ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க விமானம் ஒன்று ஆப்பிரிக்கா பகுதிக்கு சென்று பின் காணாமல் போயிற்று. ஆப்பிரிக்கக் காடுகளில் எங்கோ விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் அமெரிக்க உளவு விண்வெளிக்கலங்கள் ஆன மட்டும் முயன்றும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அமெரிக்க உளவுத்துறை (CIA)யின் தலைவராக இருந்த
ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னர் தொலைநோக்கு சக்தி படைத்த ஒரு அபூர்வப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன் அபூர்வசக்தி மூலம் விமானம் இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொன்னார். விண்வெளிக்கலத்தின் காமிராக்களை அந்த இடத்தில் மையப்படுத்தி கூர்ந்து பார்த்த போது அந்த விபத்துக்குள்ளாகி இருந்த விமானத்தைக் கண்டு பிடித்தனர்.
இந்தத் தகவலை ஜிம்மி கார்ட்டர் அட்லாண்டாவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது வெளியிட்டார். ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னரும் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது அதை ஒத்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் வெளிப்படையாகச் சொல்லும் வரை இது போன்ற அதீத மனசக்திகளைப் பற்றி மேல் மட்டத் தலைவர்களோ, அதிகாரிகளோ இது பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியது.
உண்மையில் 1981 முதல் 1995 வரை அமெரிக்க அரசாங்கம் மனோசக்திகளைப் பரிசீலிக்க ஐந்து விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்களை நியமித்தது. அந்த ஐந்து அறிக்கைகளுமே முழுமையாக இல்லா விட்டாலும் பல கேஸ்களில் அசாதாரண நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டன. மனித மனம் மற்ற மனித மனங்களுடனும், ஜடப்பொருள்களுடனும் கூட ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அந்த விளைவுகளால் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
அதிகமாய் விளம்பரம் செய்யாத, அடக்கி வாசித்த ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கழகத்தை (SRI) அமெரிக்க உளவுத் துறையான CIA மனோசக்தி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் எட் தாம்ஸன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் SRIயின் சில ஆராய்ச்சிகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஞான திருஷ்டி எனப்படும் தொலை நோக்குப் பரிசோதனைகள் செய்யத் தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.
SRI யின் ஆரம்பகால (ஜூன் 1972) ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட அபூர்வசக்தி மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் இங்கோ ஸ்வான் என்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வரவழைத்தனர். அவர் வருவதற்கு முன் ஒரு புதிய வகை மேக்னட்டோமீட்டர் ஒன்றை ஆராய்ச்சிக்கூடத்தின் தரைக்கும் கீழே உள்ள ரகசிய இடத்தில் அனுமினியப் பெட்டியில் செம்பு மற்றும் வேறொரு உலோகத்தால் கவசமாக நன்றாக மறைத்து வைத்தனர். அந்த மேக்னட்டோமீட்டரின் செயல்பாடுகளை ஸ்வானுக்குத் தெரியாமல் கண்காணிக்க மறைவாக வேறு ஒரு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.
ஆனால் இங்கோ ஸ்வான் வந்தவுடனேயே அந்த மேக்னட்டோமீட்டர் தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தது. ஸ்வான் தரையின் அடியில் ஏதோ ஒரு கருவியை உணர்வதாகக் கூறினார். அந்தப் புதிய கருவியின் வடிவம் இன்னும் வெளியுலகிற்குப் பிரசுரமாகாதது என்றாலும் ஸ்வான் ஏறத்தாழ சரியாகவே அந்தக்கருவியினை வர்ணித்தார்.
