Wednesday, July 28, 2010

அன்புத் தம்பி கும்பகர்ணன்



ராமனைப் போலவே இராவணனும் நல்ல தம்பிகளைப் பெற்றிருந்தவன். இரு தம்பியருமே அண்ணன் நலனில் அக்கறை கொண்டவர்கள். இருவருமே அவன் மீது பாசம் கொண்டவர்கள். ஆனால் அறிவுரை சொல்லி அவன் கேட்காத போது இருவரும் தேர்ந்தெடுத்த வழிகள் வேறு வேறாக இருந்தது. விபீஷணன் இராமன் பக்கம் போய் சேர்ந்தான். கும்பகர்ணனோ தன் அண்ணன் பக்கமே இருந்து போரிட்டு உயிரை விட்டான்.

கும்பகர்ணன் கதாபாத்திரம் இராமாயணத்தில் மிக உயர்ந்த கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் கம்பன் கைவண்ணத்தில் மேலும் மெருகு பெறுகிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணன் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் அவன் பண்பும், யதார்த்த அறிவும் வெளிப்படுகிறது. “சீதையின் துக்கம் இன்னும் தீரவில்லையா? வானமும் பூமியும் வளர்ந்து நின்ற உலகளாவிய புகழ் அண்ணனின் இச்செய்கையால் போய் விட்டதே. அழிவுக் காலம் நெருங்கி விட்டதோ?” என்று அவன் வருந்துகிறான்.


(ஆனதோ வெஞ்சமர்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்து இல்லையோ?
வானமும், வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதே! புகுந்ததோ பொன்றும் காலமே?)


தன் அண்ணனிடம் வந்தும் தன் கருத்தை அவன் தயங்காமல் தெரிவிக்கிறான். “கடுமையான விஷமான அந்த கற்புக்கரசியை நீ இன்னும் விட்டு விடவில்லையா? இது விதியின் செயல் தான்”. சீதை அரக்கர் குலத்திற்கே விஷம் என்று சூசகமாக அண்ணனை எச்சரிக்கிறான்.


(திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே)


தர்மம், நியாயம் புரியா விட்டாலும் ரோஷமாவது வருகிறதா என்று பார்க்கலாம என்ற எண்ணத்தில் அண்ணனை அவன் கேலியும் செய்திருக்கிறான். “பெரிதாக மானத்தைப் பற்றிப் பேசுகிறாய் ஆனால் காமத்தைத் தான் பின்பற்றுகிறாய். இதில் மானிடரை இழித்துரைக்கவும் செய்கிறாய். நன்றாக இருக்கிறது நம் அரசாட்சி”

(பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்)


இங்கும் உன் கொற்றம் என்று சொல்லாமல் நம் கொற்றம் என்று பழித்துரைக்கும் சொற்களின் கூர்மையைக் குறைக்கும் அவன் பண்பைக் கவனியுங்கள்.

எப்படிப்பட்டவன் நீ? இப்படிச் செய்யலாமா? இந்த அவமானம் தேவையா? இத்துடன் இதெல்லாம் நிற்குமா? யோசித்துப் பார் என்கிற வகையில் அண்ணனுக்கு அவன் எடுத்துச் சொல்லும் விதம் இதயபூர்வமானது. அறிவுபூர்வமானது. அவன் சொல்கிறான். “அண்ணனே! பிரம்ம தேவனுடைய வம்ச பரம்பரையில் முதல்வனாக இருக்கின்றாய். ஆயிரமாயிரமாய் விரிந்த வேதங்களை அவற்றின் பொருளோடு உணர்ந்த நல்லறிவு படைத்திருக்கின்றாய். அப்படிப்பட்ட நீ செய்யத் தகுந்த காரியங்களில் தீயை விரும்புவதும் சரியென்று நினைக்கின்றாய். நமக்கு இப்போது நேர்ந்த அவமானங்களும், தீமைகளும் இவ்வளவோடு நிற்குமோ? இன்னும் எத்தனைக்கு நாம் ஆளாக நேரிடுமோ?

(நீ அயன் முதற்குலம் இதற்(கு) ஒருவன் நின்றாய்!
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்(து) அறிவு அமைந்தாய்!
தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய்!
ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ?)


