Wednesday, November 28, 2007

ஒரு நிமிடம் நிதானியுங்கள்

விவகாரமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை பிரச்சினைகளாக வெடிப்பதும், சுமுகமாக முடிவதும் இருக்கிறது என்பதை விளக்க அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய ஒரு அறிவுரை என்னை மிகவும் கவர்ந்தது. சொற்கள் மிகச்சரியாக நினைவில்லை என்றாலும் அதன் சாராம்சம் இது தான். "நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் ஒவ்வொன்றிற்கும் react செய்கிறோம். நம் மன அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சிறிதும் தாமதியாமல் உடனடியாக அதற்குப் பதிலடி தருகிறோம் அல்லது ஏதாவது செயல் புரிந்து விடுகிறோம். (இதனை அன்னை reaction என்கிறார்). அப்படி react செய்வதற்குப் பதிலாக ஒரு நிமிடம் சிந்தித்து தகுந்த சொல்லோ செயலோ எது என்று தீர்மானித்து அதைச் செய்தால் அது சிறப்பாக இருக்கும். (இதை அன்னை response என்கிறார்). இப்படி செய்வதன் மூலம் எத்தனையோ எதிர்மறையான விளைவுகளை நாம் தவிர்க்க முடியும்"

பல சமயங்களில் நம் பதில் நடவடிக்கைகள் நம்மை அறியாமல் நடந்து விடுகின்றன. மற்றவர்கள் சொல்லோ செயலோ நம்மை சிறிதும் யோசிக்க விடுவதில்லை. நம்மையும் மீறி நம் ஆழ்மனதில் பதிந்துள்ள குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். இதில் உண்மையாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் நம் பதில் நடவடிக்கையை மற்றவர் சொல்லும், செயலும் நம் ஆழ்மனமும் தீர்மானித்து விடுகின்றன. யாரோ ஆட்டுவிக்க நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம்.

இதற்குப் பதிலாக ஒரு கணம் தாமதித்து எப்படி இதை எதிர்கொள்வது நல்லது என்று யோசித்து தக்க விதத்தில் சிந்தனா பூர்வமாக நம் பதில் நடவடிக்கை அமைந்தால் நாம் எத்தனையோ பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பல நல்ல ஆதாயங்களையும் பெற முடியும். யோசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு நிமிடம் தாமதிப்பது போதும். எத்தனையோ தவறான வார்த்தைகளை சொல்லாமலும், தவறான செயல்களை செய்யாமலும் தவிர்க்க அந்தக் குறுகிய இடைவெளி போதும்.

ஒரு actionக்கும் reactionக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியைப் புகுத்த கற்றுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியே ஆறாவது அறிவு. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடப்பதே உண்மையான அறிவு. மற்றவர் இயக்க நாம் இயங்கினால் அது அடிமைத்தனம்.

யாராவது வம்புச் சண்டைக்கு உங்களை இழுக்க எண்ணி "முட்டாள்" என்று அழைத்தால் சீறுவதற்குப் பதிலாக புன்னகையுடன் "உண்மை தான்" என்று சொல்லிப் பாருங்கள். (உண்மையில் நாம் எல்லோரும் ஒருசில சமயங்களில் அந்தப் பட்டப் பெயர் பெற உகந்தவரே.) ஒரு புத்திசாலியால் தான் அப்படி முழுக் கட்டுபாட்டுடன் respond செய்ய முடியும். அப்படிச் சொல்வதன் மூலம் தேவையில்லாத சச்சரவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இதைச் சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கஷ்டமே. ஏனென்றால் மற்றவர் வார்த்தைகளுக்கோ செயல்களுக்கோ உடனடியாக இயங்கிப் பழக்கப்பட்ட நமக்கு ஒரு புதிய வித்தியாசமான அணுகுமுறையை நம்மிடம் கொண்டு வருவதற்கு சற்று பயிற்சி வேண்டும். சிந்திக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வதற்கே பிரம்மப்பிரயத்தனம் வேண்டும். நமது ஆழ்மனம் பழைய அணுகுமுறைக்கே பழகிப் போனது. ஆழ்மனதில் நேர்மாறான அணுகுமுறையைப் பதிய வைக்க ஒரு வழியை மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலும் எந்த மாதிரி சந்தப்பங்களில் நீங்கள் நிதானம் இழக்கிறீர்கள் என்று முதலில் பட்டியல் இடுங்கள். அதில் நாம் அதிகமாக கட்டுப்பாடில்லாமல் react செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். அப்படிச் செய்த சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தி மனத்திரையில் மற்றவர் சொன்னதோ செய்ததோ வரை தத்ரூபமாக ஓட விடுங்கள். நீங்கள் react செய்த விதத்தை மட்டும் காட்சி மாற்றம் செய்யுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக அதற்கு நடந்து கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டு காட்சியை முடியுங்கள்.

நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் தினமும் ஓரிரு முறை இப்படி கற்பனைக் காட்சி காணுங்கள். ஆழ்மனம் மெள்ள மெள்ள அந்தக் கற்பனையைப் பதிவு செய்து கொள்ளும். உங்களிடம் உறுதி இருந்து இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால் திடீரென்று அது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது ஆச்சரியப்படும்படி நீங்கள் கற்பனை செய்தது போல உண்மையிலேயே 'respond' செய்வதை நீங்கள் காண முடியும். இதை நான் என் வாழ்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். எனவே இந்த முறையின் வெற்றிக்கு என்னால் உத்திரவாதம் தர முடியும்.

ஒன்றில் நல்ல முறையில் வெற்றி கண்டு அதுவே இயல்பாக நமக்குப் பழகி விட்ட பின்பு அடுத்த ஒரு சவாலை நாம் சந்திக்க முயலலாம். இப்படி நாம் பக்குவத்துடன், அறிவுபூர்வமாகவும் இயங்கக் கற்றுக் கொண்டால் எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்த்து ஏராளமான நன்மைகளை அடைய முடியும். நீங்களும் முயன்று பாருங்களேன்.

- என்.கணேசன்

Sunday, November 25, 2007

ஆனால் என்பது ஆபத்தானது


"ஆனால்" என்ற சொல் அதற்கு முன்னால் சொல்லப்பட்டதை எல்லாம் அர்த்தம் இல்லாததாக்கி விடுகிறது. உதாரணத்திற்கு நாம் அன்றாடம் சொல்லக் கூடிய சில-

"நான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஆனால் இப்படி அதிகாலையில் குளிராக இருப்பதால்........" (இன்று உடற்பயிற்சி செய்யப் போவதில்லை என்று பொருள் காண்க).

"கோபப்படுவது நல்லதில்லை தான். ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் கோபப்படாமல் இருப்பதெப்படி?" (கோபப்படுவது நல்லதில்லை என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லப்பட்டிருக்கிறது).

"செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் நேரமே கிடைக்கிறதில்லை" (அதனால் நான் ஒன்றுமே செய்வதில்லை).

இதில் எல்லாம் ஆனால் என்று சொல்வதற்கு முன்னால் சொன்ன அத்தனை நல்ல விஷயங்களும் நடைமுறைக்கு வராத வெறும் வெற்று வார்த்தைகளாகி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிற உண்மை.

சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் உடற்பயிற்சி செய்திருப்பேன், எல்லோரும் ஒழுங்காக நடந்து கொண்டால் கோபமே பட மாட்டேன், நாளுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் எதையும் செய்து முடிப்பேன் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய்கள். நம் சோம்பேறித்தனத்தையும், கட்டுப்பாடற்ற மனதையும் மறைக்கும் ஆயுதம் தான் இந்த "ஆனால்".

இந்த 'ஆனால்" நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள உதவலாம். ஏமாற்றிக் கொள்ள உதவலாம். ஆனால் இந்த 'ஆனால்' நம்மை என்றும் பின் தங்கியே இருக்க வைக்கும். சாதிக்காத சப்பைக்கட்டு மனிதர்களாகவே நம்மை இருத்தி விடும்.

நீங்கள் சொல்லத் துவங்கும் 'ஆனாலி'ல் வலுவான காரணங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால் எல்லாமே சாதகமாக இருக்கும் போது சாதிப்பதில் சிறப்பென்ன இருக்கிறது? தடைகளையும் சாதகமில்லாத சூழ்நிலைகளையும் மீறி மன உறுதியுடன் சாதிப்பதில் அல்லவா மகத்துவம் இருக்கிறது.

எனவே "ஆனால்" என்ற சொல்லை உபயோகப்படுத்தும் போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருங்கள். அந்த சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். சொல்லும் போது உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை நம்ப வைக்க முயல இந்த 'ஆனால்'ஐப் பயன்படுத்தி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

- என்.கணேசன்

Thursday, November 22, 2007

வரையப்படாத கடவுள்

சிறுகதை

"என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா"- நூறாவது முறையாக சின்னசாமி கேட்டான்.

"கண்டிப்பா முடியும்" அஸ்வின் பழைய பதிலையே சிறிதும் பொறுமை இழக்காது சொன்னான். இந்த சாருக்கு உண்மையில் பைத்தியம் தான் பிடித்து விட்டதோ என்ற சின்னசாமியின் சந்தேகம் மேலும் வலுத்தது.

"சாப்பாட்டை டைனிங் டேபிளில் வெச்சிருக்கேன். நேத்து மாதிரி மறந்துடாதீங்க. வரட்டுமா"

அவன் போய் விட்டான். சின்னசாமிக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இன்னமும் தோன்றியது. அந்த பிளாட்பார ஏழை ஓவியன் இந்த சொகுசு பங்களாவுக்கு வந்து ராஜ வாழ்க்கை வாழ ஆரம்பித்து சரியாக பதினான்கு நாட்கள் ஆகி விட்டது. நாளை மாலை அவன் திரும்பத் தனது சேரிக்கே போய் விடுவான். பழையபடி தரித்திரம், குடிசை, பிளாட்பாரம் என்று வாழ்க்கை சுழல ஆரம்பித்து விடும். இந்தப் பதினைந்து நாட்களையும், அஸ்வினையும் ஒரு பொக்கிஷமாக தனது மனதின் ஒரு மூலையில் வைத்து என்றுமே பாதுகாப்பான். எல்லாமே ஒரு வெள்ளிக் கிழமை அஸ்வின் அவனைப் பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது...

அன்று துர்க்கை பேரழகுடன் அந்தப் பிளாட்பாரத்தில் பிரத்தியட்சமாகிக் கொண்டிருந்தாள். இந்த உலகையே மறந்து தன் படைப்பிலேயே லயித்துப் போயிருந்த அந்தத் தெருவோர ஓவியனை அஸ்வின் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்களை ஊனமாக்கிய கடவுள் அத்ற்குப் பிராயச்சித்தமாக கைகளுக்கு ஓவியக்கலையைத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டானோ என்று அஸ்வினுக்குத் தோன்றியது. அனாயாசமாக வரைந்து முடித்த பின்பு தான் அமர்ந்திருந்த சக்கரங்கள் பொருத்திய பலகையை ஓரமாக நகர்த்தி சுவரில் சாய்ந்து கொண்டான் அந்தப் படைப்பாளி. பலரும் நாணயங்களை வீசி விட்டுச் சென்றார்கள். அஸ்வின் மட்டும் உன்னிப்பாக துர்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல நிமிடங்கள் கழிந்த பின்பு பாராட்டினான். "நல்லா வரைஞ்சிருக்கீங்க".

நிறைய நேரம் நின்று கவனிப்பதும், அவனையும் ஒரு பொருட்டாக நினைத்துப் பாராட்டுவதும் அந்தக் கலைஞனுக்குப் புதிய அனுபவம். அவனுக்குத் தெரிந்து மேல் மட்ட மனிதர்கள் காசிலாவது தாராளமாக இருப்பதுண்டு. ஆனால் அவனைப் போன்ற ஒரு பரம தரித்திரனை ஒருவன் கவனித்து, மதித்து மனதாரப் பாராட்டுவது அதிசயமாயிருந்ததது.

"என் பெயர் அஸ்வின். உங்க பெயர்..."

"சின்னசாமிங்க"

அஸ்வின் நிறைய நேரம் நின்று சின்னசாமியுடன் பேசினான். அவனைப்பற்றிய தகவல்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான். சின்னசாமிக்கு உறவு என்று தற்போது யாருமில்லை என்பதையும், சிறு வயதில் போலியோவால் இப்படி ஆகி விட்டது என்பதையும் கேட்டு இரக்கம் காண்பித்து அவனைப் புண்படுத்தவில்லை. சேரியில் வசிக்கும் அவனிடம் சரிசமமாகப் பேசி விட்டு நாளை அவன் எங்கு வரைவான் என்பதையும் தெரிந்து கொண்டு போனான்.

மறு நாள் மாலையும் அஸ்வின் சின்னசாமியைத் தேடி வந்தான். காரைத் தெருவின் எதிர்புறம் நிறுத்தி விட்டு வந்து அவன் வரைந்திருந்த சிவனை நிறைய ரசித்தான். "சிலர் வரையறதில் அழகு இருக்கும், உயிர் இருக்காது. நீங்க வரையறதில் ரெண்டும் இருக்கு."

"அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, சார். ஏதோ வரைவேன். அவ்வளவு தான்"

அஸ்வின் புன்னகைத்தான். "நீங்க கேன்வாசில் எல்லாம் வரைவீங்களா?"

"அப்படீன்னா..."

"துணியில், பெரிய வெள்ளைப் பேப்பரில் எல்லாம் வரைவீங்களா"

"பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க. அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நானே வயத்துப் பொழப்புக்கு வரையறவன். அதெல்லாம் எனக்கு வராதுங்க"

அவனது வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மை அஸ்வினுக்கு உறைத்தது. ஓவியங்களைப் பற்றி சிறிது பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் முன் மறு நாள் எங்கு வரைவான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பினான். தான் வரைவதைப் பார்ப்பதற்காகவே அவன் வருவது சின்னசாமிக்கு பெருமையாக இருந்தது. 'நான் நிஜமாவே அவ்வளவு நல்லா வறையறேனா".

மறுநாள் அஸ்வின் வருவான் என்றே வழக்கத்தை விட அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு வரைந்தான். மனதில் இதுவரை இல்லாத உற்சாகம் இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக சில இளைஞர்கள் குடித்து விட்டு தள்ளாடியபடி வந்தார்கள்.

"மாம்ஸ். இது ராமர் படமா, க்ரிஷ்ணர் படமா"

"எவனாயிருந்தா எனக்கென்னடா"

"எனக்கும் ஒண்ணும் இல்லை. சும்மா கேட்டேன். ஏம்ப்பா, உன் பேரென்ன?"

"சின்னசாமிங்க"

"ஓ. ஸ்மால் காட்"

"என்ன சொன்னீங்க"

"உன் பேரை இங்கிலீஷில் சொன்னேன். வரையற படம் மட்டுமல்ல வரையற ஆளும் சாமிதாம்ப்போய்"

"இனி எத்தனை காலத்துக்கு இந்த சாமி படமே வரைவீங்கப்பா. ஒரு அழகான பொண்ணு படம் வரையேன்"

"அதுவும் நிர்வாணமா வரைஞ்சா நோட்டு மழையா கொட்ட நாங்க ரெடி. நீ ரெடியா"

"நீங்க எல்லாம் படிச்சவங்க தானா. இவ்வளவு மட்டமா பேசறீங்களே"

"உன் உயரத்துக்குத் தகுந்த மாதிரி தான் பேசினோம்." என்ற ஒருவன் அவனது கலர் சாக்பீசுகளைத் தள்ளி விட்டான்.

"நீயே பிச்சைக்காரன். பெரிய மனுசன் மாதிரி ஏண்டா பேசறே" என்று இன்னொருவன் சாயங்கள் இருந்த கிண்ணங்களைத் தட்டி விட்டான்.

சின்னசாமிக்கு இரத்தம் கொதித்தது. ".....ப்பசங்களா" என்று கத்த மாணவர்கள் மூர்க்கமாய் தாக்க ஆரம்பித்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாதிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. அவன் மயங்கி விழுந்தவுடன் ஓடி விட்டார்கள். இந்த சமயம் அந்தப் பக்கம் வந்த ஒருவன் அசுர வேகத்தில் ஓவியத்தின் மேல் இருந்த காசுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
எதிர்பாராது கிடைத்த திடீர் சந்தர்ப்பங்களை உடனடியாக முதலாக்கிக் கொள்ளும் மனிதர்கள் என்றுமே இருக்கிறார்கள்.

அஸ்வின் அங்கு வந்த போது சின்னசாமியை ஒரு நாய் மட்டும் விசாரித்துக் கொண்டிருந்தது. பதைத்துப் போய் "சின்னசாமி...... சின்னசாமி" என்று அழைத்தான். சின்னசாமி அசையவில்லை. தூரத்தில் நின்றிருந்த ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்காரனை உதவிக்கு அழைத்து சின்னசாமியைத் தூக்கித் தன் காரில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

சின்னசாமி கண் விழித்த போது அஸ்வின் அருகில் இருந்தான். "எப்படி இருக்கு சின்னசாமி"

"பரவாயில்லைங்க"

"என்ன ஆச்சு"

சின்னசாமி சொன்னான்.

"கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் சிலர் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கறாங்களே" அஸ்வின் அங்கலாய்த்தான்.

"சில பசங்களுக்கு ஜாலியாய் இருக்கிறதுக்கும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதுங்க. இதெல்லாம் எனக்குப் பழக்கமானது தான். பொதுவா கோபப்பட மாட்டேங்க. ஆனா சில சமயம் என்னையும் மீறி கோபம் வந்துடுதுங்க. நானும் மனுசன் தானே"

அவன் வார்த்தைகள் அஸ்வினின் மனதைத் தொட்டன. "போலிசுக்குப் புகார் தரணும் சின்னசாமி"

"ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார். அவங்க உபத்திரவம் இன்னும் அதிகமாகும். வந்து வரைஞ்சது மேலே தண்ணி கொட்டுவான். போலிசுக்குக் காசு கொடுத்து ட்ராபிக்குக்கு இடைஞ்சல்னு விரட்ட வைப்பான். இப்படி ஏழைக்குத் தொந்தரவு தர அவங்களுக்கு எத்தனையோ வழி இருக்குங்க. எதிர்த்து நின்னா என் பொழப்பு நடக்காது. மழைக்காலம் வரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் சம்பாதிச்சா தான் அப்புறம் ரெண்டு மூணு மாசம் என் வயத்தை நிரப்ப முடியும்".

"சரி விடுங்க. டாக்டர் பெரிசா எதுவுமில்லை, இன்னைக்கே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டார். இங்கிருந்து போகறதுக்கு முன்னாடி உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்"

"சொல்லுங்க சார்"

" உங்க கிட்ட பிரமாதமான திறமை இருக்கு. அது பிளாட்பாரத்தோட நின்னுடக்கூடாது. இன்னும் பதினைந்து நாளில் இந்த ஊரில் ஒரு பெரிய ஓவியப் போட்டி நடக்கப் போகுது. இது ஒரு அகில இந்தியப் போட்டி. இதுல நீங்க கலந்துக்கப் போறீங்க. என்ன சொல்றீங்க"

"சார். நீங்க நல்லவங்க. ஆனா நீங்க நினைக்கிற அளவு திறமை எல்லாம் எனக்கு கிடையாது. இந்தப் போட்டி ஒரு ப்ளாட்பாரத்தில் நடக்கிற சாக்பீசுல வரையற போட்டியில்ல. எனக்கு பிரஷ் பிடிக்கக் கூடத் தெரியாது".

"அதையும் வேற சில நுணுக்கங்களையும் நான் சொல்லித்தர்றேன். பதினைந்து நாளில் நீங்க எல்லாமே கத்துக்க முடியும்"

"சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. உங்களுக்குப் பைத்தியம் இல்லையே"

அஸ்வின் வாய் விட்டுச் சிரித்தான். "பைத்தியம் தான். கலைப் பைத்தியம். திறமை எங்க வீணாப் போனாலும் தாங்க முடியாத பைத்தியம். சரின்னு சொல்லுங்க சின்னசாமி. என் கூட என் வீட்டுக்கு வந்துடுங்க. எண்ணி பதினைந்து நாள் இருங்க. இந்தப் பதினைந்து நாளில் நீங்க எவ்வளவு சம்பாதிப்பீங்களோ அதை நான் தர்றேன். சரியா"

"என்ன மனிதனிவன் " என்று சின்னசாமி வியந்தான். ஏளனம், அவமானம், சில சமயங்களில் இரக்கம் இதை மட்டுமே மற்றவர்கள் அவனுக்குத் தந்திருக்கிறார்கள். இப்படி ஒரு முக்கியத்துவமும், அன்பும் இது வரை யாருமே அவனுக்குத் தந்ததில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அஸ்வின் அதற்கெல்லாம் மசியவில்லை. அவனுக்கு எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. கடைசியில் சரியென்றான்.

அஸ்வின் ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இஞ்சீனியர் என்றும் திருமணமாகவில்லை என்றும் பெற்றோர் இருவரும் உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் பெங்களூரில் இருக்கிறார்கள் என்றும் சின்னசாமி தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே சின்னசாமி சங்கடப்பட்டான். சேரிக்கே பொருத்தமான தன் உருவம் இந்தப் பணக்கார வீட்டில் சிறிதும் பொருத்தமில்லாமல் இருப்பதாக அவனுக்குப் பட்டது. தயக்கத்துடன் நுழைந்தான்.

அன்றே அஸ்வின் ஏகப்பட்ட உபகரணங்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினான். உபயோகப்படுத்தும் முறைகளை மிகவும் பொறுமையோடு சொல்லிக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சின்னசாமி ஒரு குழந்தையின் உற்சாகதோடும் பிரமிப்போடும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

"சார் நீங்களும் வரைவீங்களா"

"ம்.வரைவேன்" என்று சுருக்கமாகச் சொல்லி அஸ்வின் பேச்சை மாற்றினான்.

மூன்று நாட்கள் லீவு போட்டு அவனுடனேயே இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தான். அவனுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்தான். தொடர்ந்த நாட்களில் சின்னசாமி நேரம், காலம் எல்லாவற்றையும் மறந்தான். வரையும் போது எத்தனையோ முறை அஸ்வின் வந்து நின்று பார்ப்பான். பல சமயங்களில் அவன் வந்தது, நின்றது, போனது எதுவுமே சின்னசாமிக்குத் தெரிந்ததில்லை. பல சமயம் வைத்த காபி, சாப்பாடு எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்கும். அஸ்வின் பல முறை நினைவு படுத்த வேண்டி இருக்கும். லீவு முடிந்து கம்பெனிக்குப் போக ஆரம்பித்த பின்னும் சின்னசாமிக்கு மதியம் சாப்பிடத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டுப் போவான். ஆரம்பத்தில் சின்னசாமிக்கு அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. "சார் இதெல்லாம் வேண்டாங்க" என்று சொல்லிப் பார்த்தான். "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வரையறதைத் தவிர வேற எல்லாத்தையும் நீங்க மறந்துடுங்க சின்னசாமி" என்று வாயடைத்தான். அவன் சொன்னது போலவே சின்னசாமி எல்லாவற்றையும் மறந்து தான் வரைந்து கொண்டிருந்தான். போட்டிக்கு முந்தைய நாளான இன்று தான் மனம் ஏனோ பழையதை அசை போடுகிறது.

அன்று மாலை அஸ்வின் வந்தவுடன் சின்னசாமி கேட்டான். "இப்ப இதில் நான் நல்லா வரையறேனா சார்"

"ஜமாய்க்கிறீங்க. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சமும் ஒரு கப்பும். போட்டியில் ஒரே ஒரு முக்கியமான விஷயம். அதில் மட்டும் நீங்க தேர்ந்தெடுக்கிறது சிறப்பாய் இருந்தால் பரிசு நிச்சயம்."

"என்ன சார் அது"

"ஒரு தலைப்பு தருவாங்க. அதற்குப் பொருத்தமான ஓவியத்தை நீங்க உங்க கற்பனையில் தேர்ந்தெடுக்கணும். அதுக்கு மட்டும் நான் உங்களைத் தயார் செய்ய முடியாது".

சின்னசாமியின் உற்சாகமெல்லாம் வடிந்து போனது. "சார் அதெல்லாம் என் தலைக்கு எட்டுங்களா"

"எல்லாம் எட்டும். எத்தனை அனுபவங்கள் எத்தனை காட்சிகள் நீங்கள் பார்த்திருப்பீங்க. அதில் எதாவது அந்தத் தலைப்புக்குப் பொருந்தும். அதை வரைஞ்சிடுங்க" என்று சின்னசாமிக்கு தைரியம் சொன்னாலும் அந்த விஷயத்தில் அஸ்வினுக்கே சந்தேகம் இருந்தது. இதை வரை என்றால் சின்னசாமி சிறப்பாய் வரைவது நிச்சயம். ஆனால் பெரும்பாலும் வித்தியாசமான தலைப்புகளே தரப்படும். சென்ற வருடம் டில்லியில் போட்டி நடந்த போது "சாரி ஜஹாங் சே அச்சா" என்ற தலைப்பு தந்து எல்லா இந்திய மொழிகளிலும் தலைப்பை மொழிபெயர்த்தும் கொடுத்தார்கள். இப்படி கவிதைத் தலைப்பாய் தந்தால் அதற்குப் பொருத்தமாய் சின்னசாமிக்கு வரைவதைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்று தான் யோசனையாய் இருந்தது.

போட்டி நாள் அன்று இரண்டு செட் உபகரணங்களை எடுத்து வைப்பதைக் கண்ட சின்னசாமி "எதுக்குங்க ரெண்டு செட்"

"எனக்கும் உங்களுக்கும்" என்று அஸ்வின் புன்னகையோடு சொன்னான்.

தனக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவு ஞானம் உள்ளவன், இந்தக் கலையில் இவ்வளவு ஆர்வம் உள்ளவன் போட்டியில் கலந்து கொள்வான் என்று தனக்கு உறைக்காதது ஏன் என்று சின்னசாமி தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் தனக்குப் போட்டியாக தானே ஒருவனை வலுக்கட்டாயமாக உருவாக்குவானா என்பது தான் ஆச்சரியமாக இருந்தது.

போட்டி நடக்கும் இடத்தில் காரிலிருந்து அவர்கள் இறங்கிய போது பல பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். "தொடர்ந்து மூன்று வருடங்கள் முதல் பரிசு வாங்கியிருக்கிறீர்கள். இந்த தடவையும் வாங்கிடுவீங்களா" என்று ஒரு நிருபர் அஸ்வினைக் கேட்ட போது, "இந்த தடவை போட்டி கடுமையாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்" என்று அவன் சொல்லி சின்னசாமியைப் பார்த்து லேசாகக் கண்ணடித்தான்.

சின்னசாமிக்கு நாக்கு வரண்டது. அஸ்வின் இவ்வளவு பிரபலமான ஓவியன் என்று இப்போது தான் தெரிகிறது. அங்கு கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். ஓவியர்கள் தங்களது ஓவியங்களை முன்பே அனுப்பி அவற்றின் தரத்தை ஒரு குழு ஆராய்ந்து பார்த்து தான் போட்டியில் கலந்து கொள்ளவே அனுமதி கிடைக்கும் என்றும் அஸ்வின் மிகவும் சிபாரிசு செய்து தான் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் பேசும் போது சின்னசாமிக்குத் தெரிந்தது. பெரும்பாலோரின் நாகரிக உடையும் நுனி நாக்கு ஆங்கிலமும் பத்திரிக்கை டிவி கேமராக்களும் கண்டு சின்னசாமி பயந்து போனான். எல்லாமே அன்னியமாகவும் தன் தரத்திற்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகவும் அவனுக்குப் பட்டதால் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றியது. அஸ்வின் அவனருகே வந்த போது "என்னங்க என்னை இப்படி மாட்ட விட்டுட்டீங்களே. எனக்கு இதெல்லாம் வேண்டாங்க. நான் போயிடறேன்" என்றான்.

"போட்டி முடிஞ்சாப் போயிட வேண்டியது தான். அது வரைக்கும் எந்தப்பேச்சும் கூடாது. சொல்றதை கவனமாய் கேளுங்க. அவங்க ஒரு தலைப்பு தருவாங்க. அதைத் தமிழிலேயும் சொல்வாங்க. நல்லா யோசிச்சு அதை வைத்து உங்களுக்கு என்ன வரையணும்னு தோணுதோ அதை வரையிங்க.சரியா. எத்தனை கடவுள்களை வரைஞ்சிருப்பீங்க. அத்தனை கடவுள்களும் உங்களுக்குக் கண்டிப்பாய் உதவி செய்வாங்க". பதிலுக்குக் காத்திராமல் தனது இடத்திற்குப் போய் விட்டான்.

சின்னசாமிக்கு வரைய செளகரியமாக எல்லா ஏற்பாடுகளும் தனியாக செய்திருந்தார்கள். அவன் மனதில் மட்டும் நம்பிக்கையோ உற்சாகமோ இல்லை. தனக்கு எதாவது பரிசு கிடைக்கும் என்று அவன் சிறிதும் நம்பவில்லை. "கடவுளே அந்த சாரின் நல்ல மனசுக்கு இந்த தடவையும் அவருக்கே முதல் பரிசு கிடைக்கணும்" என்று வேண்டிக்கொண்டான்.

தலைப்பை அறிவித்தார்கள். "நெஞ்சு பொறுக்குதிலையே". இந்த முறை பாரதியின் கவிதை வரி.

