அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.
அதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். “கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை”
ஆர்தர் அஷே பதில் எழுதினார். “உலகமெங்கும் ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஐம்பது லட்சம் குழந்தைகள் டென்னிஸை முறைப்படி ஆடக் கற்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் திறமை பெறுகிறார்கள். ஐம்பதாயிரம் பேர் களத்திற்கு வருகிறார்கள். ஐந்தாயிரம் பேர் க்ராண்ட் ஸ்லாம் அளவை எட்டுகிறார்கள். ஐம்பது பேர் விம்பில்டன் வரை வருகிறார்கள். நான்கு பேர் அரையிறுதி ஆட்டம் வரையும் இருவர் இறுதி ஆட்டம் வரையும் வருகிறார்கள். அதுவரை வந்து நான் அதிலும் வென்று விம்பில்டன் கோப்பையை என் கையில் ஏந்தி நின்ற போது “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்கவில்லை. இன்று இந்தக் கொடிய நோயின் வலியில் துடிக்கும் இந்த நேரத்தில் “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்பது நியாயமாகாது”
டென்னிஸ் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கை விளையாட்டிலும் அவர் அடைந்திருந்த தேர்ச்சி நம்மை வியக்க வைக்கிறதல்லவா? இந்த மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?
இதே கருத்தை கம்ப இராமாயணத்திலும் ஓரிடத்தில் இராமன் வாயால் நாம் கேட்கிறோம். காட்டிற்குச் செல்லும் இராமனுடன் காடு வரை வந்த சுமந்திரன் என்ற அமைச்சர் இராமனின் அந்த நிலைக்கு வருத்தப்படும் போது இராமன் சொல்கிறான். “இன்பம் வந்தால் இனிமையானது என்னும் போது துன்பம் வந்தால் மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?”
(இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?)
இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்தை ஏற்றுக் கொள்பவன் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைப் போலவே வாழ்க்கையிலும் இன்பத்தை மட்டுமே வேண்டுதலும் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராத ஆசை.
உலகிற்கு வரும் போது எதையும் நாம் எடுத்து வரவில்லை. பெற்றதெல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது. உலகத்தை விட்டுச் செல்லும் போது அவை அனைத்தையும் விட்டே செல்ல வேண்டி இருக்கிறது. சில சமயம் நாம் இங்கு இருக்கும் போதே சிலவற்றை இழக்க நேரிடுகிறது. விதி பலவந்தமாய் நம்மிடம் இருந்து சிலவற்றைப் பறித்துக் கொள்கிறது. கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் சொல்வது போல “இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா?”
ஆர்தர் அஷெ கூறுவது போல நமக்கு நன்மைகள் வந்து குவிகிற போது யாரும் “எனக்கு மட்டும் இத்தனை தந்தாயே ஏன்” என்று கேட்பதில்லை. பெற்ற நன்மைகளுக்கு நாம் நன்றி கூடத் தெரிவிப்பதில்லை. நன்மைகளைப் பெற்றது நமது சாமர்த்தியத்தால் என்று பெருமைப்படுகிறோம். அப்படி நன்மைகளைப் பெறுவது இயல்பே என்பது போல் நடந்து கொள்கிறோம். ஆனால் தீமைகள் நம் வாழ்க்கையில் நடந்து விட்டாலோ பழி போட ஆட்களைத் தேடுகிறோம். கடவுளிடம் “என்னையே ஏன் சோதிக்கிறாய்?” என்று கேட்கிறோம். ஏதோ உலகில் கஷ்டப்படும் ஒரே மனிதர் நாம் தான் என்பது போல் நடந்து கொள்கிறோம்.
ஆர்தர் அஷெ போல் கடுமையான சூழ்நிலைகளிலும் உண்மையை உணர்ந்து தெளிகிற மனப்பக்குவம் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும் மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் போது அவற்றின் கடுமைகளை நாம் மிகவும் குறைத்துக் கொள்கிறோம். இனி என்ன செய்யலாம் என்று ஆக்க பூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.
அந்த மனமாற்றமும் பக்குவமும் அடைவது ஒரு நாளில் அடையக்கூடியது அல்ல. முதலில் மாற்ற முடியாத சிறிய அசௌகரியங்களை முகம் சுளிக்காமலும், முணுமுணுக்காமலும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். இந்த சிறிய அசௌகரியங்களால் குடிமுழுகி விடப் போவதில்லை என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த அசௌகரியங்களை உங்களுக்கு சவாலாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துக் கொள்ளும் போது பொறுத்துக் கொள்ளுதல் வெற்றி என்று ஆகிவிடுவதால் பொறுத்துக் கொள்ளுதல் எளிதாகிறது. அப்படியே படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நல்லவைகளையே பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே என்றாலும் தீயவைகளும் வரக்கூடும் என்பதை உணர்ந்திருங்கள். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இது இயற்கையான விதி தான். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். வந்ததை ஏற்றுக் கொண்டு இதை எப்படிக் குறைக்கலாம், அல்லது நீக்கலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள். அது நீக்கவோ, குறைக்கவோ முடியாததாக இருக்குமானாலும் அந்த விதியை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றிருக்கும் எத்தனையோ நன்மைகளை எண்ணிப் பாருங்கள். அத்தனை நன்மைகளுக்கு இடையில் இது போன்ற ஓரிரு தவிர்க்க முடியாத தீமைகள் வருவது இயல்பே என்று சமாதானமடையுங்கள்.
இது போன்ற சிந்தனைகள் பலப்படும் போது, உண்மைகள் உணரப்படும் போது, உங்கள் மன அமைதி ஒருபோதும் குறைவதில்லை.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Hi sir,
ReplyDeleteReally very Very nice one. All the best!
unga pathivu arumai.
ReplyDeletenallavaigal nallavarukku
mattum therium yenpargal.
ungal pathivu veetai thodara
vazethugal.
Abishek.Akilan.
கவலைகளாலும், சஞ்சலத்தாலும் அலைபாயும் மனதுக்குச் சாந்தி அளிக்கும் மிக நல்ல பதிவு.
ReplyDeleteஇதை நகலெடுத்து ஒவ்வொருவரின் சட்டைப்பையிலும் வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரும்பத் திரும்பப் படித்தால், உள்ளம் அமைதியாகும்.
அருமையான பதிவு. 'எல்லாம் அவன் செயல்' என்று இருந்தாலே மன அமைதி என்றும் குறையாது.
ReplyDeleteA Good article...Thanks for the post...
ReplyDeleteஉண்மைகள் உணரப்படும் போது, உங்கள் மன அமைதி ஒருபோதும் குறைவதில்லை.
ReplyDeleteநல்ல பதிவு.
என் தளமும் உங்களை வரவேற்கிறது
Nalla padhivu sir
ReplyDeleteமனதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
ReplyDelete