எட்வர்ட் ஜோச·ப் ·ப்ளெனகன் (Edward Jospeh Flenagan) என்ற கத்தோலிக்க பாதிரியார் 1886-1948 ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு நல்ல சீர்திருத்தவாதி. அவர் கொலை, கொள்ளை, குரூரம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு சிறைப்படும் சிறுவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற பாய்ஸ் டவுன் (Boys' Town) என்ற சமூக சீர்திருத்த அமைப்பை ஏற்படுத்தி சாதி சமய நம்பிக்கைகள் என்ற வித்தியாசமில்லாமல் எல்லா தரப்பு சிறுவர்களையும் சீர்திருத்தி வந்தார். எல்லாக் குழந்தைகளும் அடிப்படையில் நல்லவர்களே, அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலேயே தீய வழிகளுக்கு வருகிறார்கள் என்பதும் அன்பாலும் நல்ல அறிவுரைகளாலும் அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. பல நூற்றுக் கணக்கான சிறுவர்களை அப்படி மாற்றியும் வந்த அவருக்கு எட்டி (Eddy) என்ற சிறுவன் சவாலாக வந்தான்.
நான்கு வயதில் தன் பெற்றோர்களை இழந்த அந்த சிறுவன் தன் எட்டாவது வயதிலேயே தன்னை விட வயதில் பெரிய கிரிமினல் சிறுவர்களுக்கும் தலைவனாகிற அளவு திறமைகளையும் தைரியத்தையும் பெற்றிருந்தான். திருட்டுகள், துப்பாக்கி முனையில் வழிப்பறிக் கொள்ளைகள், கொலைகள் செய்து முன்னேறி சட்டத்தின் பிடியில் கடைசியில் சிக்கிக் கொண்ட அவனுக்கு போலிசிடம் கூட பயம் இருக்கவில்லை.
பாய்ஸ் டவுனுக்கு அவன் வந்த போது எல்லா தீய விஷயங்களிலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். அவன் சிரித்தோ, அழுதோ யாரும் பார்க்கவில்லை. கெட்ட வார்த்தைகளை தங்கு தடையில்லாமல் உபயோகிப்பது, மற்ற சிறுவர்களை பயமுறுத்தி நடுங்க வைப்பது, மற்றவர்களை ஏளனம் செய்வது, அடிதடியில் ஈடுபடுவது என்று வந்த சில நாட்களிலேயே மற்றவர்களுக்கு அவன் சிம்ம சொப்பனமானான். அங்கு சொல்லிக் கொடுத்த பிரார்த்தனைகளும், விளையாட்டுகளும், அறிவார்ந்த விஷயங்களும் அவனுக்கு சலிப்பைத் தந்தன. அந்த சமயங்களில் எல்லாம் மற்றவர்கள் செய்வதையும் கெடுத்து வம்பு செய்தான். பெரியவர்களையும் பயமில்லாமல் பழித்தான்.
அவனுடைய தொல்லைகள் தாங்காமல் வார்டனாக இருந்தவர் ·ப்ளெனகனிடம் கேட்டார். "உலகத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்கிறீர்களே ஐயா, இவனை என்னவென்று சொல்கிறீர்கள்?"
புன்னகையுடன் ·ப்ளெனகன் அவரைப் பொறுமையாக இருக்கும்படி வேண்டிக் கொண்டார்.
ஒருமுறை எட்டிக்கு கடும் காய்ச்சல் வர அவனை ·ப்ளெனகன் அவனை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார். மற்ற சிறுவர்களையும் அவனை நன்றாகப் பார்க்க வைத்தார். அவன் குணமான பின்னும் அவனுக்கு தனி சலுகைகள் தந்து செல்லப் பிள்ளை போல் பார்த்துக் கொண்டார். இதில் எல்லாம் மனம் கனிவதற்குப் பதிலாக எட்டிக்கு எரிச்சல் தான் வந்தது.