சின்னசாமி யோசித்தான். எல்லாரும் தலைப்பைக் கேட்டவுடன் வரைய ஆரம்பித்து விட்டார்கள். "எத்தனை அனுபவங்கள், காட்சிகள் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீங்க. அதில் ஏதாவது தலைப்புக்குப் பொருந்தும். அதை வரையுங்க" என்று அஸ்வின் சொல்லி இருந்தது நினைவில் வந்தது. அவனுக்கு நெஞ்சு பொறுக்காத அனுபவம் சமிபத்தில் அடி பட்டது தான். அஸ்வின் தன்னை எந்த நிலையில் கண்டான் என்று சொல்லி இருந்தான். "பார்க்க மனசுக்குப் பொறுக்கலே" என்ற அவனது வார்த்தையும் நினைவுக்கு வர அந்தக்காட்சியையே வரைய தீர்மானம் செய்தான். எதாவது ஒன்றை வரைந்து அங்கிருந்து போனால் போதும் என்று தோன்றவே அத்ற்கு மேல் யோசிக்கவில்லை.

வரைய ஆரம்பித்த பின் வழக்கம் போல் எல்லாவற்றையும் மறந்தான். அவன் மனக்கண்ணில் அந்தக் காட்சி விரிய திரைச்சீலையில் அந்தக் காட்சி உயிர் பெற ஆரம்பித்தது. மற்றவர்களை விட முன்பாகவே வரைந்து முடித்தும் விட்டான். எல்லோருடைய ஓவியங்களையும் ஒருவர் வந்து வாங்கிக் கொண்டு போனார். பரிசை சிறிது நேரத்தில் அங்கேயே அறிவிப்பார்களாம்.

அஸ்வின் ஆர்வத்துடன் வந்து கேட்டான். "என்ன வரைஞ்சீங்க?". சின்னசாமி சொன்னான்.

"நான் ஒரு குழந்தைத் தொழிலாளியை வரைஞ்சேன்" என்ற அஸ்வின் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான் "நான் மட்டுமல்ல எல்லாரும் மத்தவங்களையோ வேற காட்சிகளையோ வரைஞ்சிருப்பாங்க. அதில் எங்க திறமை மட்டும் இருக்கும். உங்க ஓவியத்தில் நீங்களே இருக்கீங்க, உங்க சொந்த அனுபவமே இருக்கு. உங்க திறமையைப் பத்தி சொல்ல வேண்டியதில்லை. பரிசு கண்டிப்பாய் கிடைக்கும். வாழ்த்துக்கள்"

"சார், எனக்காக இவ்வளவு செய்யறீங்க. இதுக்கு நான் எத்தனை ஜென்மம் எடுத்து கடன் தீர்க்கப் போறேன்னு தெரியல"

"பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சின்னசாமி. உங்க திறமை உங்களுக்குத் தெரியாது. அது ஒரு பிளாட்பாரத்தில் ஆரம்பிச்சு அங்கேயே முடிஞ்சுடக் கூடாது. அது மேடை ஏறணும். நீங்க நிறைய வரையணும். நான் ரசிச்ச மாதிரி உலகமே ரசிக்கணும்..."

பரிசை அறிவிக்கப் போகிறார்கள் என்று அறிவித்தார்கள். அரங்கில் பேரமைதி நிலவியது.

"முதல் பரிசு சின்னசாமிக்கு....."

சின்னசாமி அதிர்ச்சியில் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். இது கனவா நனவா என்று ஒன்றும் புரியவில்லை. அவனைக் கேமராக்கள் படம் பிடிக்க ஆரம்பித்தன. அஸ்வின் முகத்தில் மகிழ்ச்சி எல்லையில்லாமல் விரிந்தது. சின்னசாமிக்கு ஒரு வேளை தன் தாய் உயிரோடு இருந்திருந்தால் இப்படி சந்தோஷப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை தேர்வுக் குழுவின் தலைவர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் "...ஒரு உடல் ஊனமுற்ற கலைஞன் யாரும் கேட்பாரற்று நிராதரவாய் தன் ஓவியத்தின் மீதே விழுந்து கிடக்கும் இந்த நிலை நிஜமாகவே தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததாலும், ஓவியம் உயிரோட்டத்துடன் தத்ரூபத்துடன் இருந்ததாலும் ..." சின்னசாமிக்கு அவர் பேசியது என்ன என்றே தெரியவில்லை.

இரண்டாம் பரிசு அஸ்வினுக்கும் மூன்றாம் பரிசு ஒரு பஞ்சாபிக்கும் கிடைத்தது.

நிருபர்களுடன் கேமராக்களும் மைக்குகளும் சின்னசாமியை நெருங்கின. "உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்"

"என்னப் பத்தி சொல்ல ஒண்ணும் இல்லைங்க. நான் பிளாட்பாரத்தில் சாக்பீசையும், சாயத்தையும் வெச்சு வரைஞ்சிட்டிருந்த ஒரு சாதாரணமான ஆளுங்க".

"சமூக ஓவியங்கள் எல்லாம் முன்பு வரைந்ததுண்டா"

"இல்லைங்க. கடவுள் படம் தான் வரைஞ்சிருக்கேன். அதுக்கு தான் காசு விழும். ஒரு கடவுள் படம் தவிர எல்லாக் கடவுள் படமும் வரைஞ்சிருக்கேங்க."

"எந்தக் கடவுளை படம் வரைந்ததில்லை" ஒரு நிருபர் ஆர்வத்துடன் கேட்டார்.

"அந்தக் கடவுளைத் தாங்க" என்று அஸ்வினைக் காட்டிக் கண் கலங்கிய சின்னசாமிக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.
____________________________________________________________________________________________________

என்.கணேசன்

Monday, November 19, 2007

கர்ம யோகம்-செயல் திறன் மேம்பாட்டுக் கலை

பலனுக்காகத் தானே பாடுபடுகிறோம், ஒரு செயலைச் செய்ய முற்படுகிறோம். ஆனால் பலனையே எதிர்பாராது வேலை செய் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே இது முரண்பாடாக இருக்கிறதே என்று பலரும் கர்மயோகத்தைக் குறை கூறுவது உண்டு. கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று ரத்தினச் சுருக்கமாக கர்மயோகத்தைச் சொல்லும் போது இப்படித் தோன்றுவது தவறும் அல்ல. ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மயோகம் முரண்பாடில்லாதது என்பதையும் அது ஒரு அருமையான செயல் மேம்பாட்டுத் தத்துவம் என்பதையும் நாம் உணர முடியும்.

செயலிலேயே விளைவும் இருக்கிறது, எனவே விளைவைப் பற்றிய கவலையோ, சந்தேகமோ தேவையில்லை என்பதையே பகவான் கூறுகிறார். ஒரு பென்சிலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நான் கீழே போடத் தயாராக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கைவிடுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே எனக்கு சுதந்திரம் உண்டு. கைவிட்டு விட்டால் அந்த செயலிலேயே அது கீழே விழும் என்ற இயற்கை விதியாகிய பலன் இருக்கிறது. அதை விட்ட பின் கீழே விழுமா என்ற சந்தேகமும்,
கீழே விழுந்து விட்டதே என்ற வருத்தமும் ஏற்பட்டால் அது முட்டாள்தனமே.

ஒரு ஊருக்குப் போகிற பாதையை வழிகாட்டிப் பலகை பார்த்து அந்தப் பாதையில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் நடக்க ஆரம்பித்தபின் ஊரின் தூரம் ஒவ்வொரு அடியாகக் குறைந்து கொண்டே வருகிறது இயற்கையே. நடக்கும் வேகத்திற்கேற்ப சீக்கிரமாகவோ, தாமதமாகவோ நாம் போய் சேர்வது உறுதி. ஊருக்குப் போய் சேர்வோமா என்ற சந்தேகமோ, பரபரப்போ தேவையில்லை.

எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்கிறார் பரமாத்மா.

இதை சுவாமி சின்மயானந்தர் அழகாகச் சொல்வார். "In fact, the reward of an action, when we understand it properly, is not anything different from the action itself. An action in the PRESENT, when conditioned by a FUTURE time, appears as the fruit of action. In fact, the action ends or fulfils itself as reaction or fruit in future."

பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது நிச்சயமாக நமது செயல் திறத்துக்கு குறுக்கீடுகளை ஏற்படுத்தும். சீரான மனநிலையில் சிந்தித்து தேவையானவற்றை சிறப்பாகச் செய்ய பற்று நம்மை அனுமதிப்பதில்லை. பல சமயங்களில் தலைக்கனம் ஏற்படுத்தி தொடர்ந்து செய்யும் காரியங்களில் அலட்சியத்தை ஏற்படுத்தி விடக் கூடியது. எனவே தான் பற்று இன்றி செயல்கள் புரிய கர்மயோகம் அறிவுறுத்துகிறது.

பலனில் பற்று என்பது வேறு வகைகளிலும் நம் செயல் திறனைக் குறைக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நல்ல செயல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ குறைந்து போனால் அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு அடுத்த செயல்களிலும் தொடரும்; நமது செயல்திறன் குறையும்.

நம் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நம் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும்.

உங்கள் திறமைகள் பலன் தராமல் இருக்கப் போவதில்லை. பூத்துக் குலுங்கும் மலர்கள் வண்டுக்கு சீட்டு எழுதி அனுப்பத் தேவையில்லை. ரமண மகரிஷி போன்ற ஞானிகள் சீடர்களையும் பக்தர்களையும் தேடிப் போனதில்லை. என்ன சொன்னால் பிரபலமாவோம் என்று கவலைப் பட்டதில்லை. ஏன் ஆரம்பத்தில் அதிகமாக ரமண மகரிஷி வாய் திறந்து கூடப் பேசியதில்லை. ஆனால் அவரிடம் இருந்த ஆன்மீக சக்தி காந்தமாக உலகை அவர் பக்கம் ஈர்த்தது.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. அப்படி முழுமையாகச் செய்த செயல்கள் என்றும் சிறக்காமல் போனதில்லை. காலத்தை வென்று நிற்கும் அத்தனை அற்புத சாதனைகளும் அப்படி செய்யப்பட்டவையே.

எனவே செயலையும் செயல்முறையயும் சிந்தித்துத் தேர்ந்தெடுங்கள். உற்சாகமாகச் செய்யுங்கள். செயலைச் செய்யும் போது உயிரோட்டத்துடன் இருங்கள். உங்கள் செயல் சிறப்பாக அமையும். பலனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் செயலிலேயே பலனை விதைத்து விட்டீர்கள். தக்க காலத்தில் பலன் வந்தே தீரும். அது இயற்கையின் விதி. இதுவே கர்மயோகம்.

(மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகம் பற்றி விவரித்ததோடல்லாமல் மகாபாரதத்தில் அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். பரம்பொருள் தேரோட்டியாக பணி புரிவதா என்று பின் வாங்கவில்லை. தேரோட்டி என்பது யுத்தம் ஆரம்பிக்கும் போது தயார் நிலையில் இருக்கும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு வேலையைத் தொடங்குவது அல்ல. அதிகாலை எழுந்து குதிரையைக் குளிப்பாட்டி அதனுடன் அன்பான உறவை சாரதி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் யுத்தகளத்தில் குதிரை சொன்னபடி இயங்கும் என்பது நிச்சயமில்லை. ஸ்ரீகிருஷ்ணர் குதிரைகளைக் குளிப்பாட்டும் அழகை வியாசர் மிக அழகாக மகாபாரதத்தில் விவரிக்கிறார்.

அதுமட்டுமல்ல தேரில் இருந்து போரிடும் வீரன் தேர் எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதை தன் காலால் தேரோட்டியின் தோளில் அழுத்தி சமிக்ஞை செய்வான். அதன்படி தான் சாரதி தேரை ஓட்ட வேண்டும். அப்படி அர்ஜுனனின் கால்மிதிகளை பதினெட்டு நாள் வாங்கிக்கொண்டு சாரதியாக இருந்திருக்கும் பகவான் கர்மயோகத்தை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் விளக்கி இருக்கிறார்.)


-என்.கணேசன்

Friday, November 16, 2007

இவரல்லவோ மனிதர்!


தமிழில் ஒரு பழமொழி உண்டு. "அரை படி அரிசியில் அன்னதானம்; விடிகிற வரையில் மேளதாளம்". ஒரு சிறு சாதனையையோ, நல்ல காரியத்தையோ செய்து விட்டால் போதும் கூரை மேல் நின்று பறை சாற்றுகிற பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் சத்தமில்லாமல் பலவற்றை சாதித்து அடக்கமாக இருக்கும் மகத்தான மனிதர்களும் உள்ளனர்.

சாதனை என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு மனிதரைக் காட்டச் சொன்னால் தாமஸ் ஆல்வா எடிசனை விடப் பொருத்தமானவரைக் காட்ட முடியாது. அவரது கண்டுபிடிப்புகள் ஆயிரத்திற்கும் மேல். வேறெந்த விஞ்ஞானியும் அந்த எண்ணிக்கையில் பாதி கூட வந்ததாகத் தகவல் இல்லை. அவர் செய்த சாதனைகளையும் விட அவருடைய மனப்பக்குவம் பெரியது என்றே சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு சில
நிகழ்வுகள்.....

அக்காலத்தில் மின்சாரத்தை சேமித்து வைக்கும்பேட்டரிகள் மிகக் கனமாகவும், எளிதில் உடைவதாகவும் இருந்தன. எடை குறைந்த உறுதியான பேட்டரியைக் கண்டு பிடிக்க முயன்றார் எடிசன்.

ஆராய்ச்சிகள் சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்தன. சுமார் 8000க்கும் மேற்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. "எடிசனின் பேட்டரி கனவு முயற்சிகள் தோல்வி" என்று பத்திரிக்கைகள் திரும்பத் திரும்ப எழுதி வந்தன.

ஆனால் எடிசன் மனம் தளரவில்லை. "நாம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யத் தயாராக இருந்தால், இயற்கையும் தன் ரகசியங்களை வெளிப்படுத்த மறுக்கப் போவதில்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார்.

ஒரு முறை ஒரு நிருபர் அவரிடம் கேட்டார். "தங்களுடைய 8000 ஆராய்ச்சிகளும் வீண் தானே?"

எடிசன் சொன்னார். "இல்லை. இந்த 8000 விதங்களில் எனது பேட்டரியை உருவாக்க முடியாது என்பதை நான் கண்டு பிடித்திருக்கிறேன். ஒரு வேளை நான் அந்த பேட்டரியை உருவாக்க முடியா விட்டாலும், எனக்குப் பின் வரும் விஞ்ஞானிகள் இந்த 8000 விதங்களைத் தவிர்த்து வேறு புதிய முறைகளில் தங்களது ஆராய்ச்சியைத் தொடரலாமே"

தன் முயற்சியின் பலன் தங்கள் பிள்ளைகளைத் தவிர வேறு எவருக்காவது போய் சேர்ந்தால் வயிறு எரிந்து சாகும் மனிதர்கள் மத்தியில் இவருக்கு எப்படிப்பட்ட பரந்த மனம் பாருங்கள்!

மேலும் 2000 முயற்சிகளுக்கும் பிறகு அவரே அந்த பேட்டரியை (nickel-iron-alkaline storage battery) கண்டு பிடித்தார்.

அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும், வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்று அவரைத் தவிர யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித் தரமாகக் கூறினர்.

ஒன்று, மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. இரண்டு, அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்க முடியாது. மூன்று, மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலக் கட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்து இருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது.

வழிகள் இல்லா விட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தன் ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். 200 நோட்டுப் புத்தகங்களில் 40000 பக்கங்களுக்கும் மேற்பட்ட பக்கங்களில் தம் கருத்துக்களையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

முடிவில் அவரது கனவு நனவானது. உலகிலேயே மின் விளக்குகளால் ஒளி பெற்ற நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.

பத்திரிக்கையாளர்களும், சக விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்ற போது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறொரு ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்: "நேற்றைய கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை"

ஒரு சாதனை செய்து விட்டால் அதிலேயே மகிழ்ந்து திளைத்து மயங்கும் மனிதர்கள் மத்தியில், உலக சாதனை புரிந்த போதும் அதை நேற்றைய கண்டுபிடிப்பு என்று இயல்பாகக் கூறி அடுத்த சாதனை படைக்கக் கிளம்பிய இவர் அற்புத மனிதரேயல்லவா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் செய்ததைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் பழக்கம் இல்லாததால் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டிபிடிப்புகளுக்கான நேரம் அவரிடம் இருந்தது.

இளைஞர்களே, சோதனைகளைக் கடந்தே சாதனைகள் வரும். எடிசனின் "வெற்றியில் 1% அறிவு, 99% உழைப்பு" என்கிற வாசகம் பிரசித்தமானது"

அந்த ஒரு சதவீதத்தை இறைவன் நம் அனைவருக்கும் அளித்துள்ளான். அத்துடன் 99 சதவீத உழைப்பைச் சேர்த்தால் எவரும் எடிசனைப் போல சாதனைகள் படைக்கலாம்.

-என்.கணேசன்

Tuesday, November 13, 2007

படித்ததில் பிடித்தது- WHAT IS MATURITY?



இன்றைய உலகில் அறிவுக்குப் பஞ்சமில்லை. பக்குவத்தைத் தான் அதிகம் பார்க்க முடிவதில்லை. பக்குவம் என்பதென்ன என்ற கேள்விக்கு அருமையான பதிலை சமீபத்தில் படித்தேன். இப்படி நாமும் பக்குவமாக இருக்க முயற்சி செய்யலாமே!

-என்.கணேசன்.

What is Maturity?
(from Courage to Change: One Day At a Time in Al-Anon, page 63)

Knowing myself.

Asking for help when I need it and acting on my own when I don't.

Admitting when I'm wrong and making amends.

Accepting love from others, even if I'm having a tough time loving myself.

Recognizing that I always have choices, and taking responsibility for the ones I make.

Seeing that life is a blessing.

Having an opinion without insisting that others share it.

Forgiving myself and others.

Recognizing my shortcomings and my strengths.

Having the courage to live one day at a time.

Acknowledging that my needs are my responsibility.

Caring for people without having to take care of them.

Accepting that I'll never be finished -- I'll always be a work-in-progress.

Saturday, November 10, 2007

வாழ்க்கையில் ஒரு சவால்

சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள். இதில் எது சரி என்ற கேள்விக்கு சரியான விடையை அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கேள்விக்கு அழகான பதில் ஒன்று சமீபத்தில் நான் படித்த நாவலில் எனக்குக் கிடைத்தது. அந்த நாவல் Paulo Coelho எழுதிய The Alchemist.

அந்த நாவலில் கதாநாயகன் தன் பிரயாணத்தின் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு சித்தரைப் போன்ற மனிதரைச் சந்திக்கிறான். அந்த மனிதர் ஒரு டீ ஸ்பூனை அவனிடம் கொடுத்து அதில் இரண்டு சொட்டு எண்ணையையும் ஊற்றி அந்த எண்ணெய் சிந்தி விடாதபடி அந்த ஸ்பூனை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொன்னார். கதாநாயகன் அப்படியே கவனமாக அந்த ஸ்பூனுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான்.

அவர் அந்த ஸ்பூனில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்து விட்டு அவனிடம் ஊரில் உள்ள அழகான சில இடங்களின் பேரைச் சொல்லி அதையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று கேட்கிறார். கதாநாயகன் தன்னால் அதையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் சொல்கிறான்.

அந்த மனிதர் திரும்பவும் அந்த ஸ்பூனுடன் சென்று அந்த இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார். அவனும் சென்று அவர் சொன்ன இடங்களை எல்லாம் நன்றாக ரசித்து விட்டு வருகிறான். உற்சாகமாகத் தான் கண்டு களித்த இடங்களின் அழகை வர்ணிக்கிறான்.

அதையெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். "சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

அப்போது தான் அந்த ஸ்பூனில் எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

அந்த மனிதர் அந்தக் கதாநாயகனுக்குச் சொல்லும் அறிவுரை பொருள் பொதிந்தது.

"Well, there is only one piece of advice I can give you," said the wisest of wise men. "The secret of happiness is to see all the marvels of the world, and never to forget the drops of oil on the spoon".

அந்த மனிதர் அந்த நாவலின் கதாநாயகனை அனுப்பியது போல் தான் கடவுளும் நமக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் என்ற எண்ணெயைக் கொடுத்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்தும் வர இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறா விட்டாலும் நாம் உண்மையான சந்தோஷத்தையும் நிறைவையும் இந்த வாழ்க்கையில் பெற முடியாது. நல்லபடியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வோம். அதே நேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

இனியொரு வாழ்க்கை நமக்கு இருக்குமா, இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நமக்கு நிச்சயமில்லை. ஆகவே கிடைத்த இந்த வாழ்க்கையில் அர்த்தத்தையும், ஆனந்தத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

- என்.கணேசன்.

Wednesday, November 7, 2007

மனிதன் மாறவில்லை


"யார் வேணும்?"

"சுசீலாங்கறது...."

"நான் தான். நீங்க...?"

திவாகர் ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னான். "என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. உங்க கணவர் சோமநாதன் என்னை இங்கே அனுப்பினார்"

கணவரின் பெயரைக் கேட்டவுடன் அந்தம்மாள் முகம் இறுகியது. கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன. எல்லாம் ஒரு கணம் தான். மறு கணம் முக இறுக்கம் தளர்ந்து இயல்பான நிலைக்கு வந்தாள். ஆனாலும் வாசற்படியை விட்டு நகர்ந்து அவனை உள்ளே அழைக்கவில்லை. அவனை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள். "உங்களுக்கு அவர் எப்படிப் பழக்கமானார்?"

"கோயமுத்தூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அவர் இருக்கார். என் சினேகிதன் ஒருவனைப் பார்க்க அங்கே போனப்ப பக்கத்து பெட்டில் இருந்த அவர் பழக்கமானார்."

"சரி சொல்லுங்க, என்ன விஷயம்?"

கண்கள் கலங்க அந்தக் கிழவர் சொல்லியிருந்தார். "எனக்கு டாக்டர் இன்னும் கொங்சம் காலம் தான் கெடு கொடுத்திருக்கார்னு அவளுக்கு நீ தெரிவிக்கணும். நடந்ததுக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லணும். அவளையும் குழந்தைகளையும் என்னை ஒரு தடவை வந்து பார்க்கச் சொல்லுப்பா. நீ என் மகன் மாதிரி. எனக்காக இந்த ஒரு உபகாரம் செய்யிப்பா"

அவர் சொல்லச் சொன்னதை சொல்லி அதற்காக தான் ஈரோடு வந்ததைத் தெரிவித்தான். சுசீலாம்மாவின் முகத்தில் அதிர்ச்சியோ, துக்கமோ, இரக்கமோ தெரியவில்லை. ஆனால் வாசற்படியில் இருந்து நகர்ந்தாள். "உள்ளே வாங்க"

திவாகர் உள்ளே போனான். வீடு சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது.

"உட்காருங்க"

இருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் திவாகர் உட்கார்ந்தான்.

"என்ன சாப்பிடறீங்க?"

"எதுவும் வேண்டாங்க. இப்ப தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்"

இன்னொரு நாற்காலியில் அவளும் அமர்ந்தாள். அமைதியாக அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அவனே பேசினான். "இப்ப அவர் ரொம்பவே கஷ்டப்படறாருங்க. மத்தவங்க உதவியில்லாம அவரால் இருக்க முடியாதுங்க. என் சினேகிதனும் நேத்து டிஸ்சார்ஜ் ஆயிட்டான். அதனால ஆஸ்பத்திரியில் அவர் கூட துணைக்கு இப்ப என் மனைவியைத் தான் விட்டுட்டு வந்திருக்கேன். பாவங்க அவர்"

அவள் ஒரு கணம் நிதானித்து அமைதியாக அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "நீங்க அவர் அறுவடை செய்யறப்ப பார்க்கிறீங்க தம்பி. அதனால் அப்படி சொல்றீங்க. அவர் விதைக்கறப்ப நீங்க பார்த்ததில்லை. அதிருக்கட்டும். நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டதா சொன்னாரே, நடந்தது என்னன்னு உங்க கிட்ட சொன்னாரா?"

"ரொம்ப நாளுக்கு முன்னால் உங்களையும் உங்க குழந்தைகளையும் விட்டு ஓடிப் போயிட்டதாய் சொன்னார்"

அவள் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை தவழ்ந்தது. "இந்த மாதிரி ஆள்களோட புத்திசாலித்தனமே தங்களோட தப்பை ரொம்பவும் பொதுவாய் சொல்றது தான். கேட்கறவங்களுக்கும் என்ன இவ்வளவு தானே, மன்னிச்சு விட்டுடக் கூடாதான்னு தோணும். ஒரு பத்திரிக்கையில் மணமகள் தேவைங்கற விளம்பரம் பார்த்து ஆன கல்யாணம் என்னோடது தம்பி. ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருப்பதாய் பொய் சொல்லி அந்த ஆள் என்னையும் எங்கப்பாவையும் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார். பிறகு தான் உண்மை தெரிஞ்சது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறக்கிற வரை கூட இருந்தார். இருந்த வரைக்கும் சில நாள் வேலைக்குப் போவார். பல நாள் வீட்டில் சும்மா இருந்து பொழுதைப் போக்குவார். ஆனால் எங்கப்பா வேலையில் இருந்ததால் அவர் சம்பளத்தில் எங்கள் குடும்பம் நடந்தது..."

சொல்லும் போது அந்தம்மாள் அந்த நாட்களுக்கே போய் விட்ட மாதிரி திவாகருக்குத் தோன்றியது. அவள் முகத்தில் துக்கம் தேங்கி நின்றது.

"ஒரு நாள் அப்பாவும் ரிடையர் ஆனார். அவருக்கு சொந்த வீடு வாங்கணும்னு ரொம்ப நாளாய் ஒரு கனவு தம்பி. ஒரு வீட்டைப் பார்த்து பேசியும் முடிச்சுட்டார். கிரயம் செய்யறதுக்கு முந்தின நாள் ரிடையர் ஆகிக் கிடைச்ச பணம், இது வரை சேர்த்து வெச்ச பணம் எல்லாத்தையும் பேங்கிலிருந்து எடுத்து வீட்டில் வெச்சிருந்தார். அன்னைக்கு ராத்திரி அந்த ஆள் எனக்கும் எங்கப்பாவுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டு என் நகைகள், அப்பாவோட பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிட்டார். போறப்ப என் காது, மூக்கு, கழுத்திலிருந்த நகைகளை மட்டுமல்ல என் தங்கத் தாலிக் கொடியைக் கூட விட்டு வைக்கலை"

பரம சாதுவாய் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கும் அந்த முதியவர் இந்தக் காரியம் செய்தார் என்பதை நம்பவே அவனுக்குக் கஷ்டமாய் இருந்தது. "அப்ப உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்குப் புரியுதும்மா. ஆனாலும் அவர் சாகக் கிடக்கிற இந்த நேரத்தில் நீங்க பெரிய மனசு பண்ணி மறந்து மன்னிக்கணும்மா"

அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். "அவர் போனதைத் தொடர்ந்து என் வாழ்க்கை சுலபமாய் இருந்திருந்தால் மன்னிக்கலாம். மறக்கலாம். ஆனா அப்படி இருக்கலியே தம்பி. பணமும், மருமகனும் போன அதிர்ச்சியில் என் அப்பா மாரடைப்பால காலமாய்ட்டார். ரெண்டு குழந்தைகளோட நான் நடுத்தெருவில் நின்னேன் தம்பி. அப்பத் தான் நரகம்கிற நாலெழுத்து வார்த்தையோட நிஜ அர்த்தம் எனக்குப் புரிஞ்சது தம்பி. நிராதரவாய் நின்ன என்னைப் பார்த்து, கூடப் படுக்க வர்றியான்னு கூப்பிட்ட அயோக்கியன்களும் இருந்தாங்க. இப்ப அதை நினைச்சாலும் எனக்கு வயிறு பத்தி எரியுது தம்பி. என்னை இப்படியொரு நிலையில் நிக்க வச்சுட்டு எங்க பணத்தில் எங்கேயோ ஜாலியாய் இருந்த ஆளை என்னால் மன்னிக்க முடியும்னு நினைக்கிறீங்களா தம்பி?"

திவாகர் தர்ம சங்கடத்தோடு நெளிந்தான். அவள் அந்த அறையின் மூலையில் இருந்த தையல் மெஷினைக் காண்பித்து தொடர்ந்து சொன்னாள். "எங்களைப் பார்த்து பரிதாபப்பட்டு ஒரு புண்ணியவான் இந்த மெஷினை வாங்கிக் கொடுத்து ஒரு கம்பெனியில் தைக்க ஆர்டரும் வாங்கிக் கொடுத்தார் தம்பி. ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் இந்த மெஷினில் தைப்பேன். புது வருஷம் தீபாவளின்னா இன்னும் நேரம் கூடும். இப்படி ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லை தம்பி பதினைந்து வருஷங்கள் உழைச்சேன். அதோட விளைவு இன்னைக்கும் தீராத முதுகு வலியால் அவஸ்தைப் படறேன். பையன் படிச்சு ஒரு சுமாரான வேலையில் இருக்கான். பெண்ணை ஒரு கௌரவமான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கேன். இப்பவும் அந்த ஆளை ஒரு கிரிமினலாய்த் தான் என் குழந்தைகள் நினைக்கிறாங்க"

திவாகர் ஒரு கணம் அந்தம்மாளின் அன்றைய நிலையை எண்ணிப் பார்த்தான். அந்த நிலையில் மன உறுதி இல்லாத வேறு நபர் இருந்திருந்தால் நிலைமை சீரழிந்து போயிருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவள் தொடர்ந்தாள். "சம்பந்தமே இல்லாத ஒரு வயதான மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றணும்னு நல்ல மனசோட இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க தம்பி. அதனால தான் உங்களை உள்ளே உட்கார வச்சுப் பேசறேன் உங்களை மாதிரி நல்ல மனசிருக்கிற நாலு பேராலத்தான் இன்னைக்கு நாங்க கௌரவமாக இருக்கோம். யாரோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு இல்லாம இரக்கப்பட்டு எங்களுக்கு உதவி செஞ்ச அந்த சில நல்ல மனுஷங்களுக்கு நாங்க எப்பவுமே கடமைப்பட்டிருக்கோம். ஆனா ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடக்கிற அந்த ஆளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை."

