தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Thursday, December 30, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 58
நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி
மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.
இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.
அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.
இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.
நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.
முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.
தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.
முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.
சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.
நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.
அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.
உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மேலும் பயணிப்போம்.....
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: விகடன்
Monday, December 27, 2010
பெற்றோர்களின் கவனத்திற்கு.....
மனவியலில் Superego Lacunae என்ற சொல் இருக்கிறது. இதற்கு தமிழில் அப்படியே பொருள் கூற முடிவது சுலபமல்ல என்றாலும் பொதுவாக ‘மனசாட்சியின் ஓட்டைகள்’ என்பதாகப் பொருள் கூறலாம். தங்கள் பிள்ளைகளின் தவறுகளையும், தவறான நடத்தைகளையும் கண்டும் காணாதது போல் இருக்கும் பெற்றோர்களின் நடவடிக்கையைச் சுட்டிக் காட்டுவதற்காக இச்சொல் அதிகம் மனோதத்துவ நிபுணர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய பெற்றோர்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. ஒரு நாளுக்கு 24 மணி நேரம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. வீட்டுச் செலவை சமாளிக்க பெரும்பாலும் இரண்டு பேருமே வேலைக்குப் போக வேண்டியதாகக் கூட இருக்கிறது. இப்படி நேரம் போதாத அவசர வாழ்க்கையில் குழந்தைகளை அதிகம் கவனிக்க அவர்களால் முடிவதில்லை. அதனாலேயே அவர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறுபவர்களாக இருக்கலாம். அதனை superego Lacunae வகையில் சேர்க்க முடியாது. ஆனால் அந்தக் கவனக்குறைவுகளுக்கு அவர்கள் தரும் விலை மிக அதிகம். உதாரணத்திற்கு இரண்டு உண்மை சம்பவங்களைப் பார்க்கலாம்.
ஒரு வீட்டில் தங்கள் ஒரே மகனுக்கு ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் நிறைய பணம் தரும் பழக்கம் இருந்தது. அவன் கல்லூரிக்குச் சென்றதும் அளவுக்கும் அதிகமாகவே பெற்றோரிடம் பணத்தைக் கேட்டுப் பெற ஆரம்பித்தான். அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்பதை அறிய பெற்றோரில் ஒருவராவது மெனக்கெட்டிருந்தால் மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்திருக்கிறான் என்பது சுலபமாகப் புரிந்திருக்கும். வேறு சில சின்னச் சின்ன வித்தியாசங்களும் அவன் நடவடிக்கைகளில் தெரிய ஆரம்பித்திருந்தன. பெற்றோர் அதைக் கவனித்தாலும் ’வயதுக் கோளாறு’ என்று அலட்சியமாக இருந்து விட்டனர். முடிவில் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தான் ஒரு நாள் அவர்கள் அறிய நேர்ந்தது. இன்று அந்த இளைஞன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறான். பெற்றோர் அவன் குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டாத தெய்வமில்லை.
