Monday, October 29, 2007

தினமும் ஒரு டெபாசிட்




ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, "தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு" என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

தினமும் அதில் ஒரு ரூபாயையாவது நீங்கள் மிஞ்ச விடுவீர்களா? முழுப்பணத்தையும் எப்படிச் செலவழிப்பது என்று திட்டமிட்டுச் செலவு செய்ய மாட்டீர்களா?

உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அது தான் கால தேவதை. அது பணத்தை விட விலை மதிப்புள்ள 86400 வினாடிகளை உங்களுக்கு ஒரு நாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்?

ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று செய்யத் திட்டமிட்ட வேலை இருந்தால் வீண்பேச்சு, வேடிக்கை பார்த்தல், அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம்.

இவை யாவும் இலக்கில்லாத வாழ்க்கையின் இயற்கையான குணாதிசயங்கள். திட்டமிட்டுச் செயல்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத் தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கிறோம்.

ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திய பின் அதற்கு உரிய அதே இடத்தில் முறையாக வைக்கப் பழகினால் கால விரயத்தை வெகுவாகக் குறைக்கலாம். இப்பழக்கம் இல்லாதவர்களது காலம் தேடுதலிலேயே பெருமளவு வீணாகிறது. தேடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்கக் கோபம் அதிகமாகி, சுற்றி உள்ளவர்கள்
மீதெல்லாம் எரிந்து விழுபவர்கள் பலரைத் தினமும் பார்க்கலாம். எனவே உபயோகித்தவுடன் பொருள்களைக் கவனமாக அவற்றிற்குரிய இடத்தில் சிறிய பழக்கம் மூலம் காலத்தை பெருமளவு சேமிக்க முயலுங்கள்.

சமீபத்தில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைக்காகச் சென்று இருந்தேன். அங்கு நல்ல கூட்டம். அங்கு வந்த ஒரு பெரியவர், மருத்துவரைச் சந்திக்க அரைமணி நேரமாவது ஆகும் என அறிந்ததும் அமைதியாக உட்கார்ந்து பையிலிருந்து ஒரு இன்லாண்டு லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டார். எல்லோரும் அடுத்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அந்த நேரத்தில் அந்த நேரத்தில் தன் மற்றொரு காரியத்தை முடித்துக் கொண்ட அந்தப் பெரியவர் செயல் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிக் காத்திருக்கும் காலங்களில் நாமும் கூட பயனுள்ள எதையாவது செய்யத் தயாராக இருக்கலாமே!

காலத்தை முறையாக, திறம்படப் பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் டிவி முன் அமரும் நேரத்தைக் குறைப்பது நல்லது. இன்றைய காலத்தில் நம் நேரத்தை டிவி போல வேறு எதுவும் திருடிக் கொள்வதில்லை. பிடிக்கிறதோ இல்லையோ அதன் முன் அமர்ந்து நம் காலத்தை வீணடிக்கிறோம். நமக்குப் பிடித்த பயனுள்ள ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவை முடிந்தவுடன் டிவியை அணைத்து விடுவது
நல்லது.

ஒவ்வொரு நாள் இரவும் உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். காலதேவதையின் 'டெபாசிட்' எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். எப்படிச் செயல்பட்டிருந்தால் காலம் இன்னும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். மறுநாள் அது போலவே இன்னும் சிறப்பாகவே காலத்தைப் பயன்படுத்திச் செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள்.

எல்லாவற்றைற்கும் மேலாக ஒரு செயலைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனத்தையும் அதில் வையுங்கள். இதனால் அச்செயலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.

காலதேவதை கருணை உள்ளது. ஒரு நாள் அந்த 'டெபாசிட்'டை நீங்கள் வீணாக்கினீர்கள் என்பதற்காக மறுநாள் உங்களுக்கு அதைத் தராமல் இருப்பதில்லை. பெருந்தன்மையுடன் உங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

-என்.கணேசன்

Friday, October 26, 2007

அவள் வரலாமா?

சிறுகதை


துறவு என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஊருக்கு வந்திருந்த அந்தப் புனிதர் இன்று ஒரு நாள் மட்டும் தான் அங்கிருப்பார் என்று கேள்விப்பட்ட பக்த கோடிகள் அவரது தரிசனத்திற்காக வெளியே காத்திருந்தார்கள். அந்த சமயத்தில் தான் அவளும் அங்கு வந்தாள். குனிந்த தலை நிமிராமல் வந்தவள் ஒதுக்குப்புறமாய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். அது வரை பேரமைதியோடு இருந்த கூட்டத்தில் முணுமுணுப்புகள் ஆரம்பித்தன.

"இவள் எல்லாம் இங்கே வரலாமா?"

"என்ன தைரியம் பாரேன்"

"இந்த இடத்தையாவது சனியன் விட்டு வைக்கக் கூடாதா?"

"கலி முத்திடுச்சு. அதுக்கான அறிகுறி தான் இதெல்லாம்"

கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த அவள் காதுகளில் இந்த விமரிசனங்கள் விழாமல் இல்லை. தான் இந்த ஏச்சுகளுக்குப் பொருத்தமானவள் என்பதிலும் அவளுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அந்த மகானைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்ததால் அவரைத் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற பேராவலில் வந்திருக்கிறாள். அதுவரை தன்னை யாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடக் கூடாதென சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருந்தாள்.

மஹாஸ்வாமிகளின் நிழல் என்று எல்லோராலும் கருதப்படும் சந்தானம் கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்தார். இது வரை அமைதி காத்த பக்தர்கள் மத்தியில் திடீரென எழுந்த இந்த சலசலப்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதன் அறிகுறியென அவருக்குப் பட்டது. கூட்டத்தினரை அவர் கேள்விக்குறியோடு பார்க்க, ஒருவர் அவரருகே வந்து அவளைக் கை காட்டி விளக்கினார்.

"சிவ சிவா" சந்தானம் தன் காதுகளைப் பொத்திக் கொண்டார். 'மஹாஸ்வாமிகளின் சன்னிதானத்தில் ஒரு விபசாரியா, இது என்ன சோதனை?' அவளை எரித்து விடுவது போல் பார்த்தார். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

சந்தானத்தைப் பொருத்த வரை தெய்வம் கூட மஹாஸ்வாமிகளுக்கு அடுத்தபடி தான். எத்தனையோ போலிகளுக்கு மத்தியில் எந்த மாசும் தன்னை நெருங்க முடியாத நெருப்பாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் முன் இது போன்ற அசுத்தங்கள் வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவளை எப்படி வெளியே அனுப்புவது என்று அவர் யோசித்து முடிவுக்கு வரும் முன் மஹாஸ்வாமிகள் தியானம் முடிந்து வெளி ஹாலிற்கு வந்து விட்டார். பக்தர்கள் எழுந்து வரிசையானார்கள். அவளும் எழுந்து அந்த வரிசையின் கடைசியில் நின்றாள். சந்தானம் தீயில் நிற்பது போல் துடித்தார். எப்படியாவது அவளை உடனடியாக அனுப்பி விட வேண்டும் என்று தீர்மானித்து அவர் முதலடி எடுத்து வைத்த போது மஹாஸ்வாமிகள் தன் பார்வையாலேயே தடுத்து நிறுத்தினார். சந்தானம் வேறு வழியில்லாமல் தவித்தபடி நின்றார்.

பக்தர்கள் ஒவ்வொருவரும் அந்த மகானிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி, வணங்கி, பிரசாதம் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்கள். ஆனாலும் வெளியேறாமல் சிலர் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். எதையும் தன் ஞான திருஷ்டியால் அறியும் சக்தி படைத்த அந்த மகான் அவளிடம் என்ன சொல்லப் போகிறார் என்றறிய அவர்களுக்கு ஆவல்.

கடைசியில் அவளும் மஹாஸ்வாமிகள் முன்பு வந்து நின்றாள். வந்ததில் இருந்து தலையை நிமிர்த்தாதவள் முதல் முறையாக தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள். அவளைப் பற்றி அறியாதது ஒன்றுமில்லை என்று அவரது கண்கள் சொல்லின. ஆனாலும் அந்தக் கண்களில் கருணை சிறிதும் குறைந்திருக்கவில்லை. மற்றவர்களைப் போல வாய்விட்டுப் பேச அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. கனத்த மனதுடன் அவர் முன் மண்டியிட்டு அழுதாள். ஓரிரு நிமிடங்கள் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். அவர் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள்.

வேடிக்கை பார்த்தவர்களுக்கு மிகவும் சப்பென்றாகி விட்டது. " அவர் ஞானி. அவருக்கு எந்த வித்தியாசமுமில்லை. ஆனால் இவள் இந்தப் பாவத்தையும் சேர்த்து எந்த கங்கையில் கழுவுவாளோ" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்தார்கள்.

எல்லோரும் போகும் வரை காத்திருந்த சந்தானம் பின்பு மிகவும் வருத்தத்துடன் ஆரம்பித்தார். "ஸ்வாமி அவள்..."

"தெரியும் சந்தானம்"

"நீங்க மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் நான் அவளை அப்போதே அனுப்பியிருப்பேன்"

"அறியாமையால் தவறும் பாவமும் செய்வது, அதன் பலன்களை அனுபவிப்பது, தன் செயல்களுக்காக வருந்துவது, பின்பு திருந்துவது என்று இந்த நான்கு கட்டங்களும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் உண்டு சந்தானம். இதில் நீயும் நானும் கூட விதிவிலக்கல்ல. தவறுகளின் அளவுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தவறோ பாவமோ செய்யாத அந்தத் தனிப்பெரும் குணம் பரம்பொருள் ஒருவனுக்கே உண்டு. அந்தப் பரம்பொருள் கூட மனித அவதாரம் எடுத்த போது ஒரு சில தவறுகள் செய்து விட்டதாய் இதிகாசங்கள் சொல்கின்றன. அப்படி இருக்கும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம், சந்தானம்"

ஆனாலும் சந்தானத்திற்கு சமாதானம் ஆகவில்லை. "அவள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் ஸ்வாமி. அவள் இங்கே வந்து இந்த இடத்தின் புனிதத்தை ஏன் கெடுக்க வேண்டும்"

மஹாஸ்வாமிகள் புன்னகைத்தார். "உனக்கு இங்கு வந்த மற்றவர்களின் சரித்திரம் தெரியாததால் நீ அவளை மட்டும் ஒருமைப்படுத்துகிறாய். இவளை விட அதிகம் பாவம் செய்தவர்களும் இங்கு வந்திருந்தார்கள். அவர்கள் எப்படியே இருந்தாலும் இங்கு அவர்களை இன்று வரவழைத்த ஆன்மீக சக்தி என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் உணர வைக்கும். திருத்தும். அதற்காக பிரார்த்திப்பதும், ஆசி வழங்குவதும் மட்டுமே நம் கடமை. விமரிசிப்பதும், தீர்ப்பு சொல்லவும் நாம் யார்?"

ஒப்புக்குத் தலையாட்டினாலும் சந்தானத்தின் மனதில் அவள் அங்கு வந்த விஷயம் நெருடலாகவே இருந்தது.

மறுநாள் காலை ஸ்வாமிகளை வழியனுப்ப நிறைய பக்தர்கள் வந்திருந்தனர். காரில் ஏறப் போன மஹாஸ்வாமிகளின் விழிகள் ஒரு கணம் ஓரிடத்தில் நிலைத்து நின்றன. சந்தானம் தன் பார்வையையும் அங்கு திருப்பினார். தலையை மொட்டை அடித்துக் கொண்டு, உடலில் சிறு ஆபரணமும் இல்லாமல், தூய வெள்ளை சேலையால் முக்காடு போட்டுக் கொண்டு ஒருத்தி நின்றிருந்தாள். உற்றுப் பார்த்த பின்பு தான் தெரிந்தது-அவள் நேற்று வந்தவள். இன்று அவள் தலை நிமிர்ந்திருந்தது. முகத்தில் அமைதியும் உறுதியும் தெரிந்தது. கை கூப்பி வணங்கி நின்றாள்.

"நேற்று வந்தவர்களில் யாரும் இவ்வளவு சீக்கிரம் மாறவில்லை, சந்தானம்" என்று புன்னகையுடன் சொல்லிய மஹாஸ்வாமிகள் கையை உயர்த்தி எல்லோருக்கும் ஆசிகள் வழங்கி விட்டு காரில் ஏறினார். கண்கள் கலங்க தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவளிருந்த திக்கை நோக்கிக் கூப்பி விட்டு காரில் ஏறிய சந்தானம் "என்னை மன்னிச்சுடும்மா" என்று முணுமுணுத்தது மஹாஸ்வாமிகளுக்கு மட்டும் கேட்டது.

________________________________________________________________________

என்.கணேசன்

Tuesday, October 23, 2007

படித்ததில் பிடித்தது-PROMISE YOURSELF


இப்படியொரு சத்தியத்தை நமக்கு நாமே செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!


Promise Yourself

To be so strong that nothing can disturb your peace of mind.

To talk health, happiness, and prosperity to every person you meet.

To make all your friends feel that there is something worthwhile in them.

To look at the sunny side of everything and make your optimism come true.

To think only of the best, to work only for the best and to expect only the best.

To be just as enthusiastic about the success of others as you are about your own.

To forget the mistakes of the past and press on to the greater achievements of the future.

To wear a cheerful expression at all times and give a smile to every living creature you meet.

To give so much time to improving yourself that you have no time to criticize others.

To be too large for worry, too noble for anger, too strong for fear, and too happy to permit the presence of trouble.

To think well of yourself and to proclaim this fact to the world, not in loud word, but in great deeds.

To live in the faith that the whole world is on your side, so long as you are true to the best that is in you.

-Christian D.Larson

Saturday, October 20, 2007

எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல்

'ஒரு எழுத்தாளன் தன்னுடைய காலத்திற்காக மட்டும் தான் எழுத வேண்டும் என்றால் நான் என்னுடைய பேனாவை உடைத்து வீச விரும்புகிறேன்" என்று விக்டர் ஹ்யூகோ என்ற பிரபல நாவலாசிரியர் சொன்னார். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதுவது அப்போதைய வாசகர்களைக் கவர்வதற்காகத் தான். பிரபலமாவதும், பணம் சம்பாதிப்பதும் அப்படி எழுதும் போது மட்டுமே சாத்தியமாகிறது.

ஆனால் ராபர்ட் ·ப்ரோஸ்ட் என்ற ஆங்கிலக் கவிஞன் தன் பயணத்தின் போது இரு பாதைகள் பிரிந்தன என்றும் அதில் ஒன்று அதிகமாய் யாரும் பயணிக்காத பாதை என்றும், மற்றைய பாதை அனைவரும் பயணிக்கும் பாதை என்றும் சொல்லிப் பாடியதை ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்கள் மறக்க முடியாது. அந்த இரண்டு பாதைகளில் எதில் பயணிக்கிறோம் என்பதை வைத்தே எல்லாமே தீர்மானிக்கப்படுகிறது என்று அழகாகச் சொல்வார்.

அப்படி யாரும் பயணிக்காத பாதையில் பயணித்த ஒரு நாவலாசிரியை ஒரு உன்னதமான நாவலை எழுதினார். எந்தக் காரணத்திற்காகவும் தன் கொள்கையையோ, தன் தனித்துவத்தையோ விட்டுக் கொடுக்காத ஒரு மனிதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை அது. புகழ், பணம் ஆகியவற்றிற்காக மயங்காமல், கஷ்ட நஷ்டங்களைக் கண்டு கலங்காமல், மற்றவர்களில் இருந்து மாறுபடுவதற்கு அஞ்சாத ஒரு லட்சிய மனிதனின் கதையை அவர் எழுதத் துணிந்தார்.

1935ல் எழுதிய அந்த நாவலைப் பிரசுரிக்கக் கொண்டு சென்ற போது அதைப் பிரசுரிக்க யாரும் முன்வரவில்லை. "இவ்வளவு அறிவு பூர்வமான கதையை படிக்கும் ஆட்கள் கிடையாது. எனவே இது விலை போகாது" என்று சிலர் வெளிப்படையாகத் தெரிவித்தார்கள். "வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் கிறுக்குத் தனமான வித்தியாசமாய் இருந்தால் என்ன என்று தெரிந்து கொள்ளவாவது படிப்பார்கள். இப்படி லட்சியம், தனித்துவம் என்று சொன்னால் ஓடிப் போவார்கள்" என்று உண்மை நிலவரத்தைச் சொன்னார்கள்.

அவர் இந்த நிராகரிப்புகளால் பின் வாங்காமல் தொடர்ந்து முயன்றார். பிரசுரிக்கத் தகுதியில்லை என்று மறுத்திருந்தால் அதை அவர் திருத்தி இருப்பார். ஆனால் அவர்களது இந்த விமரிசனங்களை அவரால் ஏற்க முடியவில்லை. பல பிரசுரகர்த்தர்களை அணுகினார். சுமார் எட்டாண்டு காலம் அந்த நாவல் பிரசுரிக்கப் படவில்லை.

ஒரு கட்டத்தில் நல்ல மனபலம் உடைய அவரே மனம் உடைந்து போனார். குப்பைகள் எல்லாம் பிரசுரம் ஆகும் போது ஆத்மார்த்தமாய் நாம் எழுதிய இந்த நூலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொல்கிறார்களே என கலங்கினார். எட்டாண்டுகள் என்பது நீண்ட காலம் தானே. அவர் மனம் தளர்ந்த ஒரு இரவு நேரம் முழுவதும் அவருடைய கணவர் நம்பிக்கை ஊட்டி அவரைத் தேற்றினார்.

கடைசியில் 1943ல் ஒரு பிரசுரம் அந்த நாவலை பிரசுரிக்க முன் வந்தது. பிரசுரமாகியும் அந்த நாவலிற்குப் பத்திரிக்கைகளின் நல்ல விமரிசனமோ, விளம்பரமோ கிடைக்கவில்லை. ஆனால் வாங்கிப் படித்தவர்கள் வாய்மொழி மூலமாகவே இரண்டாண்டுகளில் அந்த நாவல் மிகவும் பிரபலம் அடைந்தது. பல பதிப்புகளைக் கண்டு, இலட்சக்கணக்கில் விற்பனையாகி அந்த நாவலாசிரியையிற்கு அந்த நாவல் பெரும்புகழ் பெற்றுத் தந்தது. அந்த நாவலாசிரியை Ayn Rand. அந்த நாவல் Fountainhead.

