பார்த்தசாரதியை அனுப்பியவுடன் முதல் வேலையாக குருஜி போனில் ஒரு நபருடன்
பேசினார். பார்த்தசாரதியுடன் நிகழ்ந்த சந்திப்பை விவரமாகச் சொன்னார். குருஜியைப்
போலவே அந்த நபரும் பார்த்தசாரதி சொன்ன தகவலைக் கேட்டுத் திகைத்தது போலத் தான்
தெரிந்தது. அந்த நபர் மௌனம் சாதித்தார்.
“நீ என்ன நினைக்கிறாய்?”
“என்ன நினைக்கிறதுன்னு தெரியலை குருஜி...
இந்த விஷயத்தை நானும் முதல் தடவையா தான் கேள்விப்படறேன். வேற யாரும் இதை என் கிட்ட
சொன்னதில்லை...”
“கிழவியைத் தவிர அந்தக் காலத்து ஆள்கள்
அங்கே யாருமே இல்லையே.. ஆனா கிழவி கூட முழுசா கேட்டு தெரிஞ்சுக்கலை... நம்பாதது
காரணமாய் இருக்கலாம்...”
”ஆனா நீங்க பார்த்தசாரதி கிட்ட சொன்னபடி இத்தனை காலம் –
நம்ம கணக்குப்படி ஆயிரம் வருஷம் – அந்த சிவலிங்கம் யார் யார் கைக்குப்
போகணும்கிறதை ஆரம்ப ஆட்களே தீர்மானிச்சுகிட்டு இருக்க முடியாது. அப்படி
தீர்மானிக்கிற ஆட்கள் அந்தந்த காலத்துக் காரங்கன்னா அந்த ஆள்களைத் தீர்மானிக்கிறது
யாருன்னு கேள்வி வருது....”
”அதே நேரத்துல பசுபதி கைல வர்ற வரைக்கும் அப்படி யாரோ
தேர்ந்தெடுத்து வந்த மாதிரி தான் பசுபதியோட அப்பா நினைச்ச மாதிரி இருக்கு...
பசுபதி கூட தன் சாவை முதல்லயே எதிர்பார்த்தது, தனக்குப் பின்னால தம்பி பேரன்
ஈஸ்வர் பேரைச் சொல்லிட்டு போனது, அவனும் அதை மதிச்சு இந்தியா வர்றது எல்லாம்
அலட்சியம் செய்ய முடியாத விஷயங்கள்... இதுல அந்த சிவலிங்கத்து மேல இருந்த
வித்தியாசமான பூக்கள் வேற குழப்புது... உன் ஆள் அதை எனக்கு அனுப்பி இருந்தான்... எனக்கும்
அந்த வகை பூக்களை இது வரைக்கும் பார்த்ததாய் ஞாபகம் இல்லை.... அந்தப் பூக்களை ஒரு
ஆராய்ச்சியாளர் நண்பருக்கு அனுப்பி இருக்கிறேன்....”
”அந்தக் காமிரா மாட்டினதுக்கப்புறம் வித்தியாசமாய்
எதையும் பார்க்கலைன்னு என் ஆள் சொன்னான்.. நீங்க அது சாமி வேலை அல்ல ஆசாமி
வேலைன்னு சொன்னதையும் சொன்னான்... குருஜி நீங்க சொல்ற மாதிரி ஆசாமி வேலைன்னா அது
நமக்கு ஆபத்தான செய்தி தான்....”
கேட்ட குரலில் லேசான
பயத்தைப் படிக்க முடிந்த குருஜி புன்னகை செய்தார். பின் தைரியப்படுத்தும் விதமாகச்
சொன்னார். “பயப்பட ஒண்ணும் இல்லை... சிவலிங்கம் உள்பட எதுவுமே நம் கை மீறிப்
போகலை... அதனால பயப்படாதே.. நான் அலட்சியம் செய்ய முடியாத விஷயங்கள்னு சொன்னதும்,
ஆசாமி வேலைன்னு சொன்னதும் பயப்படுத்த அல்ல... நாம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்
இன்னும் இருக்குன்னு சொல்ல வந்தேன்... போலீசும், ஈஸ்வரும் அதை தெரிஞ்சுக்கறதுக்கு
முன்னாடி நாம தெரிஞ்சுக்கறது முக்கியம்னு சொல்ல வந்தேன்.. நமக்கு தெரிஞ்சுக்க
எங்கே போகணும், என்ன செய்யணும்னு தெரியும்.... அவங்களுக்குத் தெரியாது... அதனால
நாம சீக்கிரமா செயல்படணும்...”
“புரிஞ்சுது குருஜி. நான் நாளைக்கே
கிளம்பறேன்”
விமான நிலையத்தில் மீனாட்சி மருமகனுக்காகக் காத்திருந்தாள். ஈஸ்வர்
வரும் விமானம் இன்னும் இருபது நிமிடங்களில் வந்து விடும் என்று சொன்னார்கள்.
காத்திருக்கையில் மனம் தானாக அண்ணனின் நினைவுகளில் ஆழ்ந்தது....
சங்கரைப் போன்ற ஒரு அறிவாளியை அவள் இது
வரையில் பார்த்ததில்லை. அவளுக்கு அவனைப் போல் படிப்பு சிறப்பாக வந்ததில்லை. எல்லா
சந்தேகங்களையும் அண்ணனிடம் தான் கேட்பாள். சில சமயங்களில் அவள் ஒரு சந்தேகத்தையே
பல முறையும் கேட்பாள். முதல் தடவை சொல்லித் தரும் போதிருக்கும் அதே பொறுமை தான்
பத்தாவது தடவை சொல்லும் போதும் அவனுக்கு இருக்கும். சிறு சலிப்பு கூட அவன்
குரலிலோ, முகத்திலோ யாரும் கண்டு பிடிக்க முடியாது. இப்போது யோசித்தாலும் அண்ணன்
பொறுமை மகத்தானது என்று அவளுக்குத் தோன்றுகிறது. இரண்டாவது தடவை ஏதாவது சொல்ல
நேர்ந்தால் கூட அவள் மகன் மகேஷே சலித்துக் கொள்கிறான். “என்னம்மா, ஒரு தடவை
சொன்னால் புரியாதா?”.
என்றுமே அவள் அண்ணன் தன்னை
உயர்ந்தவனாகவும், அவளைக் குறைந்தவளாகவும் நினைத்ததில்லை. யாரிடமும் தங்கையை அவன்
விட்டுக் கொடுத்ததில்லை. தங்கை மேல் அவன் உயிரையே வைத்திருந்தான். பரமேஸ்வரன் அந்த
நாட்களில் அண்ணனையும் தங்கையையும் பாசமலர் சிவாஜி கணேசன், சாவித்திரி என்று
கிண்டல் செய்வார். அந்தக் கிண்டலிலும் ஒரு பெருமிதம் இருக்கும்.
அப்படிப்பட்ட அண்ணனை அவன் திருமண
நாளிற்குப் பிறகு அவள் நேரில் சந்தித்ததில்லை. அண்ணனும் தங்கையும் கடைசி வரை
போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்திருந்தார்கள். அவளுடைய திருமணத்திற்கு முன் அவள்
போனில் அழுதிருக்கிறாள். “நீ இல்லாமல் எனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம்... நீ
வீட்டுக்கு வராட்டி பரவாயில்லை. மண்டபத்துக்காவது வாண்ணா... நான் வேணும்னா அப்பா
கிட்ட நீ வந்தா தான் நான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லிடட்டுமா”
அண்ணனின் வார்த்தைகள் இப்போதும் அவளுக்கு
நினைவிருக்கிறது. “மீனாட்சி... இப்ப அவருக்கு நீ ஒருத்தி தான் கொஞ்சமாவது ஆறுதலா
இருக்கே. நீ அப்படி சொல்லிட்டா அவரால
தாங்க முடியாதும்மா.. இனியும் அவர் மனசு நோக வேண்டாம்மா... உன் அண்ணன் மனசளவுல அங்கே தான் இருப்பேன்ம்மா.
கல்யாணத்துக்கு நான் வந்தா அப்பா காயத்தை நான் திரும்பக் கீறி விட்ட மாதிரி
இருக்கும்..”
விமானம் வந்ததை அறிவித்தார்கள். அவளுடைய
பரபரப்பு அதிகமாகியது. பார்க்க ஈஸ்வர் எப்படி இருப்பான் என்று அவளுக்குத்
தெரியும். ஒருசில முறை பேசியதில் அவளுடைய அண்ணன் அளவுக்கு அவன் சாது அல்ல என்றும்
தெரியும். அண்ணன் சொல்லியும், பாட்டிக்காக இணையத்தில் அவனைப் பற்றி நிறைய
படித்தும் அவன் புத்திசாலித்தனமும் தெரியும். ஆனால் தனிப்பட்ட முறையில் இன்னும்
அவன் எப்படி என்பது பிடிபடவில்லை....
வெளியே வரும் பயணிகள் ஒவ்வொருவராகப்
பார்த்தபடி நின்றவள் அவனைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் கையசைத்தாள். அவன்
புகைப்படங்களில் பார்த்ததை நேரில் கூடுதலாக அழகாகவும், கம்பீரமாகவும் இருப்பதாகத்
தோன்றியது.
மீனாட்சியைப் பார்த்த அவன் புன்னகை
செய்தபடி அவளை நெருங்கினான். அண்ணன் நினைவு ஒரேயடியாக அவளை ஆக்கிரமிக்க அது ஒரு
பொது இடம் என்பதைக் கூட மறந்தவளாக அவனைக் கட்டிக் கொண்டு கதறி அழுதாள்...
ஈஸ்வர் அவளுடைய அழுகையை சிறிதும்
எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவள் மனநிலையை அவனால் படிக்க முடிந்தது. அவளுடைய
அண்ணன் இறந்த பின் முதல் முதலாக அண்ணனின் மகனைப் பார்க்கும் போது அவளால் தன்னைக்
கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த அழுகை அவளுடைய அண்ணனுக்காக!...
ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்ட
மீனாட்சிக்கு அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று வெட்கமாக இருந்தது. அவன் டீ ஷர்ட் அவளது கண்ணீரில் நன்றாக ஈரமாகி
இருந்தது. “மன்னிச்சுக்கோ... ஈஸ்வர்... நான் என்னவோ சின்னக் குழந்தை மாதிரி....”
ஈஸ்வர் நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
“பரவாயில்லை அத்தை...”.
அவளுடைய ஆயிரம்
வார்த்தைகள் சொல்லி இருக்க முடியாத பாசத்தை அவளுடைய ஐந்து நிமிட அழுகை அவனுக்கு
உணர்த்தியது.
மீனாட்சி மகேஷை
அழைத்து வராதது நல்லதாகப் போயிற்று என்று நினைத்துக் கொண்டாள். அவன் இங்கே இருந்திருந்தால்
பல்லைக் கடித்துக் கொண்டு “என்னம்மா நீ சுத்த பட்டிக்காடாட்டம்...” என்று சீறி இருப்பான்.
மீனாட்சி ஈஸ்வரிடம்
கேட்டாள். “அண்ணி எப்படி இருக்காங்க?”
“அம்மா சௌக்கியமா இருக்காங்க அத்தை”
இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே
வந்தார்கள். வெளியே சூரியன் சிவப்பாய் உதயமாகிக் கொண்டிருந்தான். ஈஸ்வர் சூரியனை ரசித்தபடி நடந்தான். காரில்
ஏறும் போது கேட்டான். “வீடு எவ்வளவு தூரம்?”
“35 கிலோ மீட்டர் இருக்கும்... ஏன்
கேட்கிறாய்?”
“இல்லை இந்த அதிகாலைல இங்க வர்றதுக்கு
நீங்க எத்தனை மணிக்கு எழுந்து கிளம்பி இருப்பீங்கன்னு நினைச்சேன்....”
மீனாட்சிக்கு அண்ணன் நினைவு வந்தது.
சங்கரின் பிறந்த நாளிற்கு அவள் அதிகாலை சீக்கிரமே எழுந்து நிறைய பட்சணங்கள்
செய்வாள். சாப்பிடும் போது சங்கர் கரிசனத்துடன் தங்கையைக் கேட்பான். “நீ எத்தனை
மணிக்கு எழுந்திருந்தாய் இத்தனை செய்வதற்கு?”
மீனாட்சி கண்கள் ஈரமாக மருமகனைப்
பார்த்தாள். அப்பாவைப் போலவே பிள்ளையும் இருக்கிறான். சின்னச் சின்ன விஷயங்களைக்
கூட ஆழமாய் கவனிக்கிறான்... “நாலு மணிக்கு எழுந்திருச்சுட்டேன். அஞ்சே காலுக்கு
கிளம்பினேன்....”
”நான் ஒரு டாக்சியிலயே வந்திருப்பேனே அத்தை...
உங்களுக்கேன் சிரமம்”
“இதுல என்ன சிரமம் இருக்கு.... நீ முதல்
முதலா வந்திருக்கே...”
ஈஸ்வருக்கு அத்தையின் கண்கள் மறுபடி
ஈரமானதற்கு காரணம் விளங்கவில்லை. அத்தை அன்பு நிறைந்தவளாகவும், வெள்ளை
மனதுடையவளாகவும் இருந்தது பிடித்திருந்தது. அப்பா அவளைக் காரணம் இல்லாமல் அவ்வளவு
நேசிக்கவில்லை என்று தோன்றியது. அவர் வாழ்ந்த வரை ஒவ்வொரு ஞாயிறும் தங்கைக்காக அரை
மணி நேரம் ஒதுக்கி பேசுவார். அந்த அரை மணி நேரத்தில் இருபது நிமிடம் பேச்சு
அவர்களுடைய தந்தையைப் பற்றியதாக
இருக்கும். அதை ஈஸ்வர் அவரிடம் எப்போதும்
கிண்டலடிப்பான். “ஒரு ஸ்பெஷலான அப்பா. எப்ப பார்த்தாலும் அவரைப் பத்தியே பேச்சு...”
ஆனால் எப்போதுமே சங்கர் தன் தந்தையை
விட்டுக் கொடுத்ததில்லை. ”ஆமாடா எங்கப்பா ஸ்பெஷலானவர் தான்” என்பார்.
”ஆமா. மகன் தன் இஷ்டப்படி கல்யாணம் செய்துட்டான்கிறதுக்காக
இருபது வருஷத்துக்கு மேல ஆன பிறகும் ஒரு தடவை கூட பேசணும்னு தோணாத அப்பா ஸ்பெஷல்
தான்”
சங்கர் பதில் சொல்ல மாட்டார். ஒரு
முறை விடாப்பிடியாக ஈஸ்வர் பரமேஸ்வரனை படுமோசமாக விமரிசித்து விட சோகம் முகத்தில்
இழையோட சங்கர் சொன்னார். “உனக்கு சொன்னா புரியாது ஈஸ்வர். எங்கப்பா என்னை நேசிச்ச
மாதிரி உலகத்துல எந்த அப்பாவும் தன் பிள்ளையை நேசிச்சிருக்க முடியாது”
அதனாலேயே அவருடைய மரணத்திற்குப் பின்
பரமேஸ்வரன் மேலுள்ள கோபம் பெருங்கோபமாக அவன் மனதில் குமுற ஆரம்பித்தது. அவனால்
அவரை மன்னிக்க முடியவில்லை.
அவன் முகத்தில் இறுக்கம் தெரிந்ததைக்
கவனித்த மீனாட்சி “என்ன ஆச்சு ஈஸ்வர்?”
“உங்கப்பாவை நினைச்சேன்”
மீனாட்சிக்கு முகம் வாடியது. ’நினைக்கும்
போதே இப்படி முகம் மாறுகிறானே? தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே சுமுக உறவு
வரவழைக்க முடியுமா?’
‘எங்கப்பா உனக்கு ஒண்ணுமில்லையா? அன்னைக்கு
போனில் பேசறப்ப கூட சார்னு கூப்பிடறே!”
“சார்னாவது கூப்பிட்டேனேன்னு
சந்தோஷப்படுங்க அத்தை”
சற்று முன் அப்பாவைப் போலவே பிள்ளை என்று
நினைத்து சந்தோஷப்பட்ட மீனாட்சி இது போன்ற கோபம் சங்கருக்கு என்றுமே யார் மீதும்
வந்ததில்லை என்பதை நினைவுகூர்ந்தாள்.
ஈஸ்வர் பேச்சை மாற்றினான். மகேஷ் பற்றியும்
விஸ்வநாதன் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தான்.
மகனைப் பற்றி சொல்லும் போது மீனாட்சி
சொன்னாள். “...அவன் காலைல எழுந்திருக்கிறதுல கொஞ்சம் சோம்பேறி. லேட்டா தான்
எழுந்திருப்பான். இல்லாட்டி இன்னைக்கு என் கூட அவனும் ஏர்போர்ட் வந்திருப்பான்...”
தன் மகனைப் பற்றி அவன் குறைவாய் நினைத்து
விடக் கூடாது என்று அவள் சொன்ன சின்னப் பொய்யை ஈஸ்வரால் புரிந்து கொள்ள முடிந்தது.
அத்தையைப் பார்த்து சின்னதாய் அவன் புன்னகைத்தான்.
கடுகடுவென்று இருந்த அவன் முகம்
புன்னகைக்கு மாறியது மீனாட்சி ஆசுவாசத்தைத் தந்தது. மகனின் பெருமைகளை அவள்
சந்தோஷமாக மருமகனிடம் சொல்ல ஆரம்பித்தாள். ஈஸ்வர் புன்னகையோடு கேட்டுக் கொண்டே
வந்தான்.
வீடு வந்து சேர்ந்தார்கள்.
(தொடரும்)
-
என்.கணேசன்
மிகவும் சுவாரசியமாகப் போகிறது. சிவலிங்கத்தின் இரகசியமும், குடும்பத்தினுள்ளே நடக்கும் பாசப் போராட்டங்களும் இணைகோடுகளாகப் போய்க் கொண்டு இருப்பது சிறப்பு. ஈஸ்வர், பரமேஸ்வரனை சந்திக்கும் கட்டத்திற்காகக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஈஸ்வரின் இந்திய விஜயம் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது !
ReplyDeleteBoss,
ReplyDeletePinringa...very nice
I cant believe that this is already 17th episode. Continue and waiting for next week.
ReplyDeleteவிறுவிறுப்பாகச் செல்லும் கதை அடுத்த வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது...
ReplyDeleteகதை நல்லா போகுது...
ReplyDeleteமேலும் சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...
ReplyDeletevery very interesting thodar.
ReplyDeleteஈஸ்வரின் குணங்களும் மீனாக்ஷி தன் அண்ணன் சங்கர் மீது வைத்திருக்கும் பாசத்தையும் மிக அருமையாக சொல்லி இருக்கீங்கப்பா..
ReplyDelete