Thursday, August 30, 2012

பரம(ன்) ரகசியம்! – 7



ந்த மனிதனுக்கு அந்த முதியவரின் மர்மப் புன்னகைக்குப் பொருள் விளங்கவில்லை. ஏதோ ஒரு தனிப்பட்ட நகைச்சுவையான விஷயத்தை அவர் நினைத்துக் கொண்டது போலத் தோன்றியது. மிகவும் இக்கட்டான நிலைமையைச் சொல்லும் போது இந்த விதமான எதிர்கொள்ளல் இயல்பான ஒன்றாய் அவனுக்குத் தோன்றவில்லை. யோசித்துப் பார்த்தால் அவரிடம் எதுவுமே இயல்பாக இல்லை என்பதையும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. பல விஷயங்களில் அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருந்தார்.

வஜ்ராசனமும், ஆழ்நிலை தியானமும் சாத்தியப்பட்ட அந்த மனிதருக்கு தெய்வ நம்பிக்கை இருந்தது போலத் தோன்றவில்லை. அவர் அறையில் ஆன்மிகச் சின்னங்களோ, அடையாளங்களோ இல்லை. எண்பதிற்கு மேற்பட்ட வயது இருந்தாலும் அவர் நடை, உடை, பாவனை, இருப்பு எதிலுமே முதுமையின் தாக்கம் இல்லை. அதிகார வர்க்கம், கோடீஸ்வரர்கள், மேதைகள் எல்லாம் அவரைத் தேடி வருவதும் ஆலோசனைகள் கேட்பதும் தினசரி நடப்பவை. அதே போல அடித்தள மக்கள், பரம ஏழைகள், மந்த புத்திக்காரர்கள் போன்ற எதிர்மாறானவர்களும் அவரைத் தேடி வருவதுண்டு. இந்த இரண்டு கூட்டங்களுக்கும் ஒரே வகையான வரவேற்பு அவரிடம் இருக்கும். ஒருசில நேரங்களில் மேல்மட்ட ஆட்களைக் காக்க வைத்து விட்டு அடித்தள மக்களை உடனடியாக அழைத்துப் பேசுவதும் உண்டு. தொடர்ந்து சில நாட்கள் ஆட்களை சந்தித்துப் பேசுபவர் திடீர் என்று சில நாட்கள் முழுவதும் தனிமையில் கழிப்பதுண்டு. எல்லோராலும் பொதுவாக “குருஜிஎன்றழைக்கப்பட்ட அந்த முதியவர் எந்தக் கணிப்பிற்கும் அடங்காத புதிராகவே இருந்தார்....

திடீரென்று குருஜி சொன்னார். “நான் நாளைக்கே நித்ய பூஜை செய்ய ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன். கவலைப்படாதே

அந்த மனிதன் சிறிது நிம்மதி அடைந்தவனாகத் தலையசைத்தான். அப்புறம்... இன்னொரு விஷயம்..

”என்ன

“இந்தக் கேஸை திறமைசாலியான ஒரு போலீஸ் அதிகாரி கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. பணம், பதவி, அதிகாரம், பயம்ங்கிற இந்த நாலுக்கும் வளைஞ்சு கொடுக்காத ஆளுன்னு பெயரெடுத்தவராம்....சொல்லும் போது அவன் குரலில் கவலை தெரிந்தது.

அப்படிப்பட்ட ஆளுங்க சிலர் எப்பவுமே எங்கயும் இருக்கத்தான் செய்வாங்க. அது இயற்கை தான்.... அவர் சர்வ சாதாரணமாகச் சொன்னார்.

பார்க்க கதாகாலட்சேபம் பண்றவர் மாதிரி தெரிஞ்சாலும் அழுத்தமான ஆளு, ரொம்பவும் புத்திசாலின்னு சொல்றாங்க. அவர் எடுத்துகிட்ட கேஸ் எதையும் கண்டுபிடிக்காமல் விட்டதில்லைன்னு போலீஸ் டிபார்ட்மெண்டுல பேசிக்கிறாங்க....

“அந்த போலீஸ் அதிகாரி பெயர் என்ன?

“பார்த்தசாரதியாம்....

