தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, March 3, 2010
ஆன்மிக முட்டாள்கள் ஆகாதீர்கள்!
இன்று தமிழகமெங்கும் நித்தியானந்த ஸ்வாமிகளின் லீலைகள் பற்றித் தான் பேச்சாக இருக்கிறது. கல்கி பகவான் என்பவரையும் பற்றியும் கதை கதையாகச் சொல்கிறார்கள். அவர்களுடைய ஆசிரமங்கள் சூறையாடப்படுகின்றன, முற்றுகையிடப்படுகின்றன. இது போன்ற போலிச் சாமியார்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பு வேண்டுமென்று வேறு ஒரு கோரிக்கை முதலமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆன்மிகப் போர்வையில் ஆபாசம், கொள்ளை எல்லாம் நடப்பது இந்து மதத்தில் மட்டுமல்லாமல் மற்ற மதங்களில் கூட நடப்பதை தினமும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்.
இது போன்று நடப்பதற்கெல்லாம் இந்தப் போலிச் சாமியார்கள் தான் காரணம் என்று பரவலாகக் கருத்து நிலவுகிறது. உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் என்பதை விட பெரும்பாலான மக்கள் ஆன்மிக முட்டாள்கள் ஆக இருக்கிறார்கள், ஏமாறத் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்வது தான் அதிகப் பொருத்தமாக இருக்கும். அவர்களுடைய அந்தத் தயார்நிலையையும், முட்டாள்தனத்தையும் ஒருசிலர் தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆன்மிகம் என்பது என்னவென்று பெரும்பாலானோருக்குத் தெளிவில்லாமல் இருப்பதே இதன் காரணம். கடவுளைப் பற்றி யாராவது பேசினால், அதுவும் மத நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நமக்குத் தெரியாத பல உயர்ந்த விஷயங்களையும் சொல்லி பிரசங்கம் செய்தால் அவர்கள் துறவாடைகளையும் அணிபவராக இருந்தால் உடனடியாக அவர்களை வணங்கிப் பின்பற்ற ஒரு கூட்டம் உடனடியாகத் தயாராகி விடுகிறது.
ஆன்மிக அறிவைப் பெற்றிருப்பதனாலே ஒருவர் பகவானோ, பரமஹம்சரோ ஆகிவிட முடியாது. நமக்குத் தெரியாத ஆன்மிக உயர்கருத்துகள் எல்லாம் ஒருவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதாலேயே அவர் மகானாகி விட முடியாது. அறிந்திருப்பது மிகப் பெரிய விஷயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அறிந்ததை வாழ்ந்து காட்டுவது தான் அற்புதம். அதுவே ஆன்மிக ஞானத்தின் உண்மையான அளவுகோல்.
கோபம் தவறு, கோபத்தை வெற்றி கொள்வது எப்படி என்றெல்லாம் நான் பிரமாதமாக மற்றவர் மனதைக் கவரும்படி சொல்லலாம். எழுதலாம். ஆனால் கேட்டு விட்டோ, படித்து விட்டோ யாராவது ‘சும்மா இருடா முட்டாள்’ என்று சொன்னால் எனக்குக் கோபம் வருமேயானால் நான் அறிந்ததை எல்லாம் நடைமுறைப்படுத்தும் பக்குவம் எனக்கு வரவில்லை என்பது தான் பொருள்.
எனவே ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்றெல்லாம் ஆன்மிகப் பெருமக்கள் பார்த்து அவரை முடிவு செய்வதை விட அவர் எப்படி வாழ்கிறார் என்று கவனித்து முடிவு செய்வது தான் ஏமாறாமல் தடுக்க உதவும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வது போல “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” என்கிற வகையில் கூட ஒருவர் இருக்கலாம். பெரிய பெரிய தத்துவங்கள் பற்றி மேடையில் பேசினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சிற்றின்பப் பிரியராக இருக்கலாம். அவரை ஆராய்ந்து தெளியாமல் ஆண்டவனாக யாராவது பார்த்தால் அது பேதைமை.
ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப் பயன்படுத்தத் தவறினால் ஏமாற்றுபவரின் குற்றத்தை விட, இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறிய குற்றமே பெருங்குற்றமாக இருக்கும்.
(இது சம்பந்தமாக “உண்மையான மகான் எப்படி இருப்பார்?” என்ற தலைப்பில் நான் எழுதியதை http://enganeshan.blogspot.com/2009/05/blog-post_19.html ல் படிக்கலாம்.
