Wednesday, April 20, 2011

நிலைத்த அறிவுடையவன் யார்?



கீதை காட்டும் பாதை 7

நிலைத்த அறிவுடையவன் யார்?


வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லக் கேட்ட அர்ஜுனனிற்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும் இடம் எல்லாம் மறந்தே போய் விட்டது. உண்மையை முழுமையாக அறியும் ஆர்வத்தினால் தன்னை மறந்து போன அவன் இந்த வாழ்க்கைத் தத்துவங்களை எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கிற மனிதன்-ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த அறிவு உடையவன்)- எப்படி இருப்பான், எப்படி நடந்து கொள்வான், எப்படி வாழ்வான் என்றறிய ஆசைப்பட்டான். தத்ரூபமாக அப்படிப் பட்ட மனிதனை விவரிக்கும் படி ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை அடுத்த பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18 சுலோகங்களில் கீதையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம். மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆசிரமத்திலும், அவருடைய நெறிகளை முழுமையாகப் பின்பற்றிய பலர் வீடுகளிலும் இந்த 18 சுலோகங்களும் மாலை நேரத்துப் பிரார்த்தனையின் போது ஓதும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. தினமும் இந்த சுலோகங்களைப் படிப்பதோடு அவற்றின் பொருளை சிந்திக்கவும் செய்தால் அவை கண்டிப்பாக மனிதனை உயர்வழியில் நெறிப்படுத்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.

முதலில் நிலைத்த அறிவுடையவன் யார் என்று ஸ்ரீகிருஷ்ணர் விவரிக்கிறார்.

“பார்த்தா (அர்ஜுனனின் பல பெயர்களில் இதுவும் ஒன்று), ஒரு மனிதன் மனதில் எழும் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தன் ஆன்மாவிலேயே ஆனந்தம் அடைவானாயின் அவனே ஸ்திதப்ரக்ஞன் எனப்படுகிறான்

துக்கங்களைக் கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார் இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ, இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான அறிவுடையவன்.

எவனுக்கு எதிலும் பற்று இல்லையோ, தனக்கு நன்மைகள் ஏற்படுகையில் மகிழ்ச்சியோ, தீமை விளைகையில் கோபமோ இராமல் எவன் உள்ளானோ அவனது புத்தியே உறுதியானது.

ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போல் ஒருவன் தனது புலன்களை வெளிப் பொருள்களில் இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான நிலையை அடைகிறது.

ஒரு மனிதன் புலன்களைப் பட்டினி போடுகையில் புலன்களுக்கான சாதனங்கள் அவனிடமிருந்து விலகி விடுகின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆசை மறைந்து விடுவதில்லை. ஆனால் பரம்பொருளைக் கண்டவுடன் அந்த ஆசையும் மறைந்து விடுகிறது.

கௌந்தேயா (இதுவும் அர்ஜுனன் பெயர்), விவேகம் உள்ளவன் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட அடங்காப் பிடாரியான புலன்கள் பலாத்காரமாக மனதைத் தடுமாறச் செய்து விடுகின்றன.

அவற்றை எல்லாம் நன்றாக அடக்கி யோகத்தில் அமர்ந்தவனாக என்னையே அடைக்கலமாகக் கொண்டு புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ அவனது அறிவே நிலையானது”


இந்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரக்ஞனின் மூன்று முக்கிய குணாதிசயங்களை விவரிக்கிறார்.

1) ஆசைகளைத் துறத்தல்
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்


ஆசைகளைத் துறத்தல்:

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர். வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில் இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.

வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்று ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம். ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம். சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும் ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறு உருவாகப் போவதில்லை.

கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது. அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும், தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது. மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்த சக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழிய அதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)

ஆசைகளின் இயல்பே பூர்த்தியாகாத நிலை தான் என்கிறார் திருவள்ளுவர். அதனால் ஆசையையே ஒழித்தால் தான் நிலைத்த சந்தோஷம் என்கிறார். இதே கருத்தைத் தான் கீதையிலும் பார்க்கிறோம்.


2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்:

இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த நாணயத்தை நீங்கள் எடுத்தீர்களானால் இரண்டு பக்கங்களையும் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் இந்த நாணயத்தை எடுத்துக் கொள்வதையே தவிருங்கள்.

இந்த தத்துவத்தை கம்ப ராமாயணத்திலும் ஓரிடத்தில் ராமன் மூலமாகக் கம்பனும் சொல்கிறான். 14 வருடங்கள் வன வாசம் ராமன் செல்கின்ற போது மந்திரி சுமந்திரன் மிகுந்த வருத்தம் அடைகிறான். அவனைத் தேற்றி ராமன் சொல்கிறான்.

“இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?”

(இன்பம் வந்த போது இனியதாக இருக்குமானால் துன்பம் வரும் போது மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?)

3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்:

ஐம்புலன்களும் நல்ல சேவகர்கள். ஆனால் மோசமான எஜமானர்கள். சேவகர்களாக அவை இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி இருக்கா விட்டால் தானாக அவை எஜமானர்களாக மாறி உங்களை சேவகனாக ஆக்கி விடும். மோசமான ஒரு எஜமானிடம் சேவகனாக இருப்பதே பெரும்பாடு. இதில் பல எஜமானர்களிடம் ஒரு சேவகன் அகப்பட்டுக் கொண்டால் அந்த பரிதாப நிலையை விளக்க வேண்டியதில்லை.

புலன்களைப் பயன்படும் வேலையில் மட்டும் பயன்படுத்தி பின் அடக்கி வைக்க வேண்டும். இல்லா விட்டால் அவை தான் தோன்றித் தனமாக நடந்து கொண்டு தேவையில்லாத பல தகவல்களை நம்மிடம் சொல்லி, நம்மை நம்ப வைத்து, அதன் விருப்பப்படி எல்லாம் செயல்பட வைத்து நம்மை சிக்கலில் ஆழ்த்தி விடும். எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆமை தன் உறுப்புகளை எப்படி தேவைப்படும் போது உள்ளடக்கிக் கொள்கிறதோ அப்படி நம் புலன்களை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உபதேசிக்கிறார்.

இந்த ஆமை உதாரணத்தை திருவள்ளுவரும் சொல்கிறார்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”

ஐம்புலன்களையும் ஆமை போல் அடக்கியாளும் வல்லமை ஒரு பிறவியில் பெற்றால் கூட அது ஏழு பிறவிகளிலும் அவனைக் காக்கும் என்கிறார் அவர்.

இவ்வாறெல்லாம் செய்து பரம்பொருளை அடைக்கலம் அடைந்தால் அந்த அறிவு சிரஞ்சீவியாய் சாசுவதமாக ஒருவனிடம் நிலைத்து விடுகிறது என்கிறது கீதை. பின் எக்காலத்திலும் ஒருவன் பின் நோக்கவோ வருத்தப்படவோ அவசியம் இல்லாமல் போகிறது.

இனி அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் ஆசை அழிவுக்கு எப்படிக் காரணமாக இருக்கிறது என்பதை படிப்படியாக கணிதக் கோட்பாடு போல் விளக்க ஆரம்பிக்கிறார்.

பாதை நீளும் .....

- என்.கணேசன்
- நன்றி: விகடன்

4 comments:

  1. Nice, It make me clear of my mind. I am planning to listen or read gita, If I have a problem, It make me feel better.

    ReplyDelete
  2. gita mp3 in tamil


    http://vasantruban.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%28Gita%29

    ReplyDelete
  3. thanks vasantruban nice blog & gita mp3 very good

    ReplyDelete