25 ஆண்டுகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்த அந்த நாவலுக்கு 1968ல் அவர் எழுதிய முன்னுரையில் இருந்து முத்தான சில வரிகளை இங்கே கொடுத்துள்ளேன். ஒவ்வொரு எழுத்தாளனும், தனித்துவத்தோடு சாதனை படைக்க விரும்பும் மனிதனும் படித்து சிந்திக்க வேண்டிய வரிகள் இவை-

I do not mean to imply that I knew, when I wrote it, that The Fountainhead would
remain in print for twenty-five years. I did not think of any specific time period. I knew only that it was a book that ought to live. It did. But that I knew it over twenty-five years ago--that I knew it while The Fountainhead was being rejected by twelve publishers, some of whom declared that it was "too intellectual," "too controversial" and would not sell because no audience existed for it--that was the difficult part of its history; difficult for me to bear. I mention it here for the sake of any other writer of my kind who might have to face the same battle--as a reminder of the fact that it can be done.

... ... ... ... ...

It is not in the nature of man--nor of any living entity--to start out by giving up, by spitting in one’s own face and damning existence; that requires a process of corruption whose rapidity differs from man to man. Some give up at the first touch of pressure; some sell out; some run down by imperceptible degrees and lose their fire, never knowing when or how they lost it. Then all of these vanish in the vast swamp of their elders who tell them persistently that maturity consists of abandoning one’s mind; security, of abandoning one’s values; practicality, of losing self-esteem. Yet a few hold on and move on, knowing that that fire is not to be betrayed, learning how to give it shape, purpose and reality. But whatever their future, at the dawn of their lives, men seek a noble vision of man’s nature and of life’s potential.
.... .... .... .... ...

It does not matter that only a few in each generation will grasp and achieve the full reality of man’s proper stature--and that the rest will betray it. It is those few that move the world and give life its meaning--and it is those few that I have always sought to address. The rest are no concern of mine; it is not me or The Fountainhead that they will betray: it is their own souls.

எக்காலமும் நிலைத்து நிற்கும்படியாக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தால் அதை சாதிக்கும் வரை தளர்வு ஏற்படும் போதெல்லாம் தாக்குப் பிடிக்க இது போன்ற வார்த்தைகளும், மாறுபடத் துணிந்து வாழ்ந்து காட்டியவர்களின் அனுபவங்களும் உதவும் என்று நம்புகிறேன்.

- என்.கணேசன்

Friday, October 19, 2007

திறமை இருந்தும் தோல்வி ஏன்?


நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமையாளர்களைப் பார்க்கிறோம். நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே அந்தந்த துறைகளில் வெற்றி அடைகிறார்கள் என்பதையும் பெரும்பாலோனோர் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரியாமல், இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போவதையும் பார்க்கிறோம். அப்போதெல்லாம் நம்மால் வியப்படையாமல் இருக்க முடிவதில்லை. அதுவும் வெற்றியடைந்தவர்களை விட அதிகத் திறமை கொண்டவர்கள் என்று நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போய் விடும் போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி நமக்குள் எழாமல் இருப்பதில்லை. அதற்கு 'விதி' என்ற மிக வசதியான பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அபூர்வமாய் ஒருசில விதிவிலக்குகள் தவிர அந்த விதி அவரவர்களால் எழுதப்படுவது அல்லது ஏற்படுத்திக் கொள்வது என்பதே நிதர்சனமான உண்மை.

ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தோல்வி அடையும் அனைவருக்கும் பொதுவாக மூன்று குணாதிசயங்கள் இருப்பதை நம்மால் காண முடியும். அதில் முதலாவது, அவர்களுக்குள்ளே சாதனை புரிந்தே ஆக வேண்டும் என்ற அக்னி இருப்பதில்லை. இது இல்லாத வரை எத்தனை திறமை இருந்தாலும் அது பிரகாசிப்பதில்லை. . இரண்டாவது, அவர்கள் ஈடுபாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விஷயத்தில் இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஈடுபாடு, நாளை வேறு ஒன்றில் தீவிர ஈடுபாடு, சில நாட்களில் புதிதாக ஒன்றில் பேராவல் என்று மாறிக் கொண்டே போகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல ஆரம்பங்கள் இருக்கின்றன, திறமைக்கும் குறைவில்லை என்றாலும் எதிலும் முழுமை இருப்பதில்லை. மூன்றாவது, அவர்கள் வெற்றி வரும் வரை பொறுமையாக தாக்குப் பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளிலேயே பின்வாங்கி விடுகிறார்கள். தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிடப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை. இதை தங்கள் துறையில் சிகரத்தை எட்டிய இருவர் வாழ்க்கை அனுபவங்களைப் படித்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

பாஸ்கல் (Pascal) என்கிற கணித மேதையை அறியாதவர் இருக்க முடியாது. அவர் பிற்காலத்தில் தத்துவஞானியாகவும் விளங்கினார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் சட்டம் மட்டுமே மேல்நிலை மக்களின் கௌரவமான தொழிலாகக் கருதப்பட்டது. எனவே அவர் தந்தை மகன் சட்டப் பேரறிஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். பாஸ்கலோ கணிதத்தில் தான் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார். எத்தனை அறிவுரை கூறியும் மகன் மாறாததைக் கண்ட தந்தை கடைசியில் மகனை சட்ட புத்தகங்கள் மட்டுமே நிறைந்த அறையில் வைத்துப் பூட்டி வைக்கத் துவங்கினார். உள்ளே கணிதக் கோட்பாடுகளை மகன் எழுதிக் கொண்டு இருப்பதை பின்னர் கண்டு பிடித்து அங்கிருந்து
எழுத்துக் கருவிகள், தாள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திப் பார்த்தார். ஆனால் பாஸ்கலோ கரித்துண்டில் தரையில் எழுதிப் பார்க்கத் துவங்கினார். கடைசியில் தந்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர் ஆவலுடன் தன் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பிற கணித மேதைகள் இவருடைய வித்தியாசமான, புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். தடங்கல்களைக் கண்டு தளராமல் தொடர்ந்த இத்தகைய ஈடுபாட்டிற்குப் பின் வராத வெற்றியும் உண்டா? வெற்றியும், புகழும் கடைசியில் அவருக்கு உலக அளவில் கிடைத்தன.

பெர்னார்டு ஷா (Bernard Shaw) எழுதுவதில் காட்டிய ஈடுபாடு மகத்தானது. இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வேலை செய்து கொண்டிருந்தாலும், தினமும் குறைந்தது ஐந்து பக்கங்களாவது எழுதுவது என்று உறுதியுடன் ஓய்வு நேரங்களில் தொடர்ந்து எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கும், பிரசுரங்களுக்கும் அனுப்பியும் வந்தார். எழுதி அனுப்பிய முதல் ஒன்பதாண்டுகளில் அவருக்குத் தாள், பேனா மை, தபால் செலவுகளுக்கான பணம் கூடக் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஓரிரு தோல்விகளைக் குறுகிய காலத்தில் சந்தித்தாலே மனம் ஒடிந்து போகும் மனிதர்கள் மத்தியில் ஒன்பதாண்டு காலம் தொடர்ந்து சந்தித்த தோல்விகளையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து எழுதி பிற்காலத்தில் பிரபலமாகி மிகப்பெரிய செல்வந்தரானார். அவர் எழுத்து இன்றளவும் பேசப்பட்டும், மேற்கோள் காட்டப்பட்டும் வருகிறது என்பது வரலாறு.

இவர்கள் எல்லாம் துவக்கத்தில் சந்தித்த எதிர்ப்புகளும் தோல்விகளும் கொஞ்ச நஞ்சமல்ல. வெற்றி சுலபமாக வந்து விடவில்லை. இடைக்காலத்தில் விதி என்று தீர்மானித்துக் கொண்டு தங்கள் பாதைகளில் இவர்கள் திரும்பிப் போய் விடவில்லை. தங்கள் பார்வைகளையும், ஈடுபாடுகளையும் வேறிடத்திற்குத் திருப்பிக் கொள்ளவில்லை. உலகம் தோல்வி என்ற சான்றிதழைத் திருப்பித் திருப்பித் தந்தாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு உள்ளே இருந்த அக்னி வெளியே இருந்த இருண்ட சூழ்நிலைகளிலும் ஒளி கொடுத்து வழி காட்டியது. வெற்றி வரும் வரை காத்திருந்தார்கள். தங்கள் விதியைத் தீர்மானிக்க மற்றவர்களுக்கு அவர்கள் அனுமதி தரவில்லை.

எனவே திறமை இருப்பவர்களே, ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். திறமை மட்டுமே போதுமானதல்ல, அது வெறும் ஆரம்பம் மட்டுமே என்பதை மனதில் வையுங்கள். உடனடி லாட்டரி போல வெற்றி வந்து மடியில் விழும் என்று எண்ணாதீர்கள். தடங்கல்கள் சகஜம் என்று எதிர்பார்த்துத் தயாராக இருங்கள். உங்கள் சக்திகளை எதிர்மாறான பல துறைகளில் அடிக்கடித் தாவி சிதறடிக்காதீர்கள். தொடர்ந்து ஈடுபாடு குறையாமல் செயல்படுங்கள். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். துவண்டு விடாதீர்கள். நீங்களாக ஏற்றுக் கொள்ளாத வரை தோல்வி சாசுவதமல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக் கொண்டு முயற்சியைக் கை விட்டு விடாதீர்கள். விதியின் நாயகனான இறைவன் திறமையை உங்களுக்குத் தந்திருக்கிறார் என்றால் அது நீங்கள் வெற்றி பெறவே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

-என்.கணேசன்

Wednesday, October 17, 2007

வினை விதைத்தவன்



"பிரதமர் ஆபிசிலிருந்து உங்கப்பா உடல்நிலை விசாரிச்சு இது வரை மூன்று தடவை போன் செய்து விட்டார்கள் கதிரேசா" என்று மனோகரன் தன் நண்பனிடம் தெரிவித்தான்.

"உம்"

"உங்கப்பாவைப் பார்க்க நம்ம மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும் கீழே காத்துகிட்டிருக்காங்க"

"உம்"

"வெளியே பத்திரிக்கைக்காரங்க அதிகமா, தொண்டர்கள் அதிகமான்னு தெரியலை. அவ்வளவு கூட்டம் இருக்கு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ்கரங்க திண்டாடறாங்க."

"உம்"

"சாரங்கன் தன் வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியில் ரத்து செய்து வந்துட்டார்."

"என்னது" கதிரேசன் மின்சாரத்தால் தாக்கப் பட்டவன் போல சுறுசுறுப்பானான்.

"விமான நிலையத்திலிருந்து பத்து நிமிஷத்துக்கு முன்னால் தான் போன் வந்தது. என்ன இருந்தாலும் உங்கப்பா மந்திரிசபையில் அவர் தானே நம்பர் 'டூ'. இந்த மாதிரி நேரத்தில் இங்க இல்லாம இருப்பாரா?"

"அந்த ஆள் வந்ததை நீ ஏன் பத்து நிமிஷம் முன்னாலேயே சொல்லலை, மனோ. எப்பவும் பிரச்சினை தரக் கூடிய தகவல்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்வார்" என்ற கதிரேசன் யோசிக்க ஆரம்பித்தான்.

"என்ன யோசிக்கிறாய், கதிரேசா"

"அப்பா இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வார்னு யோசிக்கிறேன் மனோ"

மரணப் படுக்கையில் இருக்கும் கங்காதரனுக்கு மகனை நினைக்கையில் பெருமையாக இருந்தது. தன்னை ஒரு உதாரண புருஷனாய் மகன் எண்ணிப் பின்பற்றுவது எந்த தந்தைக்குத் தான் பெருமையாக இருக்காது. படுத்த படுக்கையாகி பேசும் சக்தியையும் இழந்து விட்டாலும். கண்களைத் திறந்து பார்க்கவும் சுற்றிலும் நடப்பதைப் புரிந்து கொள்ளவும் இன்னமும் அவரால் முடிகிறது.

பேச மட்டும் முடிந்திருந்தால் அவர் மகனுக்கு அறிவுரை சொல்லியிருப்பார். "குளத்தில் வீசப்பட்ட கல்லைப் போலிரு மகனே. தன் இலக்கான அடிமட்டத்தை அடையும் வரை அது எங்கும் எப்பொழுதும் இளைப்பாறுவதில்லை". இந்த அறிவுரை அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதை சுமார் முப்பத்திநான்கு வருடங்களுக்கு முன் ஒரு அபூர்வ சித்தர் அவருக்குச் சொன்னார். பக்கத்து கிராமத்திற்கு வந்திருந்த அந்த சித்தருக்கு முக்காலமும் தெரியும் என்று போய் பார்த்து விட்டு வந்த பலரும் சொன்னார்கள். பெரியதாக நம்பிக்கை இல்லா விட்டாலும் போய்த் தான் பார்ப்போமே கங்காதரனும் போனார்.

அந்தக் கிராமத்துக் குளத்தங்கரையில் தான் அவர் அந்த சித்தரை ஒரு மாலைப் பொழுதில் பார்த்தார். தனிமையில் அமர்ந்தபடி ஆகாயத்து சிவப்புச் சூரியனை ஒருவிதக் காதலோடு அந்த சித்தர் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு சக்தி காந்தமாய் அவரை அந்த சித்தரிடம் ஈர்த்தது.

ஒடிசல் தேகம், கிழிசல் உடைகள், சீப்பு கண்டிராத தலை முடி, கத்தரிக்கோலைக் காணாத தாடி, இந்த அலங்கோலங்களுக்குச் சம்பந்தம் இல்லாத மிகவும் கூர்மையான காந்தக் கண்கள். அவரது அருகாமையை உணர்ந்து சூரியனிலிருந்து அவர் பக்கம் சித்தர் பார்வையைத் திருப்பினார். கங்காதரன் அப்பார்வையில் சிலையாக நின்றார். அந்தக் கண்களின் அனுமதியில்லாமல் தன் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாதென்று அவருக்குத் தோன்றியது. அந்தக் கண்கள் அவருக்குள்ளே புகுந்து ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்தன.

"என்ன வேணும் தம்பி"

"என்ன கேட்டாலும் அதை உங்களால் தர முடியுமா?"

"கொடுக்கிறது நானல்ல தம்பி. கொடுக்கிறவன் மேலே இருக்கான். என்ன வேணும்னு சொல்லு"

"பெரீ...ய ஆளாகணும்"

"கேட்கறப்ப எப்பவுமே தெளிவாய் இருக்கணும் தம்பி. மொட்டையா கேட்டா அவன் சொத்தையா எதாவது தந்துடுவான்"

ஒரு கணம் சிந்தித்து விட்டு கங்காதரன் சொன்னார். "மந்திரியாகணும். முடியுமா?"

"முடியாததுன்னு எதுவுமேயில்லை, தம்பி. மேலே இருக்கிறவன் ஒரு பெரிய வியாபாரி. எப்போதுமே கொடுப்பான்-தகுந்த விலை கொடுக்க நீ தயாராய் இருந்தால். நிஜமாகவே அந்தப் பொருள் தேவை தானா, தரும் விலை சரியானது தானான்னு எல்லாம் நீ தான் தீர்மானிக்கணும்."

"விலை என்ன சாமி?"

அந்த சித்தர் ஒரு சிறு கல்லைத் தூக்கி குளத்தில் எறிந்தார். "இந்தக் கல் எப்படி குளத்தின் அடிமட்டதை அடைகிற வரை ஓரிடத்திலும் நிற்காதோ அப்படி ஒரு வேகத்தையும், ஒரே இலக்கையும் நீ வைத்துக் கொண்டிருந்தால் உனக்கு எதுவுமே முடியாததில்லை தம்பி"

அந்த வார்த்தைகள் கங்காதரன் மனதில் செதுக்கப்பட்டன.

"ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள் தம்பி. நீ விதைப்பதை மட்டும் நீ அறுவடை செய்ய முடியும். நீ விதைப்பதை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்" என்று ஓரே வாக்கியத்தை இரண்டு விதங்களில் அழுத்தம் திருத்தமாக சித்தர் புன்னகையோடு சொன்னார்.

ஒரு அக்னி விதை கங்காதரன் மனதில் அன்று விதைக்கப்பட்டது. மீதி சரித்திரமாகியது. அன்று முதல் அதிர்ஷ்ட தேவதை நிரந்தரமாக அவருடன் தங்கி விட்டாள். எம்.எல்.ஏ, மந்திரி, முதல் மந்திரி என இலக்குகள் கங்காதரனால் சூறாவளி வேகத்தில் அடையப்பட்டன. கங்காதரன் என்ற சூறாவளி தன் இலக்கை அடையும் முன் பல உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஆயின. தான் செய்த சேதங்களுக்கு சூறாவளி எவ்வளவு வருத்தப்படுமோ அவ்வளவு தான் அவரும் வருத்தப்பட்டார். அரசியலில் வெற்றியே தர்மம், அதற்கென என்ன செய்தாலும் அது நியாயமானதே என்று உறுதியாக நினைத்தார். பாவம், புண்ணியம், நியாயம், அநியாயம் முதலிய வார்த்தைகள் ஒருவனை சுதந்திரமாக இயங்க விடாதென அவர் உணர்ந்து தெளிந்திருந்தார். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகி சர்வ வல்லமை படைத்த மனிதரானார். நான்கு முறை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அலங்கரிப்பது இந்த மாநில சரித்திரத்தில் அவர் மட்டுமே.

"சமுதாய விடிவெள்ளி சாரங்கன் வாழ்க! தமிழர் தலைவர் சாரங்கன் வாழ்க! அடுத்த முதல்வர் சாரங்கன் வாழ்க" என்று வெளியே ஒலித்த முழக்கங்கள் கங்காதரனை நிகழ்காலத்திற்கு வரவழைத்தன.

"அந்த ஆள் வந்து விட்டார், கதிரேசா. விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குக் கூடப் போகவில்லை. நேராய் ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார், கில்லாடி மனுஷன்" என்று ஜன்னல் வழியே பார்த்து விட்டு மனோகரன் சொன்னான்.

ஒன்றும் பேசாமல் கதிரேசன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

"யோசிக்க என்ன இருக்கு கதிரேசா. கீழே நிற்கிற கூட்டத்தோட அந்த ஆளும் நிற்கட்டும். யாரும் தலைவரை தொந்தரவு செய்யக்கூடாது, அவர் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டலைன்னு டாக்டர் சொன்னதை அந்த ஆள் கிட்டேயும் சொல்லிடுவோம்."

"வேண்டாம் மனோ. அந்த ஆளை மட்டும் இங்கே கூட்டிட்டு வா"

"ஏன் கதிரேசா"

"அந்த ஆள் கிட்டே அப்பாவே ஜாக்கிரதையாய் இருப்பார். அதனால் எல்லாரையும் நடத்துகிற மாதிரி அவனை நடத்தக் கூடாது. எப்பவும் எதிரிக்கு நம் மனதில் என்ன இருக்குன்னு தெரியக் கூடாதுன்னும், அவன் நம்மை நம்பற அளவுக்கு யதார்த்தமாக வெளியே தெரியணும்னும் அப்பா எப்பவும் சொல்வார். நீ போய் அந்த ஆளைக் கூட்டிகிட்டு வா"

மனோகரன் ஐந்து நிமிடங்களில் சாரங்கனோடு வந்தான். சாரங்கன் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.

"அண்ணனுக்கு என்ன ஆச்சு கதிரேசா?"

கதிரேசன் டாக்டர்கள் சொன்னதை விவரமாக சொன்னான்.

"உண்மையாகச் சொல்றேன் கதிரேசா. செய்தியைக் கேட்டவுடன் துடிச்சுப் போயிட்டேன். அவரை எப்பவுமே நான் சொந்த அண்ணனாய் தான் நினைச்சிருக்கேன். அவர் பிழைச்சுக்குவார்னு நான் நம்பறேன்" என்று சொல்லி சாரங்கன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"உங்கள் நம்பிக்கை உண்மையாகட்டும் சார். டில்லியில் இருந்து ஒரு பெரிய டாக்டர் வரப் போகிறார். அவருடையது தான் கடைசி முயற்சி..."

"நாம் பிரார்த்தனை செய்வோம். கடவுள் கை விட மாட்டார், கதிரேசா. இன்னிக்கு ராத்திரி என் வீட்டில் ஒரு பெரிய ஹோமத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். என் தலைவர், என் அண்ணன் தீர்க்காயுசா இருக்கணும்கிறதுக்காக இந்த ஹோமம். அவரில்லாத நம் கட்சி நிலைமையை என்னால யோசிச்சு கூட பார்க்க முடியலை அதனால தான் அமெரிக்காவில் எல்லா நிகழ்ச்சிகளையும் பாதியில ரத்து செய்துட்டு ஓடி வந்திருக்கேன் ..."

"எனக்கு தெரியும் சார். உங்க மாதிரி தளபதிகள் தம்பிகளாய் பக்கத்தில் இருக்கும் போது அப்பாவை நெருங்க அந்த எமனுக்குக் கூட தைரியம் வராது"

"உன்னை மாதிரி மகன் கிடைக்கவும் அவர் கொடுத்து வச்சிருக்கார் கதிரேசா. இந்த ஆஸ்பத்திரியில் அப்பா பக்கத்தில் மூன்று நாளாய் பிரியாம நிழல் மாதிரி இருந்துகிட்டு பார்த்துக்கற உன்னை மகனாய் கிடைக்க, அவர் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செஞ்சிருக்கணும்"

கங்காதரனுக்கு உள்ளே பற்றி எரிந்தது. "பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணுமாம். அப்படியானால் இந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்யவில்லை என்று சொல்லாமல் சொல்கிறான் பார்" என்று மனதிற்குள் வசை பாடினார். சாரங்கன் சோகத்தோடு கண்ணீர் மல்க அவரருகே சிறிது நேரம் நின்றார். அவர் செத்த பிறகு பிணத்தருகே எப்படி நிற்பது என்று சாரங்கன் ஓத்திகை பார்க்கிறாரோ என்று கங்காதரனுக்கு சந்தேகம் வந்தது.

அரசியலில் இது போன்ற பாசாங்குகள் சகஜம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதோ சர்வ சகஜம். அதுவும் இது போன்ற முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்த இருக்கும் கட்டங்களில் பொய், பாசாங்கு, சதி, வேஷம் எல்லாம் நியதியே தவிர விதிவிலக்கல்ல.
இது போன்ற விஷயங்களில் கங்காதரன் ஒரு பல்கலைகழகம் என்றே சொல்லலாம். அவர் கற்றுத் தந்து தான் சாரங்கன் உட்பட அனைவரும் கற்றிருக்கிறார்கள். ஆனால் அவரிடமே அந்த வித்தையை அவர்கள் காட்டிய போது தான் அது சகிக்கவில்லை.

"அப்ப நான் கிளம்பறேன் கதிரேசா. இன்னைக்கு ஹோமம் முடிஞ்ச பிறகு திருநீறு குடுத்தனுப்பறேன். அப்பாவுக்கு பூசி விடு. நான் வரட்டுமா?"

"மகனே இவன் பழம் பெருச்சாளி. இவன் கிட்ட சர்வ ஜாக்கிரதையாயிரு" என்று மனதினுள் மகனுக்கு கங்காதரன் அறிவுரை சொன்னார்.

சாரங்கனை வராந்தா வரை சென்று விட்டு வந்த மனோகரன் நண்பனிடம் பரபரப்போடு சொன்னான். "கதிரேசா! இன்றைக்கு சாரங்கன் வீட்டில் ஹோமம் எதற்கு தெரியுமா?"

"எதற்கு?"

"அந்த ஆளு முதலமைச்சராக ஏதோ ஒரு கிரகம் குறுக்கே நிற்குதுன்னு ஒரு ஜோசியன் சொன்னானாம். அதற்கு சாந்தி செய்யத் தான் இந்த ஹோமம்னு நம்ம ஆளுங்க தகவல் தந்தானுங்க"

"சரி அந்த ஆளை விடு. மத்தவங்க எப்படி?"

"மந்திரி முனிரத்தினத்துக்குக் கூட முதலமைச்சர் நாற்காலி மேல் ஒரு கண். இருக்கிற மந்திரிகளில் அவர் தான் ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காமல் இருக்கார். திருவாளர் பரிசுத்தமாம். அவர் அதை வைத்து முதலாக்கப் பார்க்கிறார். நேற்று ராத்திரி மணிக்கணக்கில் உட்கார்ந்து உங்கப்பாவிற்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதை எழுதிகிட்டு இருந்ததாய் அவர் டிரைவர் சொன்னான்"

கங்காதரன் உள்ளே எரிமலையாய் வெடித்தார். "அடப்பாவிங்களா, விட்டால் குழி தோண்டி என்னை உயிரோடு புதைத்து விடுவீர்கள் போல இருக்கிறதே".

இத்தனை திமிங்கலங்களுக்கு மத்தியில் தன் மகனை விட்டுப் போவதில் அவருக்கு வருத்தம் இருந்தது. தன் ஒரே மகன் மீது அவர் மித மிஞ்சிய பாசம் இருந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார். அவனுக்கும் அவர் ஒன்று சொன்னால் அது வேத வாக்காக இருந்தது. அவரிடம் சொல்லாமல், அனுமதி பெறாமல் அவனும் எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை மட்டும் விதிவிலக்கு நிகழ்ந்தது. அதுவும் ஒரு மகன் தன் தந்தையிடம் சொல்லக் கூடிய விஷயம் அல்ல என்பதால் அவன் அதை அவரிடம் சொல்லவில்லை. அவன் கல்லூரியில் படிக்கும் போது தன் சக மாணவியை கற்பழித்துக் கொன்று விட்டான். அவ்வளவு தான். அது சம்பந்தமான தடயம் ஒன்று ஒரு பத்திரிக்கை நிருபர் கையில் கிடைத்து விட நிலைமை பூதாகரமாகியது. அந்த இளம் நிருபருக்கு தொழில் தர்மம், நியாயத்திற்காக போராடுவது போன்ற பைத்தியக்காரக் கொள்கைகள் அழுத்தமாக இருந்தன. எந்த விலைக்கும் அவன் படியாமல் போகவே அவனைத் தீர்த்துக்கட்டுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. அந்தப் பத்திரிக்கை ஆசிரியருக்கும், உரிமையாளருக்கும் பல கோடிகளையும், சலுகைகளையும் தந்து தடயத்தை அழிக்க வேண்டி வந்தது. அப்போது தான் முதல் முறையாக மகன் மீது அவர் கடுமையாகக் கோபப்பட்டார்.

"உன்னை என் மகன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமாய் இருக்குடா கதிரேசா. ஒரு புத்திசாலி ஆயிரம் அயோக்கியத்தனம் செய்யலாம். ஆனால் அதை முட்டாள்தனமாய் செய்யக் கூடாது. எந்தத் தப்பு செய்தாலும் தடயங்களை விட்டு வைக்கக் கூடாது. அது முடியாத பட்சத்தில் தப்பே செய்யக் கூடாது. இன்னொரு தடவை இப்படி மாட்டிகிட்டு என் கிட்டே வந்து நின்னால் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ஜாக்கிரதை"

அந்த மாணவியைக் கொன்றதாக ஏற்றுக் கொண்டு வேறு ஒரு மாணவன் போலீசில் சரணடைந்தான். பத்திரிக்கை நிருபர் கொலை வழக்கில் வதந்திகள் தவிர வேறு முன்னேற்றம் இல்லாமல் அது கிடப்பில் போடப்பட்டது. அந்த நிருபரின் விதவைத்தாய் மட்டும் ஒரு பேட்டியில் ஆணித்தரமாய் சொன்னாள்: "தெய்வம் நின்று கொல்லும்". படித்து விட்டு கங்காதரன் ஏளனமாகச் சிரித்தார். "கொன்னுட்டு போகட்டுமே, இங்க யார் சாசுவதம்"

கதிரேசன் மற்றொரு முறை அது போன்ற முட்டாள்தனம் எதையும் செய்யவில்லை. திறமை உள்ள மாணவனான அவன் வேகமாக பாடங்களைக் கற்று கொண்டு விட்டான். தடயங்கள் விட்டு வைக்காமல் தவறு செய்வதில் வல்லவன் ஆனான். அவனது புத்திசாலித்தனம் அவரைப் பெருமிதப் படுத்தியது. அவனுக்கு எல்லா அரசியல் நுணுக்கங்களையும் அவர் ஒவ்வொனெறாக சொல்லித் தந்தார். அவனுக்கு எதையும் இரண்டாம் முறை அவர் சொல்லித் தரத் தேவையிருக்கவில்லை.

"கையிலே என்ன லிஸ்ட் கதிரேசா"

"மனோ இதில் நம்ம எம்.எல்.ஏக்கள், சாரங்கனோட எம்.எல்.ஏக்கள், முனிரத்தினத்தின் எம்.எல்.ஏக்கள், சைத்தானோட எம்.எல்.ஏக்கள்னு பிரித்து லிஸ்ட் போட்டிருக்கேன்"

"அதென்ன சைத்தானோட எம்.எல்.ஏக்கள்?"

"யார் பக்கமும் சேராத, ஆனால் எப்பவும் எப்படியும் மாறி விடக் கூடியவர்கள்"

மகனின் பேச்சை கங்காதரன் ரசித்துக் கொண்டிருந்த போது டில்லி டாக்டர் மற்ற டாக்டர்கள் பின் தொடர வந்தார். கதிரேசனிடம் வெளிப்படையாகப் பேசினார். "இப்போதைய நிலைமையில் ஒரே ஒரு ஆபரேசன் தான் நம் கடைசி நம்பிக்கை. அதைச் செய்யாமல் இருந்தால் நாம் அவரை நிச்சயமாக இழந்து விடுவோம். செய்தாலோ காப்பாற்ற ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. ஆபரேசன் முடிந்து சுமார் பன்னிரண்டு மணி நேரம் அவர் தாக்குப் பிடித்து விட்டால் அவர் கண்டிப்பாய் குணம் ஆகி விடுவார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

கதிரேசன் குரலடைக்கச் சொன்னான். "நீங்கள் ஆபரேசன் செய்யுங்கள் டாக்டர். இத்தனை வருஷம் பதவியில் தாக்குப் பிடித்த அப்பாவுக்கு ஆபரேசன் முடிந்து பன்னிரண்டு மணி நேரம் தாக்குப் பிடிப்பது ஒன்றும் முடியாத காரியம் இல்லை டாக்டர்"

அவனது துக்கத்தையும் மீறி அவன் வார்த்தைகளில் தொனித்த நம்பிக்கையைப் பார்த்த டாக்டர் மனம் நெகிழ்ந்தார். "எல்லாவற்றுக்கும் மேல் கடவுள் இருக்கிறார்" என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் கங்காதரனுக்கு ஒரு வயதான தாயின் 'தெய்வம் நின்று கொல்லும்" என்ற நம்பிக்கையும், அந்த சித்தரின் "நீ விதைத்ததை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்' என்ற வாக்கியமும் நினைவுக்கு வந்தது. "இந்தாளு டாக்டரா இல்லை சாமியாரா தேவையில்லாமல் கடவுளை ஞாபகப் படுத்தறான் சனியன்..." என்று மனதிற்குள் பொரிந்து தள்ளினார்.

ஒரு மணி நேரத்தில் ஆபரேசன் தியேட்டருக்கு அவரை அழைத்துப் போனார்கள். 'அப்பா தாக்குப் பிடிப்பார்' என்று நம்பிக்கையுடன் மகன் சொன்னதை நினைத்த படியே மயக்க மருந்தால் நினைவிழந்தார். எத்தனையோ நேரம் கழித்து அவர் நினைவு திரும்பிய போது மனோகரனிடம் கதிரேசன் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

"நம்ம ஆளுங்க மூலம் செய்த பேரம் எல்லாம் நமக்கு சாதகமாய் இருக்கு மனோ. இப்போதைய நிலவரப்படி எனக்குத் தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கு. அனுதாப அலையும் சேர்ந்துடுச்சுன்னா நான் முதலமைச்சர் ஆக எந்த தடையும் இல்லை"

"ஆனா ஆபரேசனும் சக்சஸ் ஆயிடுச்சு, உங்கப்பாவும் தேறிட்ட மாதிரி தான் தோணுது"

"அவர் பிழைக்க மாட்டார் மனோ"

மனோ குழப்பத்தோடு தன் நண்பனைப் பார்த்தான். "நான் கொஞ்ச நேரத்துக்கு அவரோட ஆக்சிஜன் டியூப்பைக் கழற்றி விடப் போகிறேன் மனோ. அவர் இறந்ததுக்குப் பின்னால் இதைத் திரும்ப மாட்டி விடப் போகிறேன். அப்புறம் நான் அழப்போகிறன். நீ நான் அழுது பார்த்ததில்லையே. கொஞ்ச நேரத்தில் பார்க்கப் போகிறாய். எதற்கும் கதவுப் பக்கம் நின்னு யாராவது வருகிறார்களான்னு பார்" என்று நண்பனை அனுப்பி விட்டு அவன் தன் தந்தையை நெருங்கினான்.

மற்ற எல்லாவற்றிற்கும் தயாராக இருந்த கங்காதரன் இதற்குத் தயாராக இருக்கவில்லை. அவன் வார்த்தைகள் டன் கணக்கில் அக்னித் திராவகத்தை அவர் இதயத்தில் ஊற்ற, சகல பலத்தையும் உபயோகித்து கண்களைத் திறந்து மகனை அதிர்ச்சியுடன் பரிதாபமாகப் பார்த்தார்.

"சாரிப்பா" என்று சொல்லி விட்டு அமைதியாக கதிரேசன் ஆக்சிஜன் டியூப்பைப் பிடுங்கினான். இந்த முறை அவன் எந்தத் தடயத்தையும் விட்டு வைக்கவில்லை.

-என்.கணேசன்

Monday, October 15, 2007

கழுதையிடமும் கற்கலாம்



டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் ஒரு கழுதையின் கதையைக் கூறியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

பண்டைய சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் சக்கரவர்த்திக்குக் கோயில் எழுப்ப தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியின் கவர்னர் மிகக் குறுகிய காலத்தில் கோயிலைக் கட்டி முடிக்க கிராமத்தினருக்குக் கட்டளை இட்டார்.

கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறு ஒன்று இருந்தது. எனவே கட்டிடப் பணி துவங்கும் முன் அக்கிணறை மூட வேண்டி வந்தது.

மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்த கிராம மக்கள், மண்ணைச் சுமக்க ஒரு கழுதையைப் பயன்படுத்தினர். சிறிது பணி புரிந்த பின் ஒரு முறை கழுதை கிணற்றின் விளிம்பு வரை சென்று சறுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

கிணற்றுக்குள் விழுந்த கழுதையை மீட்க சில முறை முயற்சித்த மக்கள் அது முடியாமல் போகவே அது உள்ளே இருக்கையிலேயே அந்தக் கிணற்றை மூட முடிவு செய்தனர். கழுதையைக் காப்பாற்ற நேரம் எடுத்துக் கொண்டால் கவர்னர் தந்த காலக் கெடுவுக்குள் கோயில் பணியை முடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணினர்.

கிராம மக்களே மண்ணைச் சுமந்து வந்து கிணற்றுக்குள் கொட்ட ஆரம்பித்தனர். கழுதை பரிதாபமாகக் கத்தியது. அதைக் கண்டு கொள்ளாமல் மண்ணைக் கொண்டு வந்து கிணற்றில் கொட்டியபடி இருந்தனர். சிறிது நேரத்தில் கழுதையின் சத்தம் நின்று விட்டது. கழுதை இறந்திருக்கும் என்று எண்ணிய அவர்கள் சிறிது நேரம் கழித்து கிணற்றில் எட்டிப் பார்த்தனர். கழுதை உயிரோடு தான் இருந்தது. தன் மீது விழுந்த மண்ணை உதறி அடியில் தள்ளி அந்த மண் இறுகிக் கெட்டியாகும் வரை கால்களால் வேகமாக மிதித்தபடி இருந்தது.

அப்படி மண்ணால் உறுதியாகி கிணற்றின் அடித்தளம் மேற்பட மேற்பட கழுதையும் மேலே வந்த வண்ணம் இருந்தது. கடைசியில் ஒரே எட்டாகக் குதித்து கிணற்றுக்கு வெளியே வந்து தப்பித்ததைக் கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பல சமயங்களில் நாமும் இந்தக் கழுதையின் பரிதாப நிலைக்கு ஆளாகிறோம். நம் மேல் விழ ஆரம்பிக்கும் பிரச்சினைகள் என்ற மண் குவியல் நம் புலம்பலுக்கு செவி சாய்த்து நிறுத்தப்படுவதில்லை.

எலிஸபெத் குப்ளர் ரோஸ் என்ற அறிஞர் சோதனைகள் வரும் போது ஒவ்வொரு மனிதனும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டி இருப்பதாகக் கூறுகிறார். முதல் நிலை அந்த சோதனையை ஒத்துக் கொள்ளவே முடியாத ஒரு வித ஜடநிலை. இரண்டாவது நாம் மறுப்பதால் சோதனை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கும் நிலை. மூன்றாவதாக சோதனைகள் நீங்காததைக் கண்டு சோகமடையும் நிலை. நான்காவதாக நடந்ததை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண முற்படும் நிலை. முதல் மூன்று நிலைகளை எந்த அளவுக்கு சீக்கிரமாகக் கடந்து நான்காம் நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் புத்திசாலிகளாகிறோம்.

இந்தக் கதையின் கழுதை தப்பித்தது தனது கூக்குரலால் அல்ல; தனது செயல் திறனால் தான். சோதனைகள் வரும் போது வருத்தப்படுவது இயல்பே. ஏன் இப்படி நேர்ந்தது என்ற கேள்வி நமக்குள் எழுவதும் சகஜமே. ஆனால் வருத்தத்தாலும் புலம்பலாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதை உணர்வதும் பகுத்தறிவுள்ள மனிதர்களுக்கு சாத்தியமே.

கழுதையின் மேல் மணலைக் கொட்டியவர்களுக்குக் கழுதையின் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. அவர்களது சூழ்நிலையும், கட்டாயமுமே அவர்களை அப்படிச் செய்ய வைத்தது.

சோதனைகள் வரும் போது உலகம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிற தீர்மானத்திற்கு வருவது தவறு. குற்றம் சொல்லிச் சுட்டிக் காட்டிக் கொண்டு நிற்கும் போது நாம் காப்பாற்றப்படுவதில்லை.

எலிஸபெத் குப்ளர் ரோஸ் கூறுவது போல "ஆனது ஆகி விட்டது; இதற்குத் தீர்வு என்ன?" என்று சிந்தித்துச் செயல்படத் துவங்கும் போது தான் சோதனைகளில் இருந்து விடுபடுதல் சாத்தியமாகிறது.

மேலே விழுந்த மண் மழையை உதறித் தள்ளி, காலால் தொடர்ந்து மிதித்து உறுதியாக்கித் தான் படிபடியாக உயர்ந்து கழுதை தப்பித்த வழி சிந்திக்கத் தக்கது. அது போல சோதனைகளைக் காலடிக்குத் தள்ளி அவற்றின் மூலம் உயரக் கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம்.

பயன்படுத்தும் வித்தை தெரிந்தால் வாழ்க்கையில் எதுவுமே வீண் அல்ல. எல்லாவற்றில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். சோதனைகளிலும் நம் சாதனைகளுக்கான விதைகளைக் காண முடியும். ஒவ்வொன்றின் மூலமாகவும் நாம் உயரக் கற்றுக் கொண்டால் வானம் கூட நமக்கு எட்டி விடும் தூரம்
தான்.

- என்.கணேசன்

Sunday, October 14, 2007

பந்தயக்குதிரை




தூக்க மாத்திரைகளை விழுங்கும் முன் பரத் தாத்தாவிற்கு மட்டும் ஒரு வரியில் கடிதம் எழுதினான். "என்னை மன்னிச்சுடுங்க தாத்தா"

அவர் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார். அவன் பிரிவை அவர் தாங்க மாட்டார். ஆனாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. மாத்திரைகள் உள்ளே போய் மரணம் நெருங்குகிற அந்த கடைசி தருணத்த்¢ல் கூட அவன் அவரை மட்டுமே நன்றியோடு நினைத்துப் பார்த்தான். அவனை அவர் போல யாரும் நேசித்ததில்லை...

அவனுக்கு நினைவுக்கு எட்டிய பிஞ்சுப் பருவத்திலேயே அவன் கூட இருந்தது அவர் தான். அப்பா மாதவன் பெரும்பாலும் வியாபார விஷயமாக வெளியூர்களில் இருந்தார். அம்மா மைதிலி அவன் தூக்கத்திலிருந்து காலையில் எழும் போது வேலைக்குப் போயிருப்பாள். அவள் இரவில் திரும்பி வரும் போது அவன் உறங்கியிருப்பான். அவள் ஒரு வெளிநாட்டுக் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்ததால் நேரம் காலம் இல்லாமல் உழைக்க வேண்டியிருந்தது. விடுமுறை நாட்களிலோ மகன் உட்பட யாரும் தன்னை தொந்திரவு செய்யாமல் இருப்பது நல்லது என்று அவளுக்குப் பட்டது. இப்படி பெற்றோர் இருவருமே தங்கள் ஒரே பிள்ளையைக் கவனிக்க நேரமில்லாமல் இருப்பது தாத்தா ரங்கநாதனுக்கு சரியாகப் படவில்லை.

ஒரு நாள் அவர் தன் மகன் மாதவனிடமும் மருமகள் மைதிலியிடமும் வெளிப்படையாகச் சொல்லி ஆதங்கப் பட்டார். மாதவனோ "என்னப்பா செய்யறது" என்று கேள்வியையே பதிலாகச் சொல்லி அடுத்த கணம் அதை மறந்து போனார். மைதிலியோ அமெரிக்காவை உதாரணம் காட்டினாள். "அங்கெல்லாம் இங்கத்து மாதிரி எப்பவுமே குழந்தைகள் கூட இருந்து கொஞ்சி செல்லம் கொடுத்துக் கெடுக்கறதில்லை மாமா". அவர் அப்படித்தான் செய்கிறார் என்று அவள் சொல்லாமல் சொல்லிக் காண்பித்தாள். தாத்தா வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவனை அணைத்தபடி சொன்னார்: "இவங்களுக்கு எப்படிடா குழந்தை புரிய வைப்பேன்".

தன்னால் முடிந்த வரை தாத்தா அவனுக்கு சர்வமாக இருந்தார். கூட விளையாடினார். கதைகள் சொன்னார். சோறு ஊட்டினார். தாலாட்டு பாடினார். அவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பின் வேறு ஒரு பிரச்சினை ஆரம்பித்தது. மகன் படிப்பதைத் தவிர வேறு என்ன செய்தாலும் அது நேரத்தை வீணாக்குவது என்று அம்மா ந்¢னைக்க ஆரம்பித்தாள். தன் மகன் அகில இந்திய அளவில் படிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்றும் அதற்கு அவனுக்கு மிகச் சிறு வயதிலேயே பயிற்சி அவசியம் என்று எண்ணினாள். ஒவ்வொரு தேர்விலும் அவன் முதல் ரேங்க் வர வேண்டும் என்று எதிர்பார்த்தாள். அவனும் படிப்பில் சுட்டியாக இருந்ததால் முதல் ரேங்க் வந்தான். ஒன்றாம் வகுப்பில் ஒரு முறை அவன் நான்காம் ரேங்க் வந்து விட அது அவளுக்குப் பெரிய அவமானமாக இருந்தது. தன் மாமனாரிடம் அவன் விளையாடுவதும் கதை கேட்பதும் தான் அவன் ரேங்க் குறையக் காரணம் என்று கண்டுபிடித்தாள். அதை மாமனாரிடம் சொல்லியும் காண்பித்தாள்.

"குழந்தை என்ன மெஷினா மைதிலி. அந்தந்த வயசு சந்தோஷங்கள் அதுக்கு வேண்டாமா? ஒன்றாம் கிளாசில் போய் இதை நீ பெரிசு பண்றியே"

"இது அந்தக் காலம் மாதிரி இல்லை மாமா. எவ்வளவு படிச்சாலும் பத்தாது. நாலாம் ரேங்க் வரும் போது முழிச்சுக்காட்டா அப்புறம் அது பெயிலில் வந்து நிற்கும்"

தாத்தா அந்த முறை விடவில்லை. தொடர்ந்து வாதாடினார். அம்மா கடைசியில் அப்பாவிடம் போய் சொன்னாள் "இதப் பாருங்க. உங்க அப்பா இங்க இருக்கிற வரை நம்ம பையன் உருப்பட மாட்டான்"

அப்பா தாத்தாவிடம் சலிப்புடன் கேட்டார். "என்னப்பா இது.."

தாத்தாவின் முகத்தில் தெரிந்த வலி பரத்திற்கு இப்போதும் பசுமையாக நினைவு இருக்கிறது. மருமகளின் வார்த்தைகளா, மகன் அதைக் கேட்டுக் கொண்டு வந்து தன்னிடம் வந்து சலித்துக் கொண்டதா எது அதிகமாக அவரை அதிகமாய் காயப் படுத்தியது என்று தெரியவில்லை. அன்றே தன் கிராமத்து பூர்வீக வீட்டுக்குப் போய் விட தாத்தா முடிவு செய்தார். அன்று அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிறைய நேரம் அழுதார். "தாத்தாவோட உடம்பு தான் அங்கே போகுது. மனசையும், உயிரையும் உங்கிட்ட தான் விட்டுட்டுப் போறேன். நீ நல்லாப் படிக்கணும். பெரிய ஆளா வரணும் என்ன"

அவர் போன அந்தக் கணமே அவன் உலகம் சூனியமாகியது. அவன் அன்று அழுதது போல் வாழ்வில் என்றுமே அழுததில்லை. அம்மா அலட்சியமாகச் சொன்னாள். "எல்லாம் நாலு நாளில் சரியாயிடும்" அந்தத் துக்கம் அவள் சொன்னது போல நான்கு நாட்களில் சரியாகவில்லை. சாசுவதமாக அவனுள் தங்கி விட்டது.

அம்மா அவனிடம் எப்போது பேசினாலும் அது அவன் படிப்பைப் பற்றித் தான் இருந்தது. ஆரம்ப நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் அம்மாவிடம் வேறு எதைப் பற்றியாவது சொல்லப் போனால், "ப்ளீஸ், பரத். அம்மாவுக்கு இன்று ஒரு நாள் தான் கிடைக்கிறது. தொந்திரவு செய்யாதே" என்று சொல்லி டீவியைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். மற்ற விடுமுறை நாட்களிலும் அவள் டீவியில் முழுகி விடுவாள். அவனுக்கு எந்த விலை உயர்ந்த பொருளையும் அவனது பெற்றோர் வாங்கித் தரத் தயாராக இருந்தார்கள். தங்களது நேரத்தை மட்டும் அவனிடம் பங்கிட்டுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவனுக்கோ மனிதர்கள் தேவைப்பட்டார்கள். தாத்தா போகும் போது லீவிலாவது அவனை கிராமத்துக்கு அனுப்பச் சொல்லி விட்டுப் போனார். அப்போது தலையாட்டினாலும் அவனை எந்த லீவிலும் அங்கே அனுப்பாமல் அம்மா பார்த்துக் கொண்டாள். முழுப் பரிட்சை லீவுகளில் கூட அவனை ஸ்பெஷல் கிளாஸ்களில் சேர்த்தாள். அவனுக்கு ஏதாவது படிக்க இருந்தது.

தாத்தா அந்த வீட்டு வாசற்படியை மறுபடி மிதிக்கவில்லை. அப்பா மட்டும் அவரை எப்போதாவது ஒரு முறை சென்று பார்த்து விட்டு வருவார். "எப்பப் போனாலும் அப்பா பரத்தை ஏன் அனுப்பலைன்னு கேட்டுப் புலம்பறார். ஒரு லீவிலாவது அனுப்பணும் மைதிலி" என்று பல வருடங்கள் கழித்து ஒரு முறை அப்பா அம்மாவிடம் சொல்வது அவன் காதில் விழுந்தது. "பார்க்கலாம்" என்று அம்மா சொன்னாலும் இது வரை ஒரு முறை கூட அவனை அனுப்பவில்லை. தாத்தாவின் கிராமத்து வீட்டுக்கு போன் வந்த பிறகு எப்போதாவது ஒரு முறை அவனிடம் போனில் பேசுவார். அம்மாவின் கண்காணிப்பில் அதுவும் அதிக நேரமோ, அடிக்கடியோ இருக்கவில்லை. அந்த நாட்களில் அவன் மிக சந்தோஷமாக இருப்பான்.

ப்ளஸ் டூ பரிட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன் போன் செய்த போது தாத்தா சொன்னார். "பரத் ரிசல்ட் வர்றப்ப உன் போட்டோவை பேப்பரில் பார்க்க சையாய் இருக்குடா". தாத்தாவுக்காக பரிட்சை முடியும் வரை படிப்பைத் தவிர வேறு எதிலும் சிறிதும் கவனம் செலுத்தாமல் படித்தான். மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தான். போட்டோவைப் பத்திரிக்கைகளில் பார்த்த தாத்தா அவனுக்குப் போன் செய்து நிறைய நேரம் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தார். மாநிலத்தில் முதலிடம் கிடைத்ததை விடத் தாத்தாவின் திக்குமுக்காடல் அவனை அதிகமாக சந்தோஷப்பட வைத்தது. ஆனால் அம்மா அப்பாவிடம் பெருமையாக சொன்னாள் "நான் கண்டிப்பாய் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ரிசல்ட் வந்திருக்குமா? இப்பவாவது உங்கப்பா இதைப் புரிஞ்சிருப்பார்னு நினைக்கறேன்"

கல்லூரியில் சேர்ந்த பிறகு அவன் தனிமையை அதிகமாய் உணர ஆரம்பித்தான். ஆரம்பத்தில் இருந்தே அவன் நண்பர்களுடன் பழக அம்மா விதித்த கடும் கட்டுப்பாடுகளால் பெரியவனான போது அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் கூட இருக்கவில்லை. அப்படியொரு பலவீனமான சந்தர்ப்பத்தில் தான் அவனது சக மாணவன் ஒருவன் அவனுக்கு போதை மருந்தை அறிமுகப் படுத்தி வைத்தான். தனிமையையும் வெறுமையையும் அது மறக்க வைத்தது. ஒரு செமஸ்டரில் அவனது மதிப்பெண்கள் குறைந்த போது தான் அம்மா ஆராய்ந்து அதைக் கண்டு பிடித்தாள். வீட்டில் ஒரு சூறாவளியையே அவன் சந்திக்க நேர்ந்தது. எல்லாப் பிரச்னைகளும் தீர மரணம் ஒன்று தான் வழியாகத் தெரிந்தது...

நினைவுகள் நின்று போய் எத்தனை நேரம் மயக்கத்திலிருந்தானோ தெரியவில்லை. டாக்டரும் நர்ஸ்களும் பேசும் சத்தம் லேசாகக் கேட்ட போது தான் மரணமும் அவனை ஏமாற்றி விட்டதை உணர்ந்தான்.

அவன் முழுவதும் குணமாகும் வரை அம்மாவும் அப்பாவும் அவனருகிலேயே இருந்தார்கள். அம்மா மிகவும் அதிர்ந்து போயிருந்தாள். எப்போதும் தொடுக்கும் கேள்விக்கணைகளும் இல்லாமல், நீண்ட பிரசங்கங்களும் இல்லாமல் மௌனமாகவே இருந்தாள். அப்பா தான் தேவைப் பட்ட போது பேசினார். வீட்டுக்கு வந்த மறு நாள் அவராகவே அவனிடம் சொன்னார். "சில நாளுக்கு உனக்கு ஒரு இட மாறுதல் நல்லதுன்னு டாக்டர் சொல்றார். தாத்தாவும் உன்னை அனுப்பச் சொல்லி நிறைய நாளாய் சொல்றார். கிராமத்தில் அடுத்த வாரம் திருவிழாவும் இருக்காம். நீ போய் சில நாள் இருந்துட்டு வா". தன் காதுகளை நம்ப முடியாமல் பரத் அம்மாவைப் பார்த்தான். அம்மா முகத்தில் உணர்ச்சியே இல்லை. அப்பாவின் அக்கறையும், அம்மாவின் மௌனமும் அவன் இது வரை கண்டிராதது.

மகனைக் காரில் அனுப்பி விட்டு மாதவன் தந்தைக்குப் போன் செய்து பேசினார். நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார். கிழவர் உணர்ச்சி வசப்பட்டு வெடித்தார். "நீங்க ஆரம்பத்திலிருந்தே அவனை ஒரு பந்தயக் குதிரை மாதிரி தான் வளர்த்தீங்க. என்னைக்கும் முதல் இடத்தில் வரணும். அது ஒண்ணு தான் உங்களுக்கு முக்கியம். அந்தக் குழந்தைக்குன்னு ஒரு மனசு இருக்கு. ஆசைகளும் தேவைகளும் இருக்குன்னு நீங்க என்னைக்குமே நினைச்சுப் பார்த்ததில்லை. அந்தப் பிள்ளைக்குன்னு ஒரு சுதந்திரம் உன் வீட்டில் இருந்திருக்கா? படிப்பு விஷயம் தவிர, பணத்தால் உங்களால் செய்ய முடிஞ்சதைத் தவிர, தகப்பனாய், தாயாய் நீங்க இது வரைக்கும் அவனுக்கு எதாவது செய்திருப்பீங்களா, ஒரு விஷயமாவது சொல்லு பார்ப்போம்...."

அவருக்குச் சொல்ல இன்னும் எத்தனையோ இருந்தது. ஆனால் நிராயுதபாணியாக, நொந்து போயிருக்கும் இந்தத் தருணத்தில் மகனிடம் மேற்கொண்டு பேச அவரால் முடியவில்லை. கஷ்டப் பட்டுத் தன்னை அடக்கிக் கொள்ள அவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. "சரி விடு. குழந்தை பிழைச்சுட்டானில்ல அது போதும். அவனை இப்பவாவது இங்க அனுப்பணும்னு உங்களுக்குத் தோணிச்சே. தேங்க்ஸ்" என்று சொல்லி போனை வைத்தார்.

தாத்தாவின் கிராமத்துப் பெரிய வீட்டை பரத் முதல் முறையாகப் பார்க்கிறான். பழைய காலத்து வீடு. தாத்தா பேரனைக் கண் கலங்க வரவேற்றார். "வாடா குழந்தை". உள்ளே நுழைந்தவுடன் அவனது சிறு வயதுப் போட்டோ பெரிதாக்கபட்டு சுவரில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். தாத்தாவின் தொடர்ச்சியான உபசரிப்பில் பரத் திக்குமுக்காடிப் போனான். அப்பா போனில் எல்லாவற்றையும் சொல்லியிருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் தாத்தா எதையும் கேட்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிறைய நேரம் கழித்து அவன் கேட்டான். "நடந்ததைப் பற்றி எதுவும் கேட்க மாட்டீங்களா தாத்தா".

"சொல்லாமலேயே எனக்கு உன்னைத் தெரியும்டா குழந்தை. நீ முழுசாய் இத்தனை வருஷம் கழிச்சு என் முன்னாடி இங்கே இருக்காய். எனக்கு இது போதும். வேற எதுவும் எனக்குக் கேட்க வேண்டாம்" என்று சொல்லி விட்டு உடனடியாக பேச்சை மாற்றினார்.

"இது தான் உங்கள் பேரனா?" என்று கேட்டபடி கிராமத்தினர் பலர் அன்று மாலை வந்தார்கள். அன்பாகப் பேசினார்கள். நிறைய கேள்வி கேட்டார்கள். நிறைய சொன்னார்கள். அவன் காதில் திரும்பத் திரும்பக் கேட்டது ஒன்றே ஒன்று தான். "உங்களைப் பத்திப் பெரியவர் பேசாத நாளில்லை தம்பி".

தொடர்ந்த நாட்களில் எல்லோரும் மிகவும் உரிமையுடன் அந்த வீட்டில் வந்து போனதை பரத் கவனித்தான். சில சிறுவர்கள் தாத்தாவின் வீட்டு முன்பிருந்த விசாலமான காலி இடத்தில் கபடி விளையாடினார்கள். சிலர் உள்ளே வந்து டிவி பார்த்தார்கள். கோயில் திருவிழாவுக்கு ஐந்தே நாட்கள் இருப்பதால் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் பற்றி கூட தாத்தாவுடன் வந்து பேசினார்கள். இட வசதி தாராளமாக இருந்ததால் தாத்தா வீட்டில் தான் நாடகத்திற்கும், வில்லுப்பாட்டிற்கும், ஒத்திகைகள் நடந்தன. வீடே கலகலவென இருந்தது. பரத்திற்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.

"இது என்னோட இன்னொரு குடும்பம்" என்று எல்லாரும் போன பிறகு ஒரு நாளிரவில் தாத்தா புன்னகையோடு சொன்னார்.
"உன்னை விட்டுட்டு வந்தப்ப எனக்கு திடீர்னு தனியாயிட்ட மாதிரி ஒரு தோணல். எனக்கு யாருமே இல்லைன்னு ஒரு விரக்தி. நல்லா யோசிச்சப்போ, நாலே பேர் இருக்கறது தான் உன் உலகம்னு என் மனசு குறுகிட்டது தான் பிரச்னைன்னு புரிஞ்சது. இந்த கள்ளங்கபடமில்லாத கிராமத்து ஜனங்களையும் என்னவங்களா நினைச்சுப் பழக ஆரம்பிச்சேன். நேசிக்க ஆரம்பிச்சேன்.... இப்ப நான் பெரிய குடும்பஸ்தன்"

தாத்தா தன் வாழ்க்கையின் பிரச்னையான கட்டத்தை அணுகிய விதம் அவனை யோசிக்க வைத்தது. "வாழ்க்கையில் எல்லா பிரச்னைகளும் மேலோட்டமாய் தெரிகிற அளவு தாங்க முடியாதது இல்லையோ?"

ஒரு நாள் ஒரு இளைஞன் தயக்கத்துடன் வந்து பரத்திடம் சொன்னான். "சார்..எங்க டிராமால கலெக்டர் வர்ற மாதிரி ஒரு சீன். அந்த வேஷத்துக்குப் பொருத்தமான மூஞ்சி எங்க யாருக்குமில்லை. நீங்க நடிக்கிறிங்களா? ஒரு அஞ்சு நிமிஷ சீன் தான். ஜாஸ்தி வசனமும் இல்லை..."

பரத் மறுக்கும் முன் ரங்கனாதன் உற்சாகமாகச் சொன்னார் "அதெல்லாம் என் பேரன் வெளுத்து வாங்கிடுவான்". அவரைப் பொருத்த வரை அவர் பேரனால் முடியாதது எதுவுமில்லை.

வேறு வழியில்லாமல் பரத்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எல்லாமே அவனுக்கு வித்தியாசமாயும் தமாஷாயும் இருந்தன. முன்பெல்லாம் அவனுக்கு சில மணி நேரம் போவதே ஆமை வேகத்திலிருக்கும். ஆனால் இங்கு வந்த பின்பு திருவிழா நாள் வரை நாட்கள் போனதே தெரியவில்லை. அவனும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டான். அந்த நாட்களில் போதை மருந்து கூட வந்து ஆசை காட்டவில்லை.

அந்த நாட்களில் தாத்தா கூட ஓய்வெடுக்காமல் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். "ஐயா, உங்களுக்கு என்ன சின்ன வயசா? இப்படி துள்ளிக் குதித்து ஓடுறீங்க. உடம்பு என்னத்துக்காகும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்று ஒருவர் கிழவருக்குப் 'பிரேக்' போட முயன்றார்.

"என் பேரன் வந்தவுடனேயே எனக்கு வயசு குறைஞ்சிடுச்சு. பயப்படாதீங்க. என் பேரன் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவான். அதைப் பார்க்கிற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாது."

பரத் அன்றிரவு தூங்கவேயில்லை. அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவன் காதில் ஒலித்தன. அந்தக் குரலில் தான் எத்தனை நம்பிக்கை, எத்தனை பெருமிதம்...

அதிசயமாக மாதவனும் மைதிலியும் திருவிழாவிற்கு கிராமத்திற்கு வந்தார்கள். மைதிலி திருமணம் முடிந்து ஒரே ஒரு முறை தான் அங்கு வந்திருக்கிறாள். காரை விட்டு அவர்கள் இறங்கிய மறு கணம் வாண்டுப் பயல்கள் கார் ஹாரனை மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பித்தார்கள். மருமகள் வந்ததே பெரியது என்று மனதில் நினைத்த ரங்கனாதன் பயந்து போய் அந்தச் சிறுவர்களை விரட்டி விட்டு வந்தார். அந்தக் கூட்டம், அந்த சத்தம், அந்த சுத்தமில்லாத சுற்றுப்புறம் எல்லாம் அவளுக்கு என்றுமே ஆகாத விஷயங்கள் என்றாலும் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை பேசாமல் ஒரு ஓரமாய் கணவனுடன் நாற்காலியில் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்தாள். ஆனாலும் அவள் முழுக் கவனமும் அவள் மகன் மேல் தான் இருந்தது.

நாடகத்தில் மகன் கம்பீரமாக கலெக்டர் வேடத்தில் நடித்து விட்டுப் போன போது கூட்டத்தினரோடு மாதவனும் கூட சேர்ந்து கை தட்டினார். அப்போதும் கூட ஆழ்ந்த சிந்தனையோடு பார்த்தாளே தவிர அந்த உற்சாகத்தில் கலந்து கொள்ளவில்லை. அவன் தனது காட்சி முடிந்த பின் அவர்களோடு வந்து உட்கார்ந்து கொண்டான். ரங்கநாதன் முகத்தில் அவனைப் பார்த்த போது ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது
.
"என் பேரனுக்கு வீட்டுக்குப் போனவுடன் மறக்காமல் திருஷ்டி கழிக்கணும்"

நாடகம் முடிந்த பின் வில்லுப் பாட்டு ரம்பித்தது. மாயப் பொன்மானைக் கண்டு மயங்கி சீதா ராமனிடம் எனக்கு வேண்டும் என்று கேட்பதில் ஆரம்பமானது. நள்ளிரவு கி விட்டதால் நான்கு பேரும் வீட்டுக்குத் திரும்பினார்கள். ரங்கநாதனும் பரத்தும் சற்று முன்னால் நடக்க மாதவனும் மைதிலியும் பின்னால் வந்து கொண்டு இருந்தார்கள். பேரனிடம் உணர்ச்சி வசப்பட்டு ரங்கநாதன் சொன்னார். "இப்படி எத்தனையோ பேர் இல்லாத ஒரு மாயப் பொன் மானைத் தேடிப் போய் பெரிய பெரிய பிரச்னைகளில் மாட்டிகக்கிறாங்கடா குழந்தை. இதனால் எல்லாம் சந்தோஷம் வந்துடறதில்லை. இதைத் தொடர்ந்து ஓடற ஓட்டம் என்னைக்கும் முடியறதுமில்லை...." தாத்தா என்ன சொல்ல வருகிறார் என்பது பரத்திற்குப் புரிந்தது. போதையைத்தான் அவர் மாயப் பொன் மான் என்கிறார். அந்த உவமானம் எத்தனை பொருத்தமானது என்று ஒரு கணம் அவன் யோசித்துப் பார்த்தான். எத்தனையோ நாள் அவனும் அதன் பின் ஓடி இருக்கிறான். வாழ்க்கையில் முழு மனதாக உற்சாகமாக ஈடுபடும் போது, சின்னச் சின்ன சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு அனுபவிக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு முன் இந்த செயற்கையான சமாச்சாரங்கள் குப்பை என மானசீகமாய் அவனால் உணர முடிகிறது.

"இனி நான் அந்த முட்டாள்தனத்தை என்னைக்குமே செய்ய மாட்டேன் தாத்தா பயப்படாதீங்க. உங்க மனசு வேதனைப் படற மாதிரி நான் இனி எதையும் செய்ய மாட்டேன். நீங்க என் மேல வச்சிருக்கிற பாசத்திற்கு கைம்மாறா என்னால வேற என்ன செய்ய முடியும் தாத்தா" சொல்லும் போது அவன் கண்கள் கலங்கின.

"அது போதும்டா குழந்தை எனக்கு. நீ நல்லா இருந்தா அது ஒண்ணே போதும்"

வீட்டிற்குப் போன பின் மாதவன் தந்தையிடம் சொன்னார். "நாங்க ரெண்டு பேரும் நாளைக்குக் காலைலயே கிளம்பறோம்ப்பா"

ரங்கநாதன் தலையசைத்தார். சிறிது யோசித்து விட்டு பரத்தும் சொன்னான். "நானும் அவங்க கூடயே கிளம்பறேன் தாத்தா. விட்டுப் போன பாடங்களை எல்லாம் பிக்கப் செய்யணும். இப்பப் போகலைன்னா பின்னால் சிரமமாயிடும்"

மகனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மைதிலி முதல் முறையாக வாயைத் திறந்தாள். "தாத்தாவையும் இனிமேல் நம்ம கூடவே வந்துடச் சொல்லுடா. நாலு பேரும் சேர்ந்து போலாம்"

மாதவனும் ரங்கநாதனும் அவளை அதிசயமாகப் பார்த்தார்கள். பரத் சந்தோஷத்தின் எல்லைக்குப் போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். குழந்தையின் அன்பு முத்தம் தாயிற்கு எவ்வளவு இனிமையானது என்பதை மைதிலி இருபது வருடங்கள் கழித்து உணர்கிறாள்.

-என்.கணேசன்
நன்றி: நிலாச்சாரல். காம்

Saturday, October 13, 2007

ஆசை ஓர் அசுர விதை

ம்மில் பலருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆசை நிறைவேறி விட்டால் பின்பு வாழ்நாள் முழுவதும் ஆனந்தமாக இருக்கலாம் என்று பல சமயங்களில் தோன்றுவதுண்டு. அப்படி நினைத்த எத்தனையோ ஆசைகள் நம் வாழ்வில் நிறைவேறி இருக்கின்றன. ஆனாலும் அந்தக் கணத்தில் ஏற்பட்ட ஆனந்தம் கடைசி வரை நீடித்ததில்லை. உடனடியாக இன்னொரு ஆசை அதே போன்ற நம்பிக்கை தூண்டிலைப் போட்டு நிற்க, நாம் அதை நோக்கி ஓடுகிறோம். மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆசையாக நோக்கி ஓடும் இந்த ஓட்டத்தை மரணம் வரை ஓடினாலும் ஆனந்தமும் நிறைவும் தொடுவானம் போல தொட முடியாத தூரத்திலேயே இருக்கின்றன.

பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவரான யயாதி சக்ரவர்த்தி ஒரு முறை சுக்ராச்சாரியாரின் சாபத்தினால் மூப்பு அடைகிறான். அவனது ஐந்து மகன்களில் ஒருவருக்கு தன் மூப்பைத் தந்து அவர்களது இளமையை சில காலத்திற்குப் பெற்று வாழ்வின் சுகங்களை அனுபவிக்க எண்ணுகிறான். அதற்குப் பதிலாகத் தன் ராஜ்ஜியத்தையே தருவதாகக் கூறிக் கெஞ்சியும் அவனது முதல் நான்கு மகன்களும் மறுத்து விடுகிறார்கள். பாசம் மிகுந்த கடைசி மகன் புரு தந்தைக்காக இளமையைத் தந்து மூப்பை ஏற்றுக் கொள்கிறான். பல ஆண்டுகள் கழிந்தும் ஆசைகளால் திருப்தியடையாத யயாதி கடைசியில் மகனிடம் வந்து சொன்ன வார்த்தைகள் காலத்தால் அழியாதவை:

"எனக்குப் பிரியமான மகனே! நெய்யினால் அக்கினி ஆறாமல் மேலும் மேலும் ஜொலிப்பது போல விஷய அனுபவத்தினால் ஆசைகள் விருத்தி ஆகுமேயன்றி தணிவது கிடையாது என்பதை இப்போது தான் உணர்கிறேன். நெல்லும், பொன்னும், பசுவும், பெண்களும் மனிதன் ஆசையை ஒரு நாளும் தீர்க்க முடியாது. விருப்பும், வெறுப்பும் இல்லாத சாந்த நிலையை அடைய வேண்டும், அதுவே பிரம்ம நிலை. அதுவே பேரின்பம்". பின்பு இளமையை மகனுக்குத் திருப்பித் தந்து விட்டு, அரசையும் ஆளச் சொல்லி விட்டு, யயாதி வனம் சென்று தவம் செய்து சொர்க்கம் அடைந்தான்.

சரியாகச் சிந்தித்துப் பார்த்தோமானால் யயாதியின் இந்த அனுபவ உண்மையை நாமும் நம் வாழ்வில் உணர முடியும். ஆரம்பத்தில் கூறியது போல நமது எத்தனையோ ஆசைகள் கடந்த காலத்தில் நிறைவேறி இருந்தாலும் மனம் அதை எண்ணி இந்த கணம் திருப்தியாகவா இருக்கிறது? "அதெல்லாம் பழைய கதை. இப்போது இது கிடைத்தால் தான் சந்தோஷம்" என்று ஆசைவயப் பட்ட மனம் புதிய பட்டியலோடு நம்மை பாடாய் படுத்துகிறது.

ரக்தபீஜனின் ரத்தம் சிந்திய இடம் எல்லாம் அசுரர்கள் உருவாவது போல, ஒரு ஆசை நிறைவேறும் போது அதிலிருந்து பல புதிய ஆசைகள் உதயமாகின்றன. அவை ஒவ்வொன்றும் எப்போதும் கோபம், பொறாமை, துக்கம், அகங்காரம் போன்ற பல இலவச இணைப்புகளுடன் வருகின்றன. எதிர்பார்த்த இன்பத்திற்குப் பதிலாக இணைப்புகளுடன் நாம் போராட வேண்டி வருகிறது.

"இதை மட்டும் அடைந்து விடு. பின் ஒரு குறையுமில்லை" என்று ஆசை, ஆசை காட்டும் போது அது தான் உலகத்திலேயே மிகப் பெரிய பொய் என்பதை நாம் உணர வேண்டும்.

நிறைவு என்பது ஆசைகளையும் மாசுக்களையும் களைந்து விட்ட அகத்தின் இயல்பு நிலை. அது என்றுமே புறத்திலிருந்து வருவதில்லை. பணம் பதவி முதலானவை எக்காலத்திலும் எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்று மனதுக்கு நிறைவு அளித்ததாக சரித்திரம் இல்லை. அவை கிடைத்த போதும் தக்க வைத்துக் கொள்ள மிகவும் பாடுபட வேண்டி இருக்கிறது. கிடைத்தது கையை விட்டுப் போய் விடுமோ என சதா சர்வ காலமும் பயத்துடம் வாழ வேண்டி உள்ளது. அவை நமது தகுதிக்கு மீறியதாக இருந்தாலோ அவற்றால் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதமும் நமக்கு இயல்பாக இருப்பதில்லை, ஆனாலும் அவற்றை விடவும் முடியாமல் சமாளிக்கவும் தெரியாமல் திண்டாட வேண்டி வருகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் முள்ளைத் தின்னும் ஒட்டகத்தை இதற்கு உவமையாகக் கூறுவார். வாயில் ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாது ஒட்டகம் முட்செடியைத் தொடர்ந்து சாப்பிடுமாம். ஒட்டகத்தை விட ஒரு அறிவு அதிகமுள்ள மனிதனும் அவ்வாறே நடப்பது விந்தையல்லவா?
எதையும் என்ன விலை கொடுத்துப் பெறுகிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மன நிம்மதியை விலையாகக் கொடுத்து நாம் நிறைவேற்றிக் கொள்ளும் ஆசை, கண்களை விற்று வாங்கும் சித்திரத்திற்குச் சமமானது.

ஆசைகளை முழுவதும் ஒரேயடியாகத் துறப்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. என்றாலும் ஒவ்வொன்றிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டு வாழ்வது ஒரு நல்ல ஆரம்பம். அது அனாவசியமான ஆசைகளையும், தேவையென நாம் நினைப்பவைகளையும் துரத்திக் கொண்டு ஓடும் மாரத்தான் ஓட்டத்தை ஓரளவு குறைக்கும். நமது ஆசைகள் நியாயமானவை தானா, அவசியமானவை தானா என்று சீர்தூக்கி, தெளிந்து குறைத்துக் கொள்ளும் போது நாம் சுமக்கும் பாரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறோம். வாழ்க்கை எளிதாகிறது. கண்மூடித் தனமாக ஆசை வழிப் போகாமல் தெளிவாக சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கும் போது தான் மனிதன் தன் வாழ்க்கை லகானைத் தன் கையில் வைத்திருப்பவனாகிறான்.

எனவே ஆசை என்னும் அசுர விதை மனதில் விழும் அந்த முதல் கணத்திலேயே அதை மிகக் கவனமாகக் கையாளுங்கள். அனாவசியமாக அதை நிறைய நேரம் மனதில் தங்க விடாதீர்கள். அது விரைவில் வேர் விட்டு பல மடங்கு பெருகக் கூடியது. அவசியமானதா, நியாயமானதா, தகுதிக்கேற்றதா, கொடுக்கப் போகும் விலை சரி தானா என்றெல்லாம் சிந்தித்து, தேறினால் மட்டும் அதை மனதில் தங்க விடுங்கள். இல்லையென்றால் உடனடியாக அதை மறுபடி எழாதபடி எரித்து விடுங்கள். அவ்வாறு செய்ய முடிந்தால் ஏராளமான பிரச்னைகளில் இருந்தும் உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள் என்பது உறுதி.

-என்.கணேசன்
நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்

ஒரு இந்தியக் கனவு




"இது மினிஸ்டரோட பர்சனல் விஸிட். அதனால் தான் கட்சிக்காரங்களுக்கும், பிரஸ்ஸ¤க்கும் தகவல் தரல. ஆனா நம்ம போலீஸ் பாதுகாப்பு மட்டும் வழக்கம் போல இருக்கட்டும்னு மேலிடத்திலிருந்து உத்தரவு"

"அவர் எங்கே போறார்?"

"கருவலூர் கிராமத்திற்கு"

"அங்கேயா...அங்கே சாதாரணமா அரசியல்வாதிங்க போக மாட்டாங்களே"

"அந்தப் பெரியவரும், மினிஸ்டரும் அந்தக் காலத்து நண்பர்களாம்"

விமானம் வந்திறங்கியதும் போலீஸ்காரர்களின் பேச்சு நின்றது. மத்திய மந்திரி சுந்தரேசன் விமானத்தை விட்டு இறங்கியதும் போலீஸ் உயர் அதிகாரிகளின் சல்யூட்டைப் பொருட்படுத்தாமல் நேராக தனது நண்பர் சீனிவாசனிடம் சென்று விசாரித்தார்.

"எப்படியிருக்கான்?"

"சீரியஸ் தான். ஆனா பேச முடியுது. பேசறப்ப எப்பவும் போல் தெளிவாய்ப் பேசறான்"

சுந்தரேசன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அவரது கார் முன்னும் பின்னும் போலீஸ் கார்கள் வர, கருவலூர் புறப்பட்டது.

சுந்தரேசன் வேதமூர்த்தியைப் பார்த்து முப்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. வேதமூர்த்தியைப் பற்றி சீனிவாசன் மூலமாகவும், மற்றவர்கள் மூலமாகவும் அவ்வப்போது தகவல் சேகரித்தாலும் நேரில் சென்று பார்ப்பதை அவர் இத்தனை வருடங்களாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். வாழ்வில் அவர் வேதமூர்த்தியைப் போல வேறொரு மனிதரை மதித்ததோ, நேசித்ததோ இல்லை. ஆனால் வேதமூர்த்தியை நேரில் சந்திப்பது மனசாட்சியை நேரில் சந்தித்துப் பேசுவது போல மிகவும் சங்கடமான விஷயமாக இருந்தது. எனவே அதை முடிந்த வரை தவிர்த்து வந்தார். வேதமூர்த்தி மரணத்தை நெருங்குகிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் சுந்தரேசன் கிளம்பி விட்டார்.

"சீனி..."

"என்ன சுந்தர்?"

ஒன்றுமில்லை என்று சுந்தரேசன் தலையசைத்தார். இந்த முப்பது வருடங்களில் எத்தனையோ முறை சீனிவாசனிடம் கேட்க நினைத்த அந்தக் கேள்வியை இப்போதும் அவரால் கேட்க முடியவில்லை. பதில் என்ன வருமோ என்ற பயமே பல முறை கேள்வி கேட்பதை நிறுத்தி வைக்கிறது.

"வேதமூர்த்தி என்னைப் பற்றி ஏதாவது கேட்டானா, என்னைப் பற்றி ஏதாவது சொன்னானா?" என்று கேட்க நினைத்தவர் மறுபடி கேள்வியை நிறுத்தி வைத்தார்.

அந்த மூவரும் முதல் முறை ஒருவரை ஒருவர் சந்தித்தது சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற போது. ஒரே சிறையறையில் அடைக்கப் பட்ட ஒரு கூட்டத்தில் மூவரும் இருந்தார்கள். எல்லோரும் பேசிக் கொண்டு, தூங்கி வழிந்து கொண்டிருந்த போது, அமைதியாகப் படித்துக் கொண்டும், யோகப் பயிற்சி செய்து கொண்டும் இருந்த வேதமூர்த்தி என்கிற அந்த இளைஞன் சீனிவாசனையும், சுந்தரேசனையும் நிறையவே கவர்ந்தான். பேச்சுக் கொடுத்த போதும் தேவையானதைத் தேவையான அளவு மட்டுமே வேதமூர்த்தி பேசினான். ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயமே இருக்கவில்லை. தெரிந்த விஷயங்களில் கூட மிகத் தெளிவாய் இருந்தான். அப்போது ஆரம்பித்தது அவர்கள் இருவருக்கும் வேதமூர்த்தி மீதிருந்த "ஹீரோ வர்ஷிப்". அந்த மூவரும் சீக்கிரமாகவே நெருக்கமாகி விட்டார்கள்.

அவர்கள் பல விஷயங்கள் பற்றிப் பேசினாலும் அதிகமாய்ப் பேசியது சுதந்திர இந்தியாவைப் பற்றித் தான். வேதமூர்த்தி அது பற்றிப் பேசும் போது மட்டும் ஒரு புதிய மனிதனாக மாறி விடுவான். ஒரு தன்னிகரற்ற பாரதத்தைப் பற்றிப் பேசுவான். அப்போதெல்லாம் அவனது கண்களில் ஒரு பிரத்தியேக அக்னி ஜொலிக்கும். அந்தக் கனவின் பிரம்மாண்டத்தில் மூவரும் மூழ்கித் திளைப்பார்கள். எல்லாப் பிரச்னைகளுக்கும் சுதந்திரம் ஒரு தீர்வாக அந்த இளைஞர்களுக்குத் தோன்றியது.

அவர்களது நட்பு சிறையில் இருந்து விடுதலையான பின்பும் தொடர்ந்தது. சுதந்திர நாளில் அந்த மூவரும் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அந்த நாள் இன்னும் சுந்தரேசனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. வேதமூர்த்தியின் சந்தோஷம் வற்றிப் போய் சிந்தனை ஆரம்பித்த அந்தக் கணத்தில் அவரும் உடன் இருந்திருக்கிறார்.

அன்று அவர்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த ஒருவன் இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். "என்னது.. டிக்கெட் வாங்கினியா. எதுக்கு? நமக்குத் தான் சுதந்திரம் கிடைச்சாச்சே. இனி எதுக்கு வாங்கணும்"

வேதமூர்த்தி அன்று அடைந்த அதிர்ச்சி, தொடர்ந்த நாட்களில் மக்களை உன்னிப்பாக கவனித்த போது அதிகரிக்கத் தான் செய்தது. அவர்கள் மூவரில் முதலில் விழித்துக் கொண்டது வேதமூர்த்தி தான். "சுந்தர் நாம் நினைச்ச மாதிரி இல்லை. இந்த சுதந்திரம் நம்ம ஜனங்களுக்குப் பெருசா எதையும் செய்துடப் போறதில்லை".

சுந்தரேசனுக்கு வேதமூர்த்தி தேவையில்லாமல் பயப்படுவதாகத் தோன்றியது. "வேதா நீ முதல் முறையா ஒரு 'பெசிமிஸ்ட்' மாதிரிப் பேசறே. என்ன ஆச்சு உனக்கு?"

வேதமூர்த்தி பதில் சொல்லவில்லை. ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்து போன வேதமூர்த்தியைப் புரிந்து கொள்ள முடியாமல் இளைஞன் சுந்தரேசன் குழம்பினான். தொடர்ந்து வேதமூர்த்தியின் கவலைக்குக் காரணம் கேட்ட போது வேதமூர்த்தி சொன்ன பதில் இப்போதும் சுந்தரேசன் காதில் ஒலிக்கிறது. "வெள்ளைக் காரன் போயிட்டான். ஆனா அவனை விடப் பெரிய எதிரியை, ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த எதிரியை நாம் இன்னும் நம்மோட வச்சிருக்கோம். அது நம்ம ஜனங்களோட அறியாமைங்கிற எதிரி. அதிருக்கிற வரை நாம கனவு கண்ட பாரதம் சாத்தியமில்லை சுந்தர்"

பாரதியின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" வேதமூர்த்திக்கு மிகவும் பிடித்த பாடல். பாரதி முன்னமே இந்த மக்களின் நாடி பிடித்து விட்டுப் பாடிய பாடல் அது என்று அடிக்கடி வேதமூர்த்தி கூறுவதுண்டு.

எல்லோருக்கும் கல்வி கிடைத்து விட்டால் இந்த அறியாமை எதிரி காணாமல் போய் விடும் என்ற நம்பிக்கை அந்த நாட்களில் சுந்தரேசனுக்கு இருந்தது. ஆனால் அது ஏட்டுக் கல்வியால் சாதிக்கக் கூடிய காரியம் இல்லை என்பது வேதமூர்த்தியின் வாதமாக இருந்தது.

சீனிவாசனைப் பொருத்த வரை சுதந்திரம் கிடைத்தவுடன் தனது பணி முடிந்து விட்ட திருப்தி இருந்தது. வியாபாரம் செய்வதில் முழு மூச்சாக இறங்கி விட்டார். சுந்தரேசனுக்கும், வேதமூர்த்திக்கும் சிறையில் கண்ட அந்த பாரதக் கனவை மறக்க முடியவில்லை. சுந்தரேசன் அரசியலில் இறங்கத் தீர்மானித்தார். வேதமூர்த்தியையும் அழைத்தார். வேதமூர்த்தி ஒத்துக் கொள்ளவில்லை.

"ஏன் வேதா"

"எந்த மாற்றமும் மேலேயிருந்து திணிக்க முடியாது சுந்தர். நல்ல நிர்வாகம், நல்ல சட்டங்கள் இதெல்லாம் முக்கியம் தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா ஜனங்கள் மாறும் வரை அதனாலும் பெரிய மாறுதல் வந்து விடாது சுந்தர்."

"அப்ப என்ன தான் செய்யப் போறே வேதா"

"நான் கிராமத்துக்குப் போகப் போகிறேன்"

"போய்...?"

"நம்ம கனவுப் படி தேசத்தை ஒரேயடியாய் மாத்த முடியாதுன்னு புரிஞ்சுடுச்சு. ஆரம்பமாய் ஒரு கிராமத்தையாவது மாத்திப் பார்க்க ஆசைப் படறேன். ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்கப் போறேன்...."

சுந்தரேசனுக்குச் சப்பென்று போய் விட்டது. இத்தனை பெரிய அறிவுஜீவி தன் கனவை இப்படிச் சுருக்கியதில் அவருக்குப் பெரிய ஏமாற்றம். நண்பர்கள் தத்தம் திசைகளில் பயணம் துவங்கினார்கள்.

சுந்தரேசன் வெற்றி மீது வெற்றி கண்டார். எம்.பி ஆனார். பின்பு மந்திரி, அயல்நாட்டு தூதர், கவர்னர் என்று ஏதாவது ஒரு பதவியில் தொடர்ந்து இருந்தார். முடிந்த வரை மக்களுக்கு நல்லது செய்தார். பத்திரிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் அரசியலில் தொடர்ந்து நீடிக்க எத்தனையோ 'காம்ப்ரமைஸ்' செய்ய வேண்டியிருந்தது. ஊழல், சொத்து சேர்த்தல் செய்யா விட்டாலும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு வளைந்து கொடுக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் கஷ்டமாய் இருந்தது. பின்பு மனம் பக்குவப் பட்டது.

வேதமூர்த்தி ஆரம்பத்தில் இருந்தே தனது பணியின் பளுவை உணர்ந்தே இருந்தார். ஆங்கிலேயர்களை அனுப்புவதற்கும், ஆட்சிகளை மாற்றுவதற்கும் மக்களை ஒன்று திரட்டுவது எளிதாக இருந்தது. ஆனால் அவர்களே மாற வேண்டும் என்று இதுவரை யாரும் சொல்லி வென்றதில்லை. அப்படிச் சொல்லாமல் சொல்லி, உதாரணமாகத் தானும் அவர்கள் முன் வாழ்ந்து காட்ட ஒரு மாமனிதன் அங்கு வந்த போது ஆரம்பத்தில் பெரிய எதிர்ப்பிருந்தது. வேதமூர்த்தி அதற்கெல்லாம் அசரவில்லை. வேதமூர்த்தி சிறுவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து தன் பணியை ஆரம்பித்தார்.

அவ்வப்போது அவரை வந்து கண்ட சீனிவாசன் அவருக்கு பண உதவி செய்யத் தயாராக இருந்தார்.

"வேண்டாம் சீனி. பிரச்னை பணப் பற்றாக் குறை அல்ல. மனப் பற்றாக்குறை. அதை சரி செய்ய நிறைய பொறுமையும், கொஞ்சம் புத்திசாலித் தனமும் தான் வேணும்"

ஒவ்வொரு முறை அந்தக் கிராமத்திற்கு வரும் போதும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தையாவது சீனிவாசனுக்குப் பார்க்க முடிந்தது. ஆரம்ப காலத்தில் ஒரு முறை அங்கு சென்று ஏதோ யோசனையில் ஒரு காகிதத்தை கிழித்துத் தெருவில் போட்ட போது பின்னால் வந்து கொண்டிருந்த சிறுமி ஒருத்தி அவரை ஒரு முறை முறைத்து அந்தக் காகிதத்தை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போனாள். பின்பு தான் அந்தத் தெரு பளிச்சென்று இருந்ததைக் கண்டார். முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை. சிறிது சிறிதாக ஒரு புதிய கிராமம் அங்கு உருவாகத் தொடங்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ரோடு போட்டுக் கொண்டிருந்ததை அக்கிராமத்து இளைஞர்கள் கண்காணித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் கேட்டார். "வேதா, அவங்க என்ன பார்க்கிறாங்க"

"சரியான அளவு ஜல்லி, தார் எல்லாம் கலந்து போடுகிறார்களான்னு பார்க்கிறாங்க"

"போடாட்டி...?"

"வேலையைத் தொடர விட மாட்டாங்க. அரசாங்கக் கணக்குப் படி என்ன விகிதத்தில் எதை எவ்வளவு கலக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு தான் நிற்கிறார்கள்"

இது போன்ற ஒரு சங்கதியை இது வரை கேள்விப் பட்டிராத சீனிவாசன் வாயைப் பிளந்தார்.

"இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது, சீனி. நம்ம வரிப் பணம். நம்ம தெரு. நாம அஜாக்கிரதையாக இருக்க முடியுமா?"

யாராவது அரசாங்க ஊழியர் லஞ்சம் கேட்டால் அடுத்த கணம் ஊரே கூடி அந்த அலுவலகம் முன் நின்றது. தாங்களே செய்து கொள்ள முடிந்ததை அரசாங்கத்திற்காகக் காத்திராமல் தாங்களே செய்து கொண்டார்கள். விவசாயத்தில் ஏதாவது புதிய கண்டு பிடிப்பு இருந்தால் அது உடனே அங்கு பயன்படுத்தப் பட்டது. அங்கு ஆஸ்பத்திரி ஆகட்டும், பள்ளிக் கூடமாகட்டும், கிராம நிர்வாகமாகட்டும் குறையில்லாமல் நடக்கும் படி பார்த்துக் கொள்ளப் பட்டது. ஒரு புதிய சட்டம் வந்தால் அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசி எந்த வகையில் எல்லாம் தங்களுக்குப் பயன்படும் அல்லது பாதிக்கப் படும் என்று பெரும்பாலானவர்கள் அறிந்திருந்தனர். புதிய பலன் அளிக்கக் கூடிய விஷயங்களை அலசுவதற்கென்றே ஒவ்வொரு ஞாயிறு மாலையும் சரியாக நான்கு மணிக்கு ஊர் கூடும். அநீதி ஒன்று நடந்தால் ஒருவர் மட்டும் போய்க் கேட்கும் பழக்கம் இருக்கவில்லை. மாறாக கணிசமான எண்ணிக்கையுடன் ஒரு கூட்டமே போய்க் கேட்டது.

வேதமூர்த்தி திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தைச் சொல்லி அவர்கள் மனதில் பதித்திருந்தார். "ஒற்றுமையாய் ஒன்றாக நின்று போராடினால் ஒவ்வொருவரும் உங்களது நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். தனிதனியாகப் போராடினால் ஒருவர் தேவை கூடப் பூர்த்தி ஆகாது. மதம், மொழி, ஜாதின்னு என்னென்னவோ சொல்லி உங்களைப் பிரிக்கப் பார்ப்பார்கள். அவர்களால் உங்களைப் பிரிக்க முடிந்தால் நீங்கள் தோற்பது உறுதி". ஆகவே அங்கு மதம் தனிப்பட்ட நம்பிக்கையாகவும், கலவரத்துக்கு உட்படாத விஷயமாகவும் இருந்தது.

எப்போதுமே தேர்தலின் போது 95 சதத்திற்குக் குறையாமல் ஓட்டுப் போட்டார்கள். கள்ள ஓட்டு என்பது அங்கு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. அரசியல்வாதிகள் சுலபமாக அங்கு போய்ப் பேசிக் கை தட்டல் வாங்க முடியாமல் இருந்தது. மக்கள் பல கேள்விகள் கேட்டார்கள். முன்பு பேசியதை நினைவு படுத்தினார்கள். ஒரு அரசியல்வாதி சுந்தரேசனிடம் சொன்னார்: "அங்கே போனால் நாம என்னவோ அவங்க வச்ச வேலைக்காரன் மாதிரியும் அவனுக என்னவோ முதலாளி மாதிரியும் நடந்துக்கறானுக. திமிர் பிடிச்சவங்க".

சிறிது சிறிதாக அந்தக் கிராமம் ஒரு மாதிரிக் கிராமமாகியது. வளமான, வசதியான கிராமம் என்ற பெயரெடுத்தது. ஒட்டியிருந்த கிராமங்களும் அதைப் பின் பற்ற ஆரம்பித்தன. பத்திரிக்கைகள் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தன. பலர் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். வேதமூர்த்தி பிரபலமாகவே, அரசாங்கம் அவருக்கு ஒரு விருது வழங்கத் தீர்மானித்தது. ஆனால் வேதமூர்த்தி வாங்க மறுத்து விட்டார்.

ஒரு பத்திரிக்கையாளர் காரணம் கேட்ட போது வேதமூர்த்தி சொன்னார்: "இதை நான் பெரிய சாதனையாக நினைக்கவில்லை. தேசத்தையே இப்படிப் பார்க்கணும்கிறது என்னை மாதிரி நிறைய பேர் சுதந்திரப் போராட்டத்தின் போது கனவு கண்டிருக்கோம். அதற்கு இது ஒரு பிள்ளையார் சுழின்னு வேணும்னா சொல்லலாம். பின்னே இது நான் பாகிஸ்தான் போய் அங்கேயிருக்கிறவங்களுக்குச் செய்ததல்ல. நம்ம தேசத்திற்கு நாம் செய்ய வேண்டியவங்க தானே. இதுக்கெல்லாம் விருது வாங்கறது சிறுபிள்ளைத் தனமாய் எனக்குத் தோன்றுகிறது"

சுந்தரேசன் அதைப் படிக்கையில் கண்கலங்கினார். அந்த வார்த்தைகள் வேதமூர்த்தியின் இதய ஆழத்திலிருந்து வந்தது என்பதை அவர் அறிவார். அந்த விருது தனக்கு ஒரு தூசு என்கிற ரீதியில் சிலர் செய்வது போலப் பாசாங்கல்ல.

ஒரு முறை சீனிவாசன் சுந்தரேசனிடம் கேட்டே விட்டார். "ஒவ்வொரு தடவையும் அவனைப் பற்றியே கேட்கிறாய், பேசுகிறாய். ஏன் நீயே போய் அவனைப் பார்க்கக் கூடாது?"

"அவன் கனவு ஒரு காலத்தில் என் கனவாய்க் கூட இருந்ததுன்னு உனக்குத் தெரியும் சீனி. அரசியலில் நான் தாக்குப் பிடிக்க நிறைய 'காம்ப்ரமைஸ்' செய்துட்டேன். ஆனா அவன் வாழ்க்கையில் 'காம்ப்ரமைஸ்'ங்கிற வார்த்தையே இருந்ததில்லை. நான் அவன் முன்னால் போய் நின்று எப்படி நேருக்கு நேர் பார்ப்பேன்"

அப்படி ஒரு கட்டத்தில் நண்பனைச் சந்திப்பதை நிறுத்திய சுந்தரேசன் இனி ஒரு சந்தர்ப்பம் இனிக் கிடைக்காது என்றான பின் தான் கிளம்பியிருக்கிறார்.

"சுந்தர். வந்து சேர்ந்துட்டோம்" என்று சீனிவாசன் சொன்னவுடன் சுந்தரேசன் நிகழ்காலத்திற்கு வந்தார். காரில் இருந்து அவர்கள் இறங்கிய போது அந்தச் சிறிய வீட்டுக்கு முன் பெரிய கூட்டமே பெரும் துக்கத்துடன் நின்றிருந்தது.

"ஆனா லேட்டாயிடுச்சுன்னு நினைக்கிறேன்" என்று சீனிவாசன் குரல் கம்மத் தன் நண்பரிடம் சொன்னார். அங்கிருந்தவர்கள் வேதமூர்த்தியின் மரணம் சம்பவித்து அரை மணி நேரம் ஆயிற்று என்றார்கள். சுந்தரேசன் கனத்த மனத்துடன் உள்ளே நுழைந்தார். வேதமூர்த்தியின் உடலைக் கீழே கிடத்தியிருந்தார்கள். அவரது முகத்தில் பேரமைதி நிலவியது. அது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து முடித்த திருப்தியின் விளைவாக சுந்தரேசன் கண்டார். இப்படி இருந்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்று மரணப் படுக்கையில் அந்த மாமனிதனுக்குத் தோன்றியிருக்கக் காரணமே இல்லை என்று தோன்றியது.

வேதமூர்த்தியின் உடல் அருகே இளைஞர்கள் நிறைய பேர் நின்றிருந்தார்கள். அவர்களில் பலரது கண்களிலும் ஒரு காலத்தில் வேதமூர்த்தியின் கண்களில் இருந்த உறுதியையும், ஜொலிப்பையும் சுந்தரேசன் கண்டார். வேதமூர்த்தி தன் கனவை அவர்களிடம் விதைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பதை சுந்தரேசன் உணர்ந்தார். மனிதர்கள் மாண்டு போகலாம். அவர்களோடு அவர்கள் கண்ட கனவும் சேர்ந்து போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்ற கட்டாயமில்லை அல்லவா?

தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் போய் விட்ட வேதமூர்த்தியைப் பார்க்கப் பார்க்க அவர் மனதில் கனம் கூடிக் கொண்டே வந்தது. கடைசியாக ஒரு முறை பெரும் துக்கத்துடன் சீனிவாசனைக் கேட்க நினைத்தார். "அவன் என்னைப் பற்றி ஏதாவது கேட்டானா, ஏதாவது சொன்னானா?"

அவரால் ஏனோ இப்போதும் அதைக் கேட்க முடியவில்லை. இறந்து போயும் கனவைப் பிழைக்க வைத்து விட்டுப் போன அந்த மனிதர் முன், கனவை இறக்க விட்டுத் தான் பிழைத்திருக்கும் இந்த மனிதர் சிலையாக நிறைய நேரம் நின்றார். கடைசியில் அவர் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. அந்தக் கண்ணீர் சுய பச்சாதாபமே என்பது அங்கிருந்த யாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

-------------- என்.கணேசன் ------------


நன்றி: maraththadi.com

Friday, October 12, 2007

கண்கள்




பிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் வருவான் என்பதில் மட்டும் அவருக்குத் துளியும் சந்தேகமில்லை. அந்த முதிய கேரள நம்பூதிரி சொன்னது அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....".

அபிராம பட்டரின் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தது. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு விக்கிரகம் இன்னும் பிரதிஷ்டையாகாத கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் தொலை தூரத்திற்கு வேறு எந்த வீடும் கிடையாது. காலையில் பால்காரன் வந்து விட்டுப் போனால் வேறு யாரும் அவர் வீட்டுக்கு வருவது கிடையாது. உறவினர்களோ நண்பர்களோ இல்லாமல் தனிமையாக அவர் அந்த வீட்டில் வசித்து வந்தது செந்திலின் திட்டத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்தியது.

ஒரு புராதன அம்மன் கோயிலில் நகைகளைக் கொள்ளை அடிக்க அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டான். அதை வாங்குவதற்கு வட நாட்டு மனிதர் ஒருவர் தயாராக இருந்தார். கொள்ளை அடித்தவுடன் அன்றைய தினமே நகைகளை அவர் வந்து வாங்கிக் கொண்டு போவதாக இருந்தது. ஆனால் கொள்ளையடிக்கப் போகும் கோயிலின் அருகே உள்ள பெரிய மைதானத்தில் அவனது திட்ட நாளன்றே முதலமைச்சரின் பொதுக்கூட்டம் நடக்க திடீரென்று ஏற்பாடு ஆனது. போலீஸ் நடமாட்டம் அதிகமாக அந்தப் பகுதியில் ஆரம்பிக்கும் என்பதால் அவன் தனது திட்டத்தை மூன்று நாட்கள் முன்னதாக செயல்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அந்த வட நாட்டு மனிதரோ முன்பு சொன்ன தேதிக்கு முன்னால் வர முடியாது என்று சொல்ல கொள்ளை அடித்த நகைகளுடன் மூன்று நாள் மறைந்திருக்க ஒரு இடத்தைத் தேடித் தேடிக் கடைசியாக அவன் தேர்ந்தெடுத்தது தான் அவர் வீடு. நகைகளை வெற்றிகரமாக அவன் கொள்ளையடித்து விட்டான். லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஒரு பழந்துணியில் கட்டிக் கொண்டு அவன் அவரது வீட்டை அடைந்த போது இரவு மணி பன்னிரண்டு. அந்த நேரத்தில் வாசற் கதவு திறந்திருந்ததும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்ததும் அவனை திடுக்கிட வைத்தன. 'யாராவது வந்திருக்கிறார்களா?' வெளியே சிறிது நேரம் நின்று காதுகளைக் கூர்மையாக்கினான். காற்றும், வண்டுகளும் தான் சத்தமிட்டன. வீட்டுக்குள் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. தன் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு மெள்ள உள்ளே நுழைந்தான்.

"வாங்கோ..வாங்கோ"

அபிராம பட்டர் மிகுந்த சந்தோஷத்துடன் எழுந்து நின்று அவனை வரவேற்றார். கிட்டத்தட்ட எழுபது வயதைத் தாண்டிய அவர் தன் வயதில் பாதியைக் கூடத் தாண்டாத அவனது திடகாத்திரமான முரட்டு உருவத்தையோ கத்தியையோ பார்த்து பயக்காதது மட்டுமல்ல அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்ததும், வரவேற்றதும் அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இது வரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன் எதிர்கொண்டதெல்லாம் பயம், அதிர்ச்சி, மயக்கம், உளறல், கூக்குரலிடுதல் வகையறாக்களைத் தான்.

"உட்காருங்கோ" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலியைக் கை காட்டினார்.

செந்தில் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தான். இங்கு நடந்து கொண்டிருப்பவை எதையும் அவனால் நம்ப முடியவில்லை. அபிராம பட்டரைக் கூர்ந்து பார்த்தான். அவர் அவிழ்ந்திருந்த தன் குடுமியை நிதானமாக முடிந்து கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அது ஒரு சந்தோஷமான, மனம் நிறைந்த புன்னகை.

"பெருசு நீ என்னை வேற யாரோன்னு நினைச்சுட்டே போல இருக்கு" செந்தில் கரகரத்த குரலில் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

அபிராம பட்டருக்கு அந்தக் கேரள நம்பூதிரிகள் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....". அவன் வந்த நேரமும் சரி, கத்தியோடு வந்த விதமும் சரி அவர்கள் சொன்னது போலத் தான் இருக்கிறது.

"அப்படியெல்லாம் இல்லை" என்று அமைதியாக சொன்னார்.

'கிழத்திற்குப் பைத்தியம் முற்றி விட்டது போலிருக்கிறது' என்று எண்ணிய செந்திலுக்குச் சிறிது உதறல் எடுத்தது. போலீஸைக் கூட சமாளிக்க அவன் தயார். ஆனால் பைத்தியம் என்றால் அது அடுத்து என்ன செய்யுமோ என்று அனுமானிக்க முடியாததால் ஏற்ப்படுகிற உதறல் அது. அதை வெளிக் காட்டாமல் யோசித்தான். எதிராளியை என்றுமே பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனது தொழில் சூத்திரம். பயம் மட்டுமே என்றுமே மனிதனை செயல் இழக்க வைக்கிறது என்பதும் அது தனக்குப் பாதுகாப்பு என்பதும் அனுபவம் அவனுக்குக் கற்றுத் தந்த பாடம். கத்தியை அவர் முன்னுக்கு நீட்டினான். "பெருசு இது பொம்மைக் கத்தியில்ல. நான் நினைச்சா ஒரு நிமிஷத்தில உன்னைக் கொன்னுடலாம் தெரியுமா?"

அபிராம பட்டர் அதற்கும் அசரவில்லை. "நான் எப்ப சாகணும்னு பராசக்தி நான் பிறந்தப்பவே நாள் குறிச்சுருக்கா. அதுக்கு முன்னாடி நீங்க நினைச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அந்தக் கத்தியை உள்ளே வைங்கோ. நான் என்ன உங்க கிட்ட சண்டையா போட்டேன்".

மனிதர் ஒடிசலாக இருந்தாலும் அவர் பேச்சு உறுதியாக இருந்தது. அவரை என்ன செய்வது என்றே அவனால் தீர்மானிக்க முடியவில்லை. "பெருசு உன் கிட்ட நானும் சண்டை போட வரல. நான் இங்க மூணு நாள் தங்கப் போறேன். நான் இங்க இருக்கறது வெளிய ஒருத்தனுக்கும் தெரியக் கூடாது. அது உன்னால வெளிய தெரியப்போகுதுன்னு தெரிஞ்சாலோ, நீ என் கிட்ட எடக்கு முடக்கா நடந்துகிட்டாலோ நான் உனக்கு நாள் குறிச்சுடுவேன். பராசக்தி குறிச்ச நாள் வரை நீ உசிரோட இருக்க முடியாது. புரிஞ்சுதா"

"புரிஞ்சுது. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. பயப்படாதீங்கோ. எவ்வளவு நாள் வேணும்னாலும் இருங்கோ. உங்களாலும் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதுக்காகத் தான் பெளர்ணமி எப்போ வரும், நீங்க எப்போ வருவீங்கன்னு நான் ஆவலாய் காத்துகிட்டு இருந்தேன்".

அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்களும் அவனை திடுக்கிட வைத்தன. எரிச்சலோடு சொன்னான். "புதிர் போடாம எனக்கும் பைத்தியம் பிடிக்கறதுக்கு முன்னாடி விவரமா சொல்லுய்யா"

அபிராம பட்டர் சொல்ல ஆரம்பித்தார். பம்பாயில் கோடிக் கணக்கில் சொத்துள்ள வைர வியாபாரம் செய்யும் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தின் பூர்வீக இடமும் அந்த இடத்தில் ஒரு பராசக்தி கோயிலும் இங்கிருந்தன. தங்களது சுபிட்சத்திற்கு அந்தப் பராசக்தியின் அருள் தான் காரணம் என்று பெரிதும் நம்பிய அந்தக் குடும்பம், தடைப்படாமல் பூஜை அந்தக் கோயிலில் நடக்க அபிராம பட்டரை நியமித்திருந்தது. தனது பதினெட்டாம் வயதிலிருந்து அபிராம பட்டர் கோயிலில் பூஜை செய்து கொண்டு அருகில் இருந்த அந்த வீட்டில் வசித்து வந்தார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அனைவரும் வந்து பராசக்தியை தொழுது விட்டுப் போவார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பராசக்தி சிலை சேதப்பட்டுப் போனது. அதே சமயம் அந்தக் குடும்பத்தின் மூத்த தலைவருக்கு மாரடைப்பும் வரவே உடனடியாக பல லட்சம் செலவு செய்து கோயிலைப் புதிதாகக் கட்டவும் சாஸ்திரப்படி ஒரு பராசக்தி சிலை செய்யவும் ஏற்பாடு செய்தார்கள். கோயில் கட்டப்பட்டு முடிந்த போது பராசக்தி சிலையில் கண்களைத் தவிர சிற்ப வேலை எல்லாமே முடிந்திருந்தது. அந்த நிலையில் சிற்பி ஒரு சாலை விபத்தில் இறந்து போனான். இது ஒரு பெரிய அபசகுனமாகத் தோன்றவே அந்தக் குடும்பத் தலைவர் அபிராம பட்டரையும் அழைத்துக் கொண்டு கேரளா சென்று சில வேத விற்பன்னர்களான நம்பூதிரிகளையும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்தார். அவர்கள் அஷ்ட மங்கலப் ப்ரஸ்னம் வைத்து ஆருடம் சொன்னார்கள். பெளர்ணமி இரவு அன்று ஒருவன் தானாகவே அபிராம பட்டரைத் தேடி வருவான் என்றும் அவனைக் கொண்டு அந்தக் கண்களைச் செதுக்கும் படியும் சொன்ன அவர்கள் சிலையைப் பிரதிஷ்டை செய்ய நாளையும் குறித்துக் கொடுத்திருந்தார்கள். அப்படிச் செய்தால் அந்தக் குடும்பத்தார்களுக்கு எல்லா தோஷங்களும் நீங்குவதோடு அந்தக் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசிக்கும் பிரசித்தியும், சக்தியும் வாய்ந்த ஸ்தலமாக மாறும் என்றும் சொன்னார்கள்.

"இந்த வீட்டுக்கு வெளியாட்கள் வந்து பல காலம் ஆயிடுச்சு. ஆனா அவங்க சொன்னது போல இந்த பெளர்ணமி ராத்திரியாப் பார்த்து நீங்க வந்திருக்கீங்கோ. அவங்க சொன்னபடியே நீங்க இங்கே இருந்து அந்தக் கண்களையும் செதுக்கித் தரணும். அந்தக் குடும்பத்துப் பெரியவர் நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரச் சொல்லி என் கிட்டே அவர் கையெழுத்து போட்ட ப்ளாங்க் செக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதில் நீங்க என்ன தொகை வேணும்னாலும் எழுதிப் பணம் எடுத்துக்கலாம். அவங்களுக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை"

கேட்டு விட்டு செந்திலே ஒரு சிலையாகத் தான் நின்றிருந்தான். கடைசியில் அரை மனதோடு சொன்னான். "நான் ஒரு திருடன். சிற்பியல்ல"

"அஷ்ட மங்கல ப்ரஸ்னம் வைத்தவர்கள் மஹா தவசிகள். சாதாரணமானவங்க அல்ல. அவங்க சொன்னது பொய்க்காது. உங்களுக்கு சிற்பக்கலை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை" அபிராம பட்டர் ஆணித்தரமாகச் சொன்னார்.

அந்த ப்ளாங்க் செக் நிறையவே ஈர்த்தாலும் செந்திலுக்கு அந்த இடமே மாந்திரிகம் நிறைந்ததாகத் தோன்றியது. எல்லாம் முன்னமே தெரிந்து வைத்திருந்த அந்தக் கேரள நம்பூதிரிகளும், அபிராம பட்டரும் அவனை அசத்தினார்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா என்கிற பிரமிப்பு தீரவில்லை. கூடவே அங்கிருந்து ஓடி விடலாம் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் அந்தத் திருட்டு நகைகளோடு இனி எங்கே போய் ஒளிவது? இன்னமும் மூன்று நாள் ஒளிந்திருக்க இது தான் பாதுகாப்பான இடம்.

"பெருசு நான் இப்ப எங்கேயிருந்து வர்றேன் தெரியுமா? ஒரு அம்மன் கோயில்ல இருந்து நகைகளைக் கொள்ளை அடிச்சுட்டு வர்றேன். என்னைப் போய் ஒரு அம்மன் சிலைக்குக் கண் வடிக்கச் சொல்றிச்ங்க. இத்தன உசந்த வேலையை எங்கிட்டத் தர்றீங்களே தமாஷா இல்ல"

"உங்களை மாதிரிக் கொள்ளை அடிச்ச ஒருத்தர் தான் ராமாயணம் எழுதினார். எல்லாம் தெய்வ சங்கல்பம். சரி சரி மணி ரெண்டாகப் போகுது. பேசாமத் தூங்குங்கோ. மீதி எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்" என்று அவர் அவனுக்குப் படுக்கையை விரித்துத் தானும் போய் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது குறட்டை சத்தம் லேசாகக் கேட்டது.

அவனுக்கு உறக்கம் வரவில்லை. 'இனி இந்த வேலையைச் செய்ய மாட்டேன்' என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன் அப்பாவின் எதிரில் உளியைத் தூக்கி எறிந்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அப்பா அன்று சொன்னார் "இது ஒரு நல்ல கலைடா".

"நீங்க கலையைப் பார்க்கிறீங்க. நான் இந்தக் கலை இத்தனை வருஷமா உங்களுக்குக் கொடுத்த பட்டினியைப் பார்க்கறேன்"

அதற்குப் பின் அவன் உளியை எடுத்தது பூட்டுகளை உடைக்கத் தான். இத்தனை வருடம் கழித்து இப்படியொரு சூழ்நிச்லையில் மறுபடி அவனுக்கு ப்ளாங்க் செக்குடன் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அபிராம பட்டரின் குறட்டை சத்தம் அதிகமாகியது. ஒரு கொள்ளைக்காரன் வீட்டில் இருக்கும் போது எந்த பயமும் இன்றித் தூங்கும் பட்டரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனையும் அறியாமல் அவனுக்கு ஏனோ அந்தப் பட்டரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

மறு நாள் காலை அவன் சொன்னான் "எனக்கு நேத்துத் தூக்கமே வரல பெருசு"

"கையில கொள்ளையடிச்ச நகை அவ்வளவு இருக்கிறப்ப எப்படித் தூக்கம் வரும்"

"என்ன கிண்டலா. அது சரி. என்னை இங்க வச்சிகிட்டு எப்படிப் பெருசு நீ நிம்மதியாத் தூங்கினே"

"உண்மையைச் சொன்னா நான் ஆறு மாசம் கழிச்சு நேத்து தான் நிம்மதியாத் தூங்கினேன்" அபிராம பட்டரின் கண்களில் நீர் தழும்பியது "அந்தப் பணக்காரங்களைப் பொறுத்த வரை இந்த பராசக்தி அவங்களைச் சுபிட்சமாய் வச்சிருக்கும் ஒரு தெய்வம். ஆனா எனக்கு எல்லாமே அவள் தான். பதினெட்டு வயசுல பூஜை செய்ய ஆரம்பிச்ச எனக்கு அப்புறம் ஒரு குடும்பமோ, பணமோ, வேற சினேகிதர்களோ வேணும்னு தோணலை. தாயாய், சினேகிதியாய், குழந்தையாய்,சொத்தாய்,எல்லாமாய் எனக்கு அவள் இருந்தாள். பூஜை செய்துகிட்டு இருக்கிறப்பவே ஒரு நாள் அவள் காலடியில் உயிர் போயிடணும். அது தான் என் ஒரே ஆசை. விக்கிரகம் சேதப்பட்டப்ப என்னையே ரெண்டாப் பிளந்த மாதிரி துடிச்சேன். நேத்து உங்களைப் பார்த்த பிறகு தான் நிம்மதி.சந்தோஷம்.எல்லாம் சரியாகி நான் பழைய படி பூஜை செய்ய ஆரம்பிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு"

"ஏன் பெருசு எனக்கே அவங்க இவ்வளவு பணம் தர்றாங்களே. உனக்கு எவ்வளவு தருவாங்க"

"எவ்வளவு வேணுனாலும் தருவாங்க. பசிக்குச் சோறு, உடுக்கத் துணி, தங்க இடம் இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்கோ. அதுக்கு மேல கிடைக்கிறதெல்லாம் அதிகம் தான். அவங்க தந்தாலும் நான் வாங்கறதில்லை"

அந்தக் கிழவரின் கள்ளங்கபடமில்லாத பேச்சும் வெகுளித்தனமும் அவன் தந்தையை அவனுக்கு நினைவுபடுத்தின. அவரும் இப்படித்தான் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்தார். ஆனால் பிழைக்கத் தெரியாதவர் என்று தான் நினைக்கும் இந்தக் கிழவரின் நேற்றைய நிம்மதியான உறக்கமும் பிழைக்கத் தெரிந்த தனது உறக்கம் வராத நிலையும் ஒரு கணம் அவனுக்கு உறைத்தது. இது பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.

"ஏன் பெருசு இவ்வளவு சின்னவனான என்னைப் போய் எதுக்கு நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றே"

"என் தெய்வத்திற்கு கண்கள் தரப்போறவர் நீங்க. நீங்க எவ்வளவு சின்னவராக இருந்தாலும், எப்படிப் பட்டவரா இருந்தாலும் சரி எனக்கு கடவுள் மாதிரி தான்"

அவரது வார்த்தைகள் அவனை என்னவோ செய்தன.

"நான் சிற்ப வேலை செஞ்சு இருபது வருஷம் ஆயிடுச்சு. இப்ப எனக்கு எப்படி வரும்னு தெரியல"

"நல்லாவே வரும்.எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவர் அருகில் கோயிலில் இருந்த அந்த சிற்பத்தைக் காண்பித்தார். பழைய சிற்பி உபயோகித்த உபகரணங்களும் அங்கிருந்தன. சிலைக் கல்லையும் அந்த உபகரணங்களையும் அவன் நன்றாக ஆராய்ந்தான்.

"பெருசு, நீங்க போங்க. எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும்" அவர் போய் விட்டார்.

அந்த சிலையையே பார்த்தபடி நிறைய நேரம் செந்தில் உட்கார்ந்தான். திருடன் திரும்பவும் கலைஞனாக மாற சிறிது நேரம் தேவைப் பட்டது. தன் குருவான தந்தையை நினைத்துக் கொண்டான்.
"சிலை கல்லில் வர்றதுக்கு முன்னால் மனசில் துல்லியமாய் வரணும். அதுக்கு முன்னால் உளியைத் தொடக்கூடாது" என்று அப்பா என்றும் சொல்வார். சிலையை நிறைய நேரம் பார்த்து கண்ணை மூடினான். மனதில் பல விதமான கண்கள் வந்து வந்துப் பொருத்தமில்லாமல் மறைந்தன. கடைசியில் பேரழகுடன் இரு விழிகள் வந்து மனதில் உள்ள சிலையில் நிலைத்தன. அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி ஒரு துளியாக ஆரம்பித்து வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது. உளியைக் கையில் எடுத்தான். சிலை கண்கள் திறக்க ஆரம்பித்தது.

அவனுக்கே எப்படி செதுக்கி முடித்தான் என்று தெரியவில்லை. ஆனால் முடித்த பின் அவனே சொக்கிப் போனான். பராசக்தியின் கண்கள் மெள்ள மெள்ளப் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது. கடைசியில் அந்தக் கண்களைத் தவிர வேறெதையும் அவனால் காண முடியவில்லை. அண்ட சராசரங்களையே அவன் அந்தக் கண்களில் கண்டான். அந்தக் கண்களில் இருந்து கவனத்தைத் திருப்ப அவனால் முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. பார்த்தான். பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். காலம் அவனைப் பொருத்த வரை நின்று போய் விட்டது.

அபிராம பட்டர் மதியம், மாலை, இரவு என மூன்று நேரங்களில் வந்து பார்த்தது அவனுக்குத் தெரியாது. இரவில் அவர் வந்து பார்க்கும் போது இரண்டு சிலைகளைப் பார்த்தார். அந்தத் தெய்வச் சிலையும் மனிதச் சிலையும் ஒன்றை ஒன்று நேராகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. அந்த முரட்டு முகம் சிறிது சிறிதாகக் கனிய ஆரம்பித்து பேரமைதியுடன் பளிச்சிட்டது. பட்டர் பராசக்தியைப் பார்த்தார். அவரது பராசக்தி இப்போது முன்பை விட அதிகப் பேரழகுடன் ஜொலித்தாள். எல்லை இல்லாத சந்தோஷத்தில் அவர் கண்கள் அருவியாயின. அவர் சாஷ்டாங்கமாய் அவனது கால்களில் விழுந்தார்.

இந்த உலகிற்கு மறுபடியும் திரும்பிய அவன் தீயை மிதித்தவன் போலப் பின் வாங்கினான். "பெரியவரே, என்ன இது..." அவனது பேச்சும் தோரணையும் முற்றிலும் மாறி இருந்தது.

அபிராம பட்டருக்கு வார்த்தைகள் வரவில்லை. மெளனமாக அந்தச் சிலையைக் காண்பித்துக் கை கூப்பினார். பின்பு அந்தப் ப்ளாங்க் செக்கை நீட்டினார்.

அவன் வாங்கவில்லை. "நான் கண்களைச் செதுக்குனதுக்கு அவள் என் கண்களைத் திறந்துட்டா பெரியவரே. எங்களுக்குள்ள கணக்கு சரியாயிடுச்சு" புன்னகையோடு கரகரத்த குரலில் சொன்னான். "ஒரு விதத்தில் பார்த்தா வாழ்க்கையே நமக்கு அவள் தர்ற ப்ளாங்க் செக் தான், இல்லையா பெரியவரே. என்ன வேணும்னாலும் எழுதி நிரப்பிக்கோன்னு குடுத்துடறா. நாம் தான் எதையோ எழுதி எப்படியோ நிரப்பிக் கெடுத்துடறோம்" அவன் குரலில் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு வருத்தப் படுவது போல் தெரிந்தது. அதற்குப் பின் பேசும் மனநிலையில் இருவருமே இல்லை. மனம் நிறைந்திருக்கையில் வார்த்தைகள் அனாவசியமாகவும், மெளனமே இயல்பாகவும் இருவருக்கும் தோன்றியது. சாப்பிட்டு விட்டுத் தூங்கினார்கள்.

நடு இரவில் அபிராம பட்டர் விழித்துப் பார்க்கையில் செந்திலின் படுக்கை காலியாக இருந்தது. வீடு முழுவதும் தேடி அவன் இல்லாமல் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார். அவன் அங்கும் இருக்கவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவன் போய் விட்டிருந்தான். ஆனால் அவன் நேற்றுக் கொண்டு வந்திருந்த நகைகள் எல்லாமே பராசக்தியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

______________________________________________________________________

என்.கணேசன்

Thursday, October 11, 2007

விதி!



நல்லது செய்வதை

நாளைக்கென வைத்து

இன்றைய பொழுதை

இஷ்டத்தில் கழித்து

என்றைக்கும் நாம் படும்

கஷ்டத்துக்கெல்லாம்

காரணமாய் உடனே

கண்ட பெயர்- விதி.


- என்.கணேசன்

கடைசி பிரார்த்தனை!




கற்பகம் படுத்த படுக்கையாகி ஒரு வாரமாகி விட்டது. மரணம் நாட்களில் வருமா இல்லை வருடங்களாகுமா என்று சொல்ல முடியாதென டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். உடம்பில் கண்களை மட்டுமே அவளால் அசைக்க முடிகிறது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவும், சுற்றியும் நடப்பதைப் புரிந்து கொள்ளவும் அவளால் முடியும் என்றாலும் பம்பரமாய் சுற்றி வந்து ஆட்சி செய்த வீட்டில் ஒரு அசையா ஜீவனாக இருக்கிறாள். சுமங்கலியாகப் போய் சேர்ந்து விட வேண்டும் என்று வாழ்நாள் பூராவும் வேண்டி வந்த அவள் தன் பிரார்த்தனை நிறைவேறக் காத்திருக்கிறாள்.

இந்த ஒரு வார காலத்தில் சபேசன் தன் மனைவியை விட்டு நகரவில்லை. அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருந்து விட்டு ரிடையரான காலம் முதல் பத்திரிக்கைகள், புத்தகங்கள் மட்டுமே அவரது உலகமாக இருந்தது. எல்லாப் பொறுப்புகளையும் அவளிடமே விட்டு விட்டு எதிலும் தலையிடாமல் கவலையில்லாமல் இருந்த மனிதரை மனைவியின் இந்த நிலை பெரிதும் பாதித்து விட்டது. யாரோ விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்தால் மிகவும் நல்லது என்று சொன்னதால் அவள் அருகில் உட்கார்ந்து சத்தமாகப் படித்துக் கொண்டு இருந்தார். இந்த ஒரு வாரமாக தன்னை விட்டு நகராமல் உட்கார்ந்துள்ள அவரை மனம் நெகிழ்ந்து பார்க்கிறாள், கற்பகம்.

ஹாலிலிருந்து அவர்கள் பிள்ளைகளின் வாக்குவாதம் அவரது சஹஸ்ரநாமத்தையும் மீறி கேட்டது. கணவரை கேள்விக்குறியோடு கற்பகம் பார்த்தாள்.

"உன்னோட நகைகளைப் பிரிக்கிற விஷயமாய் அவர்களுக்குள் சண்டை, கற்பகம்"

மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், பேரன் பேத்திகள் என்று ஒரு பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்த அவளுக்கு பிள்ளைகளின் எண்ணங்கள் அத்துபடி. ஆனால் அவருக்கோ உலகம் ஒரு வார காலத்தில் தலைகீழாக மாறியது போல அதிர்ச்சி. இவ்வளவு நேரமாக மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து வந்த விஷயத்தை இப்போதும் சொல்லா விட்டால் அவருக்கு இதயம் வெடித்து விடும் போல் தோன்றியது. மெள்ள துக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.

"போன வாரம் வரை நம்ம குழந்தைங்க இப்படி மாறுவாங்கன்னு நான் கற்பனையாக் கூட நினைச்சதில்லை கற்பகம். இப்ப நம்ம குழந்தைங்க வியாபாரிகள் மாதிரி ஈட்டிக்காரங்க மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க...."

பிள்ளைகளிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்போது வளைந்து கொடுக்க வேண்டும், எப்போது உறுதியாக நிமிர வேண்டும் என்பதையெல்லாம் அவள் நன்றாக அறிவாள். ஆனால் இது வரை எதிலும் தலையிடாமல் இருந்த அவருக்கு இப்போது எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது.

"என்னை இந்த வீட்டை விற்கச் சொல்லி வற்புறுத்தறாங்க கற்பகம். எல்லாருக்கும் பணக் கஷ்டமாம். வீட்டை வித்துட்டு பணத்தைப் பிரிச்சுத் தரச் சொல்றாங்க. அவங்க கூடப் போய் ஒவ்வொரு மாசம் ஒவ்வொரு வீட்டில் நான் இருக்கணுமாம். உன்னை ஏதோ ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாங்களாம். ஏதாவது ஆனா ஆஸ்பத்திரியில் இருந்து சொல்லி அனுப்புவாங்களாம். என்னங்கடா இதுன்னு கேட்டா என்னை ப்ராக்டிகலாய் இருக்கச் சொல்றாங்க. ப்ராக்டிகல்னா மனசை கல்லாக்கிக்கறதுன்னு அர்த்தமா கற்பகம்?"

ஆரம்பத்திலேயே இப்படி உடைந்து போகிறாரே இனி எப்படி சமாளிக்கப் போகிறாரோ என்று நினைக்கையில் அவளுக்கு மனதில் இரத்தம் கசிந்தது.

"எல்லாம் என் தப்புன்னு தோணுது கற்பகம். நான் நல்லா இருக்கணும்னு நீ சுமங்கலி பூஜை, அந்த பூஜை, இந்த பூஜைன்னு நிறைய செஞ்சே. அதனால நான் குண்டுக்கல்லாட்டம் இருக்கேன். ஆனா நீ நல்லா இருக்க நான் எந்தப் பூஜையும் செய்யலியே. அதான் உனக்கு இப்படி வந்துடுச்சோன்னு தோணுது. உன்னை விட்டுட்டு நான் எப்படிப் போய் அவங்களோட எல்லாம் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலையே கற்பகம் ...."

சொல்லச் சொல்ல அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தாயை விட்டுப் பிரியப் போகிற குழந்தையைப் போல் அவர் கண்கலங்கினார். அவள் கண்களும் கலங்கின.

"உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா நான் உன் கிட்டேயிருந்து இது வரைக்கும் எதையும் மறைச்சதில்லையே கற்பகம். அதான் சொல்லிட்டேன்...."

நிறைய நேரம் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு இரவில் தன்னறைக்கு உறங்கப் போன போது அவர் நடையில் தளர்ச்சி இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் ஒரு பெரிய போராட்டம். மனமுருக அவள் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அந்த நிலையில் அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

மறுநாள் காலையில் அவள் பிள்ளைகள் அழுதபடி அவளிடம் ஓடி வந்தனர். "அப்பா தூக்கத்திலேயே இறந்துட்டார்ம்மா. ஹார்ட் அட்டாக்ம்மா...."

சுமங்கலியாக இறக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் பூஜைகள் செய்திருந்த கற்பகம் மனம் உடைந்து போவாள் என்று எண்ணியிருந்த அவள் பிள்ளைகள் ஏமாந்து போனார்கள். அவள் முகத்தில் அது வரை தேங்கி இருந்த துக்கம் நீங்கி முகத்தில் பூரண அமைதி நிலவியது. தன் கடைசி பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றிய அந்தக் கருணை உள்ள கடவுளுக்கு அவள் நிறைந்த மனதுடன் நன்றி சொன்னாள்.

-என்.கணேசன்