Monday, January 30, 2012

கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 22
கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!

இன்றைய காலத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குப் புதிராக இருப்பது என்ன தெரியுமா? மகிழ்ச்சி தான். அதையே அனைவரும் தேடி அலைகிறார்கள். அதற்காக படாத பாடு படுகிறார்கள். பார்க்கின்ற பலரிடம் அது இருப்பதாக எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஆனால் தங்களிடத்தில் மட்டும் ஏனது இல்லை என்று மனம் புழுங்குகிறார்கள். பொருள்களை வாங்கிச் சேர்த்தால் வருமா என்று பார்க்கிறார்கள். குடித்தால் கிடைக்குமா, புகைத்தால் கிடைக்குமா என்று மயங்குகிறார்கள். கேளிக்கைகளில் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். புகழால் பெற முடியுமா என்று முயற்சிக்கிறார்கள்.  ஆனால் மகிழ்ச்சி பலருக்கும் என்றும் ஒரு புதிராகவே தங்கி விடுகிறது.

சில சமயங்களில் மகிழ்ச்சி கிடைப்பது போலத் தெரிகின்றது. ஆனால் ஒருசில சின்ன மாற்றங்களில் அது மின்னல் வேகத்தில் மறைந்தும் போகிறது. இதோ கிடைத்து விடும், இப்போது கிடைத்து விடும், இதைச் செய்தால் கிடைத்து விடும், இது கிடைத்தால் கிடைத்து விடும் என்று சலிக்காமல் அதன் பின்னால் போகும் மனிதனுக்கு மகிழ்ச்சி கடைசி வரை முழுமையாக பிடிபடுவதில்லை. அதனால் தான் பல சமயங்களில் கிளர்ச்சியையே மகிழ்ச்சி என்று எண்ணி அவன் ஏமாந்து விடுகிறான். வெறுமனே ஏமாந்தாலும் பரவாயில்லை அதனால் சிறிதும் எதிர்பாராத பல பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறான்.

உதாரணத்திற்கு சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம். செய்தி ஒன்று-கல்லூரி மாணவ நண்பர்கள் சிலர் ஜாலியாக இருக்க எண்ணி மது அருந்தி இருக்கிறார்கள். போதையில் பேசிக் கொண்டு இருந்த போது அவர்களுக்குள் சண்டை வந்து விட்டது. வாய் வார்த்தைகள் கைகலப்பாகி, கடைசியில் ஒரு மாணவன் தன் நண்பனைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டான்.

நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல கல்லூரியில் சீட் கிடைத்து இன்ஜீனியராகும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த இரண்டு மாணவர்களில் ஒருவன் இறந்து விட்டான். இன்னொருவன் சிறையில் இருக்கிறான். அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடனும், வேதனையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை மதுவில் தேடியதில் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் கிடைத்தது பெருத்த சோகமே.

மது மனக்கவலைக்கு ஒரு மருந்து என்கிற எண்ணம் பலருக்கு உண்டு. இது வரை மது எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைத்ததாய் யாரும் சொல்லி விட முடியாது. போதையால் பிரச்னைகள் உருவாகலாமே ஒழிய தீராது, குறையாது. மூளையை மழுங்கடித்து மந்தமாக்கி யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது. 

இன்னொரு செய்தியைப் பார்ப்போம். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஒரு இளைஞன் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறான். திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தையுடன் நல்ல குடும்பஸ்தனாக இருக்கிறான். அந்த சமயத்தில் அவனுக்கு கூட வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவளுடனேயே அதிகம் இருக்கிறான், குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை, வீட்டு செலவுக்குப் பணம் தருவதில்லை என்ற நிலை வந்தவுடன் தான் அவன் மனைவிக்கு உண்மை தெரிய வருகிறது. அவள் அவளுடைய சகோதரனிடம் சொல்ல அவன் அவளுடைய கணவனுக்கு புத்திமதி சொல்கிறான். ஆனால் அது எடுபடாமல் போகிறது. சகோதரன் சிலரை வைத்து கணவனைக் குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் சிறை வைத்து மிரட்ட, வெளியே தப்பி வந்த கணவன் போலீசிடம் புகார் தருகிறான். சகோதரனுக்கு ஆதரவாக இருந்து இதை செய்ய வைத்த மனைவியைப் போலீஸ் கூப்பிட்டு விசாரிக்கிறது. இனி கைதும் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்ற பயம் வந்த மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த சகோதரனையும், குண்டர்களையும் போலீஸ் தேடுகிறது. இதில் பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக தாயில்லாமல் தவித்து நிற்கிறது.

கள்ள உறவு கிளர்ச்சியைத் தரலாம், அது என்றும் மகிழ்ச்சியைத் தராது. அந்தந்த நேரத்தில் மயங்க வைக்கலாம், ஆனால் என்றும் மனநிறைவைத் தராது. மனைவி, குழந்தை, அமைதியான குடும்பம், நல்ல வேலை என்று ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சியைத் தேடிப் போய் கள்ள உறவில் ஈடுபட்டு குடும்பத்தையே நாசப்படுத்திக் கொண்டு விட்டான் அந்த இளைஞன்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சி என்றால் என்னதென்று அறியாமல் கிளர்ச்சியை மகிழ்ச்சியாய் எண்ணியதால் விளைந்த கொடுமைகள். கானல் நீரை நிஜமென்று எண்ணி பயணித்து ஏமாந்த கதைகள். மகிழ்ச்சியைத் தேடி ஏதேதோ செய்யப் போய் அதற்கு நேர்மாறான துக்கத்தை சம்பாதித்த கதைகள். இந்த அளவிற்கு விபரீதத்தில் போய் முடியா விட்டாலும் கிளர்ச்சிகள் என்றுமே வாழ்க்கையில் நன்மையையும், மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது என்பது மட்டும் உண்மை.

ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்திற்கு விளக்கவுரை எழுதும் போது ராஜாஜி மிக அழகாகச் சொல்வார். “இதில் என்ன குற்றம் என்று எண்ணி மோசம் போக வேண்டாம். கண்கள் வழி திருப்தி உண்டாகாது. உண்டாவது ஆசை தான். ஒருவன் தண்ணீரைத் தேடுவான். தாகத்தை யாரேனும் தேடுவரோ? தேடினால் பிறகு உடனே தண்ணீரைத் தேட வேண்டுமல்லவா? நேர்மையை இழக்க எண்ணமில்லையாயின்  ஏன் நீயாகக் கஷ்டத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்?

