Thursday, February 14, 2013

பரம(ன்) ரகசியம் – 31



தோட்ட வீட்டில் வீட்டுப்பகுதியை இன்னும் போலீசார் பூட்டி தங்கள் வசம் தான் வைத்திருந்தார்கள். அதனால் ஈஸ்வருக்கு வீட்டின் உள்ளே போய் பார்க்க முடியவில்லை. முனுசாமியை அவன் தோட்டத்திலேயே சந்தித்துப் பேசினான்.

முனுசாமியிடம் சிவலிங்கம் பற்றி பெரிய உபயோகமான தகவல்கள் எதுவும் கிடைக்கா விட்டாலும் ஈஸ்வருக்கு அவன் மூலம் பசுபதி பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. முனுசாமிக்கு அவரைப் பற்றி சொல்ல நிறைய இருந்தது. படித்தவன், வெளிநாட்டில் இருப்பவன், பணக்காரன் என்ற எந்த பந்தாவையும் காட்டாமல் சரிசமமாகவும், நீண்ட காலம் அவனை அறிந்தவன் போலவும் ஈஸ்வர் பழகியதால் அவனுக்கு ஈஸ்வரை நிறையவே பிடித்து விட்டிருந்தது. அதனால் அவன் ஈஸ்வரிடம் மனம் விட்டுப் பேசினான். துறவி போல் வாழ்ந்த விதம், வெளியுலகம் பற்றி அறிந்து கொள்ள எந்த வித அக்கறையும் காட்டாதது, தியானத்திலேயே பெரும்பாலும் கழித்தாலும் மற்ற நேரங்களில் தோட்ட வேலைகளில் கூட அவனுக்கு சரிசமமாய் உழைத்த விதம் இப்படி எல்லாவற்றையும் நிகழ்ச்சிகளுடன் சொல்லிக் கொண்டு போனான். பசுபதி என்ற மனிதரை அவனால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

கடைசியில் ஈஸ்வர் கேட்டான். “அந்த பூஜை ரூம்ல தேவாரம், திருவாசகம், ஸ்தோத்திரம்னு புத்தகம் எல்லாம் இருந்த்தா கேள்விப்பட்டேன். அதை பசுபதி ஐயா படிக்கறதை எப்பவாவது பார்த்திருக்கியா?

முனுசாமி யோசித்து விட்டு சொன்னான். “இல்லைங்க தம்பி. ஒரு தடவை கூட பார்த்ததில்ல. அதெல்லாம் அவருக்கு எப்பவோ மனப்பாடம் ஆயிருக்கும் தம்பி. அதனால இருக்கலாம்

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது.

“போலீஸ் என்ன எல்லாம் கேட்டாங்க முனுசாமி?

முனுசாமி எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான். கடைசியில் அவன் ஒரு முறை குடித்து விட்டு இரவு இங்கு வந்த போது ‘கண்ணு ரெண்டும் நெருப்பா ஜொலிச்சுகிட்டுஇருந்த ஒரு உருவம் அவனைப் பார்த்ததையும், அவனைப் போலவே கந்தன் என்ற ஒரு திருடன் இங்கே வந்த போது எதையோ பார்த்து பயந்ததையும் சொன்னான். அவர்கள் பார்த்தது நிஜமாக ஏன் இருக்கக் கூடாது என்று பார்த்தசாரதி என்ற போலீஸ் அதிகாரி சந்தேகப் பட்டதையும் சொன்னான். அந்தத் தகவல்கள் ஈஸ்வருக்குப் புதியதாக இருந்ததால் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டான்.

