Monday, February 27, 2012

அட ஆமாயில்ல! 2



மூன்று நாட்களில் மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. காதலென்பது தேவலோக வஸ்து.  
- பாரதியார்



ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத் தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.
                                  -  டால்ஸ்டாய்


உயர்ந்த பொருள்களையே புகழாதீர்கள். சமவெளிகளும் மலைகளைப் போல நிலைப்பவை.
                               - பி. எஃப். பெய்லி


நாமே நமக்குச் சொல்ல முடியாததை எவன் நமக்குச் சொல்கிறானோ அவனே விலை மதிக்க முடியாத நண்பனாவான்.
-         எமர்சன்


நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தமது பிம்பத்தையே காட்டுகின்றனர்.
-         கதே


நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும். ஆனால் நாம் அப்படிக் கருத வேண்டும்.
-         லாங் ஃபெல்லோ


மனிதனை எது அடிமையாக்குகிறதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
                                   - போப்


அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவது போலாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால் அது ஏதோ அலையின் ஓசை போல், அதில் பயம் தெளிந்து விடும்.
-         கோல்பெர்ட்


மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம்.
                              - தாம்சன்


முறை தவறிச் சேர்த்த செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து எடுக்கும் போது பயங்கரமான வேதனை ஏற்படும். அப்படி எடுக்கா விட்டாலோ அது அழிவையே ஏற்படுத்தி விடும்.
-         ஜெரிமி டெய்லர்


உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
-         ஷேக்ஸ்பியர்


ஓர் அபிப்பிராயம் உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லா விட்டாலும் அது உன்னுடையது என்பதற்காக அதைப் பிடிவாதமாக நீ பற்றிக் கொண்டிருந்தாயானால் உண்மையை விட நீயே மேலானவன் என்று கருதுவதாகும்.
                             - வென்னிஸ்


Friday, February 24, 2012

தோற்கிறதா கல்விமுறை?



சமீபத்திய வங்கிக் கொள்ளையில் தலைவனாக செயல்பட்டு போலீஸ் என்கவுண்டரில் இன்று இறந்து போன வினோத்குமார் என்ற இளைஞன் பொறியியல் கல்லூரியில் படித்தவன் என்கிறது பத்திரிக்கைச் செய்தி. வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களிலும் மேல் படிப்பு படித்த இளைஞர்கள் ஈடுபடுவது இன்று அன்றாடச் செய்தியாகி விட்டது. சென்ற ஆண்டு மட்டும், டெல்லி போலீஸ் மட்டும், 127 கொலை, கொள்ளைக, கடத்தல் குற்றங்களில் பட்டப்படிப்பு மற்றும் அதற்கும் மேல்பட்ட படிப்பு படித்த இளைஞர்களை குற்றவாளிகளாகக் கண்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ஆசிரியை ஒருத்தியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆசிரியரின் தூண்டுதலால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற குற்றச்சாட்டு எழுந்து அந்த ஆசிரியரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகளில் சர்வசகஜமாகப் போய் விட்டன.

இது போன்ற செய்திகளை எல்லாம் படிக்கையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற கவலை சமூகத்தில் அக்கறை கொண்டவர்களுக்கு எழாமல் இருக்க முடியாது.

ஒரு காலத்தில் கல்வியறிவு இல்லாதவன் மட்டுமே செய்யக்கூடியதாகக் கருதப்பட்ட ரவுடித்தனம், கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் மெத்தப்படித்தவர்களே செய்யும் நிலை வந்து விட்டதே, என்ன காரணம்? படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று போவான் என்று அப்படிச் செய்வதை விதிவிலக்கு போல எண்ணி பாரதி சபித்தாரே, அந்த விதி விலக்கு இன்று சாதாரண விஷயம் போல ஆகி விட்டதே என்ன காரணம்?


தத் த்விதியம் ஜன்மா என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். அதற்கு “கல்வி என்பது இரண்டாம் பிறப்பு என்பது பொருள்.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளவாக் கேடின்றால்
எம்மர் உலகத்தும் யாமறியோம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து,

என்கிறது நாலடியார்.

(இந்த ஜென்மத்தைச் சிறக்கச் செய்யும். எடுத்து, எடுத்து யார் யாருக்குத் தந்தாலும் பெருகுமே தவிர, குறையாது. நம்மை அடுத்தவருக்கு உணர்த்த உதவும். எல்லா அறியாமையையும் அறுத்து எறியும் சிறந்த மருந்து கல்வி)

இப்படிப்பட்ட பெருமை கொண்ட கல்வி இன்று இருக்கிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான பதில். இன்றைய கல்வி மதிப்பெண் கல்வியாக மாறி விட்டது. வீட்டிலும் பள்ளியிலும் மதிப்பெண்களுக்கே அதீத முக்கியவத்துவம். எவ்வளவு மார்க்? எத்தனையாவது ரேங்க்?என்ற கேள்விகளுக்கான பதில்களிலேயே மாணவர்கள் அளக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான இலக்குகளுக்காகவே அவர்களை குடும்பங்களும், பள்ளிகளும் ஓட வைத்துக் கொண்டிருக்கின்றன. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் கூட இல்லை. மற்றவை கணக்கிலேயே இல்லை.  

யாருக்கும் ஒழுக்கம் ஒரு விஷயமே அல்ல. பண்பாடு, உயர்குணங்கள் எல்லாம் அடையாளம் காணப்படுவதுமில்லை, கணக்கிடப்படுவதுமில்லை. இதிலும் குடும்பங்களும், பள்ளிகளும் ஒருமித்தே குற்றவாளிகளாக நிற்கின்றன.

ஏகப்பட்ட தகவல்கள் மாணவர்கள் மூளைகளில் திணிக்கப்படுகின்றன. அதற்கான முயற்சிகள் எல்லா இடங்களிலும் எடுக்கப்படுகின்றன. அந்த மாணவ இதயங்களில் நல்ல குணங்களையும், தன்மைகளையும் பதிப்பது கல்வியில் அங்கமில்லாமல் தொலைக்கப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக தொட்டாற் சிணுங்கிகளும், சகிப்புத் தன்மையற்றவர்களும், மன அமைதி அற்றவர்களும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களும் ஆக இளைய தலைமுறையில் நிறைய பேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவர்கள் வேகமாகச் செல்லக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். பெரும் சக்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் லகான் தான் இல்லை. முறைப்படுத்தவும், சீரான முறையில் எல்லாவற்றையும் கொண்டு செல்லவும் அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதை அவர்களுக்கு சொல்லித் தராததும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தத் தவறியதும் மிகப்பெரிய தவறு. அந்தத் தவறுகளின் விளைவுகளையே நாம் எல்லா இடங்களிலும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் நாம் நாசமாய் போய் விடுவோம்!

-என்.கணேசன்
  

Monday, February 20, 2012

எல்லாம் ஒரு நாள் முடியும்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 25

எல்லாம் ஒரு நாள் முடியும்! 


இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்த பாடங்களைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால் இவற்றை வாழ்ந்து காட்டுவது சுலபமல்ல. பெரும்பாலானோரும் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறோம். சிலவற்றிலோ பற்பல முறைகள் சறுக்கி விடுகிறோம். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று சிறப்பு பெறுவது யதார்த்த உலகில் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை வாழ்ந்து பார்க்கும் போது தான் நமக்குப் புரிகிறது. எல்லாப் பாடங்களையும் கற்று கடைபிடிக்க ஒரு வாழ்நாள் போதுமானதாக இருப்பதில்லை என்பதையும் பலர் உணர்கிறார்கள்.

இந்தக் கடைசி பாடம் வெற்றிகரமான சிறப்பான வாழ்க்கைக்கல்ல. வெற்றியோ, தோல்வியோ, நிறைவான வாழ்க்கையோ, குறைவான வாழ்க்கையோ, மொத்தத்தில் மன அமைதியை உணர வைக்கும் பாடம். அது தான் எல்லாம் ஒரு நாள் முடியும் என்றுணர்வது!

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!

நன்றி வாசகர்களே. வாழ்ந்து படிக்கும் பாடங்கள் ஏராளமாக இருப்பினும் இந்த அதிமுக்கிய பாடத்தோடு இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன்.


-என்.கணேசன்

நன்றி: வல்லமை

Wednesday, February 15, 2012

எந்தக் காதல் எது வரை?


அழகைக் கண்டு
பழகும் காதல்
இளமை முடிந்தால்
விலகிப் போகும்!

மனதைப் பார்த்து
உணரும் காதல்
குணம் மாறினால்
ரணமாய் விடும்!

செல்வம் கண்டு
கொள்ளும் காதல்
செல்வம் போனால்
சேர்ந்தே போகும்!

ஆத்மார்த்தமாய்
பூத்திடும் காதல்
நீத்திடும் உயிர்வரை
நீங்காது வாழ்ந்திடும்!

வந்த காதல்
எந்த நாள்வரை?
இந்தக் கணக்கினில்
அறிந்து கொள்வீர்!


- என்.கணேசன்

Friday, February 10, 2012

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!



வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 24
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!

பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான  வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக தினசரி வாழ்வில் சீக்கிரமாகவே அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.

உலகம் தன்னிஷ்டப்படியே இயங்குகிறது. நிகழ்வுகள் பலதும் நம் கருத்துக்களை அனுசரித்துப் போவதில்லை. நம்மால் முழுவதும் உணர முடியாத ஏதோ ஒரு விதியின்படியே பலதும் நடக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல சமயங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத,
நம்மால் மாற்றியமைக்க முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த நிலைமையை எள்ளளவும் மாற்றி விடப் போவதில்லை.

ஒரு மரணம் நிகழ்கிறது. இறந்தவர் நம்மால் மிகவும் நேசிக்கப்பட்டவர், அவர் மரணம் நாம் சிறிதும் எதிர்பாராதது என்று வைத்துக் கொள்வோம். அந்த மரணம் நமக்குக் கண்டிப்பாக பெரும் துக்கத்தைத் தரும் தான். அதுவும் இறந்தவர், கணவனாகவோ, மனைவியாகவோ, பிள்ளைகளாகவோ, தாயாகவோ, தந்தையாகவோ இருந்தால் அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அதுவும் அவரால் ஆக வேண்டிய காரியங்கள் நிறைய இருந்தால் மனரீதியாக மட்டுமல்லாமல் எல்லா வகையிலும் நாம் பாதிக்கப்படுவதால் சிரமங்களும் மிக அதிகமாகத் தான் இருக்கும். அதனால் அந்த துக்கம் இயற்கையானது. நியாயமானதும் கூட.

ஆனால் மரணம் ஒவ்வொருவரும் சந்தித்தாக வேண்டிய ஒரு நிகழ்வு. மரண காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்கிற போது அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். உடனே தோன்றுகிற இயல்பான துக்கத்தில் இருந்து விரைவாக நாம் மீண்டு எழத்தான் வேண்டும். நடக்க வேண்டிய காரியங்களை சரியாக கவனித்து செயல்பட்டே தீரவேண்டும். இறந்தவர்களுக்காக இருக்கிறவர்களை புறக்கணித்து விடக் கூடாது. அது நியாயமும் அல்ல, விவேகமும் அல்ல. ஆனால் பலர் இந்த துக்கத்தில் இருந்து மீள்வதில்லை. இந்த மரணம் நியாயமா? சரியான காலத்தில் தான் வந்திருக்கிறதா? சாவுக்காக எத்தனையோ பேர் காத்திருக்கையில் இவருக்கு ஏன் வரவேண்டும்? என்பது போன்ற கேள்விகளிலேயே தங்கி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு உலகம் பதிலளிப்பதில்லை.

மரணம் போன்ற இன்னும் எத்தனையோ பெரிய விஷயங்கள் இருக்கின்றன. விபத்துகள், நோய்கள், பெரும் நஷ்டங்கள், மோசமான மாற்றங்கள் எல்லாம் நம் சீரான வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடும். வந்ததை மறுப்பதால் பிரச்சினைகள் கூடுமே ஒழிய குறையாது. உண்மை நிலையை உணர்ந்து ஏற்றுக் கொண்டால் மட்டுமே தெளிவாக சிந்திக்கவும், செயல்படவும் முடியும். அந்த வகையில் மட்டுமே ஓரளவாவது பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள முடியும். யார் காரணம் என்று ஆராய்வதிலும், குற்றப்பத்திரிக்கை தயார் செய்வதிலும், எனக்குப் போய் இப்படி ஆகி விட்டதே என்று சுயபச்சாதபத்தில் மூழ்குவதிலும் எந்த விதத்திலும் ஒருவருக்கு பயன் கிடைக்காது.

பெரிய விஷயங்களைப் பார்த்தோம். இனி சின்ன விஷயங்களைப் பார்ப்போம். முக்கிய வேலையாகப் போகிறோம். வழியில் ட்ராஃபிக் ஜாம் ஆகி விடுகிறது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இது சந்தோஷப்பட வேண்டிய சூழ்நிலை அல்ல தான். ஆனால் சிலர் அந்த நேரத்தில் படும் அவசரமும், அவஸ்தையும் கொஞ்ச நஞ்சமல்ல. புலம்பித் தீர்ப்பதும், குடியே மூழ்கிப் போய் விட்டது போல மன அமைதி இழப்பதும் பலரிடம் நாம் பார்க்க முடிந்த தன்மைகள்.

அந்தப் புலம்பலாலும், அவசரத்தாலும் அந்த நிலைமையை மாற்றி விட முடியுமா? சில நிமிட தாமதங்களால் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நிகழ்வுகள் நிகழ்ந்து விடுமா? சரி செய்யவே முடியாத பேரிழப்பா அது? சில நிமிட சில்லறை அசௌகரியத்திற்கு பலரும் அமைதியிழந்து தவிப்பதும், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதும் என்னவொரு அறியாமை? மன அமைதியை இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் இழக்க ஆரம்பித்தால் மனம் அந்த அளவு பலவீனம் என்றல்லவா அர்த்தம். எது வேண்டுமானாலும் எவ்வளவு சீக்கிரமும் அதைப் பதட்டமடையச் செய்து விடும் என்றும், சுலபமாக அசைத்து விடும் என்றல்லவா பொருள்.

அதே போல் நிறைய சின்ன விஷயங்கள் பலரையும் தேவைக்கும் அதிகமாக மன அமைதி இழக்கச் செய்கின்றன. மழை விடாது பெய்தால் மன சங்கடம் வந்து விடுகிறது. அலுவலகத்திலும், அக்கம்பக்கத்திலும் ஒருசிலருடைய குணாதிசயங்கள் எரிச்சலைக் கிளப்புவதாக இருந்தால் மன அமைதி பறி போகிறது. எதிர்பார்த்தபடி அடுத்தவர்கள் நடக்கா விட்டால் மனம் குமுறுகிறது. இது போன்ற சின்னச் சின்ன இயற்கையான, நம்மால் மாற்ற முடியாத விஷயங்களில் மன அமைதியை இழப்பது அதிகம் நடக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் சீண்டிப்பார்க்கக் கூடிய இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் அதிகம் வருவது இயல்பே. இதைப்பற்றி அதிகம் நினைத்து, இதைப் பற்றியே அதிகம் புலம்பி தானும் வருந்தி சுற்றியுள்ளவர்களுக்கு அந்த மனநிலையை பரப்பி அமைதியை அந்த வட்டாரத்திலேயே இல்லாமல் செய்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்.  


இந்தக் கூட்டத்தில் நீங்களும் இருக்கிறீர்களா என்று பாருங்கள். வாழ்க்கையில் சகிக்க முடியாதவற்றில் மாற்றக் கூடியவை நிறைய உண்டு. அதை மாற்றும் முயற்சியில் மனிதன் ஈடுபட்டதால் மட்டுமே உலகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது. மனித சமுதாயம் வளர்ந்துள்ளதற்கும் காரணம் அதுவே. ஆனால் அதே போல மாற்ற முடியாத விஷயங்களும் நிறைய உண்டு. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை நாம் இங்கு பார்த்தோம். இவை நாம் முகம் சுளிப்பதால் தவிர்க்க முடிந்தவை அல்ல. இவை நாம் புலம்பினால் வராமல் இருப்பவையும் அல்ல. இது போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கையை நாம் லகுவாக்கிக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்ளும் போது நம் சக்தி வீணாவதைத் தடுக்கிறோம். மன அமைதியும் பெறுகிறோம்.

அப்போது ‘ஐயோ இப்படி ஆகி விட்டதே என்ற ஒப்பாரிக்கு பதிலாக ‘இனி என்ன செய்வது?என்ற ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கிறது. இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான சிந்தனையால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தும் விடுபடும் வழியோ, அல்லது அந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் வழியோ பிறக்கிறது. இப்படி மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் போது உலகத்துடன் போராடுவதை விட்டு விட்டு, உலகத்துடன் ஒத்துப் போய் சமாளித்து வெற்றி பெறுகிறோம்.


-என்.கணேசன்
நன்றி: வல்லமை



Monday, February 6, 2012

அட ஆமாயில்ல! 1



சில அறிஞர்களின் கருத்துக்களைப் படிக்கிற போது அட ஆமாயில்ல? என்று நமக்குத் தோன்றுவதுண்டு அல்லவா?
எத்தனையோ அறிஞர்களின் ஓருசில வரிகள் என்னை நிறைய சிந்திக்க வைத்ததுண்டு. எழுத வைத்ததுண்டு. இழந்த உற்சாகத்தை மீட்டுத் தந்ததுண்டு. சோதனைகளைத் தாங்கும் பக்குவத்தைத் தந்ததுண்டு. சிரிக்க வைத்ததுண்டு. என் செயல்முறைகளை மாற்றியதுண்டு. அதை எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு உண்டு. அப்படி எழுதி வைத்துக்கொண்ட அறிவுபூர்வமான, சுவாரசியமான, வழிநடத்தக்கூடிய சில வரிகளை இங்கு பதிவு செய்ய எண்ணியதன் விளைவு தான் இந்த “அட ஆமாயில்ல?”. முதல் தவணையாய் இதோ சில வாசகங்கள்...

இதில் எல்லாமே எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லா விட்டாலும் ஓரிரண்டு உங்களை சிந்திக்க வைக்கலாம், உலுக்கி எடுக்கலாம், பாதைகளை மாற்றலாம், வெறுமனே புன்னகைக்கவாவது வைக்கலாம். படியுங்கள். நன்றி அந்த அறிஞர்களுக்கு.

-என்.கணேசன்

பணத்திற்கு நாம் தான் அதிக மதிப்புக் கொடுக்கிறோமே தவிர இறைவன் அதற்கு மதிப்புக் கொடுத்ததாய் தெரியவில்லை. இல்லா விட்டால் அதைத் தகுதி இல்லாதவர்களிடமும், அயோக்கியர்களிடமும் கொடுத்து வைப்பாரா?
                                             -யாரோ

உனக்கு உரிமை இல்லாத பொருளை எடுத்துக் கொண்டு போனால் அழிவு தான். இராவணன் சீதையைக் கொண்டு போன மாதிரி.                                    
                                             -ராஜாஜி

ஒரு மனிதனை நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அவன் பதில்களைப் பாராதே. கேள்விகளைப் பார்.
                                             -வால்டேர்

மற்றவர்களின் தீய குணங்களை நாம் கற்களில் செதுக்குகிறோம். ஆனால் அவர்களது நற்குணங்களை ஓடுகிற தண்ணீரில் எழுதுகிறோம்.
                                            -விகடர் ஹ்யூகோ


உன் அழகிலே மனமகிழ்கிறாயா? ரோஜாவும் கூடத்தான் மிக அழகாய் இருக்கிறது. ஆனால் அது சீக்கிரம் வாடிப் போய் விடுகிறது. மலருக்கும் அழகுக்கும் அற்ப வாழ்வு தான் அளிக்கப்படுகிறது. ஆகவே அதை எண்ணி மகிழாதே.
                                            -கிரேக்கக் கவிதை

அனுபவம் என்பது நமது பொருள்களையெல்லாம் இழந்தபின் எஞ்சியிருப்பது.
                                              -காரனெட்

எல்லாம் போய் விட்டதென்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் போய் விடவில்லை. எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது. அதைக் கொண்டே எதையும் சாதித்து விடலாம்.
                                               -மில்டன்

காதலம்புகள் மலரால் ஆனவை. ஆனால் அது இதயத்தைத் துளைக்கும் போது மலராக இருப்பதில்லை.
                                          -மெக்ஸ்கோமதாஸ்

சின்ன விஷயங்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கப்பலின் அடித்தளத்தில் விழும் ஓட்டை கப்பலையே கவிழ்த்து விடுமல்லவா?
                                            -ஃபிராங்க்ளின்

பசியுள்ள ஒரு நாயைக் காப்பாற்றினாயானால் அது உன்னைக் கடிக்காது. மனிதனுக்கும், நாயிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இது தான்.
                                           -மார்க் ட்வெயின்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு குறிப்புப் புத்தகம். ஒரு கதை வரைய நினைத்து மற்றொன்றை வரைகிறான். எழுத நினைத்ததோடு எழுதியதை ஒப்பிடுங்கால் அதுவே வாழ்க்கையின் மிக இழந்த காலமாகும்.
                                          -ஹென்றி ஃபீல்டு

Friday, February 3, 2012

காலம் அறிந்து செயல்படுங்கள்!



வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 23
காலம் அறிந்து செயல்படுங்கள்!

வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

வெற்றிக்கான இந்த முக்கிய காரணிக்கு காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் ஒதுக்கி உள்ளார்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)

(தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.)

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். (484)

(காலத்தை அறிந்து தகுந்த இடத்தில் செயலைச் செய்பவர் இந்த உலகையே பெற நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.)

காலம் அறிந்து செயல்புரியக் கூடியவனுக்கு முடியாத காரியம் இல்லை, உலகையே பெற நினைத்தாலும் அது கைகூடும் என்கிற அளவுக்கு திருவள்ளுவர் உயர்த்திச் சொன்னது பொருளில்லாமல் அல்ல. வெற்றியாளர்களின் சரித்திரங்களை ஆராய்ந்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

காலம் மிக முக்கியமானது. விதைக்க ஒரு காலம், விளைய ஒரு காலம், அறுக்க ஒரு காலம் என்று விவசாயத்தில் காலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. காசிருக்கும் போது விதைகள் வாங்கி, மனம் தோன்றுகிற போது விதைத்து, பொழுது கிடைக்கிற போது அறுக்க நினைத்தால் அது எப்படி மற்றவர்களின் நகைப்பிற்கிடமாகுமோ அப்படித்தான் காலம் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும்.

சின்னப் பிள்ளைகளுக்குக் கூட இது போன்ற விஷயங்களில் அதிக விவரமுண்டு. எந்த நேரத்தில் அப்பாவிடம் காசு கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் வேண்டிய பொருள்கள் கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் குறும்பு செய்வது அபாயம் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துபடி. அவர்கள் எல்லா நேரத்திலும் எல்லாமே செய்து விட மாட்டார்கள். பெற்றோரின் மனநிலையும், வீட்டின் சூழ்நிலையும் அறிந்து செயல்படுவார்கள். தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். அந்த அளவு சூட்சுமமான புத்திசாலித்தனம் அவர்களுக்கு பெரும்பாலும் உண்டு.

அதே சூட்சும அறிவு ஒரு வெற்றியாளனுக்கு மிக முக்கியத் தேவை. ஒரு காலத்தில் வெற்றி தருவது இன்னொரு காலத்தில் வெற்றி தராது. ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில் அனாவசியமாகி விடலாம். ஒரு காலத்தில் பேசுவது உத்தமமாக இருக்கும் என்றால் இன்னொரு காலத்தில் பேசுவது வம்பை விலைக்கு வாங்குவது போலத் தான். இப்படி வாழ்க்கையில் பெரும்பாலானவை காலத்திற்கேற்ப மாறுபவையே. எனவே எந்த நேரத்தில் எது பயன் தரும் என்பதை உணர்ந்து அதை செய்தால் ஒழிய ஒருவன் வெற்றி பெற முடியாது.