குருஜி புன்னகையுடன் சொன்னார். “அந்த ஆள் அடிக்கடி என்கிட்ட வர்றவர் தான்


முனுசாமிக்கு போலீஸின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே சலித்து விட்டது. பசுபதியின் தோட்ட வீட்டில் ஒரு அதிகாரி கேள்விகள் கேட்டார். அவன் பதில் சொன்னான். அடுத்ததாகப் போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து இன்னொரு அதிகாரி அவனிடம் கேள்விகள் கேட்டார். அதற்கும் அவன் பதில் சொன்னான். இப்போது இன்னொரு முறை அவனிடம் கேள்வி கேட்க அந்த தோட்ட வீட்டிற்கு புதிய அதிகாரி வரப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்ட போது அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஒரே விதமான கேள்விகளுக்கு எத்தனை தடவை தான் பதில் சொல்வது?. அதிலும் அவர்கள் “நீயே ஏன் கொன்றிருக்கக் கூடாது? என்ற வகையில் கேட்டது அவனை மனதை மிகவும் நோகடித்து விட்டது. இனி இந்த ஆளும் அதையே தான் கேட்பாரோ?

அவனை காலை பத்து மணிக்குத் தோட்ட வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தார்கள். அவன் ஒன்பதே முக்காலுக்குப் போன போதே தோட்டத்தில் ஒரு நாற்காலியில் அவன் இது வரை பார்த்திராத அந்த புதிய போலீஸ் அதிகாரி அமர்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் விசாரித்த இரண்டு போலீஸ் அதிகாரிகளிடம் தெரிந்த ஒருவித முரட்டுத்தனம் இவரிடம் அவனுக்குத் தெரியவில்லை. நீண்ட காலம் பழகியவர் போல அவனைப் பார்த்துப் புன்னகைத்த அவர் அவனை எதிரில் உள்ள நாற்காலியில் உட்காரச் சொன்னார். “வா முனுசாமி, உட்கார்...

பரவாயில்லைங்க ஐயா. நான் நிக்கறேன்....

“உனக்கு மூலம் எதுவும் இல்லையே?

“ஐயோ அதெல்லாம் இல்லைங்க...

“அப்ப உட்கார்

பார்க்க கனிவாய் தெரிந்தாலும் இந்த ஆள் வில்லங்கமான ஆளாய் இருப்பார் போலத் தெரிகிறதே என்று நினைத்தவனாக அவசரமாக நாற்காலியின் நுனியில் முனுசாமி உட்கார்ந்தான்.

பார்த்தசாரதி முனுசாமியை ஆழமாகப் பார்த்தார். இந்தக் கொலை வழக்கு ஒரு சவாலாகவே அவருக்கு அமைந்திருந்தது. கொன்றவனும் செத்து விட்டது, தடயங்கள் எதுவும் இல்லாதது, கொலை செய்யப்பட்ட பசுபதிக்கு வெளி உலகத் தொடர்புகள் இல்லாதது, சிவலிங்கம் பற்றி அதிகத் தகவல்கள் கிடைக்காதது எல்லாமாகச் சேர்ந்து ஆரம்பத்திலேயே விசாரணைக்கு அனுகூலமாக இல்லை. எடுத்தவுடன் பசுபதியின் தம்பி பரமேஸ்வரன் மேல் தான் சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. மொத்த சொத்தையும் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன்பே தம்பிக்கு பசுபதி எழுதிக் கொடுத்து விட்டார் என்ற தகவல் சந்தேகத்தை ஆதாரம் இல்லாததாக்கி விட்டது.

அடுத்ததாக பசுபதியிடம் அதிகமாய் வந்து போய்க் கொண்டிருந்த வேலைக்காரன் முனுசாமி மேல் போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் விசாரணையில் அவன் மேல் சந்தேகப்படவும் எந்த முகாந்திரமும் இருப்பதாகப் போலீசாருக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அந்தக் கிழவரை மிகவும் நேசித்ததாகத் தெரிகிறது என்று முந்தைய இரண்டு போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருந்தனர். அவனிடமிருந்தும் அவர்களுக்கு கொலையாளியைக் கண்டுபிடிக்க எந்தத் துப்பும் கிடைக்கவில்லை ....

பார்த்தசாரதியின் பார்வையால் முனுசாமி தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.
பார்த்தசாரதி பார்வையின் தீட்சண்யத்தைக் குறைக்காமல் கேட்டார். “முனுசாமி நீ இங்கே எத்தனை வருஷமாய் வேலை பார்க்கிறாய்?

