Friday, November 16, 2007

இவரல்லவோ மனிதர்!


தமிழில் ஒரு பழமொழி உண்டு. "அரை படி அரிசியில் அன்னதானம்; விடிகிற வரையில் மேளதாளம்". ஒரு சிறு சாதனையையோ, நல்ல காரியத்தையோ செய்து விட்டால் போதும் கூரை மேல் நின்று பறை சாற்றுகிற பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் சத்தமில்லாமல் பலவற்றை சாதித்து அடக்கமாக இருக்கும் மகத்தான மனிதர்களும் உள்ளனர்.

சாதனை என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு மனிதரைக் காட்டச் சொன்னால் தாமஸ் ஆல்வா எடிசனை விடப் பொருத்தமானவரைக் காட்ட முடியாது. அவரது கண்டுபிடிப்புகள் ஆயிரத்திற்கும் மேல். வேறெந்த விஞ்ஞானியும் அந்த எண்ணிக்கையில் பாதி கூட வந்ததாகத் தகவல் இல்லை. அவர் செய்த சாதனைகளையும் விட அவருடைய மனப்பக்குவம் பெரியது என்றே சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு சில
நிகழ்வுகள்.....

அக்காலத்தில் மின்சாரத்தை சேமித்து வைக்கும்பேட்டரிகள் மிகக் கனமாகவும், எளிதில் உடைவதாகவும் இருந்தன. எடை குறைந்த உறுதியான பேட்டரியைக் கண்டு பிடிக்க முயன்றார் எடிசன்.

ஆராய்ச்சிகள் சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்தன. சுமார் 8000க்கும் மேற்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. "எடிசனின் பேட்டரி கனவு முயற்சிகள் தோல்வி" என்று பத்திரிக்கைகள் திரும்பத் திரும்ப எழுதி வந்தன.

ஆனால் எடிசன் மனம் தளரவில்லை. "நாம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யத் தயாராக இருந்தால், இயற்கையும் தன் ரகசியங்களை வெளிப்படுத்த மறுக்கப் போவதில்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார்.

ஒரு முறை ஒரு நிருபர் அவரிடம் கேட்டார். "தங்களுடைய 8000 ஆராய்ச்சிகளும் வீண் தானே?"

எடிசன் சொன்னார். "இல்லை. இந்த 8000 விதங்களில் எனது பேட்டரியை உருவாக்க முடியாது என்பதை நான் கண்டு பிடித்திருக்கிறேன். ஒரு வேளை நான் அந்த பேட்டரியை உருவாக்க முடியா விட்டாலும், எனக்குப் பின் வரும் விஞ்ஞானிகள் இந்த 8000 விதங்களைத் தவிர்த்து வேறு புதிய முறைகளில் தங்களது ஆராய்ச்சியைத் தொடரலாமே"

தன் முயற்சியின் பலன் தங்கள் பிள்ளைகளைத் தவிர வேறு எவருக்காவது போய் சேர்ந்தால் வயிறு எரிந்து சாகும் மனிதர்கள் மத்தியில் இவருக்கு எப்படிப்பட்ட பரந்த மனம் பாருங்கள்!

மேலும் 2000 முயற்சிகளுக்கும் பிறகு அவரே அந்த பேட்டரியை (nickel-iron-alkaline storage battery) கண்டு பிடித்தார்.

அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும், வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்று அவரைத் தவிர யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித் தரமாகக் கூறினர்.

ஒன்று, மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. இரண்டு, அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்க முடியாது. மூன்று, மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலக் கட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்து இருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது.

வழிகள் இல்லா விட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தன் ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். 200 நோட்டுப் புத்தகங்களில் 40000 பக்கங்களுக்கும் மேற்பட்ட பக்கங்களில் தம் கருத்துக்களையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

முடிவில் அவரது கனவு நனவானது. உலகிலேயே மின் விளக்குகளால் ஒளி பெற்ற நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.

பத்திரிக்கையாளர்களும், சக விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்ற போது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறொரு ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்: "நேற்றைய கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை"

ஒரு சாதனை செய்து விட்டால் அதிலேயே மகிழ்ந்து திளைத்து மயங்கும் மனிதர்கள் மத்தியில், உலக சாதனை புரிந்த போதும் அதை நேற்றைய கண்டுபிடிப்பு என்று இயல்பாகக் கூறி அடுத்த சாதனை படைக்கக் கிளம்பிய இவர் அற்புத மனிதரேயல்லவா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் செய்ததைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் பழக்கம் இல்லாததால் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டிபிடிப்புகளுக்கான நேரம் அவரிடம் இருந்தது.

இளைஞர்களே, சோதனைகளைக் கடந்தே சாதனைகள் வரும். எடிசனின் "வெற்றியில் 1% அறிவு, 99% உழைப்பு" என்கிற வாசகம் பிரசித்தமானது"

அந்த ஒரு சதவீதத்தை இறைவன் நம் அனைவருக்கும் அளித்துள்ளான். அத்துடன் 99 சதவீத உழைப்பைச் சேர்த்தால் எவரும் எடிசனைப் போல சாதனைகள் படைக்கலாம்.

-என்.கணேசன்

13 comments:

  1. superb ! article !

    keep going on post this type of messages.

    ReplyDelete
  2. மனதிற்க்கு உற்சாகம் அளிக்கும் பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சமீபத்தில் வந்துள்ள ஒரு தரமான , செறிவான செய்திகள் கொண்ட பதிவு.
    தொடருங்கள். நன்றி.

    ReplyDelete
  4. Good article sir,We expect hore from you

    ReplyDelete
  5. எடிசன் ஒரு மகத்தான் கண்டுபிடிப்பாளர் என்று சொல்கிற அதே நேரத்தில், அவருக்கு எதிராகச் சொல்லப் படும் வாதங்களிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.. அதற்கும் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் காலத்திற்கு உள்ளது..

    ReplyDelete
  6. இது எனக்கு மெயிலில் வந்தது..

    //உலகின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர் யார் என கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன்
    என சிறு குழந்தையும் சொல்லும்.அவர் வாங்கிய பேடண்டுகளின் எண்ணிக்கை
    1093.ஒரு மனிதர் இத்தனை கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்திருக்க முடியுமா
    என அதிசயிக்கிறீர்களா? கவலையே படவேண்டாம்..சத்தியமா முடியாது.அவர் பேரில்
    இருக்கும் எந்த கண்டுபிடிப்பும் அவருடையது அல்ல.எல்லாம் அவர் கம்பனியில்
    தினகூலிக்கு வேலை பார்த்த எஞ்சினியர்கள் கண்டுபிடித்தது.கண்டுபிடிப்பு
    அவர்களுடையது.ஆனால் பேடண்டை மட்டும் எடிசன் வாங்கிகிட்டார்

    மற்றபடி தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர்
    சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில
    கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று
    உங்கள் பார்வைக்கு.

    எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை
    மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.
    எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி
    (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை
    மின்சாரத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
    வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது
    என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே
    பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.

    பத்திரிக்கையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை
    போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம்
    அந்த நாற்காலியில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20
    நிமிடம் துடிதுடித்து செத்தது. அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார
    வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு
    வினாடிகளில் செத்துவிட்டது.
    Image
    வெஸ்டிங்ஹவுஸ்

    "பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள்.
    பிழைத்துவிடுவார்கள். ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால்
    உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது" என பிரச்சாரம்
    செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

    அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா வந்தது. அப்போதெல்லாம் கொடும்
    குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை வெட்டிக்கொன்று
    கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில்
    வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என ஐடியா
    கொடுத்தார் எடிசன். அத‌ற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து
    அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு
    அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில்
    உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.

    ஆனால் மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது.
    முதலில் 2000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள்.
    சுயநினைவு தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின்
    உள்பாகங்களை எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம்
    உண்டு. அப்போது சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில்
    உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும். அதனால் இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டு
    அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

    ஏசி மின்சாரத்ததுறைக்கு நல்ல பங்களிப்பை தந்தவர் நிக்கலஸ் டெஸ்லா எனும்
    விஞ்ஞானி.இவரது பெயரை நீங்கள் கேள்விபடாமல் இருந்தால் அதுக்கு இருவர்
    காரணம்.ஒன்று எடிசன்,இன்னொன்று மார்க்கோனி..

    எந்த மார்க்கோனி என கேட்கிறீர்களா?ரேடியோவை கண்டுபிடித்ததாக நீங்கள்
    நம்பிகொண்டிருக்கும் மார்க்கோனிதான்.

    எடிசனுக்கு கீழே வேலை பார்த்த எஞ்சினியர் தான் டெஸ்லா.அவரது
    கண்டுபிடிப்புக்கள் பலவற்றுக்கு எடிசன் தன் பெயரில் பேடண்ட்
    வாங்கிவிட்டார்.கடைசியாக டெஸ்லா ரேடியோவை 1895ல் கண்டுபிடித்தார்.ஆனால்
    அவர் அதுக்கு பேடண்டு வாங்குவதுக்கு முன் இங்கிலாந்து மார்க்கோனி
    அரசவம்சத்தை சேர்ந்த மார்க்கோனி குடு, குடு என லண்டன் பேடண்ட் ஆபிசுக்கு
    போய் ரேடியோவுக்கு பேடண்ட் வாங்கிவிட்டார்.அப்புறம் அதை தூக்கிகொண்டு
    போய் அமெரிக்க பேடண்ட் ஆபிசுக்கு ஓடிபோய் ரேடியோவுக்கு பேடண்ட் கேட்டார்.

    பேடண்ட் தரும் அதிகாரி "இது டெஸ்லா கண்டுபிடிச்சதாச்சே?" என கேட்டார்

    உடனடியாக மேல்மட்ட நண்பர்களுக்கு போனை போட்டு கையோடு பேடண்ட்
    வாங்கிவிட்டார் மார்க்கோனி.

    டெஸ்லாவுக்கு பலத்த அதிர்ச்சி.புகார் செய்தார்.நீண்ட நாள் விசாரணை நடந்து
    1943ல் அந்த பேடண்ட்டை டெஸ்லா பேருக்கு மாற்றி தந்தார்கள்.ஆனால்
    அதுக்குள் மார்க்கோனி அதை வைத்து கோடி கோடியாக
    சம்பாதித்துவிட்டார்.இருவரும் இறந்தும் போய்விட்டார்கள்.//

    ReplyDelete
  7. //ஜி டி நாயுடு கண்டுபிடிச்சதெல்லாம் எந்த டீமின் உதவியின்றியும் அவராகவே கண்டுபிடிச்சது.என்னதான் சூப்பெர்மேனா இருந்தாலும் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு நாலு நாளுக்கு ஒரு பேடண்டு வாங்குவது சாத்தியமே இல்லை.//
    தமிழமுதத்தில் நடைபெற்ற விவாதத்தில் செல்வன் பகிர்ந்தது..

    ReplyDelete
  8. //
    எந்திரன் ரஜினி படம் தான்.

    ஆனால் இசையமைத்தவர் ரஜினி அல்ல

    போனோகிராப் எடிசனின் தயாரிப்புதான்

    ஆனால் அதை கண்டுபிடித்தது எடிசன் அல்ல

    --
    செல்வன்//

    ReplyDelete
  9. //Thomas Edison was known by those who worked for him more as a thief of ideas than as an inventor of anything that was in any way useful. The most unfortunate decision of Nikola Tesla's life was to go to work for Thomas Edison.
    Edison was notoriously disdainful of those whose brilliance outshone his, and the Tesla alliance did not last long.
    Later Tesla worked on furthering X-ray technology, as well as inventing the Tesla coil, a device still used in many wireless products today. There is no denying that Nikola Tesla was a genius when it came to invention, but he definitely lacked something Edison actually did possess: the ability to manipulate public opinion and intimidate others.

    What most people do not know is that Edison ran a sweat shop think-tank and brought out all the fruits of his hired labor under his brand name and patent. In 1890 an English inventor named William Friese-Greene, hoping to join this invertor`s club and wrongly thinking his moving picture process was protected by patent, set copies of his research to Edison.
    Edison did not give Friese-Greene a job but he did give Friese-Greene`s research to W. K. L. Dickson. Dickson was the Edison wage slave that had the movie bug. He was the driving force behind film. Edison was against projecting images in a theater setting. Edison was looking for a better nickelodeon device.
    Edison then protected his stolen idea with a hired band of club welding thugs who would bust up the equipment and the operators of movie cameras not paying him for use of his patent. One of the reasons that the film capital of the world is in Hollywood is because filmmakers were trying to get away from edison`s club welding thugs who chased them across the country.
    Even on the other side of the country filmmakers had to fear Edison`s thugs. Samuel Goldfish, later Goldwyn, use to sleep with all his exposed film under his bed and a shot gun propt agaist the night table for fear of the look arm of this beloved inventor.
    http://uk.answers.yahoo.com/question/index?qid=20090808045443AAOmUNs
    Source(s):
    http://www.associatedcontent.com/article…
    http://www.agni-animation.com/blog/2008/…//

    ReplyDelete
  10. மேற்கூறிய அனைத்தும் உண்மையா என்று எனக்கும் தெரியாது.. ஆனால் ஜிடி நாயுடு போன்ற அறிவு ஜீவிகள் வாழ்ந்த நாட்டில் எதனையும் ஆராயாது ஏற்றுக் கொள்ளக் கூடாதல்லவா... விவாதத்தின் மூலம் வேற்றுமை நிகழ்வதில்லை.. அறிவுத் தேடலில் ஒரு தெளிவு பிறக்கிறது.தவறு இருந்தால் மன்னித்து திருத்தவும்..

    ReplyDelete
  11. மிகவும் உபயோகமான தகவல் ....

    ReplyDelete
  12. மிகவும் உபயோகமான தகவல் ....

    ReplyDelete
  13. Edisonai vida tesla ve sirandha medhavi edison matravar uzhaipai thirudi atharkana kappurimai vangi athil peyar vangiyavar

    sathish kumar

    ReplyDelete