அதைக் கேள்விப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர் இருவர் SRI க்கு வந்து சில சிறிய பரிசோதனைகளை ஸ்வானிடம் செய்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிறு பொருள்களைக் கண்டு பிடிக்கச் சொன்னார். ஸ்வான் பெரும்பாலானவற்றைச் சரியாகச் சொன்னார். ஒரு பெட்டியைக் காண்பித்தவுடன் "வெளிர் காவி நிறத்தில் இலை வடிவமுள்ள பொருள் உள்ளது. அது அசைவது போலத் தெரிகிறது". அந்தப் பெட்டியில் இருந்தது அவர் கூறிய எல்லா அமசங்களும் நிறைந்த ஒரு அந்துப் பூச்சி.
SRI ஸ்வானைப் போலவே வேறு சிலரையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியது. சிலருக்கு உண்மையான பெயர்களைத் தவிர்த்து எழுத்துடன் எண்ணை இணைத்து அடையாளப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்டவர்கள் V1 என்பவர் வெகு தொலைவில் இருந்த குறியிலக்குகளை கிட்டத்தட்ட மிகச்சரியாகவே வரைந்தார். அந்தப் படங்களும், குறியிலக்குகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன.
சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் டிஸ்கவரி சேனலிலும் மனதின் சக்திகள் பற்றிய ஆதாரபூர்வ நிகழ்ச்சிகள் பற்றி சில நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அப்போது அமெரிக்க உளவுத் துறை ஒரு அதீத சக்தி படைத்த நபரைக் கொண்டு ரஷ்ய அணு ஆயுத உற்பத்திக் கிடங்கு ஒன்றின் படத்தை வரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது போல விண்வெளிக் கலங்கள் வசதி இல்லாத காலக் கட்டத்தில், ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் அந்த நபர் வரைந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாகவே பொருந்தி வந்ததாக அந்த நிகழ்ச்சியாளர் கூறினார். பனிப்போர் முடிவடைந்து பின் நேரடியாக அந்த கிடங்கைப் படம் எடுத்து ஒப்பு நோக்கிய போது அதிகாரிகள் அசந்து போனதாக நிகழ்ச்சியாளர் கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அபூர்வ சக்தி மனிதர் பெயரை வெளியிட மறுத்த நிகழ்ச்சியாளர்கள் அவர் பெயரை எக்ஸ் என்றே அழைத்தார்கள். சில நாட்களுக்கு தினமும் அவரை ஒரு குறிப்பிட்ட ராணுவ ரகசிய அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து அதை வரைந்ததாகச் சொன்னார்கள்.
இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் சிகரத்தையே எட்டியிருந்த வல்லரசு நாடான அமெரிக்கா கூட, முக்கியமாய் CIA போன்ற உளவுத்துறை கூட ஆராய்ந்து ஆழ்மனதின் அற்புத சக்திகளைப் பயன்படுத்தியுள்ளது என்னும் போது அதன் பெருமையையும், உண்மையையும் உணர முடிகிறதல்லவா?
மேலும் பயணிப்போம்....
(தொடரும்)
என்.கனேசன்
நன்றி: விகடன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, November 27, 2009
Monday, November 23, 2009
மனதில் சுமப்பது குப்பைகளையா?
பாரதியார் குள்ளச் சாமி என்ற ஒரு சித்தரை அறிந்திருந்தார். அவர் மீது மிகவும் மதிப்பும் கொண்டிருந்தார். ஒரு முறை குள்ளச்சாமி பழங்கந்தைகளும், குப்பைகளும் கொண்ட அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட பாரதியாருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. சித்தராகக் கொண்டாடியவரை இப்படி பழங்குப்பை சுமக்கும் பைத்தியக்காரராகக் காணும்படியாகி விட்டதே என்று பாரதியாருக்கு ஒரே வருத்தம்.
"ஐயா ஏனிந்த கோலம். உங்கள் செய்கை பைத்தியக்காராரரின் செயல் போலல்லவா இருக்கிறது" என்று கேட்டார் பாரதி.
"நான் குப்பைகளை வெளியே சுமந்து கொண்டிருக்கிறேன். நீ உள்ளே சுமந்து கொண்டிருக்கிறாய்" என்று புன்னகையுடன் சொன்ன குள்ளச்சாமி பாரதியாரைச் சிந்திக்க வைத்து விட்டு சென்று விட்டார்.
பாரதியாரின் பாடல் இதோ-
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டென் எதிரே வந்தான்.
சற்றுநகை புரிந்தவன் பால் கேட்கலானேன்:
"தம்பிரானே இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டை சுமந்திடுவதென்னே? மொழிவாய்" என்றேன்.
புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்.
குள்ளச்சாமியின் பதில் பாரதியாரை மட்டுமல்ல நம்மையும் சிந்திக்க வைக்கக்கூடிய உண்மை. வெளியே குப்பைகளை சுமப்பவரைக் கண்டால் பைத்தியக்காரர் என்று ஏளனம் செய்யும் நாம் அதை விட மோசமானதும் பழமையானதுமாய் எத்தனை குப்பைகளை நம் மனதில் சுமந்து கொண்டிருக்கிறோம்? புறத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அகத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கிறோம்?
மனதின் உள்ளே இருக்கும் பழைய நினைவுகளில் எத்தனை நினைவுகள் இனிமையானவை? எத்தனை நினைவுகள் பயனுள்ளவை? இந்தக் கணக்கை ஒவ்வொருவரும் எடுத்துப்பார்த்தால் நன்மையானவையும், பயனுள்ளவையும் நம் மனதில் மிகச் சொற்பமானதாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நன்மைகளையும், பெற்ற நல்லவற்றையும் நீரில் எழுதி வைக்கிறார்கள். நேர்ந்த தீங்குகளையும், இழந்தவற்றையும், தொலைத்தவற்றையும் கல்லில் எழுதி வைத்துப் பாதுகாக்கிறார்கள். அங்கலாய்க்கிறார்கள். அந்தப் பயன்படாத, நிம்மதியைக் குலைக்கும் நினைவுகள் பழங்குப்பைகளே. குப்பைக் கூளங்கள் மிகுதியாக இருக்கும் இடங்கள் நோய்களின் உற்பத்தி ஸ்தானங்கள். எத்தனையோ மனநோய்களின் உற்பத்திக்காரணங்கள் இது போன்ற பழங்குப்பைகள் தான்.
குள்ளச்சாமி சுட்டிக் காட்டிய உண்மை உறைக்க பாரதியார் இது போன்ற குப்பைகள் சுமப்பது முட்டாள்தனம் என்று அழகாய் பாடியுள்ளார்.
சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே!
கடந்த காலத்தின் இனிமைகளை கல்லில் செதுங்குங்கள். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்று பாடங்களை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கசப்பான அனுபவங்களை குப்பைகளாய் எண்ணி அகற்றி விடுங்கள். குப்பைகளை சுமப்பதில் அர்த்தம் இல்லை. மேலும் நடந்து முடிந்த, மாற்ற முடியாத விஷயங்களை மனதில் எண்ணி உருகும் போது நிகழ்கால நல்ல விஷயங்களை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். இது இரட்டை நஷ்டமே அல்லவா?
நம் நிம்மதியைக் குலைப்பது நம் பழைய தவறான செயல்கள் என்றால் இனி அப்படி செய்யக் கூடாது என்று உறுதியாக தீர்மானிப்பதைத் தவிர அதுகுறித்து நம்மால் செய்ய முடிவது வேறொன்றுமில்லை. நம்மை அலைக்கழிக்க வைப்பது அடுத்தவர் செயல்கள் என்றால் இனி அது போன்ற செயல்கள் நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே நாம் செய்ய வேண்டிய அறிவார்ந்த செயல். அதை விட்டு அப்படியாகி விட்டதே என்று எண்ணி எண்ணி வருந்தியபடியே இருப்பது முட்டாள்தனமே.