தவறைத் தெரிந்தே செய்கிறவர்களுக்குப் புத்திமதி சொன்னால் அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு தான் வரும். இராவணனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் தம்பியிடம் எரிந்து விழுகிறான். “மானிடர்களான இராமனையும், இலக்குவனையும் வணங்கி, அந்தக் கூன் விழுந்த குரங்கான அனுமனையும் கும்பிட்டு பிழைப்பு நடத்துவது உனக்கும் உன் தம்பி விபிஷணனுக்கும் தான் முடியும். எனக்கு அது முடியாது. நீ எழுந்து போ”. இங்கு தம்பி சொன்ன எதையுமே அல்ல என்று அவன் மறுக்கவில்லை. விஷயத்தை அப்படியே திசை திருப்பிப் பேசுகிறான் இராவணன். இது கம்பன் மனவியலை நன்கு அறிந்தவன் என்பதற்கு அழகான சான்று.

(மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்)


என்ன சொன்னாலும் அண்ணன் கேட்கப் போவதில்லை என்று புரிந்த பின்னர் கும்பகர்ணன் போருக்குச் செல்ல சம்மதிக்கிறான். போருக்குச் செல்லும் முன் அண்ணனிடம் அவன் சொல்லும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும். அவச் சொல்கிறான். “நான் போரிற்குச் சென்று வென்று வருவேன் என்று சொல்ல மாட்டேன். விதி வென்றது. என் பிடரியைப் பிடித்துப் போருக்குத் தள்ளி நிற்கிறது. நான் போரில் இறப்பேன். அப்படி நான் இறந்த பின்னாவது சீதையை விட்டு விடு அண்ணா”

(வென்று இவன் வருவன் என்றுரைக்கிலேன் விதி
ஒன்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
பொன்றுவன் பொன்றினால் பொலன் கொள் தோளியை
நன்று என நாயக விடுதி நன்று அரோ.)


”என்னை அவர்கள் வென்று விட்டார்களே ஆனால் இலங்கையின் அரசனே அவர்கள் உன்னையும் வென்று விடுவது நடக்கவே போகிறது. ஆதலால் அப்படியான பின்பு யோசிப்பது தவறு. அந்த சீதையை அவர்களுக்குத் தந்து உன் தவப்பலனை தக்க வைத்துக் கொள்”

என்னை வென்றுளர் எனில் இலங்கைக் காவல
உன்னை வென்று உயருதல் உண்மை. ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அப்பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே.


இறப்பது உறுதி என்றறிந்த பின்னும் போருக்குப் புறப்பட்டதும், ’நான் இறந்த பின்னாவது அவளை விட்டு விட்டு நன்றாக இரு’ என்று சொன்னதும் அவனுடைய பண்பின் உயரத்தை நமக்குப் பறையறிவிக்கிறது பாருங்கள். அதுவும் ‘இலங்கையின் அரசனே’ என்றழைத்து அவன் சூட்சுமமாகச் சொல்லாமல் சொல்கிறான். “நீ தனி மனிதன் அல்ல. இலங்கையின் வேந்தன். உன் முட்டாள்தனத்தால் நாட்டுக்குக் கேடிழைத்து விடாதே”

அழியும் காலத்தில் நல்ல அறிவுரைகள் யாரையும் மாற்றி விடுவதில்லை. இராவணன் மனம் மாறாததைக் கண்டவன் போருக்குப் போகும் முன் “இன்று வரை நான் ஏதாவது தவறிழைத்திருந்தால் என்னை மன்னித்தருள்” என்று மன்னிப்பு கேட்டு விட்டு போர்க்களம் செல்கிறான்.

(இற்றை நாள் வரை முதல் யான் முன் செய்தன
குற்றமும் உள எனில் பொறுத்தி கொற்றவ!)



போரில் கை கால்கள் இழந்து போர்க்களத்தில் வீழ்ந்திருக்கும் போதும் தன் நிலை பற்றி வருந்தாமல் அண்ணனுக்காக வருந்துகிறான் அந்த அன்புத்தம்பி கும்பகர்ணன். “இராமனின் வில்வித்தைக்கு ஆயிரம் இராவணர்கள் இணையாக மாட்டார்கள். ஐயோ நானும் கை கால்கள் இழந்து செயலிழந்து கிடக்கிறேனே. அண்ணனுக்கு வேறு வகையில் உதவ எனக்கு வழியில்லையே. காம நோயால் பீடிக்கப்பட்ட அண்ணன் இனி பிழைப்பது கஷ்டம்” என்று உணர்ந்ததால் அவன் துயரப்பட்டான் என்கிறான் கம்பன்.

(ஐயன் வில் தொழிலிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான்
கையும் கால்களும் இழந்தனென்: வேறின் உதவலாம் துணை காணேன்
மையல் நோய் கொடு முடித்தவாதான் என்றும் வரம்பின்றி வாழ்வானுக்கு
உய்யுமாறு அரிது என்றும் தன் உள்ளத்தின் உணர்ந்தொரு துயருற்றான்)

அப்படிப்பட்ட தம்பி இறந்த போது இராவணன் மிகுந்த துக்கப்படுவது இயல்பே அல்லவா? “உன்னைப் பிரிய மாட்டேன். நீ தனியே செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். நானும் உன் பின் தொடர்ந்து வருகிறேன்” என்று மனதாரச் சொல்கிறான் இராவணன்.


(பிரியேன், தனிப்போகத் தாழ்க்கிலேன்
வந்தேன் பின் தொடர மதக்களிறே வந்தேனால்)


அண்ணனின் நலனில் அக்கறையோடு அறிவுரை சொல்லவும் கும்பகர்ணன் தயங்கவில்லை. அறிவுரைகள் பலன் தராத போது விபிஷணன் போல் இராமன் பக்கம் போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் கும்பகர்ணன் முனையவில்லை. கடைசி வரை அண்ணன் பக்கமே நின்று உயிர் பிரியும் நேரத்திலும் தன்னிலைக்கு வருந்தாமல் அண்ணனுக்கு நேரப்போகும் அழிவுக்கு வருந்திய கும்பகர்ணனின் அன்புக்கு நிகராக நாம் எதைச் சொல்ல முடியும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, July 23, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 40





திபெத்திய தியானம்

இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.

புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.

2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.

3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.

4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.

5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.

6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.

7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.

ஒரு ஜென் ஞானி சொல்வார். “நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன்”. மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம். உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?

மேலும் பயணிப்போம்

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: விகடன்

Monday, July 19, 2010

ஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம்




ஆன்மீகம் என்றால் என்ன, ஒரு உண்மையான ஆன்மீக ஞானி எப்படி இருப்பார் என்று நம் குழந்தைகள் கேட்டார்களேயானால் அதை விளக்கவோ, உண்மையான ஒரு ஆன்மீக ஞானியை அடையாளம் காட்டவோ சிரம்பப்படும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பகட்டு, படாடோபம், நடிப்பு, விளம்பரம், தந்திரம் என்று பல வடிவங்களை எடுத்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் நம்மை படாத பாடு படுத்துகிறது. எது ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.

ஆனால் ஆன்மீகத்திற்கும், ஒரு சிறந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு நல்ல அடையாளமாய் 1994 வரை இந்த உலகில் ஒரு மாமனிதர் நம்மிடையே நிறைவான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். சுமார் நூறாண்டுகள் வாழ்ந்த அவரது வாழ்க்கையில் சின்னக் களங்கம் கூட இல்லை. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசர்கள், மந்திரிகள், வெளிநாட்டு உள்நாட்டு மேதைகள் எல்லாம் அவர் இருக்கும் இடம் தேடி வந்து வணங்குவதைத் தங்கள் பாக்கியமாகக் கருதியிருக்கிறார்கள். ஆனால் அந்த மனிதர் அது போன்ற பக்தர்கள் தனக்கிருப்பதில் எள்ளளவும் பெருமிதம் கொண்டதோ, அகங்காரம் அடைந்ததோ இல்லை. அவர் தான் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்ட மகான்.