“வர்ற ஆவணிக்கு இருபத்தியாறு வருஷம் முடியுதுங்கய்யா

பசுபதி இங்கே வந்து கிட்டத்தட்ட அறுபது வருஷங்கள் ஆகுதுன்னு கேள்விப்பட்டேன். உனக்கு முன்னால் இங்கே யார் வேலைக்கு இருந்தாங்க

என் தாய் மாமன் இருந்தாருங்கய்யா. அவருக்கு வயசாயிட்டதால அப்புறம் என்னை இங்கே வேலைக்கு சேர்த்து விட்டார்...

“அவர் இப்ப இருக்காரா?

“இல்லை ஐயா அவர் செத்து இருபத்திஅஞ்சு வருஷம் ஆயிடுச்சுங்க

பசுபதி ஆள் எப்படி?

“அவரு மனுசரே இல்லைங்க மகானுங்க. இத்தனை வருஷத்துல அவர் ஒரு தடவை கூட கடுமையா பேசினது இல்லைங்க... ஏன் கோபமா என்னைப் பார்த்தது கூட இல்லைங்க... அன்பைத் தவிர அவருக்கு வேறெதுவும் தெரியாதுங்க..

ஆத்மார்த்தமாக வந்தது பதில்.

“முனுசாமி அந்த சிவலிங்கத்தைப் பத்தி சொல்லேன்

“அது சாதாரண சிவலிங்கம் தான் ஐயா. நாம கோயில்கள்ல எல்லாம் பார்ப்போமே அந்த மாதிரி தான் இருக்கும்....

பார்த்தசாரதி ஒரு நண்பனிடம் சந்தேகம் கேட்கிற தொனியில் தன் சந்தேகத்தைக் கேட்டார். “ஏன் முனுசாமி, ஒரு சாதாரண கல் லிங்கத்திற்காக யாராவது ஒரு ஆளைக் கொல்வாங்களா?

முனுசாமி குழப்பத்துடன் சொன்னான். “அது தான் எனக்கும் புரிய மாட்டேங்குது ஐயா

அந்த சிவலிங்கத்துக்குள்ளே ஏதாவது தங்கம், வைரம் மாதிரி ஏதாவது வச்சிருந்திருக்கலாமோ?

முனுசாமி உறுதியாகச் சொன்னான். “அப்படி வச்சிருந்தா பசுபதி ஐயா அதுக்கு பூஜை செய்துகிட்டிருக்க மாட்டாருங்க ஐயா. காசு, பணம் எல்லாம் அவருக்கு தூசிங்க ஐயா.

“நீ அந்த சிவலிங்கத்தைத் தொட்டுப் பார்த்திருக்கிறாயா?

“இல்லைங்கய்யா

“அந்த பூஜை அறைக்குள்ளே போய் அதைப் பக்கத்தில் பார்த்திருக்கிறாயா?

“இல்லைங்கய்யா

“ஏன், பசுபதி ஜாதி எல்லாம் பார்ப்பாரோ

“சேச்சே அப்படிப் பார்க்கற ஆள் அவரில்லைங்க. எத்தனையோ தடவை என் கூட சரிசமமா இருந்து தோட்ட வேலை செஞ்சிருக்காரு. என் வீட்டுல இருந்து கொண்டு வந்து எப்பவாவது பலகாரம் கொடுத்தா மறுக்காமல் வாங்கி சாப்பிடுவாரு. என்னை வீட்டு ஆளா தான் நடத்தி இருக்காருங்க ஐயா. மாத்தி சொன்னா என் நாக்கு அழுகிடும்

பின்னே எதனால நீ சிவலிங்கத்துக்குப் பக்கத்துல போனதோ, தொட்டுப்பார்த்ததோ இல்லை...

“ஏன் ஐயா, கோயிலுக்குப் போறோம். அங்க சாமிய தொட்டா பார்க்கறோம். கொஞ்ச தூரத்துல இருந்தே தானே கும்பிடறோம். அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன்... ஒரு வேகத்தில் சொல்லி விட்டாலும் அந்த போலீஸ் ஐயா கோபித்துக் கொண்டு விடுவாரோ என்று அவனுக்கு சிறிது பயமும் வந்தது.

ஆனால் அவர் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக லேசாக புன்னகை செய்தார்.

“அவரைப் பார்க்க யாரெல்லாம் வருவாங்க?

