Tuesday, December 25, 2007

படகு புகட்டிய பாடம்


(கோபத்தைக் களைவது எப்படி?)

லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தைகளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

- என்.கணேசன்

15 comments:

  1. அருமையான சென் கதை. தேடிப் பதிவிலிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. கட்டுரை அருமை.
    ஆனால் ஒரேயடியாய் பாசிட்டிவ் ஆகச் சென்றாலும் சரி.. ஒரேயடியாய் நெகட்டிவ் ஆகச் சென்றாலும் சரி.. பாதிப்பு நமக்குத்தான்.

    சில நேரங்களில் நாம் கோபத்தைக் கொட்டித்தான் தீர வேண்டும். ஆனால் அந்த எந்த அளவிலானது என்பதை நம் உள்ளுணர்வுதான் தீர்மானம் செய்யவேண்டும்.

    கொசுக்களிடம் கருணை காட்டமுடியாதல்லவா?

    ReplyDelete
  3. கொசுக்களிடம் கூட கோபம் காட்டி நம் மன அமைதியைக் குலைத்துக் கொள்ள வேண்டியதில்லை. (கொசுக்கள் தங்கள் இயற்கைப்படியே இயங்குகின்றன என்பதால்). கொசுக்கள் ஒழிக்கப்படவேண்டியவை. ஒழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கோபமில்லாமல் செய்யுங்கள். சிலரிடம் சில நேரங்களில் கண்டிப்புடன் தான் நடக்க வேண்டும். கோபம் காட்டாமல் கூட கண்டிப்பு காட்டலாம். ஒவ்வொன்றையும் கோபம் இல்லாமல் அணுகும் போது தவறோ, அனர்த்தமோ நிகழ்வதில்லை. நன்றி.

    என்.கணேசன்

    ReplyDelete
  4. Excellent article explained in nice way.

    ReplyDelete
  5. Hai friends
    This is very good message



    Thank you
    Ramesh

    ReplyDelete
  6. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதயுடன்)
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    ReplyDelete
  7. super ...please continue such a artical....thanks.........

    ReplyDelete
  8. அருமையான சென் கதை

    ReplyDelete
  9. N.Ganesan இன் பின்னூட்டம் அருமை.ஜென் தத்துவம் போல ரத்தின சுருக்கம்.

    ReplyDelete
  10. ஜென் சிந்தனைகள் கருத்தாழம் மிக்கவை. நீங்கள் எழுதியவிதம் அதற்கு இன்னும் மெருகேற்றி உள்ளது. நன்றி

    ReplyDelete
  11. excellent words.

    continue your writing

    ReplyDelete
  12. Before 1month ., i read .., This Story After then it really changed me a lot..., :) Whenever some others speaks or behaves Unfair ..., this line hits my Mind..," இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது " என்று அந்த ஞானி தனக்குள் கூறிவிட்டு நகர்ந்தது போல ..., யாமும் மனதுக்குள் புன்னகைத்து விட்டு அமைதியாக இருந்து விடுகிறோம் ..., எழுத்தாளர் என் .கணேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..., தங்கள் படைப்புக்கள் மென்மேலும் வர , வளர , வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete