Monday, April 30, 2012

கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!




கீதை காட்டும் பாதை 17
கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!

செயலாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்றுப் போன அர்ஜுனனிற்கு செயல்பட வேண்டிய அவசியத்தையும், சிறப்பாக செயல்புரிய வேண்டிய முறையையும் விளக்குகையில் எது உண்மையான செயல் என்பதை கர்மம், விகர்மம், அகர்மம் என்ற மூன்றையும் விவரித்து விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர், கர்மத்தில் இருந்து ஞானத்தையும், மன சாந்தியையும் பெறும் வழியை விளக்க ஆரம்பிக்கிறார்.

கர்மபலனில் ஆசையைத் துறந்தவனும், எப்போதும் மனத்திருப்தியுடன் இருப்பவனும், எதையும் சார்ந்திராமல் சுதந்திரமாய் இருப்பவனும், கர்மத்திலேயே ஆழ்ந்திருந்தாலும் செயலினால் அவன் கட்டுப்படுவதில்லை.

ஆசையற்றவனாய், மனத்தை வேறு விஷயத்தில் செல்லாமல் தடுத்து தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், சரீர யாத்திரைக்குத் தேவையான கர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பவன் தன் செயல்களினால் ஸம்ஸாரத்தை அடைய மாட்டான்.

தானாக வந்ததில் திருப்தி அடைந்தவனும், சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, போன்ற இருநிலைகளைக் கடந்தவனும், பொறாமையை நீக்கி வெற்றி தோல்விகளை ஒரே விதமாக எடுத்துக் கொள்பவனும் செயல் புரிந்தாலும் பந்தத்திற்கு உள்ளாவதில்லை”.

செயல் புரிபவன் பொதுவாக விளைவு என்ற சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். மிகச் சிறப்பாகச் செயலும் புரிய வேண்டும், அதன் விளைவுகளிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது, அதே நேரத்தில் மன அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது  முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒருசேர சாத்தியப்படாத  காரியமாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

மனிதனுடைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ஈகோ தான். எது உண்மையான நான் அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ஈகோ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்கும். அந்தப் பொய்யான மையத்தை உண்மையாக எண்ணி உணர்வது எதுவுமே அவனை அமைதியடைய விடாது.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோவினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோவிற்கு அதிக சிரத்தை இருக்கும். யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும். யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத் தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும். செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும், வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வீணாக்கி விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.

ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப் பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவீதம் இல்லை என்று  
பொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவீதத்தில் இருந்து  எடுக்கப்பட்டு சில சதவீதங்கள் செயலிற்கு உதவாத எண்ணங்களில் வீணாகின்றன என்று அர்த்தம்.


ப்ரூஸ் லீ கூட கிட்டத்தட்ட இதே கருத்தை அடிக்கடி கூறுவதுண்டு. “செயல்பட வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும், வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும் எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு. அப்போது தான்  உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும். (இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு செயல்வீரனின் கருத்து இது என்பதை நினைவில் கொண்டால் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளின் நடைமுறைச் சிறப்பு விளங்கும்.)


அந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது. எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும் கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை. முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா சிற்பங்களையும்,  ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும்  உருவாக்கியவர்கள் தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர்களிடமில்லை.

அப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள் எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில் இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான் என்று கூறும் ஸ்ரீகிருஷ்ணர் கடைசியாக ஞான யோகத்தை இப்படி சொல்லி முடிக்கிறார்.

அர்ஜுனா! நன்றாக வளர்ந்த நெருப்பானது எப்படி விறகுகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ, அப்படியே ஞானம் என்ற அக்னியானது எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கி விடும்.

ஞானத்தைப் பெறுவதனையே நோக்கமாகக் கொண்டு புலன்களை அடக்கி சிரத்தையுடன் முயற்சி செய்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானத்தை அடைந்த பிறகு விரைவிலேயே மகோன்னத சாந்தி பெறுகிறான்.

ஞானமும், நம்பிக்கையும் இல்லாத சந்தேகவாதி நாசம் அடைகிறான். சந்தேகக் காரனுக்கு இந்த உலகமும் இல்லை, மேலுலகமும் இல்லை, சுகமும் இல்லை.

இந்த யோகத்தால் கர்மங்களை விட்டொழித்தவனும், ஆத்ம ஞானத்தால் சந்தேகத்தை விட்டொழித்தவனும், தன் சுய நிலையில் நிலைத்திருப்பவனுமான ஒருவனை கர்மங்கள் கட்டுப்படுத்த முடியாது.

பரதபுத்திரனே! எனவே அறியாமையால் உதித்து உன் மனதில் குடிபுகுந்துள்ள உன் சந்தேகத்தை ஆத்மஞானம் என்ற கத்தியால் துண்டித்து விட்டு கர்மயோகத்தை கடைப்பிடிப்பாயாக. எழுந்திரு!

உண்மையான நான் என்பது அழிவில்லாத, தனிப்பட்ட அடையாளங்களுக்குள் அடங்கி விடாத ஆன்மா என்பதை அறிவதே ஞானம். அந்த ஞானம் அறிவுக்கு எட்டுவது பெரிய விஷயமல்ல. ஆழமாக ஒருவருக்குள் அந்த எண்ணம் வேரூன்றுவதே மிக முக்கியம். அது புலனடக்கம், சிரத்தையுடன் முயற்சி, ஞானத்தைத் தவிர வேறொரு நோக்கமும் இல்லாமை போன்ற உறுதியான அணுகுமுறைகளில் மட்டுமே சாத்தியப்படும். அந்த ஞானத்தை அடைந்த பின் கிடைக்கும் மன சாந்தி மிக மிக உயர்வானது. அந்த பரிபூரண மனசாந்தி வேறு விதங்களில் கிடைப்பது சாத்தியமல்ல. கட்டுப்படுத்தாத கர்மங்களும், களங்கமில்லாத மனநிம்மதியும் தர முடிந்த ஞானத்தை விட பெறத்தக்க மேன்மை வேறென்ன இருக்க முடியும்?

முழுமையான ஞானம் பெறுகிற வரை அடிக்கடி எழுந்து நம்மை அடி சறுக்க வைக்கும் விரோதியைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கடுமையான வார்த்தைகளில் கடைசியில் எச்சரிக்கிறார். அது தான் சந்தேகம். எத்தனையோ அறிஞர்களுக்கே கூட வழுக்குப் பாறையாக இருக்கும் சந்தேகத்தால் நாசமே விளையும் என்கிறார். சந்தேகக்காரர்களுக்கு இந்த உலகமுமில்லை, மேலுலகமுமில்லை, சுகமுமில்லை என்று சொல்லும் அவர் சந்தேகத்தை அழிக்க ஆத்மஞானம் ஒன்று தான் வழி என்றும் சொல்கிறார்.

எதையும் ஆராயாமல் நம்புவது முட்டாள்தனம். ஆனால் ஆராய்ந்து தெளிந்த பின்னும் சந்தேகம் வருமானால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, தெளிந்த விதம் சரியில்லை. இன்னொன்று தெளிந்த மனிதன் சரியில்லை. குறை இந்த இரண்டில் ஒன்றில் தான் இருக்க முடியும். இரண்டுமே பிரச்சினை தான். திருவள்ளுவர் கூறியது போல

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

அறிவு இறைவன் மனிதனுக்குத் தந்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுவதும், பலனடைவதும் மிக முக்கியம். ஆனால் அறிவும் கூட ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. அதற்கும் மீறிய ஒன்றின் துணையுடன் தான் மனிதன் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட முடியும். ஞானத்தை அடைந்தவன் தான் அந்த ஒன்றைப் பெற முடியும். அது தான் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆதாரங்களைத் தேடிப் பிடித்து அறிந்து பெறுவதல்ல அந்த நம்பிக்கை. அது ஆத்மார்த்தமாக மட்டுமே அவன் உணரக் கூடியது. அந்த நம்பிக்கை இல்லாத சந்தேகவாதிக்கு ஆயிரம் புனித நூல்கள், ஞானிகளின் விளக்கங்கள் கேட்டாலும் கூட தெளிவு பிறக்காது. படிப்பதிலும் கேட்டதிலும் உள்ள முரண்பாடுகள் எல்லாம் பெரிதாகத் தெரியும். மேலும் மேலும் குழப்பம் அதிகம் தான் ஆகும். ஆனால் அந்த நம்பிக்கை உள்ளவனுக்கு வெளியே இருந்து கிடைக்கும் ஒரு சொல் கூட அதிகம் தான்.

ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?

இத்துடன் நான்காம் அத்தியாயமான ஞான யோகம் நிறைவு பெறுகிறது.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்
-          நன்றி:விகடன்

Monday, April 23, 2012

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை!



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 14

முகமது நபி தோன்றுவதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். மிகப் புராதன காலத்திலேயே அவர்கள் ஓசிரிஸ் (Osiris) என்ற கடவுளை வணங்கி வந்தனர். ப்ரண்டனின் ஆன்மீகத் தேடலின் போதும் எகிப்தில் சில இடங்களில் மசூதிகளுக்கு அருகிலேயே ஓசிரிஸின் பழங்காலக் கோயில்கள் இருந்திருக்கின்றன. பால் ப்ரண்டன் அந்தப் பழங்காலக் கோயில்களுக்குச் சென்று அவை சொல்லும் செய்தியை அறிய முற்பட்டார்.

ஒரே இறைவனை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மனிதர்கள் வழிபட்டார்கள், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்று பால் ப்ரண்டன் ஆழமாக நம்பினார். மிகப் புராதனமான அந்தக் கோயில்களில் பல, பால் ப்ரண்டனின் காலத்திலேயே சிதிலமாக ஆரம்பித்திருந்த போதிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்ட அந்த தலங்களில் ஆன்மிக அலைகள் பரவியிருந்ததை அவரால் அங்கு சென்ற போது உணர முடிந்தது.    

அப்படி அவர் உணர்ந்த ஒரு சக்தி வாய்ந்த இடம் அபிடோஸ் (Abydos) என்ற இடத்தில் இருந்த புராதனக் கோயில். கோயிலின் புறத்தோற்றம் கால ஓட்டத்தின் சிதைவுகளைக் கண்டிருந்தாலும் அங்கிருந்த பெரிய தூண்களின் சிற்பங்களிலும், மங்கிய சித்திரங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்த கதைகளில் எத்தனையோ ரகசியங்கள் மறைந்திருந்ததாக பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது.

எகிப்தின் பழங்காலக் கதைகளின் படி பூமிக்கடவுளுக்கும், ஆகாயத் தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவன் மனைவி ஐசிஸ். பூமியை ஆண்டு வந்த ஓசிரிஸ் மீது பொறாமைப் பட்டு அவன் தம்பி செட் சூழ்ச்சி செய்து அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுகிறான். மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஐசிஸ் நீண்ட நாள் பிரார்த்தனைகளும், சடங்குகளும் செய்து துண்டமான உடலை ஒன்று சேர்த்து உயிர் பெறச் செய்து விடுகிறாள். மாண்டவர் உலகிற்குச் சென்று வந்ததால் அனைத்தையும் உணர்ந்து பல மடங்கு சக்தி வாய்ந்தவனாக சில நாட்கள் வாழ்ந்து மனைவி ஐசிஸை கருத்தரிக்க வைத்து விட்டு மறுபடி மாண்டவர் உலகிற்குத் திரும்பி விடுகிறான். ஐசிஸ் பிரசவித்த ஹோரஸ் என்ற அவனுடைய குழந்தை பெரும் சக்தி வாய்ந்தவனாக வளர்ந்து தந்தையைக் கொன்ற சித்தப்பா செட்டை அழிக்கிறான்.

எகிப்தியக் கடவுள்களில் பிரதானமான கடவுளாய் ஓசிரிஸ் இறப்பின் கடவுளாகவும், நியாயத் தீர்ப்பு கடவுளாகவும் எகிப்திய பழங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஹோரஸ் தீயவைகளை அழிக்கும் தெய்வமாகவும், எல்லா புதிய நல்ல மாற்றங்களுக்கான தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அந்தக் கதைகளே அந்த கோயிலில் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் விவரிக்கப் பட்டு இருந்தன.

வழக்கமான கோயில்களில் வழிபாட்டின் போது ஒலிக்கும் இசைக்கருவிகளின் இசையோ, பாடல்களோ பிரதான கடவுளான ஓசிரிஸின் அந்தக் கோயிலில் ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரேபோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்கிருந்த பழமையான எழுத்துக்களில் இருந்த தகவல்களை வைத்துக் கூறுகிறார். மயான அமைதி என்பார்களே அது போன்ற மயான அமைதியே வழிபாட்டு நேரத்தில் கடைப்பிடிக்கப் படுவதாகச் சொல்கிறார்.

அந்தக் கோயிலில் ஆன்மீக ரசியங்களை மிக அபூர்வமான, தகுந்த வெகுசிலருக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டன என்றும் அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன என்றும் சில நாட்கள் ரகசிய சடங்குகள் கழிந்த பின்னர் அவர்களுக்கு குருமார்களால் உணர்த்தப்பட்டது என்றும் எகிப்திய பழமையான ஏடுகள் சொல்கின்றன. அந்த சடங்குகள் குறித்த சில சித்திரங்களும் அங்கிருந்தன. மிகப் பெரிய உண்மைகள் ஆரவாரத்திலும், கூட்டங்களிலும் உணரப்படுவதில்லை, பேரமைதியில் ஒருவன் தனக்குள்ளே ஆழ்ந்திருக்கும் போதே உணரப்படுகின்றன என்பதற்காகவே அமைதி அங்கு வலியுறுத்தப்படுகின்றது என்று பால் ப்ரண்டன் நினைத்தார்.

(கற்பனைக் கதைகளாக சித்தரிக்கப்படும் எத்தனையோ கதைகளைக் கற்பனைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டு பிற்கால உலகத்தினரில் பெரும்பாலானோர் பார்த்தாலும், விஷயமறிந்த சிலர் அதன் பின்னால் உள்ள செய்தியைப் படித்து பலன் அடைகிறார்கள். அந்தப் பலனையும், ஞானத்தையும் கதைகளாய் படித்து விட்டுப் போகிறவர்கள் பெறத்தவறி விடுகிறர்கள்.)

அங்கிருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த சில சங்கேதக் குறிகள் ரகசியக் கலைகள் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்படி இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிதிலமடைந்து பாழ்பட்டுப் போன அந்தக் கோயிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னன் ஒருவன் புனரமைத்தததோடு எகிப்தில் இருந்த ஹீலியோபோலிஸ் என்ற மிகப்பழங்கால நூலகத்தில் இருந்த ஓசிரிஸ் கோயில் பற்றிய தகவல்களைக் கொண்ட நூல்களை எல்லாம் தக்க அறிஞர்களைக்  கொண்டு ஒன்று திரட்டி அந்தப் பழைய தீட்சைக்கான சடங்குகளை தன் பிற்கால சந்ததிகளுக்கு விட்டுப் போனதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னனால் தான் இன்று அந்த தீட்சைகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் விரிவாக அறிய முடிகிறது. அந்த நூல்களில் இருந்த தகவல்களின் படியே அதே கட்டமைப்புடன் பல கோயில்களை அந்த மன்னன் புதிதாகக் கட்டினான் என்றும் வரலாறு கூறுகிறது.

ஆனால் பால் ப்ரண்டன் எகிப்திற்குச் சென்ற காலத்தில் அதுவும் பழமையாகிப் போன போதும் முழுவதுமாக அழிந்து விடாமல் தப்பிய ரகசியத் தகவல்கள் பல, அன்றைக்கும் ஆன்மிக வல்லுனர்களை ஈர்த்த வண்ணம் இருந்தன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆன்மிகத் தேடலுடன் அந்த ரகசிய தீட்சை பெற முயன்றாலும் தக்க குருமார்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெகுசிலரையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த ரகசிய தீட்சை தந்தனர் என்று சொல்லப் படுகிறது. அப்படி ரகசிய தீட்சை பெற்றதாக சொல்லப்படுபவர்களுள் ஒரு சிலர் மிகப்பிரபலமானவர்கள். அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்திய சில ரகசியத் தகவல்களையும் பார்ப்போமா?


(தேடல் தொடரும்)

- என்.கணேசன்
    

Monday, April 16, 2012

அட ஆமாயில்ல! 3




கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.
                  - போவீ


ஒரு சிறந்த கவிஞன் ஒரு சோலையின் மிகச் சிறந்த பயன்களை எல்லாம் அனுபவித்து விடுகிறான். ஆனால் அந்த சோலையின் சொந்தக்காரனோ பழங்கள், மட்டுமே வீட்டுக்குச் சுமந்து செல்கிறான்.
                                        - தோரோ


உலகில் நீங்கள் பிறக்கும் போது எதையும் கொண்டு வராமல் வெறும் உடலோடு தானே பிறந்தீர்கள். அதனால் பின்னால் எது கிடைத்தாலும் அதை லாபமென்று கொல்கிற மனப்பான்மையே வேண்டும்.
                                       - டாமிஸ்டீல்


பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்.
                                      - ஷேக்ஸ்பியர்


மனிதர்கள் நம்மை நிந்திக்கையில் நாம் நம்மையும், அவர்கள் நம்மைப் புகழும் போது நாம் அவர்களையும் சந்தேகிக்க வேண்டும்.
-         கோல்டன்


அபிப்பிராய வேற்றுமைகளுக்காக நான் ஒரு மனிதனை விட்டு விலக மாட்டேன், அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில் நானே சில நாட்களுக்குப் பிறகு என் கருத்துகளுக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும்.

-         ஸர் தாமஸ் ப்ரௌன்


அதிக வறுமைப்பட்டவரும் அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்..
-         ஃபீல்டிங்


தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
-         போப்


ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணமான முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும்.
-         பாஸ்கல்


தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம்.
-         ஆல்காட்


அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.
-         கோல்டுஸ்மித்

ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிகின்றன.
                                         - யங்

தொகுப்பு - என்.கணேசன்
                                 


Monday, April 9, 2012

கோபத்தையும் பயன்படுத்தலாம்!



சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஎன்று திருவள்ளுவர் கூறுவார். பொதுவாக, கோபம் எங்கே எல்லாம் சேர்கிறதோ அங்கேயெல்லாம் அழிவு தான். முக்கியமாய் அழிந்து போவது மன நிம்மதி. அதன் பின் கோபத்தால் உந்தப்பட்டு செய்யும் செயல்கள் எல்லாமே மேலும் அதிக அழிவை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கி விட்டே தணியும். இது பொது விதி. ஆனால் கோபம் கூட முறையாகப் பயன்படுத்தப்பட்டால் நல்ல மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது. அது எப்படி என்பதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.

1943ல் ஒரு நாள் அமெரிக்க கருப்பர் இனத்தலைவரான மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்), டூப்ளின் நகரில் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அட்லாண்டாவிற்கு பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அவருடைய ஆசிரியை ஒருத்தியும் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் சில வெள்ளையர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களுக்கு அமர இடம் இல்லாமல் போகவே பஸ் டிரைவர் மார்ட்டின் லூதர் கிங்கையும், அவரது ஆசிரியையும் எழுந்து அந்த வெள்ளையர்களுக்கு உட்கார இருக்கையை விட்டுத் தரச் சொன்னார். மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அது அநியாயமாகவும், அவமானம் தருவதாகவும் இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அது அடிக்கடி நடக்கக் கூடிய நிகழ்ச்சி ஆனதால் அவருடைய ஆசிரியை உடனடியாக எழுந்து விட்டார். மார்ட்டின் லூதர் கிங் வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் எழுந்தார். அவர் எழத் தாமதமானதால் பஸ் டிரைவர் அவரைக் கடும் வார்த்தைகளால் திட்டினார். அது அவரை மேலும் கோபமூட்டியது. 90 மைல் தூரத்தை அவர் பஸ்ஸில் நின்றபடியே பயணிக்க நேர்ந்தது.

அந்த நிகழ்ச்சியைப் பற்றி தன் சுயசரிதையில் பிறகு எழுதிய போது மார்ட்டின் லூதர் கிங் இப்படி குறிப்பிட்டார். “என் வாழ்வில் நான் மிக அதிக கோபம் கொண்ட நாள் அது. அந்த இரவை என்னால் என்றுமே மறக்க முடியாது”. ஒடுக்கப்படும் கருப்பு இன மக்களுக்காக அவர் குரல் கொடுக்க அந்த நிகழ்ச்சி ஒரு விதையாக அமைந்தது என்றால் அது தவறாகாது.

அந்தக் கோபத்தை அவர் தணித்துக் கொள்ள அவர் பலரும் நாடும் வழிகளை மேற்கொள்ளவில்லை. தானும் கண்டபடி திருப்பி அந்த டிரைவரைத் திட்டவோ, தாக்கவோ முனையவில்லை. ஒரு மத போதகராக வாழ்க்கையை ஆரம்பித்த அவருக்கு அந்த வழிகளில் மனம் செல்லவில்லை. தனிப்பட்ட விதத்தில் அதை எடுத்துக் கொள்ளாமல் கருப்பர்களுக்கு தொடர்ந்து நிகழும் அவமானமாகக் கண்ட அவர் கோபம் அந்த தவறான அநீதியான முறையையே ஒழிக்க வழிகளைத் தேடியது. 1955ல் மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்தைத் தலைமை தாங்கி பெருமளவில் நடத்திய அவர் பல எதிர்ப்புகளைக் கண்டார். அரசாங்கம் சின்ன சின்ன வழக்குகளிலும் அவரை சிக்க வைத்து தடை செய்யப்பார்த்தது. அவருடைய சக கருப்பர் தலைவர்களோ அவரது அறப்போராட்டம் பிடிக்காமல் அவரை எதிர்த்தனர்.

இரண்டு பக்கங்களிலும் எதிர்ப்பு அதிகமாக இருந்தது போதாது என்று வெள்ளைத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். 1956 ஆம் ஆண்டு அவர் வீட்டிலேயே வெடிகுண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அவரும் அவர் குடும்பத்தினரும் உயிர் தப்பினார்கள் என்றாலும் அவர் கோபம் அதிகரித்தது. கருப்பர்களில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தலைவராக அவரும் மாறி விடும் படியான மனநிலைக்குத் தானும் வந்து விடுமோ என்று கூட சந்தேகப்பட்டதாக அவர் தன் சுய சரிதையில் சொன்னார்.

ஆனால் அந்தக் கோபத்தையும் தனிப்பட்ட விதத்திலும், தனிப்பட்ட மனிதர்கள் மீதும் எடுத்துக் கொள்ளாமல் அப்போதிருந்த சமூக முறையிலேயே குற்றம் கண்ட அவர் அந்த முறையை சமூகத்திலிருந்து அகற்ற போராட்டத்தில் இறங்கினார். அதில் கடைசியில் வெற்றியும் கண்டார். 1964 ஆம் ஆண்டு சத்தியாகிரக வழியில் அவர் அந்த சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி கண்டதற்காக சமாதான நோபல் பரிசு பெற்றார். 1968 ல் அவர் படுகொலை செய்யப்பட்ட போதும் அவர் தான் எடுத்துக் கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றதை வரலாறு இன்றும் பாராட்டுகிறது.

(அவருக்கு சத்தியாகிரக வழியில் வழிகாட்டியாக இருந்தவர் நம் மகாத்மா காந்தி. இதை மார்ட்டின் லூதர் கிங் பல முறை குறிப்பிட்டு உள்ளார். மகாத்மா காந்தியும் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அதில் பயணித்த போது வெள்ளையரான ஒரு ரயில்வே அதிகாரியால் இறக்கி விடப்பட்டது நினைவிருக்கலாம்.  தன் அறப்போராட்டத்தை தென்னாப்பிரிக்கையில் தொடங்கியதற்கு அந்த நிகழ்ச்சி தான் விதையாக இருந்தது.)

பஸ்ஸில் நின்று கொண்டே பயணிக்க வைத்த டிரைவரை வாயிற்கு வந்தபடி திட்டியோ, இறங்கிய பிறகு கல்லெடுத்து எறிந்தோ, பிறகு எதாவது ஒரு வெள்ளையருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தோ தன் கோபத்தை அவர் தீர்த்துக் கொண்டிருந்தால் தனிமனித கோபத்தைத் தீர்த்துக் கொண்ட ஒரு சராசரி மனிதனின் செய்கையாய் போயிருந்திருக்கும். அமெரிக்க கருப்பர்களுக்கு சம உரிமை கிடைத்த சரித்திரம் உருவாகி இருக்காது.

கோபம் நம்முள் பெரியதொரு சக்தியை உருவாக்க வல்லது. உறுதியாகச் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்தது. கோபம் இருக்கும் நேரத்தில் செயல்படாமல் இருப்பது தான் மிகவும் கஷ்டம். அப்படிப்பட்ட நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் அந்தக் கோபமும் நல்ல சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.


இது பெரும் தலைவர்களுக்குத் தான் முடியும் என்பதல்ல, சாதாரண மனிதர்களுக்கும் முடிந்தது தான். எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர். அவருக்கு உதவி செய்து வந்தவருடைய மகன் ஒருமுறை அவரிடம் பலர் முன்னிலையில் “எங்கள் தயவில்லாமல் நீங்கள் இருக்க முடியாதுஎன்று சொல்லிக் காட்ட அவருக்கு அது  ரோஷத்தைக் கிளப்பி விட்டது. உங்கள் தயவில்லாமல் உங்களை விட உயர்ந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுச் சென்றவர் பத்து வருடங்களில் அப்படியே சாதித்தும் காட்டினார். அவருக்குள்ளே சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற  ஒரு வேகத்தை அந்தக் கோபம் கிளப்பி விட்டது போல இருந்தது. சிறிது காலத்தில் அவர் வாழ்க்கை முறையே மாறிப் போனது.  

பல சமயங்களில் கோபம் இது போல் பெரிய உந்து சக்தியாக அமையக்கூடும். பெரிய மாற்றங்களுக்கான பிள்ளையார் சுழியை அது போடக் கூடும். அதனால் அர்த்தமில்லாத கோபங்களை அவ்வப்போதே விட்டுத் தள்ளுங்கள். அர்த்தமுள்ளதாய் கோபம் வரும் போது அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தீர்வையோ, நல்ல மாற்றத்தையோ உருவாக்க முடிந்தால் கோபமும் நல்லதே அல்லவா?

- என்.கணேசன்

Monday, April 2, 2012

சத்தியம் தவறாத பசுவின் கதை

முன்பெல்லாம் கல்விப்பாடங்களில் உயர்குணங்களை வலியுறுத்தும் பாடல்கள் அதிகம். எல்லா இந்திய மொழிகளிலும் இசையுடன் கூடிய மிக அருமையான பாடல்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருந்ததை நம்மால் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால் காலப்போக்கில் அது போன்ற அருமையான பாடல்கள் குறைந்து, மறைந்தே போய் விடும் அவலத்திற்கு நிலைமை வந்திருக்கிறது. ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், பா பா ப்ளேக் ஷீப் போன்ற ஆங்கிலப் பாடல்களை குழந்தைகள் வாயால் கேட்கின்ற அளவிற்கு நம் பண்பாட்டுப் பாடல்கள் கேட்க முடிவதில்லை. இது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.

அது போன்ற பாடல்களில் ஒன்று கன்னட மொழியில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரை படித்து மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த மிக அற்புதமான பாடல். சத்தியமே இறைவன் என்று வாழ்ந்து அதற்காகத் தன் உயிரையும் தரத் துணிந்த புண்யகோடி என்ற பசுவின் கதை அது. “தரணி மண்டல மத்யதொலகே...என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சத்தியமே இறைவன் என்ற புண்யகோடியின் கதையிது (சத்யவே பகவந்தனெம்ப புண்யகோடி கதையிது!) என்று ஒவ்வொரு பாராவின் இறுதியிலும் முடியும் அந்த பாடலின் கதை இது தான்.

கர்னாடகா மாநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.

அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”.

புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?

புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு

புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு

பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.

அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்

அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன்.  இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.

புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக

சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. தொலைவில் மறைந்து நின்று நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.

புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.

கற்பனைக் கதை என்றாலும் பாடல் வரிகளும், அதில் உரையாடல்களில் இருக்கும் அழுத்தமும் கல்லையும் கரைய வைப்பவை. கன்னடம் தெரிந்தவர்கள் இணையத்தில் “punyakoti govinda hadu”  அல்லது “punyakoti lyrics” என்ற தேடல்களில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலை முகமது ரஃபியும் பாடி உள்ளார்.

இது போன்ற பழம்பாடல்களில் நாம் நமது பண்டைய காலத்தின் அடையாளங்களையும், ஒரு காலத்தில் நாம் வைத்திருந்த மதிப்பீடுகளையும், நம் வேர்களையும் இன்றும் காணலாம். இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். அதற்கு இணையான மேன்மையான படைப்புகளை உருவாக்கி நம் சிறார்களுக்குப் படிக்கத் தரவும் தவறிக் கொண்டிருக்கிறோம். இந்த அலட்சியம் அறிவீனம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் தற்கொலையும் கூடத் தான். சிந்திப்போமா!

- என்.கணேசன்