Friday, April 29, 2011

மரணத்தின் விளிம்பில்....




மரணத்தின் விளிம்பில் யாருமே அதிக நேரம் தங்கி விடக் கூடாது என்று அருணாச்சலத்திற்குத் தோன்றுகிறது. ஏனென்றால் வாழ்ந்த விதத்தையும், நடந்து முடிந்தவைகளையும் இந்த நேரத்தில் அசை போட மட்டுமே மனிதனால் முடிகிறது. ஆனால் எதையும் சரி செய்யவோ மாற்றவோ அவகாசம் இல்லை.

"ஆஸ்பத்திரியில் வைத்துப் பயன் இல்லை. வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள்" என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதால் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருப்பார் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் கண்களை மட்டும் திறந்து பார்க்கவும், சுற்றிலும் மற்றவர்கள் பேசவும் கேட்கவும் மட்டுமே முடிந்த ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் யுகமாகக் கழியும் அந்தக் கொடுமையை அருணாச்சலம் மட்டுமே அறிவார்.

மனைவி, மகன், மகள் மூவருக்கும் அவர் மரணத்தில் துக்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதையும் மீறி உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்கிற கவலை மேலோங்கி இருந்தது. ஏகப்பட்ட சொத்தை சுயமாக சம்பாதித்திருந்த அவர் உயிலை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவரானதால் கடைசி உயிலில் தங்கள் நிலை என்ன என்கிற கவலையை அவரருகில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது காதில் விழ விழ மனம் ரணமாகிக் கொண்டே இருந்தது. மனிதனை விட பணம் பிரதானமாகும் போது பாசமென்ன, பந்தமென்ன?

"அந்த நாசமாப் போன வக்கீல் இந்த நேரமாய் பார்த்து சிங்கப்பூர் டூர் போயிட்டார். அவர் திங்கள் கிழமை தான் வருவாராம்" -இது மகன். இன்று வியாழக் கிழமை. திங்கட்கிழமை வரை காக்க அவனுக்குப் பொறுமையில்லை.

"அப்பா எனக்கு கண்டிப்பா ஒரு வீடு எழுதி வைப்பார்னு நாங்க ஹவுசிங் லோன் கூட போடாமல் இருக்கோம். உயில்ல என்ன எழுதி இருக்கார்னு உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காராம்மா?" இது மகள்.

"உயிலைப் பத்திக் கேட்கறப்ப எல்லாம் இப்ப எப்படியிருக்காரோ அப்படியே தான் இருப்பார். எந்த முக்கியமான விஷயத்தை என் கிட்ட வாய் விட்டுச் சொல்லியிருக்கார்" - இது மனைவியின் புலம்பல்.

குடும்பம் தான் இப்படி என்றால் வந்து விட்டுப் போன அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள், அவர் கம்பெனி ஊழியர்கள் என எல்லோருமே ஒரு சம்பிரதாயத்திற்கு வந்தது போலத் தான் அவருக்குப் பட்டது. உறவினர்கள் மெல்லிய குரலிலும், சுற்றி வளைத்தும் உயில் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். நண்பர்கள் அனைவரும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே அவர்களும், ஊழியர்களும் அவர் கம்பெனி வாரிசான மகனிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பக்கத்து கோயில் பூசாரி பார்க்க வந்தவர் "விஷ்ணு சஹஸ்ரநாமம் காதில் விழுந்துண்டிருந்தா நேரா வைகுண்டத்துக்கே போவான்னு ஐதீகம். அதனால தெரிஞ்சவா சொல்லுங்கோ, இல்லைன்னா கேசட்டாவது போடுங்கோ" என்று சொல்லி விட்டுப் போனார்.

"ஏண்டா கேசட் இருக்கா?" என்று அவர் மனைவி மகனிடம் கேட்க அவன் இல்லை என்றான். அதோடு அந்த விஷயம் மறக்கப் பட்டது. இல்லாவிட்டால் ஒன்று வாங்கிக் கொண்டாவது வா என்று அவளும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டு வர அவனும் முயற்சிக்கவில்லை.

குடும்பத்திற்காக ஏகப்பட்ட சொத்தை சேர்த்து விட்டு விடை பெறப் போகும் இந்தத் தருணத்தில் தன் குடும்பத்திடம் இருந்து அவர் இதை எதிர்பார்க்கவில்லை. பணத்தையும், சொத்துக்களையும் சம்பாதித்தவர் மனிதர்களை சம்பாதித்து வைக்கவில்லை என்பதை உணர்கிறார். சொர்க்கம் நரகம் என்று சொல்லப்படுவதெல்லாம் செத்த பிறகு போகும் இடங்கள் அல்ல, இந்தக் கடைசி கணங்களில் ஒவ்வொருவனும் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையே என்று அவருக்குத் தோன்றுகிறது.

"சார் எப்படியிருக்கார்" என்று அவரது டிரைவரின் குரல் கேட்க கண்களைத் திறந்தார். அவரது டிரைவரின் மகனும் கூட நின்றிருந்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு ப்ளஸ் டூவில் மாவட்ட முதலிடம் வந்த மாணவன் அவன். அப்போது என்ன படிக்க வைக்கப் போகிறாய் என்று டிரைவரைக் கேட்ட போது "அவன் இன்ஜீனியர் படிக்க ஆசைப் படறான். அதெல்லாம் நமக்கு முடியுமா எசமான். ஏதோ டிகிரி படிக்கட்டும்னு இருக்கேன்" என்று டிரைவர் சொன்னார். அத்தனை நல்ல மார்க் வாங்கிய பையன் ஒரு சாதாரண பட்டப் படிப்பு படிக்கப் போவது பொறுக்காமல் "இன்ஜீனியருக்கே படிக்க வையுப்பா. படிக்கறதுக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன். அக்கௌண்டண்ட் கிட்டே சொல்லி வைக்கறேன். தேவையானதை சொல்லி வாங்கிக்கோ" என்று சொன்னார். எத்தனையோ செலவாகிறது இது பெரிய விஷயமல்ல என்று அவர் அன்று நினைத்தார்.....

அவர் மனைவி சொன்னாள். "டாக்டர் கையை விரிச்சுட்டார். வீட்டுக்கு எடுத்துகிட்டு போக சொல்லிட்டார்.." அதைக் கேட்ட டிரைவரும், டிரைவரின் மகனும் லேசாகக் கண்கலங்கினார்கள்.

"என் மகனுக்குக் காலேஜ் கேம்பஸ் இண்டர்வ்யூல டாட்டா கம்பெனியில வேலை கிடைச்சுடுச்சும்மா. மாசம் ஆரம்பத்திலயே 25000 சம்பளம். எல்லாம் சார் போட்ட பிச்சை. அதான் சாரு கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போக கூட்டிகிட்டு வந்தேன்"

அந்த இளைஞன் அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவன் முகத்தில் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. டிரைவரும் கண்கலங்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

அருணாச்சலம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் நிறைந்த மனதுடன் பார்த்தார். அந்த இளைஞனின் வெற்றியும், அவன் நன்றியுணர்வும் அந்தக் கடைசி தருணத்தில் மனதுக்கு இதமாக இருந்தது. அவரும் ஓரிரண்டு மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கையில் செய்த சாதனைகள், சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட அந்த மாணவன் படிக்க அவர் செய்த சிறிய உதவி மட்டுமே அர்த்தமுள்ள செயலாக அவருக்கு அப்போது தோன்றியது. வாழும் போது பெரிதாகப் பட்ட எல்லா விஷயங்களும் மரணத்தின் விளிம்பில் நின்று பார்க்கையில் அற்பமாகத் தெரிந்தது

அந்த இளைஞனைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அந்தக் கணத்தில் மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. வாழ்க்கையைத் திரும்பவும் வாழ முடிந்திருந்தால் இது போல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அவரது கடைசி நினைவாக இருந்தது.

-என்.கணேசன்

Tuesday, April 26, 2011

அன்பிற்கு இல்லை எல்லை!


கேரள மாநிலத்தில் ஆலப்புழையைச் சேர்ந்த செல்லம்மாவிற்கு வாழ்க்கையில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலம் கடந்து நடந்த திருமணம், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் மரணம், உறவினர்களின் உதாசீனம், அதைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த பிறகும் உறவினர்கள் வீட்டை விட்டுத் துரத்தியது என்று எல்லாம் சேர்ந்து அவரை அவரை அறுபதாவது வயதில் முச்சந்தியில் நிறுத்தியது. இனி வாழ வழியில்லை, வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று நினைத்த செல்லம்மா வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார். ரயில் தண்டவாளத்தில் ரயிலை எதிர்கொண்டு வாழ்க்கையையும் தன் துக்கங்களையும் முடித்துக் கொள்ளும் முடிவோடு அவர் சென்ற நாள் 2000ஆம் ஆண்டு ஜனவரி 25.

அப்போது தான் ரஜியா பீவி என்ற பெண்மணி அவரைப் பார்த்தார். விரைந்து வரும் ரயிலையும் அதை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த அந்த மூதாட்டியையும் பார்த்த அவர் திடுக்கிட்டுப் போனார். ஓடிச்சென்று செல்லம்மாவை ரயில் செல்லும் பாதையிலிருந்து இழுத்து அவர் காப்பாற்றினார். பிறகு செல்லம்மாவின் சோகக் கதையைக் கேட்டறிந்த ரஜியா பீவியின் மனம் நெகிழ்ந்தது. அங்கிருந்து அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கணவர், நான்கு குழந்தைகளுடன் ரஜியா பீவி வசித்து வந்த வீடோ மிகச் சிறியது. ஆனாலும் மனம் சிறுக்கவில்லை என்றால் யாருக்கும் எங்கும் இடம் இருக்கும் அல்லவா? உற்றார் உறவினரால் துரத்தப்பட்ட அந்த இந்து மூதாட்டிக்கு, ரஜியா பீவி என்ற முஸ்லீம் பெண்ணின் மிகச் சிறிய வீட்டில் தற்காலிக அடைக்கலம் கிடைத்தது.

ஆலப்புழையில் வடக்கு அம்பலப் புழா பகுதியில் ஆறாம் வார்டு பஞ்சாயத்து உறுப்பினரான ரஜியா பீவி செல்லம்மாவைத் தன் தாயாகவே எண்ணிப் பார்த்துக் கொண்டார். ஆனாலும் அந்த வீடு மிகச் சிறியதாகையால் சிரமங்கள் நிறையவே இருந்தன. எனவே ரஜியா பீவி பஞ்சாயத்தின் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றின் மூலம் செல்லம்மாவிற்குத் தனியாக ஒரு சிறிய வீடு கட்டித் தர முனைந்தார். அரசாங்கம் தந்த பணம் போதாமல் போகவே ரஜியா பீவி தன் சொந்த சேமிப்பையும் செல்லம்மாவிற்காக செலவு செய்து வீடு கட்டி முடித்தார்.

மதங்களுக்கிடையே உண்மையில் பிரச்சினை இல்லை என்றாலும் பிரச்சினைகளை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்டவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் ரஜியா பீவியின் முயற்சிகளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜியா பீவியும், அவர் குடும்பத்தினரும் அதைப் பொருட்படுத்தவில்லை. கட்டி முடித்த வீட்டில் செல்லமாவைக் குடியேற்றிய ரஜியா பீவி தினந்தோறும் அங்கு சென்று செல்லம்மாவின் நலம் விசாரிக்கவும், அவருடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றவும் இன்று வரை தவறவில்லை. ஒரு தாயும், மகளும் போல ஒரு இந்துவும், முஸ்லீமும் பத்து வருடங்கள் கழிந்த பின் இன்றும் பாசத்தோடு இருந்து வருகிறார்கள்.

இந்த செய்தி மலையாளத் திரைப்பட இயக்குனர் பாபு திருவல்லா என்பவரை எட்டி அவர் இந்த வித்தியாசமான நேசமுள்ள பந்தத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த பிறகு தான் இவர்கள் நட்பு நாட்டில் பலர் கவனத்தையும் எட்டியது. குறுகிய மனங்கள் சமூகத்தில் பெருகிய இன்றைய காலத்தில் ரஜியா பீவியின் மனதில் கசிந்த அந்த இரக்கமும், அன்பும் அவரை எத்தனை பெரிய உதவி செய்யத் தூண்டியது பாருங்கள். வார்டு உறுப்பினர் பதவியில் எவ்வளவு சம்பாதிக்கலாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடும் நபர்களே இன்று அதிகம். அப்படி இருக்கையில் எந்த விதத்திலும் உறவோ, நட்போ, பரிச்சயமோ இல்லாத ஒரு வயதான பெண்மணிக்கு எல்லாமாக ஆகி அபயம் அளித்த அந்த உள்ளம் நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா?

இன்றைய எந்திர உலகில் நான், எனது குடும்பம் என்று அதிக பட்சம் நாலைந்து நபர்களோடு தனிமனித அக்கறை நின்று விடுகிறது. அந்தக் குடும்பத்தில் உடன்பிறப்புகளுக்குக் கூட பெரும்பாலும் இடம் இருப்பதில்லை. வயதான பெற்றோர்கள் கூட பாரமாக கருதப்படும் அவலம் அதிகரித்து வருகிறது. மற்றவர்களுக்கு உதவுவதால் தங்களுக்கு சிறு அசௌகரியம் ஏற்பட்டாலும் அது சகிக்க முடியாத கொடுமையாக நினைக்கும் இயல்பு அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் ரஜியா பீவி போன்றவர்கள் பாலைவனச் சோலையாகவே நமக்குத் தோன்றுகிறார்கள்.

ஒரு காலத்தில் வீடு கட்டும் போது வீட்டின் திண்ணையைப் பெரிதாகக் கட்டுவார்கள். அந்தத் திண்ணை இரவு நேரங்களில் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறி விட்டுப் போவதற்காகவே கட்டப்பட்டது. பல வழிப்போக்கர்கள் விடிந்த பின் அந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போவதும் உண்டு. முன்பின் பழக்கமில்லாத, பார்த்திராத மனிதர்களுக்கும் தங்கள் வீட்டில் ஒரு இடம் ஒதுக்கி விடும் உள்ளம் நம் முன்னோர்களுக்கு இருந்தது என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

‘அதிதி தேவோ பவ” என்று சமஸ்மிருதத்தில் சொல்வார்கள். விருந்தாளியை இறைவனாகவே நினைக்கும் அளவு விருந்தோம்பல் நம் முன்னோரிடத்தில் இருந்தது. திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு ஒரு தனி அதிகாரத்தையே ஒதுக்கி இருக்கிறார். இதெல்லாம் மனிதனின் அன்பின் வெளிப்பாடுகளாக இருந்தன. எல்லோர் நன்மையும் சேர்த்து நினைக்கும் பெரிய மனது அவர்களுக்கு இருந்தது. இன்று கல்வியிலும், சௌகரியங்களிலும் நாம் எத்தனையோ முன்னேறி இருந்தாலும் மனம் என்று எடுத்துக் கொண்டால் நிறையவே நாம் பின் தங்கி அல்லவா இருக்கிறோம்.