முனுசாமி போய் சிறிது நேரத்தில் பார்த்தசாரதி வந்தார். தோட்டத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருவரும் பேசினார்கள். அவனைப் பற்றி இண்டர்நெட்டில் அவர் மணிக்கணக்கில் படித்து எல்லாமே தெரிந்திருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் ஒன்றுமே தெரியாதது போல் விசாரித்தார். ஈஸ்வர் தன்னை விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ உதவிப் பேராசிரியராக இருப்பதாகவும், அதீத மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னானே ஒழிய உலக அளவில் அவனுக்கிருந்த புகழைச் சிறிதும் வெளிப்படுத்தவில்லை.

பார்த்தசாரதிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. நிறைகுடம் தழும்பாது என்பதற்கு இவன் நல்ல உதாரணம் என்று மனதில் சொல்லிக் கொண்டார். அவருக்கு நீண்ட நாட்கள் இருந்த சந்தேகத்தை அவனிடம் கேட்டார். இந்த மாதிரி சக்திகள் எல்லாம் நிஜமாவே இருக்குன்னு நினைக்கிறீங்களா ஈஸ்வர்

கண்டிப்பா இருக்கு. அதுல சந்தேகமே தேவையில்லை”.  அவன் சிறிதும் தயங்காமல் ஆணித்தரமாக சொன்னான்.

“சக்தி இருக்கறதா சொல்லிட்டு ஏமாத்திட்டு திரியற ஆளுகளைத் தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன்பார்த்தசாரதி வெளிப்படையாக தன் அனுபவத்தைச் சொன்னார்.

ஈஸ்வர் புன்னகையுடன் சொன்னான். “நீங்க மட்டுமல்ல. நானும் அப்படித்தான். சக்தி இருக்கறதா சொல்லிக்கற ஆயிரம் பேர்ல உண்மையா சக்தி இருக்கற ஆளுகள் நாலு பேர் தேர்றது கஷ்டம். அதுலயும் மூணு பேருக்கு இருக்கிற சக்திகள் தொடர்ச்சியானதா இருக்காது. சிலசமயம் அவங்க கிட்ட இருக்கும். சில சமயம் சுத்தமா இருக்காது.  அந்த நேரங்கள்ல அந்த மூணு பேரு கூட தங்களோட இமேஜைக் காப்பாத்திக்க நடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. கடைசியா மிஞ்சறது ஒரு ஆளா தான் இருக்கும்

அவருக்கு அவன் சொன்னது சுவாரசியமாக இருந்தது.  அவர் கேட்டார். “அந்த ஒரு ஆளுக்காவது சக்திகள் எப்போதும் இருக்குமா?

“அதை இப்படித்தான்னு சொல்ல முடியாது. சில பேருக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் அந்த சக்தி இருக்கும். பிறகு குறைய ஆரம்பிச்சுடும். தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கு தக்க வச்சுக்க சில பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கும். சில கட்டுப்பாடுகளை அவங்க தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவங்க இருக்கலைன்னா சக்திகள் குறைய ஆரம்பிச்சுடும்....

கடைசி வரைக்கும் அந்த மாதிரி சக்திகளை தங்க கிட்ட வச்சுக்கற ஆள்கள் இருக்கிறாங்களா

“அது ரொம்ப அபூர்வம். பெரும்பாலும் அப்படி தக்க வச்சிக்கறவங்க சித்தர்களாகவோ, யோகிகளாகவோ இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு நம்மள மாதிரி ஆள்கள் கிட்ட தங்களோட சக்திகளைக் காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காதுங்கறதால அவசியம்னு தோணினால் ஒழிய அவங்க கண்ணுக்கு அகப்பட மாட்டாங்க...

அவன் அந்த சக்திகளைப் பற்றியும் சக்தியாளர்களைப் பற்றியும் விரிவாகவே ஆராய்ச்சி செய்திருக்கிறான் என்பது அவனது தெளிவான நடுநிலையான ஆணித்தரமான பேச்சிலேயே பார்த்தசாரதியால் உணர முடிந்தது.  ரொம்ப சுவாரசியமா இருக்கு. ரிடையரான பிறகு இதைப் பத்தியெல்லாம் நிறைய படிக்கணும், தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்என்று சொன்னார்.

