இராமனைப் போலவே இராவணனும் நல்ல தம்பிகளைப் பெற்றிருந்தவன். இரு தம்பியருமே அண்ணன் நலனில் அக்கறை கொண்டவர்கள். இருவருமே அவன் மீது பாசம் கொண்டவர்கள். ஆனால் அறிவுரை சொல்லி அவன் கேட்காத போது இருவரும் தேர்ந்தெடுத்த வழிகள் வேறு வேறாக இருந்தது. விபீஷணன் இராமன் பக்கம் போய் சேர்ந்தான். கும்பகர்ணனோ தன் அண்ணன் பக்கமே இருந்து போரிட்டு உயிரை விட்டான்.
கும்பகர்ணன் கதாபாத்திரம் இராமாயணத்தில் மிக உயர்ந்த கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் கம்பன் கைவண்ணத்தில் மேலும் மெருகு பெறுகிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணன் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் அவன் பண்பும், யதார்த்த அறிவும் வெளிப்படுகிறது. “சீதையின் துக்கம் இன்னும் தீரவில்லையா? வானமும் பூமியும் வளர்ந்து நின்ற உலகளாவிய புகழ் அண்ணனின் இச்செய்கையால் போய் விட்டதே. அழிவுக் காலம் நெருங்கி விட்டதோ?” என்று அவன் வருந்துகிறான்.
(ஆனதோ வெஞ்சமர்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்து இல்லையோ?
வானமும், வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதே! புகுந்ததோ பொன்றும் காலமே?)
தன் அண்ணனிடம் வந்தும் தன் கருத்தை அவன் தயங்காமல் தெரிவிக்கிறான். “கடுமையான விஷமான அந்த கற்புக்கரசியை நீ இன்னும் விட்டு விடவில்லையா? இது விதியின் செயல் தான்”. சீதை அரக்கர் குலத்திற்கே விஷம் என்று சூசகமாக அண்ணனை எச்சரிக்கிறான்.
(திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே)
தர்மம், நியாயம் புரியா விட்டாலும் ரோஷமாவது வருகிறதா என்று பார்க்கலாம என்ற எண்ணத்தில் அண்ணனை அவன் கேலியும் செய்திருக்கிறான். “பெரிதாக மானத்தைப் பற்றிப் பேசுகிறாய் ஆனால் காமத்தைத் தான் பின்பற்றுகிறாய். இதில் மானிடரை இழித்துரைக்கவும் செய்கிறாய். நன்றாக இருக்கிறது நம் அரசாட்சி”
(பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்)
இங்கும் உன் கொற்றம் என்று சொல்லாமல் நம் கொற்றம் என்று பழித்துரைக்கும் சொற்களின் கூர்மையைக் குறைக்கும் அவன் பண்பைக் கவனியுங்கள்.
எப்படிப்பட்டவன் நீ? இப்படிச் செய்யலாமா? இந்த அவமானம் தேவையா? இத்துடன் இதெல்லாம் நிற்குமா? யோசித்துப் பார் என்கிற வகையில் அண்ணனுக்கு அவன் எடுத்துச் சொல்லும் விதம் இதயபூர்வமானது. அறிவுபூர்வமானது. அவன் சொல்கிறான். “அண்ணனே! பிரம்ம தேவனுடைய வம்ச பரம்பரையில் முதல்வனாக இருக்கின்றாய். ஆயிரமாயிரமாய் விரிந்த வேதங்களை அவற்றின் பொருளோடு உணர்ந்த நல்லறிவு படைத்திருக்கின்றாய். அப்படிப்பட்ட நீ செய்யத் தகுந்த காரியங்களில் தீயை விரும்புவதும் சரியென்று நினைக்கின்றாய். நமக்கு இப்போது நேர்ந்த அவமானங்களும், தீமைகளும் இவ்வளவோடு நிற்குமோ? இன்னும் எத்தனைக்கு நாம் ஆளாக நேரிடுமோ?
(நீ அயன் முதற்குலம் இதற்(கு) ஒருவன் நின்றாய்!
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்(து) அறிவு அமைந்தாய்!
தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய்!
ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ?)
தவறைத் தெரிந்தே செய்கிறவர்களுக்குப் புத்திமதி சொன்னால் அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு தான் வரும். இராவணனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் தம்பியிடம் எரிந்து விழுகிறான். “மானிடர்களான இராமனையும், இலக்குவனையும் வணங்கி, அந்தக் கூன் விழுந்த குரங்கான அனுமனையும் கும்பிட்டு பிழைப்பு நடத்துவது உனக்கும் உன் தம்பி விபிஷணனுக்கும் தான் முடியும். எனக்கு அது முடியாது. நீ எழுந்து போ”. இங்கு தம்பி சொன்ன எதையுமே அல்ல என்று அவன் மறுக்கவில்லை. விஷயத்தை அப்படியே திசை திருப்பிப் பேசுகிறான் இராவணன். இது கம்பன் மனவியலை நன்கு அறிந்தவன் என்பதற்கு அழகான சான்று.
(மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்)
என்ன சொன்னாலும் அண்ணன் கேட்கப் போவதில்லை என்று புரிந்த பின்னர் கும்பகர்ணன் போருக்குச் செல்ல சம்மதிக்கிறான். போருக்குச் செல்லும் முன் அண்ணனிடம் அவன் சொல்லும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும். அவச் சொல்கிறான். “நான் போரிற்குச் சென்று வென்று வருவேன் என்று சொல்ல மாட்டேன். விதி வென்றது. என் பிடரியைப் பிடித்துப் போருக்குத் தள்ளி நிற்கிறது. நான் போரில் இறப்பேன். அப்படி நான் இறந்த பின்னாவது சீதையை விட்டு விடு அண்ணா”
(வென்று இவன் வருவன் என்றுரைக்கிலேன் விதி
ஒன்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
பொன்றுவன் பொன்றினால் பொலன் கொள் தோளியை
நன்று என நாயக விடுதி நன்று அரோ.)
”என்னை அவர்கள் வென்று விட்டார்களே ஆனால் இலங்கையின் அரசனே அவர்கள் உன்னையும் வென்று விடுவது நடக்கவே போகிறது. ஆதலால் அப்படியான பின்பு யோசிப்பது தவறு. அந்த சீதையை அவர்களுக்குத் தந்து உன் தவப்பலனை தக்க வைத்துக் கொள்”
என்னை வென்றுளர் எனில் இலங்கைக் காவல
உன்னை வென்று உயருதல் உண்மை. ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அப்பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே.
இறப்பது உறுதி என்றறிந்த பின்னும் போருக்குப் புறப்பட்டதும், ’நான் இறந்த பின்னாவது அவளை விட்டு விட்டு நன்றாக இரு’ என்று சொன்னதும் அவனுடைய பண்பின் உயரத்தை நமக்குப் பறையறிவிக்கிறது பாருங்கள். அதுவும் ‘இலங்கையின் அரசனே’ என்றழைத்து அவன் சூட்சுமமாகச் சொல்லாமல் சொல்கிறான். “நீ தனி மனிதன் அல்ல. இலங்கையின் வேந்தன். உன் முட்டாள்தனத்தால் நாட்டுக்குக் கேடிழைத்து விடாதே”
அழியும் காலத்தில் நல்ல அறிவுரைகள் யாரையும் மாற்றி விடுவதில்லை. இராவணன் மனம் மாறாததைக் கண்டவன் போருக்குப் போகும் முன் “இன்று வரை நான் ஏதாவது தவறிழைத்திருந்தால் என்னை மன்னித்தருள்” என்று மன்னிப்பு கேட்டு விட்டு போர்க்களம் செல்கிறான்.
(இற்றை நாள் வரை முதல் யான் முன் செய்தன
குற்றமும் உள எனில் பொறுத்தி கொற்றவ!)
போரில் கை கால்கள் இழந்து போர்க்களத்தில் வீழ்ந்திருக்கும் போதும் தன் நிலை பற்றி வருந்தாமல் அண்ணனுக்காக வருந்துகிறான் அந்த அன்புத்தம்பி கும்பகர்ணன். “இராமனின் வில்வித்தைக்கு ஆயிரம் இராவணர்கள் இணையாக மாட்டார்கள். ஐயோ நானும் கை கால்கள் இழந்து செயலிழந்து கிடக்கிறேனே. அண்ணனுக்கு வேறு வகையில் உதவ எனக்கு வழியில்லையே. காம நோயால் பீடிக்கப்பட்ட அண்ணன் இனி பிழைப்பது கஷ்டம்” என்று உணர்ந்ததால் அவன் துயரப்பட்டான் என்கிறான் கம்பன்.
(ஐயன் வில் தொழிலிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான்
கையும் கால்களும் இழந்தனென்: வேறின் உதவலாம் துணை காணேன்
மையல் நோய் கொடு முடித்தவாதான் என்றும் வரம்பின்றி வாழ்வானுக்கு
உய்யுமாறு அரிது என்றும் தன் உள்ளத்தின் உணர்ந்தொரு துயருற்றான்)
அப்படிப்பட்ட தம்பி இறந்த போது இராவணன் மிகுந்த துக்கப்படுவது இயல்பே அல்லவா? “உன்னைப் பிரிய மாட்டேன். நீ தனியே செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். நானும் உன் பின் தொடர்ந்து வருகிறேன்” என்று மனதாரச் சொல்கிறான் இராவணன்.
(பிரியேன், தனிப்போகத் தாழ்க்கிலேன்
வந்தேன் பின் தொடர மதக்களிறே வந்தேனால்)
அண்ணனின் நலனில் அக்கறையோடு அறிவுரை சொல்லவும் கும்பகர்ணன் தயங்கவில்லை. அறிவுரைகள் பலன் தராத போது விபிஷணன் போல் இராமன் பக்கம் போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் கும்பகர்ணன் முனையவில்லை. கடைசி வரை அண்ணன் பக்கமே நின்று உயிர் பிரியும் நேரத்திலும் தன்னிலைக்கு வருந்தாமல் அண்ணனுக்கு நேரப்போகும் அழிவுக்கு வருந்திய கும்பகர்ணனின் அன்புக்கு நிகராக நாம் எதைச் சொல்ல முடியும்.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
நியாயம், தர்மம் இவற்றிற்கும் மேலே ஸ்வ தர்மம் என்று ஒன்று உளது.
ReplyDeleteஅண்ணன் மேல் உள்ள பாசம் பக்தி,
அரசன் மேல் இருக்கும் ராஜ விசுவாசம்,
தர்மத்தின் மேல் தனக்குண்டான நிலைப்பாடு,
இவ்வளவும் கலந்த பாத்திரம் கும்பகர்ணன்.
தன் உயிரையும் பொருட்டாது, தன் அண்ணன் இட்ட அரசாணையை
ஏற்று நடந்த கும்பகர்ணன் ஸ்வதர்மம் என்பதற்கு ஒரு
சரியான உதாரணம் என நினைக்கிறேன்.
ஸ்வ தர்மத்திற்கும் மேலே தர்மம் பெரிது என எண்ணிய
விபீஷணன் கும்பகர்ணன் முன்னே மங்கிப்போய் விடுகிறாரோ ??
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
அற்புதம். மிக அழகாய் எழுதி உள்ளீர்கள்
ReplyDeleteமிக அருமை. தேனினும் இனிய தமிழ், கம்பனின் கவிதை நயம். விளக்கிய முறை அருமை.
ReplyDelete