Thursday, May 6, 2010

குற்றமே காணும் வியாதி


முல்லா நஸ்ருதீன் வேலையை முடித்து விட்டு களைப்புடன் வீடு வந்து சேர்ந்த போது அவர் மனைவி அவருடைய ஆடையில் நீளமான கறுப்பு முடி ஒன்றைப் பார்த்து விட வீட்டில் பிரளயமே ஏற்பட்டு விடுகிறது.

“உங்களுக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது” என்று கூறி அவள் முல்லாவிடம் சண்டை பிடிக்கிறாள்.

“சந்தை வழியாக வந்தேன். அங்கு மக்கள் நெரிசலில் எப்படியோ இந்த முடி என் ஆடையில் ஒட்டியிருக்கலாம்.” என்று முல்லா சொல்லிப் பார்த்தார். அவர் மனைவியோ அதை நம்பவில்லை. கண்ணீர் விட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள்.

மறு நாள் வேலை விட்டு வீடு திரும்பிய முல்லாவின் ஆடையில் ஒரு நரைத்த முடி இருந்தது. அதைப் பார்த்த அவர் மனைவி முந்தைய நாளை விட அதிகமாக அழுது புலம்பினாள். “ஐயோ காமாந்தகா! நேற்று இளம்பெண். இன்று தலை நரைத்த பெண்ணா? இப்படி கேவலமாய் மாறி விட்டாயே. உன் மனைவி என்று சொல்லவே எனக்கு நா கூசுகிறது” என்று கூறி சுவரில் தலையை முட்டிக் கொண்டாள்.

மறு நாள் வேலையை விட்டு வரும் போது முல்லா உஷாராக இருந்தார். சந்தை வழியே வருவதைத் தவிர்த்து ஜன நடமாட்டமே இல்லாத வழியாக சுற்றி வீட்டுக்கு வந்தவர் வீட்டை நெருங்கும் முன் தன் ஆடைகளைக் கழற்றி நன்றாக உதறி எந்த முடியும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.

அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவர் மனைவி மிகக் கவனமாக அவருடைய ஆடைகளைப் பரிசோதனை செய்து பார்த்தாள். ஒரு தலை முடியும் கிடைக்கவில்லை. முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால் அவர் மனைவியோ தரையில் விழுந்து புரண்டு அழ ஆரம்பித்தாள்.

“அடப்பாவி.... போயும் போயும் இன்று மொட்டையடித்த பெண்ணுடன் இருந்து விட்டு வந்திருக்கிறாயே. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறதே உன் நடத்தை....”

முல்லா விக்கித்து நின்றார்.

சில மனிதர்களிடம் நல்ல பெயர் வாங்குவது சுலபமல்ல. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கூட திரித்துப் பார்த்து, தவறாகப் புரிந்து கொண்டு குற்றம் காணுவதில் அவர்கள் சமர்த்தர்கள். அவர்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்வது மலைக்கல்லில் கிணறு தோண்ட முற்படுவது போல வியர்த்தமே. அது போன்ற மனிதர்களின் விமரிசனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அலட்சியப்படுத்துவதே நமக்கு நல்லது.

மற்றவர்களிடம் இந்தக் குறையான மனோபாவம் இருந்தால் அலட்சியப்படுத்தும் அதே நேரம் இந்த மனோபாவம் நம்மிடம் உள்ளதா என்பதை நமக்குள்ளே சுயபரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். குற்றமே சொல்லக் கூடாது என்பதல்ல நம் வாதம். குற்றம் மட்டுமே சொல்லக்கூடாது என்று தான் கூறுகிறோம். ஏனென்றால் குற்றம் மட்டுமே காண்பது ஒரு வித நோயே ஆகும். தவறாகப் பார்த்து, தவறாகவே புரிந்து கொள்வது பார்வைக் கோளாறோடு மூளைக்கோளாறும் சேர்ந்து கொள்வது போலத் தான். இந்த நோய் நம்மிடம் இருக்குமானால் நாமும் நிம்மதியாக இருக்க முடியாது, நம்மைச் சேர்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விட முடியாது.

எல்லோரிடமும் குற்றம் காண்கிறோமா இல்லையோ நம்மில் பலரும் சிலரிடமாவது எப்போதும் குற்றம் காணும் தவறைச் செய்கிறோம். வெறுப்பினாலோ, பொறாமையினாலோ, முன்னேயே மனதில் பதித்து வைத்திருக்கும் அபிப்பிராயங்களாலோ நாம் சிலரிடம் அந்தத் தவறைச் செய்ய முற்படுகிறோம். காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல் நாம் அவர்களிடம் காண்பதெல்லாம் தவறுகளாகவே இருக்கிறது.

சில சமயங்களில் நம் ஆரம்பப் பரிசோதனையில் அந்த நபர் தவறுகள் பல செய்திருக்கலாம். ஆனால் தவறுகள் செய்த மனிதன் தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வான் என்று நினைப்பது முட்டாள்தனமே அல்லவா? சில சமயங்களில் அந்த மனிதன் மாற ஆரம்பித்திருக்கலாம். ஆனாலும் அந்த மாறுதல்களை அலட்சியம் செய்து நம் பழைய கண்ணோட்டத்திலேயே அந்த மனிதன் செய்வதில் எல்லாம் தவறுகளையே காண்போமானால் நாமும் அந்தக் குற்றம் காணும் நோயாளியாகவே இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

மனிதன் என்றுமே குறை நிறைகளின் கலவையே. அந்தக் குறை நிறைகளின் விகிதங்கள் வேறு வேறாக இருந்தாலும் அந்த இரண்டும் ஒருவனிடம் எப்போதும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அப்படி இருக்கையில் அடுத்தவர்கள் குறைகளை மிகவும் பூதாகாரப்படுத்துவது நியாயமற்றது.

ஒரு விலைமகளைக் கற்கள் கொண்டு எறிய வந்த கூட்டத்தினரிடம் ஏசுநாதர் சொன்னார். “உங்களில் யார் குற்றமே செய்யாதவர்களோ அவர்கள் முதல் கல்லை அவள் மீது வீசட்டும்”. அன்று அந்த விலைமகள் மீது எந்த ஒரு கல்லும் விழவில்லை. காரணம் ஏசுநாதரின் அந்த வார்த்தைகள் ஒவ்வொருவரின் அந்தராத்மாவையும் தொட்டு சுயபரிசோதனை செய்யத் தூண்டி இருப்பது தான். தாங்களும் எத்தனையோ குற்றங்கள் செய்திருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது தான்.

இன்றும் அந்த சுயபரிசோதனை நம் எல்லோருக்கும் அவசியமே. நம்முடைய தவறுகளை மட்டுமே வைத்து நாம் அளக்கப்பட்டால் அது நியாயமற்றது என்று உரக்கச் சொல்வோம் அல்லவா? அதே போல நியாயமற்ற முறையில் நாம் அடுத்தவர்களையும் அளக்க வேண்டாமே.

மற்றவர்களிடம் இருக்கும் நிறைகளை அதிகம் காணுங்கள். அவற்றைப் பிரதானப்படுத்துங்கள். அவற்றைப் பாராட்டுங்கள். அப்படிச் செய்தீர்களானால் கண்டிப்பாக அவர்கள் உங்களிடம் மேலும் காட்டுவதற்காகவாவது, உங்களிடம் பாராட்டுகள் பெறுவதற்காகவாவது தங்கள் நிறைகளை அதிகரித்துக் கொள்வார்கள். தானாக அவர்கள் குறைகள் குறையும். குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டி வந்தாலும் அதைச் சுருக்கமாக, மென்மையாகச் சுட்டிக் காட்டி பின் அந்த பேச்சையே விட்டு விடுங்கள். அதுவும் அவர்களது குறைகளை நீக்க அவர்களைத் தூண்டும்.

அப்படியில்லாமால் குறைகளை மட்டுமே காண்பவர்களாக நீங்கள் இருந்து விட்டால் “என்ன செய்தாலும் இதே வசைபாடல் தானே” என்கிற மனோபாவம் மற்றவகளுக்கு வந்து விடும். பின் அவர்கள் உங்கள் பேச்சை அலட்சியம் செய்ய ஆரம்பிப்பதுடன் அந்தக் குறைகளை தங்களிடமிருந்து நீக்கிக் கொள்ளும் முயற்சியையும் எடுக்க மாட்டார்கள்.

எனவே குறைகளையே அதிகம் ஒருவரிடம் காணும் முன்பு சிறிது யோசிப்போமா?

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

10 comments:

  1. அருமையா இருக்கு.எல்லோரும் இதைப் படிக்க வேண்டும்.

    ரேகா ராகவன்
    (சிகாகோவிலிருந்து)

    ReplyDelete
  2. அனைத்து தரப்பினருக்கும், எல்லா காலத்திற்கும் தேவைப்படும் ஒன்று.

    நன்றி,
    நித்தியன்

    ReplyDelete
  3. it is very well written...

    //“உங்களில் யார் குற்றமே செய்யாதவர்களோ அவர்கள் முதல் கல்லை அவள் மீது வீசட்டும்"//

    The same thing applies to Mr Nithyananda's case also. All of us spoke endlessly as if we would not have done it if given a chance....

    All of us are hypocrites...

    Mr Nithyananda had the opportunity to do it - so he did it and got pleasure - we cannot do it - so we are talking about it and get pleasure out of it...

    Am I supporting Mr Nithyananda - No. Let him face the music and be bought to book. The question is, are we any better?

    Thanks

    Venkat

    ReplyDelete
  4. //தவறுகள் செய்த மனிதன் தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வான் என்று நினைப்பது முட்டாள்தனமே அல்லவா//

    அவனை திருந்தவும் , மக்கள் விடுவதில்லையே . நல்ல பதிவு .

    ReplyDelete
  5. Really nice.. Thought provoking..

    ReplyDelete
  6. If you can translate this to english, I can send it to my BOSS as he has the same character.
    (Raj from Saudi)

    ReplyDelete
  7. இந்த வியாதி அடுத்தவர்களையும் கொல்லும் திறன் கொண்டது

    ReplyDelete
  8. VenkatMay 6, 2010 1:27 PM

    it is very well written...

    //“உங்களில் யார் குற்றமே செய்யாதவர்களோ அவர்கள் முதல் கல்லை அவள் மீது வீசட்டும்"//

    The same thing applies to Mr Nithyananda's case also. All of us spoke endlessly as if we would not have done it if given a chance....

    All of us are hypocrites...

    Mr Nithyananda had the opportunity to do it - so he did it and got pleasure - we cannot do it - so we are talking about it and get pleasure out of it...

    Am I supporting Mr Nithyananda - No. Let him face the music and be bought to book. The question is, are we any better?

    Thanks

    Venkat

    நண்பர் வெங்கட் அவர்களுக்கு வணக்கம்.
    திரு. நித்யானந்தம் ஒரு சாதாரன மனிதராக இருந்தால் பரவாயில்லை;
    ஒவரோ ஆன்மீகவாதி, அந்த போர்வையில் இதை செய்திருக்கக்கூடாது.
    கே.எம்.அபுபக்கர். 01 12 2012

    ReplyDelete
  9. அருமையான பதிவு. அருமையான கதை...

    ReplyDelete