அவன் நேராக ·ப்ளெனகனிடம் சென்று கோபத்துடன் கேட்டான். "என்னை நல்லவனாக மாற்ற முயற்சி செய்கிறீர்களே. அது முடியும் என்று நினைக்கிறீர்களே அது முடியும் என்று நம்புகிறீர்களா? நான் இப்போது தான் மேட்ரன் ஒருவரை உதைத்து விட்டு வருகிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்?"
ப்ளெனகன் உறுதியாகச் சொன்னார். "நான் இப்போதும் சொல்கிறேன். அடிப்படையில் நீ நல்ல பையன் தான்"
"ஏன் இப்படிப் பொய் சொல்கிறீர்கள்? ஒரு பாதிரியாராக இருந்து கொண்டு பொய் சொல்வது சரியா?"
·ப்ளனெகன் அவனிடம் அமைதியாகக் கேட்டார். "நல்ல பையன் என்பதை எப்படி நிர்ணயிப்பது? ஒரு நல்ல பையன் பெரியவர்கள் சொன்னபடி கேட்பான். சரி தானே?"
"சரி தான்"
"தன் ஆசிரியர்கள் சொன்னபடி நடந்து கொள்வான். சரி தானே"
"ஆமாம்"
"நீயும் அப்படித்தானே இது வரை நடந்து கொண்டு இருக்கிறாய். இங்கு வந்து சேரும் வரை தீய வழிகளில் தேர்ந்திருந்தவர்கள் தான் உனக்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். உன்னை வழி நடத்தும் பெரியவர்களாக கேடிகள் தான் உனக்குக் கிடைத்திருந்தார்கள். நீ அவர்கள் சொன்னபடி கேட்டு, கற்று இப்படி ஆகியிருக்கிறாய். இப்போது உனக்கு நல்ல ஆசிரியர்களும் வழி நடத்துபவர்களும் கிடைத்திருக்கிறார்கள். இனி சிறிது சிறிதாக நல்ல விதங்களுக்கு மாறுவாய் இது நிச்சயம்"
எட்டி அவர் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையையும் உறுதியையும் கண்டு திகைத்தான். அவர் சொன்னதில் இருந்த உண்மை அவன் அறிவுக்கு எட்டியது. அவர் நம்பிக்கை அவன் இதயத்தைத் தொட்டது. ஒன்றும் சொல்லாமல் நின்ற அவனை ·ப்ளனெகன் அன்புடன் அணைத்துக் கொண்டார். அந்தச் சிறுவன் கண்களில் இருந்து கண்ணீர் முதல் முறையாக வெளி வந்தது.
எட்டி பத்து வருடங்கள் கழித்து பட்டதாரியாகி, இராணுவத்தில் சேர்ந்து உலகப் போரில் நாட்டுக்காக போராடி பல வீரப் பதக்கங்கள் பெற்றான். நம்பிக்கைக்கும், மதிப்புக்கும் உரிய நல்ல குடிமகனாக வாழ்ந்து பலருடைய அன்பிற்குப் பாத்திரமானான்.
ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை பொறுமையுடன் கையாளப்படும் போது எப்படி மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதற்கு எட்டி ஒரு உதாரணம். இப்படி எத்தனையோ சிறுவர்களை அந்தப் பாதிரியாரின் நம்பிக்கை மாற்றி அமைத்திருக்கிறது. ஒரு நம்பிக்கை தீபம், பலர் மனதிலும் நம்பிக்கை தீபங்களை ஏற்றி பலர் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றி இருக்கிறது.
நமது நம்பிக்கை நம்மை மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் இந்த அளவுக்கு மாற்ற முடியும் என்றால் எதை நம்புகிறோம் எந்த அளவுக்கு நம்புகிறோம் என்பதில் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்வது உத்தமம் அல்லவா?
- என். கணேசன்
நம்பிக்கை அளிக்கும் கட்டுரைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநம்பிக்கையின் மேல் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய நல்ல கதை...
ReplyDeleteBad behavior person might change into good personality. But I seriously doubt whether purely selfish person/ psycho characters also get change into gud character?
ReplyDeleteInflict faith is the master key to unlock any lock. Nice message.
ReplyDelete