Friday, May 15, 2009

முப்பகுதியையும் முழுதாய் வாழ்க


நம் முன்னோர் மனித வாழ்க்கையை நான்காய் பிரித்திருந்தார்கள். அவை
1) பிரம்மச்சரியம்
2) கிரஹஸ்தம்
3) வனப்ரஸ்தம்
4) சன்னியாசம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் இந்த வாழ்க்கை முறை இன்றைக்கும் அர்த்தமுள்ளதாகவே, பொருத்தமானதாகவே இருக்கிறது.

பிரம்மச்சரியம் முக்கியமாய் விளையாட்டு மற்றும் கல்வி கற்கும் பருவம்.

கிரஹஸ்தம் இல்லறம் மற்றும் பொருளீட்டும் பருவம்.

வனப்ரஸ்தம் வாழ்க்கையின் சந்தடிகளிலிருந்து விலகி காடுகளுக்கு தம்பதி சமேதராகச் சென்று இயற்கை சூழ்நிலைகளில் அமைதியாக வாழும் பருவம். அன்று போல் இன்றைக்கு காடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஓய்வு பெற்று அமைதியாகக் கழிக்கும் காலமிது.

சன்னியாசம் துறவறம் பூணும் கடைசிநிலை. அன்றைய காலங்களில் கூட இது கட்டாயமாக்கப்படவில்லை. முதல் மூன்று நிலைகளையும் முறையாகக் கழித்த மனிதன் தானாக இந்த நிலையை அடைவான் என்று நம் முன்னோர் கருதினார்கள். பலர் இந்த சன்னியாச நிலையை அடையா விட்டாலும் அது குற்றமாகக் கருதப்படவில்லை. பூவாகி, காயாகி, கனியாகிப் பின் தானாக உதிரும் பழத்தின் தன்மையைப் போல தானாக ஏற்படக் கூடிய நிலை என்றே துறவு இருந்தது.

அந்தக் கடைசி நிலை கட்டாயமானதல்ல, இயல்பாய் தானாய் ஏற்படக்கூடியது என்பதால் இந்தக் காலத்திற்கும் அதை நாம் முக்கியமாகக் கருத வேண்டியதில்லை. மற்ற மூன்று பகுதிகளை மட்டும் முக்கியமானதாக எடுத்துக் கொள்வோம்.

இன்றைய காலக் கட்டத்தில் முதல் இரண்டு பகுதிகளே வாழப்படுகின்றன. அதுவும் அரைகுறையாகவே வாழப்படுகின்றன. முதல் பகுதியான விளையாட்டு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் விளையாட்டு பெருமளவு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின் இன்றைய குழந்தைகளுக்கு விளையாட்டு மிகக் குறைந்து விடுகிறது. அதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நேரம் கிடைத்தாலும் இன்றைய பெற்றோர்கள் சம்மர் க்ளாஸ், ஸ்பெஷல் க்ளாஸ் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். முதல் கட்டத்தில் கல்வியே பிரதான இடத்தைப் பிடித்து விடுகிறது.

இரண்டாவது கட்டம் இளமையின் சந்தோஷங்கள் முழுவதுமாக அனுபவிக்கப் பட வேண்டிய காலம். ஒருவன் நன்றாகப் பொருளீட்டும் காலம். இன்றைய காலத்தில் இரண்டையும் ஒருசேர மிகச் சரியாகச் செய்பவர்கள் குறைவு. அனுபவிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி உழைத்துப் பொருளீட்டுவதில் கோட்டை விடும் கூட்டம் இருக்கிறது. அதே போல் பொருளீட்டும் முனைப்பிலேயே இளமையை அனுபவிக்காமல் தொலைத்து விடும் கூட்டமும் இருக்கிறது. எல்லாமே ஒரு அவசரகதியில் நிகழ எந்திரத்தனமாக வாழ்க்கையை நகர்த்தித் தொலைக்கும் ஒரு அவலம் இன்றைய மக்களிடம் அதிகம் இருக்கிறது.

மூன்றாம் கட்டத்திற்குப் பெரும்பாலானோர் வருவதேயில்லை. ஓய்வு வேலையிலிருந்து கிடைத்தாலும், மனிதனின் பொருளீட்டும் ஆசையிலிருந்து கிடைப்பதில்லை. இன்னும் இன்னும் என்று தணியாத தாகத்தோடு தேடுகிறார்களே ஒழிய மனதார ஓய்வு பெறுபவர்கள் குறைவு. வியாபாரமும், அரசியலும் ஓய்வு பெற விடுவதில்லை. வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும் வேறு ஏதோ வேலையைத் தேடிக் கொண்டு பலர் ஓடுகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர் கோடீசுவரர். அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும் போது அவருக்குக் கை நிறையப் பணமும் கிடைத்தது. உட்கார்ந்து தின்றாலும் அவர் சொத்தை மூன்று தலைமுறைகளுக்கு அழிக்க முடியாது. ஆனால் ஓய்வு பெற்றவுடன் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக ஒரு வேலையை எடுத்துக் கொண்டு அவர் ஆட்களை இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வைக்கப் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஓயாமல் அலைந்தபடியே இன்னும் இருக்கிறார். அவர் அமைதியான மூன்றாம் கட்ட வாழ்வை சுகிக்கப் போவதே இல்லை.

