வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கிறோம். அந்த உயரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. மிக அழகான மலர்ச்செடிகளைப் பார்க்கிறோம். அதன் அழகு நம்மை மெய் மறக்க வைக்கிறது. அதையெல்லாம் புகைப்படம் எடுத்து அழகு பார்க்கிறோம். கவிதைகள் எழுதி ஆராதிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள், செடிகொடிகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ள வேர்கள் நம்மால் காணப்படுவதில்லை. நம்மால் அதிகம் பேசப்படுவதும் இல்லை. ஆனாலும் அந்த வேர்கள் இல்லாமல் மரங்கள் இல்லை, மலர்கள் இல்லை, கனிகள் இல்லை, காய்கள் இல்லை. ஏன், சொல்லத்தக்க எதுவுமே இல்லை.
மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சிவாஜியின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்தது அவர் அன்னை ஜீஜாபாய் தான் என்பது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். மகாத்மா காந்தியின் ஒப்பற்ற நற்குணங்களுக்கு அஸ்திவாரம் போட்டது அவருடைய தாய் புத்லிபாய் என்பதில் சந்தேகமில்லை. பழைய சரித்திரங்களை உதாரணம் காட்டுவானேன். இன்று இசையில் இரண்டு ஆஸ்கர் விருது வாங்கி சரித்திரம் படைத்த ஏ.ஆர்.ரஹ்மானே கூட அந்த விழா மேடையில் இறைவனுக்கும் தனது தாயார் கரீமா பேகத்திற்கும் சமர்ப்பிப்பதாகச் சொன்னார். தரித்திரத்திலிருந்து சரித்திரத்துக்கு வந்த அந்த சாதனை நாயகன் தன் நெடும்பயணத்தில் தன் தாயின் பங்கை உணர்ந்தே அப்படிச் சொன்னதாகத் தோன்றுகிறது.
அடிமட்ட மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் குடும்பத்தலைவிகளின் பங்கு அளவிட முடியாதது. கணவர் மட்டுமே சம்பாதிக்கிறவர் என்றால் அந்த வருமானத்தில் பார்த்துப் பார்த்து குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. தானும் வேலைக்குப் போகிறவர் என்றால் வீடு ஆபிஸ் இரண்டையும் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. குழந்தைகளை வளர்த்து, கல்வியைக் கொடுத்து பெரிதாக்க அவர்கள் படும் கஷ்டங்களும், தியாகங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் குடும்பங்களில் இருந்து உயர்நிலைக்கு வருபவர்களின் வேர்கள் அந்தப் பெண்மணிகள் என்பதில் சந்தேகமில்லை.
வெற்றிகரமான சந்தோஷமான குடும்பங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்திருப்பீர்களேயானால் அந்த வெற்றிக்கும், சந்தோஷத்துக்கும் ஆணிவேராக இருப்பது அந்த குடும்பத்தலைவி தான் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு குடும்பத்தில் குழந்தைகளிடம் நற்பண்புகள் பூத்துக் குலுங்குகின்றனவா? அதன் வேர் அவர்களின் தாயாகத் தான் இருக்க முடியும். பணத்தையும், வசதி வாய்ப்புகளையும் குடும்பத்தலைவன் ஏற்படுத்தித் தர முடியும். ஆனால் குணத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது அந்தக் குடும்பத் தலைவியைப் பொறுத்தே இருக்கிறது.
இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த குடும்பத்தலைவிகள் பெரும்பாலானோரிடம் இன்றைய காலகட்டத்தில் ஒரு அலட்சியத்தை அல்லது குறைபாட்டைக் காணமுடிகிறது. குழந்தைகள் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் அவர்கள், அதற்காக எத்தனையோ தியாகங்கள் செய்யும் அவர்கள் குழந்தைகளின் நற்குணங்களுக்கு முக்கியத்துவம் தரத் தவறிவிடுகிறார்கள். மகனோ, மகளோ பரீட்சையில் மதிப்பெண் குறைவாக வாங்கினால் சீறுகிற அவர்கள், தங்களின் பிள்ளைகளின் ஒழுக்கக் குறைபாட்டையும், தவறான குணாதிசயங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். கண்டிக்கத் தவறிவிடுகிறார்கள். பிள்ளைகளின் மதிப்பெண்கள் அளவுக்கு, பண்புகள் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது இல்லை. உணர்வதும் இல்லை.
மகனோ மகளோ பெரிய இஞ்சீனியராக வேண்டும், டாக்டராக வேண்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும், பெரும் சம்பாதனை செய்ய வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்ப்பவர்கள், எல்லாவற்றிற்கும் முன்னால், அடிப்படையாக நல்ல மனிதனாக வேண்டும் என்று வலியுறுத்தத் தவறிவிடுகிறார்கள். அதன் விளைவாய் தான் அவர்கள் நினைத்தபடியெல்லாம் பதவி பெறும் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு
அனுப்புவதில் எந்த உறுத்தலும் இல்லாதிருக்கிறார்கள். நல்ல மனிதர்களாக இருக்கத் தவறிவிடுகிறார்கள். சமுதாயத்தின் நோய்க் கிருமிகளாக மாறி விடுகிறார்கள். அவர்கள் பெற்றோருக்கும் உபயோகமாக இருப்பதில்லை. நாட்டுக்கும் உபயோகமாக இருப்பதில்லை.
தாய்மார்களே, குழந்தைப் பருவம் தான் விதைக்கும் பருவம். அந்தக் கால கட்டத்தில் அவர்கள் மனதில் நீங்கள் எதையும் விதைக்க முடியும். அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் நீங்கள் எதையும் எழுத முடியும். அந்த சமயத்தில் அவர்களிடம் நல்லதை விதைக்க முடிந்தால், பிற்காலத்தில் எந்த சேர்க்கையும் அவர்களை தீயதாக மாற்றி விட முடியாது.
பிஞ்சுப்பருவத்தில் நற்குணங்கள் முக்கியம் என்பதை அவர்கள் மனதில் பதியுங்கள். கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம் என்பதைப் பதியுங்கள். முக்கியமாக அதற்கெல்லாம் உதாரணமாக இருந்து காட்டுங்கள். உங்கள் வார்த்தைகளை விட உங்கள் நடவடிக்கைகள் அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். சுற்றிலும் உள்ளதில் இருந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்கள் குழந்தைகளுக்குப் புரியும்.
ஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்வில் தன்னைச் சுற்றிலும் அன்பும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போதெல்லாம் அன்பைத் தேர்ந்தெடுத்ததால் அந்த நிலைக்கு வந்ததாய் சொன்னார். அப்படித் தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை, தாய்மார்களே, உங்கள் குழந்தைகளிடம் ஏற்ப்படுத்துங்கள். முக்கியம் என்று சிறுவயது முதல் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்களை உங்கள் குழந்தைகள் என்றும் அலட்சியம் செய்வதில்லை.
மகிழ்ச்சியாகவும், நற்குணங்களுடனும் வளரும் குழந்தைகள் தீவிரவாதிகள் ஆவதில்லை. அடுத்தவர்களுக்கு உபத்திரவம் செய்வதில்லை. தங்கள் திறமைகளையும், அறிவையும் கண்டிப்பாக சமூக நன்மைக்காகவே பயன்படுத்துவார்கள். எனவே குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழ்நிலைகளை ஏற்படுத்துங்கள். நல்லதை உங்கள் குழந்தைகள் செய்யும் போதெல்லாம் பாராட்டி ஊக்குவியுங்கள். தைரியப்படுத்துங்கள். அவர்களது பள்ளி மதிப்பெண்களை மட்டுமே பார்த்து வாழ்க்கையில் மதிப்பெண்களை இழந்து போக விட்டுவிடாதீர்கள்.
பெண்களே நீங்கள் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து விட்டீர்கள். ஒரு கால கட்டத்தில் சமையலறையில் முடங்கிக் கிடந்த நிலை இன்று இல்லை. இன்று உங்கள் எல்லைகளை உலகளவு விரித்து விட்டீர்கள். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் வகித்த, வகிக்கிற, வகிக்கப்போகிற எல்லாப் பதவிகளிலும் மிக முக்கியமான பதவி தாய்மை. பெற்றால் தான் என்று இல்லை. ஒரு குழந்தையை வளர்த்தாலும் நீங்கள் தாயே. அந்தத் தாய்மைப் பொறுப்பில் கவனமாக இருங்கள். நீங்கள் வேர்கள், நீங்கள் அனுப்புவதைத் தான் உங்கள் கிளைகளும் கொடிகளும் பெறுகின்றன. எதைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறீர்கள் என்பதில் மிகக் கவனமாக இருங்கள். உலகத்தின் எல்லா நன்மைகளும் உங்களை நம்பியே இருக்கின்றன.
(குடும்பங்களின் ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவியருக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்)
-என்.கணேசன்
நன்றி : விகடன்
சக்தி 2009 சிறப்பு மலர்
http://www.vikatan.com/vc/2009/wmalar/ganesanarticle050309.asp
excllent article. a must read for every woman. thank u sir.
ReplyDeleteஅன்புள்ள தோழரே,
ReplyDeleteஇன்றைய காலகட்டத்திற்கு தேவையானதை சரியாகக் கூறினீர்கள்...
மிக்க நன்றி..
மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்...
என்றும் அன்புடன்,
P B முரளிகிருஷ்ணான்
தங்கள் கட்டுரைகள் மிகவும் அருமை
ReplyDeleteமிகவும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். முரளிகிருஷ்ணன் சொன்னது போல இந்தக் காலத்தவர் மறந்து போன முக்கிய செய்தியை நினைவுபடுத்தியுள்ளீர்கள். உங்கள் எழுத்தின் சக்தி கண்டிப்பாக பலரையும் சிந்திக்க வைக்கும். வாழ்க வளமுடன். வளர்க உங்கள் நற்பணி.
ReplyDeleteசீதாலட்சுமி
மகளிர் தின சமர்ப்பனம் அருமை நண்பரே - Hisham
ReplyDeleteபல கருத்துகளை மேற்கோள் காட்டி அழாகாக கூறிullerkal
ReplyDeleteOops. The transliteration service is not available.
உங்க்களது அனைத்து பதிவுகளும் அருமை.
ReplyDeleteஇதுவும் தான்.
தொடருங்கள்.
வாழ்த்துகள்.
Very good article beautifully written. Please give more like this. Thanks
ReplyDeleteNice post.
ReplyDelete#மகிழ்ச்சியாகவும், நற்குணங்களுடனும் வளரும் குழந்தைகள் தீவிரவாதிகள் ஆவதில்லை. அடுத்தவர்களுக்கு உபத்திரவம் செய்வதில்லை. தங்கள் திறமைகளையும், அறிவையும் கண்டிப்பாக சமூக நன்மைக்காகவே பயன்படுத்துவார்கள். எனவே குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழ்நிலைகளை ஏற்படுத்துங்கள்.#
ReplyDeleteBeautiful Lines and very true.
தற்கால தாய்மார்கள், அவசியம் படிக்க வேண்டிய பதிவு.....தன் குழந்தைகள் நலனில்
ReplyDeleteஅக்கறை உள்ள தாய் குலம் பின்பற்ற வேண்டிய கருத்துகளை ஆணித்தரமாக கூறியுள்ளீர்கள். G....