Thursday, February 28, 2013

பரம(ன்) ரகசியம் – 33



பார்த்தசாரதி ஈஸ்வரைக் கேட்டார்.  பெரியவர் பல வருஷமா சிவலிங்கத்தை வச்சு பூஜை செய்துகிட்டு தியானத்துல ஈடுபட்டதால இங்கே தியான அலைகள் இருக்குன்னு சொன்னீங்க. அதை நீங்க இங்கே உணர்ந்ததாவும் சொன்னீங்க... இங்கே கொலையும் நடந்திருக்கு. கொலைகாரனும் வந்து போயிருக்கான். சிவலிங்கத்தை கடத்தினவங்களும் வந்து போயிருக்காங்க. அவங்க இருந்தது இங்கே கொஞ்ச நேரம் தான்னாலும் அவங்க சம்பந்தப்பட்ட அலைகள் இங்கே இருக்காதா?

ஈஸ்வர் சொன்னான். “கண்டிப்பா இருக்கும்....

“உங்களால அந்த அலைகளை கண்டு பிடிக்க முடியாதா?

ஈஸ்வர் பொறுமையாகச் சொன்னான். அதுக்கேத்த மாதிரி சென்சிடிவிட்டி இருக்கிற ஆட்களால அது கண்டிப்பா முடியும். நாய்க்கு மோப்ப சக்தி இருக்கற மாதிரி சில பேருக்கு சில நெகடிவ் அலைகளை கிரஹிச்சு சொல்ற சக்தி இருக்கும். அவங்களால அதை வச்சு ஏதாவது தகவல்கள் சொல்ல முடியும். எனக்கு அந்த வகையான சென்சிடிவிடி இல்லாததால் சொல்ல முடியாது....

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த ஈஸ்வர் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை வைத்திருப்பது கூட அவருக்கு இன்னமும் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

அதைப் புரிந்து கொண்டது போல புன்னகைத்தபடி ஈஸ்வர் விளக்கினான். “சார். சில கோயில்களுக்கோ, மகான்கள் இருக்கும் இடத்துக்கோ போறப்ப சில சமயங்கள்ல அங்கே நம்மையும் அறியாம நாம ஒரு விதமான அமைதியை உணரலாம். சில வீடுகளுக்குள்ளே நுழையறப்பவே ஏதோ ஒரு அசௌகரியத்தை சில சமயம் உணரலாம். அங்கே இருக்கிற மனிதர்களோட மோசமான குணங்கள், தினசரி நடக்கற சண்டை சச்சரவுகள், கொடுமைகள் எல்லாம் சேர்ந்து நமக்கு அந்த விதமான அனுபவத்தை தரும். அங்கே இருந்து சீக்கிரமா வெளியே போயிட்டா தேவலைன்னு தோணும். சில பேர் நம்ம பக்கத்துல வந்தாலே காரணம் இல்லாமலேயே கொஞ்சம் விலகத் தோணலாம், அவங்களைப் பிடிக்காமல் போகலாம். அதுக்குக் காரணம் நம்ம அலைகளுக்கும் அவங்க அலைகளுக்கும் ஒத்துப் போகாம இருக்கறது தான் காரணம். இந்த மாதிரி நேரங்கள்ல நமக்கு ஏற்படற உணர்வுகள் காரணம் புரியாததால நாம் அப்படியே விட்டுடறோம். ஆனா உண்மைல இந்த மாதிரி அலைகள் அந்த இடங்களைச் சுத்தியும் மனுசங்களை சுத்தியும் இருக்குங்கறது தான் காரணம். இது சாதாரண மனுஷங்களுக்கு ஏற்படற அனுபவங்கள். கொஞ்சம் சென்சிடிவிடி அதிகமா இருக்கற ஆள்களுக்கு அவங்களோட சென்சிடிவிடி தன்மையப் பொறுத்து அதிகமான தகவல்கள் கிடைக்கும்..

