Thursday, December 6, 2012

பரம(ன்) ரகசியம் – 21



ந்த மனிதன் தமிழாராய்ச்சி வல்லுனரிடம் சொன்னான். “என்னவோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு. தயங்காமல் சொல்லுங்க

எச்சிலை விழுங்கியவராக தமிழ் வல்லுனர் சொன்னார். “நான் சொல்றது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விஷயமா உங்களுக்குத் தோணலாம்.. ஆனால் நடந்ததென்னவோ உண்மை தான்....

பரவாயில்லை சொல்லுங்க

“இந்த ஆராய்ச்சி நடத்திகிட்டிருக்கறப்ப மூணு தடவை ஆராய்ச்சி செய்துகிட்டிருந்த ரூமோட டியூப்லைட் ஃப்யூஸ் ஆச்சு... ஒரு வாரத்துல மூணு தடவை இப்படி ஆனது எனக்கு இயல்பாய் படல. ராத்திரில இந்த பிரச்சினைன்னா பகல்ல யாரோ அடிக்கடி கதவைத் தட்டறாங்க.  போய்ப் பார்த்தா ஆளே இல்லை...

அந்த மனிதன் சொன்னான். “இந்தக் காலத்துல டியூப் லைட் க்வாலிடி அந்த அளவுக்குத் தான் இருக்கு. எல்லாம் சைனா ப்ராடக்ட். அப்படி தான் இருக்கும்.. பகல்ல அடிக்கடி கதவைத் தட்டறது பக்கத்து முனிசிபல் ஸ்கூல் பசங்களா இருக்கும். அவங்களுக்கு அது விளையாட்டு. வேற ஒன்னும் இல்லை...

அவர் மெல்ல தலையசைத்தார்.

அவன் கேட்டான். “எங்களுக்கு முக்கியமாய் தெரிய வேண்டியது ஒன்னு இருக்கு. இந்த சிவலிங்கம் யார் பூஜை செய்யணும்னோ, அதை தீர்மானிக்கிறது யாருன்னோ இந்த ஓலைச்சுவடில இருக்கா?

அப்படி எதுவும் இல்லை. ஆனா இதுல சரியா புரியாதது நிறைய இருக்கு. அதை நான் அப்படியே இப்போதைய தமிழ்ல எழுதியிருக்கேன்

அவன் எழுந்தான். அவர் சொன்னார். “நான் இன்னைக்கே டெல்லி திரும்பலாம்னு இருக்கேன்.... குருஜி கிட்டயும் சொல்லிடுங்க..அவன் தலையசைத்து விட்டு வெளியேறினான்.

வெளியே வந்தவுடன் தஞ்சைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நண்பருக்குப் போன் செய்தான். “எனக்கு அந்த ஓலைச்சுவடி எங்கே இருந்து கிடைச்சுதுன்னு அட்ரஸ் வேணுமே

அது தேனில இருந்து கிடைச்ச ஓலைச்சுவடி. கொடுத்த ஆள் வயசானவர். ஜோதிடர். அட்ரஸைக் குறிச்சுக்கறீங்களா, இல்லை போனில் பேசறீங்களா? போன் நம்பர் வேணும்னாலும் தர்றேன்

நேர்லயே போய் அந்த ஆளைப் பார்க்கறேன். அட்ரஸ் சொல்லுங்க

அந்த நண்பர் விலாசத்தைச் சொல்ல உடனடியாக அங்கிருந்து அந்த மனிதன் தேனி கிளம்பினான். அந்த விலாசத்தைக் கண்டு பிடிப்பது சிரமமாய் இருக்கவில்லை. நகர மையத்திலேயே ஒரு குறுகலான வீதியில் ஓட்டு வீடாக அது இருந்தது. வீட்டின் முன் “இ.சுப்பிரமணியன், ஜோதிடர் என்று சாயம் போன பெயர்ப்பலகை தெரிவித்தது. அழைப்பு மணி இருக்கவில்லை. அந்த மனிதன் கதவைத் தட்டினான்.
முடியெல்லாம் நரைத்த, கதர் சட்டை வேட்டி அணிந்திருந்த முதியவர் கதவைத் திறந்து அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

வணக்கம். நான் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்துல இருந்து வர்றேன்

வணக்கம். உள்ளே வாங்க.என்று வரவேற்றவர் உள்ளே சிறிய வரவேற்பறையில் இருந்த பிரம்பு நாற்காலியைக் காட்டி “உட்காருங்கஎன்றார். உள்ளே இருந்து அந்த ஜோதிடர் சாயலிலேயே இருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் எட்டிப் பார்த்து யாருண்ணா?


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்துல இருந்து வந்திருக்கார்என்று ஜோதிடர் பதிலளிக்க தலையாட்டி விட்டு அவர் மறுபடியும் உள்ளே மறைந்தார்.

ஜோதிடர் அந்த மனிதனுக்கு எதிரில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி “என்ன விஷயமா வந்திருக்கீங்க?என்று கேட்டார்.

எங்க பல்கலைக்கழகத்துல நீங்க கொடுத்த ஓலைச்சுவடிகளை எல்லாம் தான் இப்ப ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கோம். ரொம்ப உபயோகமா இருக்கு.

முதியவர் சொன்னார். “மகிழ்ச்சி

இந்த ஓலைச்சுவடிகள் உங்க கிட்ட எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா? எங்களோட குறிப்புக்காகத் தான் கேட்கறேன்

முக்கால் வாசி ஓலைச்சுவடிகள் பரம்பரை பரம்பரையாய் எங்க கிட்ட இருந்தது. கால்வாசி என் குருநாதர் சிதம்பரநாத யோகி தந்தது...

குருநாதர்னா?

“ஜோதிடத்துல அவர் தான் எனக்கு குருநாதர். அவர் பெரிய யோகி. விடாமல் நாலஞ்சு நாள் சொல்லிக் கொடுப்பார். அப்புறமா ரெண்டு மூணு வருஷம் ஆள் கண்லயே சிக்க மாட்டார். எங்கேயாவது யாத்திரை போயிடுவார். திரும்ப வருவார். சில நாள் ராத்திரி பகலாய் சொல்லிக் கொடுப்பார். மறுபடி காணாமல் போயிடுவார்...முதியவருக்குத் தன் குருநாதரைப் பற்றி சொல்கையில் முகத்தில் பேரன்பு தெரிந்தது.

“அவர் இப்போ...?

“ஆறு வருஷங்களுக்கு முன்னால் சமாதியாயிட்டார்.

சிவலிங்கம் குறித்த ஓலைச்சுவடியைத் தந்தது அவரது குருநாதராகத் தான் இருக்க வேண்டும் என்று அந்த மனிதன் யூகித்தான். ஆனாலும் உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தான். “நீங்க கொடுத்த ஓலைகள்ல ஒரு ஓலைச்சுவடி வித்தியாசமாய் இருந்துச்சு....

“எந்த ஓலைச்சுவடி?

“சித்தர்கள் பூஜை செய்து வந்த சிவலிங்கம் பத்தி எழுதியிருந்த ஓலைச்சுவடி.. சோழர்கள் காலத்தோடது...

ஜோதிடர் ஒரு கணம் மூச்சு விட மறந்து அவனையே கூர்ந்து பார்த்தார். திடீரென்று அவர் முகத்தில் தெரிந்த பெரிய மாற்றம் அவனையும் அவரைக் கூர்ந்து பார்க்க வைத்தது. ஒரு நிமிடம் கழித்து அவனாகவே தொடர்ந்தான். மற்ற எல்லா சுவடிகளை விட அது வித்தியாசமாய் இருந்துச்சு....

ஜோதிடர் மெல்ல சொன்னார். “அது என் குருநாதர் வச்சிருந்தது....

அந்த சிவலிங்கம் பத்தின வேறெதாவது ஓலைச்சுவடிகள் அவர் கிட்ட இருந்ததா?

இல்லை. என் கிட்ட இருந்ததை எல்லாம் தந்துட்டேன். எனக்குப் பின்னாடி அந்த ஓலைச்சுவடிகளை நல்லபடியா பாதுகாக்கிற மாதிரி வீட்டுல யாரும் இல்லை. எல்லாம் இங்க்லீஷ் படிப்பு படிச்சு வேலைல இருக்கிறவங்க. இந்த ஓலைச்சுவடிகள்ல அவங்களுக்கு ஆர்வம் இல்லை.... அதனால தான் எல்லாத்தையும் தந்துட்டேன். அரசாங்கமாவது பத்திரமா வச்சிருக்குமே...

நல்ல காரியம் செஞ்சீங்க... அந்த சிவலிங்கம் பத்தின ஓலைச்சுவடி வேறெதாவது இருந்து உங்க குருநாதர் வேற யார் கிட்டயாவது கொடுத்துட்டு போயிருக்க வாய்ப்பிருக்கா?

“இல்லைஅவர் யோசிக்காமல் சொன்னார்.

அவன் சொன்னான். “அப்படி இருந்தா அதுக்கு நாங்க நல்ல விலை தரத் தயாராய் இருக்கோம்....

இருந்தால் எனக்கு சொல்றதுல என்ன நஷ்டம்?

அவனுக்கு ஏனோ அவர் எதையோ மறைக்கிறார் என்று தோன்றியது. அவரிடம் பேச்சுக் கொடுத்தால் மறைக்கிற விஷயம் என்ன என்றாவது தெரியலாம். ஒன்றும் தெரியாதவன் போல, அந்த ஓலைச்சுவடி மூலம் தான் அப்படி ஒரு சிவலிங்கத்தைப் பற்றி கேள்விப்பட்டவன் போல, அவன் கேட்டான். “அப்படி ஒரு சிவலிங்கம் இருக்குங்களா?

இருக்குன்னு என் குருநாதர் சொன்னார். அவர் பொய் சொல்ல மாட்டார்

“அது இப்ப எங்கே இருக்குன்னு தெரியுமா?

“தெரியலை

நீங்க அந்த ஓலைச்சுவடியைப் படிச்சிருப்பீங்க இல்லையா?

சிறிது தயக்கத்துக்குப் பின் அவர் தலையாட்டினார்.

அவன் அவரையே கூர்ந்து பார்த்தபடி சொன்னான். “நாங்களும் படிச்சுப் பார்த்தோம். பல இடங்கள்ல எங்களுக்கு அர்த்தம் புரியல

அவர் சொன்னார். “எனக்கும் தான்... முக்கியமா அந்த சிவலிங்கத்தோட தன்மைகளைப் பத்தி சித்தர்கள் விளக்கின தமிழ் வேணும்னே முடிச்சுகள் போட்டு எழுதின மாதிரி இருக்கும். அது அந்த சோழ ராஜாவுக்கு மட்டுமல்ல அவ்வளவு சீக்கிரமா யாருக்குமே புரியாது....

அவர் அந்த ஓலைச்சுவடியைப் படித்திருப்பதாக ஒப்புக் கொண்டு அதைப் பற்றி அவரே பேசியதால் அவனுக்கு சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வர முடிந்தது. “ஆனால் உங்கள் குருநாதருக்குப் புரிந்திருக்குமே. அவர் விளக்கி இருப்பாரே?

விளக்கலை. எல்லாத்தையும் எல்லார்னாலயும் விளங்கிக்க முடியாதுன்னு சொல்லிட்டார். அதுக்கு அவசியமும் இல்லைன்னார். ஒரு சொல் சொல்லிட்டார்னா அப்புறம் அவர் அதிலிருந்து மாற மாட்டார். அதனால அப்புறமா நானும் கேட்கலை

அந்த ஓலைச்சுவடி அவர் கிட்ட எப்படி வந்தது?

“அவரோட குருநாதர் அவருக்குக் கொடுத்ததாம். அவரோட குரு ஒரு சித்தர்... அவரை நான் கூட பார்த்ததில்லை. அவர் வசம் அஷ்ட சித்தியும் இருந்ததுன்னு என் குருநாதர் சொல்வார்....

அந்த மனிதன் சொன்னான். “எனக்கு அந்த சிவலிங்கம் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆவலாய் இருக்கு. யார் கிட்ட போய் கேட்டால் தெரியும்

அது தெரிஞ்சிருந்தா நானே அவங்க கிட்ட போய் கேட்டு தெரிஞ்சுகிட்டிருந்திருப்பேன்.

அந்த மனிதனுக்கு இனி எந்த உபயோகமான பதிலும் அவரிடம் இருந்து வராது என்று புரிந்து விட்டது. அவருக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினான்.

அந்த ஜோதிடர் அவனை வழியனுப்பி விட்டு நடந்ததை இன்னும் நம்ப முடியாமல் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடைய குரு சமாதியடைவதற்கு முன் கடைசியாக அவரிடம் அந்த சிவலிங்கத்தைக் குறித்து விசாரித்துக் கொண்டு யாராவது ஒருவன் ஒரு நாள் வருவான் என்றும் அதன் பின் செய்ய  வேண்டியது என்ன என்றும் சொல்லி இருந்தார். ஓலைச்சுவடியில் மட்டுமே இருந்த அந்தத் தகவல்களை வைத்து யாரோ ஒருவர் என்றாவது வந்து தன்னை சந்திப்பார்கள் என்பதை  நம்ப அவருக்கு அப்போது கஷ்டமாகத் தான் இருந்தது. அவர் குருநாதர் அப்போது சொல்லி இருந்தார். “அப்படி ஒருத்தன் வந்தால் சிவலிங்கம் இடம் மாறும் காலம் வந்து விட்டது என்று அர்த்தம்”.....

“ஒரு வேளை நான் உயிரோடு இருக்கும் போது அப்படி யாரும் வரா விட்டால்? நான் செத்ததுக்கப்பறம் வந்தால்?ஜோதிடர் கேட்டார்.

“ஒருத்தருக்கு விதிச்சிருக்கிற வேலை முடியாமல் யாரும் சாகறதில்லை. அதனால நீ இருக்கறப்பவே அது நடக்கும்னு நம்பறேன். அப்படி நடக்கலைன்னா கடவுள் சித்தம் வேற மாதிரி மாறிடுச்சுன்னு அர்த்தம். அவர் அந்த வேலையை இன்னொருத்தர் மூலமா வேறு விதமா நடத்திக்குவார். நமக்கு அதுல யோசிக்க எதுவுமில்லை...

உள்ளே இருந்து அவர் தம்பி அவசரமாக வந்தார். “அண்ணா நான் கோயிலுக்குப் போயிட்டு இப்ப வந்துடறேன்.....

ஜோதிடர் தலையசைத்தார். அவர் தம்பி விரைந்தார்.

தம்பி போனவுடன் கதவைத் தாளிட்டு விட்டு ஜோதிடரும் விரைந்து தனதறைக்குச் சென்று பழைய டிரங்குப் பெட்டி ஒன்றைத் திறந்தார். அதனுள் அவர் குருநாதர் தந்திருந்த அரக்கு வைத்து மூடப்பட்டிருந்த  உறை ஒன்றை எடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த போது அதற்குள்ளே ஒரு விலாசம் எழுதப்பட்டிருந்த காகிதமும் இன்னொரு அரக்கு வைத்து மூடப்பட்டிருந்த உறையும் இருந்தது. அந்த விலாசத்தைப் படித்தார். ஏழெட்டு மணி நேரப் பயணம் செய்ய வேண்டிய தூரம்.... அந்த இன்னொரு அரக்கு வைத்து மூடப்பட்டிருந்த உறையை அந்த விலாசத்தில் சேர்க்க வேண்டும்... ஜோதிடர் நாளையே கிளம்ப முடிவு செய்தார்.

அதே நேரத்தில் அந்த மனிதன் அந்த தெருக்கோடிக்குப் போயிருந்தான். அவனை யாரோ கைதட்டி “சார்.. சார்...என்று அழைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தான். ஜோதிடர் வீட்டில் உள்ளே இருந்து எட்டிப்பார்த்த நபர் தான் மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருந்தான்.

அருகே வந்தவன் மூச்சு வாங்கியபடி சொன்னான். “நீங்க அண்ணா கிட்ட சொல்லிகிட்டு இருந்ததை நானும் கேட்டேன்.... அந்த சிவலிங்கம் பத்தின தகவல்கள் எனக்கு தெரியும்.....

(தொடரும்)

-          என்.கணேசன்

12 comments:

  1. அந்த சிவலிங்கம் பத்தின தகவல்கள் எனக்கு தெரியும்..

    தகவல் அறிய ஆவல் ....

    ReplyDelete
  2. சுந்தர்December 6, 2012 at 6:52 PM

    சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. படிக்கும் போது சிவலிங்கத்தை பற்றிய ஒருவகை பீதி நம்மளையும் தொற்றிக்கொள்கிறது.........!!!!

    நல்ல வேகத்தில் போகிறது கதை.......

    காத்திருபுக்குத்தான் மனம் கவலைக்கொள்கிறது......!!

    ReplyDelete
  4. படிக்கும் போது சிவலிங்கத்தை பற்றிய ஒருவகை பீதி நம்மளையும் தொற்றிக்கொள்கிறது.....!!! அதற்கே சபாஷ் போடவேண்டும்.....

    அந்த சிவலிங்கம் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாகத்தான் இருக்கவேண்டும்.......

    அடுத்தவாரம் வரையில் காத்திருக்க வேண்டுமென்பதை நினைத்தால் உறக்கம் வரமாட்டேன்கிறது கணேசன் சார்.........!!!

    ReplyDelete
  5. மிகவும் ரசித்துப் படித்தேன், தொடருங்கள் பின்தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete
  6. அடுத்த வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் :-)

    ReplyDelete
  7. This style of stroy telling reminding me "Sandilyan" thanks

    ReplyDelete
  8. எதிர்பாராத இடத்திலெல்லாம் வில்லன்கள் முளைக்கிறார்கள்... மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  9. விறுவிறுப்பான தொடர். ஓய்வில்லாத உழைப்புக்கிடையே வாரம் ஒரு நாள் தங்கள் தொடரைப் படிக்க செலவிடுகிறேன்.

    ReplyDelete
  10. 21.12.2012 vulaga alivai pattria vunmaihal ethavathu irunthal sollungal please.

    ReplyDelete
  11. Want to know more about that Shivalinga..waiting or the next episode.. interesting write up..!!

    ReplyDelete
  12. Unfolding twists !!

    Interesting to hear about the palm leaves and wondering whether the limited people (palm leaves experts)
    can actually get the real meaning out of it.

    However, awaiting Eshwar to fold mysteries ..

    /PK Pillai

    ReplyDelete