ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, "தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு" என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தினமும் அதில் ஒரு ரூபாயையாவது நீங்கள் மிஞ்ச விடுவீர்களா? முழுப்பணத்தையும் எப்படிச் செலவழிப்பது என்று திட்டமிட்டுச் செலவு செய்ய மாட்டீர்களா?
உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அது தான் கால தேவதை. அது பணத்தை விட விலை மதிப்புள்ள 86400 வினாடிகளை உங்களுக்கு ஒரு நாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்?
ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று செய்யத் திட்டமிட்ட வேலை இருந்தால் வீண்பேச்சு, வேடிக்கை பார்த்தல், அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம்.
இவை யாவும் இலக்கில்லாத வாழ்க்கையின் இயற்கையான குணாதிசயங்கள். திட்டமிட்டுச் செயல்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத் தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கிறோம்.
ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திய பின் அதற்கு உரிய அதே இடத்தில் முறையாக வைக்கப் பழகினால் கால விரயத்தை வெகுவாகக் குறைக்கலாம். இப்பழக்கம் இல்லாதவர்களது காலம் தேடுதலிலேயே பெருமளவு வீணாகிறது. தேடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்கக் கோபம் அதிகமாகி, சுற்றி உள்ளவர்கள்
மீதெல்லாம் எரிந்து விழுபவர்கள் பலரைத் தினமும் பார்க்கலாம். எனவே உபயோகித்தவுடன் பொருள்களைக் கவனமாக அவற்றிற்குரிய இடத்தில் சிறிய பழக்கம் மூலம் காலத்தை பெருமளவு சேமிக்க முயலுங்கள்.
சமீபத்தில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைக்காகச் சென்று இருந்தேன். அங்கு நல்ல கூட்டம். அங்கு வந்த ஒரு பெரியவர், மருத்துவரைச் சந்திக்க அரைமணி நேரமாவது ஆகும் என அறிந்ததும் அமைதியாக உட்கார்ந்து பையிலிருந்து ஒரு இன்லாண்டு லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டார். எல்லோரும் அடுத்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அந்த நேரத்தில் அந்த நேரத்தில் தன் மற்றொரு காரியத்தை முடித்துக் கொண்ட அந்தப் பெரியவர் செயல் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிக் காத்திருக்கும் காலங்களில் நாமும் கூட பயனுள்ள எதையாவது செய்யத் தயாராக இருக்கலாமே!
காலத்தை முறையாக, திறம்படப் பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் டிவி முன் அமரும் நேரத்தைக் குறைப்பது நல்லது. இன்றைய காலத்தில் நம் நேரத்தை டிவி போல வேறு எதுவும் திருடிக் கொள்வதில்லை. பிடிக்கிறதோ இல்லையோ அதன் முன் அமர்ந்து நம் காலத்தை வீணடிக்கிறோம். நமக்குப் பிடித்த பயனுள்ள ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவை முடிந்தவுடன் டிவியை அணைத்து விடுவது
நல்லது.
ஒவ்வொரு நாள் இரவும் உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். காலதேவதையின் 'டெபாசிட்' எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். எப்படிச் செயல்பட்டிருந்தால் காலம் இன்னும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். மறுநாள் அது போலவே இன்னும் சிறப்பாகவே காலத்தைப் பயன்படுத்திச் செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள்.
எல்லாவற்றைற்கும் மேலாக ஒரு செயலைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனத்தையும் அதில் வையுங்கள். இதனால் அச்செயலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.
காலதேவதை கருணை உள்ளது. ஒரு நாள் அந்த 'டெபாசிட்'டை நீங்கள் வீணாக்கினீர்கள் என்பதற்காக மறுநாள் உங்களுக்கு அதைத் தராமல் இருப்பதில்லை. பெருந்தன்மையுடன் உங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
-என்.கணேசன்
தெளிவான எழுத்து நடை மிக நல்ல உதாரணம். உங்கள் எழுத்துக்களால் என் மனதைத் தொட்டதோடு சிந்தனையை தூண்டியம் விட்டீர்கள். உங்கள் எழுத்துக்கு பரிசு கிடைத்துவிட்டது.
ReplyDeleteமிக்க நன்றி, நண்பரே.
ReplyDeleteஎன்.கணேசன்
//
ReplyDeleteஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, "தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு
//
இந்த கட்டுரையை தமிழில் கொடுத்தது மிக்க மகிழ்சி.
காலம் பொன் போன்றது.
மிகவும் பயனுள்ள கட்டுரை.
ReplyDeleteசிலர் தங்களுடைய நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல்
அடுத்தவருடைய நேரத்தையும் சேர்த்து வீணாக்குவதுதான் மிகப்பெரிய கொடுமை.
நண்பரே,
ReplyDeleteஎல்லோருக்கும் உபயோகப்படக்கூடிய நல்ல பதிவு.
நன்றி.
அருமை
ReplyDeletevery nice.
ReplyDeleteமுதலில் நான் பிளாக்குகளைப் படிப்பதையும், அவற்றுக்குப் பின்னூட்டம் போடுவதையும் குறைக்க வேண்டும், அதில்தால் எனது நேரமெல்லாம் வெட்டியாகச் செலவாகிறது. ஸ்...அப்பா...
ReplyDeletewow superb
ReplyDeleteஅருமையான பதிவு மிக்க நன்றி
ReplyDeleteawesome no word to say .each and everybody must understand the value of life that s called time management.
ReplyDelete