Wednesday, May 6, 2009

வாக்காளர்களே சிந்திப்பீர்!


ப்போதெல்லாம் தேர்தலில் ஜெயிப்பது எந்தக் கட்சியென்றாலும் தோற்பது பொது மக்கள் தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. யாரிடம் தோற்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை தான் வாக்காளர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் என்பதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் உணராததால் தான் இந்த கவலைக்கிடமான நிலை. சுதந்திரத்திற்கு முன் நெஞ்சு பொறுக்குதிலையே என்று பாரதி மனம் பதைத்துப் பாடிய வரிகள் சுதந்திரம் வாங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் நம் மக்கள் விஷயத்தில் பொருத்தமாகவே இருக்கிறது.

தந்த பொருளைக் கொண்டே- ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்

என்று பாரதி பாடியது போல நம் வரிப்பணத்தை வைத்து தான் அரசாங்கமே நடக்கிறது. ஆனால் அதை உணராமல், அரசியல்வாதிகள் என்றால் வானளவு அதிகாரம் கொண்டவர்களாக நினைக்கும் மனோபாவம் பலருக்கும் உள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் என்கிற உண்மை மறந்து தங்களை ஆளும் தலைவர்கள் என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் தன்மை அடிமட்ட மக்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த பயத்திற்கு இணையாக ஞாபகமறதி என்னும் சாபக்கேடும் மக்களிடம் காணப்படுவதால் தான் மோசமான அரசியல்வாதிகள் தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் தாங்கள் பெற வேண்டிய எதையும் பெறாமல் தோல்வி அடைகிறார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்குச் சேர வேண்டிய எல்லாச் செல்வங்களையும் தங்கள் தனிப்பட்ட கஜானாக்களுக்கு கொண்டு சேர்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

லஞ்சம், ஊழல், அராஜகம் எல்லாம் இன்று தலைவிரித்தாடும் போதும் பெரும்பாலான பொதுமக்கள் எல்லாம் விதியென்று அவற்றை விரக்தியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். 'ரௌத்திரம் பழகு' என்றான் பாரதி. இந்த தேசத்தில் ஒன்றுமில்லாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபப்படும் மக்களுக்கு இது போன்ற முக்கிய விஷயங்களுக்கு கோபம் கொஞ்சமும் வருவதில்லை. அதனால் தான் எதையும் செய்யலாம், நம்மை யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது என்ற அபார தைரியம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கிறது.

’அவன் சம்பாதித்து விட்டுப் போகட்டும், நமக்கென்ன, நாமா தருகிறோம்’ என்கிற அளவில் தான் சாமானியனின் அறிவு வேலை செய்கிறது. ஐயா அவன் வசூல் செய்வதே உங்களைக் கொள்ளை அடிக்கும் பணத்தில் ஒரு பங்கு கமிஷன் தான். அவன் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிப்பது கமிஷன் மட்டுமே என்றால் உங்களுக்கு வந்திருக்க வேண்டியிருந்தும் வராமல் கொள்ளை அடிக்கப்படும் பணம் எத்தனை லட்சம் கோடிகளாக இருக்கும் என்று சிந்திப்பீர். நாட்டில் தரித்திரவாசிகள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் இவர்கள் சம்பாத்தியமோ ஆயிரம், லட்சம் கோடிகளில் எகிறுகிறது.   இதைப் பார்த்தும் சுரணை இல்லாமல் இருப்பது பெருங்குற்றம் அல்லவா? அடிமட்ட முட்டாள்தனம் அல்லவா?

இது தான் இன்றைய சூழ்நிலை வாக்காளப் பொது மக்களே!

தேர்தல் என்பது ஒன்று தான் நமக்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பம். அந்த ஒரு நேரத்தில் தான் அரசியல்வாதிகள் நம்மைத் தேடி வருகிறார்கள். பின் வரும் ஐந்தாண்டு காலங்கள் நாம் அவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும். அப்படி ஓடித் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட்டார்கள். எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தைக் கோட்டை விடாமல் தெளிவாக இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும்.

நம் வீட்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுப்போம். "என்னமாய் பேசறான்" என்று பேச்சைப் பார்த்து தேர்ந்தெடுப்போமா, நன்றாக நமக்கு உழைப்பவனைத் தேர்ந்தெடுப்போமா? அவனுக்குத் தகுதி இருக்கிறதா, அவன் பழைய சரித்திரம் என்ன என்று பார்ப்போமா, பார்க்க மாட்டோமா? நம் வீட்டில் திருடியதில் ஒரு சில்லறைத் தொகையை நமக்கே இனாமாய் கொடுத்தால் சந்தோஷமாய் அவனை இருத்திக் கொள்வோமா? நம் வீட்டு விஷயத்தில் அறிவுபூர்வமாகச் செயல்படும் நாம் நம் நாட்டு விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி செயல்படுவதில்லை? பேச்சைப் பார்க்கிறோம், ஜாதியைப் பார்க்கிறோம், மதத்தைப் பார்க்கிறோம் அந்த மனிதர் நன்றாக, நாணயமாக நாட்டு மக்களுக்காக உழைப்பாரா என்று மட்டும் ஏன் பார்க்க மறக்கிறோம்?

வாக்காளர்களே, எங்கள் தாத்தா காலம் முதல் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டு போட்டார்கள் என்றும் இனி நானும் இப்படித்தான் போடுவேன் என்றும் சொல்லும் பைத்தியக்காரத்தனம் உங்களிடம் இருந்தால் அதை முதலில் விட்டொழியுங்கள். இந்த அடிமை சாசனம் நல்லதல்ல.

நான் ஒருவன் ஓட்டுப் போட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைக்காதீர்கள். உங்களைப் போல் நினைத்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை பெரும்பாலான வெற்றி வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. உங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் எத்தனையோ தேர்தல்களில் நாட்டின் தலைவிதியையே மாற்றியிருக்கலாம்.

ஒரு ஆட்சியை மதிப்பிடுகையில் கடைசி சில மாதங்களை மட்டும் பார்க்காமல் ஆட்சிக்காலம் முழுவதையும் பரிசீலியுங்கள்.

இலவசமாக யார் என்ன தருகிறார்கள் என்று பிச்சைக்காரர்களாக கணக்குப் போடாமல் யாரிடமும் கையேந்தாமல் வாழும் வண்ணம் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் எதாவது செய்வார்களா என்று பார்த்து ஓட்டுப் போடுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சைக் கொண்டோ, தேர்தல் அறிக்கைகள் கொண்டோ தீர்மானிக்காமல் அவர்களது முந்தைய செயல்பாடுகள், சாதனைகளை வைத்து தீர்மானியுங்கள். எல்லாருமே மோசமானவர்கள், இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வந்தால் கூட இருப்பதில் குறைந்த மோசத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் மூலம் மோசமான விளைவுகளையும் குறைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- என்.கணேசன்


9 comments:

  1. NALLA PATHIVU

    YOSIKA VENDIYA PATHIVU

    YOSIPARGALA NAM MAKKAL

    ReplyDelete
  2. நம் வீட்டு விஷயத்தில் அறிவுபூர்வமாகச் செயல்படும் நாம் நம் நாட்டு விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி செயல்படுவதில்லை? பேச்சைப் பார்க்கிறோம், ஜாதியைப் பார்க்கிறோம், மதத்தைப் பார்க்கிறோம் அந்த மனிதர் நன்றாக, நாணயமாக நாட்டு மக்களுக்காக உழைப்பாரா என்று மட்டும் ஏன் பார்க்க மறக்கிறோம்?

    A good question to ask ourselves.

    ReplyDelete
  3. நல்ல பதிவு , யோசிக்க மட்டும் இன்றி சீந்திகவும் வைத்த பதிவு நன்றி ஐயா .

    ReplyDelete
  4. நல்ல பதிவு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. அண்ணா,
    இது அவசியமான ஓன்று . நண்பர்களிடம் பகிரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் . அனுமதி தாருங்கள் ..... நன்றி

    ReplyDelete
  6. இலவசமாக யார் என்ன தருகிறார்கள் என்று பிச்சைக்காரர்களாக கணக்குப் போடாமல் யாரிடமும் கையேந்தாமல் வாழும் வண்ணம் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் எதாவது செய்வார்களா என்று பார்த்து ஓட்டுப் போடுங்கள்.
    ungal pala message vazhekkaian nejam.
    asathunga brother.
    Abishek.Akilan.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Sir, Best among the worst? or NOTA?.. Please clarify.

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு NOTA வை விட. இருப்பதில் நல்லவரைத் தேர்ந்தெடுப்பதே பயன்படும் என்று நினைக்கிறேன்.

      Delete