தத்துவார்த்தமாகச் சொல்லப்பட்டாலும் ராஜாஜி அவர்கள் சொன்னதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. தண்ணீரைத் தேடுவது இயற்கை. ஆனால் தாகத்தையே தேடுவது செயற்கை. செயற்கையான எதிலும் மகிழ்ச்சி வந்து விடாது.

கிளர்ச்சிகளின் குணம் எப்போதும் ஒன்றே. அது அக்னியைப் போன்றது. எத்தனை விறகு போட்டாலும் அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும். தீனி போட்டு அதன் பசியைத் தீர்க்க முடியாது. தீனி போடுவதாலேயே பசி அதிகரிக்கும். அழிவு நிச்சயம் என்ற போதிலும் அடங்கி விடாது. அது அழித்தே அணையும்.

தீய பழக்கங்கள் தான் கிளர்ச்சிகள் என்றில்லை. ஒரு வரம்பை மீறி உங்களிடத்தில் எழும் எதுவும் கிளர்ச்சியாக மாறி விடலாம். பண ஆசை, புகழ் ஆசை, பொருளாசை முதலான எதுவும் வரைமுறைக்குள் இருக்கும் போது சாதாரண ஆசைகளாக இருக்கக்கூடியவை. ஒரு வரம்பை விட்டு மேலும் மேலும் அதிகரிக்கும் போது அவை கிளர்ச்சிகளாக மாறி விடும். கட்டுப்பாடு இல்லாமல் போகும். என்ன விலை கொடுத்தாவது அடையத் தோன்றும். மனிதன் என்ற நிலையிலிருந்து மிருக நிலைக்கும் போக வைக்கும். இந்த அறிகுறிகள் தோன்றுமானால் கிளர்ச்சி தன் ஆதிக்கத்தை உங்கள் மேல் செலுத்த ஆரம்பித்து விட்டது என்று பொருள்.

இத்தனையும் செய்வது மகிழ்ச்சிக்காகத் தான் என்ற பொய்யான மனோபாவத்தை அது மனதில் ஏற்படுத்தும். இதில் என்ன குற்றம் என்று அது வாதம் செய்யும். யாரும் செய்யாததா என்ற கேள்வியைக் கேட்கும். அப்போதெல்லாம் ஒரு உண்மையை மறந்து விடாதீர்கள்- கிளர்ச்சிகள் எல்லாம் மகிழ்ச்சிகள் அல்ல.

உண்மையான மகிழ்ச்சி உங்களுடன் அடுத்தவரையும் மகிழ வைக்கும். உங்களோடு சேர்ந்து உங்களுக்கு நெருங்கியவர்களையும் மகிழ வைக்கும். உண்மையான மகிழ்ச்சி நேர் வழியில் தான் வரும். பின்னால் வருந்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் கிளர்ச்சி மகிழ்ச்சியைத் தருவது போல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாது. ஆசைப்பட்டதைப் பெற எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். உங்கள் நல்ல தன்மைகளைப் படிப்படியாக அழிக்கும். உங்களையும் உங்களுக்கு நெருங்கியவர்களையும் கடைசியில் துக்கத்தில் ஆழ்த்தி விடும்.

எனவே மகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்திருங்கள். மகிழ்ச்சியை நாடுங்கள். கிளர்ச்சியை விலக்குங்கள்.

- என்.கணேசன்
 நன்றி: வல்லமை

Wednesday, January 25, 2012

கர்மம்-விகர்மம்-அகர்மம்



கீதை காட்டும் பாதை 16
கர்மம்-விகர்மம்-அகர்மம்

ஞான யோகத்தில் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

செயல்கள் என்னைப் பாதிப்பதில்லை. அவற்றின் பலன்களிலும் எனக்குப் பற்றில்லை. இவ்விதம் என்னை யார் அறிகிறானோ அவன் என்றும் செயல்களால் கட்டுண்டிருப்பதில்லை.

பலனில் பற்று வைக்காமல் செயல்களைச் செய்யச் சொன்னதன் காரணமே அந்த செயல்களால் நாம் கட்டுண்டு இருந்து விடக்கூடாது என்பதால் தான். அதை விரிவாகவே கர்மயோகத்தில் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு எப்படி முன்னுதாரணமாகவும் இருக்கிறார் என்பதையும் நாம் பார்த்தோம். போதித்த படியே இருந்து காட்டிய அவர் செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்க அவர் வழியை அறிந்து உணர்ந்தவர்களும் செயல்களால் கட்டுண்டு இருப்பதில்லை என்கிறார்.

உடல், மனம், அறிவு என்ற அடையாளங்களுக்குள் புகுந்து கொண்டு விடும் போது தான் நாம் இன்ப துன்ப அலைகளில் அலைக்கழிக்கப்படுகிறோம். அளவில்லாத, அழிவில்லாத, எதனாலும் பாதிக்கப்படாத ஆன்மாவாக நாம் தெளிவு பெற்று நம்மைக் காண்கையில் எந்த நிலையும், எந்த செயலும் நம்மைப் பாதிப்பதில்லை.

தெளிவான நீரிலும், அழுக்கான நீரிலும், அலைபாயும் நீரிலும் சூரியன் பிரதிபலிக்கிறது என்றாலும், பிரதிபலிப்புகள் ஒரு போலவே இருப்பதில்லை. தெளிவான நீரில் தெளிவாகவே சூரியன் தெரிகிறது. சேற்று நீரிலோ சூரியன் பிம்பம் மங்கித் தெரிகிறது. அலைபாயும் நீரிலோ சூரியனும் அலைபாய்வது போலத் தெரிகிறது. ஆனால் இந்தப் பிரதிபலிப்புகள் நீரின் தன்மைக்கேற்ப மாறுகிறதே ஒழிய சூரியனின் தன்மை எந்த விதத்திலும் மாறுவதில்லை.
நீருக்கு சூரியனின் தன்மையை மாற்றுகிற சக்தி அணுவளவும் கிடையாது.

அதே போல ஆத்மாவும் குடிபுகும் மனிதர்களின் உடல், மனம், அறிவுக்கேற்ப வெளிப்படும் தன்மை மாறி மாறித் தெரிகிறதே ஒழிய அதன் உண்மைத் தன்மை எந்த விதத்திலும் மாறுவதில்லை. தன் உண்மைத் தன்மைக்கு எதனாலும், எப்போதும் எந்த மாற்றமும் இல்லை என்பதை என்னேரமும் நினைவில் வைத்திருக்கும் மனிதனை எது தான் கட்டுப்படுத்தவோ, பாதிக்கவோ முடியும்?

அடுத்ததாக கர்மயோகத்திலும் சொல்லாத கர்மயோகத்தின் மிகப்பெரிய சூட்சுமத்தை இந்த ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஆழமாக விளக்குகிறார். 