இது போல ரிடையர் ஆன பிறகு பிடித்தவற்றை செய்ய வேண்டும் என்று ஒதுக்கி வைத்த விஷயங்களை பெரும்பாலானவர்கள் செய்ய முடிவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் ரிடையர் ஆவதில்லை. ஒன்று முடியும் போது இன்னொரு வேலை அவர்களுக்குத் தயாராகக் காத்திருக்கவே செய்கிறதுஎன்று நினைத்த ஈஸ்வர் அதை அவரிடம் வாய் விட்டுச் சொல்லவில்லை.

அவர் அபூர்வ சக்திகளை விட்டு விட்டு விஷயத்திற்கு வந்தார். “உங்க பெரிய தாத்தா இந்த சிவலிங்கத்துக்கோ, தனக்கோ ஏதாவது ஆகலாம்னு முதல்லயே தெரிஞ்சு வச்சிருந்த மாதிரி தோணுது. அப்படி ஏதாவது நடந்துட்டா உங்க கிட்ட சொல்லச் சொல்லி உங்க தாத்தா கிட்ட சொல்லியிருந்தாராம். அது ஏன்னு நீங்க நினைக்கிறீங்க?

எனக்கு அது ஏன்னு சரியா தெரியல...

“உங்களுக்கு அந்த சிவலிங்கம் பத்தி முதல்லயே தெரிஞ்சிருந்ததா?

“அந்த சிவலிங்கம் பத்தி எங்கப்பா மூலமா நான் கேள்விப்பட்டிருந்தேன்.

“உங்க அப்பா அந்த சிவலிங்கம் பத்தி என்ன சொன்னார்....

அந்த சிவலிங்கம் ஒளி விடுகிற மாதிரி ஒரு காட்சியை அவர் சின்ன வயதில் பார்த்திருக்கிறாராம்...

பார்த்தசாரதி சந்தேகத்தோடு கேட்டார். ஆனா உங்க தாத்தாவோ, உங்க வீட்டுல வேற ஆள்களோ அது பத்தி ஒன்னும் சொல்லவே இல்லையே. அது சாதாரண லிங்கம்கிற மாதிரி தான் அவங்க நினைக்கிறதா சொன்னாங்க...

அவங்க யாரும் அப்படி பார்க்கலை. அதே சமயத்துல அதைப் பார்த்தப்ப எங்கப்பாவும் சின்ன வயசுங்கறதால அவங்க அதை சீரியஸா எடுத்துக்கலைன்னு தோணுது....

உங்கப்பா பார்த்தது நிஜமாய் இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா?

“ஆமா. நான் நம்பறேன். காரணம் எங்கப்பா ஒரு விஞ்ஞானி. சின்னதுல பார்த்தது ஒரு பிரமையா இருந்திருந்தா அவர் பிற்காலத்துலயாவது அதை உணர்ந்திருப்பார். அவர் கடைசி வரைக்கும் தான் பார்த்தது நிஜம்னு தான் சொன்னார். அவர் பார்த்தப்ப அவர் கூட தென்னரசுங்கற வேறொரு நண்பனும் இருந்தார். அவர் இப்போ இங்கே கல்லூரிப் பேராசிரியராக இருக்கார்.

பார்த்தசாரதி தென்னரசு பற்றிய விவரங்களை  ஈஸ்வரிடம் கேட்டு குறித்துக் கொண்டார். பிறகு தொடர்ந்து கேள்விகளைக் கேட்டார்.

“உங்கப்பா அமெரிக்கா போய் செட்டிலான பிறகு அவரோட பெரியப்பாவை எப்பவாவது வந்து சந்திச்சிருக்காரா? அந்த சிவலிங்கத்தைப் பார்த்திருக்காரா?

“இல்லை

“ஏன்?

எங்கப்பா காதல் கல்யாணம் செய்துகிட்டதுல அவரோட அப்பாவுக்கு உடன்பாடு இருக்கலை. அதனால அவருக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இருக்கலை. அதனால இந்தப் பக்கம் வரவே இல்லை...

நீங்க இந்தியா வரக் காரணம் உங்க பெரிய தாத்தா உங்க கிட்ட சொல்லச் சொன்னதா, இல்லை சிவலிங்கம் பத்தி முதல்லயே உங்க அப்பா சொன்னது மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருந்த ஆர்வமா?

ரெண்டுமேன்னு சொல்லலாம்

அவன் சொல்லாத மூன்றாவது காரணமும் இருந்தது என்பதை அவனால் அவரிடம் சொல்ல முடியவில்லை. அவனுடைய அப்பாவின் ஸ்பெஷல் அப்பாவைப் பார்க்கவும் உள்மனதில் ஒரு ஆசை இருந்ததை அவனே இன்னும் அங்கீகரிக்க முடியவில்லை. பார்ப்பது மட்டுமல்ல, உறைக்கிற மாதிரி அவரிடம் நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்றும் தோன்றுவதை அவனால் ஏனோ தடுக்க முடியவில்லை. அம்மாவின் அறிவுரை, அப்பா கடைசி வரை அவர் அப்பா மீது வைத்திருந்த பாசம் இரண்டுமே அவன் கோபத்தைக் குறைக்கவில்லை. என்ன தான் அவரை அலட்சியப்படுத்துவது போல நடந்து கொண்டாலும் உள்ளூர அவர் அவனைப் பாதித்துக் கொண்டு தான் இருந்தார். பார்த்தசாரதியின் கேள்வி கண நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த அவன் அந்த மூன்றாவது காரணத்தை பலவந்தமாக மறக்கப் பார்த்தான்.  

பார்த்தசாரதி அவனிடம் சொன்னார். “வேலைக்காரன் முனுசாமி ஒரு நாள் ராத்திரி குடித்து விட்டு இங்கே வந்து எதையோ பார்த்து பயந்ததை உங்க கிட்டயும் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். அவன் பார்த்தது நிஜமாய் இருக்குமா இல்லை பிரமையா இருக்குமா?

வேலைக்காரன் முனுசாமி இங்கே வந்து அவனிடம் பேசி விட்டுப் போனதை அவர் அறிந்து வைத்திருந்தது, இன்னமும் இந்த தோட்ட வீடும், முனுசாமியும் ரகசியமாய் போலீஸ் கண்காணிப்பில் இருப்பதை சுட்டிக் காட்டியது.  அவன் அங்கு வந்த போது எந்த போலீஸ்காரரையும் பார்த்ததாய் நினைவில்லை....

அவன் சொன்னான். “நிஜமாய் இருக்கலாம்

அவன் பார்த்தது அந்த சித்தராக இருக்குமா?
“இருக்கலாம். யாரோ ஒரு திருடனும் இங்கே வந்து பயந்து போனதையும் சொன்னான்.... அவன் என்ன பார்த்து பயந்தான்கிறது தெரியலை

பார்த்தசாரதி அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு சொன்னார். அந்தத் திருடனைத் தேடிப் பிடித்து விசாரித்தேன். இப்ப அவன் கோயமுத்தூரில் செட்டில் ஆயிருக்கான். எத்தனையோ திருட்டு, ஜேப்படி எல்லாம் செய்திருக்கான். அதையெல்லாம் ஒத்துக்கறதுல அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனா ஒரு நாள் ராத்திரி இந்த தோட்ட வீட்டுல அவன் என்ன பார்த்தான்னு சொல்றதுக்குள்ள ரொம்பவே திணறிட்டான்... சொல்லி விட்டு சிரித்தார்.  இப்போதும் அந்தக் காட்சி அவர் கண் முன்னே நிற்கிறது....

கோயமுத்தூரில் ஒரு சேரிப்பகுதியில் குடியிருந்த கந்தன் விசாரணைக்காக அவர் அங்கே போன போது பெரிதாய் கலங்கி விடவில்லை. எந்தக் கேஸுக்காக அவர் வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளத் தான் முதலில் ஆவல் காட்டினான். பல குற்றங்கள் செய்திருந்த அவனுக்கு மாட்டிக் கொண்டது எதில் என்பதை அறிந்து அதற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள அவன் நினைத்தான். ஆனால் அவர் வந்த நோக்கம் தெரிந்தவுடன் அவன் முகம் வெளுத்தது. தர்மசங்கடத்துடன் அவன் நெளிந்தான். அவன் மனைவி வந்து சொன்னாள். “அதை நான் அந்த நாள்ள இருந்தே கேட்டுகிட்டிருக்கேன் சார். வாயே திறக்க மாட்டேன்கிறார்...

கந்தன் மனைவியை எரித்து விடுவது போல பார்த்தான். போ புள்ள உள்ளே

அவள் அவனை முறைத்தபடியே உள்ளே போனாள். “அந்தப் பெரியவர் கிட்ட மந்திரிச்ச விபூதி வாங்கிட்டு வர்றதுக்கு மட்டும் நான் வேணும். அங்கே என்ன நடந்ததுன்னு மட்டும் என் கிட்ட சொல்ல மாட்டீங்களாக்கும்

கந்தன் உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கிறேன்என்பது போல மனைவியைப் பார்த்து விட்டு பார்த்தசாரதியிடம் சொன்னான். “சத்தியமா அங்க ஒன்னும் நடக்கல ஐயா. ஏதோ காத்து கருப்பு இருந்திருக்கும் போல இருக்கு. அது எனக்கு ஒத்துக்கலை. காய்ச்சல் வந்துடுச்சு. அவ்வளவு தான்

அங்கே திருடறதுக்கு என்ன இருக்குன்னு போனே கந்தா?

“அந்தப் பெரியவரு பெரிய பணக்காரரோட அண்ணாரு. பெரிய தோட்டத்துக்கு நடுவுல வீடு இருக்கு. அதனால ஏதாவது திருடறதுக்கு இருக்கும்னு போனது என்னவோ வாஸ்தவம். ஆனா அங்க எதுவுமே இருக்கலைங்களய்யா. அங்கத்த விட என் வீட்டுல சாமான் ஜாஸ்தியா இருக்கும்...அவன் சொல்கையில் அவனுக்கு கோபம் லேசாக வந்து போனது. பணக்காரர் வீட்டிலேயே திருட எதுவும் கிடைக்கவில்லை என்பது அவமானகரமான விஷயம் என்பது போல அவன் பேசினான்.

“சரி பயந்தது எதற்கு. அதைச் சொல்லு முதல்ல

அவன் மறக்க நினைக்கும் விஷயத்தை அவர் கட்டாயப்படுத்திக் கேட்டது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. “அதான் சொன்னேனுங்களே. ஒண்ணும் பார்க்கலைங்க. ஏதோ காத்து கருப்பு இருந்துருக்கும் போல இருக்கு....என்று பழைய பல்லவிக்கு அவன் வந்த போது அவர் அவனை இடைமறித்து அமைதியாக சொன்னார்.

“அந்த நாள் அந்தப் பெரியவர் உன்னைப் பார்த்து மிரட்டினாரு. பயந்து போய் கொஞ்ச நாள் காய்ச்சலாய் படுத்ததை அவமானமா நினைச்சு நீயும் உன் கூட்டாளியும் போய் அவரைக் கொன்னிருக்கலாம். அதுக்குப் பிறகு அந்தக் கூட்டாளிக்கும் உனக்கும் நடுவுல வந்த பிரச்சினையில நீ அவனையும் கொன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டேன்னு போலீஸ்ல நினைக்கிறாங்க. அந்த சிவலிங்கத்தை திருடி நீ எங்கே விற்றாய்னு மட்டும் தெரிஞ்சுதுன்னா நாங்க இந்த கேஸை முடிச்சுடுவோம்....