இன்னொரு குடும்பத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் பெண் தனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத கீழ்த்தரமான ஒரு இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்திருந்தாள். கல்லூரியில் இருந்து வரும் வழக்கமான நேரத்திலிருந்து மிக காலந்தாழ்ந்து வருதல், வீட்டில் இருக்கும் சமயங்களிலும் எப்போதும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுதல், பெற்றோர் அருகில் வரும் போது குரலைத் தாழ்த்துதல் அல்லது செயற்கைத் தனமாக எதாவது பேசுதல் போன்ற நிகழ்வுகள் அந்த வீட்டில் நடக்க ஆரம்பித்தன. அந்த இளைஞனுடன் சுற்றுவதில் அவள் பரிட்சைக்குக் கூட செல்லவில்லை. போனில் அவள் தோழியுடன் பேசுகிறாள் என்று எண்ணி ‘இந்த காலத்தில் செல்ஃபோனில் நேரம் காலம் தெரியாமல் பேசுவதே வாடிக்கையாகப் போகி விட்டது’ என்று பெற்றோர் பொதுப்படையாக நினைத்து விட்டு விட்டனர். வர வேண்டிய நேரத்திற்கு வராமல் கால தாமதமாக வந்ததற்கு மகள் சொன்ன சாக்கு போக்குகளில் திருப்தி அடைந்து விட்டனர். அவர்கள் அலட்சியப்படுத்தாமல் கவனித்து காரணத்தைத் தேடி இருந்தால் கண்டிப்பாக உண்மை நிலவரம் தெரிந்திருக்கும். கடைசியில் ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வந்த பின் தான் அவர்கள் உண்மையை உணர்ந்தனர். காதல் திருமணத்தில் தப்பில்லை. ஆனால் ஆறே மாதத்தில் கணவனின் உண்மைக் குணங்கள் அறிந்து சகிக்க முடியாமல் மகள் தாய் வீட்டுக்குத் திரும்பி வந்த போது அவர்கள் துக்கம் சொல்லி மாளாது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் பெற்றோர் மாறுதல்களைக் காண ஆரம்பித்த போதே விழித்துக் கொண்டிருந்தால் இரண்டு பேருடைய வாழ்க்கையையும் மேலும் சீரழியாமல் திசை திருப்பி இருக்கலாம். இதில் அவர்கள் வேண்டுமென்றே கண்டும் காணாதிருந்தார்கள் என்று கூற முடியாது. போதிய கவனம் தராமல் இருந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
இனி superego Lacunae என்ற மனோதத்துவ கலைச் சொல்லிற்குப் பொருத்தமான வேறு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
அந்த வீட்டில் பெற்றோருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். ஒரே மகன் என்பதற்காக மகனைப் பெற்றோர் மிகச் செல்லமாக வளர்த்தனர். அவன் என்ன குறும்பு செய்தாலும் அவர்கள் அவனைத் திட்ட மாட்டார்கள். அவன் சகோதரிகளுடன் சண்டை போட்டு அவர்கள் அவனை அடித்து விட்டால் அந்தப் பெண்களுக்குத் தான் தண்டனை. பக்கத்து ஓட்டலில் அந்த மகனுக்குத் தனியாக ஒரு கணக்கு ஏற்படுத்தி அவன் எப்போது என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தந்தனர். அந்த சிறுமிகள் வீட்டில் பழைய சோறு சாப்பிடும் போது அந்த சிறுவன் அந்த ஓட்டலுக்குச் சென்று சுடச் சுட பிடித்ததைச் சாப்பிடுவான். சில சமயம் அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்து சகோதரிகளுக்கு முன்பே அவர்களுக்குத் தராமல் அவன் அதை சாப்பிடுவதும் உண்டு. அந்த சிறுவன் வளர்ந்து பெரியவனான பின் சிறிதும் பொறுப்பில்லாமல் குடிகாரனாக மாறி அந்தப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த சொத்தை எல்லாம் அழித்து உருப்படாமல் போனான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இன்னொரு குடும்பத்தில் தங்கள் ஒரே மகன் மீது அவனது பெற்றோருக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. அவன் மிக நன்றாகப் படித்து வகுப்பில் முதல் மாணவனாகவே என்றும் இருந்ததால் அவனைக் குறித்து அவர்களுக்கு அளவு கடந்த பெருமிதம். படிப்பில் சுட்டியாக இருந்த அவனிடம் சிறு வயதிலேயே தலைக்கனம் அதிகம் இருந்தது. அவன் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை எல்லாம் எடுத்தெறிந்து பேசுவான். அக்கம் பக்கத்தில் உள்ளோரிடமும் அப்படியே நடந்து கொண்டான். அப்போதெல்லாம் அந்தப் பெற்றோர் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். யாராவது அந்தப் பெற்றோரிடம் அவன் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தால் “நீங்கள் ஏன் அவனிடம் வம்புக்குப் போகிறீர்கள்?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்பார்கள். பெரியவனான பிறகு அவன் பெற்றோரிடம் கூட அப்படியே நடந்து கொள்ள ஆரம்பித்தான். பெர்றோரின் வயதான காலத்தில் “பணம் ஏதாவது தேவைப்பட்டால் கேளுங்கள். கூடவே இருந்து என் உயிரை வாங்காதீர்கள்” என்று சொல்லி பெற்றோரை கூட வைத்துக் கொள்ள மறுத்து விட்டான்.
இந்த இரண்டு குடும்பத்திலும் அவர்கள் தங்கள் மகன்களின் குணாதிசயங்கள் தவறாகப் போகும் போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்தார்கள். வளரும் காலத்தில் கண்டு கொள்ளப்படாத தவறுகளை வளர்ந்த பின்னர் திருத்துவது சுலபமல்ல. எதையெல்லாம் குழந்தைகளிடத்தில் விதைக்கிறோமோ அதையெல்லாம் வயதான காலத்தில் அறுவடை செய்ய வேண்டி வரும் என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. களைகள் காணப்பட்டால் சிறு வயதிலேயே பிடுங்கி எறிவது தான் முறை. அது தான் சுலபம். கண்டும் காணாமலும் போனால் அறுவடைக் காலம் அழ வேண்டிய காலமாக மாறி விடும் என்பது உறுதி.
முதல் இரண்டு உதாரணங்களில் பெற்றோர் போதுமான கவனம் செலுத்தாமல் விட்டு விட்டனர். கடைசி இரண்டு உதாரணங்களில் பிள்ளைகள் செய்வதெல்லாம் அழகு என்று பெற்றோர் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தொட்டால் தீயின் குணம் சுடுவது தான்.
எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வளரும் போது நற்குணங்களுடன் வளர்கின்றனரா, புத்திசாலித்தனமாக வளர்கின்றனரா என்பதை கண்காணிக்க மறந்து விடாதீர்கள். சிறு சிறு தவறுகள் கண்டால் அவ்வப்போது திருத்துங்கள். அப்போது சின்னவர்கள் தானே என்று சகித்துக் கொள்ள நினைக்காதீர்கள். சிறு வயதில் அவர்களுடைய பண்புகள் நல்லதாக இருந்து ஆழப்பட்டால் மட்டுமே அவர்கள் வளர்ந்த பின்னால் உங்களுக்குப் பெருமை சேர்க்கிற விதத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த மதிப்பீடுகளை அவர்களுடைய சிறு வயதில் சொல்லித் தருகிறீர்களோ அந்த மதிப்பீடுகளின் படியே அவர்கள் மற்றவர்களிடம் மட்டுமல்ல உங்களிடமும் நடந்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்குமானால் அந்த மதிப்பீடுகளின் தரம் உயர்ந்ததாக இருக்கும்படியே நீங்கள் கண்டிப்பாக பார்த்துக் கொள்வீர்கள்.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Wednesday, December 22, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 57
உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்
தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.
உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.
மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.
தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். “இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்”.
அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். ”அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்.” சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.
ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.
இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.
பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.
பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.
இனி பயிற்சிக்குச் செல்வோம்.
எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.
ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மீக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.
நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு
நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.
துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.
இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.
இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.
நம் வாழ்விற்கு மிக மிக உதவும் சில சக்திகள் பெறும் வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்.
மேலும் பயணிப்போம்....
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: விகடன்
Friday, December 17, 2010
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?
”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.
ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”
பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.
இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.
“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.
ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.
“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.
அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”
இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?
இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.
ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.
எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.
ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.
’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.
இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.
இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.
-என்.கணேசன்
Monday, December 13, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 56
அறிந்ததை சோதித்துப் பாருங்கள்-டெலிபதி
ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம். கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.
ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.
அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.
இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.
ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.
முதலில் ‘டெலிபதி’ எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.
ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.
இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார். ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. ”ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது” என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தைப் போல செல் போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலிற்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.
முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.
பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்
இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால்
அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.
தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.
அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.
உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.
அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.
போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.
இனி அடுத்த ஆழ்மன சக்திகளைப் பரிசோதிக்கச் செல்லலாமா?
மேலும் பயணிப்போம்...
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: விகடன்
Wednesday, December 8, 2010
சமூக சேவையும் பயனாளிகளும்
ஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி ஒரு முறை அதைப் பார்த்து, அந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சுமார் 200 பேர் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலரும் வறுமை காரணமாக இரவில் வெறும் வயிற்றோடு படுக்கப் போவதாக அவரிடம் சொன்னார்கள். அவர்களுக்கு தினமும் இரவு வேளையில் உணவு வழங்கத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தர தொண்டு நிறுவனத்தின் மூலம் சுதா மூர்த்தி ஏற்பாடு செய்தார்.
சில வாரங்கள் கழித்து அந்த பயனாளிகள் நிலை எந்த அளவு முன்னேறி உள்ளது என்றறிய சுதா மூர்த்தி சென்ற போது அவர்கள் யாரும் சோறு கிடைத்து விடுவதால் உழைப்பதில்லை, சோம்பேறிகளாக மாறி விட்டனர் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. கேட்டு வருத்தமடைந்தாலும் சுதா மூர்த்தி அவர்களுக்கு மேலும் உதவ முற்பட்டார். குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயம் ஆனதால் அவர்களுக்கு கம்பளிப் போர்வை தர எண்ணினார். அதை அனுப்பும் போது அவர்களுக்கு தடுப்பூசியும் போடும் யோசனையும் அவருக்கு வரவே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு கம்பளிப் போர்வையும் தருவது என்று முடிவு செய்து அவர்களுக்கு அறிவித்தார்.
அப்போது தான் தெரிந்தது அவர்களில் இருநூறு பேர் இல்லை, இருப்பது ஐம்பது பேர் தான் என்ற உண்மை. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்குத் தான் கையோடு கம்பளிப் போர்வையும் கிடைக்கும் என்றான போது உண்மை வெளி வந்து விட்டது. ஐம்பது பேர் இருநூறு பேர்களுக்கான உதவியைப் பெற்று வந்ததை அவர் அறிந்து கொண்டு விட்டார் என்று கோபப்பட்டு அவர்கள் அவரை வாயிற்கு வந்தபடி ஏசி விட்டனர். இத்தனை நாட்கள் அவரிடம் உதவி பெற்றும் ஏமாற்றியதை அறிந்து கொண்டு நிறுத்தியதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இது ஒரு நிகழ்ச்சி.
சுதா மூர்த்தியின் சமூக சேவை சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கர்னாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சமயம் அது. அந்த தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுடைய புகைப்படங்களும் தகவல்களும் செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தன. அந்த செய்தித் தாள்களில் கண்ட அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின் புகைப்படம் சுதா மூர்த்தி அவர்களை மிகவும் இரக்கப்பட வைத்தது. எலும்பும் தோலுமாக, ஒட்டிய கன்னத்துடன் இருந்த ஹனுமந்தப்பா என்ற சிறுவனின் புகைப்படம் தான் அது. அவன் ராமபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஏழை கூலித் தொழிலாளியின் மகன். அவனோடு பிறந்தவர்கள் ஐந்து பேர், அவன் தான் மூத்தவன் என்ற தகவல்களைப் படித்த அவர் இரக்கப்பட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலாசத்தில் தன்னை சந்திக்க வரும்படி அவனுக்கு எழுதிய அவர் பெங்களூர் வந்து போகத் தேவையான பயணத் தொகையும் அனுப்பி வைத்தார்.
அவர் சொன்ன படியே வந்து அவரை சந்தித்த ஹனுமந்தப்பாவிடம் சுதா மூர்த்தி சொன்னார். “நீ மேற்கொண்டு என்ன படிக்க விரும்புகிறாய்?, நீ என்ன படிப்பு படிக்க விரும்பினாலும் அந்த படிப்புக்கான செலவுகளை எங்கள் இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்”
அவன் தன் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பெரிய நகரமான பெல்லாரியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகச் சொன்னான்.
“ஆசிரியர் படிப்பு தான் என்றில்லை, நீ என்ன படிக்க விரும்பினாலும் தயங்காமல் சொல். உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று சொன்னார் சுதா மூர்த்தி.
ஆனால் அந்த சிறுவன் தன் ஆசிரியர் படிப்பு ஆர்வத்திலேயே உறுதியாய் இருந்தான்.
“சரி அந்தப் பள்ளிக்குச் சென்று அந்தப் பயிற்சிப் படிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்து எனக்கு விவரமாக எழுது” என்று கூறி சுதா மூர்த்தி அவனை அனுப்பி வைத்தார்.
போன சிறுவன் உடனடியாக பதில் எழுதினான். பள்ளிக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சாப்பாடுக் கட்டணம், புத்தகக் கட்டணம் எல்லாம் சேர்ந்து மாதம் முன்னூறு ரூபாய் செலவாகும் என எண்ணி இருந்தான். யாரோ உதவி செய்கிறார்கள் என்பதால் தகுதிக்கு மீறி எதையும் உபயோகிக்காமல் குறைந்த பட்சத் தொகையையே அவன் எழுதி இருக்கிறான் என்பதை சுதா மூர்த்தி புரிந்து கொண்டார். உடனடியாக அவனுக்கு ஆறு மாதச் செலவுக்கான தொகையாக 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. அடுத்த ஆறு மாதச் செலவுக்கான தொகை 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக ஹனுமந்தப்பாவிடம் இருந்து சுதா மூர்த்திக்கு முன்னூறு ரூபாய் திரும்பி வந்தது. அவர் அனுப்பிய தொகைக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த சிறுவன் எழுதியிருந்தான். ”இங்கு ஒரு மாதக் கல்லூரி ஸ்டிரைக்கில் இருந்தது. அதனால் நான் பெல்லாரியில் ஹாஸ்டலில் தங்காமல் கிராமத்தில் இருக்கும் என் வீட்டுக்கே சென்று விட்டேன். அதனால் ஒரு மாத செலவுத் தொகை முன்னூறு ரூபாயை நான் திருப்பி அனுப்பி உள்ளேன்”.
சுதா மூர்த்தி அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த முன்னூறு ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
உதவ முன் வந்தவரிடம் நான்கு மடங்கு அதிகமாக ஏமாற்றி வாங்கி பயன்படுத்தி அதை அவர் அறிந்து கொண்டார் என்றவுடனேயே அவரை ஏசிய அந்தக் கூட்டத்தின் தன்மை எப்படி இருக்கிறது? அனுப்பிய தொகையில் அனுப்பிய நோக்கத்திற்காகப் பயன்படாத சிறு தொகையை பல்வேறு செலவுகள் இருப்பினும் அதற்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஹனுமந்தப்பாவின் தன்மை எப்படி இருக்கிறது?
ஒருவருடைய நல்ல எண்ணத்தை நியாயம் இல்லாத விதத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருட்டுக் கூட்டம் எப்போதும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் உதவும் உள்ளமே நெகிழ்ந்து நிறையும் படி அந்த உதவியை முறையாகப் பயன்படுத்தி முன்னேற முடிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த முதல் வகைப் பயனாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைத் தவிர்ப்பதும், இரண்டாவது வகைப் பயனாளிகளைக் கண்டு கொண்டு உதவி அவர்கள் முன்னேற உதவுவதுமே உண்மையான சமூக சேவையின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல் தங்கள் சேவை தகுந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறதா என்று கவனிக்காமல் சேவை செய்வது முட்டாள்தனமே அல்லாமல் சமூக சேவை அல்ல. அதே போல் பயனாளிகளில் ஏமாற்றுபவர்களும், நன்றி கெட்டவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதாலேயே யாருக்கும் உதவிக்கரம் நீட்ட மறுப்பதும் உதவ முடிந்தவர்களுக்குப் பெருமை அல்ல. அப்படிச் செய்தால் ஹனுமந்தப்பா போன்ற நல்ல, திறமையான மனிதர்கள் வளர முடியாமல் முளையிலேயே கருகிப் போவார்கள். எத்தனையோ நல்ல, உண்மையான, பாவப்பட்ட மனிதர்கள் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு உதவினால், அந்த உதவி பெற்றவர்கள் கடைத்தேறுவதைக் கண்ணால் காணும் போது பெறும் நிறைவுக்கு ஒப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Friday, December 3, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-55
மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி
ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.
மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.
டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.
ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.
ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.
சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.
இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.
மேலும் பயணிப்போம்.....
(தொடரும்)
நன்றி: விகடன்