Thursday, August 16, 2012

பரம(ன்) ரகசியம்! - 5


ரமேஸ்வரன் தாயிற்கு விளக்க ஆரம்பித்தார்.

தோட்ட வீட்டிற்கு அவர்கள் ஒரு வேலையாள் வைத்திருந்தார்கள். அவன் காலை வந்து இருந்த வேலைகள் செய்து விட்டு மதியம் சென்று விடுவான். எப்போதாவது கூடுதல் வேலை இருந்தால் மட்டுமே அவன் மாலை வரை இருப்பான். அந்த வேலைக்காரன் சம்பளம் வாங்க மட்டும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி பரமேஸ்வரனிடம் வருவான். அவனிடம் பரமேஸ்வரன் அதிகம் பேசியதோ, விசாரித்ததோ இல்லை. அதற்கான அவசியம் இருந்ததாக அவர் நினைத்ததில்லை. இன்று காலையில் முதலில் பிணத்தைப் பார்த்து விட்டு அழைத்தவன் அவன் தான். குடும்பத்தினரை விட அதிக நேரம் பசுபதியுடன் இருந்தவன் என்பதால் இன்று போலீசார் அவனிடம் இரண்டு மணி நேரமாவது விசாரணை நடத்தி இருப்பார்கள். அவன் அவர்களிடம் என்ன சொன்னான் என்பது தெரியாது. ஆனால் அவன் வேலையை முடித்து விட்டுப் போன பிறகு யாராவது வந்து போனால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 


யாரெல்லாம் வந்து போவார்கள் என்று போலீசார் கேட்டதற்கு யாரும் வந்து போக வாய்ப்பில்லை என்று அவர் பதில் சொல்லி இருந்தாலும் இப்போது அதில் அவருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது. அண்ணனாக எதையும் சொல்லவில்லை. அவராக எதையும் கேட்டதும் இல்லை......

உன் கிட்ட எப்பவாவது பசுபதி அந்த சித்தரைப் பத்தி பேசி இருக்கானா?ஆனந்தவல்லி கேட்டாள்.

“இல்லை. அவரைப்பத்தின்னு இல்லம்மா எதைப்பத்தியும் அதிகம் அவன் பேசினதில்ல. எப்ப போறப்பவும் பேசறது நான் தான். அமைதியா அண்ணா நான் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு மட்டும் இருப்பான். அதிசயமா அவன் அதிகம் பேசினது கடைசி ரெண்டு தடவை தான். உன்னைக் கூட்டிகிட்டு போனப்பவும், அதற்கு அடுத்ததா நான் கடைசியா அவனை சந்திச்சப்பவும்....

ஆனந்தவல்லி ஆர்வத்துடன் கேட்டாள். “கடைசியா நீ சந்திச்சப்ப அவன் என்ன சொன்னான்.....

பரமேஸ்வரன் உடனடியாக பதில் சொல்லவில்லை. அவர் பின் பேசிய போது அவர் குரல் கரகரத்தது. “அண்ணா சாவு வரும்னு அப்பவே எதிர்பார்த்திருந்த மாதிரி இருந்துச்சும்மா. அவன் தன்னோட சாவைப் பத்தியும், அந்த சிவலிங்கத்தைப் பத்தியும் பேசினான்....

ஆனந்தவல்லி திகைப்புடன் இளைய மகனைப் பார்த்தாள். “அப்புறம் ஏண்டா என் கிட்ட அன்னைக்கே சொல்லல...

அப்ப நான் அதை சீரியஸா நினைக்கலம்மா என்றார் பரமேஸ்வரன்.

எழுபது வயதானாலும் சர்க்கரை, இரத்த அழுத்தம், வேறு உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாத பசுபதி அந்த கடைசி சந்திப்பில் அபூர்வமாக தன் மரணத்தைப் பற்றி தம்பியிடம் பேசினார். இனி அதிக காலம் வாழ்வது சந்தேகம் என்று சொன்னார். 

“எல்லா வியாதியும் இருக்கிற நானே இன்னும் சாவைப் பத்தி யோசிக்கல. நீ ஏன் அதைப் பத்தி பேசறே அண்ணா

“மரணம் வியாதி மூலமாய் தான் வரணும்கிற கட்டாயம் இல்லடா

அன்று அந்த வாக்கியத்திற்குப் பெரிய அர்த்தத்தைப் பார்க்க வேண்டும் என்று பரமேஸ்வரன் நினைக்கவில்லை.

பசுபதி பரமேஸ்வரனிடம் கேட்டார். “உன் பேரன் என்ன செய்யறான்?

மகளின் மகனைத் தான் கேட்கிறார் என்று நினைத்த பரமேஸ்வரன் “மகேஷ் எம்பிஏ செய்யறாண்ணாஎன்றார். அண்ணன் இது வரை அவருடைய குடும்ப நபர்களை விசாரித்ததில்லை. எனவே அவர் கேட்டது ஆச்சரியமாய் இருந்தது.

நான் அவனைக் கேட்கல. உன் மகனோட மகனைக் கேட்டேன்....

பரமேஸ்வரனுக்குத் திகைப்பு கூடியது. அவரே அந்த பேரனைப் பற்றி நினைத்ததில்லை. நினைக்க விரும்பியதுமில்லை. என்றைக்கு அவர் மகன் தன் சக விஞ்ஞானியான ஒரு தெலுங்குப் பெண்ணை அவருடைய விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டானோ அன்றே அவரைப் பொருத்தவரை இறந்து விட்டான் என்றே நினைத்தார். மகன் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டதும், அவனுக்கு அங்கே ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் அவர் காதில் விழுந்தது. ஆனால் சம்பந்தமில்லாத நபர்களைப் பற்றிய தகவல்கள் போல அவர் அதை எடுத்துக் கொண்டார். அதனால் மகனுக்கு மகன் பிறந்த விஷயத்தைக் கூட அவர் அண்ணனுக்குத்  தெரிவிக்கவில்லை. சென்ற வருடம் அவர் மகன் இறந்து விட்டதாக அவர் மருமகள் போனில் தெரிவித்தாள். அப்போது அவர் சொன்னார். “என் மகன் செத்து இருபத்தி ஆறு வருஷம் ஆச்சு. நீங்க யாரைச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல

அந்த அளவு மனதால் அறுத்து விட்ட உறவை அண்ணன் ஏன் கேட்கிறார் என்று நினைத்தவராய் “தெரியல அண்ணா. இப்ப அவங்களோட எனக்கு எந்த தொடர்புமே இல்லை என்றார். கூடவே அப்படி ஒரு பேரன் அமெரிக்காவில் இருக்கிறான் என்பதை இவருக்கு யார் சொல்லியிருப்பார்கள் என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் அவர் அதை வாய் விட்டு அண்ணனிடம் கேட்கவில்லை.

ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இந்த சிவலிங்கத்தை அவன் கிட்ட சேர்த்துடு. இது இனி அவனுக்கு பாத்தியப்பட்டது... ஒரு வேளை இந்த சிவலிங்கத்துக்கு ஏதாவது ஆனாலும் கூட அவனுக்குத் தெரிவிச்சுடு

பரமேஸ்வரனுக்கு அண்ணன் அன்று பேசுவதெல்லாம் விசித்திரமாக இருந்தது. அண்ணனுக்கு என்ன ஆயிற்று. என்னென்னவோ பேசுகிறானே? என்று நினைத்தவராய் சொன்னார். “அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து செட்டிலானதால ஒரு அமெரிக்கனாவே அவன் வாழ்ந்துட்டு இருப்பான் அண்ணா. அவன் இந்த சிவலிங்கத்தை வச்சு என்ன பண்ணப் போறான்

“இருக்கிற மண் எதுவானாலும் விதை நம் வம்சத்தோடதுடா. எப்படியாவது இதை அவன் கையில சேர்த்துடு...

மகன் இறந்ததைச் சொன்ன மருமகளிடம் “என் மகன் செத்து இருபத்தி ஆறு வருஷம் ஆச்சு. நீங்க யாரைச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல என்று சொன்னதையும், மகனின் மகன் பெயர் என்ன என்று கூடத் தெரியாது என்பதையும் பரமேஸ்வரன் அன்று அண்ணனிடம் சொல்லப் போகவில்லை.

உனக்குப் பிறகு பேசாமல் இதை ஏதாவது கோயிலுக்குக் கொடுத்துடறது நல்லது அண்ணா..என்றார் பரமேஸ்வரன். சிலைக்கு ஏதாவது ஆனாலும் என்பதற்கு அவர் அன்று பெரிய முக்கியத்துவம் தரவில்லை. அந்தக் கல் சிலைக்கு என்ன ஆகப் போகிறது?

இது அவன் கைக்குப் போகணும்கிறது விதி. அவன் கிட்ட போனதுக்கப்புறம் அவன் அதை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கட்டும்.... பசுபதி சொன்னார்.

மறுபடி மறுக்க பரமேஸ்வரன் முற்படவில்லை. முதலில் அண்ணாவிற்கு ஏதாவது ஆனால் தானே இத்தனையும் என்று நினைத்தவராய் அந்தப் பேச்சை அத்துடன் விட்டார்.

கிளம்பிய போது பசுபதி எப்போதுமில்லாத வாத்சல்யத்துடன் தம்பியின் முதுகைத் தடவிக்கொடுத்தார். அதுவே அண்ணனுடன் இருந்த கடைசி தருணம்... இப்போதும் அண்ணன் கை தன் முதுகில் இருப்பது போல பரமேஸ்வரன் உணர்ந்தார். அண்ணனுடனான கடைசி சந்திப்பைத் தாயிடம் தெரிவிக்கையில் பரமேஸ்வரன் கண்கள் லேசாகக் கலங்கின. 

எல்லாம் கேட்ட ஆனந்தவல்லிக்கு நிறைய நேரம் பேச முடியவில்லை. கேட்டதெல்லாம் அவளுக்கு மலைப்பையும் துக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தன.

பரமேஸ்வரன் தாயிடம் கேட்டார். “நான் என்ன செய்யணும்னு நினைக்கறம்மா நீ

“என் குழந்தை சாக யாரெல்லாம் காரணமா இருந்தாங்களோ அவங்கள நீ சும்மா விட்டுடக்கூடாது. அவங்களுக்கு தண்டனை கிடைச்சா தான் இந்த பெத்த வயிறுல பத்தி எரியற நெருப்பு அணையும்டா

“நான் போலீஸ் கமிஷனர் கிட்ட பேசிட்டேன்மா. ஒரு திறமையான ஆள் கிட்ட இந்தக் கேஸை ஒப்படைக்கறதா சொல்லியிருக்கார். கண்டிப்பா சீக்கிரமே குற்றவாளிகளைப் பிடிச்சுடலாம்னு சொல்லியிருக்கார். நான் உன் கிட்ட கேட்டது அந்த சிவலிங்கத்தைப் பத்தி...

ஆனந்தவல்லி சிறிதும் யோசிக்காமல் சொன்னாள். “அந்த சிவலிங்கம் இத்தனை நாள் நம்ம குடும்பத்துக்கு செஞ்சதெல்லாம் போதும். தொலைஞ்சு போனது நல்லதே ஆச்சு. அது இன்னும் திரும்பக் கிடைச்சாலும் அதை வச்சு கொண்டாட வேண்டாம்டா...

அம்மா சொல்வது பரமேஸ்வரனுக்கு சரி என்றே பட்டது. அந்த முடிவுக்கு வந்தால் அமெரிக்காவில் வசிக்கிற அந்தப் பையனிடம் அது பற்றி பேச வேண்டியதில்லை. புதியதாய் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை.... ஆனால் ....

பரமேஸ்வரன் ஆழமாய் யோசிப்பதைப் பார்த்த ஆனந்தவல்லி மெல்ல கேட்டாள். “நீ என்ன யோசிக்கிறே?

“அண்ணன் இத்தனை காலம் என் கிட்ட எதையுமே கேட்டதில்லை அம்மா. கடைசியா கேட்ட இதைக் கூட நான் செய்யலேன்னா நான் என்னையே மன்னிக்க முடியும்னு தோணலைம்மா

ஆனந்தவல்லிக்குப் புரிந்தது. அந்த சிவலிங்கம் அவ்வளவு சுலபமாய் அவள் குடும்பத்தை விட்டு நிரந்தரமாகப் போகப் போவதில்லை. அவள் கணவர் வாழ்ந்த வரை அடிக்கடி ஒன்று சொல்வார். “எல்லாம் சிவன் சித்தம்”. இப்போது நடப்பதும் அவன் சித்தமோ?

ஒன்றும் சொல்லாமல் தளர்ச்சியுடன் எழுந்தவள் சுவரைப் பிடித்தபடி தனதறைக்குச் சென்றாள்.

மறு நாள் காலை  பரமேஸ்வரன் தன் மகனின் நெருங்கிய நண்பர் தென்னரசுக்குப் போன் செய்து தன் அமெரிக்கப் பேரனுடைய போன் நம்பரை வாங்கினார். தென்னரசு கல்லூரிப் பேராசிரியராக இருக்கிறார். அவர் பரமேஸ்வரன் திடீரென்று கேட்டதற்கு மிகவும் ஆச்சரியப்பட்டது போல இருந்தது. ஒரு கணம் பேச்சிழந்த அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் போன் நம்பரைத் தந்தார்.

பரமேஸ்வரன் தயக்கத்துடன் கேட்டார். “அவனுக்கு....தமிழ் தெரியுமா. நான் தமிழில் பேசினா அவனுக்குப் புரியுமா...

“அவனுக்கு தமிழ் நல்லாவே தெரியும் சார். அவன் தமிழ்ல பேசறதைக் கேட்டா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன்னு யாரும் சொல்ல மாட்டாங்க

பரமேஸ்வரன் மீண்டும் தயக்கத்துடன் கேட்டார். “அவன்...அவன்.. பெயர் என்ன?

“ஈஸ்வர் சார்

ஈஸ்வர்.... அவருடைய மகன் தன் மகனிற்கு அவருடைய பெயரைத் தான் வைத்திருக்கிறான்....மகனின் நினைவுகளும், பழைய கோபமும் மனதில் ஒன்றை ஒன்று மேலோங்க சிறிது நேரம் கனத்த மனத்துடன் உட்கார்ந்திருந்து விட்டு பேரனுக்குப் போன் செய்தார்.

“ஹலோ- பேரனின் குரல் கம்பீரமாய் கேட்டது.

“ஹலோ... நான் உன் தாத்தா....பரமேஸ்வரன் இந்தியாவில் இருந்து பேசறேன்...

ஒரு சில வினாடிகள் மௌனம் சாதித்த ஈஸ்வர் சொன்னான். “ஹலோ நீங்க தப்பான ஆளுக்கு போன் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு உங்க மகன் 27 வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டார்னு நினைக்கிறேன். அவர் இறந்து ஒரு வருஷம் கழிஞ்சு பிறந்தவன் நான். அதனால நான் உங்க பேரனாய் இருக்க வாய்ப்பில்லை

ஈஸ்வர் போனை வைத்து விட்டான். பரமேஸ்வரன் ஓங்கி அறையப்பட்டது போல உணர்ந்தார்.

(தொடரும்)

- என்.கணேசன்


23 comments:

  1. Excellent, Excellent, Excellent. Doing a wonderful job. Congratulations.

    ReplyDelete
  2. சரோஜினிAugust 16, 2012 at 6:52 PM

    “ஹலோ நீங்க தப்பான ஆளுக்கு போன் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு உங்க மகன் 27 வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டார்னு நினைக்கிறேன். அவர் இறந்து ஒரு வருஷம் கழிஞ்சு பிறந்தவன் நான். அதனால நான் உங்க பேரனாய் இருக்க வாய்ப்பில்லை”

    ரசித்தேன்!

    ReplyDelete
  3. இன்னும் சுவாரசியம் கூடுகிறது. தொடருங்கள். நன்றி.

    ReplyDelete
  4. “எல்லாம் சிவன் சித்தம்”. இப்போது நடப்பதும் அவன் சித்தமோ?

    ReplyDelete
  5. தன் தாய்க்கு ஏற்பட்ட அவமானத்தை அத்தனை சுலபமாக மறந்துவிடாத அந்த ஈஸ்வர் என் தமிழ் மண்ணின் அசல் வித்து என்பதில் சந்தேகமில்லை!

    வாரம் இருமுறை (திங்கள், வியாழன்) நாவல் வெளிவந்தால் மகிழ்வேன்! :)

    ReplyDelete
  6. நல்ல தொடர் , உண்மையாக இருக்குமோ . தொடருங்கள்

    ReplyDelete
  7. கதை விறுவிறுப்பாக செல்கிறது. ரசித்தேன்.
    சார் கதையில் ஒரு சின்ன சந்தேகம்

    பரமேஸ்வரன் சொன்னது

    ////“என் மகன் செத்து இருபத்தி ஆறு வருஷம் ஆச்சு. நீங்க யாரைச் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல”////


    ஆனால் அவரது பேரன் ஈஸ்வர் சொன்னது.

    ///உங்க மகன் 27 வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டார்னு நினைக்கிறேன். அவர் இறந்து ஒரு வருஷம் கழிஞ்சு பிறந்தவன் நான்.///

    இதில் யார் சொல்வது சரியான வருஷ கணக்கு என்று தெரியவில்லை. உண்மையான வருஷ கணக்கை தெரிந்து கொள்ள நாங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. 26 வருடங்கள் என்று அவர் சொன்னது சென்ற வருடம் மகன் இறந்த நேரம். 27 வருடங்கள் என்று ஈஸ்வர் சொல்வது இந்த வருடம்- அதாவது ஒரு வருடம் கழிந்து. சரி தானே!

      Delete
  8. “ஈஸ்வர் சார்” என சொல்வது நண்பர் எதற்கு சார் ?

    ReplyDelete
    Replies
    1. பதில் சொல்வது பரமேஸ்வரனின் மகனின் நண்பர். இதற்கு இதற்க்ய் முந்தைய வாசகத்திலும் சார் உபயோகித்து தான் பேசி இருக்கிறார் என்பதை கவனிக்கவும்.

      Delete
    2. விளங்கிருச்சு...நன்றி.

      Delete
  9. Thank you Sir! I have read all your novels and blogs. Checked your blog after a long time to a pleasant suprise - your new novel! Very interesting as usual, All the best :)

    ReplyDelete
  10. As usual, its becoming more interesting sir.

    ReplyDelete
  11. “எல்லாம் சிவன் சித்தம்”. இப்போது நடப்பதும் அவன் சித்தமோ?

    ReplyDelete
  12. Super Sir, Continue.

    ReplyDelete
  13. Good and Interesting to read and eagerly waiting for the next chapter

    ReplyDelete
  14. Dude, I am reading yours for the past few weeks, fantastic man. Very good but I feel it is slow cos' your story is very fast and I had to wait for a week to read the next part.

    ReplyDelete
  15. பசுபதி, பரமேஸ்வரன், மகேஷ், ஈஸ்வர் - என்று எல்லாம் சிவனின் பெயர்கள்... ரசித்தேன்... அந்த பரமனின் ரகசியம் அறியும் ஆவலில் இருக்கிறேன்....

    கதையின் நாயகனின் (ஈஸ்வர்) முதல் வசனமே அற்புதம்!!! தாத்தா பேசுகிறார் என்றவுடன் டக் என்று பதில் சொன்ன விதத்தில் கதாநாயகனின் presence of mind வெளிப்படுகிறது... கண்டிப்பாக சிவலிங்கத்தை மீட்பார் என்று நம்பிக்கை பிறக்கிறது....

    ஒவ்வொரு வாரமும் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  16. Dear Sir,

    The topic is very interesting and as usual your narration is excellent. Eagerly awaiting for the next episode.

    ReplyDelete
  17. தன் மரணத்தை முன்பே அறிந்தவன் தெய்வத்துக்கு சமமாகிறான். பசுபதி தன் மரணத்தை முன்பே அறிந்தவர் ஆதலால் தான் தன் தம்பியிடம் அழைத்து தன் பேரனுக்கு சேரவேண்டிய சிவலிங்கத்தை கொடுத்துவிடச்சொன்னார்... தான் என்ன செய்கிறோமோ சொல்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைப்பது.. தன் மகன் யாரையோ காதல் திருமணம் செய்துக்கொண்டால் தன் ரத்தம் தன் வித்து இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை பாசம் தான் விட்டுப்போகுமா? இருந்தவரை தான் பாசம் காட்டலை.. இறந்தப்பின்னராவது தன் உடல் துடிக்கவேண்டாமா? என்ன மனிதர் இந்த பரமேஸ்வரன்? நல்லவேளை அண்ணன் பசுபதியின் இறுதி வாக்கையும் காற்றில் விட்டுவிடுவாரோ இவரின் வறட்டு கௌரவத்தினால் என்று பயந்தேன். பேரனை அழைத்து பேச நினைத்தார். ஆனால் ஈஸ்வரின் வார்த்தைகள் தீயாய் இவர் காதில்... தான் பிறருக்கு கொடுக்கும் நல்லவை கெட்டவை எங்கும் போவதில்லை. திரும்ப தன்னிடமே தான் வரும் என்பதற்கு உதாரணம் இது. இனி இந்த பரமன் ரகசியம் ஹீரோ ஈஸ்வர் தான் என்று புரிகிறது... அடுத்து என்ன என்ற ஆவலும் அதிகரிக்கிறது... தெளிந்த கதையோட்டம்பா கணேசா..

    ReplyDelete