தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, June 20, 2011
பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை!
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3
பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை!
அந்த குரு அவரிடம் சொன்னார். "நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே"
(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)
"இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன"
பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.
"உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்...."
அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. "எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்" என்றார் அந்த குரு.
அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.
தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் "பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே" என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ்நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.
ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.
தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. "மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்"
ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.
அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.
மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும்.
(தொடரும்)
- என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்
அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. //
ReplyDeleteபிரமிடின் ரகசியமும், உபநிஷத்துக்களின் அறிவுரையும் சந்தித்த இடம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
that's True...
ReplyDeletearputha thodar...
ReplyDeleteசத்திய வார்த்தைகள் மதகுரு சொன்னது... ஆனால் மனிதனுக்கே ஆன இயல்பு செய்யாதே என்று ஒன்று சொன்னால் அதை செய்வதும் பின்னால் திரும்பாதே என்று சொன்னதும் திரும்பி தான் பார்ப்போமே என்ற கியுரியாசிட்டியும்....
ReplyDeleteஆனாலும் அறியமுடிந்த பிரமிடுகளின் ரகசியங்கள் என்னவென்று உபநிஷத்துகள் சொன்னதை தான் மதகுருவும் சொன்னது சிந்திக்கவைக்கக்கூடிய ஒன்று...
அன்பு நன்றிகள் கணேசன்... எங்களுக்கு தெரியாத எத்தனையோ விஷயங்கள் இதோ உங்க வலைதளம் வந்து அறிந்துக்கொள்ள முடிகிறது....
மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது.//
ReplyDeleteஉபநிஷத்துக்களும் சித்தர்களும், தத்துவஞானிகளும் சொல்வது உன்னை உணர், கட+உள்=கடவுள். இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலையாதே என்பது தான். பிரமிடுகள் சொல்லும் ரகசியமும் அது தான் என்பதை உணர்த்திய உங்களுக்கு நன்றி.
நன்றி சார் மிக மிக அற்புதமான தகவல்கள்
ReplyDelete