அவன் சொன்னது அறிவுபூர்வமாகவே அவருக்குப் பட்டது. சுவாரசியத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் சொன்னான். “அமெரிக்கால கூட சில சமயங்கள்ல துப்பு துலக்கவே முடியாத கேஸ்கள்ல எதாவது துப்பு கிடைக்குமான்னு சில போலீஸ்காரங்க சில குறி சொல்ற ஆள்கள் கிட்ட போகறதுண்டு. அவங்க எல்லாருமே சரியா உபயோகமான தகவல்கள் கொடுப்பாங்கன்னு சொல்ல முடியாட்டியும் அப்படி ஒன்னு ரெண்டு பேர் சொன்ன சில தகவல்கள் உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவி இருக்கு. அது ரொம்பக் கம்மியான சதவீதம்னே வச்சுகிட்டா கூட அதை அலட்சியப்படுத்த முடியாது இல்லையா. அப்படி ஒரு சக்தியும் இல்லாட்டி ஒரு கேஸ்ல கூட சரியான தகவல் கிடைச்சிருக்கக் கூடாது இல்லையா.

அவன் சொன்னதை நம்ப அவருக்கு சிரமமாகத் தான் இருந்தது. அவன் சொன்னான். “இதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கு. இந்த மாதிரி சில ஆதாரபூர்வமான சம்பவங்கள் பத்தி தமிழ்ல “ஆழ்மனதின் அற்புத சக்திகள்”  புத்தகத்துல கூட தந்திருக்காங்க   

பார்த்தசாரதி கேட்டார். “அப்படின்னா இந்த கேஸ்ல கூட அந்த மாதிரி ஆள்களை வச்சு கேட்கலாமா?ஆர்வத்தில் சொல்லி விட்டாரே ஒழிய உண்மையில் அப்படி சொன்னது அவருக்கே ஒருமாதிரியாக இருந்தது. ஒரு அறியாமையான மூடநம்பிக்கையான செயலில் நாமே இறங்குவதா என்ற கூச்சம் ஏற்பட்டது.

ஆனால் அவனிடம் எந்த தயக்கமோ சந்தேகமோ இருக்கவில்லை. அவன் சொன்னான். “அமெரிக்காவாக இருந்தால் நானே ஒன்னு ரெண்டு பேரை சிபாரிசு செஞ்சிருப்பேன். இங்கே எனக்கு யாரையும் தெரியாது....

பார்த்தசாரதி சிந்தனையில் ஆழ்ந்தார். பின் சொன்னார். “இங்கே பத்து மைல் தூரத்துல குறி சொல்ற ஒரு கிழவி இருக்கா.  ஒரு தடவை என் தங்கையோட நாத்தனார் குழந்தையோட கைல இருந்த தங்க மோதிரம் காணாமல் போயிடுச்சு. எவ்வளவு தேடியும் கிடைக்கலை. யாரோ சொல்லி என் தங்கையோட நாத்தனார் இந்த குறி சொல்ற கிழவி கிட்ட போயிருக்கா. அந்தக் கிழவி கிட்ட போறவங்க வெத்திலை பாக்கும், 101 ரூபாயும் தரணுமாம். அந்தக் கிழவி அந்த வெத்திலைய தடவிகிட்டே கண்ணை மூடிகிட்டு மோதிரம் பாத்ரூம்ல வச்சிருக்கிற ஒரு தண்ணிக் குடத்துல இருக்கிறதா சொல்லி இருக்கு. போய் பார்த்தா அப்படியே இருந்திருக்கு. அதுல எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். ஆனால் அதுக்கடுத்து அவங்க சொல்லி நாலஞ்சு பேர் வேற வேற விஷயங்களுக்கு அந்த கிழவி கிட்ட போய் இருக்காங்க. ஆனா அப்ப எல்லாம் கிழவி சொன்னது ஒன்னு கூட சரியாகலை....

ஈஸ்வர் சொன்னான். “அதான் சொன்னேனே. சக்தி இருக்கறதா சொல்ற ஆயிரம் பேர்ல நாலு பேர் தான் தேறுவாங்க. அப்படி அந்தக் கிழவி நாலுல ஒரு ஆளா இருக்கலாம்.... அந்தக் கிழவிக்கும் தொடர்ச்சியா சக்தி இருந்திருக்காது. விட்டு விட்டு அந்த சக்தி வரலாம். அதை சொல்லாம கிழவி காசுக்கு ஆசைப்பட்டு பிறகு வாய்க்கு வந்தபடி சொல்லி இருக்கும். அதனால சரியாக இருந்திருக்காது...

அப்படின்னா அந்தக் கிழவி கிட்ட சும்மா போய் கேட்டா என்ன?

“இந்த மாதிரி விஷயங்களை சம்பவம் நடந்த இடத்துல வரவழைச்சு கேட்டா அந்தக் கிழவிக்குத் தெளிவா தெரிய வாய்ப்பு இருக்கு....

சிறிது தயங்கி விட்டு முயற்சி செய்வதில் என்ன தப்பு என்று நினைத்தவராக பார்த்தசாரதி போன் செய்து யாரிடமோ தாழ்ந்த குரலில் பேசினார்.

பின் ஈஸ்வரிடம் சொன்னார். “கிழவியை கூட்டிகிட்டு வந்துடுவாங்க. ஆனா உண்மையை சொல்லணும்னா இந்த விஷயத்துல எனக்கு முழு நம்பிக்கை வரலை....

ஈஸ்வர் அமைதியாக சொன்னான். “ஏதாவது தெரிய கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னு மட்டும் இப்போதைக்கு நினைக்கலாம். அவ்வளவு தான். ஒரு வேளை கிழவிக்கு எதுவுமே தெரிய வராமலும் போகலாம். ஆனாலும் நமக்கு நஷ்டம் இல்லை. நம்ம நாட்டுல என்ன பிரச்சினைன்னா இந்த மாதிரி ஆளுகளை சாமியாராக்கியோ, சாமி ஆக்கியோ ஏமாந்துடறது தான். நம்ம கிட்ட இல்லாத சக்தி ஒருத்தன் கிட்ட இருக்குங்கறதாலயே அப்படி ஒருத்தரை அப்படி நம்பிடறது முட்டாள்தனம். நான் அப்பவே சொன்ன மாதிரி ஒரு தடவை சொன்னது சரியாச்சுன்னா அவங்க சொல்றது எல்லாமே சரியா இருக்கும்னு முடிவு செய்துக்கறதும் முட்டாள்தனம்....

விஞ்ஞான யுகத்தில் இப்படி பின்னால் போகிறோமே என்று பார்த்தசாரதிக்குத் தோன்றினாலும் அவன் சொன்னதில் அறிவுபூர்வமான அணுகுமுறையே தெரிந்தது. ஒரு கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். கிழவி வரும் வரை இருவரும் தோட்டத்தில் காத்திருந்தார்கள்.

முக்கால் மணி நேரத்தில் கிழவியை ஜீப்பில் கொண்டு வந்து சேர்த்தார்கள். கிழவிக்கு கிட்டத்தட்ட எண்பது வயதாகவாவது இருக்கும் என்று ஈஸ்வர் கணக்கிட்டான். கிழவி உயரமாகவும் அகலமாகவும் இருந்தாள். காதுகளில் வெள்ளி தொங்கட்டான்கள் தொங்கின. முகமெல்லாம் சுருங்கி ரேகைகள் தெரிந்தன. கிழவி போலீஸ் அழைத்து வந்ததில் பயந்து போயிருந்தாள்.

பார்த்தசாரதி முன்னால் அவளை நிறுத்திய போது “சாமி நான் எந்த தப்பும் செய்யலை. அந்த மாரியாத்தா மேல சத்தியமா சொல்றேன்...என்று புலம்பினாள்.

