Tuesday, July 22, 2008

இவர்களும் தோற்றிருக்கிறார்கள்


ஒவ்வொரு துறையிலும் உச்சாணிக் கொம்பை எட்டிய மேதைகளை பொதுவாக நாம் அதிசயப்பிறவிகள் என நினைக்கிறோம். எல்லா அம்சங்களும் சரிவர அமையப்பட்டு அதிர்ஷ்டமும் ஒத்துழைத்ததால் மட்டுமே அவர்கள் அந்தந்த துறையில் சிகரங்களைத் தொட முடிந்ததென்றும் எண்ணுகிறோம். ஆனால் அவர்களும் அந்த இடத்தை அடையும் முன் எப்படியெல்லாம் தோற்றிருக்கிறார்கள், எள்ளி நகையாடப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதோ சில தகவல்கள்-

* இசை மேதை என்று ஒருமனதாக உலகம் இன்றும் பாராட்டும் பிதோவன் தன் இளமையில் வயலினை சரியாகக் கையாள முடியாதவராக இருந்தார். சொல்லிக் கொடுத்தவற்றை சரியாக வாசிப்பதை விட்டு தன் சொந்த முறையில் வாசிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்த அவரை அவருடைய ஆசிரியர் 'உருப்படாத கேஸ்' என்று கணித்திருந்தார்.

* உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்த ஒரே விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனுடைய ஆசிரியர்கள் எதையும் கற்றுக் கொள்ள இயலாத முட்டாள் என்று பட்டம் சூட்டி இருந்தனர்.

* தன் கற்பனைத் திறத்தால் டிஸ்னி லேண்ட் உருவாக்கி கோடீசுவரராகி இன்றளவும் பேசப்படும் வால்ட் டிஸ்னி ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டு இருந்தார். புதுமையாக எதையும் செய்யத் தெரியாதவர் என்று அவரை அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் வேலையை விட்டு நீக்கி விட்டார். அதன் பிறகு வால்ட் டிஸ்னி பல வியாபாரங்கள் செய்து அவற்றிலும் பெரிய நஷ்டத்தை அடைந்தார்.

* உலகப் புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் கல்லூரிப் படிப்பில் தோல்வி அடைந்தவர். "படிக்க முடியாத படிக்க விரும்பாத" மாணவன் என்று பெயரெடுத்தவர்.

* இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியும், உலக விஞ்ஞானம் செல்லும் பாதையை முழுவதுமாக மாற்றி விட்டவருமான ஐன்ஸ்டீன் நான்கு வயது வரை பேசவில்லை. ஏழு வயது வரை படிக்கவில்லை. அவருடைய பள்ளி ஆசிரியர் அவரை "மிக மந்தமானவன். மற்றவர்களுடன் நன்றாக கலந்து பழகாதவன். எப்போதும் முட்டாள்தனமான் கற்பனை உலகில் இருப்பவன்" என்று கூறினார். ஜூரிச் பாலிடெக்னிக் பள்ளியில் படிக்க ஐன்ஸ்டீனிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

* இங்கிலாந்தின் பிரதமராகவும், இரண்டாம் உலகப் போரில் உலக சரித்திரத்தில் முக்கியப்பங்கு வகித்தவருமான வின்ஸ்டன் சர்ச்சில் தலைசிறந்த பேச்சாளரும் கூட. அவர் ஆறாம் வகுப்பில் தோற்றவர். தொடர்ந்து அரசியலில் இருந்தாலும் தன் 62 வயதாகும் வரை அவரால் பிரதமராக முடியவில்லை.

* ரிச்சர்ட் பாக் என்ற பிரபல நாவலாசிரியர் "ஜோனாதன் லிவிங்ஸ்டோன்" என்ற 10000 சொற்கள் கொண்ட நாவல் ஒன்ற எழுதினார். 18 பிரபல பிரசுரங்கள் அவர் கதையை பிரசுரிக்க மறுத்து நிராகரித்தன. கடைசியாக மேக்மில்லன் கம்பெனி 1970ல் பிரசுரம் செய்தது. 1975க்குள் அமெரிக்காவில் மட்டும் ஏழு மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்த அந்த புத்தகம் இன்றும் மிகப்பிரபலமாக உள்ளது.

* 'இவனை ஏதாவது ஒரு வழியில் உருப்பட வைக்க முடியுமா என்று பாருங்கள்' என்று பயனில்லாமல் சுற்றித் திரிந்த மகனை அழைத்து வந்து கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளிடம் ஒரு தாய் கூறினார். அவனை அப்படியே இந்தியாவுக்கு அவர்களும் அனுப்பி வைத்தனர். அவன் தான் இந்தியாவில் ஆங்கில சாம்ராஜ்ஜியத்திற்கு அடி கோலிய ராபர்ட் க்ளைவ்.

இப்படி எல்லாத் துறைகளிலும் பெரும் சாதனை படைத்தவர்கள் தோல்விகளையும், கேவலமான விமரிசனங்களையும் சந்தித்திருக்கிறார்கள். வெற்றியின் பாதை பூக்களால் நிரப்பப்பட்டதல்ல. படிப்படியாக தோல்விகளையும், தளர்வடைய வைக்கும் விமரிசனங்களையும் சந்திக்கும் போது இவர்களை நினைவுபடுத்திக் கொண்டு உற்சாகமாக தொடருங்கள். நீங்களும் சரித்திரத்தில் இடம் பெறக் கூடும்.

-என்.கணேசன்

8 comments:

  1. நல்ல சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு....

    உள்ளூர் சாதனையாளர்களையும் சேர்த்திருக்கலாம்...

    ReplyDelete
  3. It's really wonderfull..

    One small Request

    //ஒன்ற எழுதினார்

    Please correct this error.If i am point out anything wrong don't angry with me

    ReplyDelete
  4. சுயமுன்னேற்றத்தில் உதவக் கூடிய தகவல். மிக்க நன்றி

    ReplyDelete
  5. ROBERT CLIVE...konjuam overa therialla..He is supposed to be the first BRITISH FOX, WHO HAS ENTERED IN INDIA, AND STARTED CHEATING THE INDIAN REGIME, WITH BRITISH TRICKS....Acoording to my understanding, we should not include ROBERT CLIVE's NAME IN THIS LIST(Then this list, consists of GREAT PEOPLE will become a dramatic list...However, good article. Let us take good things from other great people in this same list....BALAJEE.

    ReplyDelete
  6. ராபர்ட் க்ளைவை இங்கே குறிப்பிட்டது அவன் உயர்ந்த மனிதன் என்பதற்காக அல்ல, ஆங்கிலேய அரசை இந்தியாவில் ஏற்படுத்த மூல காரணமாக இருந்து சரித்திரத்தில் இடம் பெற்றவன் என்ற காரணத்தால் தான். நன்றி.

    ReplyDelete
  7. Hi N.Ganesan, there is Real Time Hero too, Mr. Mark Zuckerberg
    Founder and CEO of Facebook- he is Harvard University dropped out.
    now he is one of the world Billionaire. $17b.

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு .நன்றி

    ReplyDelete