எது கர்மம்? எது கர்மமல்ல? இதை அறிந்து கொள்வதில் அறிஞர்களும் குழப்பமடைந்து விடுகிறார்கள். அதனால் கர்மத்தை உனக்கு விளக்கப் போகிறேன். இதை அறிந்து விட்டால் நீ இந்தப் பிறவியின் தீமைகளில் இருந்து விடுபடுவாய்.

நீ உண்மையான கர்மத்தைப் பற்றி அறிய வேண்டும். அதே போல விகர்மத்தைப் பற்றியும், அகர்மத்தைப் பற்றியும் அறிய வேண்டும். ஏனென்றால் கர்ம மார்க்கம் ஆழமானது. அதை சரியாகப் புரிந்து கொள்வது சுலபமல்ல.

செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்.

யாருடைய ஒவ்வொரு கர்மமும் ஆசையிலிருந்தும் சுயநல நோக்கத்தில் இருந்தும் விடுபட்டிருக்கிறதோ, யார் தன் கர்மங்கள் அனைத்தையும் ஞானம் என்ற தீயில் எரித்து விட்டானோ, அத்தகைய ஒருவனைத் தான் பண்டிதன் என்று விவேகிகள் கூறுகிறார்கள்.

இந்த கர்மம், விகர்மம், அகர்மம் என்ற சொற்களில் மனிதனின் வாழ்க்கையே அடங்கி விடுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் செய்ய வேண்டிய செயல்கள் செய்வது கர்மம். செய்யக் கூடாத செயல்கள் செய்வது விகர்மம். செயலற்று இருப்பது அகர்மம். இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது, இதைப் புரிந்து கொள்வது சுலபமல்ல என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறக் காரணம் என்ன என்ற சந்தேகம் எழலாம்.

இந்த மூன்றையும் பார்வையால் அறிந்து கொள்வது கிட்டத்தட்ட முடியாத காரியமே. ஏனென்றால் பார்வைக்கு ஒன்று இன்னொன்றாகத் தெரிய வாய்ப்புகள் அதிகம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்பவனைப் பார்த்தால் அவன் செயல் புரிகிறான், அதனால் அது கர்மம் என்று தோன்றலாம். ஆனால் அவன் செய்வது அவனுக்குத் தேவையும் பயனும் அற்ற வேலையாக இருந்தால் அது உண்மையில் விகர்மம். அதனால் எந்த மாற்றமும் ஏற்படாமல் முன்னிருந்த நிலைமையே தொடர்ந்து இருக்குமானால் அது செயல் புரிந்ததே அல்ல என்பதால் அது அகர்மம்.

அதே போல் ஒருவன் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பார்வைக்கு அவன் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறான், எனவே அது அகர்மம் என்று தோன்றலாம். ஆனால் அவன் மனதில் ஓராயிரம் எண்ணங்கள் ஓடுமானால் அது அகர்மம் அல்ல. மனதில் ஏற்படும் எண்ணங்கள் அவனை நல்வழிப்படுத்துவதாகவும், செய்ய வேண்டிய செயல்களைச் செய்யத் தூண்டுவதாகவும் இருக்குமானால் அது கர்மமே.  அந்த எண்ணங்கள் பயன் இல்லாதவையாகவும், அவனுக்குத்  தேவை இல்லாதவையாகவும் இருந்தால் அது விகர்மமே.

உடலால் நடக்கும் செயல்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. மனதிலும், அறிவிலும் கர்மம் அல்லது விகர்மம் நடந்து கொண்டே இருக்கின்றது. எந்த அளவு மனிதன் கர்மத்தை சிரத்தையுடன் செய்து, விகர்மத்தை தவிர்க்கிறானோ அந்த அளவு நன்மை அடைகிறான். அதற்கு எதிர்மாறாக இருக்கும் போதோ தீமையை சம்பாதிக்கிறான்.

இதனைத் திருவள்ளுவர் ரத்தினச்சுருக்கமாகச் சொல்வார்:

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்.

(ஒருவன் செய்யத்தகாத செயலைச் செய்தாலும் கெடுவான். செய்ய வேண்டிய செயலைச் செய்யா விட்டாலும் கெடுவான்.)

உண்மையில் செயலற்று இருக்கும் அகர்மம் எளிதில் சாத்தியமல்ல. சும்மா இருப்பது சுகம் என்று பலருக்கும் தோன்றினாலும் அது தான் மிகவும் கஷ்டமான காரியம். பலருக்கும் அசையாமல் இருப்பதே முடியாத காரியம். கை கால்களையாவது ஆட்டிக் கொண்டு இருப்பார்கள். அசையாமல் இருக்க முடிந்தாலும் மனதினுள் நடக்கும் செயல்களோ ஓராயிரம் கோடி. ஆழ்ந்த உறக்க நிலையில் தான் ஓரளவாவது அகர்மம் அவர்களுக்கு சாத்தியமாகிறது. முழுமையாக அகர்மம் சாத்தியமாவது என்பதோ மரணத்தில் தான்.

எனவே தோற்றத்தை வைத்து செயல் செயலின்மையை சாதாரணமாக யாரும் கண்டுபிடித்து விட முடியாது. செயலில் செயலின்மை இருக்கலாம், செயலின்மையில் செயலும் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க ஞானியாலேயே முடியும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

கரையிலிருந்து பார்க்கையில் தூரத்தில் கப்பல் சென்று கொண்டிருந்தாலும் அது அப்படியே நிற்பது போலத் தான் தோன்றும். இது செயல் செயலின்மையாகத் தெரிவது. அதே போல ஆழ்ந்த சிந்தனையில் ஒரு ஞானியோ, விஞ்ஞானியோ இருப்பது செயலற்ற நிலை போலத் தோன்றினாலும் அது வீரியமுள்ள செயல்நிலை என்றே சொல்ல வேண்டும். பின்னால் வரும் பல தலைமுறைகள் வாழ்க்கை முறைகள் அவர்கள் சிந்தனைகளால் மாறக்கூடும்.

(தியானத்தின் போது யோகிகளும், ஆராய்ச்சிகளின் போது ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும் வேகம் குறைந்த, அதிக செயல்பாடுகள் இல்லாத ஆல்ஃபா மன அலைகளில் இருப்பதை ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடரில் படித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.)

ரயிலில் பயணம் செய்கையில் பார்க்கின்ற மரம், செடி, கொடி எல்லாம் வேகமாக நம்மைக் கடந்து செல்வது போலத் தோன்றும். ஆனால் அவை எல்லாம் அதனதன் இடத்தில் அப்படியே தானே இருக்கின்றன. இது தான் செயலின்மை செயலாகத் தெரிவது. அதே போல சில மனிதர்களின் சுறுசுறுப்பும் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் ஒன்றை செய்து அதற்கு எதிர்மாறாக இன்னொன்றை செய்து விளைவைப் பூஜ்ஜியமாக்கி விடுவார்கள். பார்வைக்கு நிறைய செயல்கள் நடப்பது போலத் தோன்றினாலும் அத்தனையும் வீண் தான்.

எனவே தான் எதையும் பார்வைக்குத் தெரிகிற மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஒரு ஞானியின் பார்வையில் காணச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நாமும் நிறைய செயல்கள் புரிகிறோம். அப்படி செயல்புரிந்து பல சந்தர்ப்பங்களில் களைத்தும் போகிறோம். அவையெல்லாம் பெரிய விஷயங்கள் என்று எடுத்துக் கொள்வதற்கு முன்பாக ஸ்ரீகிருஷ்ணரின் இந்த வகைப்படுத்தலில் எந்த வகையில் வருகிறது என்பதை நாம் சிந்தித்து அறிய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் செய்து கொள்ள வேண்டிய சுயபரிசோதனை இது. அப்படி செய்தால் தான் சரியான பாதையில் தான் நம் வாழ்க்கை முன்னோக்கிப் போகிறதா என்பதை நம்மால் உணர முடியும்.  அவ்வப்போது இப்படிப் பார்க்கா விட்டால் பாதை மாறி நாம் சற்றும் நினைத்திராத, நம் இலக்கில்லாத வேறு ஏதோ ஒரு இடத்திற்குப் போய் சேர வேண்டி இருக்கும்.
மறுபடியும் நம் இலக்கை அடைய திரும்பவும் அதே அளவு தூரத்தைக் கடக்க வேண்டும் என்பதால் அவ்வப்போது நம் செயல்களை சோதித்துப் பார்ப்பது தேவையில்லாத அலைச்சலையும், அதனுடன் சேர்ந்து வரும் பிரச்சினைகளையும் தவிர்க்கும்.

பாதை நீளும்...

-என்.கணேசன்
நன்றி: விகடன்

Friday, January 20, 2012

திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள்



வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 21
திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள்

வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா சிண்ட்ரம் (The Niagara Syndrome) என்ற பிரச்னையில் கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறுகிறார். அந்தப் பிரச்னையில் திட்டமில்லா மனிதர்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

“வாழ்க்கையை ஒரு நதியாகச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் எங்கே போய் முடிய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலேயே அதில் குதித்து விடுகின்றனர். விரைவிலேயே வாழ்க்கை நதியின் அவ்வப்போதைய நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போதைய நிகழ்வுகள், அப்போதைய பயங்கள், அப்போதைய சவால்களை எதிர்கொள்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை நதியில் கிளைகள் வரும் போதும் அவர்கள் எந்தப் பக்கம் போவது என்றோ, எதில் செல்வது இலாபகரமானது என்றோ கவனம் கொடுத்து தீர்மானிப்பதில்லை. தானாக எதில் கொண்டு போய் விடுகிறதோ அதில் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இப்படி அரை மயக்கத்தில் செல்லும் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தட்டி எழுப்புவது தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் ஓசை தான். விழித்துக் கொள்ளும் போது தான் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஐந்தடி தூரத்தில் துடுப்பில்லாத படகில் வேகமாக வந்து கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நேரத்து ஞானோதயம் காலம் கடந்ததாக இருந்து விடுகிறது. அந்த வீழ்ச்சியில் விழுந்தே தீர வேண்டியிருக்கிறது. அது உணர்ச்சிகளின் வீழ்ச்சியாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம், பொருளாதார வீழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக சரியான முடிவுகளைத் திட்டமிட்டு எடுத்திருந்தால் இதைக் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்.

திட்டமிடா விட்டாலும் வாழ்க்கை நகரத்தான் போகிறது. ஆனால் அது போகும் பாதை நமக்கு அனுகூலமாக இருக்கத்தான் வாய்ப்பில்லை. அந்தோணி ராபின்ஸ் கூறுவது போல அது ஏதோ ஒரு வீழ்ச்சியில் என்றோ ஒரு நாள் உங்களை வீழ்த்தக்கூடும். திட்டமில்லா மனிதர்களுக்குத் திறமையும், உழைப்பும், உற்சாகமும் பெரிதாக பயன்பட்டு விடப்போவதில்லை. காரணம் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. காட்டாறு போல பிரவாகம் எடுத்து வரும் அனைத்தும் கட்டுப்பாடான கரைகளுக்குள் இல்லாமல் கண்டபடி எல்லா பக்கங்களிலும் போவதால் சீக்கிரமே வடிந்து விடுகிறது. அதனால் ஒரு சமயத்தில் பிரம்மாண்டமாகத் தெரிகிற வளர்ச்சி இன்னொரு சமயத்தில் கண்ணிற்கே தென்படுவதில்லை.

திட்டமிடாதவர்கள் வாழ்க்கையை அவர்களைத் தவிர அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு நகர்த்துகிறார்கள். மற்ற சூழ்நிலைகளும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மற்ற மனிதர்களும் சூழ்நிலைகளும் தீர்மானிக்கும் போது அதை எதிர்க்கும் சக்தி திட்டமில்லா மனிதர்களுக்கு இருப்பதில்லை.

வாழ்க்கை என்ற நீண்ட ஓட்டத்தை விடுங்கள். ஒரு விடுமுறை நாள் என்ற குறுகிய காலம் கூட திட்டம் என்று ஒன்று இல்லா விட்டால் நமக்கு பயன்படும்படி அமைவதில்லை. அந்த நாளில் ஒரு பகுதியை வம்புப் பேச்சு கழித்து விட முடியும். இன்னொரு பகுதியை டிவி திருடிக் கொண்டு விட முடியும். இன்னொரு பகுதியைத் தேவையோ, உபயோகமோ இல்லாத இன்னொரு செயல் இழுத்துச் சென்று விட முடியும். மீதிப்பகுதியை சோம்பலோ, ஊர்சுற்றலோ எடுத்துக் கொண்டு விட முடியும்.

ஆனால் முன்கூட்டியே திட்டம் என்று ஒன்றிருக்குமானால், நாம் செய்ய வேண்டியவை இன்னதெல்லாம் என்று முன்கூட்டியே தீர்மானம் ஒன்று இருக்குமானால் அந்த நாளை மேலே சொன்ன எதுவும் நம்மிடம் இருந்து பிடுங்கிச் சென்று விட முடியாது. அதற்கான அவகாசத்தையே நாம் தந்து விடப் போவதில்லை.

திட்டமிட்டால் மட்டும் அப்படியேவா நடத்தி விட முடிகிறது என்ற நியாயமான கேள்வியைக் கேட்கலாம். நாம் ஒன்று நினைத்தால் நாம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அத்தனை திட்டத்தையும் பாழடிக்கிற மாதிரி வந்து சேரலாம். அது தான் வாழ்க்கையின் யதார்த்தமும். ஆனால் திட்டம் என்று ஒன்று இருக்கையில் அந்த சூழ்நிலையில் இருந்து எவ்வளவு வேகமாக வர முடியுமோ அந்த அளவு வேகமாக வெளியே வந்து விடுகிறோம். முன்னமே திட்டம் இட்ட சில வேலைகளையாவது செய்து முடிக்கிறோம்.

நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டி இருக்கிறது, நம் வாழ்க்கை எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும். பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் ஆரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிகக் குறையும். ஊர்வம்பில் சேர்வதற்கோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கோ நம்மை அது விடாது. இப்படி நமக்கு பயன்படுவதற்கு மட்டுமல்லாமல் அடுத்தவரைத் தொந்திரவு செய்யாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுவது உதவும்.

திட்டமில்லாத மனிதர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் உறைக்கும். நயாகரா சிண்ட்ரம் என்று அந்தோணி ராபின்ஸ் சொன்னது போல என்ன நிலவரம் என்பது வீழ்ச்சிக்கு முன்னால் தான் புரியும். அந்த நேரத்தில் என்ன தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதிக வேகமும், செயல்திறனும் காட்டினாலும் அது பயன் தருவது மிக அபூர்வமே.

ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இத்தனை சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்கள் திட்டம் நூறு சதவீதம் நிறைவேறாது. முன்பே சொன்னது போல நாம் நினைத்திராத எத்தனையோ தடைகளும், சூழ்நிலைகளும் வந்து சேரலாம். அதற்கென்று திட்டமே வேண்டாம் என்று முடிவு கட்டி  விடாதீர்கள். தடைகளைத் தாண்ட முடியுமா என்றும் சூழ்நிலைகளை மாற்ற முடியுமா என்றும் பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். அப்போது தான் நம் திறமைகளே நமக்கு அறிமுகமாகும்.  அப்படி முடியா விட்டாலும் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு பழையபடி திட்டமிட்ட வாழ்க்கைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வாருங்கள். செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் சுமார் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல. மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் என்றும் நீங்கள் வருந்தக் காரணமிருக்காது.

-என்.கணேசன்
நன்றி: வல்லமை

Monday, January 16, 2012

வேரை மறந்த விழுதே...



உன்னில் என்றும் தன்னைக் கண்டனள்
தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள்
கண்ணே மணியே பொன்னே என்று
விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.

ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை
நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி
தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.

தனியாய் பயணம் கிளம்பிய போதும்
தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும்
விதியாய் எண்ணி நொந்தனள் தவிர
சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.

தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன் நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும் நெஞ்சினில் இறக்குமோ?

தலையில் ஊற்றிய நீரது விரைவில்
காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!
நாளை முதுமை உனக்கும் வருகையில்
பிள்ளை உன்வழி நடக்கையில் உணர்வாய்!


- என்.கணேசன்

Wednesday, January 11, 2012

விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!



வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 20
விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!

எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

நம் முன்னோர்கள் இதை ‘கர்மாஎன்று சொல்வார்கள். நம் செயல்களின் விளைவு இந்தப் பிறவியில் அனுபவிக்கப்படா விட்டால் அடுத்த பிறவி வரை கூடத் தொடரும் என்றார்கள். உங்கள் நிழல் கூட இருட்டில் மறைந்து விடும். ஆனால் நீங்கள் செய்த செயல்களின் விளைவான கர்மா தன் பலனை அனுபவிக்கச் செய்யும் வரை என்றும் கூடவே வரும். அதனால் தான் பெரியோர்கள் ‘இறந்த பின்னும் கூடவே வருவது அவரவர் நல்லது, கெட்டது தான் என்பார்கள்.

விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது யாரும் பார்க்கவில்லையே என்று ஒருவன் கோணல் மாணலாக நாற்றுகளை நடலாம். ஆனால் அவை வளர்ந்த பின் என்ன நட்டிருக்கிறீர்கள் என்பதையும் எப்படி நட்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்குக் காட்டாமல் விடாது. அதனால் தவிர்க்க முடியாத இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அப்படி நடக்க வாய்பேயில்லை. ஏனென்றால் இந்த அடிப்படை விதியிலேயே உலகம் அன்றிலிருந்து இன்று வரை இயங்குகிறது. இந்த விதியே இயற்கை. இந்த விதியே இறைவன்.

எனவே நன்மைகளை தன் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் மனிதன் தன் செயல்களில் நன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தீமைகளைச் செய்து விட்டு தனக்கு நன்மை நடக்கும் என்று நம்புபவன் கிழக்கு திசையில் உள்ள ஊருக்குச் செல்ல ஆசைப்பட்டு மேற்கு திசை நோக்கி நடக்கும் முட்டாளுக்கு இணையாகிறான். எல்லா அக்கிரமங்களையும் செய்து விட்டு கங்கையில் மூழ்கினாலும் பாவத்தைக் கழுவி விட முடியாது. உங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க இறைவன் மாமூல் வாங்கும் அரசு அதிகாரி அல்ல. ஆகையால் கோயில் உண்டியல்களில் கோடி கோடியாய் கொட்டினாலும் உங்கள் கணக்கு சரியாகி விடாது. உங்கள் கணக்கு சரியாவது அதற்குத் தகுந்த விளைவோடு தான்.

சில சமயங்களில் நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகளும், தீய செயல்களுக்கு தீய விளைவுகளும் கிடைப்பதற்குத் தாமதமாகலாம். அந்த தாமத காலத்தில் இந்த விதி பொய்ப்பது போன்ற தோற்றம் பலருக்கும் தோன்றலாம். ஆனால் தாமதமானாலும் விளைவுகள் வட்டியோடு வந்து சேரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் செயலும் விளைவும் பிரிக்க முடியாத ஜோடி என்பதால் ஒன்றின் பின்னாலேயே மற்றது வந்து சேர்ந்து தானாக வேண்டும். 

எனவே விளைவுகளை மாற்ற விரும்பினால் மனிதன் செயல்களை மாற்ற வேண்டும். அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இந்த விதி நன்மை, தீமைகளுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. செயலின் சிறப்புத் தன்மைக்கும் இதே விதி தான்.

விளைவைப் பார்க்கையிலேயே அந்த செயல் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விடும். கவனமாகச் செய்தீர்களா, ஈடுபாட்டுடன் செய்தீர்களா, முழு மனதோடு செய்தீர்களா, அந்த செயலுக்குத் தேவையான அறிவுபூர்வமாகச் செய்தீர்களா என்பதை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் செயலின் விளைவு சொல்லி விடும். விளைவைப் போஸ்ட் மார்ட்டம்செய்தால் சின்னத் தவறு கூட இல்லாமல் செயல் செய்த விதத்தைச் சொல்லி விடலாம். சிறப்பாகச் செய்யும் செயல்கள் சிறப்பான விளைவுகளாக மலர்ந்து வாழ்க்கையை சோபிக்கும். வேண்டா வெறுப்பாகவோ, திறமைக் குறைவாகவோ செய்யும் செயல்கள் அதற்குத் தகுந்தாற் போல மோசமான விளைவுகளாக வெளிப்பட்டு களையிழந்து காட்சி அளிக்கும்.

இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பலர் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறார்கள். நான் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற்றமில்லைஎன்று பலர் புலம்புவதை நாம் கேட்கிறோம். குறிப்பட்ட வகையில் எத்தனை உழைத்தாலும் முன்னேற்றமில்லை என்றால் அந்த உழைப்பில், உழைக்கும் விதத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் அப்படியே தொடர்ந்து உழைத்துக் கொண்டு போவது முட்டாள்தனம் அல்லவா? எங்கே என்ன தவறு இருக்கிறது அல்லது என்ன குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதன்படி சரி செய்து கொண்டு உழைத்தாலல்லவா நாம் நல்ல விளைவுகளைக் காண முடியும். இந்த அடிப்படை உண்மையை வாழ்க்கையில் உணர பலரும் மறப்பது தான் பரிதாபம்.

செய்கின்ற வேலையில் முன் யோசனையும், திட்டமிடுதலும், தேவையான திறமையும் இருந்தால் அந்த வேலை சீக்கிரமாக முடியும், சிறப்பாகவும் முடியும். ஆனால் உழைப்பு மட்டும் இருந்து முன் சொன்ன மூன்றும் இல்லா விட்டால் வேலையும் முடியாது, வேலை சிறப்பாகவும் இருக்காது. வேலை எதுவாக இருந்தாலும் விதி இது தான்.

செயலின் முடிவே விளைவு என்ற உண்மையே மிகப்பெரிய பாடம் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் நிலைமையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா? நீங்கள் அடைய நினைத்த வெற்றிகளை அடையவில்லையா? உலகம் உங்களை சரியாக மதிப்பிடவில்லை என்ற வருத்தமா? இதில் எதற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால் முதலில் உங்களுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பாருங்கள். செயல்படும் முறையிலும், செயல்படும் நேரத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அல்லது செய்ய வேண்டிய ஏதோ முக்கியமானது விடுபட்டுப் போயிருக்கலாம். செய்யக் கூடாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்து கொண்டும் இருக்கலாம். சரியான கூட்டல், கழித்தலை உங்கள் செயல்களில் புகுத்தினால் கண்டிப்பாக விளைவுகள் மாற ஆரம்பிப்பதைப் பார்க்கலாம். அதை விட்டு விட்டு வருந்துவதும், குமுறுவதும், புலம்புவதும் மாற்றத்திற்கு உதவாது.  

இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் வேலை செய்வேன், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்பவன் தோற்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். செயலின் விளைவு எதிர்பாராததாக இருந்தால் ஏன் என்று சிந்தித்து மாற்ற வேண்டியதை மாற்றி விட்டு மறுபடி செயல்பட வேண்டும்.
அவ்வப்போது நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும். அதுவே நம் வாழ்க்கையை மெருகுபடுத்திக் கொண்டே செல்லும். எல்லா மகத்தான மனிதர்களும், எல்லா வெற்றியாளர்களும், தாங்கள் வேண்டும் விளைவுகளுக்கேற்ப தங்கள் செயல்களை சரிப்படுத்திக் கொண்டே வந்தவர்கள் தான். உலகம் அவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் என்று சுருக்கமாக அழைத்தாலும் சரியான நேரத்தை, சரியானதை, சரியான விதத்தில் செய்தது தான் அந்த அதிர்ஷ்டத்தின் ரகசியம்.
இதுவே வாழ்க்கையில் படிக்க வேண்டிய மிகப்பெரிய பாடம். இதில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் சாதிக்க முடியாத இலக்குகள் இல்லை, அடைய முடியாத சிகரங்களும் இல்லை.


-என்.கணேசன்
நன்றி: வல்லமை


Friday, January 6, 2012

நம்பும் படியே நடக்கும்!



அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர். அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.

பலரும் மயங்கி விழ ஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த குளிர்பானம் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர ஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று நலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் முதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று அறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின் அறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை அறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது தான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


மனதின் நம்பிக்கைகளின் சக்தி இது போன்ற எத்தனையோ ஆராய்ச்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பீச்சர் (Dr. Henry Beecher) இது குறித்து விரிவான ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். அதில் ஒரு ஆராய்ச்சி நம்பிக்கைகள் ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் குறித்தது. அந்த ஆராய்ச்சியில் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு புதிய மருந்து வகைகளைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதன் சக்தி பரிசோதனைக்காக இந்த ஆராய்ச்சி என்றும் அந்த மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது.

சிவப்பு மாத்திரை (capsule) உடனடியாக அதிக சக்தி தரும் ஊக்க மருந்தாகவும் (super-stimulant), நீல மாத்திரை உடனடியாக அமைதிப்படுத்தும் மருந்தாகவும் (super-tranquilizer) மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகள் மாணவர்கள் அறியாமல் மாற்றப்பட்டிருந்தன. சிவப்பு மாத்திரை அமைதிப்படுத்தும் மருந்தாகவும், நீல மாத்திரை சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் இருக்க அவற்றை மாணவர்களுக்கு உட்கொள்ளக் கொடுத்தார்கள். ஆனால் ஐம்பது சதவீதம் மாணவர்கள் தாங்கள் என்ன மருந்து சாப்பிட்டோம் என்று தவறாக நம்பினார்களோ அதற்கேற்ற விளைவுகளையே தங்கள் உடலில் கண்டார்கள். இது வரை மருந்தே அல்லாத ஒன்றை மருந்தென்று (Placebo Effect) நம்பி அதற்கேற்றவாறு குணமான பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் டாக்டர் ஹென்றி பீச்சர் உண்மையான மருந்தையே கொடுத்து அதற்கு நேர் எதிரான ஒரு விளைவை மனிதன் தன் நம்பிக்கையால் ஏற்படுத்திக் கொள்கிறான் என்று கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் சிறப்பு.

யேல் பல்கலைக்கழக பேராசிரியர் (Dr. Bernie Siegel) அன்னியன் திரைப்படத்தில் வருவது போல பல ஆட்களாய் ஒருவரே மாறும் (Multiple Personality Disorders) வியாதியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தவர். அப்படி வேறொருவராக மாறும் போது வியக்கத்தக்க வகையில் அவர் உடலும், குணாதிசயங்களும் மாறுவதாக அவர் பரிசோதித்து கண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற மாற்றங்கள் வெறும் கற்பனை அல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.


இந்த ஆராய்ச்சிகளும், நம்முடைய சில அனுபவங்களும் சொல்லும் மகத்தான உண்மை இது தான் - மனம் எதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையின் ஆழத்திற்கேற்ப உருவாக்கத்தின் தன்மையும் இருக்கும்.  இருட்டில் கையில் பிடித்தது கயிறாக இருந்தாலும் அதை பாம்பு என்று எண்ணி பயக்கும் வரையில் உடலில் ஏற்படும் அத்தனை விளைவுகளும் பாம்பைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளாகவே இருக்கும். விளக்கைப் போட்ட பின் அது கயிறென்று உணர்ந்த பின் தான் அந்த பயத்தின் மாற்றங்கள் விலகும்.

உடலில் மட்டும் தான் நம் நம்பிக்கையின் விளைவுகள் வெளிப்படும் என்பதில்லை. எல்லாவற்றிலும் நம் நம்பிக்கைகளின் ஆதிக்கம் உண்டு. எதை நம்புகிறோமா அதற்கேற்ற தன்மைகளை நாம் நம்மிடம் உருவாக்கிக் கொள்கிறோம். அடுத்தவர்களிடமும் உருவாக்கி விடுகிறோம்.

மனம் அந்த அளவு சக்தி வாய்ந்தது என்றால் நாம் எப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நாம் கவனமாக இருக்கிறோமா? நம்முடைய நம்பிக்கைகளில் எத்தனை நம்மை பலப்படுத்துவனவாக இருக்கின்றன? எத்தனை நம்பிக்கைகள் நம்மை மெருகேற்றுவனவாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில் தான் நம் வாழ்க்கையின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே வாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும், சிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப ஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுவது போலத் தான். அதே போலத் தான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை.

ஆழமாக எதை நம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது ஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும் சக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை நம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக் கூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தொடர்ந்து நம்பி நன்மைகளை எதிர்பாருங்கள். விரைவில் அந்த நம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள் காணலாம். 

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்


Monday, January 2, 2012

கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!



வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 19
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!

இந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறைய சம்பாதிப்பவன், நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.

நமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதை விட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து வைத்திருப்பவனையும் பார்த்தால் நம் திருப்தி காணாமல் போகிறது. நம்மை விட அதிகமாக உலகம் அவனை மதித்தால் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் பின் தங்கி விட்ட பிரமை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே நம் வேகத்தை இரட்டிப்பாக்கி நாமும் ஓடி அவனை முந்தப் பார்க்கிறோம். அப்படி முந்தி விடும் போதாவது திருப்தியுடன் நிற்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அந்த நேரத்தில் நம்மை முந்தி சென்று கொண்டிருக்கும் இன்னொருவன் நம் கண்களில் படுகிறான். வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறோம். இந்தப் பைத்தியக்கார ஓட்டம் கடைசி வரை நிற்பதேயில்லை.

பசிக்கிற அளவுக்கு சாப்பிடுவது இயற்கை. அது தேவையும் கூட. ஆனால் அதிகமாக சாப்பிடுகிறவனைத் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்ற ஒரு நிலை இருந்து, அதற்காக அசுரப்பசியை ஏற்படுத்திக் கொண்டு, அதைத் தீர்க்க சாப்பிட்டுக் கொண்டே போனால் அஜீரணம், வாந்தி முதலான உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்ல, ஒரு வடிகட்டிய முட்டாளாக நடந்து கொள்கிறோம் என்பதும் நமக்கும் புரியலாம். ஆனால் இதையே நாம் வேறுபல விஷயங்களில் செய்கிறோம் என்றாலும் அந்த முட்டாள் தனம் நமக்குப் புரிவதில்லை.

செல்வம் மிக முக்கியம் தானே, நம் வாழ்விற்கு ஆதாரம் தானே, அப்படி இருக்கையில் அதிகமாக அதைத் தேடி அடைவது தானே வெற்றி, அது தானே புத்திசாலித்தனம் என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அவை எல்லாம் நியாயமானதாகவும் நமக்குத் தோன்றலாம். செல்வம் தேடுவது தவறல்ல. அதை அதிகமாகத் தேடி அடைவதும் தவறல்ல. தவறு எங்கே தெரியுமா நிகழ்கிறது அதற்கு நம் வாழ்க்கையில் நாம் தரும் விலையில் தான்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இளம் தம்பதியரை உதாரணமாகப் பார்ப்போம். அவர்கள் இருவரும் சாஃப்ட்வேர் இன்ஜீனியர்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை வேலை பார்க்கிறார்கள். சமைக்க ஆள் இருக்கிறது. குழந்தையைக் கவனித்துக் கொள்ள ஆளிருக்கிறது. இருவரும் ஒரு ஃப்ளாட் வாங்கியாகி விட்டது. இரண்டு கார்கள் வாங்கியாகி விட்டது. விடுமுறை நாட்களில் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்காவது பிக்னிக் போகிறார்கள். இரவு திரும்புகிறார்கள். விடுமுறை முடிந்து மறுநாள் பழையபடி ஓட்டம் ஆரம்பிக்கின்றது. அடுத்த விடுமுறை வரை இதே ஓட்டம் தொடர்கிறது.

இருவரும் இப்படி கடுமையாக உழைப்பதால் தான் மிக நல்ல பள்ளியில் அதிகமாக ஃபீஸ் கட்டி குழந்தையைப் படிக்க வைக்க முடிகிறது. அவ்வப்போது பெரிய ஓட்டல்களிற்கு சென்று சாப்பிட முடிகிறது. விலை உயர்ந்த ஆடைகளையும், பொருள்களையும் வாங்க முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை காசைப் பற்றிக் கவலைப்படாமல் டூர் போக முடிகிறது. இதெல்லாம் அதில் அனுகூலங்கள்.

சரி இதில் எதையெல்லாம் விலையாகத் தருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி செய்யவோ, நடக்கவோ நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.

குழந்தையை நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ, முழுமையாகப் புரிந்து கொள்ளவோ நேரமில்லை. மாலை நான்கு மணிக்கு வீடு வந்து சேரும் குழந்தை டிவி பார்த்துக் கொண்டோ, வீடியோ பார்த்துக் கொண்டோ பொழுதைப் போக்கும். இல்லா விட்டால் டியூஷன் போகும். சாவகாசமாக அதனுடன் இருக்கவோ, நெருக்கமாகப் பழகவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. குழந்தை வளர வளர அதனுடன் இருக்கும் இடைவெளியும் அதிகரிக்கிறது.

உறவுகள், வேலை சம்பந்தப்படாத நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.

உண்மையான எத்தனையோ திறமைகள் வேறும் இருக்கக்கூடும். அந்தத் திறமைகளில் ஈடுபடவோ, வளர்த்துக் கொள்ளவோ, அதில் நிறைவு காணவோ நேரமில்லை.

ஒரு நாள் உடல் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டு டாக்டர்களிடம் அடிக்கடி ஓட நேர்கிறது. மருந்திற்கும், மருத்துவத்திற்கும் நிறைய செலவு செய்ய வேண்டி வருகிறது. பிள்ளை நெருக்கமாக இருப்பதில்லை. நெருங்கிய உறவுகளும் தூரப்பட்டு விடுகிறார்கள். டென்ஷன், டென்ஷன் என்று அது நாள் வரை ஓடிய ஓட்டத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள எதுவுமே செய்ய நேரமிருக்காததால் மனநிலையிலும் நிறைய பாதிப்புகள் இருக்கின்றன.

மொத்தத்தில் பணமும் பொருளாதார வசதிகளும் இருக்கின்றன. ஆனால்  ஆரோக்கியமும் இல்லை, நிம்மதியும் இல்லை, நேசிக்கும் ஆட்களும் இல்லை. இப்போதும் வெளியே இருந்து பார்ப்பவர்கள் பொருளாதார நிலைமையை மட்டும் பார்த்து இவர்களை வெற்றியாளர்கள் என்றே சொல்லலாம். இது தான் வெற்றியா? உயிர்வாழ எல்லாம் இருக்கிறது. ஆனால் நல்ல உணர்வுகளுடன் வாழ எதாவது இங்கே இருக்கிறதா? என்ன விலை கொடுத்து இவர்கள் எதைப் பெற்றிருக்கிறார்கள்?

இந்த சராசரி உதாரணத்தில் பணமும், தனிமையும் இருப்பதால் கெட்டுப் போக முடிந்த குழந்தைகளைச் சொல்லவில்லை. தேவையான நேரத்தில் பெற்றோரில் ஒருவர் கூட அருகில் இருக்காததால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான நஷ்டங்களைச் சொல்லவில்லை. அதே போல் வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுவது பற்றியும் கூட சொல்லவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் நிலைமை இன்னும் பூதாகரமாகத் தெரியும்.

ஆரோக்கியத்தை இளமையில் அலட்சியப்படுத்தி ஓயாமல் சம்பாதித்து நாற்பது வயதைத் தாண்டிய பிறகு சம்பாதித்ததை எல்லாம் மருத்துவத்திற்கு செலவு செய்வதுடன் உடல் உபாதைகளையும் தாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

குழந்தைகளின் பிஞ்சுப்பருவத் தேவைகளை அலட்சியப்படுத்தி விட்டு அந்த நேரத்திலும் சம்பாதித்து அவர்களுக்குக் கடைசியில் சேர்த்து வைப்பதில் பெருமை என்ன இருக்கிறது?

கஷ்டப்பட்டு டென்ஷனுடன் சம்பாதித்து விலையுயர்ந்த பொருள்களை வீட்டில் சேர்த்து வைத்து நிம்மதியை தொலைத்து விட்டால், அந்த வீட்டில் நிறைவுடன் நம்மால் வாழ முடியா விட்டால், அந்த வாழ்க்கையில் வெற்றி என்ன இருக்கிறது?

மொத்தத்தில் கண்களை விற்று சித்திரம் வாங்கி எதை ரசிக்கப் போகிறோம்?

வாழ்க்கையில் பணம், உடல் ஆரோக்கியம், மன நலம் மூன்றுமே சம அளவில் முக்கியமானவை. அதில் ஏதாவது ஒன்றை மட்டும் சம்பாதித்து மற்ற இரண்டை அலட்சியம் செய்தால் அது குறைபாடான வாழ்க்கையாகவே இருந்து விடும்; அதில் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் நாம் காண முடியாது. ஆனால் இந்தக் காலத்தில் பணம் ஒன்று மட்டுமே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்து விடும் என்று நம்பி ஏமாறுகிற போக்கை நாம் அதிகம் காண முடிகிறது. இது கண்களை விற்று சித்திரம் வாங்கும் போக்குத் தான். எனவே இந்த மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை உங்கள் இளமையில் இருந்தே தரும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள்!

-என்.கணேசன்
நன்றி: வல்லமை

Sunday, January 1, 2012

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!




நன்மையும், தீமையும் கலந்ததே வாழ்க்கை.

ஆனால் அதைப் பிரித்தறியும் அறிவும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

நாம் எதையெல்லாம் முக்கியமாக நினைக்கிறோமோ, எதெல்லாம் அதிகமாக எண்ணங்களில் தங்குகிறதோ, எதில் எல்லாம் அதிக ஆர்வம் காட்டுகிறோமோ, அதெல்லாம் நம் மனத்திலும், சொல்லிலும், செயலிலும் வியாபித்து நம் வாழ்வில் பிரதானமாகி பலம் பெறுகிறது.

நாம் எதையெல்லாம் முக்கியமாக நினைப்பதில்லையோ, எதையெல்லாம் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோமோ, எதை எல்லாம் அதிகம் எண்ணுவதில்லையோ அதெல்லாம் நம் வாழ்வில் மங்கி பலவீனம் அடைகிறது.

இதுவே வாழ்வியல் ரகசியம். இது வரை நம் வாழ்வை நாம் எப்படி தீர்மானித்திருக்கிறோம் என்பது இதை வைத்தே அமைந்தது. இனி வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வோம் என்பதும் இதை வைத்தே தீர்மானிக்கப்படும்.

இந்த வகையில் இந்தப் புத்தாண்டில் நன்மைகளைப் பெருக்கி, தீமைகளைச் சுருக்கி புத்தாண்டைக் கொண்டு செல்லும் அறிவையும், மன உறுதியையும், பக்குவத்தையும் தந்து எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

- என்.கணேசன்