“எல்லார் கிட்டயும் 101 ரூபாய் வசூலிச்சுகிட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்றேன்னு நிறைய புகார் வந்துருக்கு கிழவி. நீ என்னடான்னா மாரியாத்தா மேல சத்தியம் செய்யறே...

கிழவி முகம் வெளுத்தது. 101 ரூபாய்க்காக போலீஸ் வரை போய் புகார் சொல்லும் மனிதர்கள் இருப்பார்கள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

சாமி யாரோ எனக்கு வேண்டாதவங்க உங்ககிட்ட இப்படி புகார் செஞ்சுருக்காங்க...என்று பலவீனமான குரலில் கதறினாள்.

பார்த்தசாரதி போலீஸ் பாணியில் அவளை நிறையவே பயமுறுத்தி விட்டால் அவளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சென்சிடிவிடியும் போய் விடும் என்று நினைத்த ஈஸ்வர் அவருக்கு கண்ணால் சமிக்ஞை செய்து விட்டு அவளிடம் சொன்னான்.

“பயப்படாதீங்க. இங்கே இந்த வீட்டுல ஒரு கொலையும் திருட்டும் நடந்திருக்கு. உங்களுக்கு ஏதாவது தெரியுதான்னு கேட்க தான் கூப்பிட்டோம். முயற்சி செய்து பார்க்கறீங்களா?

அவள் பார்த்தசாரதியை ஒரு நிமிடம் பயத்துடன் பார்த்தாள். அவர் ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நிற்கவே அவள் ஈஸ்வரையே கூர்ந்து பார்த்தாள். அவள் பயம் சற்று குறையவே மெல்ல கேட்டாள். “இது யாரோட வீடுங்க?

“என்னோட பெரிய தாத்தா வீடுங்க

அப்படின்னா உங்க கையால எனக்கு வெத்தல பாக்கு குடுங்கஎன்றாள். பார்த்தசாரதி பக்கம் மறந்தும் அவள் திரும்பவில்லை. 101 ரூபாய் பற்றியும் பேசவில்லை.

ஈஸ்வர் தன் கையால் வெற்றிலை பாக்கையும் 101 ரூபாயும் தர பணத்தை சற்று தயக்கத்துடன் தான் அவள் வாங்கினாள்.

ஈஸ்வர் சொன்னான். “ஏதாவது தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க. தெரியலைன்னா விட்டுடுங்க. பரவாயில்லை. கற்பனையா மட்டும் எதுவும் சொல்ல வேண்டாம்.

அவள் அவனை வித்தியாசமாய் பார்த்தாள். அவளிடம் இப்படி ஒரு கோரிக்கையை யாரும் வைக்கவில்லை போல் இருந்தது. மெல்ல தலையாட்டினாள்.

அவளை இருவரும் வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள். கிழவி உள்ளே போனவுடன் கண்களை சுருக்கிக் கொண்டு வீட்டை நோட்டமிட்டாள். பின் சாக்பீசால் குறியிட்டிருந்த பசுபதி சடலம் இருந்த இடத்தை வெறித்து பார்த்தாள். பின் பூஜையறையைப் பார்த்தாள். பின் ஹாலில் ஒரு மூலையில் அமர்ந்தாள். கண்களை மூடிக் கொண்டு ஈஸ்வர் தந்த வெற்றிலையை வருட ஆரம்பித்தாள்.

சரியாக ஆறு நிமிடங்கள் 20 வினாடிகள் மௌனமாய் இருந்த கிழவி பின் மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. நிறுத்தி நிறுத்தி பேசினாள். “இள வயசு பையன்... ஈரத்துண்டை உடுத்தி இருக்கான்.... உடம்பெல்லாம் திருநீறு பூசி இருக்கான்.... சிவலிங்கத்தை தூக்கறான்.... யாரோ ரெண்டு பேர் அவனை பார்த்திட்டு இருக்காங்க.... அவன் பயப்படறான்... அவன் உடம்பெல்லாம் நடுங்குது....அவன் பயப்படறான்... ரொம்பவே பயப்படறான்.... ஏதோ ஜெபிச்சுகிட்டே இருக்கான்.... சிவலிங்கத்தை தூக்கிட்டு வெளியே போறான்.....

சொல்லும் போதே அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. பின் மௌனமானாள். கண்களைத் திறந்தாள். ஈஸ்வரைக் கேள்விக்குறியுடன் சரி தானா என்பது போல பார்த்தாள்.

ஈஸ்வர் கேட்டான். “அந்த ரெண்டு பேரையும், சிவலிங்கத்தையும் பத்தி அதிகமா ஏதாவது சொல்ல முடியுமான்னு பாருங்களேன்

அவள் தலையாட்டி விட்டு கண்களை மூடிக் கொண்டாள். “மங்கலாயிடுச்சு.. சிவலிங்கமும் தெரிய மாட்டேங்குது... அந்த ரெண்டு பேரும் தெரிய மாட்டேங்குறாங்க. அப்பவே கூட அவங்க மங்கலா தான் தெரிஞ்சாங்க...என்றவள் சிறிது நேரம் கஷ்டப்பட்டு எதையோ பார்ப்பது போல பார்த்து சொன்னாள். “அந்த பையன் மட்டும் தெரியறான்... அவன் இப்ப ஒரு பெரிய சிவன் கோயில்ல இருக்கான்.....

ஈஸ்வர் சொன்னான். “அந்த இடத்தைப் பத்தி இன்னும் ஏதாவது சொல்ல முடியுதான்னு பாருங்களேன்.

கிழவி முயற்சித்தாள். “அந்த சிவன் கோயில்ல அம்மன் சன்னதிக்கு முன்னாடி பெரிய குளம் இருக்கு.... குளத்தை சுத்தி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டு இருக்கு..... அந்தப் பையன் அந்த படிக்கட்டுல உட்கார்ந்துட்டு இருக்கான். போய் அப்பப்ப குளிச்சிட்டு வருவான் போல இருக்கு. அவன் உடம்பெல்லாம் நனைஞ்சுருக்கு. அந்த ஈரத்துண்டுலயே தான் இருக்கான். எதையோ இப்பவும் ஜெபிச்சுகிட்டிருக்கான்.... அந்தக் குளத்துக்கு முன்னாடி ஒரு  தோரணம் மாதிரி வளைவு இருக்கு. அதுல என்னவோ எழுதி இருக்காங்க.....

அவள் சிறிது நேரம் அமைதியாகவே இருக்கவே பார்த்தசாரதி கேட்டார். “அந்த வளைவுல என்ன எழுதி இருக்கு?

“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்களே...

“அது தமிழ் தானா இல்லை வேற எதாவது மொழியா?

“தமிழ் தான்....

அதற்கு மேல் அவளுக்கு அந்தக் காட்சி தெரியவில்லை போல் இருந்தது. ஆனாலும் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஐந்து நிமிடங்கள் பேசாமல் இருந்து விட்டு அவள் கண்களைத் திறந்தாள். எழுந்து பூஜை அறைக்குப் போய் தரையில் இருந்து தூசியைத் தடவி எடுத்து திருநீறு போல் பூசிக் கொண்டு ஈஸ்வர் அருகே வந்தாள். அவன் தந்த 101 ரூபாயை அவனிடமே திருப்பித் தந்தாள்.

ஈஸ்வர் திகைப்புடன் கேட்டான். “வச்சுக்கோங்க. ஏன் திருப்பித் தர்றீங்க?

அவள் பதில் எதுவும் சொல்லாமல், வேண்டாம் என்று சைகை செய்தாள். இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் காட்டி விட்டு அவனைப் பார்த்து கைகூப்பி வணங்கினாள். பின் விறு விறு என்று வேகமாக அங்கிருந்து கிளம்பி வெளியே சென்றவள் தோட்டத்தில் ஜீப் அருகே சென்று நின்று கொண்டாள்.

இருவரும் கிழவியின் செய்கையால் திகைப்படைந்தார்கள். பார்த்தசாரதி ஈஸ்வரிடம் கேட்டார். “இது சம்பந்தமா இனியும் ஏதாவது கிழவி கிட்ட இருந்து தெரிஞ்சுக்க முடியுமா?

இனி எதுவும் தெரிஞ்சுக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அந்தக் கிழவியோட சென்சிடிவிடி அந்த பையனோட அலைகளுக்கு தான் ட்யூன் ஆயிருக்கு. அதுல தெரிஞ்சதெல்லாம் சொல்லி இருக்கு. இனியும் வற்புறுத்திக் கேட்டா கிழவி கற்பனையா எதாவது சொல்ல ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்...

“அப்படின்னா இப்ப சொன்னது எல்லாம் கற்பனை இல்லைன்னு நினைக்கிறீங்களா?...

ஆமா. நாம சிவலிங்கம் பத்தி சொல்லவே இல்லை... ஆனாலும் அந்தக் கிழவி சரியா சிவலிங்கத்தை அந்தப் பையன் தூக்கிட்டு போறது பத்தி சொல்லி இருக்கிறதைப் பாருங்க...

இங்க கொலை நடந்து சிவலிங்கம் திருட்டு போனதை கிழவி பேப்பர்ல படிச்சு இருக்கலாம்...

“கிழவிக்கு தான் எழுதப்படிக்கத் தெரியாதே...

டிவில பார்த்து இருக்கலாம்...

அவர் சந்தேகம் அவ்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது. “இருக்கலாம். ஆனா கிழவி பார்த்து சொன்ன காட்சி சரியா இருக்கலாம்னு தான் என் உள்ளுணர்வு சொல்லுது. ஏன்னா அந்த சிவலிங்கத்தை குற்றவாளிகள் நேரடியா தூக்கிட்டு போக வாய்ப்பே இல்லைன்னு நான் ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டேன். யாரோ ஒரு பூஜை புனஸ்காரம் செய்யற ஆள் கையால தான் எடுத்துகிட்டு போக வச்சிருப்பாங்கன்னு நினைச்சேன். கிழவி சொல்றது அதுக்கு ஒத்துப் போகுது....

பார்த்தசாரதி சிறிது யோசித்து விட்டு கேட்டார். “சரி அந்தக் கிழவியை அனுப்பிச்சிடலாமா?

அனுப்பி விடலாம் என்று ஈஸ்வர் சொல்ல பார்த்தசாரதி ஜீப்பருகே இருந்த போலிஸ்காரருக்கு சமிக்ஞை செய்ய கிழவியுடன் ஜீப் கிளம்பியது.

பார்த்தசாரதி ஈஸ்வரிடம் கேட்டார். “அப்படின்னா அந்தப் பையன் இப்ப இருக்கிற இடம் பத்தி கிழவி சொன்னதும் சரியாய் இருக்கும்னு நினைக்கிறீங்களா?

“ஆமா..

பார்த்தசாரதி யோசித்தார். ‘பெரிய சிவன் கோயில்...  அம்மன் சன்னிதிக்கு முன்னால் பெரிய குளம்.... குளத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தோரண வளைவு... அதில் தமிழில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது.... குளத்தை சுற்றி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டுகள்... அந்தப்படிக்கட்டில் அந்தப் பையன் உட்கார்ந்திருக்கிறான்....

எந்தக் கோயிலாக இருக்கும்?

(தொடரும்)

-          என்.கணேசன்
  

16 comments:

  1. இந்த மாதிரி சில ஆதாரபூர்வமான சம்பவங்கள் பத்தி தமிழ்ல “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகத்துல கூட தந்திருக்காங்க” //

    ஆஹா ..! தங்கள் க்தையில் தங்களின் படைப்பைக்கொண்டுவந்து பொருத்தமாக இணைத்துவிட்டீர்களே,..!

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ‘பெரிய சிவன் கோயில்... அம்மன் சன்னிதிக்கு முன்னால் பெரிய குளம்.... குளத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தோரண வளைவு... அதில் தமிழில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது.... குளத்தை சுற்றி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டுகள்... அந்தப்படிக்கட்டில் அந்தப் பையன் உட்கார்ந்திருக்கிறான்....”

    எந்தக் கோயிலாக இருக்கும்?


    இப்போது கணப்தி தங்கி பூஜை செய்துவரும்
    இடமாக இருக்குமோ..!

    ReplyDelete
  3. Paraman Rakasiyam is one of the most interesting novels I have ever read. Characters seems to be real and the plot is excellent. And it makes Thursdays very special Ganesan Sir. Thanks.

    ReplyDelete
  4. அடுத்த வியாழன் எப்பம் வரும் என எதிர்பார்க்கவேண்டி இருக்குது. இது கதையா? இல்லை நிஜமா என்றும் அளவுக்கு உள்ளது. நான் இந்த கதையோட ஒன்றிபோய்விட்டேன். வெகு அருமையாக செல்கிறது.

    இப்படிக்கு
    சுந்தர்
    ஈரோடு

    ReplyDelete
  5. வணக்கம்,

    அருமை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டும், குறிப்பாக தமிழ்நாட்டை விட்டும் ஓட இதுவும் ஒரு காரணம்.

    ரகசியம் தொடரட்டும்.

    நன்றி.

    ReplyDelete
  6. As usual, excellent narration!

    ReplyDelete
  7. வாவ்! ரொம்ப நல்லா இருக்கு! மிகவும் நன்றி.

    ReplyDelete
  8. சார் தொடர் மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

    சிவலிங்கத்தை திருடுவதற்காக கொலையையே செய்த கும்பல் அந்த சிவலிங்கத்தை எடுத்து வந்தவன் ஓடிவிட்டான் என்று தெரிந்தும் அவனை தேட எந்த முயற்சியும் எடுக்கவில்லையே ஏன். அவன் பிடிபட்டால் அவர்களைப் பற்றி போலீசில் மாட்டிவிட்டுவிட மாட்டானா என்று ஏன் யோசிக்கவில்லை அவர்கள்.

    ஒருவேளை அவன் பிடிபட்டாலும் போலீசாரால் எந்த உண்மையையும் தெரிந்து கொள்ள முடியாது என்று நினைத்து கொண்டு விட்டுவிட்டிருப்பார்கள் போலும்.

    குற்றம் செய்பவர்கள் அவர்களை அறியாமல் தடயங்களை விட்டுச் செல்வார்கள் என்ற விதிப்படி குற்றவாளிகள் செய்த தவறாக இந்த செயல் அமைந்துவிட்டது போலும்.

    அதே ஆள் இப்போது போலீசில் மாட்டினால் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரங்களில் படிக்க ஆவலாக இருக்கிறோம்.

    ReplyDelete
  9. Very interesting. Eagerly waiting for today evening

    ReplyDelete
  10. கதை அருமையாக செல்கிறது ...நல்வாழ்த்துகள்......

    ReplyDelete
  11. // அவன் தந்த 101 ரூபாயை அவனிடமே திருப்பித் தந்தாள். //
    அந்த பாட்டி எதனால் பணத்தை திருப்பி கொடுத்திருப்பார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. rupee note was torn. thats why.

      Delete
    2. you have good sense of humor Anonymous....

      Delete
  12. அருமையாக போகிறது... சில பகுதிகள் படிக்கவில்லை...
    படிக்கிறேன்...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete