளித்து இந்தப் பெயர் வைத்திருக்கின்றனர்).

இப்போது அவனன்றி ஒரு அணுவும் அசையாது”  என்று நம் முன்னோர் சொல்லி இருப்பதையும், அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளையும் நினைத்துப் பாருங்கள். அணுவில் இருந்து அண்டம் வரை அனைத்தையும் இயக்கும் ஆண்டவன் பற்றி சூட்சுமமாக நம் முன்னோர் அறிந்திருந்திருந்ததன் அறிகுறியே இது என்று கணிக்கத் தோன்றுகிறது அல்லவா?

-         -  என்.கணேசன் 
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 12-03-2013


Thursday, March 21, 2013

பரம(ன்) ரகசியம் - 36




ன்றெல்லாம் ஈஸ்வரின் நினைவில் விஷாலியே இருந்தாள். அவளுடன் இருந்த போது அவளைப் பார்த்த அளவு அவனுக்கு சலிக்கவில்லை. அவன் இப்படி ஒரு உணர்வை இது வரை உணர்ந்ததில்லை. விஷாலியிடம் விடை பெற்ற போது நீண்டகாலம் பழகிப் பின் பிரிவது போல அவனுக்குத் தோன்றியது.

அவள் மீதிருந்த நினைவுகளின் தாக்கத்தில் ஈஸ்வர் பக்கத்தில் இழவு வீட்டில் இருப்பது போல் இருந்த மகேஷின் முகபாவத்தைக் கவனிக்கவில்லை. அவன் என்றைக்குமே மகேஷை நல்ல சந்தோஷமான மனநிலையில் பார்க்காத காரணத்தால் அவனுடைய சவக்களைக்குப் பிரத்தியேக அர்த்தத்தை அவன் உணரவில்லை.

ஈஸ்வர் நிறைய அழகான பெண்களைச் சந்தித்திருக்கிறான். ஒருசிலர் அவன் மீது விருப்பமும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் அவன் மனதில் யாரும் இடம் பிடித்ததில்லை.  முதல் பார்வையிலேயே காரணம் புரியாமல் சிலிர்க்க வைத்ததில்லை.  விஷாலியுடன் பழகும் போது ஒரு அழகான இசை, சுகமான தென்றல், கவிதை போன்ற நளினம் – இது போல் எல்லாம் அவன் உணர்ந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய நல்ல மனது அவனை மிகவும் கவர்ந்தது. மிக நல்ல பெற்றோருக்குப் பிறந்து அவர்களால் வளர்க்கப் பட்ட அவன் அழகு, அறிவு, சாதனை, செல்வம், புகழ் இவை எல்லாவற்றையும் விட மனிதனுக்கு முக்கியமானது அவன் நல்லவனாக இருப்பதே என்று நம்பினான்.  அதனால் அத்தை சொன்னது போல அவள் ஸ்பெஷல் தான் என்று நினைத்தான். அவனையும் அறியாமல் அடிக்கடி அவன் உதடுகள் ஒரு ஆங்கிலக் காதல் பாடலை முணுமுணுத்தன.

அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவள் ஆனந்தவல்லி தான். மற்றவர்களைக் கூர்ந்து கவனித்து எடை போடுவதில் வல்லவளான அவளுக்கு ஈஸ்வர் வந்ததில் இருந்து அவனைக் கவனிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லாததால் விஷாலி வீட்டில் இருந்து அவன் வந்த சிறிது நேரத்திலேயே அது வரை இல்லாத ஒருவித சந்தோஷத்தை அவனிடம் பார்த்தாள். அவன் ஏதோ ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுக்க அவள் சந்தேகம் உறுதியாயிற்று.

“என்னடா ரொம்ப சந்தோஷமாய் இருக்கிற மாதிரி இருக்கு

கிழவியிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல் இருக்கிறதே என்று நினைத்தவனாய் ஈஸ்வர் சொன்னான். “நான் எப்பவும் மாதிரி தானே இருக்கேன்

இங்கே வந்ததுல இருந்து நீ பாடி நான் கேட்டதே இல்லையேடா. காதலாடா?

“பாடினா காதல்னு அர்த்தமா?

