தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, October 1, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 48
உணர்வு நிலை மாற்றத்தின் அவசியம்
ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை. எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம். எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..
அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன். அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.
மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவையெல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.
மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.
இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.
எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)
தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.
முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.
இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்.
இனி உயர் உணர்வு நிலைக்குச் செல்ல ராஜ யோகிகள் சொல்லும் பயிற்சிகளைப் பார்ப்போம்.
மேலும் ஆழமாகப் பயணிப்போம்....
(தொடரும்)
நன்றி: விகடன்
உங்களது இந்தத் தொடரின் 34 வது பகுதியை இப்போதுதான் படித்து வருகிறேன்..மிகவும் நன்றாக இருக்கிறது..தொடர்ந்து படிக்கிறேன்..பயனுள்ளதாக இருக்கிறது நன்றி..பின்பற்றி பார்த்துவிட்டு...பலனடைந்ததைக் கூறுகிறேன்..
ReplyDeleteமிகவும் அற்புதமாக இருக்கிறது. தனி சூழ்நிலையில் படிக்கவேண்டும்.
ReplyDeleteஅதி முக்கியமான நுட்பங்க்ளைச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபொறுமையோடும்,ஆர்வத்தோடும் படிப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றம் வரும்.
மிக அருமையான பதிவு
ReplyDeletehttp://denimmohan.blogspot.com/
Excellent,only a few can write like this.please continue to write in this topic.thank you.
ReplyDeletesuper
ReplyDelete