“அவங்க வீட்டுல இருந்து அவரோட தம்பி அடிக்கடி வருவாரு. மத்தவங்க எல்லாம் எப்பவாவது அபூர்வமா வருவாங்க

“அவர் வெளியே போகிறதுண்டா

“போனதில்லைங்கய்யா

“ஏன்?

“அவரு ஒரு சாமியார் மாதிரி தான் வாழ்ந்தாருங்கய்யா. வெளியே போறதுலயும், மத்தவங்க கூட பழகறதுலயும் அவருக்குக் கொஞ்சமும் விருப்பம் இருக்கலை. அவருக்கு ஏதாவது வேணும்னா நான் தான் கொண்டு வந்து தருவேன்...அவராய் எங்கேயும் போக மாட்டார்

வேற யாராவது நீ போன பிறகு அவரைப் பார்க்க வந்தால் உனக்குத் தெரியுமா முனுசாமி

முனுசாமிக்கு அந்தக் கேள்வி ஏதோ ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றியது.  சற்று யோசனை செய்தவனாகச் சொன்னான்.  “அப்படி அவரைப் பார்க்க வரக்கூடிய ஆள் வேற யாரும் இல்லைங்களே. அவரும் வெளியாள்கள் கிட்ட பேசக் கூடியவரில்லைங்கய்யா. நான் வெளியே இரும்புக் கதவைப் பூட்டிகிட்டு போனா மறு நாள் காலைல நான் வர்ற வரைக்கும் பூட்டித் தான் இருக்கும்...

அந்த வெளி இரும்புக்கதவோட பூட்டுக்கு ஒரு சாவி தான் இருக்கா?

“இல்லைங்கய்யா. மூணு சாவி இருக்கு. ஒண்ணு பரமேஸ்வரன் ஐயா கிட்டயும், ஒண்ணு என் கிட்டயும், ஒண்ணு பசுபதி ஐயா கிட்டயும் இருக்கு. பசுபதி ஐயா அதை சுவரில் ஒரு ஆணியில தொங்க வச்சிருப்பார். ஆனா அவரு அதை இது வரைக்கும் உபயோகப்படுத்துன மாதிரி தெரியலை... ஒவ்வொரு நாளும் நான் வந்து தான் திறந்திருக்கேன். ஒரு நாள் கூட நான் வர்றப்ப கதவு திறந்திருந்து பார்த்ததில்லை....

“அவர் செத்த நாள் தவிர...என்று பார்த்தசாரதி நினைவுபடுத்தினார்.

ஆமா...என்று அவன் குரல் வருத்தத்துடன் பலவீனமாய் வந்தது.

“நீ அந்த நாள் சரியா கதவைப் பூட்டினதா நினைவிருக்கா?

“இருக்குங்கய்யா

அவனையே ஒரு நிமிடம் உற்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென்று பார்த்தசாரதி கேட்டார். இந்த தோட்ட வீட்டுக்குள்ள ராத்திரியில ஆவிகள் நடமாட்டமும், அமானுஷ்யமா சிலதெல்லாம் நடக்கறதும் உண்டுன்னு ஒருசில பேர் சொல்றாங்களே அது உண்மையா முனுசாமி

ஒரு கணம் முனுசாமிக்கு மூச்சு நின்றது போலிருந்தது. அவன் முகம் வெளுத்துப் போனது.

(தொடரும்)


11 comments:

  1. முன்பெல்லாம் வியாழக்கிழமை என்றால் ஆபீஸ் ஆப் டே தான் ஞாபகத்திற்கு வரும், இப்பெல்லாம் பரமன் ரகசியம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.!

    தொடர் செம வேகம்!

    ReplyDelete
  2. முக்கியமான இடத்துல "தொடரும்" போட்டுடிங்களே... இன்னும் ஒரு வாரமா.....

    ReplyDelete
  3. சந்திரகுமார்August 30, 2012 at 8:51 PM

    //”பரவாயில்லைங்க ஐயா. நான் நிக்கறேன்....”

    “உனக்கு மூலம் எதுவும் இல்லையே?”

    “ஐயோ அதெல்லாம் இல்லைங்க...”

    “அப்ப உட்கார்”//

    இயல்பாய் இருந்தது.

    சரவணகுமார் சொன்னது போல ஒரு வாரம் காத்திருக்கறது தான் கஷ்டம்.