அவள் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அவன் எழுந்து நின்றான். "நான் அவர் கிட்ட என்ன சொல்லட்டும்?"

"அவரை மன்னிச்சு அவர் செஞ்சதெல்லாம் மன்னிக்கக் கூடிய தப்புன்னு அங்கீகரிக்க நாங்க தயாராயில்லைன்னு சொல்லுங்க. சௌகரியப் படறப்ப தப்பு செய்யறதும், தேவைப் படறப்ப திருந்தறதும் வடிகட்டின சுயநலம்னு சொல்லுங்க. பழைய தமிழ் சினிமா வில்லனாட்டம் கடைசி காட்சியில் திருந்தறதை, இப்ப சினிமாவில் கூட யாரும் ரசிக்கறதில்லைன்னு சொல்லுங்க தம்பி". ஆவேசமாகவும் ஆணித்தரமாகவும் வந்தது பதில்.

கடைசி வரை கணவனை 'அந்த ஆள்' என்றே அவள் அழைத்ததையும் ஒரு முறை கூட அவர் உடம்புக்கு என்ன நோய் என்று கேட்காததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அந்தம்மாள் சொன்ன எல்லாவற்றிலும் நியாயம் இருந்தது, உண்மை இருந்தது. இத்தனையையும் சமாளித்து அவள் தாக்குப் பிடித்து சாதித்து இருக்கும் விதத்தையும் அவன் மனதாரப் பாராட்டினான். ஆனாலும் மரணப் படுக்கையில் இருக்கும் மனிதனின் பழைய கணக்கைப் புரட்டிப் பார்க்காமல் உடனே பார்க்க அவள் கிளம்பி இருந்தால் இன்னும் உயர்வாக இருந்திருக்கும் என்று அவன் மனதுக்குப் பட்டது. அங்கிருந்து அவன் கிளம்பும் போது போன காரியம் தோல்வி என்று அவருக்குத் தெரிவிப்பதெப்படி, அவர் அதை எப்படித் தாங்குவார் என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவன் மனதில் கனம் கூடியது.

கோயமுத்தூர் போய் சேர்ந்து அவன் ஆஸ்பத்திரியை அடைந்த போது அவன் மனைவி அவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தாள். "போன ஜென்மத்தில் நீ எனக்கு மகளாய் இருந்திருப்பாய்னு தோணுதம்மா." என்று சொன்னது அவன் காதில் விழுந்தது.

அவனைப் பார்த்தவுடன் தன் குடும்பத்தினர் யாராவது அவன் பின்னால் இருக்கிறார்களா என்று கிழவர் எட்டிப் பார்த்தார். பின்பு ஆர்வத்துடன் அவனைக் கேட்டார். "சுசீலாவையும் என் மகனையும் பார்த்தாயா? என்ன சொன்னாங்க?"

திவாகர் சுசீலாம்மாள் சொன்னதை விவரிக்கப் போகாமல், அவர்கள் மன்னிக்கவோ, மறக்கவோ தயாரில்லை என்பதை மட்டும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னான். அவர் முகம் கறுத்தது.

"அந்த சனியனுக நல்லாயிருக்காதுகப்பா. நான் தப்பே செய்யலைன்னு சொல்லலை. ஆனா அதுக்குத் தான் நான் மன்னிப்பு கேட்கிறேனே. வேறொன்னுமில்லையப்பா. அவளை விட்டுட்டு வர்றப்ப அவள் நகைகளைக் கொஞ்சம் எடுத்துட்டு வந்துட்டேன். அவள் அதை இன்னும் மறக்கத் தயாரில்லை. கட்டின புருஷனை விட அவளுக்கு நகைகள் தான் பெருசாயிடுச்சு."

திவாகர் அதிர்ந்து போனான். அவனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்ல. இது திருந்தி தன் செய்கைகளுக்காக வருந்தும் ஒரு மனிதனின் பேச்சாக இல்லையே.

"அவள் உன்னை சரியாக நடத்தி இருக்க மாட்டாள். அது உன் முகம் பார்த்தாலே தெரியிது. அவள் சார்பில் நான் உன் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். எனக்கு மட்டும் என்னைக் கடைசி காலத்தில் பார்க்க நாதி இருந்திருந்தா அந்த நாயிங்க கிட்டே உன்னை அனுப்பிச்சிருக்க மாட்டேன்." என்றவர் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பழுப்பேறிய காகிதத்தை எடுத்தார். "அந்த மூதேவி என்னைக் கை விட்டுட்டா. இந்த விலாசத்தில் இருக்கிற ஸ்ரீதேவியாவது என் மேல் கருணை காட்டறாளான்னு பார்ப்போம். இவள் என் இளைய தாரம். பழசையெல்லாம் மற்ந்துட்டு உடனடியாய் என்னை வந்து பார்க்கச் சொல்லு. அந்த மூதேவி கிட்ட போனதைப் பத்தி இவ கிட்டே மூச்சு விட்டுடாதே. நீ என் மகன் மாதிரி. இத்தனை உதவி செஞ்ச நீ இதையும் எனக்காக செய்யப்பா. ஏழேழு ஜென்மத்துக்கும் உன் உதவியை நான் மறக்க மாட்டேன்...." சொல்லும் போது கிழவரின் குரல் தழுதழுத்தது.

திவாகருக்கு அவரைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. அவர் சட்டைப் பையில் இன்னும் எத்தனை தேவியரின் விலாசங்கள் இருக்குமோ, அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் அவருக்கு மன்னிப்போ, பாசமுள்ள குடும்பத்தினரோ தேவையில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம், இந்தக் கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ள சில ஆட்கள். மன்னிப்பு, திருந்துவது எல்லாம் அதற்கான யுக்திகள் தான். நினைத்தவுடன் வரும் கண்ணீரும், 'மகன் மாதிரி', 'மகள் மாதிரி' என்ற வார்த்தைகளும் அவனைப் போல் இளகிய உள்ளம் படைத்தவர்களுக்கு அவர் போடும் தூண்டில்கள். சாகப் போகிறவர்கள் எல்லாம் நிஜமாய் திருந்தத் துடிப்பவர்கள் என்றும், கஷ்டப்படுகிறவர்கள் எல்லாம் இரக்கப்படத் தகுந்தவர்கள் என்றும் இது நாள் வரை யதார்த்தமாக நம்பி வந்த அவன் சுலபமாய் அந்தத் தூண்டிலில் சிக்கி விட்டான்.

இது போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை இன்னமும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை, இந்த மனிதனுக்காக ஆபிசிற்கு இரண்டு நாள் லீவு போட்டு, குழந்தைகளைப் பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் விட்டு, சேவை செய்ய மனைவியை ஆஸ்பத்திரியில் உட்கார வைத்து, வெளியூர் சென்று விலாசம் தேடி அலைந்து கண்டு பிடித்து அங்கும் 'இந்த ஆளி'ற்காகப் பரிந்து பேசிய தன்னைப் போல் ஒரு பைத்தியக்காரன் இந்த உலகில் இருக்க முடியுமா என்று திவாகர் யோசித்தான். கடைசிக் காட்சியில் கூடத் திருந்தாத இந்த வில்லனிடம் பேசக் கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. மௌனமாக அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

"சரோஜா, ஒரு நிமிஷம் வா" என்று மனைவியை வெளியே அழைத்து வந்து "வா வீட்டுக்குப் போகலாம்" என்றான்.

"ஐயோ அந்தப் பெரியவர் தனியாக..." என்று அவள் ஏதோ சொல்லப் போனாள்.

"இனி அந்த ஆளைப் பத்தி ஏதாவது பேசினா நான் கொலைகாரனாய் மாறிடுவேன்" என்று ஒரே வாக்கியத்தில் அவள் வாயை அடைத்தான். தெருவிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்தப் பழுப்பு நிற விலாசக் காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்தான். அந்தக் காகிதத் துகள்களை காற்றில் பறக்க விட்டு விட்டு வேகமாய் வீடு நோக்கி நடக்கும் கணவனைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைப்புடன் சரோஜா அவனைப் பின் தொடர்ந்தாள்.

-என்.கணேசன்

Monday, November 5, 2007

அவசரம் தேவையா? (2)

சிலர் நேரமே இல்லை, அதனால் தான் அவசரப்படுகிறோம் என்று கூறலாம். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை எப்படியெல்லாம், எதிலெல்லாம் செலவழிக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு கணிசமான பகுதி உபயோகமில்லாத, தேவையில்லாத செயல்களில் வீணாகி இருப்பதை அறியலாம்.

தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தினால் தேவையானதைச் செய்ய நிறைய நேரம் மிஞ்சும். அவசரப்பட வேண்டிய அவசியமே இருக்காது.

டாக்டர் காப்மேயர் ஒரு நூலில் அழகாகக் கூறினார். "சாதனை புரிந்தவர்கள் கடிகாரத்தோடு போராடவில்லை. மாறாக அந்தக் கால மணல் கடிகாரத்தில் ஒவ்வொரு மணல் துணுக்காக விழுவது போல அவசரமில்லாமல் ஒரு நேரத்தில் ஒரு செயல் என நிதானமாக வாழ்ந்தார்கள்".

அந்தக் காலத்து மணல் கடிகாரத்தில் இரண்டு பரந்த பாகங்களுக்கு நடுவே மணல் துகள்கள் ஒவ்வொன்றாக மட்டுமே போக முடிந்த அளவுக்கு மிகக் குறுகலான இடைப்பகுதி இருக்கும். மேலே எத்தனை மணல் துகள்கள் இருந்தாலும் அந்த இடைப்பகுதி ஒவ்வொரு மணல் துகளை மட்டுமே கீழே அனுப்பும். இந்த உதாரணத்தை நாமும் நம் மனதில் நிறுத்திப் பதட்டமோ, தடங்கலோ இல்லாமல் அவசரமோ சோம்பலோ படாமல் செய்ய வேண்டிய செயல்களை முறைப்படுத்தி ஒவ்வொன்றாய்ச் செய்வது நலம்.

ஆனால் நமக்கிருக்கும் அவசரத்தில் பல சந்தர்ப்பங்களில் ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்ய முற்படுகிறோம். அவ்வாறு செய்ய முனையும் போது எந்த ஒரு செயலுக்கும் நம்மால் முழுக்கவனம் செலுத்த முடிவதில்லை. ஆகவே செயல்கள் பெரும்பாலும் அரை குறையாகவே முடிகின்றன. எந்த ஒரு காரியத்தையும் முழுக்கவனத்தோடு செய்யும் போது தான் அது நேர்த்தியான சிறப்படைகிறது. விரைவாகவும் செய்ய முடிகிறது. அந்த செயலை நாம் மறுபடி சரி செய்ய வேண்டி வராது. செய்த வேலைக்காக வருந்த வேண்டி இருக்காது. எல்லா பெருஞ்சாதனையாளர்களும் ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று நிதானமாகவும், தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட்டதால் தான் அவர்களால் அதிகமான சாதனைகளைத் திறம்பட செய்ய முடிந்தது.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். மறுநாள் முக்கியமான பரீட்சையோ, நேர்முகத் தேர்வோ, பிரயாணமோ இருந்தால் தேவையானவற்றை முன் தினமே தயார் செய்யுங்கள். கடைசி நேரத்தில் பரபரக்க வேண்டிய அவசியம் இருக்காது. தினமும் அதிகாலையில் எழுவது ஒரு அருமையான பழக்கம். அது முடியாதவர்கள் தான் தினசரி வாழ்க்கையை அவசர ஓட்டத்தில் ஆரம்பிக்கிறார்கள். அந்த ஓட்டம் இரவு வரை தொடர்வதும் அந்த ஆரம்பப்பிசகால் தான்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய முக்கியமான செயல்களின் பட்டியலை முன் கூட்டியே எழுதி வையுங்கள். ஒவ்வொரு செயலையும் கவனமாக, சீராகச் செய்யுங்கள். மணல் கடிகார உதாரணத்தை மனதில் என்றும் வைத்திருங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று சீரான வேகத்தில் செயல்படுங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு முன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டீர்களா என்று கவனியுங்கள். இப்படிக் கவனமாகவும், ஒழுங்காகவும் முன் யோசனையுடனும் செயல்பட்டால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் அலட்டிக் கொள்ளாமல் நிறைய சாதிக்கலாம்.

ஒரு விதை செடி ஆக, பூ காய் ஆக, காய் கனி ஆக, முட்டை குஞ்சு ஆக, கரு குழந்தை ஆக என இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் தேவைப்படுகிறது. அந்தக் காலம் முடியும் வரை அந்தப் பலனை விரும்புபவர்கள் காத்திருந்தே ஆக வேண்டும். அது போல நாம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் முறையாக, குறையில்லாமல் செய்து விட்டால் பின்பு நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையாக நம்பிக்கையோடு காத்திருப்பது தான். இதில் குறுக்கு வழி இல்லை.அப்படி உள்ளதாக எண்ணி அவசரப்பட்டு ஏதேதோ செய்யப் போனால் நாம் உருவாக்கியதை நாமே சிதைப்பது போலத் தான். விரும்புவது கிடைக்காமலே போய் விடும்.

கீரை விதைப்பவன் பலனைச் சில நாட்களில் அடையலாம். ஆனால் தென்னை விதைப்பவன் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும். லட்சியத்தின் அளவு பெரிதாகப் பெரிதாக நாம் உழைக்க வேண்டிய காலமும், காத்திருக்க வேண்டிய காலமும் அதிகம் தான்.

ஆகவே நோய்களைத் தவிர்க்க வேண்டுமானால், நிறைய சாதிக்க வேண்டுமானால் அவசரத்திற்கு உடனடியாக விடை தந்து விட்டு வாழ்க்கையை நிதானமாக வாழ்வோம்.

-என். கணேசன்

Thursday, November 1, 2007

அவசரம் தேவையா? (1)

ன்று நாம் ஓர் ஏவுகணையின் வேகத்தில் வாழ்கிறோம். அதிகமாகி விட்ட தேவைகள், சந்திக்க வேண்டிய போட்டிகள், எளிதில் வெற்றி பெறத் துடிக்கும் வெறி எல்லாம் சேர்த்து நம்மை வேகமாக ஓடத் துரத்துகின்றன.

அசுர வேகத்தில் இயங்கா விட்டால் இந்த சமூகத்தில் நாம் தாக்குப் பிடிக்கவே முடியாது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்த அவசர வாழ்க்கை முறைக்கு ஈடாக நம் ஆரோக்கியத்தையும்மன அமைதியையும் இழப்பதை நாம் ஏனோ உணர மறந்து விடுகிறோம்.

இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, ஜீரணக் கோளாறு, இதய நோய்கள் என அவசர வாழ்க்கை முறை தரும் நோய்களை இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் பட்டியல் இடுகின்றன. காரணம், ஒவ்வொரு அவசர சூழ்நிலையில் நாம் இயங்கும் போதும் நமது நரம்பு மண்டலமும், முக்கியமான பல உள் உறுப்புகளும் முடுக்கி விடப்படுகின்றன. அவை வழக்கத்தை விட விரைவாக இயங்குகின்றன.

மிக முக்கியமான அவசரக் கட்டத்தில் இப்படி இயங்க வேண்டியவை, தினமும் தொடர்ந்து எல்லாச் சமயங்களிலும் இயங்க வேண்டி இருப்பதால் சீக்கிரமே பழுதடைந்து விடுகின்றன. நோய்களை நாமே சீக்கிரம் வரவழைத்துக் கொள்கின்றோம்.

டாக்டர் மெயர் ·ப்ரைமேன் மற்றும் டாக்டர் ரே ரோசன்மேன் என்ற இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பிற்கான காரணங்களைப் பல வருடங்கள் ஆராய்ந்தார்கள். மிகத் துரிதமாக வாழ்க்கையை வாழத் துடிப்பவர்களும், குறுகிய காலத்தில் லாபத்தையும் வெற்றியையும் அடைய விரைபவர்களுமே அதிகமாக மாரடைப்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என முடிவில் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள், "தவறான உணவு முறைகளும், சிகரெட்டுகளும் குண்டுகள் என்றால், அவசர வாழ்க்கை முறையே துப்பாக்கியாக இருக்கிறது" என்கிறார்கள்.

வாழ்க்கையில் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நமக்கு மிக நெருங்கியவர்களின் உணர்வுகளையோ, மானசீகத் தேவைகளையோ புரிந்து கொள்ளவும் நேரமில்லாமல் போய் விடுகிறது. நம்மைச் சுற்றி உள்ள சின்னச் சின்ன அழகுகளையும், நல்ல விஷயங்களையும் ரசிக்கத் தவறுகிறோம். ருசித்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக விழுங்கி விரைகிறோம். குழந்தைகளைப் பெறுகிறோம். அவர்களின் குறும்புகளின் குறும்புகலையும், மழலையும் ரசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. வீட்டை அழகான பொருள்களால் நிரப்ப முடிந்தாலும் அவற்றை நின்று ரசிக்க முடிவதில்லை. வீட்டில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்பது பெரும்பாலும் இல்லை.

சில நிமிடங்கள் கிடைத்தாலும் அதை டி.வி. திருடி விடுகிறது. பொருளையும், பணத்தையும் சேர்க்கும் அவசரத்தில் நாம் வாழ்க்கையைக் கோட்டை விட்டு விடுகிறோம்.

நம் முன்னோர்களை விட எல்லா வித வசதிகளிலும் முன்னேறி உள்ள நாம் அவர்களை விடச் சந்தோஷமான நிறைவான வாழ்க்கை வாழ்கிறோமா என யோசித்தால் இல்லை என்பது தெரியும். இந்த அவசர வாழ்க்கைக்கு நாம் தரும் விலை மிக மிக அதிகம்.

நாம் கிட்டத்தட்ட இயந்திரங்களாக மாறி வருகிறோம். ஆனால் இயந்திரம் கூடத் தன் சக்திக்கேற்ற வேகத்தில் மட்டுமே இயங்குகிறது. மற்ற இயந்திரங்களை முந்திக் கொள்ளவோ, ஜெயிக்கவோ இயங்குவதில்லை. நாம் வெற்றி பெறப் பாடுபடுவதற்கும், மற்றவர்களைத் தோற்கடிக்கப் பாடுபடுவதற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவதில் நம் சக்திகள் அனைத்தும் விரயமாகி மன அமைதியும் கெடுகிறது.

இந்த அவசரம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் சாதாரண தவிர்க்க முடியாத இடங்களில் கூட
நம்மால் அமைதியாக இருக்க முடிவதில்லை. சிக்னல்களில் ஓரிரு நிமிடங்கள் காக்க வேண்டி இருந்தால் நம்முள் பலரும் தவித்துப் போகிறோம். திருப்பதியில் தெய்வ தரிசனமானாலும் சரி, ரயில்நிலையத்தில் முன் பதிவுக்கானாலும் சரி, நீண்ட வரிசைகளில் நிற்க நேரிட்டால் முன்னால் நிற்பவரின் கால்களைப் பல முறை மிதித்துப் பலரும் முன்னேறத் துடிக்கிறோம். வேலையே இல்லா விட்டாலும் சிலரால் சும்மா இருக்க முடிவதில்லை. கால்களையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள்.

அதிவேகம் சுறுசுறுப்பல்ல. உண்மையில் அது சக்தி விரயம். அவசர புத்தி பின் புத்தி. அவசரத்தில் மனிதன் அதிகமாகப் பதட்டமடைகிறான், குழப்பமடைகிறான். அதனால் தவறுகள் பல செய்து அவற்றைச் சரி செய்ய ஒரே வேலையைப் பல முறை செய்ய நேரிடுகிறது.

(இது குறித்து மேலும் சொல்வேன். - என்.கணேசன்)