ஒரு பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் அன்னை தெரசாவின் தொண்டுகளால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டவராக அவரிடம் சொன்னார். “அன்னையே, நானும் ஏதாவது விதத்தில் இது போன்ற தொண்டில் பங்கு பெற விரும்புகிறேன். என்ன செய்யட்டும் சொல்லுங்கள்?”

அன்னை தெரசா ஒரு நல்ல தொகையை நன்கொடையாகக் கொடுக்கச் சொல்வார் என்று எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக அன்னை தெரசா சொன்னார். “நீங்கள் அதிகாலை எழுந்து உங்கள் நகர வீதிகளில் நடந்து செல்லுங்கள். எனக்கு யாருமே இல்லை என்ற துக்கத்தில் அழுந்திக் கிடக்கும் மனிதர்களை நகர வீதிகளில் கண்டால் அவர்கள் துக்கங்களைக் கனிவாகக் காது கொடுத்துக் கேட்டு அவர்களுக்குத் தைரியம் சொல்லுங்கள். உங்களால் முடிந்த உதவிகளையும் செய்யுங்கள். ’நீ தனியன் அல்ல, உன் நலனில் நானும் அக்கறை கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி உங்களால் அவர்களை ஆசுவாசப்படுத்த முடியுமானால், அவர்கள் இருண்ட மனதில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்த முடியுமானால் அதுவே பெரிய தொண்டாக இருக்கும்”. அன்னையின் அந்த பதில் தன்னை மிகவும் மனம் நெகிழ வைத்து சிந்திக்கவும் வைத்ததாக பின்னர் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் தெரிவித்தார்.

பொதுவாக மனிதர்கள் நினைப்பதெல்லாம் ‘எனக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது அடுத்தவர்கள் பிரச்சினைகளை நினைக்க எனக்கு நேரமேது?’ என்று தான். பிரச்சினையே இல்லாதவன் தான் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்றால் யாருக்கும் யாரும் உதவ முடியாது. ஏனென்றால் இறந்து போன மனிதன் மட்டுமே பிரச்சினை இல்லாதவன். உயிரோடு இருப்பவர்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.

ரஜியா பீவிக்கு பிரச்சினைகள் இருக்கவில்லையா? இருந்தன. அவர் செல்வந்தர் அல்ல. ஒரு பெரிய குடும்பத்தின் தலைவி என்ற நிலையில் அவருக்கு ஆக வேண்டிய எத்தனையோ காரியங்கள் இருந்தன. ஆனாலும் எல்லோராலும் துரத்தப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்ற செல்லம்மா என்ற அந்த மூதாட்டியைப் பார்த்த போது இயல்பாக சுரந்த இரக்கம் அவரை உதவிக்கரம் நீட்ட வைத்ததல்லவா? அங்கே அந்த அன்பில் தான் அவர் இமயமென உயர்கிறார்.

உண்மையான அன்பிற்கு எல்லைகள் இல்லை. அப்படிப்பட்ட அன்பை நான், எனது குடும்பம் என்று சுருக்கி விடுவது மனிதமும் அல்ல. அதையும் மீறி நீட்டிக்கும் போது அது ஏற்படுத்தும் மாற்றங்கள் சாதாரணமானதல்ல. ரஜியா பீவி போல் பேருதவி செய்ய முடியா விட்டாலும் அன்னை தெரசா கூறிய படி வாழ்க்கை சுமையைத் தாங்க முடியாமல் தத்தளிக்கும் மனிதர்களிடம் கனிவான பார்வை, தைரியமூட்டும் வார்த்தைகள், சிறு சிறு உதவிகள் தர முடிந்தால், அந்த சுமைகளின் கனத்தை குறைக்க முடிந்தால் அதுவே மிகப் பெரிய சேவை. அந்த உயர் அன்பே மனிதகுலத்தின் இன்றை மிகப்பெரிய தேவை.


- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

Wednesday, April 20, 2011

நிலைத்த அறிவுடையவன் யார்?



கீதை காட்டும் பாதை 7

நிலைத்த அறிவுடையவன் யார்?


வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லக் கேட்ட அர்ஜுனனிற்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும் இடம் எல்லாம் மறந்தே போய் விட்டது. உண்மையை முழுமையாக அறியும் ஆர்வத்தினால் தன்னை மறந்து போன அவன் இந்த வாழ்க்கைத் தத்துவங்களை எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கிற மனிதன்-ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த அறிவு உடையவன்)- எப்படி இருப்பான், எப்படி நடந்து கொள்வான், எப்படி வாழ்வான் என்றறிய ஆசைப்பட்டான். தத்ரூபமாக அப்படிப் பட்ட மனிதனை விவரிக்கும் படி ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை அடுத்த பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18 சுலோகங்களில் கீதையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம். மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆசிரமத்திலும், அவருடைய நெறிகளை முழுமையாகப் பின்பற்றிய பலர் வீடுகளிலும் இந்த 18 சுலோகங்களும் மாலை நேரத்துப் பிரார்த்தனையின் போது ஓதும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. தினமும் இந்த சுலோகங்களைப் படிப்பதோடு அவற்றின் பொருளை சிந்திக்கவும் செய்தால் அவை கண்டிப்பாக மனிதனை உயர்வழியில் நெறிப்படுத்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.

முதலில் நிலைத்த அறிவுடையவன் யார் என்று ஸ்ரீகிருஷ்ணர் விவரிக்கிறார்.

“பார்த்தா (அர்ஜுனனின் பல பெயர்களில் இதுவும் ஒன்று), ஒரு மனிதன் மனதில் எழும் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தன் ஆன்மாவிலேயே ஆனந்தம் அடைவானாயின் அவனே ஸ்திதப்ரக்ஞன் எனப்படுகிறான்

துக்கங்களைக் கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார் இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ, இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான அறிவுடையவன்.

எவனுக்கு எதிலும் பற்று இல்லையோ, தனக்கு நன்மைகள் ஏற்படுகையில் மகிழ்ச்சியோ, தீமை விளைகையில் கோபமோ இராமல் எவன் உள்ளானோ அவனது புத்தியே உறுதியானது.

ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போல் ஒருவன் தனது புலன்களை வெளிப் பொருள்களில் இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான நிலையை அடைகிறது.

ஒரு மனிதன் புலன்களைப் பட்டினி போடுகையில் புலன்களுக்கான சாதனங்கள் அவனிடமிருந்து விலகி விடுகின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆசை மறைந்து விடுவதில்லை. ஆனால் பரம்பொருளைக் கண்டவுடன் அந்த ஆசையும் மறைந்து விடுகிறது.

கௌந்தேயா (இதுவும் அர்ஜுனன் பெயர்), விவேகம் உள்ளவன் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட அடங்காப் பிடாரியான புலன்கள் பலாத்காரமாக மனதைத் தடுமாறச் செய்து விடுகின்றன.

அவற்றை எல்லாம் நன்றாக அடக்கி யோகத்தில் அமர்ந்தவனாக என்னையே அடைக்கலமாகக் கொண்டு புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ அவனது அறிவே நிலையானது”


இந்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரக்ஞனின் மூன்று முக்கிய குணாதிசயங்களை விவரிக்கிறார்.

1) ஆசைகளைத் துறத்தல்
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்


ஆசைகளைத் துறத்தல்:

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர். வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில் இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.

வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்று ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம். ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம். சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும் ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறு உருவாகப் போவதில்லை.

கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது. அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும், தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது. மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்த சக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழிய அதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)

ஆசைகளின் இயல்பே பூர்த்தியாகாத நிலை தான் என்கிறார் திருவள்ளுவர். அதனால் ஆசையையே ஒழித்தால் தான் நிலைத்த சந்தோஷம் என்கிறார். இதே கருத்தைத் தான் கீதையிலும் பார்க்கிறோம்.


2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்:

இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த நாணயத்தை நீங்கள் எடுத்தீர்களானால் இரண்டு பக்கங்களையும் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் இந்த நாணயத்தை எடுத்துக் கொள்வதையே தவிருங்கள்.

இந்த தத்துவத்தை கம்ப ராமாயணத்திலும் ஓரிடத்தில் ராமன் மூலமாகக் கம்பனும் சொல்கிறான். 14 வருடங்கள் வன வாசம் ராமன் செல்கின்ற போது மந்திரி சுமந்திரன் மிகுந்த வருத்தம் அடைகிறான். அவனைத் தேற்றி ராமன் சொல்கிறான்.

“இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?”

(இன்பம் வந்த போது இனியதாக இருக்குமானால் துன்பம் வரும் போது மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?)

3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்:

ஐம்புலன்களும் நல்ல சேவகர்கள். ஆனால் மோசமான எஜமானர்கள். சேவகர்களாக அவை இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி இருக்கா விட்டால் தானாக அவை எஜமானர்களாக மாறி உங்களை சேவகனாக ஆக்கி விடும். மோசமான ஒரு எஜமானிடம் சேவகனாக இருப்பதே பெரும்பாடு. இதில் பல எஜமானர்களிடம் ஒரு சேவகன் அகப்பட்டுக் கொண்டால் அந்த பரிதாப நிலையை விளக்க வேண்டியதில்லை.

புலன்களைப் பயன்படும் வேலையில் மட்டும் பயன்படுத்தி பின் அடக்கி வைக்க வேண்டும். இல்லா விட்டால் அவை தான் தோன்றித் தனமாக நடந்து கொண்டு தேவையில்லாத பல தகவல்களை நம்மிடம் சொல்லி, நம்மை நம்ப வைத்து, அதன் விருப்பப்படி எல்லாம் செயல்பட வைத்து நம்மை சிக்கலில் ஆழ்த்தி விடும். எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆமை தன் உறுப்புகளை எப்படி தேவைப்படும் போது உள்ளடக்கிக் கொள்கிறதோ அப்படி நம் புலன்களை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உபதேசிக்கிறார்.

இந்த ஆமை உதாரணத்தை திருவள்ளுவரும் சொல்கிறார்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”

ஐம்புலன்களையும் ஆமை போல் அடக்கியாளும் வல்லமை ஒரு பிறவியில் பெற்றால் கூட அது ஏழு பிறவிகளிலும் அவனைக் காக்கும் என்கிறார் அவர்.

இவ்வாறெல்லாம் செய்து பரம்பொருளை அடைக்கலம் அடைந்தால் அந்த அறிவு சிரஞ்சீவியாய் சாசுவதமாக ஒருவனிடம் நிலைத்து விடுகிறது என்கிறது கீதை. பின் எக்காலத்திலும் ஒருவன் பின் நோக்கவோ வருத்தப்படவோ அவசியம் இல்லாமல் போகிறது.

இனி அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் ஆசை அழிவுக்கு எப்படிக் காரணமாக இருக்கிறது என்பதை படிப்படியாக கணிதக் கோட்பாடு போல் விளக்க ஆரம்பிக்கிறார்.

பாதை நீளும் .....

- என்.கணேசன்
- நன்றி: விகடன்

Friday, April 15, 2011

பாமரனுக்காகப் பாட்டெழுதிய பட்டுக்கோட்டையார்




பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை மக்கள் கவிஞர் என்றழைத்தார்கள். பாமர மக்களுக்காக எளிய பேச்சு வழக்கிலேயே கவிதைகள் எழுதிய கவிஞர் அவர். அவருடைய பாடல்கள் மக்களின் அறியாமையைச் சாடி முன்னேற்றப் பாதையில் அவர்களை முடுக்கி விடும் வல்லமை படைத்ததாக இருந்தன. இன்றும் பாமர மக்களைக் கவரும் வகையில் தமிழில் பேச்சு வழக்கில் தாங்களும் பாடுவதாக எண்ணிக்கொண்டு குப்பைகளைத் திரைப்பாடல்கள் என்ற பெயரில் பலரும் பல சத்தங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் அந்தந்த கால கட்டங்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்து போய் விடுகின்றன. ஆனால் பட்டுக்கோட்டையாருடைய பாடல்களோ காலத்தை வென்று இன்றும் பேசப்படுவதே அந்த மக்கள் கவிஞரின் பாடல்களின் தரத்திற்குத் தரப்படும் சான்றிதழ்.

இன்றும் “தூங்காதே தம்பி தூங்காதே” என்ற பாடலை அறியாத தமிழர்கள் உண்டா? அந்தப் பாடலில் சோம்பிக் கிடக்கும் மனிதர்களுக்கு சாட்டையடி அல்லவா அவர் தருகிறார்! அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைவு. தெருக்கல்லைப் போல நாள் முழுவதும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல் சும்மா இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்வது முட்டாள்தனம் என்றும் பொறுப்புள்ள மனிதர்கள் சும்மா இருந்தால் அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் தடைப்பட்டு போகின்றன என்றும் இந்தப் பாடலில் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்களேன்

”நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்-சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்து விட்டு
அதிர்ஷ்டமில்லையென்று அலுத்துக் கொண்டார்
.... .... .... ..... ...... ......
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் – பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா”

இதே போல எல்லாம் விதி என்ற முட்டாள்தனத்தை நீக்கி விட்டு வேலை செய்தால் மட்டுமே உயர்வு என்ற உண்மையை அறிவில் நிறுத்த வேண்டும் என்று இன்னொரு பாடலில் அழுத்தமாகச் சொல்கிறார் பாருங்கள்-

”விதியை எண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறணும்”

செயல்படாமல் இருக்க விதி முதலான பல காரணங்களைச் சொல்லும் திண்ணைப் பேச்சு வீரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்து விடாமல் இருக்க ஒன்று கூடி ஒற்றுமையாய் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பாடலிலும் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பாடியுள்ளார் கல்யாண சுந்தரம்.

”கர்மவினையென்பார் பிரமனெழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்
இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி-நம்ம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி”

உழைப்பது முக்கியம் என்பது மட்டுமல்லாமல் அந்த உழைப்பையும் பலரும் ஒன்றுகூடி ஒழுங்கு முறையுடன் செய்ய வலியுறுத்தி அவர் எளிமையாக எறும்பின் உதாரணத்தை ஒரு பாடலில் கூறுகிறார்.

”எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
ஒடிஞ்சு போன நம்ம இனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்”

வறுமையை விலக்கவும், பயத்தை அடக்கி வைக்கவும், கவலையைத் தீர்க்கவும் இன்னொரு இடத்தில் அறிவுரையைக் கூறுகிறார். முள் நிறைந்த காட்டை அழித்து வயல் நிலமாக மாற்றவும் அறிவுறுத்துகிறார். சுயமுன்னேற்ற சிந்தனைகளை எவ்வளவு கச்சிதமாகச் சொல்கிறார் பாருங்கள்:

”கொடுமையும் வறுமையும் கூடையிலே வெட்டி வை!
கொஞ்ச நஞ்ச பயமிருந்தால் மூலையிலே கட்டி வை!
நெடுங்கவலை தீர்ந்ததென்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை!
நெருஞ்சிக் காட்டை அழித்து அதில் நெல்லு விதையைக் கொட்டி வை!”

வளரும் பிள்ளைகள் மூடநம்பிக்கைகளிலும், பயத்திலும் சிக்கி முடங்கி இருந்து விடக்கூடாது என்று ஒரு பாடலில் எச்சரிக்கிறார்.

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தை கொழுந்தினிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
..... .......... ..... ...........
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே”.

இது போன்ற விஷயங்களை வேடிக்கைக்காகக் கூட நம்பி விட வேண்டாம் என்று பட்டுக்கோட்டையார் எச்சரிக்க முக்கிய காரணம் ஆரம்பத்தில் மேலோட்டமாய் மனதில் மிதக்கும் அது போன்ற எண்ணங்கள் பின் சிறிது சிறிதாக வேர் விட்டு ஆழமாக மனதில் ஊன்றி விடும் என்பதனால் தான். குழந்தைகளை சிறிது நேரம் அடக்கி அமைதியாக உட்கார வைப்பதற்காகச் சொல்லும் இந்த சின்னப் பொய்கள் அவர்களது வீரத்தையும், தைரியத்தையும் முளையிலேயே கிள்ளி எறியும் செயல் என்றும் அவர் இப்பாடலில் எச்சரிக்கிறார்.

மேலும் வறுமைக் கொடுமையை சகிக்க முடியாமல் நாட்டை விட்டே அதைத் துரத்த முனையும் வீரவரிகளை இன்னொரு பாடலில் பாடுகிறார். அந்தப் பாடலில் நாம் ஏழைகள் என்று நம்பி அப்படியே இருந்து விடாமல் முதலில் மனதில் இருந்து ஏழ்மையை துரத்தி புரட்சிப் பாதையில் தமிழனைப் பயணிக்கச் சொல்கிறார் கவிஞர். எண்ணம் மாறினால் தான் எதுவும் மாறும் என்ற அருமையான மனோதத்துவ சிந்தனையை இங்கே பார்க்க முடிகிறது.

”கஞ்சியில்லை என்ற சொல்லைக் கப்பலேற்றுவோம்
செகத்தை ஒப்ப மாற்றுவோம்
பஞ்சையென்று நம்மை எண்ணும் பான்மை வெல்லுவோம்
புரட்சிப் பாதை செல்லுவோம்”

பயத்தை விட்டுத் துணிந்து முயற்சி செய்தால் வரும் துன்பமுமில்லை. பயந்தும் சோர்ந்தும் இருந்து விட்டால் அடைய முடியும் இன்பமுமில்லை என்பதை ஓரிடத்தில் பாடுகிறார்.

”துணிந்தால் துன்பமில்லை. சோர்ந்து விட்டால் இன்பமில்லை”

மேலும் அறிவு வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை அவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்.

”ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி-உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி”

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்” என்று திருவள்ளுவர் கூறியதைப் போல குழந்தையைப் பெற்றவுடன் பெறும் இன்பத்தைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அவன் அறிவாளியாக உலகால் அறியப்படும் போது தான் என்பதனை எவ்வளவு எளிமையாக பட்டுக்கோட்டையார் பாடியிருக்கிறார் பாருங்கள்.


உண்மைகளை உணராமல் யாரோ சொன்ன தத்துவங்களை கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்வதில் ஒரு பயனுமில்லை. ‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று பாடி வைத்த பாடலின் உண்மைப் பொருளை உணராது மேலோட்டமாக உடம்பை அலட்சியப்படுத்துவது முட்டாள்தனம் என்றுணர்த்த அந்தப் பாடலிற்கு எதிர்ப்பாட்டு ஒன்று பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.

”காயமே இது மெய்யடா – இதில்
கண்ணும் கருத்தும் வையடா
நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா

இறக்கும் வரை உடல் மெய் தான். அதனைக் கண்ணும் கருத்துமாகக் காத்துக் கொள்வது முக்கியம். எனவே நோய்கள் நெருங்காமல் காத்து உய்வடைய வேண்டும் என்று கூறுகிறார்.

காலன் இவ்வுலகில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை நீண்ட காலம் வாழ விடவில்லை. ஆனாலும் குறுகிய காலத்தில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம். அவர் பாடிய பாடல்களில் ஒரு வார்த்தை கூட படிக்காத பாமரனுக்குப் புரியாத வார்த்தையாக இருந்ததில்லை. இந்த அளவு எளிமையாகப் பாடி இருந்தாலும் பாடல்களின் பொருளோ, தரமோ குறைவாக இருந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. பாமரனின் எண்ணத்தையும், அறிவையும், உழைப்பையும் உயர்த்தும் உயர்ந்த சிந்தனைகளை பசுமரத்து ஆணி போல பதிய வைக்கும் அவரது பாடல்களை தமிழறிந்த யாரும் மறந்து விட முடியாது.

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

Monday, April 11, 2011

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்




ஒரு நாட்டின் உண்மையான உயர்வு அந்த நாட்டின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் உயர்வில் தான் இருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தான் உண்மையான உயர்விற்கு சரியான அளவுகோல். கோசல நாட்டின் சிறப்பைச் சொல்லும் போது கம்பன் சொல்வான் -

”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ”.

மக்கள் அனைவரும் அனைத்து பெருஞ்செல்வத்தையும் அடைந்திருப்பதால் அங்கு இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடையே காண முடிவதில்லை என்கிறான். இன்னொரு இடத்தில் கம்பன் சொல்வான் –

”வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்.”

அங்கு ஈகை என்பதே இல்லையாம், வறுமை என்பதே இல்லாததால். இந்த அளவு செல்வச் சிறப்புள்ள நாடு கவியின் கற்பனையில் மட்டுமே இருக்க முடியும் என்றாலும் ஒவ்வொரு நாடும் இந்த நிலையை அடையப் பாடுபட வேண்டிய இலக்காக இந்தக் கற்பனை ‘உடோபியா’வை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்காரர்கள் தங்கள் சாதனைகளை விளக்க ஆரம்பித்தால் கம்பன் கண்ட காட்சி மங்கிப் போகும் என்பதே நிச்சயம். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்கிற எண்ணம் கேட்பவர்க்கு ஏற்பட்டு விடும். அதுவும் தங்கள் இலவசத் திட்டங்களால் மக்களுக்கு அனைத்தையும் தந்து மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை வானளவு உயர்த்தி விட்டதாகச் சொல்லி நம்ப வைக்க அவர்கள் முயற்சிப்பார்கள். எதிர்க்கட்சிக் காரர்களோ இந்த இலவசத்திட்டங்களால் மக்களுக்கு கடுகளவும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றும் மக்கள் வாழ்க்கைத் தரம் பாதாளம் நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது என்று சத்தியம் செய்து சொல்வார்கள்.

இந்த இரண்டில் எது உண்மை? இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? அவற்றில் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு பாரபட்சமில்லாமல் நடுநிலையோடு விடைகளை ஆராய்வோம்.

இலவசத் திட்டங்களும் ஓட்டு வங்கி அரசியலும் முன்பெல்லாம் தேர்தல் அறிக்கைகள் ஒரு கட்சியின் கொள்கை விளக்கமாக இருந்தன. ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சி செயல்படுத்த இருக்கும் புதிய தொலைநோக்குத் திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் பட்டியலிடுவதாகவும் இருந்தன. அப்படி இருப்பது தான் மக்கள் முன் வைக்கக்கூடிய அறிவார்ந்த அணுகுமுறையாகக் கருதப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த புதிய நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம், இந்தந்த விஷயங்களில் இந்தந்த முடிவெடுப்போம் என்பது போன்ற கொள்கை ரீதியான அறிவிப்புகள் தான் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இப்படி இருந்த நிலை பின் பெருமளவு மாறி எதையெல்லாம் இலவசமாகத் தருவோம் என்கிற அறிவிப்பு தான் முக்கியமாக தேர்தல் அறிக்கையாக வெளி வர ஆரம்பித்தது. அறிவார்ந்த அணுகுமுறை இந்த அறிவிலிகளுக்குத் தேவை இல்லை என்ற முடிவை அரசியல் கட்சிகள் எடுத்து விட்டது போல் தான் தெரிகிறது.

பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், “ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்’ என இந்த இலவசங்களை குறிப்பிட்டு கவலை தெரிவிக்கின்றனர். ஆனாலும் இலவச மதிய உணவு இலவசக் கல்வி கொடுத்த காமராஜர் ஆட்சி இழந்ததும்,இலவச சைக்கிள் ரிக்ஷா, இலவச கண்ணொளித் திட்டம் கொண்டு வந்த கருணாநிதி ஆட்சி இழந்ததும், இலவச சத்துணவு கொடுத்த எம்ஜிஆர் 1986 உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தும் மோசமான தோல்வியைச் சந்தித்ததும், இலவச சைக்கிள் கொடுத்த ஜெயலலிதா ஆட்சி இழந்ததும் வரலாற்று நிகழ்வுகள்.

இலவசத் திட்டங்களை அறிவிப்பதாலேயே ஓட்டும் ஆட்சியும் கிடைத்து விடாது என்பதற்கான உதாரணங்கள் இவை. என்றாலும் இப்போது அடுக்கடுக்காக வரைமுறையில்லாமல் வர ஆரம்பித்திருக்கும் இலவசத் திட்ட அறிவிப்புகள் இன்றைய அரசியல் போகும் பாதையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இலவசம் என்பது அரசியலில் பயன்படுத்தியே தீர வேண்டிய ஒருவித மயக்க மருந்து என்றும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க அதைத் தவிர வேறு சிறந்த ஆயுதம் கிடையாது என்றும் இன்றைய அரசியல்வாதிகள் திடமாக நம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இலவசத் திட்டங்களால் நன்மைகள்

இலவசத் திட்டங்களால் எந்த நன்மையுமே இல்லை என்று சொல்லி விட முடியாது. மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்றவை எத்தனையோ ஏழைச் சிறுவர்களுக்கு ஒரு வேளைச் சோற்றை உத்திரவாதத்துடன் கொடுத்து பசியாற்றி அவர்கள் கல்வியைத் தொடர உறுதுணையாக இருந்திருக்கிறது. பள்ளிக்கு அனுப்பினால் குழந்தைகளுக்குப் போடும் ஒரு வேளை உணவுச் செலவு மிச்சம் என்ற ஒரு காரணத்திற்காகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய ஏழைப் பெற்றோரின் எண்ணிக்கை அதிகம் உண்டு.

அது போல வறியவர்களுக்கு இலவச மருத்துவ உதவி, காப்பீட்டுத் திட்டம், ஆம்புலன்ஸ் வசதி போன்ற சேவைகள் உபயோகமாக இருப்பதில் சந்தேகமில்லை. பணக்காரர்கள் மட்டுமே பெற முடிந்த சேவைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு வறியவர்களுக்கும் அமைந்துவிடுவதால், வளரும் பொருளாதாரம் உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட சேவைகள் சமூக நீதியை நிலைநாட்டும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் முதியோர் உதவித் தொகை போன்ற சில திட்டங்கள் உண்மையாக ஒருசில பயனாளிகளுக்குப் பெரும் உதவியாகவே இருக்கின்றன என்பதற்கு உதாரணங்கள் நிறைய உண்டு. பொது விநியோக அமைப்பின் மூலமாக அரிசியும் வேறு சில இன்றியமையாத உணவுசார் பொருட்களும் குறைந்த விலையில் அளிக்கப்படுவதும் வரவேற்கத்தக்கது. அதேபோல் குழந்தைகளுக்கும் கருவுற்ற பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்து குறைந்த இளம் பெண்களுக்கும் சத்துணவு வழங்கப்படுவதும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சைக்கிள்கள், போக்குவரத்திற்கு கட்டணக் குறைவு ஆகியவை மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவதும் வரவேற்கத்தக்க மனித வள முதலீடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளித்தரும் வரி மற்றும் இதர சலுகைகளை மறந்து விட்டு ஏழைகளுக்கான இலவச திட்டங்களால் தான் நாட்டின் நிதி நிலைக்கு ஆபத்து என்று கூறுவது நியாயமற்றது என்று மேற்கூறிய இலவசத் திட்டங்களுக்கு ஆதரவாக சில பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இலவசத் திட்டங்களால் தீமைகள்

எதையுமே ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் அத்தியாவசிய சேவைகளைத் தாண்டிப் பொருட்களை இலவசமாக வழங்க ஆரம்பிக்கும் போதுதான் அது நாட்டு பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்த ஆரம்பிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது..


இந்த இலவசத் திட்டங்களின் பயன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு போய்ச் சேர்கிறதா என்றால் பெரும்பாலும் அது இல்லை என்றே கூற வேண்டும். பொதுமக்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு (யார் ஆட்சியில் இருந்தாலும்) கொடுக்கும் ஊக்க போனஸாகவே சில இலவசத் திட்டங்கள் அமைகின்றன. ஓட்டு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த இலவச நாடகத்தின் மூலம் ஊழல் பெருச்சாளிகள் நன்றாக கொள்ளையடித்து விடுகிறார்கள்.

பல சமயங்களில் இலவசமாய்க் கொடுப்பதாலேயே அந்தப் பொருட்களின் தரம் மிகக் குறைந்ததாக அமைந்துவிடுகிறது என்பதால் இந்த இலவசங்கள் அந்த ஏழைகளை அவமானப்படுத்தும் சின்னங்களாகிவிடுகின்றன. ஆனால், பாவம் ஏழை மக்களுக்கு இந்த அவமானமும் புரிவதில்லை. புரிந்தாலும் மக்கள் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை

வெங்கடேச ரவி என்ற கவிஞர் அழகாகச் சொல்வார்:

நாம்
தன்மான உணர்ச்சிகளை
அடகு வைக்கவில்லை;
அடகு வைத்தால்
மீட்கப்படுமோ என்ற பயத்தில்
மொத்தமாகவே விற்று விட்டோம்!

இலவசமாகப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோமே என்கிற உணர்வு மக்களைப் பெரிதாக பாதிக்கவில்லை என்பதைப் பார்க்கையில் அந்த கவிஞரின் ஆதங்கம் தவறில்லை என்றே தோன்றுகிறது.


ரேஷனில் போடப்படும் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களின் தரம் தாழ்ந்திருப்பது ஒருபுறம். தப்பித்தவறி அது சுமாராக இருந்துவிடும் பட்சத்தில் அதைக் கடத்தி, அதிக விலைக்கு விற்று விடும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆனால் அரிசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் அரிசியை மட்டுமே சாப்பிட பழகி கொண்டால் தான் ஏழைகள் பசியின்றி வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை, காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று அனைத்தையும் கணக்கு போட்டு பார்த்தால் விழி பிதுங்கி விடும். அடிப்படை தேவைகளுக்கே இப்படி என்றால் தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? விலை வாசியை ஒட்டு மொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைக்காமல் ரேஷன் அரிசியை மட்டும் ஒரு ரூபாயிற்குத் தருவது எந்த வகையில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்யும்.

கழிப்பறை வசதிகளே இல்லாமல் இன்னமும் இங்கு பல லட்சம் வீடுகள் இருக்கும் போது வீட்டுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவது கேலிக் கூத்தே அல்லவா? எது முக்கியம் என்கிற அடிப்படைகள் கூட இங்கு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றல்லவா தெரிகிறது.

சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ? வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?

சமீபத்தில் விவசாயக் கடன் ரத்து என்ற பெயரில் தேசிய வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் கொடுத்த கடன்களை (சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய்) ஒரே நேரத்தில் மத்திய அரசு தள்ளுபடி செய்தது. கடன் சுமை தாள முடியாத விவசாயிகளுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் சூதாட்டத்திற்கும், டாஸ்மாக் கடைக்கும் செலவழிக்க, நகைகளை அடமானம் வைத்துக் கடன் வாங்கியவர்களுக்குக் கூட இந்தத் தள்ளுபடி செல்லுபடியானது, உண்மையாக உழைத்து வாங்கிய கடனைக் கட்டுபவர்களை ஏளனம் செய்வதுபோல் அல்லவா இருக்கிறது? இதில் ஏழைகளை விட பல மடங்கு பலன் அடைந்தவர்கள் செல்வந்தர்களே. ஏற்கனவே பெரும் தொழிலதிபர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளைக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டுவதற்கு புதிது புதிதாக வழிகள் கண்டுபிடித்துக் கடன் வாங்கும் நிலையில், அடிமட்டக் கடனையும் ரத்து செய்துவிட்டால் வங்கிகள் கதி என்ன ஆகும்? இனி வாங்கிய கடனைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது வருமா? வங்கிகள் நஷ்டமடைந்தால், பொருளாதாரப் பற்றாக்குறை பெரிதாகிக் கொண்டே போனால் அது மறுபடியும் பொதுமக்கள் தலையில்தானே வரியாக வந்து விடியும்?

இன்னொரு மிக வருத்தமான விஷயம் என்னவென்றால், இலவசத் திட்டங்களை அள்ளிக் கொடுப்பதில் ஒவ்வொரு கட்சியும் போட்டி போடுகின்றனவே தவிர, ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதாகவே தெரியவில்லை.

உலகமே பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கும்போது, ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் நமது அரசியல் கட்சிகளால் எப்படி இவ்வளவு இலவசத் திட்டங்களை அறிவிக்க முடிகிறது? இலவசத் திட்டங்களால் அரசின் கடன் சுமை கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது, இதற்கான வட்டிக்காக வரி ஏற்றம் என்ற சுமையை மறைமுகமாக மக்கள் மீது அரசு சுமத்துகிறது.

இது போன்ற இலவச திட்டங்களுக்கு பல கோடிகளை ஒதுக்குவதால் பற்றாக்குறை பட்ஜெட்தான் சமர்ப்பிக்கப்படுகிறது. அரசு கஜானாவில் இருந்து கணிசமான தொகை இந்த இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது. தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை பிரசுரித்த ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை , “தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது’ என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.

தேவை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்கிற பாரபட்சமே இல்லாமல், அரசு பணத்தை எடுத்து வருவோர் போவோருக்கெல்லாம் விநியோகம் செய்வது என்பது என்ன புத்திசாலித்தனமோ தெரியவில்லை. இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தின் விளைவுகளை, மீண்டும் பொதுமக்கள்தான் பாவம் சகித்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் துர்பாக்கியம். எனவே யாருக்கு எது தேவையோ அது மட்டும் இலவசம் என்று யோசித்து அதை மட்டும் வழங்கினால் அரசு கஜானாவிற்கு செல்லும் பணம் வேறு உருப்படியான நீண்ட காலத்திற்கு உதவக் கூடிய நல்ல திட்டங்களுக்குச் செலவிட கணிசமாக மிஞ்சும்.

முடிவாக சில வார்த்தைகள்

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் ஒருசில இலவசத் திட்டங்கள் ஒருசிலருக்கு ஓரளவு நல்ல பலன் தருவனவாக இருந்தாலும் பெருமளவு திட்டங்கள் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே இருக்கின்றன. அவற்றில் சில ஏழைகள் தற்காலிக பலன்களை அடைய வாய்ப்பிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ, அவர்களை மேம்படுத்தவோ அந்தத் திட்டங்கள் உதவுவதில்லை.

கோழியுடன் எழுந்து கோட்டான் கூவுகையில் தூங்கி காலமெலாம் உழைத்து கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கலங்கித் தவிக்கும் உழவர்கள் இன்றும் இந்த இலவசத் திட்டங்களால் பெரிதாகப் பயனடையாமலேயே இருக்கின்றனர். விலைவாசி விஷமென ஏறுவது கண்டு விம்மிடும் நிலையில் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இருக்கின்றனர். கல்வி என்கிற அடிப்படைத் தேவைக்குக் கூட அவர்கள் பெருமளவு செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று அதிகரித்திருக்கிறது. இந்த இலவசத் திட்டங்கள் அவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவுமில்லை, வாழ்க்கையை எந்த விதத்திலும் மேம்படுத்தி விடவுமில்லை.

மொத்தத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் குறுகிய சுயநல நோக்கே இந்த இலவசத் திட்டங்களில் தெரிகிறதே தவிர மக்களுக்கு உதவும் தொலை நோக்குப் பார்வையைக் காணமுடியவில்லை என்பதால் இவை பெருமளவு நிரந்தரமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.

- என்.கணேசன்
- (மணற்கேணிக்காக எழுதியது)

Wednesday, April 6, 2011

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?




ஒரு ஞானியிடம் அவருடைய சீடர் கேட்டார். “குருவே மனிதனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?”

“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”

சீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன என்று கேட்டு தத்துவார்த்தமான சொற்பொழிவை குருவிடமிருந்து கேட்டு மகிழலாம் என்றால் என்ன இவர் இப்படிச் சொல்லி ஒரேயடியாக முடித்து விட்டாரே என்று ஏமாற்றமடைந்தார்.

அவருடைய ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட ஞானி புன்னகையுடன் சொன்னார். “பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தாலும், வாழாமல் இருந்திருந்தாலும் உலகத்தில் எந்த உண்மையான மாற்றமும் நேர்ந்து விட்டிருக்காது. எனவே தான் பொதுவாக இல்லை என்றேன்.”

சீடர் கேட்டார். “அப்படியானால் வாழ்வது வீண் தானா?”

ஞானி சொன்னார். “வாழ்க்கை வீணாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுமானால் மனிதன் தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அவனுக்கு அந்த உரிமையும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது”

அந்த ஞானி சொன்னதில் பேருண்மை பொதிந்து இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதும், அர்த்தமில்லாததும் அவரவர் கையில். வாழ்க்கையில் அர்த்தம் உள்ளது என்று நம்பி அதை உபயோகமாகக் கழிக்கலாம். அர்த்தம் உள்ளதா என்பதை சிந்திக்காமலேயே வாழ்க்கையை வீணாக்கியும் மாளலாம்.

சரித்திரம் படைத்த அத்தனை பேரும் தாங்கள் ஒரு அர்த்தத்தோடு படைக்கப்பட்டு இருப்பதாக நம்பினவர்கள். அதனால் தான் அவர்களால் தங்களது நிரந்தரமான சுவடுகளை உலகில் விட்டு விட்டுப் போக முடிந்தது. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனை அப்படிப்பட்டவர்களில் ஒருவராகச் சொல்லலாம். அவரிடம் அரசியலில் பெரிதாக விசேஷத் திறமைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் அவர் தன்னை இறைவன் ஒரு அர்த்தத்துடன் படைத்திருப்பதாகவும், விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனாகவும் (Man of Destiny) உறுதியாக எண்ணியதாகக் கூறினார்கள். உடல் நலக்குறைவு அவரை சிறு வயதில் இருந்தே ஆட்டிப்படைத்தது என்றாலும் அதையும் மீறி அவர் நிறைய சாதிக்கவும், சரித்திரம் படைக்கவும் அவருடைய அந்த எண்ணமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதிகளில் Ph.d பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. முதல் உலகப் போர் சமயத்தில் உலக அமைதிக்காக பாடுபட்டதற்காக சமாதான நோபல் பரிசையும் பெற்றார்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒரு அங்கமாக ஆகி விடாமல் தனித்து நின்று நல்ல மகத்தான மாற்றங்களை தாங்கள் வாழ்ந்த சமுதாயத்தில் கொண்டு வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தைத் தேடி உருவாக்கியவர்கள் தான். பாரதி பாடியது போல

”தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர் வாட
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி –கொடும் கூற்றுக்கு
இரையென மாயும் பல வேடிக்கை
மனிதரை போல ”

அவர்கள் அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ மறுத்தவர்கள். அப்படி வாழ்வதை ஒரு கொடுமையாக நினைத்தவர்கள். அதனாலேயே அவர்கள் தங்களுக்கென்று சில உயர் லட்சியங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்களுக்குள்ளே ஒரு அக்னியை விதைத்துக் கொண்டவர்கள் அவர்கள். விளைவாக ஒளிமயமாக வாழ்ந்து வென்றவர்கள் அவர்கள்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவருடைய இளமைக்காலத்தில் அவர் பெரிய தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவில்லை என்பதை அறிவார்கள். வக்கீலுக்குப் படித்து விட்டு முதல் முதலில் வாதாடப் போன போது திக்கு முக்காடிப் போனார். அப்படிப் பட்டவர் வாழ்க்கையின் பின்பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே ஆன்ம வலிமையுடன் எதிர்த்து வெற்றியும் பெற்றார். மௌண்ட் பேட்டன் பிரபு அவரை ’ஒரு தனி மனித ராணுவம்’ என்று பாராட்டினார். அவர் பின் ஒரு தேசமே திரண்டு நின்றது. இதெல்லாம் அவர் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உருவாக்கிக் கொண்ட பிறகு சாத்தியமானவை தான். சத்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த அபார நம்பிக்கையும், நாட்டு சுதந்திரம் என்ற லட்சியமும் அவரைப் பலவீனமான மனிதர் என்ற நிலையிலிருந்து மாபெரும் சக்தி வாய்ந்த மனிதர் என்ற பெருமை வரை உயர்த்தி விட்டிருக்கின்றன.

நான் பலவீனமானவன், பலவீனமானவள், எனக்கு என்று எந்தச் சிறப்புத் தகுதியும் இல்லை, என்றெல்லாம் சொல்லாதீர்கள். கண் முன்னே வரலாறாக இருக்கும் மகாத்மா காந்தியின் உதாரணத்தை மறந்து விடாதீர்கள். ஏதாவது நல்ல லட்சிய அக்னியால் தீண்டப் பெறுங்கள். அந்த லட்சிய அக்னி உங்கள் பலவீனங்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விடும். உங்களுக்கு அந்த லட்சியம் அசுர பலத்தைத் தரும். கண்டிப்பாக வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்.


மனிதர்கள் வெள்ளைத் தாளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசி வரை வெள்ளைத் தாளாகவே அவர்கள் வாழ்ந்து முடித்து விடலாம். அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம். அதை குப்பையாக கசக்கியும் எறியலாம். அதில் கவிதையையும், காவியத்தையும் பதித்து வைக்கலாம். அர்த்தமுள்ள ஆயிரம் விஷயங்களை எழுதி வைக்கலாம்.
கடைசியில் குப்பைக்கூடைக்குப் போகிறதா, பத்திரமாக பலருக்கும் பயன்படும் வகையில் சேகரித்து வைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது.

உங்கள் வாழ்க்கைத் தாளில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதில் அர்த்தம் இருக்கிறதா? இன்று எழுதுவதற்கெல்லாம் நாளை நீங்கள் வருந்த வேண்டி இருக்குமா? இந்தத் தாளை மேலும் உயர்ந்த விஷயங்களால் நிரப்பி இருக்கலாமே என்று எதிர்காலத்தில் சுய பச்சாதாபம் அடைய வேண்டி வருமா? சிந்தியுங்கள். இப்படி எல்லாம் ஆழமாக சிந்தித்து அது செயல்களாகவும் பரிணமித்தால் அது இனி தொடரும் வாழ்க்கையைக் கண்டிப்பாக நெறிப்படுத்துவதுடன் அர்த்தப்படுத்தும்.

லட்சியம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் எனக்குப் பொருந்தாது, எனக்கு அதில் பெரிய ஈடுபாடும் இல்லை என்று இன்னமும் நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. மிகப்பிரபலமாகி பெரிய சாதனைகள் புரிந்து வாழ்ந்த வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சொல்ல முடியாது. மற்றவர்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் சுலபப்படுத்தியிருந்தால், அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதாவது விதத்தில் பயன்பட்டிருந்தால் அதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கையே. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றால் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் என்றும் சொல்ல முடியாது. நேசித்தும் நேசிக்கப்பட்டும் மற்றவர் மனதில் உறுதியான இடத்தை நிரந்தரமாகப் பிடித்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையும் அர்த்தமுள்ளதே. எனவே வாழ்க்கையில் அதிகம் நேசியுங்கள். அன்பாக இருங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருந்தால் உங்கள் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் எத்தனையோ பேர் பலன் பெறுவார்கள். எத்தனையோ பேருடைய பாரங்களை நீங்கள் இலகுவாக்குவீர்கள். பலரையும் பிரமிக்க வைக்கும் காவியமாக இல்லா விட்டாலும் சிலரை சிலிர்க்க வைக்கும் ஒரு அழகான கவிதையாய் நீங்கள் கண்டிப்பாக வாழ்ந்து மடியலாம். நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கிறேன் என்ற நிறைவுடன் உலகை விட்டு ஒரு நாள் பிரியலாம்.


-என்.கணேசன்

Friday, April 1, 2011

அந்த நாலு பேர்




வாழ்ந்தேன்
வயிறெரிந்தார்கள்
வீழ்ந்தேன்-நான்
வீண் என்றார்கள்
இவர்கள் தொல்லை தாளாமல்
இறந்தேன்
இடுகாடு வரை வந்தழுகிறார்கள்
இனி நாம் விமரிசிக்க
இவன் இல்லையே என்று!

- என்.கணேசன்