“உன்னை மாதிரி கடுகடுன்னு இருக்கறவன் பாடினா அப்படித் தான் அர்த்தம். இந்தியாவில நீ எந்தப் பொண்ணைக் காதலிச்சாலும் பரவாயில்லை. ஒரு வெள்ளைக்காரியையோ, ஒரு சைனாக்காரியையோ, ஒரு ஆப்பிரிக்காக்காரியையோ காதலிச்சு கல்யாணம் செய்துக்கறதை விட தேவலை.

ஏன் அவங்களுக்கெல்லாம் என்ன குறைச்சல்...

“பொறக்கற குழந்தை சுண்ணாம்பு வெள்ளையிலயோ, சப்பை மூக்காவோ, கருகருன்னோ பிறந்துடப் போகுது....

இந்தப் பாட்டிக்கு என்ன ஆயிற்று என்பது போல அவன் கிண்டலாகப் பார்த்தான். குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை கற்பனை பாய்ந்து விட்டதே என்று நினைத்தான். “அப்புறம் எப்படி பிறக்கணும்.?..

எனக்கு உன்னை மாதிரியே ஒரு குழந்தையைப் பெத்துக் குடுடா. அது போதும்

உங்க புருஷன் மாதிரியே நானிருக்கேன். என்னை மாதிரியே என் குழந்தையும் இருந்துட்டா இந்த வீட்டுல கார்பன் காப்பி நிறைய ஆயிடும்என்று ஈஸ்வர் சிரித்தான்.

நான் என் குழந்தைகள்ல ஒன்னாவது பார்க்க அவர் மாதிரி வேணும்னு நினைச்சேன். பிறந்தது ஒன்னு கூட அவர் மாதிரி இல்லை. பேரனும் அப்படி அமையில. கொள்ளுப்பேரன் நீ அப்படி இருக்கிறே. ஆனா சின்னதுல இருந்து உன்னைப் பார்க்க குடுத்து வைக்கல. எனக்கு சின்னக் குழந்தையில இருந்து பார்க்கணும்னு ஆசையா இருக்குடாஆனந்தவல்லி ஆத்மார்த்தமாகச் சொன்னாள்.

என்னவோ நான் கல்யாணம் செய்துட்டு இங்கேயே செட்டில் ஆயிடுவேன்கிற மாதிரி பேசறீங்க

நீ அமெரிக்காவுக்கு போனா நானும் அங்கேயே வந்துடறேன். எனக்கு எங்கேயானா என்ன?

ஈஸ்வருக்கு ஒரு கணம் அவள் சொன்னதெல்லாம் மனம் நெகிழ வைத்தது.  ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் “ஐயோ, இங்கேயே கண்ணைக் கட்டுது. அங்கேயுமா?என்று சொல்லியவன் இடத்தைக் காலி செய்தான். அங்கே மேலும் இருந்தால் அவன் காதலிப்பது யாரை என்று மெல்ல அவள் கேட்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம் என்ற பயம் அவனை முக்கியமாகப் பிடித்துக் கொண்டது.  

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த மகேஷ் மனதினுள் எரிமலையே வெடித்து விட்டது. அவன் காதலியை ஒரே நாளில் ஈஸ்வர் மாற்றியதுமில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வது வரை நினைக்க ஆரம்பித்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?

மறுநாள் ஈஸ்வர் மீனாட்சியின் காரில் தனியாகவே விஷாலி வீட்டுக்குச் சென்றான். போகும் போது அவன் மகேஷை வருகிறாயா என்று கூடக் கேட்கவில்லை. விஷாலியும் மகேஷிடம் போனில் கூட எதுவும் கேட்கவில்லை. அவர்கள் தனியாகச் செல்வது அவனுக்கு வேறு சில கற்பனை பயங்களை வேறு ஏற்படுத்தியது. பேச்சு மட்டுமல்லாமல் வேறு ஏதாவது அவர்களுக்குள் நிகழ்ந்து விடுமோ என்று பயந்தான். விஷாலி அந்த மாதிரி பெண் அல்ல. ஆனால் ஈஸ்வரை அவனால் நம்ப முடியவில்லை. அவன் அவளை ஹிப்னாடிசம் மாதிரி ஏதாவது செய்து வரம்புகளை மீறி விடுவானோ? அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவனுக்கு இது பெரிய விஷயமாகத் தெரியாது. மேலும் அவன் அழகாய் வேறு இருக்கிறான், அவளும் அவனிடம் மயங்கிப் போயிருக்கிறாள்.... மகேஷிற்கு இருப்பு கொள்ளவில்லை....

ஈஸ்வர் விஷாலி வீட்டுக்குப் போவதற்கு முன் ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோவுக்குப் போய் தன் பெற்றோரின் புகைப்படத்தை பெரிதாய் லேமினேட் செய்து தரக் கொடுத்து விட்டுச் சென்றான். மாலையே வேண்டுமென்று சொல்லி, கண்டிப்பாகக் கிடைத்து விடும் என்ற உத்திரவாதம் வாங்கிக் கொண்டு தான் கிளம்பினான்.   

வீட்டில் தென்னரசு ஏதோ வேலையாக வெளியே போயிருந்தார். விஷாலி ஈஸ்வருக்காக இனம் புரியாத பரபரப்பான ஆவலுடன் காத்திருந்தாள். வழக்கமாக தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தராதவள் இன்று கண்ணாடி முன் நிறைய நேரம் இருந்தாள். அவன் கார் ஹார்ன் சத்தம் கேட்ட போது அவள் இதயம் அநியாயத்திற்குப் படபடத்தது. “என்ன ஆச்சு எனக்கு.  டீன் ஏஜ் பொண்ணு மாதிரி நடந்துக்கறேன்”  என்று தன்னைத் தானே கோபித்துக் கொண்டு பரபரப்பு, படபடப்பு இரண்டையும் அடக்கிக் கொண்டு அவள் வெளியே வந்து ஈஸ்வரை வரவேற்றாள்.

அவளைப் பிரிந்து ஒரு நாள் கூட முழுமையாக முடியவில்லை என்றாலும் அவனுக்கும் அவளைப் பார்த்த போது நீண்ட காலம் பிரிந்து பின் சந்திப்பது போல மனம் குழந்தை போல குதூகலித்தது. இன்று அவள் அழகு மேலும் கூடி இருப்பது போல் பட்டது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார்கள். அந்த மௌனம் நிறைய பேசியது. மனங்கள் நேரடியாகப் பேசும் போது வார்த்தைகள் அனாவசியம் தானே?

எங்கே போகலாம் விஷாலி?

அன்பாலயம்கிற அனாதை ஆஸ்ரமத்திற்குப் போன் செஞ்சு நாம வர்றதா சொல்லி இருக்கேன்

“அங்கே எத்தனை குழந்தைகள் இருப்பாங்க விஷாலி?

“இருபத்தி ஒரு குழந்தைகள் இருக்காங்க

“அவங்களுக்குத் தர ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு போகலாமா?

ஒரு கடையில் அந்த அனாதைக் குழந்தைகளுக்குப் பரிசுகள் தேர்ந்தெடுக்கும் போது தான் அன்றைய தினம் அவனுடைய அப்பாவின் இறந்த நாள் என்று அவளிடம் தெரிவித்தான். சொல்லும் போதே அவன் முகத்தில் லேசாக சோகம் பரவியது. அவனது அழகான முகத்தில் சோகம் பரவுவதை அவளால் பார்க்க முடியவில்லை. அந்த நினைவு நாளை நல்ல தர்ம காரியங்களில் செலவழிக்கும் அவன் நல்ல மனது அவளுக்குப் பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்தால் அவனிடம் பிடிக்காத விஷயமே அவளுக்கு இருக்கவில்லை...

தந்தையின் நினைவில் ஆழ்ந்த அவனை ஆறுதல் படுத்தும் விதமாக அவன் தோளை அவள் தொட்டாள். அவளுடைய புரிதலிலும், கரிசனத்திலும் மனம் நெகிழ்ந்தவனாய் அவள் கையை அழுத்தி மௌனமாக அவன் நன்றி சொன்னான்.

அன்பாலயம் என்ற அந்த அனாதை இல்லத்தின் மெயின் கேட்டைக் கடந்தவுடன் வலது புறம் ஒரு அரசமரத்தின் அடியில் ஒரு வினாயகர் சிலை இருந்தது. விஷாலி ஒரு நிமிடம் நின்று அந்த வினாயகரை வணங்கி விட்டு ஈஸ்வரை இல்லத்துக்குள் அழைத்துச் சென்றாள்.