“ஐயா. உங்க கற்பனைக்கு எல்லையே இல்லையா. ரெண்டு கொலைப்பழியை என் மேல போடுறீங்களே..என்று பதறிய கந்தன் அவர் காலில் தடாலென்று விழுந்தான்.

சரி சொல்லு. அங்கே என்ன நடந்தது. என்ன பார்த்தாய்?

அவன் அதற்குப் பிறகு சொல்லத் தயங்கவில்லை. சொல்லி இவரை அனுப்பி விடா விட்டால் மேலும் பல கொலைகளுக்கு அவனைக் காரணமாக அவர் சொன்னாலும் சொல்வார் என்று நினைத்தான்.

“அது ஒரு சிவராத்திரிங்கய்யா. நான் நடுநிசிக்காட்சி ஒன்னு பார்த்துட்டு அந்தப் பக்கம் வந்தேன். ரெண்டு மூணு நாளா ரொம்பவே டல்லாய் இருந்ததால அந்தத் தோட்ட வீட்டுல கண்டிப்பாய் ஏதாவது கிடைக்கும்கிற நம்பிக்கைல சுவர் ஏறி குதிச்சு உள்ளே போனேன்.  அந்த தோட்டத்துலயே ஒரு மாதிரியா இருந்துதுங்கய்யா. அப்பவே திரும்பி இருக்கணும். செய்யல. வீட்டுக்குள்ள அந்த அர்த்த ராத்திரியிலயும் வெளிச்சம் தெரிஞ்சது. ஆனாலும் போனேன். வெளியில ஜன்னல் வழியா பாத்தேன்....  

சொல்லும் போது அவனுக்கு உடல் லேசாக நடுங்கியது. ஹால்ல யாரும் இருக்கலைங்கய்யா. ஆனா பூஜை ரூம்ல சிவலிங்கத்த சுத்தி மூணு பேரு உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் முதுகு மட்டும் தெரிஞ்சுது. ஒருத்தர் மட்டும் நான் முகம் பார்க்கற மாதிரி உக்கார்ந்திருந்தார். அந்த ஆள் என்னைப் பாத்தாருங்கய்யா.... அவர் கண்ணுல நான் தீயை பாத்தேனுங்க....

முனுசாமியின் அனுபவமே இவன் அனுபவமும் என்று புரிந்த பார்த்தசாரதி சொன்னார். “அதை பார்த்து நீ பயந்துட்டியாக்கும்

கந்தன் எச்சிலை முழுங்கிக் கொண்டு சொன்னான். “அது மட்டும் பார்த்திருந்தா பரவாயில்லைங்களே.... அடுத்த நிமிஷம்...அடுத்த நிமிஷம்...

“அடுத்த நிமிஷம் என்ன?

அவன் உடல் அதிகமாக நடுங்க ஆரம்பித்தது. “... அந்த ரூமே ஜெகஜோதியாய் ஜொலிக்க ஆரம்பிச்சுது. சிவலிங்கமும் தெரியல. ஆளுகளும் தெரியல.... எல்லாமே நெருப்பாய் ஜொலிச்சதுங்கய்யா. ....திடீர்னு எனக்குள்ளே எதுவோ புகுந்த மாதிரி இருந்துச்சு... அது என்னன்னு முதல்ல  தெரியல.... ஆனா உடம்பெல்லாம் எரிய ஆரம்பிச்சுடுச்சுங்கய்யா. பிறகு அந்த தீ ஜுவாலை தான் எனக்குள்ள புகுந்த மாதிரி இருந்துச்சு. அந்த இடத்துல நின்னா நான் செத்து சாம்பலாயிடுவேன்னு தோண ஆரம்பிச்சுது. எடுத்தேன் ஓட்டம். எப்படி எங்க வீட்டுக்கு வந்து சேந்தேன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலங்கய்யா. அந்த தோட்ட வீட்டுல இருந்த அளவு பெரிய ஜுவாலை அளவு இல்லாட்டாலும் சின்னதாய் ஏதோ ஒரு தீ உள்ளே ஒட்டிகிட்டு இருந்த மாதிரியே இருந்துச்சு. உடம்பு நெருப்பா கொதிக்க ஆரம்பிச்சுது... பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சுங்கய்யா. எனக்கு செத்துப் போனா பரவாயில்லன்னு கூட தோண ஆரம்பிச்சுதுங்க. இவ போய் அந்த பெரியவர் குடுத்த விபூதியக் கொண்டு வந்து பூசின பிறகு தான் அந்த தீ உள்ளே அணைஞ்ச மாதிரி இருந்துச்சுய்யா. அதுக்கு பின்னாடி தான் என்னால தூங்கவே முடிஞ்சுது. ஒரு நாள் முழுசும் தூங்கிட்டே இருந்தேன்ய்யா....

சொல்லி முடிக்கையில் அவன் தொப்பலாய் நனைந்திருந்தான். அந்தத் தீயின் நினைவே அவனை அப்போதும் சுட்டது போல் இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்


8 comments:

  1. சுந்தர்February 14, 2013 at 4:42 PM

    அசத்தறீங்க சார். பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. புத்தகத்திற்கு எனது முன்பதிவு. தொடருங்கள், அருமை!

    ReplyDelete
  3. தீயின் நினைவே அவனை அப்போதும் சுட்டது ..

    சிவ ஜோதி ..????
    நெற்றிக்கண் பிழம்பு ..! ???

    ReplyDelete
  4. வாரம் ரெண்டு தடவை எழுதுங்க சார். ஒவ்வொரு வியாழனுக்கும் காத்திருக்க முடியல. நன்றி.

    ReplyDelete
  5. #இது போல ரிடையர் ஆன பிறகு பிடித்தவற்றை செய்ய வேண்டும் என்று ஒதுக்கி வைத்த விஷயங்களை பெரும்பாலானவர்கள் செய்ய முடிவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் ரிடையர் ஆவதில்லை. ஒன்று முடியும் போது இன்னொரு வேலை அவர்களுக்குத் தயாராகக் காத்திருக்கவே செய்கிறது#

    Yes, i like this and believe these words are 100% true...

    ReplyDelete
  6. // “அந்த நாள் அந்தப் பெரியவர் உன்னைப் பார்த்து மிரட்டினாரு. பயந்து போய் கொஞ்ச நாள் காய்ச்சலாய் படுத்ததை அவமானமா நினைச்சு நீயும் உன் கூட்டாளியும் போய் அவரைக் கொன்னிருக்கலாம். அதுக்குப் பிறகு அந்தக் கூட்டாளிக்கும் உனக்கும் நடுவுல வந்த பிரச்சினையில நீ அவனையும் கொன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டேன்னு போலீஸ்ல நினைக்கிறாங்க. அந்த சிவலிங்கத்தை திருடி நீ எங்கே விற்றாய்னு மட்டும் தெரிஞ்சுதுன்னா நாங்க இந்த கேஸை முடிச்சுடுவோம்....”

    “ஐயா. உங்க கற்பனைக்கு எல்லையே இல்லையா. ரெண்டு கொலைப்பழியை என் மேல போடுறீங்களே..” என்று பதறிய கந்தன் அவர் காலில் தடாலென்று விழுந்தான்.//

    யதார்த்தமான போலீஸ் பாணி. ரசித்தேன்.
    -செல்வகுமார்

    ReplyDelete
  7. Excellent story telling...Keep it up as other readers I am also unable wait till next Thursday...Very eager to know what is going to happen next next...

    ReplyDelete