Friday, June 19, 2009

எல்லைகள் இல்லா உலகம்!


மனிதனுடைய சாதனைகளுக்கு எல்லைகள் இல்லை. நேற்றைய எல்லைச்சுவர்கள் இன்றைய மைல்கல்களாய் உருமாறுவதை நாம் காண்கிறோம். ஒவ்வொரு காலத்திலும் எல்லை எனப்படுவது சாதனை மனிதர்களால் மேலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது. எனவே எல்லைகள் நிலையான இடத்தைப் பிடித்து நிற்க ஒருசில மனிதர்கள் அனுமதிப்பதில்லை. அந்த மனிதர்களே சரித்திரத்தின் திருப்புமுனைகளாக இருக்கிறார்கள். பாதைகள் இல்லா பிரதேசங்களில் முதல் பாதையைப் போட்டு மற்றவர்கள் தொடர வாய்ப்பளிக்கிறார்கள். இதுவும் முடியும் என்று செய்து காட்டி வளரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டுகிறார்கள்.

பிற்காலத்தில் அவர்களை சரித்திரமாகப் போற்றும் உலகம் சமகாலத்தில் அவர்களை அடக்கி வைக்கவே பார்க்கிறது. அவர்கள் சிறகுகளைக் கிள்ளவே முனைகிறது. 'எல்லோரையும் போல் நீயேன் இருக்க மறுக்கிறாய்?' என்று குமுறுகிறது. வித்தியாசப்படுவதை அத்துமீறலாக அர்த்தப்படுத்திக் கொள்கிறது. கண்டிப்பு, விமரிசனம், ஒதுக்கி வைத்தல், ஏளனம் செய்தல் என்று ஏகப்பட்ட கணைகளைத் தொடுத்து மகிழ்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்தும் மனிதர்கள் வாழ்ந்த சுவடில்லாமல் போய் விட, பொருட்படுத்தாமல் சாதிக்கும் மனிதர்களே காலத்தை வென்று சரித்திரமாகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை ரிச்சர்டு பாக் (Richard Bach) என்ற எழுத்தாளர் 'ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' (Jonathan Livingston Seagull) என்ற ஒரு அருமையான புத்தகமாக எழுதியுள்ளார். (முழுமையான அழகுடன் சொல்லப்பட்ட அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு இது இணையாகாது என்றாலும் கதைச் சுருக்கம் இது தான்.)

அது ஜொனாதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பறவையின் கதை. மற்ற எல்லா கடற்பறவைகளும் கரையிலிருந்து பறந்து செல்வதே உணவுக்காகத் தான். அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று மீன்களைக் கொத்திக் கொண்டு மீண்டும் வசிப்பிடத்திற்கு வந்து உண்டு வாழ்வது தான் அவை செய்யும் ஒரே வேலை. ஆனால் ஜொனாதனுக்கு நீண்ட தூரங்களுக்குச் செல்வதிலும், பறப்பதில் தன் வேகத்தைக் கூட்டுவதிலும், பறக்கும் போது பல வித்தைகளைச் செய்வதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது. பறப்பதில் அதற்கு எல்லையில்லாத ஆனந்தம். அதிலும் எத்தனையோ வலிகளும் அசௌகரியங்களும் அதற்கு இல்லாமல் இல்லை. ஆனால் அதையும் மீறி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய வித்தையைக் கற்றுக் கொள்வதிலும், பறக்கும் வேகத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொள்வதிலும் அது பேரானந்தத்தைக் கண்டது.

ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் செல்லாமல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி வராமல் ஜொனாதன் இருப்பது மற்ற பறவைகளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. முதலில் ஜொனாதனின் பெற்றோர் மூலம் புத்திமதி சொல்லிப் பார்த்தன. இப்படி வரைமுறை இல்லாமல் தொலைதூரங்களுக்குப் போவதும், மற்றவர்கள் யாரும் செய்யாத வித்தைகளை செய்து பார்ப்பதும் தவறு, முட்டாள்தனம், ஆபத்தானது என்று ஜொனாதனுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஜொனாதனுக்கு அவர்கள் சொல்வது சரியே என்று கூடத் தோன்றியது. சில நாட்கள் மற்ற பறவைகளைப் போலவே ஜொனாதனும் இருந்து பார்த்தது. ஆனால் அந்த நாட்களில் அதற்கு சிறிதும் சந்தோஷம் இருக்கவில்லை. ஏதோ இழந்தது போல ஒரு சோகம். அதனால் தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. எல்லைகளை சுருக்கிக் கொள்ளப் பிரியப்படாத ஜொனாதன் ஒரு நாள் மறுபடி தனது பயணத்தை மேற்கொண்டது. எப்போதையும் விட அதிக உயரத்தில் அதிக வேகத்தில் வானில் பறந்தது. கீழே எல்லாமே புள்ளிகளாய் தெரிய, பரந்த ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த அந்தக் கணம் தான் வாழும் கணமாக அதற்குத் தோன்றியது. சூரியாஸ்தமனம் முடிந்து நிறைய நேரம் கழித்துத் திரும்பியது.

அது திரும்பி வந்த போது மற்ற பறவைகள் கூடி அதை ஒதுக்கி வைக்கத் தீர்மானித்தன. பொறுப்பும், கட்டுப்பாடும் இல்லாத ஜொனாதனுக்குத் தங்கள் மத்தியில் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தன. 'வெறுமனே உண்டு மடிய நாம் பிறக்கவில்லை. புதிது புதிதாய் கற்கவும், கண்டுபிடிக்கவும், சாதிக்கவும் தான் நாம் பிறந்திருக்கிறோம். எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். நான் என்னவெல்லாம் கற்றிருக்கிறேன், கண்டு பிடித்திருக்கிறேன் என்று காட்டித்தருகிறேன்" என்று ஜொனாதன் மன்றாடியது. மற்ற பறவைகள் அது சொல்லும் எதையும் கேட்கத் தயாராய் இல்லை.

ஜொனாதன் வருத்தத்துடன் மற்ற பறவைகளைப் பிரிந்து சென்றது. அது மீண்டும் தொடுவானத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தது. வெகுதூரம் சென்ற பிறகு அது தன்னைக் காட்டிலும் அதிகத் திறமை வாய்ந்த இரண்டு கடற்பறவைகளை சந்தித்தது. அவைகள் அதனிடம் "நீ சிலவற்றைக் கற்றுத் தேர்ந்து விட்டாய். ஆனால் கற்பதற்கு எல்லையில்லை. நீ கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது." என்று சொல்லி இன்னொரு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றன. ஜொனாதன் இன்னும் புதிய புதிய திறமைகளைக் கற்றுத் தேர்ந்தது. அந்தக் கூட்டத்திலேயே திறமை மிக்க பறவையாய் ஆனது.

காலம் பல கழிந்த பின் ஒருநாள் அது தன் பழைய பறவைக் கூட்டத்தை வருத்தத்துடன் நினைத்துப் பார்த்தது. இப்போது உள்ள கூட்டத்தின் முன்னேற்றத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பழைய பறவைக் கூட்டத்திடம் இல்லாததை எண்ணிப் பார்த்து ஒரு முறை அங்கு சென்று வருவதாக மற்ற பறவைகளிடம் கூற "உன்னை வெறுத்து ஒதுக்கிய கூட்டத்திற்கு ஏன் செல்கிறாய்?" என்று அவை கேட்டன. "இல்லை. என்னைப் போலவே ஏதாவது ஒரு பறவை அந்த அர்த்தமற்ற வாழ்க்கையில் வெறுப்படைந்து, மாறவும் வழி தெரியாமல், கற்றுக் கொடுக்கவும் ஆளில்லாமல் அங்கு சோர்ந்திருக்கக் கூடும். அப்படியொரு பறவை இருந்தால் அதற்கு உதவ நினைக்கிறேன்"

ஜொனாதன் பழைய கூட்டத்தருகே வந்து பார்த்த போது அப்படியொரு பறவை தனிமைப்படுத்தப்பட்டு தன்னம்பிக்கை இழந்து தாழ்வுமனப்பான்மையோடு சோகமாக இருக்கக் கண்டது. ஜொனாதன் அதை அழைத்துச் சென்று பொறுமையுடன் தான் கற்றதை எல்லாம் சொல்லித் தருகிறது. கடைசியில் அந்தப் பறவையும் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து ஒரு பேருண்மையை உணர்கிறது. "உண்மையில் எல்லைகளே இல்லை. மனமே எல்லைகளை உருவாக்குகிறது". இப்படி பற்பல பறவைகளுக்குக் கற்றுத் தர புதியதொரு தலைமுறை உருவாகிறது....

இந்தக் கதையைப் பிரசுரிக்க ஆரம்பத்தில் எந்தப் பிரசுரமும் முன் வரவில்லை. கடைசியில் ஒரு பிரசுரம் பிரசுரிக்க முன்வர இப்புத்தகம் மிகப் பிரபலமாகி பல பதிப்புகள் கண்டது. கதையை நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான ஜொனாதன் கடற்பறவைக்கு ரிச்சர்ட் பாக் அர்ப்பணித்துள்ளார். (To the real Jonathan Seagull, who lives within us all.)

அவர் நம்பும்படி நமக்குள்ளும் ஒரு ஜொனாதன் கடற்பறவை வாழ்கிறதா? நம்முள் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா? உள்ளே ஒலிக்கும் அந்த ஆத்மாவின் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோமா? வாழ்க்கையில் அர்த்தமும் அழகும் காண்கிறோமா? இல்லை, நாம் எந்திரங்களாக மாறி விடுகிறோமா? சமூகம் ஒரே வார்ப்பில் எல்லோரையும் ஒரு போலவே வார்த்து விடச் செய்யும் முயற்சி நம் விஷயத்திலும் வெற்றி பெறுகிறதா?.... சிந்திப்போமா?

- என்.கணேசன்

6 comments:

  1. ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. - மனோ

    ReplyDelete
  2. "உண்மையில் எல்லைகளே இல்லை. மனமே எல்லைகளை உருவாக்குகிறது".

    ReplyDelete
  3. நல்ல அற்புதமான வரிகள். ஒரு அருமையான புத்தக அறிமுகம் கணேசன். வாழ்க. :)

    ReplyDelete
  4. Thanks for indrodcuing new book...Really nice..Ganesan..

    ReplyDelete
  5. Thanks sir for writing about the book...its really helpful

    ReplyDelete
  6. -ராமமூர்த்திJune 21, 2009 at 9:59 AM

    ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்க முடியாதவர்களுக்கு இப்படிப்பட்ட அறிமுகம் மிகவும் பயன்படும் ஐயா. நன்றி. -ராமமூர்த்தி

    ReplyDelete