பாரதியின் "இன்று புதிதாய் பிறந்தோம்" என்ற வரியை தாரக மந்திரமாய் எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வின் புதிய பக்கமே. எழுதி முடித்த பக்கங்களைத் திருத்தும் சக்தி நமக்கில்லை என்றாலும் புதிதாய் எழுதப்போகும் பக்கங்களை எப்படி நிரப்புகிறோம் என்பது நம் கையிலேயே அல்லவா இருக்கிறது? அந்த சுதந்திரத்தை முறையாக நாம் பயன்படுத்திக் கொண்டால் இனிவரும் நாளெல்லாம் இனிய நாளே!
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Friday, November 20, 2009
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-11
ஸ்வாமி ராமாவைப் போலவே ஜேக் ஷ்வார்ஸ் என்ற ஹாலந்துக்காரரும் தன் உடலில் பல விந்தைகள் செய்து காட்டக் கூடியவராக இருந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆணிகளின் படுக்கையில் படுப்பது, கூரிய வாள்களின் மேல் நடனமாடுவது, ஆணிகளையும், ஊசிகளையும் உடலில் துளைத்துக் கொண்டு பின் காயங்களை ஆற வைத்துக் காட்டுவது போன்ற செயல்களைக் காட்டி வந்த அவர் இரு முறை இரண்டாம் உலகப் போரில் நாசிகளிடம் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார். இரண்டாம் முறை சிக்கிய பின் மற்ற இரண்டு கைதிகளுடன் சுவரின் கீழ் சுரங்கத்தைத் தோண்டி ஒரு மாத காலத்திற்குள் தப்பி விட்டார். பின் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.
ஜேக் ஷ்வார்ஸ் 1958ல் மனித உடலின் மீது மனதிற்குள்ள சக்தியை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அலெத்தியா உடல்-உள்ளம் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஸ்வாமி ராமாவை ஆராய்ச்சி செய்த மென்னிங்கர் நிறுவனம் அவரையும் ஆராய்ச்சி செய்தது. பெரிய ஊசி ஒன்றை எடுத்து அவர் தனது கையில் குத்திக் கொண்ட பின்னரும் இரத்தம் அவர் உடலிலிருந்து கசியாததைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்தனர். ஒரு ஆராய்ச்சியாளர் "இரத்தத்தைக் கசிய வையுங்கள் பார்க்கலாம்" என்று சொல்ல அடுத்த கணம் ஷ்வார்ஸ் அந்த ஊசியைக் குத்திய இடத்திலிருந்து இரத்தத்தை கசிய விட்டார். ஆராய்ச்சியாளர்கள் பெருகி வரும் இரத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அவர் அடுத்த கணமே அந்த இரத்தக் கசிவை நிறுத்திக் காட்டினார்.
சாதாரண ஊசிகள் அல்லாமல் துருப்பிடித்த ஊசிகள் மற்றும் ஆணிகளாலும் தன் உடலை ஷ்வார்ஸ் துளைத்துக் காண்பித்தார். ஆனால் அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. எரியும் சிகரெட்டுகளை உடலில் அழுத்திக் காண்பித்தார். சிவந்த, கருகிய காயங்கள் தெரிந்தனவே ஒழிய அவற்றாலும் அவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஊசிகள், சிகரெட்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உடனடியாக ஆறின. எப்படிப்பட்ட வடுக்களானாலும் 24 மணி நேரம் முதல் 48 மணிகளுக்குள் உடலிலிருந்து மறைந்தன. வருடக்கணக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஷ்வார்ஸின் தோல் எந்த வடுவுமில்லாமல் குழந்தையின் தோலைப் போல் மொழு மொழுவென்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தனை அற்புதங்கள் புரிந்த ஷ்வார்ஸ் அதைத் தன்னால் மட்டுமே முடிந்த பெருஞ்சாதனையாகக் கருதவில்லை. மூளை அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் என்ன கட்டளையிட்டாலும் உடல் அதை ஏற்றுக் கொள்ளும் என்றார். சரியான பயிற்சியால் இதை யாராலும் செய்ய முடியும் என்றார். சில மூச்சுப் பயிற்சிகளாலும், தியானத்தாலும் மூளையில் அந்த அலைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். 2000 ஆம் ஆண்டு இறந்த ஜேக் ஷ்வார்ஸின் அலெத்தியா உடல்-உள்ளம் நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
இதே போல் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு உடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நரசிங்கஸ்வாமி என்ற யோகியைப் பற்றி பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி தன் "ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்" என்ற நூலில் குறிப்படுகிறார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் கல்கத்தாவில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் மூலம் கேள்விப்பட்டதாக அவர் சொன்னார். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.
அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.
தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை
கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."
(இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.
பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார்.)
மனித மனம் தன் உடலில் இவ்வளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள முடியும் என்றால், இத்தனை சாதனகளை உடலில் புரிய முடியும் என்றால் புற்றீசல் போல் பலப்பல நோய்கள் கிளம்பி வரும் இக்காலத்தில் நாம் பெரும்பாலான நோய்களின் தீர்வாக மனதை ஏன் முறையாகப் பயன்படுத்தக் கூடாது?
சிந்தியுங்கள். மேலும் பயணிப்போம்...
(தொடரும்)
-என்.கணேசன்
நன்றி: விகடன்
Monday, November 16, 2009
வெற்றிக்குணங்கள் 13
ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?
எழுத்தாளர், விஞ்ஞானி, அரசியல் வல்லுனர், கல்வியாளர், பத்திரிக்கையாளர், இசைக்கலைஞர், தத்துவஞானி, நாட்டின் உயர்பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் என்றெல்லாம் ஒரே மனிதரைப் பற்றி சொல்ல முடியும் என்றால் அது பிரமிக்க வைக்கும் செய்தியே. ஏனென்றால் இவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று சிறிதும் சம்பந்தப்படாத, அல்லது நேர்மறையான துறைகளே. அவர் சாதனை புரிந்த துறைகளாக வேறு சிலவற்றின் பெயர்களைக் கூடக் கூறலாம். இத்தனை அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனிதராக உலகம் ஒரே ஒருவரைத் தவிர வேறொருவரை இதுவரை கண்டதில்லை. அவர் தான் பெஞ்சமின் ·ப்ராங்க்ளின்.
அவர் - அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிக் கையெழுத்திட்ட ஐவரில் ஒருவர், அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், மின்சாரம் குறித்த பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர், அர்மோனிகா என்ற ஒருவகைக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் அமையக் காரணமாய் இருந்தவர், வயலின் மற்றும் கிடார் கலைஞர், சிறந்த செஸ் ஆட்டக்காரர், நிறைய விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியவர் - இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு வாழ்க்கையில் இத்தனை முத்திரைகள் பதிக்க முடிந்தவர் தன் வாழ்க்கையில் மிக நல்ல மனிதர் என்றும் அறிந்தவர்களால் கருதப்பட்டார். இதை விடப் பெரிய வெற்றி வாழ்க்கை இருக்க முடியுமா?
அப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர் தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாகப் பதின்மூன்று குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ முயற்சித்ததாகக் கூறினார். அவை-
1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.
2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.
3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.
4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.
5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.
6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.
7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.
8) நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.
9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.
10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.
11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.
12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.
13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.
பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.
அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். "நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது"
பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Wednesday, November 11, 2009
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-10
ஸ்பூன், இரும்புக்கம்பி, சாவி போன்ற பொருள்களை சிலர் தங்கள் மனோசக்தியால் வளைத்துக் காண்பித்தார்கள் என்றால் ஸ்வாமி ராமா என்ற இந்திய யோகி தன் உடலிலேயே பல அற்புதங்களை செய்து காட்டக் கூடியவராக இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர் ·பௌண்டேஷன் 1969 இறுதியில் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரை டாக்டர் டேனியல் ·பெர்குசன், எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.
