Tuesday, January 1, 2013

உயிரோட்டம் உள்ளதா வாழ்க்கையில்?


(அனைவருக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.)

ல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஒரு அர்த்தத்தைத் தேடுகிறோம், வெற்றியடைய ஆசைப்படுகிறோம். மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் எது எது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் விஷயங்கள் என்றாலும் எல்லோருடைய தேடலும் அவற்றை நோக்கியே இருக்கின்றன. என்றேனும் ஒரு நாளில் வெற்றியடைவோம், வாழ்வில் அர்த்தம் கண்டு பிடிப்போம், மகிழ்ச்சியடைவோம் என்ற எதிர்பார்ப்பில் தினசரி வாழ்க்கையைக் கோட்டை விடும் முட்டாள்தனம் பலரிடம் இருக்கிறது.

பலருடைய தினசரி வாழ்க்கை எந்திரத்தனமாக இருந்து விடுகிறது. என்றோ வாழப்போகும் நல்லதொரு வாழ்க்கைக்கான ஓட்டப்பந்தயமாக இருந்து விடுகிறது. வாழ்கின்ற வாழ்க்கை சரிதானா என்ற சந்தேகம் அடிக்கடி வர அடுத்தவர்களைப் பார்த்து அவ்வப்போது மாற்றிக் கொள்கிறதாகி விடுகிறது. இயற்கையான ஆரம்ப இலக்குகள் மாறி பணம், புகழ், படாடோபம் என்ற இலக்குகள் பெரும்பாலானவர்களின் இலக்குகளாகி விடுகின்றன. இந்த இலக்குகளில் மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் தேடும் போது பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

உண்மையான மகிழ்ச்சி, அர்த்தம், வெற்றி இருக்கிறதா என்பதை அறிய ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கையைப் பார்ப்பது மிகச்சரியாக இருக்கும்.  காலத்தை மறந்து, செய்கின்ற வேலையில் ஐக்கியமாவது உண்டா? பெரிய செலவில்லாமல் ரசிக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் உண்டா? அடுத்தவர் பார்வைக்கு எப்படி இருக்கிறது என்று கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகவே ஈடுபடும் விஷயங்கள் உண்டா? பெரும்பாலான நாட்களில் உற்சாகமாக எதிர்பார்க்கவும், செய்யவும் ஏதாவது புதுப்புது முயற்சிகள் உண்டா? இதில் ஓரிரண்டு கேள்விகளுக்காவது பதில் ஆம் என்று இருந்தால் உங்கள் வாழ்க்கை உயிரோட்டம் உள்ள வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை அர்த்தத்தோடும், மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள்.

அதற்கு எதிர்மாறாக உங்கள் தினசரி வாழ்க்கை இருந்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மையான உயிரோட்டம் இல்லை என்று பொருள். கேளிக்கைகளில் ஈடுபட்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கிறதா? தினசரி குடித்தால் தான் நிம்மதி கிடைக்கிறதா? அடுத்தவர்களைப் பற்றி வம்பு பேசி தான் பொழுது போகிறதா? அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து மிஞ்ச முனைவதில் தான் தினமும் அதிக நாட்டம் செல்கிறதா? பொருளாதார இலாபம் இல்லா விட்டால் உங்களுக்கு மிக ஆர்வமுள்ளவற்றில் கூட கவனம் செலுத்த மறுக்கிறீர்களா? இதில் சிலவற்றிற்கு பதில் “ஆம்என்றால் உங்கள் வாழ்க்கையில் ஓட்டம் இருக்கலாம், ஆனால் உயிர் இல்லை என்று பொருள்.

உயிரோட்டமுள்ள வாழ்க்கைக்கு சில உதாரணங்கள் பார்ப்போம். எடிசன், ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளில் மூழ்கி விடும் போது உலகத்தையே மறந்து விடுவார்களாம். கொண்டு வந்து வைக்கப்படும் உணவை உண்ணக் கூட மறந்து விடுவது சகஜமாம். லியார்னாடோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற ஓவிய மேதைகளும் அப்படியே தங்கள் படைப்பில் மூழ்கி விடுவார்களாம். அப்படியே தான் எல்லாத் துறை மேதைகளையும் சொல்லலாம். அந்த நேரங்களில் செய்யும் வேலையின் சிரமங்களோ, வரப் போகும் லாபங்களோ, கிடைக்கப் போகும் புகழோ அவர்கள் கவனத்தில் இல்லை. அந்தத் தருணங்கள் மிக அழகானவை. உயிரோட்டமுள்ளவை. செய்யும் செயல் முழுமை பெறப் பெற அவர்கள் அடையும் சந்தோஷம் வார்த்தைகளில் அடங்காதது. அதே நேரத்தில் அது அர்த்தமுள்ளதாகவும் அமைந்து வெற்றியையும் அளித்து விடுகிறது. அந்த அளவு தனித்திறமை இல்லா விட்டாலும் எத்தனையோ பேர் தங்கள் இயல்புக்கு ஏற்ப உயிரோட்டமான உபயோகமான வாழ்க்கை வாழ்வதை நாம் பல இடங்களிலும் பார்க்கலாம். 

மனதுக்குப் பிடித்ததே வேலையாகவோ, தொழிலாகவோ அமையும் பாக்கியம் ஒருசிலருக்கே வாய்க்கிறது. பலருக்கு அப்படி அமைவதில்லை. அமைகின்ற வேலை உற்சாகமாக இல்லாத போது பொழுது போக்கு ஒன்றையாவது உற்சாகமாகவோ, உபயோகமாகவோ வைத்துக் கொள்வது மிக புத்திசாலித்தனமான அணுகுமுறை. வருமானத்திற்கு ஒரு தொழிலும், மனதிற்கு பிடித்ததாய் ஒரு நல்ல பொழுது போக்கும் அமைத்துக் கொண்டு உயிரோட்டம் உள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சிறிய அரசாங்க வேலையில் இருக்கிறார். அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை உடையவர். அவர் இது வரை ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுள்ளார். அப்படி நடும் போதும் அதைப் பற்றி பேசும் போதும் அவர் முகத்தில் பொங்கும் பெருமிதம் பார்க்கவே அலாதியாக இருக்கும். இப்படி சிலர் சமூக சேவை எதிலாவது முழு மனதுடன் ஈடுபட்டு உயிரோட்டமாய் வாழ்க்கையை வைத்துக் கொள்கிறார்கள்.

வேலைக்குப் போகாத ஒரு குடும்பத் தலைவி தோட்ட வேலைகளில் மிகவும் ஈடுபாடுடையவர். நடும் செடிகளில் தளிர்க்கும் ஒவ்வொரு இலையிலும், பூக்கும் ஒவ்வொரு பூவிலும் ஆனந்தம் காணும் தன்மை அவரிடம் உண்டு.  இன்னொரு மனிதர் புத்தகப்பிரியர். புத்தகம் ஒன்று கிடைத்து விட்டால் உலகையே மறந்து அதில் ஆழ்ந்து விடுவார். அவருடைய வேலை எந்திரத்தனமாக அமைந்திருந்தாலும் பிடித்த புத்தகங்கள் படித்து வாழ்க்கையில் உற்சாகம் குன்றாமல் அவர் பார்த்துக் கொள்கிறார். இப்படி பலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிடித்த ஒன்றில் ஆர்வமாக ஈடுபட்டு வாழ்க்கை எந்திரத்தனமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சாதனை புரியவோ, சரித்திரம் படைக்கவோ முடியா விட்டாலும் வாழ்க்கை உயிரோட்டமாக இருக்கும்படி இப்படிப் பட்டவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

இப்படி உயிரோட்டமான வாழ்க்கை வாழ்பவர்கள் பெரும்பாலும் உபயோகமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இல்லா விட்டாலும் கூட மற்றவர்களுக்கு உபத்திரவமாக என்றும் மாறுவதில்லை. தங்கள் வாழ்க்கையில் தங்கள் வழியில் நிறைவு காண்பவர்கள் அடுத்தவர்கள் வாழ்க்கையில் அனாவசியமாகக் குறுக்கிடுவதில்லை. அடுத்தவர்களை நோகடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும், துக்கங்களையும் சமாளித்து சீக்கிரமே மீண்டும் விடுகிறார்கள்.