ஒவ்வொரு கால கட்டமும் மனித வாழ்க்கையில் முக்கியமானவை. அந்தந்த கட்டத்தின் சந்தோஷங்களை அந்தந்த கட்டத்திலேயே முழுமையாக அனுபவிப்பது புத்திசாலித்தனம். ஒரு கட்டத்தில் வாழாதவற்றை அவன் அடுத்த கட்டத்தில் பச்சாதாபத்துடன் நினைத்துப் பார்க்க முடியுமே தவிர அனுபவித்து ஆனந்தப்பட முடியாது. மேலும் முழுமையாக அனுபவித்து முடியாத கட்டத்தின் தாக்கம் மற்ற கட்டங்களிலும் வந்து அந்தக் கட்டத்தையும் முழுமையாக அனுபவிக்க விடாமல் தொந்திரவு செய்து கொண்டே இருக்கும் என்பது மனோதத்துவ அறிஞர்களின் உறுதியான கருத்து.

முறையாக முழுதாக விளையாட்டுப் பருவத்தைக் கழிக்காத எத்தனையோ பேர் மேலான நிலைகளுக்கு வந்த பின்னரும் கூட சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக மனவியல் அறிஞர்கள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். இல்லறத்தை மனதாரத் துறக்காமல் ஒரு அவசரத்தில் அல்லது கட்டாயத்தில் துறவியானவர்கள் காமக் களியாட்டங்களில் ஈடுபடும் தினசரி செய்திகளும் நமக்குப் புதிதல்ல.

ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக வாழ முடிந்தவர்கள், வாழ்ந்து முடித்தவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்லப் பக்குவப்பட்டு விடுகிறார்கள். அரைகுறையாக எதையும் விட்டு வைக்காததால் அவர்கள் முதல் கட்டத்திற்குரிய மனக்கிலேசங்களை அடுத்த கட்டத்தில் அனுபவிப்பதில்லை. அவை அடுத்த கட்ட செயல்களைப் பாதிப்பதில்லை.

நம் முன்னோரின் வாழ்க்கை முறையில் செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட உணர்வுகள் அதிகம் இடம் பெற்றதில்லை. இயற்கையை ஒத்து வாழ்ந்த அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையாக இருந்த உணர்வுகளை எளிதாகத் திருப்திபடுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்றோ இயற்கையை விட செயற்கை அதிகம் வியாபித்திருப்பதால் அதைத் திருப்திப் படுத்திக் கொள்ள எல்லையில்லாமல் போராட வேண்டி இருக்கிறது. உதாரணத்திற்கு இயற்கையான காமத்தை எளிதாகத் திருப்திப் படுத்திக் கொண்டு அமைதியுற முடியும். கற்பனைகளுடன் கூடிய வக்கிரங்களும் சேர்ந்த காமம் எந்தக் காலத்திலும் திருப்தி அடைய முடியாத நோயாகவே தங்கி விடும். பொருளீட்டுவதும் அப்படியே. தேவையான அளவு பொருளை ஈட்டுவது திறமையும் உழைப்பும் உள்ள மனிதனுக்கு எளிதே. ஆனால் அடுத்தவர்களை விட அதிகம் வேண்டும் என்ற செயற்கையான உந்துதல் இருந்தால் எத்தனை பெற்றாலும் அது போதுமாவதில்லை.

நிறையவே பொருளீட்டிய பின்னும் இளைய தலைமுறைக்கு வழி விட்டு, நிறைவுடன் அடுத்த கட்டமான அமைதியான வாழ்வுக்கு நகர முடியாமை இன்னொரு வித வியாதி. சாகும் வரை அரங்கத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என்று அடம்பிடித்துப் போராடும் வியாதி. அந்தக் காலத்தில் சக்கரவர்த்திகள் கூட வாரிசுகளுக்கு ஆட்சியைத் தந்து விட்டு வனப்ரஸ்தம் செல்வது ஒரு இயல்பான விஷயமாக இருந்தது. மனதை அமைதிப்படுத்தும் உயர்ந்த சிந்தனைகளுடன் அகம்பாவத்திற்குத் தீனி போடாத இயற்கை சூழ்நிலைகளில் வாழ்வது வயதான காலத்தில் சிறப்பே அல்லவா? இன்றைய காலத்திற்குப் பொருத்தமாகச் சொல்ல வேண்டுமானால் எளிய வாழ்க்கை, அமைதியான சூழ்நிலை, பிடித்தமான பொழுது போக்குகள், ஆரவாரமோ அவசரமோ இல்லாத வாழ்க்கை ஓட்டம் என்று வாழ்வது முதுமைக்கு ஏற்ற சிறப்பான முறை அல்லவா? அது தரும் அமைதிக்கு இணை வேறெது இருக்க முடியும்?

இந்த வாழ்க்கை முறை அமைய முடியாத சிக்கல்கள் சிலருக்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொள்கிறேன். விளையாட்டுப் பருவத்திலேயே வேலை பார்த்துப் பிழைக்க வேண்டியிருக்கும் குழந்தைகள், வயோதிக காலத்திலும் குடும்பத்தைக் காக்க உழைக்க வேண்டியிருக்கும் முதியவர்கள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் விதிவிலக்குகள்.

பொதுவான மற்றவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையாக வாழப்பாருங்கள். ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்தை சொருகப் பார்க்காதீர்கள். விளையாடுகையில் முழுமையாக விளையாடுங்கள். படிக்கையில் முழு மனதோடும் கவனத்தோடும் படியுங்கள். இல்லற சுகங்களை இயல்பாக ஆழமாக அனுபவியுங்கள். நன்றாக உழைத்து சம்பாதியுங்கள். கடைசி காலத்தை இயற்கையை ரசித்துக் கொண்டோ, இசையை ரசித்துக் கொண்டோ, மிகவும் பிடித்த நற்செயல்கள், பொழுது போக்குகளில் ஈடுபட்டுக் கொண்டோ அமைதியாக நிறைவுடன் வாழ முயலுங்கள். அப்படிச் வாழ்ந்தீர்களேயானால் மரணத் தருவாயில் நீங்கள் பச்சாதாபம் கொள்ள எதுவும் இருக்காது. மனநிறைவுடன் இந்த உலகத்திலிருந்து நீங்கள் விடை பெற முடியும்.

-என்.கணேசன்

11 comments:

  1. arumaiyaana katturai

    ReplyDelete
  2. முன்பு எப்போதோ படித்த இந்த நான்கு வகை வாழ்க்கை முறைகள் பற்றி, மிக அருமையாய் சொல்லியிருக்கீங்க !நன்றி

    ReplyDelete
  3. அருமையான பதிவு..

    //சாகும் வரை அரங்கத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என்று அடம்பிடித்துப் போராடும் வியாதி. //

    எதையோ நினைவு படுத்துகிறது...

    உங்களது எழுத்துக்கு, விசிறி ஆகி வருகிறேன் :)

    ReplyDelete
  4. விளையாடுகையில் முழுமையாக விளையாடுங்கள். படிக்கையில் முழு மனதோடும் கவனத்தோடும் படியுங்கள். இல்லற சுகங்களை இயல்பாக ஆழமாக அனுபவியுங்கள். நன்றாக உழைத்து சம்பாதியுங்கள். கடைசி காலத்தை இயற்கையை ரசித்துக் கொண்டோ, இசையை ரசித்துக் கொண்டோ, மிகவும் பிடித்த நற்செயல்கள், பொழுது போக்குகளில் ஈடுபட்டுக் கொண்டோ அமைதியாக நிறைவுடன் வாழ முயலுங்கள்.

    arumai sir

    ungal pathivugal migavum arumai sir

    ReplyDelete
  5. //அன்று போல் இன்றைக்கு காடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. //

    அதுதா வயோதிபர் இல்லங்கள வலுக்கட்டாயமாக கொண்டு போயி தள்ளுறாங்களே,
    இதவிட அது எவ்வளவோ உயர்ந்ததுங்க.

    ReplyDelete
  6. Thank you very much to publish this useful articles...All the articles in your blog are very useful to every one... And I request u to publish all the articles in the form of Book.... (It's my wish...)

    ReplyDelete
  7. ஓய்வுபெற்றபின்னரும் பணிசெய்பவரைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். பணத்துக்காப் பணிபுரிவது ஒன்று; பலனில் பற்றுவைக்காமல் பணிபுரிவது மற்றொன்று. வனப்ரஸ்தம் என்பது ஒதுங்கி இருப்பது. ஒட்டாமல் இருப்பது. விளாம்பழத்து ஒடுபோல ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது என்பது என் கருத்து.

    ReplyDelete
  8. //இயற்கையான காமத்தை எளிதாகத் திருப்திப் படுத்திக் கொண்டு அமைதியுற முடியும். கற்பனைகளுடன் கூடிய வக்கிரங்களும் சேர்ந்த காமம் எந்தக் காலத்திலும் திருப்தி அடைய முடியாத நோயாகவே தங்கி விடும். பொருளீட்டுவதும் அப்படியே.// அடி வாங்கினேன்.
    //பூவாகி, காயாகி, கனியாகிப் பின் தானாக உதிரும் பழத்தின் தன்மையைப் போல தானாக ஏற்படக் கூடிய நிலை என்றே துறவு இருந்தது.// நல்லது. வெம்பிப்போகாமல் பழுத்து கனியாக மாறுவேனாக.

    அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  9. சுந்தர்January 3, 2011 at 7:19 PM

    அருமையாக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  10. nalla katturai.
    ungallukku yen manamarntha
    nanri.

    ABISHEK.AKILAN...

    ReplyDelete
  11. Well said about life !!!
    thanks for sharing this article

    ReplyDelete