முதல் நாள் அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள். அவர்கள் சோதனைக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். ஸ்வாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.
ஸ்வாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன. பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார். ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது. அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார். இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது.
அடுத்ததாக ஸ்வாமி ராமா தன் இதயத்துடிப்பையும் ஏற்றி இறக்கிக் காட்டினார். இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை. ஆனால் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்ட போது ஸ்வாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து வியப்பூட்டினார்.
பின்னர் உணவருந்துகையில் பேசுகையில் இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் ஆனால் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஆயத்தமாக வேண்டும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். ஆனால் அவருடைய குருகா ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார். (அவருடைய குருவைப் பற்றிக் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்). உபவாசம் இருந்து செய்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பைத் தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் என்று சொன்னார்கள். மறுநாள் ஸ்வாமி ராமா 16.2 வினாடிகள் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானவுடன் ஸ்வாமி ராமா அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார். எனவே மீண்டும் 1970ஆம் ஆண்டு இறுதியில் உரையாற்றவும், பரிசோதனைகளுக்காகவும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். ஒரு பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறித்த ஒரு வட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி (அதுவும் இங்கு காட்டப்பட்டுள்ளது) அவருக்குத் தரப்பட்டு இருந்தது. அதை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா அசைத்துக் காட்டினார்.
சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றியும் அந்த சக்ராக்களுக்கு சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதைக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். "கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் பொலொராய்டு காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன். முடியுமா?"
அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.
இந்த ஆராய்ச்சிகளில் முதல் மூன்றும் பரிசோதனைக் கூடத்தில் பல பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டவை. கடைசி அற்புத நிகழ்ச்சி பொதுக் கூட்டம் ஒன்றில் எல்லோர் முன்னிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆழ் மனதின் சக்திகள் செய்து காட்ட முடிந்த அற்புதங்கள் தான் எத்தனை!
மேலும் பயணிப்போம்...
(தொடரும்)
- என்.கணேசன்

Friday, November 6, 2009
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு
தன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை "மரணத்தின் வர்த்தகன் மரணம்" என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல் படித்துப் பார்த்தார்.
"மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட் நோபல் நேற்று காலமானார்" என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. "நான் இறந்த பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?" என்ற ஒரு கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.
அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும் மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் 'ப்ளைவுட்'டைக் கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார். (பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம் இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும் நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல் வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை. பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும், செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.
இத்தனை சாதனைகள், வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு "மரணத்தின் வர்த்தகன்" என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன் சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும் அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின் கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப் பெண்மணி எழுதிய "ஆயுதங்களைக் கைவிடுங்கள்" என்ற புத்தகம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்றது.
அந்தக் கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப் பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல் காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல் பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1901 முதல் ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம் ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு வைத்திருக்கிறது.
ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம். நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?
- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Monday, November 2, 2009
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9
நினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார்.
1973 நவம்பர் மாதத்தில் BBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர் தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார். யூரி கெல்லர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.
அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள், அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.
சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது. பரபரப்படைந்த ஜிம்மி "ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது.... என்னால் நம்ப முடியவில்லை" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.
அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக போன்கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல போன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக அங்கு பணிபுரிபவர் சொன்னார். பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் போன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.
நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.
அதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.
யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான் ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள். எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜேக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).
ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிக்கை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது. யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.
பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் "ட்ராவல்ஸ்" என்ற நூலில் "ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார். "என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத் தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ·போர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்".
"எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்".
"இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்திற்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மன ஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்".
"இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது"
எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. ஆனால் அவர் தான் மட்டுமல்லாமல் சிறுவர்களும் செய்ய முடிந்ததாகச் சொன்ன அந்த அற்புதச் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மேலும் பயணிப்போம்.....
-என்.கணேசன்
(தொடரும்)
நன்றி:விகடன்