    ReplyDelete
  4. //“வர்ற ஆவணிக்கு இருபத்தியாறு வருஷம் முடியுதுங்கய்யா”

    ”பசுபதி இங்கே வந்து கிட்டத்தட்ட அறுபது வருஷங்கள் ஆகுதுன்னு கேள்விப்பட்டேன். உனக்கு முன்னால் இங்கே யார் வேலைக்கு இருந்தாங்க”

    ”என் தாய் மாமன் இருந்தாருங்கய்யா. அவருக்கு வயசாயிட்டதால அப்புறம் என்னை இங்கே வேலைக்கு சேர்த்து விட்டார்...”

    “அவர் இப்ப இருக்காரா?”

    “இல்லை ஐயா அவர் செத்து அம்பது வருஷம் ஆயிடுச்சுங்க”//
    கணக்கு உதைக்கிறதே.. ஐம்பது வருடத்திற்கு முன் இறந்தவர் வேலைக்கு சேர்த்துவிட்டவர் இருபத்தாறு வருஷமாகத்தான் வேலையில் இருக்கிறாரா?

    மற்றபடி, கதை பிரமாதம். இன்னுமொரு இந்திரா சௌந்திரராஜன்!

    ReplyDelete
  5. //“வர்ற ஆவணிக்கு இருபத்தியாறு வருஷம் முடியுதுங்கய்யா”//
    //“இல்லை ஐயா அவர் செத்து அம்பது வருஷம் ஆயிடுச்சுங்க”//


    கணேசன், இங்க கணக்கு எனக்கு சரியா வரமாட்டேங்குது.

    ReplyDelete
  6. சுட்டிக் காட்டியதற்கு நன்றி பந்து, மற்றும் பழனி.கந்தசாமி ஐயா அவர்களே. திருத்தி விட்டேன்.

    ReplyDelete
  7. நன்றாக செல்கிறது.... இனி அடுத்த வாரமா....

    ReplyDelete
  8. ஓட்டம் தொடர்கின்றது . நன்றி

    ReplyDelete
  9. ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போகின்றது, தொடருங்கள். நன்றி


    ReplyDelete
  10. எண்பது வயதான அந்த முதியவர் குருஜீ அவரை பார்க்க மனிதர்கள் அதிகம் வருவதும் அவரிடம் யோசனை கேட்டு செல்வதும் வைத்து பார்க்கும்போது இவருக்கும் பசுபதி போன்று ஏதோ ஒரு வகையில் அந்த சிவலிங்கத்துடன் தொடர்பு இருக்குமோன்னு யோசிக்க தோண்றது... அதுமட்டுமில்லாம அந்த சிவலிங்கத்தை பூஜை செய்ய இருந்த அந்த இளைஞன் ஓடிட்டான் என்றதும் விடு நித்ய பூஜைக்கு நான் வேற ஏற்பாடு பண்றேன்னு சொல்லிட்டார். புதிதாய் எதற்கும் ஆசைப்படாத நேர்மையான போலிசு ஆபிசரால் ஏதாவது முடிச்சு அவிழும் என்று காத்திருந்தால் அதிலும் மண்... இந்த குருஜி சொல்றார் விடு.. இங்கே வந்து போகும் மனிதர் தான் பார்த்தசாரதி. ஆனால் எனக்கென்னவோ இந்த பார்த்தசாரதியின் அட்டென்ஷனால் தான் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து கதைக்கு முடிவு தெரியும் என்று தோன்றது.... பார்த்தசாரதியின் விசாரணை முனுசாமிக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்திருந்தாலும் கடைசியில் அவர் கேட்ட கேள்விக்கு நடுங்கியது முனுசாமி மட்டுமல்ல நானும் தான்... இங்கே சித்தரின் நடமாட்டம் அடிக்கடி இருக்கும்னு தோன்றது. அதை தான் அமானுஷ்யம் என்கிறாரோ? ஆவி நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை. தெய்வம் இருக்கும் இடத்தில் தீய சக்திக்கு இடமேது? அப்படியும் சொல்லமுடியாது. கொலைக்கார படுபாவி பசுபதியை கொன்றானே :( மகானை கொல்லுமுன் ஒரு நொடி யோசித்திருந்திருந்தால் அவன் இந்த தவறை செய்திருக்கமாட்டான். எதை கண்டு பயந்து செத்திருப்பான்? மண்டைக்குள் யோசனை பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டதுப்பா... அருமையாக செல்கிறது தொடர்.... அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete