Monday, May 7, 2012

ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 15
ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு

சிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.

ரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.

பால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.

(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).

சுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார்.  

பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.

கோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில்  வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.

அங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

ரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான்.  மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மிபோலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.

அந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.

அந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான். 

சடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள் என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.

மதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள்.  மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.

ஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா?

(தொடரும்)

- என்.கணேசன்

4 comments:

  1. அற்புதமான எழுத்து நடை..ஆவலைத்தூண்டுகிறது.

    ReplyDelete
  2. very Nice excellent article.

    ReplyDelete
  3. ஆழமான கருத்தை எடுத்துக் கொண்டு சிறப்பாக எழுதி வருகிறீர்கள். இம்மாதிரியான ஆய்வு எலோராலும் எழுத முடியாது என நினைக்கிறேன். மிக ஆழ்ந்த கருத்துகள் பல உள்ளடக்கி எழுதியுள்ளீர்கள். உண்மையா? என வியப்பை ஏற்படுத்தும் பல விசயங்கள் அடங்கி உள்ளது புரிகிறது. முழுவதும் படிக்க நேரம் இடம் தரவில்லை.

    ReplyDelete
  4. எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு.
    excellent...........
    manohar

    ReplyDelete