ஒரு பணக்கார மனிதரை காலம் அறிதல் உலகப்பெரும் பணக்காரராக்கிய ஒரு உதாரணம் பார்க்கலாம். இரும்புத் தொழிலில் நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஆண்ட்ரூ கார்னிஜி என்ற அமெரிக்க செல்வந்தர். அந்த நேரத்தில் தான் இரும்பிலிருந்து எஃகு கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடையும் தன்மை உடையது. ஆனால் எஃகோ நன்றாக வளையக்கூடியதாகவும், அதிக உறுதியானதாகவும் இருந்தது. அதனால் இனி எஃகிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி தன்னுடைய மூலதனத்தை எஃகிற்கு மாற்ற எண்ணினார். அவருடன் சேர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த அவருடைய வியாபாரக் கூட்டாளிகள் அது மிகவும் அபாயகரமானது என்று எண்ணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இப்போதே நல்ல இலாபம் ஈட்டும் தொழில் இருக்கையில் இந்த புதிய மாற்றம் தேவை இல்லாதது என்று எண்ணினார்கள்.

ஆண்ட்ரூ கார்னிஜி புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு எஃகுத் தொழிலில் முழு மூச்சோடு இறங்கினார். அவருடைய பழைய கூட்டாளிகள் வெறும் பணக்காரர்களாக இருந்து விட்ட போது அவர் உலகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தது அவர் அப்படி காலம் அறிந்து செயல்பட்டதால் தான்.

எனவே காலம் அறிந்து செயல்படுவது மிக முக்கியமானது. காலம் வருவதற்கு முன்போ, காலம் கடந்த பின்போ கடும் முயற்சிகள் எடுப்பதும், காலம் கனியும் போது ஒடுங்கிக் கிடப்பதும் தோல்விக்கான தொடர் வழிகள். கடும் உழைப்பாளிகளில் பலர் கீழ்மட்டத்திலேயே தங்கி இருப்பதைப் பார்க்கிறோம். நல்ல திறமைசாலிகளில் பலரும் வாழ்க்கையில் சோபிக்காததையும் பார்க்கிறோம். ஆனால் காலம் அறிந்து அதற்கேற்ற மாதிரி செயல்படுபவர்களுக்கு ஓரளவு திறமையும், ஓரளவு உழைப்பும் இருந்தால் கூட போதும் நல்ல நிலைக்கு விரைவிலேயே உயர்ந்து விடுகிறார்கள். இதுவே யதார்த்தம்.

எனவே காலத்தின் ஓட்டத்தை கவனமாகக் கவனியுங்கள். எல்லாவற்றையும் விட அதிகமான முக்கியத்துவத்தை அதற்குக் கொடுங்கள். காலம் கனியும் போது விரைவாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள். காலம் அறிதல் அதிகாரத்தை மிக அழகாக இப்படிச் சொல்லி திருவள்ளுவர் முடிக்கிறார்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (490)

(பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். தக்க காலம் வரும் போது கொக்கு மீனைக் குத்துவது போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்)

எனவே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பாக உழைக்கவும் தயாராக இருங்கள். ஆனால் காலம் அறிந்து செயல்படுங்கள். அப்படி செயல்படும் போது சந்தேகங்களோ, தயக்கமோ வைத்துக் கொள்ளாதீர்கள். (உண்மையாக நீங்கள் காலம் அறிந்தவராக இருந்தால் சந்தேகமோ, தயக்கமோ வரும் வாய்ப்பும் இல்லை.) அப்படி செய்யும் போது காலத்தை உங்கள் துணையாகக் கொள்கிறீர்கள். காலத்தைத் துணையாகக் கொண்டு செயல்படுபவனுக்கு திருவள்ளுவர் கூறியது போல முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.

- என்.கணேசன்
நன்றி: வல்லமை