தன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை "மரணத்தின் வர்த்தகன் மரணம்" என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல் படித்துப் பார்த்தார்.
"மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட் நோபல் நேற்று காலமானார்" என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. "நான் இறந்த பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?" என்ற ஒரு கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.
அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும் மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் 'ப்ளைவுட்'டைக் கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார். (பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம் இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும் நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல் வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை. பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும், செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.
இத்தனை சாதனைகள், வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு "மரணத்தின் வர்த்தகன்" என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன் சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும் அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின் கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப் பெண்மணி எழுதிய "ஆயுதங்களைக் கைவிடுங்கள்" என்ற புத்தகம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்றது.
அந்தக் கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப் பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல் காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல் பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1901 முதல் ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம் ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு வைத்திருக்கிறது.
ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம். நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?
- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
நன்றாக இருநதது
ReplyDeleteDear Mr Ganeshan,
ReplyDeleteReally fantastic and you message all are golden.
hum...! something i learnd today.
ReplyDeletehum....!something i learned today
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு, நன்றி
ReplyDeletehe is not a Tamilian or Indian he is a American citizen.
ReplyDeletedont put your label on other produts.