Monday, June 18, 2012

உண்மையான துறவி யார்?


கீதை காட்டும் பாதை 18
உண்மையான துறவி யார்?

ர்ம யோகத்தைப் பற்றி விவரித்த ஸ்ரீகிருஷ்ணர் கர்மத்தைத் துறந்த ஞானத்தைப் பற்றியும் பெருமையாகவும், உயர்வாகவும் சொல்லக் கேட்ட அர்ஜுனனின் இந்தக் கேள்வியோடு பகவத் கீதையின் ஐந்தாவது அத்தியாயமான கர்மசன்னியாச யோகம் ஆரம்பிக்கிறது.

கிருஷ்ணா! கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். அதோடு கர்மயோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இந்த இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாக, சந்தேகத்திற்கிடமில்லாமல் எனக்கு சொல்

உண்மைக்குப் பல பரிமாணங்கள் உள்ளன என்பதை நம்ப பலருக்கு முடிவதில்லை. ஏதாவது ஒன்று சரி என்றால் அதற்கு மாறுபட்ட மற்றதெல்லாம் சரியாக இருக்க முடியாது என்று எண்ணுவது சாதாரண மனித இயல்பாக இருக்கிறது. செயல் சிறந்தது என்றால் செயலைத் துறந்த ஞானம் சிறந்ததாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு இயற்கையாக வர இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாகச் சொல்லுமாறு பொறுமை இழந்து ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்கிறான்.

பகவத்கீதை குருக்‌ஷேத்திரத்தில் அர்ஜுனனிற்கு மட்டும் சொல்லப்பட்ட வாழ்க்கைத் தத்துவம் அல்ல. தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அவ்வப்போது சந்தித்து குழப்பம் அடையும் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்பட்டது. அதனாலேயே உண்மையின் பல பரிமாணங்களை அறிவுபூர்வமாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்கும் சிரமத்தை மேற்கொள்கிறார். இரண்டில் ஒன்றை மட்டும் சொல் என்று அர்ஜுனன் கேட்டதற்கு இரண்டுமே மோட்ச நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்வன என்றாலும் இரண்டில் கர்மயோகமே சிறந்தது என்று சொன்னதோடு இரண்டையுமே விளக்கவும் முற்படுகிறார்.

“எவனொருவன் வெறுப்பு, விருப்பு இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய வேண்டும். தோள் வலிமை படைத்தவனே! அத்தகையவன் இரட்டை நிலைகளை நீக்கியவனாக இருப்பதால் எல்லாத் தளைகளில் இருந்தும் சுகமாக விடுபட்டவனாக இருக்கிறான்.

ஞானம் வேறு, (கர்ம) யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். நன்றாக அறிந்தவர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். இரண்டு வழிகளில் எதாவது ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் இவ்விரண்டின் பலனையும் அடையலாம்.

புஜபலமிக்கவனே! கர்ம யோகமில்லாமல் சன்னியாசத்தை அடைவது மிகவும் கஷ்டமானது. கர்ம யோகத்துடன் ஞானத்தை நாடும் முனிவன் உடனடியாக பிரம்மத்தை அடைகிறான்

இன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது. துறவு என்பது மனதில் உண்மையாக நிகழ வேண்டும். அப்படி நிகழாத வரை அந்தத் துறவுத் தோற்றம் கேலிக் கூத்தாகவே இருக்கும்.

திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

(வஞ்சனை பொருந்திய மனத்தைக் கொண்டவனது பொய் ஒழுக்கத்தைக் கண்டு அவனுள்ளே இருக்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே ஏளனமாக சிரித்துக் கொள்ளும்).

விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம், புகழ்-இகழ், பெருமை-சிறுமை, வெற்றி-தோல்வி முதலிய இரட்டை நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதில் சிக்கித் தவிக்காமல் நீங்கி இருப்பதே உண்மையான துறவு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து கடைசி வரை அதை அனுபவித்து விட முடியும் என்று சாதாரண மனிதன் ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாறுகிறான். ஆனால் அது முடியாத விஷயம் என்பதை புத்தியுள்ளவன் சீக்கிரமே கண்டு பிடித்து விட முடியும். விருப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அது கிடைக்காத போதோ, அதற்கு எதிர்மாறானது கிடைக்கின்ற போதோ வெறுப்பு வந்தே தீரும். ஒரு விஷயம் சுகமானது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அதில் மூழ்கினால் அதை இழக்கிற போது துக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. புகழால் பெருமிதம் அடைந்து திளைத்தால் இகழ்ச்சி வரும் போது அவமானப்படாமல் இருக்க முடியாது.

இப்படி இந்த இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்க முடியாதது. ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு சுகம் காண ஆசைப்படுவது இயற்கைக்கு எதிர்மாறான ஒன்று. இதை உணர்ந்து கொண்டு அந்த இரட்டைச் சங்கிலிகளின் பிணைப்பில் இருந்து வெளியே வந்து அமைதியடைவது தான் உண்மையான துறவு. இது புறத்தோற்றம் அல்ல. ஒரு அழகான அகநிலை.  துறவு அடுத்தவர்களுக்கு அறிவிப்பது அல்ல. தானாக உணர்ந்து தெளியும் சுகானுபவம். இதில் புறத் தோற்றத்தை மட்டும் உருவாக்கி உள்ளுக்குள் எதிர்மாறாக இருப்பவர்கள் உண்மையில் அடுத்தவர்களை ஏமாற்றுவதை விட அதிகமாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். திருவள்ளுவர் கூறுவது போல அவர்களுக்கு உள்ளே ஆட்சி செய்யும் ஐம்புலன்களும் “நீ எங்களுக்கு அடிமைஎன்று எள்ளி நகையாடும் பரிதாப நிலையில் தங்கி இருந்து விடுகிறார்கள்.

உண்மையான துறவிக்கு பணம், புகழ், பெருமை, அங்கீகாரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது புறத்தோற்றம் கண்டு ஏமாறும் மனிதர்களும் கீதை, திருக்குறள் போன்ற உயர் நூல்களின் வரையறைகளை வைத்து அந்தத் துறவிகளை உரைத்துப் பார்க்கத் தவறி விடுவது தான் ஏமாற்றத்திற்குக் காரணமாகி விடுகிறது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது போல செயல்படாமல், செயல்களால் பரீட்சிக்கப்படாமல் யாரும் ஞானத்தை அடைந்து விட முடியாது. மேலும்
கர்மமும், ஞானமும் மேம்போக்காகப் பார்க்கும் போது வேறு வேறு போலத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தால் வேறுபட்டவை அல்ல. உண்மையான ஞானி செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருக்க முடியாது. அதே போல ஒரு கர்மயோகி ஞானத்தை அடையாமலும் இருக்க முடியாது.

29 வயது வரை அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தர் இல்லற வாழ்வைத் துறந்து ஆறு வருட ஞானத் தேடலின் முடிவில் தன் 35 வயதில் ஞானோதயம் பெற்றார். அவர் தனக்குக் கிட்டிய ஞானத்தில் அமைதியடைந்து அந்த உயர் உணர்வு நிலையில் அமைதியாக மீதி வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். ஆனால் தான் அடைந்த ஞானத்தை, வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தான் கண்ட விடையை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் துடித்தது அவர் கருணை உள்ளம். அரசர்கள், பிரபுக்கள் போன்றோருக்கு மட்டுமல்லாமல் பிச்சைக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் போன்றவர்களுக்கும் கூட உபதேசித்து அவர்களுக்கு உயர் வழியைக் காட்டினார். உடலை விட்டுப் பிரிந்த 80ஆவது வயது வரை தன் போதனைகளைத் தொடர்ந்து உலகிற்குத் தந்து கர்மயோகியாகவே அவர் வாழ்ந்தார்.

அதே போல ஞானத்தைத் தேடி திருவண்ணாமலைக்கு இளமையிலேயே வந்த ரமண மகரிஷி கடைசி வரை ஞான நிலையிலேயே தான் அதிகம் இருந்தார் என்றாலும் அவரால் ஈர்க்கப்பட்டு ஞான வேட்கையால் தேடி வந்த பக்தர்களை அவரது நிர்விகல்ப சமாதிக்குத் தொந்திரவாக எண்ணி துரத்தி விடவோ, அங்கிருந்து ஓடி விடவோ இல்லை.  பலருக்கு ஞான விளக்காக இருந்து வாழ்ந்து மறைந்தார். ஞான உபதேசம் தந்தது மட்டுமல்லாமல் ரமணாஸ்ரமத்தில் காய்கறிகள் நறுக்கும் வேலைகளைக் கூட தானே ஏற்றுக் கொண்டு செய்யும் கர்மயோகியாக அவர் வாழ்ந்தார்.

இவர்கள் தங்களைக் கடவுள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தாங்கள் பெற்ற ஞானத்தை விலை பேசி மக்களிடம் விற்கவில்லை. பகட்டு வாழ்க்கை வாழவில்லை. ஞானமடைந்து விட்டதால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் இனி எந்த வேலையும் செய்யத் தேவையற்றவர்கள் என்றும் காட்டிக் கொள்ளவில்லை. செயல்படும் அவசியத்தை உணர்ந்த போது அதிலிருந்து தப்பிக்க முனையவில்லை.

அதே போல ஜனகர் போன்ற கர்மயோகிகளும் உலக வாழ்க்கையில் தங்கள் சுதர்மத்தை முறையாகச் சிறப்பாகச் செய்தார்கள். ஆனால் மனதளவில் தாமரை இலையில் தண்ணீர் போல பற்றறவர்களாகவே வாழ்ந்தார்கள். கொடுக்கப்பட்ட பாத்திரத்தை குறையில்லாமல் நிறைவாகச் செய்வதும் தன் பகுதி முடிவடையும் போது எந்த வித வருத்தமுமில்லாமல் மேடையில் இருந்து விலகத் தயாராக இருக்கும் விஷயத்தில் ஞானிகளாகவே இருந்தார்கள்.

இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் கர்மம், ஞானம் இரண்டில் ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் மற்றதன் பலனையும் சேர்ந்து அடைய முடியும் என்று கூறுகிறார். அதே போல இரண்டின் சேர்க்கையால் உடனடியாக ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்.

பாதை நீளும்....

- என்.கணேசன்
நன்றி: விகடன்

15 comments:

  1. அருமை...நிறைய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறிர்கள்....

    ReplyDelete
  2. இன்னிக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் நடக்குது..

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான ஒரு பதிவு இது, நன்றி!!

    ReplyDelete
  5. அருமையான ஒரு பதிவு இது, நன்றி!!

    ReplyDelete
  6. மிக மிக அருமையான பதிவு. எளிமையான நடையில் நிறைய அர்த்தபூர்வமான விஷயங்கள் நிரம்பிய பதிவு இது.

    ReplyDelete
  7. Very nice and very appropriate topic for everyone realize the "True Guru"

    ReplyDelete
  8. நல்ல பதிவு சார் ,நன்றி

    ReplyDelete
  9. ///கீதை, திருக்குறள் போன்ற உயர் நூல்களின் வரையறைகளை வைத்து அந்தத் துறவிகளை உரைத்துப் பார்க்கத் தவறி விடுவது தான் ஏமாற்றத்திற்குக் காரணமாகி விடுகிறது.///

    உண்மை வரிகள் ! நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  10. Sir,
    Thanks much for your service. Feel like it is written for me. :).

    ReplyDelete
  11. Mr.Ganesan,

    I have been reading your blog for a long time.

    Your blog is one of the best in tamil.

    Regards,
    Venu

    ReplyDelete
  12. தங்களது அதிசயம் ஆனால் உண்மை என்கிற இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். நேரமிருக்கும்போது பார்வையிடுங்கள். அதற்கான சுட்டி இதோ.http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_21.html

    ReplyDelete