தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, February 28, 2011
எதெல்லாம் சுதர்மம்?
கீதை காட்டும் பாதை 4
எதெல்லாம் சுதர்மம்?
சுதர்மத்தின் முதல் படி ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே. தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு எப்படி உண்மையாக நடந்து கொள்ள முடியும்? எனவே தான் பிறப்பாலும், தன்மையாலும் வீரனான அர்ஜுனன், அது வரையில் தன் சுதர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததில் எந்த பிரச்னையும் இல்லாத அர்ஜுனன், குருக்ஷேத்திர பூமியில் மடியப் போகும் உறவுகளைக் கண்டு சுதர்மத்தை விட்டு விலக நினைப்பதை தவறு என பகவான் கிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.
சுதர்மத்தின் அடுத்த படி என்ன? மற்றவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். நாம் பிறக்கும் போதே அந்த கடமைகளும் பிறந்து விடுகின்றன. எந்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ அவர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், எந்த சமூகத்தில் நாம் பிறக்கிறோமோ அதற்கு செய்ய வேண்டிய சேவைகள் ஆகியவை எல்லாம் சுதர்மத்தின் அடுத்த படி ஆகின்றன. இன்னொரு விதமாக சொல்லப் போனால் அந்தக் கடமைகள் நாம் பிறக்கும் முன்னே நமக்காகக் காத்திருக்கின்றன. நம் பெற்றோர், சமூகம், நாடு என்று நாம் வாழ எங்கிருந்தெல்லாம் பலன்களை அடைகிறோமோ அங்கெல்லாம் நம் கடமைகளும் கூடவே இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இது ஒரு வழிப் பாதையல்ல. பலனாக அவர்களிடம் இருந்து நேரடியாகவோ, வேறு வழியாகவோ நாம் நிறைய பெறாமல் வளர்ந்து ஆளாக முடியாது. அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும். அதுவே சுதர்மம். இங்கு கடன் தள்ளுபடி இல்லை. இந்த சுதர்மத்தைச் செய்யாமல் கோடி கோடியாய் திருப்பதி உண்டியலில் போட்டு வணங்கினாலும் அது ஒருவருடைய கணக்கில் இறைவனால் வரவு வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.
சுதர்மத்தைப் பொறுத்த வரை இன்னொரு முக்கிய அம்சம், தேவையானதை தேவையான அளவே செய்ய வேண்டும் என்பதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த விஷயத்திற்கும் மிக நன்றாகவே பொருந்தும். மேலும் அளவுக்கு மீறி ஒன்றைச் செய்கையில், செய்ய வேண்டிய இன்னொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும் அல்லவா? சில நல்ல விஷயங்களே கூட தேவைக்கதிகமாக நீளும் போது அதன் விளைவுகள் நன்மையானதாக இருப்பதில்லை. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பிள்ளைகளைப் பாசத்துடன் வளர்க்க வேண்டும். இது ஒரு தந்தையின் தர்மம். ஆனால் திருதராஷ்டிரன் கண்மூடித்தனமான பாசத்தை பிள்ளைகளுக்குக் காட்டி வளர்த்ததில் தீமையே விளைந்தது. பிள்ளைகள் மேல் உள்ள அளவு கடந்த பாசம் அவனை உறுதியுடன் பிள்ளைகளின் தவறுகளைக் கண்டித்து திருத்த விடவில்லை. அது கடைசியில் அவர்களுடைய அழிவுக்கே அல்லவா வழி வகுத்தது? திருதராஷ்டிரனும், காந்தாரியும் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லாமல் இல்லை. ஆனால் ஏதோ பேருக்கு புத்தி சொன்னார்களே ஒழிய அதில் தேவையான அளவு ஆத்மார்த்தமான உறுதி இருக்கவில்லை. புத்திமதிகளைக் கேட்காமல் போன போது ஆரம்பத்திலேயே தேவையான அளவு கண்டிப்பாக அவர்கள் இருக்கவில்லை. எனவே வெளிப்பார்வைக்கு தங்கள் கடமைகளைச் செய்வது போல காட்சி தந்தாலும், அதில் தேவையான விளைவை ஏற்படுத்தும் அளவு உறுதி இல்லா விட்டால் அப்போதும் அது சுதர்மம் ஆகாது, அதில் அதர்மமே விளையும் என்பது அனுபவம்.
(சில அறிஞர்கள் திருதராஷ்டிரனை மனமாகவும், காந்தாரியை புத்தியாகவும் உருவகம் செய்கிறார்கள். திருதராஷ்டிரன் இயல்பாகவே குருடன். காந்தாரியோ கணவன் காணாத உலகத்தைத் தானும் காண விரும்பாமல் கண்களைக் கட்டிக் கொண்டாள். மனம் விருப்பு வெறுப்புகளின் தன்மை உடையதால் உண்மையை அறிய முடியாத குருட்டுத் தன்மை உடையது. அதை வழிநடத்த வேண்டிய புத்தியும் அதே போல குருடாகவே மாறுமானால் அந்த இரண்டின் கூட்டணியில் உருவாகும் விளைவுகள் கௌரவர்கள் நூறு பேரைப் போல மோசமானதாகவே இருக்கும் என்று மிக அழகாக வியாக்கியானம் செய்கிறார்கள்.)
வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கும் ஒவ்வொரு உறவிலும், வகிக்கும் ஒவ்வொரு பொறுப்பிலும் கூட அதனுடன் சில தார்மீகக் கடமைகள் ஒரு மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அதுவும் சுதர்மத்தின் ஒரு அங்கமே. அந்தக் கடமைகளை சரிவரச் செய்யா விட்டால் மற்ற விதத்தில் அந்த மனிதன் எத்தனை மேன்மை படைத்தவனானாலும் சுதர்மம் தவறியவனாகிறான். அதற்கும் மகாபாரதத்திலேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். கர்ணனைப் போன்ற தர்மவான் இல்லை. பகவான் கிருஷ்ணரே அவனிடம் கையை ஏந்தியும் இருக்கிறார். அவனிடம் தர்மம் பெற்றும் இருக்கிறார். அந்த அளவு புண்ணியாத்மாவான கர்ணன் நண்பன் துரியோதனன் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டி இடித்துரைக்காமல் கூட்டு போனதை நண்பனாக சுதர்மம் தவறியதாகச் சொல்லலாம்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
என்கிறார் திருவள்ளுவர். இதில் “மேற்சென்று” என்ற சொல் பொருள் பொதிந்தது. கருத்து கேட்டால் சொல்வேன் என்கிற நிலையை ஒரு நண்பன் எடுத்து விடக் கூடாது. நண்பன் நெறி கடந்து செல்லும் போது தானாக வலியச் சென்று இடித்துரைப்பது தான் உண்மையான நண்பனுக்கு அடையாளம். அவன் சொன்னால் துரியோதனன் கேட்டிருப்பானா என்பது வேறு விஷயம். நியாயமற்ற செயல்களைச் செய்தால் அழிவு நிச்சயம் என்பதால், நியாயமற்ற செயல்களைச் செய்யும் நண்பனைத் திருத்த முற்படுவதன் மூலம் அவனை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா? இப்படி சுதர்மம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட முடிந்த சொல் அல்ல. சுதர்மம் என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட நுணுக்கமான சொல்.
முன்பு சொன்னது போல அதிகமாகச் செய்தலும் சுதர்மம் அல்லாத செயல். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு வங்கித் தேர்வு நடக்கும் மையத்திற்குச் செல்ல நேர்ந்தது. தேர்வு எழுத வந்த சுமார் 18 வயது இருக்கக்கூடிய மாணவனுடன் அவன் தந்தையும் வந்திருந்தார். பேனா, ஹால் டிக்கெட் முதற்கொண்டு அந்த தந்தையே தன் கையில் வைத்திருந்தார். எந்த அறையில் அவன் தேர்வு எழுத வேண்டும் என்பதையும் அவரே சென்று தேடிக் கண்டு பிடித்து அவனை அங்கு அவன் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தி அந்தப் பேனா, ஹால் டிக்கெட் இத்தியாதிகளை அவனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். தேர்வு எழுதி முடித்து வரும் வரை அடிக்கடி மகனை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த செயலைப் பார்த்து அந்த தந்தை தன் சுதர்மத்தைப் பின் பற்றியிருக்கிறார், கடமையைச் செய்திருக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. அந்த மகனின் ஏழெட்டு வயதில், உண்மையிலேயே அவர் மேற்பார்வையும் உதவியும் தேவைப்பட்டு இருக்கக்கூடிய காலத்தில், அவர் இதைச் செய்திருப்பது அவர் கடமை . ஆனால் அவனுடைய 18 வயதில் அவர் இதைச் செய்வது அவனுக்குத் தீமையே. அவனாகச் செய்ய வேண்டியவற்றை அவர் செய்து அவனுடைய வளர்ச்சியை அவர் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அங்கு கண்கூடாகப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.
சிலர் தங்கள் வீட்டில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள். ஆனால் அடுத்தவர்கள் வீட்டில் ஓடாக உழைப்பார்கள். மற்றவர்கள் பாராட்டில் புளங்காகிதம் அடைவார்கள். பரோபகாரிகள் என்று அவர்களைச் சொல்லலாமே ஒழிய சுதர்மத்தை அனுசரிக்கிறவர்கள் என்று கூற முடியாது.
அது போல சில விதமான உதவிகளும் தர்மமோ, சுதர்மமோ ஆகாதவை. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒருவர் அடிக்கடி கடன் தொல்லையில் மாட்டிக் கொள்வார். ஜப்தி, கைது நிலை வரும் போது அவருடைய உடன் பிறந்தோர் எல்லாம் அவர் கடனை அடைத்து அவரைக் கரையேற்றி விடுவார்கள். இது போல் பல தடவை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஓரிரு முறை உதவியது உதவியாக இருக்கலாம். ஆனால் எப்படியும் இவர்கள் நமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையை அந்த நபரிடம் வளர்த்து விட்டு பொறுப்பற்ற முறையில் வாழ வழி செய்த உதவிகளை எல்லாம் உடன் பிறந்தவர்களின் தர்மம், சுதர்மம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. கடைசியில் அவர்களும் உதவ முடியாத நிலை ஏற்பட்டு அந்த நபர் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் தலைமறைவாகிற நிலை வந்து விட்டது.
எனவே சுதர்மம் என்ன என்பதில் நமக்கு தெளிவில்லையானால் சுதர்மம் என்ற பெயரில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு அது காரணமாகி விடும். சுதர்மம் என்ற பெயரில் எத்தனையோ அனர்த்தங்களை நாம் செய்ய நேர்ந்து விடும். நமது உள்நோக்கம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதன் விளைவுகளையும் யோசித்து உதவுவதும், செயல்படுவதும் முக்கியம். நம் உதவி அடுத்தவர்களை சோம்பேறிகளாவும், பொறுப்பற்றவர்களாகவும் ஆக்குமானால் அது கண்டிப்பாக சுதர்மம் அல்ல.
பகவான் கிருஷ்ணர் சொல்லும் சுதர்மம் கண்மூடித்தனமானதல்ல. அது இதய பூர்வமானது. அறிவுபூர்வமானது. ஆக்கபூர்வமானது. உலகில் ஒவ்வொருவரும் தங்கள் சுதர்மத்தை சரியாகக் கடைபிடிப்பார்களேயானால் இந்த உலகம் ஒரு சொர்க்க பூமியாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.
அடுத்ததாக பகவான் கிருஷ்ணர் இன்னொரு அற்புதமான உபதேசத்தைச் செய்கிறார். அதைப் பார்ப்போமா?
பாதை நீளும் ....
- என்.கணேசன்
- நன்றி: விகடன்
உங்க கட்டுரை ரொம்ப பயனுள்ளதா இருக்குங்க.
ReplyDeleteநன்றி!!, நல்ல கருத்துக்கள், பாரட்டுக்கள் மற்றும் மேலும் எழுத வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteபகவான் கிருஷ்ணர் சொல்லும் சுதர்மம்
ReplyDeleteகண்மூடித்தனமானதல்ல. அது இதய பூர்வமானது.
அறிவுபூர்வமானது. ஆக்கபூர்வமானது. உலகில்
ஒவ்வொருவரும் தங்களைப் போல்
சுதர்மத்தை
சரியாகக் கடைபிடித்தால் இந்த உலகம் ஒரு சொர்க்க
பூமியாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.
நானும் என்னால் இயன்றவரை முயற்சி செய்கிறேன்.
நன்றி
வணக்கம்
ஒரு சிறிய வேண்டுகோள் கீதை காட்டும் பாதை 5
அர்தம் அனர்தமாகும் த்ருண்ங்கள் ஒபென் ஆகவில்லை தயவு செய்து மெயிலில் அனுப்பவும்
Very good explanation for sudharmam
ReplyDelete