அப்படி உயிரோட்டமில்லாத வாழ்க்கை வாழ்பவர்களோ அதிகமாக அடுத்தவர்களைப் பார்த்தே வாழ்கிறார்கள். பொருளாதார நிலையே மிக முக்கியம் என்று நம்பி சம்பாதிக்கும் முனைப்பில் தனிப்பட்ட இயல்பான திறமைகளையும், ஆர்வங்களையும் பலி கொடுத்து விடுகிறார்கள். பணம், பொருள், சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டே போகும் அவர்கள் வாழ்வில் முன்பு சொன்னது போல ஓட்டம் இருக்கிறது. உயிர் இருப்பதில்லை. ஒரு வெறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெறுமையை நிரப்ப சிலர் போதையை நாடுகிறார்கள், சிலர் கேளிக்கைகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள், சிலர் பதவி அதிகாரம் தேடி அடைகிறார்கள். வெளிப்பார்வைக்கு அந்த வாழ்க்கை வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும்  தோன்றினாலும், நிரப்ப முடியாத வெறுமையாகவே அப்படிப்பட்ட வாழ்க்கை இருந்து விடுவது தான் சோகம்.

எனவே உங்கள் வாழ்க்கையில் உயிரோட்டம் உள்ளதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். மாற்றம் தேவையானால் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்தவர் பார்வைக்கு வெற்றிகரமான வாழ்க்கையாய் தெரிந்து உள்ளுக்குள் வெறுமையை உணரும் வாழ்க்கையாக இருக்கும் அவலம் மட்டும் வேண்டவே வேண்டாம்.

-என்.கணேசன்
நன்றி: நிலாச்சாரல்


15 comments:

  1. மனங்கனிந்த ஆங்கல புத்தாண்டு வாழ்த்துகள் கணேசன் சார்.......
    உங்கள் புத்தாண்டு பதிவை படிப்பத்ற்க்காகவே இரவெல்லாம் காத்துக்கொண்டிருந்தேன்......

    மிக அருமையான தகவல்கள் சார்.......நானும் இதையே தான் புத்தாண்டு தொடக்க நேரங்களில் நினைத்துக்கொண்டிருந்தேன்...

    மிக்க சந்தோசம்.....

    உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உயிரோட்டம் வெறும் ஓட்டமாக இல்லாமல் உயிருடன் இருக்கவேண்டி அருமையான பதிவினை கொடுத்ததற்கு நன்றி! சகோதரர்க்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்களின் இந்த blog -ஐ வசிக்க வந்தேன்-//http://enganeshan.blogspot.co.uk/2009/08/blog-post_10.html//-அதனினும் மேலாக உங்களின் இந்த புத்தாண்டு செய்தி அமைந்து விட்டது. நன்றி .ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
    பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். My heartiest wishes for a very prosperous New Year.

    ReplyDelete
  4. உயிரோட்டம் உள்ள சிறப்பான புத்தாண்டு பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
    .
    இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. Excellent post... good start to the new year... inspiring and thought provoking.. thanks a lot sir..

    ReplyDelete
  6. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உயிரோட்டம் அவசியம் என்பதை தெளிவாக எடுத்து சொல்லும் அருமையான கட்டுரை.

    ReplyDelete
  7. சகலரும் வெளியேயுள்ள விசயத்தோடு பங்கு கொண்டு இருக்கும்போது நீங்கமட்டுமே உள்ளே விசாரணையில் லயித்து இருப்பீர்கள் .இது உங்களின் பலம் மட்டுமல்ல மற்றவருக்கு பாடம் .

    ReplyDelete
  8. வளமான தொடக்கம்! வாழ்த்தும் நன்றியும்!

    ReplyDelete
  9. Sir,

    Happy New Year!!!.. Epidi Sir epidi... epo na in tha siteku vanthalum enaku en kelviku ellam vidai matru innum athae pol seyalpada urchagamum kidaikuthu. Thodarnthu eluthungal.

    ReplyDelete
  10. உயிரோட்டம் உள்ள எழுத்துக்கள், உயிரோட்டமுள்ள பதிவு, பல உயிர்களுக்கும் உயிரோட்டத்தை உருவாக்கக்கூடிய பதிவு. இந்த புதிய வருடத்தில் உங்களுடைய blog பல ஆயிரக்கணக்கான (lakhs, crores, million,billion,trillion etc ) மக்களுக்கும் சென்றடைந்து அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் பயனுள்ள மாற்றங்களை அடைய பிராத்திக்கிறேன்.

    Wish you and your family a very happy and prosperous new year 2013

    நன்றியுடன்,
    Saravanakumar.B
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete
  11. Excellent way of thinking to live a real life.
    -N.Valasubramaniam

    ReplyDelete
  12. thank you so much happy newyear-2013 by dinesh

    ReplyDelete
  13. Beautiful! Thanks.
    By belated wishes to you!



    Packirisamy N

    ReplyDelete