மூன்று வயதிலிருந்து பதினான்கு வயது வரை 21 குழந்தைகள் இருந்தார்கள். விஷாலி அடிக்கடி அங்கே போகிறவளாக இருந்ததால் குழந்தைகள் முகமலர்ச்சியோடு அவளை சூழ்ந்து கொண்டார்கள். ஈஸ்வரை அந்தக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய போது ஒரு ஏழு வயது சிறுவன் கேட்டான். “ஆண்ட்டி, இது தான் நீங்க கல்யாணம் செய்துக்கப்போற அங்கிலா?

அவன் எதனால் அப்படிக் கேட்டான் என்று தெரியவில்லை. விஷாலியின் முகம் சிவந்தது. ஈஸ்வர் அவள் வெட்கத்தை மனதினுள் ரசித்தான். அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் விஷாலி பேச்சை மாற்றினாள். அவள் இதற்கு முன் மகேஷோடு சில முறை வந்திருக்கிறாள். மகேஷிற்கு இது போன்ற இடங்களுக்கு வருவது பாவற்காயை பச்சையாகச் சாப்பிடச் சொல்வது போலத் தான் என்றாலும் அவளுக்காக ஆர்வத்துடன் வருவது போல் நடிப்பான். அங்கே இருக்கின்ற ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய் நகரும்...

ஆனால் ஈஸ்வர் அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து மிக சந்தோஷமாக இருந்தான். பரிசுப் பொருள்களை வாங்கும் போது அவர்கள் முகத்தில் தெரிந்த அளவற்ற மகிழ்ச்சி அவன் மனதை நெகிழ வைத்தது. அவர்களுடன் பேசினான், விளையாடினான், பாடினான்.... அவன் சிறிதும் கர்வம் இல்லாமல், அவர்களுடன் ஒன்றிப் போன விதம் விஷாலியை வியக்க வைத்தது.....

குருஜி காலையில் ஒன்பது மணிக்கு சிவலிங்கத்தை தரிசிக்க வருகிறார் என்பதால் கணபதியை அங்கிருந்து கிளப்பி மாலை வரை அப்புறப்படுத்தி வைப்பது என்பது முடிவெடுக்கப் பட்டது. முந்திய தினம் இரவே கணபதியிடம் வந்து ஒருவன் சொன்னான்.

“நாளைக்குக் காலைல பூஜை முடிந்த பிறகு ரெடியா இருங்க. நூறு மைல் தூரத்துல ஒரு சக்தி வாய்ந்த பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயில் இருக்கு. அங்கே உங்களைக்  கூட்டிகிட்டு போக குருஜி சொல்லி இருக்கார்

கணபதி ஆச்சரியத்துடன் கேட்டான். “ஏன்?

வந்ததுல இருந்து நீங்க ஒரே இடத்துல இருக்கறதால போரடிச்சுப் போய் இருக்கும்னு நினைச்சு சொல்றார்

“உங்களுக்கு எதுக்கு சிரமம். எனக்கு போரடிக்கலை. அதான் கூட சிவன் இருக்காரே

சிவனை நிஜமான ஒரு ஆள் போலப் பேசும் கணபதியைத் திகைப்புடன் பார்த்தவன் சொன்னான். குருஜி சொன்னதுக்கப்புறம் தட்ட முடியாது. நீங்க காலையில சீக்கிரம் பூஜையை முடிச்சுட்டு ரெடியா இருங்க

எத்தனை மணிக்கு பஸ்ஸு?

“பஸ்ஸா? குருஜி உங்களை ஏ.சி.கார்ல கூட்டிகிட்டு போகச் சொல்லி இருக்கார்

குருஜியின் அன்பு மழையில் கணபதி திக்குமுக்காடிப் போனான். இந்த ஏழைக்கு எதுக்கு ஏ.சி. கார்.....

ஏதோ ஒரு வேற்றுக் கிரகவாசி போல கணபதியைப் பார்த்து விட்டு மீதிப் பேச்சைக் கேட்க நிற்காமல் அவன் போய் விட்டான்.

மறு நாள் சிவனுக்குப் பூஜை செய்து விட்டு கணபதி சிவனிடம் விடை பெற்றுக் கொண்டான். “சரி, நான் பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசனம் செஞ்சுட்டு வந்துடறேன். சாயங்கால பூஜைக்குள்ளே வந்துடறேன்... வரட்டுமா?

கார் டிரைவரிடம் ஒரே ஒரு விஷயத்தை திருப்பித் திருப்பி சொல்லி இருந்தார்கள். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் மட்டுமல்லாமல் வழியில் இருக்கும் மற்ற கோயில்களுக்கும் கணபதியை அழைத்துப் போய் வரும்படியும், எந்தக் காரணத்தைக் கொண்டும் மாலை ஐந்து மணிக்கு முன் வேதபாடசாலைக்கு கணபதியை அழைத்து வந்து விடக்கூடாது என்றும் சொல்லி இருந்தார்கள்.

ஏ.சி காரில் போகும் போது கணபதி தன் தாயை நினைத்துக் கொண்டான். “பாவம் அம்மாவும் இப்ப கூட இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பா. அவ இது வரைக்கும் கார்ல போனதே இல்லை. அதுவும் ஏ.சி கார்ல எல்லாம் போனதே இல்ல. எப்பவாவது ஒரு தடவை கைக்காசு போட்டாவது இப்படி எங்கேயாவது கூட்டிகிட்டுப் போகணும். பாவம் கஷ்டத்துலயே அவ காலம்  போயிடுச்சு.... என்னை மாதிரி இல்லாம நல்ல புத்திசாலியாய் ஒரு பிள்ளைய பெத்திருந்தா நல்லா இருந்திருப்பாளோ என்னவோ!

காரில் அவன் தூங்கிப் போனான். திடீரென்று கார் நிற்க விழித்துக் கொண்டான். அதுக்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் வந்துருச்சா?

இல்லை சாமி. கார் ரிப்பேர் ஆயிடுச்சுஎன்ற டிரைவர் கீழே இறங்கி காரை பரிசோதனை செய்தான்... பிறகு வழிப்போக்கர் சிலரிடம் பக்கத்தில் வர்க்‌ஷாப் எங்கே இருக்கிறது என்று விசாரித்து விட்டு வந்தான்.

சாமி, ரெண்டு மைல் தூரத்துல ஒரு வர்க்‌ஷாப் இருக்காம்... நான் ஆட்டோல போய் அந்த மெக்கானிக்க கூட்டிகிட்டு வர்றேன். வெய்ட் பண்றீங்களா?

கணபதி தலையசைத்தான். ஆஞ்சநேயரை நான் அதிகமா கும்பிட்டதில்லை. அதனால நான் அங்கே வர்றது அவருக்குப் பிடிக்கலையோ?என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.

டிரைவர் ஆட்டோவுக்காக காத்திருக்கையில் கணபதி கார் ஜன்னல் வழியே பார்த்தான். அருகில் “அன்பாலயம்என்ற பெயர்ப்பலகையுடன் ஒரு கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் முன் வேறொரு கார் நின்றிருந்தது. கேட் சிறிது திறந்திருந்தது. திறந்திருந்த கேட் வழியே ஒரு அரசமரத்தடி பிள்ளையாரும் தெரியவே கணபதி புன்னகைத்தான்.

அந்த டிரைவரைக் கூப்பிட்டு சொன்னான். நீங்க போய்ட்டு வாங்க. நான் அந்த பிள்ளையார் பக்கத்துல உட்கார்ந்திருக்கேன்...

டிரைவரும் அந்தப் பிள்ளையாரைக் கவனித்து விட்டு “சரி சாமிஎன்றான்.

அவன் ஆட்டோ கிடைத்து அதில் ஏறிப் போக கணபதி அந்த கேட்டைத் தாண்டி உள்ளே போய் பிள்ளையாரைப் புன்னகையுடன் நெருங்கினான். அசப்புல என்னோட பிள்ளையார் மாதிரியே இருக்கார். பாவம் இவரும் தனியா தான் உக்காந்திருக்கார்...

(தொடரும்)

-என்.கணேசன்