மகாசுவாமிகள் எளிமையே உருவானவர். காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பட்டத்திற்குரிய எல்லா வசதிகளும் அவருக்கு இருந்தன. தரிக்க கிரீடம், அமர சிம்மாசனம், அமர்ந்து செல்ல சிவிகை,புடைசூழ்ந்து வர யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. ஆனால் அவருக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. தன் யாத்திரைகளை கால்நடையாகவே அவர் நடந்து செல்வார். தயிரிலோ, பாலிலோ ஊற வைக்கப்பட்ட நெற்பொறியை ஓரிரு கவளம் சாப்பிடுவது தான் அவரது பகல் உணவு. இரவில் சிறிது பால் மட்டுமே சாப்பிடுவார். பொதுமக்களுக்கு தரிசனம் தரும் வேளைகளில் தான் அவர் நாற்காலி அல்லது மனையில் அமர்வார். மற்ற வேளைகளில் சாதாரண கோணிச் சாக்கு மட்டுமே அவருக்குப் போதும்.

பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பல துறைகளில் நல்ல ஞானமும், ஆர்வமும் இருந்தது. பல நூல்களைப் படித்த அவர் சம்பந்தப்பட்ட துறையாளர்களிடமும் எதையும் நுட்பமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். விஞ்ஞானம், கணிதம், வானவியல், வரலாறு, பூகோளம், சமூக இயல் போன்ற துறைகளில் அவருக்கு இருந்த அறிவு அபாரமானது. புகைப்படக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றிலும் எதையும் நுட்பமாக ஆராய்ந்து விளக்குவார். பல மொழிகளை அறிந்திருந்தார். இந்த அபார அறிவும் அவருக்கு துளியும் கர்வத்தை ஏற்படுத்தியதில்லை.

தமிழகத்தின் முன்னால் கவர்னராக இருந்த டாக்டர் பி.சி.அலெக்சாண்டர் ஒரு முறை பரமாச்சாரிய சுவாமிகளை தரிசிக்கச் சென்றார். ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அரசர்களும் தொழும் மகா சுவாமிகள் அவரது குடிலில் கோணிச் சாக்கை விரித்து அமர்ந்திருந்ததைக் கண்ட அலெக்சாண்டருக்கு வியப்பு தாளவில்லை. இப்படி ஒரு எளிமையையும், பணிவையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அலெக்சாண்டரும் அவர் எதிரே பாயில் காலை மடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

பேசும் போது அலெக்சாண்டர் எதில் டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை
மகா சுவாமிகள் கேட்டார். அலெக்சாண்டர் தான் ஒரு சிரியன் கிறிஸ்துவர் என்றும் சிரியன் கிறிஸ்துவர்கள் பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியதாகவும் சொன்னார். உடனே பேச்சு சிரியன் கிறிஸ்துவர்களைப் பற்றி எழுந்தது. அலெக்சாண்டர் ஆராய்ச்சி செய்து அறிந்ததைக் காட்டிலும் அதிகமாக மகா சுவாமிகள் சிரியன் கிறிஸ்துவர்களுடைய சமூகப் பின்னணி, பழக்க வழக்கங்கள், சமூகத் தொண்டுகள், கேரளத்தில் அவர்கள் வேரூன்றிய சரித்திரம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார். கவர்னர் அலெக்சாண்டர் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை. வேறொரு மதத்தின் ஒரு சிறு பிரிவைப் பற்றி இவ்வளவு விரிவாக அவர் அறிந்து வைத்திருந்தது அவருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.

அவருடைய அறிவு ஞானம் இப்படி பல மதங்கள், பல நாடுகள் என்று விரிந்து இருந்தது. ஆன்மீகத்தில் அவர் அடைந்திருந்த ஞானம் அளப்பரியது. இதையெல்லாம் அவருடைய சொற்பொழிவுகளின் தொகுப்பான “தெய்வத்தின் குரல்” படித்தவர்கள் நன்றாக உணரலாம். அவர் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி அதிகம் விவரிக்காமல் மனித தர்மத்தைப் பற்றியும், ஞான மேன்மைக்கான வழிகளைப் பற்றியும் பேசியது அதிகம். பாமரனுக்கும் புரியும் படியாக பெரிய பெரிய விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவஞானி யோகிகளைத் தேடி இந்தியா வந்த போது பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்ததை விளக்கமாக எழுதியுள்ளார். பரமாச்சாரிய சுவாமிகளின் ஞானத்தால் அவர் வெகுவாகவே கவரப்பட்டார். தான் இந்தியா வந்த காரணத்தை அவர் சொன்ன போது பரமாச்சாரிய சுவாமிகள் நீ தேடி வந்த யோகி நான் தான் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிக் கொள்ளவில்லை. (இப்போதைய ஆன்மீகக் குருக்கள் பலர் கண்டிப்பாக அதைச் செய்திருக்கக் கூடியவர்களே). ’நீங்கள் காண வந்த யோகியை நிச்சயம் காண்பீர்கள். மேலும் பயணியுங்கள்” என்றே சொன்னார். அது போலவே பின்னர் பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் தன் தேடலை முடித்தார்.

உபதேசங்கள் செய்வது சுலபம். அந்த உபதேசங்கள் படி வாழ்ந்து ஒரு உதாரணமாய் திகழ்வது கஷ்டம். பரமாச்சாரியார் அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அவருடைய கனகாபிஷேக நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. நேபாள மன்னர், இந்திய ஜனாதிபதி முதற்கொண்டு பல பெரிய மனிதர்கள் கைகூப்பி நிற்க பரமாச்சாரியருக்கு பொற்காசுகளால் அபிஷேகம் செய்தார்கள். மற்றவர்களின் கட்டாயத்திற்கு அமர்ந்திருந்த அவர் சிறு சலனம் கூட இல்லாமல், எதிலும் பாதிக்கப்படாமல், பற்றற்ற நிலையில் கடவுளை தியானித்தவராய் கரம் குவித்து அமர்ந்திருந்தார். “ஏதோ சிறியவர்கள் ஆசைப்படுகிறார்கள், செய்கிறார்கள், செய்து விட்டுப் போகட்டும்” என்பது போல் பொறுமையாக சகித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு புண்ணியாத்மாவை அன்று என்னால் பார்க்க முடிந்தது.

வாழ்ந்த நாட்களில் அவர் விளம்பரம் தேடியதில்லை. அனாவசிய சர்ச்சைகளில் ஈடுபட்டதில்லை. நடித்ததில்லை. நல்ல அறிவைப் பெறுவதும், ஞான வழிகளில் ஆழமான நாட்டமும், அறிந்ததையும், உணர்ந்ததையும் போதிப்பதுவுமே அவர் வாழ்க்கையாக இருந்தது.

அவர் 1994 ஜனவரி எட்டாம் நாள் மறைந்த போது அவருடைய பக்தர்கள் மட்டுமல்ல மற்ற மதத்தலைவர்களும், நாத்திகர்களும் கூட அவரை மனதாரப் பாராட்டியது அவர் வாழ்ந்த களங்கமில்லாத வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம் என்றே சொல்ல வேண்டும். உண்மையான ஞானி, ஆன்மீகத் தலைவர் என்ற சொற்களுக்கெல்லாம் இனி வரும் சந்ததியருக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் தயக்கம் சிறிதும் இல்லாமல் பரமாச்சாரிய சுவாமிகளை நாம் காட்டலாம்.

-என்.கணேசன்


நன்றி:ஈழநேசன்

Wednesday, July 14, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-39




சக்ரா தியானம் செய் முறை

(குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)

சக்ராக்கள் அமைந்துள்ள இடங்கள், அவைகளுக்குத் தரப்பட்டிருந்த சின்னங்கள், மந்திர பீஜ ஒலிகள் ஆகியவற்றை நாம் முன்பு பார்த்தோம். இனி சக்ரா தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம். ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.


1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள். மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.


(குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)

இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.

இனி அடுத்த தியானம் பற்றி பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:விகடன்

Friday, July 9, 2010

ஆளுக்கொரு அளவுகோல்





உலகத்தில் பெரும்பாலானோர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய வருத்தமே அடுத்தவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது தான். அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாதவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர்கள் தங்களிடம் அப்படி இல்லை என்று வருந்துவது தான் ஆச்சரியம். “நல்லதிற்குக் காலம் இல்லை”, “எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது நம் தவறு தான்” என்ற வசனங்கள் பலர் வாயிலிருந்தும் வருகின்றன. அவை வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. மனப்பூர்வமாக அப்படி பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா? இதில் யார் சரி, யார் தவறு? என்பது போன்ற கேள்விகள் சமூக அக்கறை உள்ளவர்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. பிரச்னை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோலில் தான் என்பது புரியும்.

குடும்பத்தில் மகள் சொற்படி மருமகன் கேட்பாரானால் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். மகன் மருமகள் சொற்படி நடந்தால் அவன் பெண்டாட்டி தாசன்.

நம் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் பெயர் பக்தி. அதுவே மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.

நம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி வேலையில் சிறிது அலட்சியம் செய்தாலும், ஓய்வு எடுத்துக் கொண்டாலும், விடுப்பு எடுத்துக் கொண்டாலும் குமுறுகிறோம். நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம் அளவுகோல் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதையே நாம் நம் அலுவலகத்தில் செய்யும் போது சிறிதும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறோம்.

நம்முடைய வெற்றிகள், நல்ல குணங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் நம் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய நமக்கு சுத்தமாக ஆர்வமிருப்பதில்லை.

நம் வெற்றிகளுக்குக் காரணம் நம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான். மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணமாக நாம் காண்பது அவர்களது அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவையும் தான். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நம் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். மற்றவர் தோல்விக்குக் காரணம் முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நம் வீட்டு ரகசியங்களை மூடி வைக்க நாம் படாத பாடு படுகிறோம். மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் அடுத்த வீட்டு ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாம் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் அதை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாம் விமரிசிப்பதும் உண்டு.

மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் நமக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாம் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப் பற்றி சிந்திப்பதேயில்லை.

தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் அதையே தங்களுக்குச் செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதை நாம் பல இடங்களில் காண்கிறோம். எனக்குத் தெரிந்த மூதாட்டி ஒருவர் தன் மூத்த மகனால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர். சிறு உதவிகள் கூட அவனிடம் இருந்து அவருக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அவர் அவன் வீட்டுக்குச் சென்றிருந்த போது டிவியில் மன்னன் திரைப்படத்தின் பாடல் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே....” என்ற பாடல் ஒளிபரப்பாகியதாம். அதைப் பார்த்து அவர் மகன் தன் மகனிடம் சொன்னானாம். “பாருடா தாய்ப் பாசம் என்பது இது தான். நீயும் உன் அம்மாவிடம் இந்த பாசத்தை வயதான காலத்தில் காட்ட வேண்டும்”

அந்த மூதாட்டி என்னிடம் பின்னொரு நாள் அதைச் சொல்லி விட்டு வேடிக்கையாகச் சொன்னார். “எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டே அதைச் சொல்லும் போது சிறிது கூட உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் இருந்தது தான்.”

அவர் சொன்னது வியக்கத்தக்க சம்பவம் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் தான் இன்றைய யதார்த்தம். நமக்குத் தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.


உலகில் உள்ள பல பிரச்னைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காண்கிறோம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாமும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். அதனால் தான் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்கக் காரணம் இந்த இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பது தான்.

உலகம் பெரும்பாலான சமயங்களில் நமது பிரதிபிம்பமாகவே இருக்கிறது. குற்றம் சாட்டி சுட்டிக் காட்டும் சமயங்களில் மற்ற மூன்று விரல்கள் நம்மையே காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நேர்மையாக யோசிக்க முடிந்தால், ஆளுக்கொரு அளவுகோல் வைத்து அளக்காமல் நாம் நமக்கும் அடுத்தவருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே நாம் நியாயமாய் நடந்து கொள்பவர்களாவோம். அப்போது மட்டுமே சகோதரத்துவம் உண்மையாக நம்மிடையே மலரும். விமரிசனங்கள் குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தல் வளரும்.



-என்.கணேசன்
நன்றி:விகடன்

Monday, July 5, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-38

உடலின் ஏழு சக்ராக்கள்

நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை “சக்ரா” என்றழைத்தார்கள். அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள். ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள். ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.

இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.

1) மூலாதார சக்ரா –

இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.


2) ஸ்வாதிஷ்டானா சக்ரா

இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.


3) மணிபுரா சக்ரா

இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.


4) அனாஹதா சக்ரா


இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.


5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா

இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.


6) ஆஜனா சக்ரா


இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.


7) சஹஸ்ரரா சக்ரா


இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.


இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள். சக்ரா தியான முறையை அடுத்து பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
என்.கணேசன்

Friday, July 2, 2010

கழுகிற்கும் உந்துதல் அவசியமே!



பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது..

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது. அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. ”நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக “நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட” என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் ’எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது’ என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

முட்டைப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சி ஆக மாறுகிறது என்பதை உயிரியல் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நேரடியாகப் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த முட்டையில் இருந்து வெளியே வர அது முயலும் கட்டத்தில் அதையே எந்தத் தொந்திரவும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருக்கச் சொல்லி விட்டு அவர் வெளியே சென்று விட்டார். அந்த முட்டைக் கூட்டிலிருந்து வெளியே வர அந்தப் பூச்சி படும் பாட்டைக் கண்ட ஒரு மாணவனுக்கு மனம் இரங்கியது. அந்தப் பூச்சி கஷ்டப்படாமல் வெளியே வர ஏதுவாக அந்த முட்டைக் கூட்டை உடைத்து விட்டான். அந்தப் பூச்சி சிறிது நேரத்தில் இறந்து போயிற்று.
திரும்பி வந்த ஆசிரியரிடம் நடந்ததை மாணவர்கள் கூறினார்கள். ஆசிரியர் அந்த மாணவனிடம் சொன்னார். “அந்த முட்டையில் இருந்து வெளியே வர அந்த வண்ணத்துப் பூச்சி செய்யும் கடும் முயற்சியில் தான் அதன் சிறகுகள் பலம் பெறுகின்றன. அது வண்ணத்துப் பூச்சியாக மாற அந்த கஷ்டப்பட்டு செய்யும் முயற்சிகள் உதவுகின்றன. நீ அந்த கடும் முயற்சியை நிறுத்தியதன் மூலம் அது வண்ணத்துப் பூச்சியாக உருவாவதையும் தடுத்து விட்டாய்”

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல. கஷ்டங்களை எப்படி எதிர்கொள்வது, எப்படி அதிலிருந்து மீள்வது என்று கற்றுக் கொள்வது தான் அந்தக் கஷ்டங்களை வெற்றி கொள்ளும் வழி.

”கஷ்டங்களே தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வது “வாழ்க்கையே என்னவென்று தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வதற்கு சமம். பெற்றோர் பிள்ளைகளுக்கு வழி காட்டலாம். ஆனால் வழிநெடுகக் கூடப் போய் அவர்களைப் பலவீனர்களாக்கி விடக்கூடாது. எப்போதுமே அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறவர்களாக இருத்தி விடக்கூடாது.

பெற்றோர்களே! நீங்களும் இந்தத் தவறைச் செய்கிறீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அவரவர் கால்களில் நிற்கும் காலம் வந்த பின்பும் தாங்கிக் கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியிருந்தால் தாய்க்கழுகைப் போல உங்கள் பிள்ளைகளைத் தள்ளி விடுவது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி.

இளைஞர்களே! பெற்றவர்களுடைய தயவிலோ, மற்றவர்களுடைய தயவிலோ சொகுசான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா என்பதை நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். அப்படி இருந்தால் உடனடியாக அந்தச் சிறையிலிருந்து தப்பித்து விடுவது நல்லது. வாழ்வில் சுதந்திரமும், வலிமையும், அர்த்தமும் பெற சிறகை விரித்துப் புறப்படுங்கள். உங்களால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகம் கொள்ளாதீர்கள். பலவீனர்களாக இருக்க இறைவன் உங்களைப் படைக்கவில்லை. எனவே நீங்கள் சமர்த்தர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் இருக்கச் செய்யும் எல்லா முயற்சிகளிலும் இறைவன் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருப்பான்.

-என்.கணேசன்
(இக்கட்டுரை ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் (ஜூன் 2010) அன்னையர் தினத்திற்காக எழுதப்பட்டது