”ஆன்மிகவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை” என்று எச்சரித்ததை
http://enganeshan.blogspot.com/2009/02/blog-post_20.html ல் படிக்கலாம். ”எது நாத்திகம்” என்ற சிறுகதையிலும் நான் ஏமாற்று சாமியார்களைச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதை http://enganeshan.blogspot.com/2007/10/blog-post_1813.html ல் படிக்கலாம்)
- என்.கணேசன்
I like the way you commented on this issue. I just started doing yoga (Vedathri Maharishi) center and feels more changes in my life in a short time.
ReplyDelete\\அறிந்திருப்பது மிகப் பெரிய விஷயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அறிந்ததை வாழ்ந்து காட்டுவது தான் அற்புதம். அதுவே ஆன்மிக ஞானத்தின் உண்மையான அளவுகோல். \\
ReplyDeleteசொல்லும் செயலும் ஒன்றுபடவேண்டும். இது ஆன்மீகத்துக்கு ஆரம்பம்.
வாழ்த்துகள் திரு.கணேசன் அவர்களே
இத் தருணத்தில் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்றாக சொன்னீர்கள். அருமை.
ReplyDeleteரேகா ராகவன்.
கண்ணால் காண்பதும் பொய்
ReplyDeleteகாதால் கேட்பதும் பொய்
இந்தநாட்டில் எங்கு தீரவிசாரிப்பது
சத்தியமே வெடித்து வந்தால் தான் உண்டு.
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
ReplyDeleteமெய்ப்பொருள் காண்பதறிவு.
என்றார் வள்ளுவர்.
"காண்பதரிது" ஆகிவிட்டது. அறிவு என்னவென அறியாதோர்க்கு, தெளியாதோர்க்கு, மெய்பொருள் காண்பது அரிதே.
ரிஷி மூலம், நதி மூலம் பார்க்கவேண்டாம் என இதற்குத்தான் சொன்னார்களோ ? தெரியவில்லை.
சுப்பு ரத்தினம்.
சரியாகச் சொன்னீர்கள் ஐயா. இக்காலத்தில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை........
ReplyDeleteஆன்மீகத்தை "material benefits" என்ற நோக்கத்தோடு அணுகினால் இந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.
ReplyDeleteபகவானை நினைப்பவன் முதலில் கர்மயோகி ஆக இருக்க வேண்டுமாம். கர்மங்களின் பலன் அனைத்தையும் துறக்க வேண்டும். பலன் கருதாத செயல்கள்....தன்னை அறிய முற்படும் போது, தானாக கிடைக்கப்பெறும் humility இது இரண்டும் அடையாளம்.
இறை தத்துவத்தை நோக்கி செல்லும் ஒருவன், "அஹம்" முற்றிலும் அழிக்கப்பட்டவன் ஆகிறான். அஹங்காரம் கொள்ளாது பவ்யமாகவும், எளிமையாகவும், ஒரு ரமணர், ராமக்ருஷ்ணர்கள் விளங்கினர்.
அவர்களிடம் ஆன்ம தாகம் கொண்டு சந்திக்க சென்ற மக்களும், பெரும் பாலும் ஆன்ம தாகத்திற்காகவே சென்றனர் (குறைகளை நிவர்த்தி செய்ய அல்ல)
நல்ல கட்டுரை.
//// ஆன்மிகம் பெரும்பாலானோருக்குத் தெளிவில்லாமல் இருப்பதே இதன் காரணம். உடனடியாக அவர்களை வணங்கிப் பின்பற்ற ஒரு கூட்டம் உடனடியாகத் தயாராகி விடுகிறது. ////
ReplyDeleteமிக சரியான கருத்து. இதை ஒட்டியே எனது கருத்தும் அமைந்து இருப்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
உள்ளுக்குள் உருகும் உயிர்களாய்தான் நாம் எல்லோருமே உள்ளோம். அன்றாடம் நாம் காணும் மனிதர்கள் அனைவருக்கும் சோதனைகள், துன்பங்கள் சூழ்கின்றன. என்னால் முடியவில்லை, தாங்க முடியவில்லை. இயலவில்லை. ஏதோ ஒரு சக்தி நம்மை காப்பாத்தாதா என ஏக்கம் இருக்கிறது.
//// ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறிய குற்றமே பெருங்குற்றமாக இருக்கும்.////
ஆணி வேரான காரணத்தை மிக சரியாக முன்வைக்கிறீர்கள். சபாஷ் கணேசன்.
தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php
மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete